“ஈழப்பிரச்சனை குறித்து எவருமே பேசக்கூடாது, எழுதக்கூடாது என நினைக்கும் கருணாநிதி...” வைகோ- ஆனந்தவிகடன் பேட்டியில்.
விவகாரங்கள்: மனித உரிமை, இலங்கைத் தமிழர்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்
“ஈழப்பிரச்சனை குறித்து எவருமே பேசக்கூடாது, எழுதக்கூடாது என நினைக்கும் கருணாநிதி...” வைகோ ஆனந்தவிகடன் பேட்டியில்.
ஈழப்பிரச்சனை குறித்து முதல்வர் கருணாநிதி தனது வருத்தம் தோய்ந்த கடிதத்தில் கடந்த காலச் சம்பவங்களைப் பட்டியலிட்டுக்காட்ட, விடுதலைப் புலிகள்தான் இத்தனை அவலங்களுக்கும் காரணம் என்று கருணாநிதி சொல்வது தவறானது! என்று வைகோ அவர் மீது பாய்ந்திருந்தார். பிரபாகரனால்தான் இவ்வளவு கஷ்டங்கள் வந்தது என்று நான் கூறவே இல்லை என்று அதற்குப் பதில் விளக்கம் தந்திருக்கிறார் கருணாநிதி. தன்னுடைய கருத்துகள் தவறான முறையில் புரிந்துகொள்ளப்பட்டு பதில் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்து இருக்கிறார். இது பிரபாகரன் குறித்த வாதப்பிரதிவாதங்களை இன்னும் குழப்புவதாகவே அமைந்துள்ள நிலையில், வைகோவிடம் மேலும் சில கேள்விகளை முன்வைத்தோம்.
இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது என்றோ, சகோதர யுத்தம் நடத்தியதால்தான் பிரபாகரன் தோல்வி அடைந்தார் என்றோ, பிரபாகரனால்தான் இவ்வளவு கஷ்டங்கள் வந்தது என்றோ நான் கூறவில்லை, என்ற முதல்வர் கருணாநிதியின் விளக்கத்துக்கு உங்கள் பதில் என்ன?
முதலில் நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறேன்.... முதல்வர் கருணாநிதியை வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் நான் விமர்சிக்கவில்லை. அவரை விமர்சித்துதான் அரசியல் நடத்த வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. அதற்காக ஈழப்பிரச்சனை குறித்து எவருமே பேசக்கூடாது, எழுதக்கூடாது என்று அவர் நினைப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு விரோதமானது.
கருணாநிதி முரசொலியில் வெளியான தனது கடிதத்தில் எழுதியதையே மறுத்து மூன்று நாட்களாக எழுதிக்கொண்டு இருக்கிறார். ‘போரின் பின்விளைவுகளுக்கு சகோதர யுத்தத்தின் காரணமாக மாவீரன் மாத்தையாவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கமே மரணதண்டனை விதித்து நிறைவேற்றியும்....’ என்று குறிப்பிட்டு வரிசையாகப் பலரது பெயர்களைப் பட்டியலிட்டார் கருணாநிதி. ‘அன்று கிழக்கு இலங்கையிலே சகோதர யுத்தம் - பிரபாகரன், கருணா படைகளிடையே ஏற்பட்டு..’ என்று எழுதியிருக்கிறார். எல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் ‘விடுதலைப் புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகளின் விளைவுகள் எப்படி ஆயின, எங்கே போய் முடிந்தன?’ என்று கேள்வியைச் சாமர்த்தியமாகக் கேட்கிறார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் வித்தையுடன் அந்த விஷம் தோய்ந்த வார்த்தைகள் வெளிப்பட்டு உள்ளன. அவர் சொன்ன வார்த்தைகள்தான் இவை.
அந்தக் கடிதம் உலகத் தமிழர்களிடையே கோபம் கொப்பளிக்கச் செய்ததை அறிந்ததும் பதறியவர், இப்போது நான் அப்படிச் சொல்லவில்லை, இப்படிச் சொல்லவில்லை’ என்பது அவருக்கே உரித்தான நியாயம் மட்டும்தான். பிரபாகரன் மீது குற்றப்பத்திரிகை வாசித்துவிட்டு, அப்படிச் சொல்லவில்லை என்றால், சகோதர யுத்தம் நடத்தியதாக யாரைக் கருணாநிதி சொல்கிறார். நிழலோடு யுத்தம் செய்கிறாரா? விடுதலைப்புலிகள் மீது அவருக்கு எந்தக் காலத்திலும் நல்லெண்ணம் இருந்தது கிடையாது.
