சூழும் அணு உலை அபாயம்! வைகோ அறிக்கை!

விவகாரங்கள்: திறன், சுற்றுச்சூழல், மருத்துவம், சர்வதேசம், வறுமை

மாவட்டம்: சென்னை - வடக்கு, சென்னை - தெற்கு, தமிழ்நாடு, பிற மாநிலங்கள்

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Wed, 03/08/2011

 

 

 

 

சூழும் அணு உலை அபாயம்!
வைகோ அறிக்கை!

ப்பானில், 1945 ஆகஸ்ட் 6 ஹிரோஷிமாவிலும், ஆகஸ்ட் 9 நாகசாகியிலும், அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்த கருப்பு நாள்; அணுக் கதிர்வீச்சின் எல்லையற்ற பாதிப்பைக் கருப்பு தினமாக உலகம் பதிய வைத்த நாள்.

28.06.1979-இல் அமெரிக்காவின் மூன்று மைல் தீவிலும், ரஷ்யாவில் 29.04.1986-இல் செர்னோபில்லிலும், 11.03.2011-ஆம் ஆண்டு ஜப்பானின் ஃபுகுஷிமாவிலும் அணு உலைகளில் வெடிப்பு நேர்ந்ததால் வெளியான கதிர்வீச்சின் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் ஊனமாக, குணப்படுத்த முடியாத கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு நடைப்பிணங்களாகி உள்ளனர்.

இந்தப் படிப்பினைகள் காரணமாக, அமெரிக்கா கடந்த 35 ஆண்டுகளாக புதிய அணு உலைகள் எதையும் கட்டவில்லை. கூடங்குளம், கல்பாக்கம், ஏன் நாடு முழுவதும் தரமமற்ற அணுமின் நிலையங்களைக் கட்டித்தந்த ரஷ்யாவில்கூட, கடந்த 22 வருடங்களாக புதிய அணுஉலைகள் கட்டப்படவில்லை.

ஜெர்மனி போன்ற வல்லரசு நாடுகள், படிப்படியாக தங்கள் அணு உலைகளை மூடி நல்லரசுகளாக மாறி வருகின்றன. எரிமலைகளுக்கு இடையில், பூகம்பத்தின் மடியில் அமைந்து உள்ள ஜப்பான் நாடோ, ஹிரோஷிமா, நாகசாகியில் பெற்ற படிப்பினையைப் பொருட்படுத்தாமல், நாடு முழுவதும் அணு உலைகளை தாராளமாக அனுமதித்ததன் காரணமாக ஃபுகுஷிமாவில் பெரிய படிப்பினையைப் பெற்றது. இப்போது, மாற்று வழிக்கான செயல் திட்டத்தை வகுத்துக் கொண்டு இருக்கிறது.

நடந்துவிட்ட எல்லா அபாயங்களையும் கண்ணால் பார்த்த பிறகும் இந்தியா மேலும் ஐந்து அணு உலைகளை அமைக்கப் போவதாக அறிவித்து இருப்பது, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக உள்ளது. ஏற்கனவே நிகழ்ந்த அழிவுகளில் இருந்து எந்தப் படிப்பினையும் பெறவில்லை. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, மரண வியாபாரத்திற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து, அணு உலை கதிர்வீச்சின் பரிசோதனைக் கூடமாக நம் நாட்டு மக்களை மாற்றி வருகின்றதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சுமார் 40 ஆண்டுகள் மட்டுமே அணு உலைகள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும்; பின்னர், அணு உலையைக் கதிரியக்கம் தோய்ந்த விஷக் கிடங்காக செயல் இழக்கச் செய்து, குறைந்தபட்சம் 50 ஆயிரம் ஆண்டுகள் அழிக்க முடியாது. அந்த அணு உலை பூதத்தை நாம் எச்சரிக்கையுடன் பாதுகாக்க வேண்டும். நமது கண்காணிப்பில் சிறு தவறு நேரிட்டாலும் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவர்.

கல்பாக்கம் நிலநடுக்கப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிய நிலப்பரப்பில் ஏற்கனவே பல அணு உலைகள் அருகருகே அமைந்து இருக்கும் போது கூடுதலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஈணுலைகளை அமைப்பது நாட்டு மக்களுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஜப்பானில் ஃபுகுஷிமா அணு உலைகள் அருகருகே இருந்ததால், பூகம்பம் ஏற்பட்டு ஒன்றில் பாதிப்பு உண்டான உடனேயே மற்றதிலும் வெகு சீக்கிரத்தில் ஆபத்து உருவாகி உலகத்தை அச்சமுற வைத்தது.

 

  • அணு உலை ஆபத்து இல்லாத நாடாக இருக்க வேண்டும் என்றால் பயன்பாட்டில் உள்ள கல்பாக்கம், கூடங்குளம் அணு உலைகளின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். உத்தேசிக்கப்பட்டு உள்ள அதிவேக ஈணுலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
     
  • இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த அணு உலைக் கழிவுகளை கொண்டு வந்து, கல்பாக்கத்தில் சேமித்துப் பாதுகாக்கும் விஷக்கிடங்கு பரிசோதனை திட்டத்தைக் கைவிட வேண்டும்.
     
  • மேற்கு நாடுகளில் உள்ளது போல், அணு உலையைச் சுற்றி 16 கி.மீ. சுற்றளவில் வாழும் மக்களை இலவசக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். இப்பகுதியில் அனைத்து வசதிகளையும் கொண்ட முழுமையான அரசு பொது மருத்துவமனையை மத்திய அரசு உருவாக்கிட வேண்டும்.
     
  • கதிர்வீச்சைப் பொறுத்தவரை பாதுகாப்பான அளவு என ஒன்று இல்லை. எனவே கதிர்வீச்சின் அளவை, பாமர மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதற்கான டிஜிட்டல் கருவிகளைப் பொருத்தி மக்களின் ஐயத்தைத் தெளிவிக்க வேண்டும்.
     
  • ஆண்டுக்கு இரண்டு மாதங்களே வெயில் கிடைக்கின்ற ஐரோப்பிய நாடுகளில், வீடுகள்தோறும், சூரியசக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கின்ற வகையில் மேற்கூரைகளைப் பொருத்தி வருகின்றார்கள். எனவே, ஆண்டு முழுவதும் நல்ல சூரிய ஒளியைப் பெறுகின்ற இந்தியா, சூரிய சக்தி மின்சாரத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

 

அணு உலையில் விபத்து ஏற்பட்டால், அணுக் கதிர்வீச்சால் அனைவரும் அழிந்து போவோம். அணு உலை இல்லாத நாடே நமது நோக்கம். முதல்கட்டமாக இருக்கின்ற அணு உலைகளில் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், புதிய ஈணுலைகளை அமைக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

தாயகம்                                       வைகோ
சென்னை - 8                                பொதுச் செயலாளர்
03.08.2011                                     மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)