சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துக! உச்சநீதிமன்றத் தீர்ப்பு- வைகோ வரவேற்பு!

விவகாரங்கள்: கல்வி, சுற்றுச்சூழல், அரசியல், வறுமை, புறநகர்

மாவட்டம்: தமிழ்நாடு, பிற மாநிலங்கள்

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Tue, 09/08/2011

 

 

 

சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துக!
உச்சநீதிமன்றத் தீர்ப்பு- வைகோ வரவேற்பு!

ரு கோடியே 22 இலட்சம் மாணவர்களின் கல்வி உரிமையையும், எதிர்கால நலனையும் பாதுகாத்து, சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அனைத்து வகுப்புகளிலும் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கின்ற தீர்ப்பு, பெற்றோர்களின் மனதில் பால் வார்த்து உள்ளது.

தேர்தலில் ஆட்சிகள் மாறினாலும், புதிதாக வரும் அரசு, மாணவர்களின் நலனைப் பாதிக்கும் விதத்தில் முடிவு எடுக்கக் கூடாது என்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டி இருக்கின்றது. இந்த முக்கியமான பிரச்சினையில் அண்ணா தி.மு.க. அரசு கடைப்பிடித்த பிடிவாதம், பொதுமக்கள் நலனுக்கு, மாணவர்களின் உரிமைக்கு எதிரானது என்பதை உணர்த்துகின்ற தீர்ப்பாக அமைந்து உள்ளது.

தொடக்கத்திலேயே தவறான ஒரு முடிவை எடுத்து விட்டு, பள்ளிக்கூடங்களைத் திறக்காமல், மக்கள் வரிப்பணத்தில் அச்சிடப்பட்ட புத்தகங்களை மூலையில் துhக்கிப் போடுவதற்குத் தமிழக அரசு எடுத்த முடிவை, தவறு என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்களின் அமர்வு, திட்டவட்டமான ஒரு தீர்ப்பைத் தந்தது.

அதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. சமச்சீர் கல்வியைச் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்த குழு அமைக்கும்படி உச்சநீதிமன்றம் சொன்னபோது, கல்வியில் கொள்ளை லாபம் காணும் தனியார் பள்ளிகளுக்குச் சாதகமாக முடிவு எடுப்பதற்காகவே ஒரு குழுவை அமைத்து, அதனுடைய அறிக்கையைச் செயல்படுத்த முனைந்தது.

அந்தக் குழு அளித்த அறிக்கையைப் பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம், உடனடியாகச் சமச்சீர் கல்வியைச் செயல்படுத்தச் சொல்லித் தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு இருக்கும்போதே, சமச்சீர் கல்விக்கு எதிரான பாடப்புத்தகங்களை மக்கள் வரிப்பணத்தில் தமிழக அரசு அச்சிட்டதை, சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்தது.

அதற்குப்பின்னரும்கூட, தான் எடுத்த முடிவை மாற்ற மாட்டேன் என்ற பிடிவாதத்தோடு, தமிழக அரசு, மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை உடனடியாக வழங்கும்படி சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் காலக்கெடு நிர்ணயித்து, பலமுறை அறிவுறுத்தியபின்னரும், தமிழக அரசு பாடப்புத்தகங்களை வழங்கவில்லை. தமிழகத்தின் மாணவர்கள், பெற்றோர்களை வேதனைக்கும், பதற்றத்துக்கும் சொல்லொணாத் துயரத்துக்கும் ஆளாக்கியது. ஒன்றேகால் கோடி மாணவர்களின் நலன், அவர்களுடைய படிப்பு இரண்டு மாதங்களாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருப்பதற்கு, தமிழக அரசின் பிடிவாதப் போக்குதான் காரணம் ஆகும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவதைத் தவிர, தமிழக அரசுக்கு இனி வேறு வழி இல்லை.

இழந்து போன இரண்டு மாத காலத்தை, இந்த அரசு மாணவர்களுக்குத் திருப்பித் தர முடியுமா?

மாணவர்களின் நலனை, எதிர்காலத்தைப் பாதுகாத்துத் தந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதுடன், போர்க்கால அடிப்படையில் புத்தகங்களை உடனடியாக வழங்கி, சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

தாயகம்                                வைகோ
சென்னை - 8                        பொதுச் செயலாளர்
09.08.2011                             மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)