‘வை.கோபால்சாமியின் ஆதாயத்துக்காக கருணாநிதியின் உயிரைப் பறிக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்’ என்று உளவுத்துறை ஒரு கடிதத்தை இவருக்கு அனுப்பியது. வெளியூரில் இருந்த பேராசிரியர் அன்பழகன் வருவதற்குமுன், பத்திரிகை யாளர்களை அழைத்து அதைச் சொன்னார். ‘புலிகள் உங்களை ஏன் கொல்ல வேண்டும்’ என்று நிருபர்கள் கேட்டபோது, ‘காரணம்தான் அந்தக் கடிதத்திலேயே இருக்கிறதே’ என்று பதிலும் சொன்னவர். ஒரு ஏட்டய்யா தலைமையில் இரண்டு போலிஸ்காரர்கள் பாதுகாப்பை வாங்கிக் கொண்டவர்தான் அவர். ‘நான் இதை நம்பவில்லை. அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்று சொல்லி, கருணாநிதி அதை மறுதலித்து இருக்க வேண்டாமா? சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தின்போதுகூட, விடுதலைப் புலிகளின் லெட்டர் பேடில், தமிழரசன் என்பவர் கையெழுத்திட்டு கருணாநிதிக்குக் கொலை மிரட்டல் வந்ததாகச் செய்தி பரப்பப்பட்டது. இன்றுவரை அப்படிப்பட்ட நபர் கைதானதாகத் தெரியவில்லை. ஏன் இந்த ஜோடிப்பு நாடகங்களை நடத்த வேண்டும்? எனவே அவர் பிரபாகரன் மீது சேறுவாரிப் பூச நினைத்தார். அது அவராலேயே முடியவில்லை.
மாத்தையாவை மாவீரன் என்று அறிமுகம் செய்துவைத்ததே நீங்கள்தானாமே?
வீரர்கள் துரோகிகள் ஆவதுதான் மாத்தையா விஷயத்தில் நடந்தது. இப்போது மாத்தையா வீரனா, துரோகியா என்பதல்ல பிரச்சனை. நான் கேட்ட நியாயமான கேள்விகளை மறைத்து விட்டு சாமர்த்தியமாகக் கருணாநிதி விலகுகிறார். இலங்கைத் தமிழர் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தியதே ரா உளவு அமைப்புதான் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல் அமைச்சராக இருந்த கருணாநிதி சொல்லி இருக்கிறார். உண்மை இவ்வாறு இருக்க, சகோதர யுத்தம் குறித்து புலிகளை எப்படிக் குறைசொல்லலாம் என்று நான் ஆதாரபூர்வமாகக் கேட்டு இருக்கிறேன். 19 ஆண்டுகளுக்கு முன் சொன்னதையும் அவர் இல்லை என்கிறாரா? அப்போது பொய் சொன்னேன் என்கிறாரா? அவரிடம் மக்கள் எதிர்பார்ப்பது இதற்கான பதிலைத்தான். அதை விட்டுவிட்டு பழங் கதைகள் பேசித் தப்பமுடியாது.
இலங்கைத் தமிழருக்காகத் தொடர்ச்சியாகப் பல போராட்டங்களைத் தி.மு.க. நடத்தி வந்திருக்கிறது. எனவே முற்றுமுழுதாக கருணாநிதி எதையுமே செய்யவில்லை என்று நீங்கள் சொல்வது சரியா?
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது குறித்தோ, தி.மு.க. ஆட்சியை இழந்தது குறித்தோ நான் எந்த விமர்சனங்களையும் வைக்கவில்லை. எண்பதாயிரம் பேர் கொல்லப்படவும், மூன்று இலட்சம்பேர் முள்வேலிக்குள் முடக்கப்படவும், காரணமான இறுதி யுத்தத்தின்போது கருணாநிதி என்ன செய்தார் என்பதுதான் எங்கள் கேள்வி. இந்த யுத்தத்தை முன்னின்று நடத்தியது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகும் சூழ்நிலை வந்ததும் எதிர்ப்புத் தெரிவித்தாரா? பலாலி விமான நிலையத்தைப் புதுப்பித்துக் கொடுத்த காரியத்தை எதிர்த்தாரா? இந்தியக் கடற்படையும் சிங்களக் கடற்படையும் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் போட்டபோது கண்டித்தாரா? இந்தியக் கடல் எல்லையில் சிங்கள இராணுவம் கடற்கண்ணி வெடிகளை வைத்தபோது எதிர்த்தாரா? ரேடார் உதவிகளைச் செய்தபோது ஒப்புக்காவது எதிர்ப்புத் தெரிவித்தது உண்டா?
எந்தப் பொறுப்பிலும் இல்லாத சாதாரணமான நான் இவை அனைத்தையும் எதிர்த்து, பிரதமருக்குக் கடிதம் அனுப்பினேன். பொறுப்பு வாய்ந்த முதலமைச்சர் நினைத்திருந்தால் அதைத் தடுத்திருக்க முடியாதா? இந்த மூர்க்கத்தனமான உதவிகள்தான் இத்தனை அழிவுக்கும் காரணம்.
இலங்கை இராணுவத்துக்கு இந்தியா எந்த உதவியும் செய்யவில்லை என்று கருணாநிதி கூறியிருந்தாரே?
பிரதமர் மன்மோகன் சிங் 2008 அக்டோபர் 2 ஆம் தேதி எனக்கு எழுதிய கடிதத்தில் இராணுவ உதவிகள் செய்வதை ஒப்புக் கொண்டு இருக்கிறார். செப்டம்பர் 8 ஆம் தேதி சிங்கள இராணுவ முகாம் மீது புலிகள் தாக்குதல் நடத்தியபோது, காயமடைந்த ஏ.கே.ரவுத், சிந்தாமணி தாகூர் ஆகிய இருவரும் இந்திய இராணுவ அதிகாரிகள். ‘இன்னும் 265 அதிகாரிகள் இங்கு இருக்கிறார்கள்’ என்று இந்தியத் தூதரே பேட்டி கொடுத்து இருக்கிறார். நாங்கள் டே டூ டே நடப்பதை இந்தியாவுக்குச் சொல்லி வந்தோம் என்று கோத்தபய ராஜபக்ஷே சொல்லி இருக்கிறார். கொழும்பு வீதியில் ‘இந்தியாவுக்கு நன்றி’ என்று பேனர் வைத்து வாழ்த்துச் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?
கண்ணப்பன் தவறாகப் பேசாததால் வழக்கில் இருந்து விடுவிக்கப் பட்டதாகச் சொல்கிறாரே முதல்வர்?
தனித்தமிழ்நாடு கேட்டு பேசினார் கண்ணப்பன். இது ம.தி.மு.க.வின் கொள்கை அல்ல. அது தவறில்லை என்றால் முரசொலியில் அந்தப் பேச்சை வெளியிடத் தயாரா?
பிரபாகரனைக் கைதுசெய்து இங்கு கொண்டுவர வேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் போட்ட ஜெயலலிதாவை நீங்கள் கண்டித்தது உண்டா? என்பது தி.மு.க.வின் முக்கியக் குற்றச்சாட்டாக இருக்கிறதே?
இதை மிகக் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டேன். பொடாவில் என்னைக் கைது செய்ததற்கான குற்றப்பத்திரிகையில், அந்த அறிக்கையும் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. சட்டமன்றத்தில் இந்தத் தீர்மானம் வந்தபோது பா.ம.க., இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கண்டித்து, வெளிநடப்பு செய்தன. ஆனால், தி.மு.க. அப்போது என்ன செய்தது? அவைக்குள் அமைதியாக இருந்தது.
தன்னால் முடிந்த அளவுக்கு தி.மு.க. தரப்பு இலங்கை விவகாரத்துக்குக் காரியங்களைச் செய்துள்ளது என்கிறார்களே?
கொன்று குவித்த சிங்கள அரசாங்கத் துக்குக் கோபம் ஏற்படுத்துமாறு யாரும் பேசக்கூடாது என்று உபதேசம் செய்தார் கருணாநிதி.
எட்டுத் தமிழ் இளைஞர்களை நிர்வாணப் படுத்தி, கண்ணைக்கட்டி சுட்டுக் கொல்லும் படத்தைப் பார்த்து ‘இது பழைய படமா... புதுப்படமா’ என்ற பதிலைத் தயாரித்துக் கொடுத்தார்.
சிறு குண்டுகள் வீசப்படுவதைப் பார்த்து ‘மழை விட்டும் தூவானம் விடவில்லை’ என்று வியாக்கியானம் செய்தார்.
ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்குப் பொருளாதாரத் தடைவிதிக்க இருக்கும் சூழலில், 10 எம்.பி.க்கள் அடங்கிய குழுவை அனுப்பி ‘இங்கு சர்வதேசத் தரத்துடன் முகாம்கள் இருப்பதாக இந்தியக் குழு சொன்னதாக’ ராஜபக்சே கடிதம் அனுப்புவதற்கு மறைமுக உதவி செய்துள்ளார்.
ஈழத்துக் கொடுமையை மறைக்கவே அவர் முகமூடியாக மாறிப்போனதைத் தவிர, சொல்ல வேறு என்ன இருக்கிறது?
- ஆனந்தவிகடன், 09.12.2009
நன்றி ஆனந்தவிகடன்.

