டிசம்பர் 29-முல்லைப் பெரியாறு உரிமை காக்கும் போராட்டம். களம் அழைக்கிறது! கம்பத்துக்கு வாரீர்! வைகோ.

விவகாரங்கள்: பொருளாதாரம், விவசாயம், தேசிய, புறநகர்

மாவட்டம்: தேனி, தமிழ்நாடு

செய்தித்துறை: கடிதங்கள், தலைப்பு செய்திகள்

Date: 
Fri, 25/12/2009

டிசம்பர் 29-முல்லைப் பெரியாறு உரிமை காக்கும் போராட்டம்.

களம் அழைக்கிறது! கம்பத்துக்கு வாரீர்!

இமைப்பொழுதும் நீங்காது
என் இதயத்துடிப்போடும்
இரத்தச் சுழற்சியோடும் கலந்துவிட்ட
கண்ணின்மணிகளே!

தென்தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தை வெட்டிச் சாய்க்க முனையும், நச்சுவாள் தலைக்கு மேல் தொங்குகிறது. அக்கொடுவாள்தனை வீசிட முனையாதீர்; சட்டத்தை உடைத்து, நீதியின் குரல்வளையை நெரிக்கத் துணியாதீர்; எங்கள் தெற்குச்சீமையின் வருங்கால சந்ததிகளின் வாழ்வைப் படுகுழியில் தள்ள முயலாதீர்; கொம்பேறி மூர்க்கக் குணம் கொண்டு, பெருந்தீங்கு செய்வீர் எனில், அதன் எதிர் விளைவுகள், ஊழித்தீயாய்ச் சீறும் என்று கேரள அரசுக்கும், கேடு செய்ய முனையும் கெடுமதியாளருக்கும் எச்சரிக்கை செய்யவே கம்பத்தில் அறப்போர்.

முல்லைப்பெரியாறு அணை உடையும் என்றும், அப்பெருவெள்ளத்தில், பல்லாயிரம் கேரள உயிர்கள் மடியும் என்றும், தகிடுதத்தப் பொய்களை மூட்டைமூட்டையாய் அவிழ்த்து விட்டீர்களே, 999 ஆண்டுகளுக்குச் சட்டப்படி உரிமை உள்ள எங்கள் வளவாழ்வைச் சிதைப்பீர் எனில், பதிலடியாய்த் தானாகப் பொங்கும் கோப வெள்ளம், ஆழிப்பேரலையாய், வாரிச்சுருட்டும் பிரளயமாய், விபரீத அறுவடையாய் விளைந்துவிடக் காரணம் ஆகாதீர் என எச்சரிக்கும் கடமை, நமக்கு உண்டு. அதன் நிமித்தமே, டிசம்பர் 29 இல், கம்பத்தில் போராட்டம்.

தமிழகம் மேற்கொள்ள வேண்டிய அறப்போருக்கு ஆயத்த நடவடிக்கைதான், கம்பம் களம் ஆகும்.

உன்னை அழிக்க முனையும் சக்திகள் முற்றுகை இடும்போது, தற்காத்துக் கொள்ள, ஏந்தும் ஆயுதம் எது என்பதை, எதிரிதான் தீர்மானிக்கிறான்.

முல்லைப் பெரியாறு பிரச்சினை, தென்தமிழ்நாட்டு மக்களுக்குத் தீராக் கேடு புரியும், புதிய பரிமாணம் ஆகி உள்ளது.

நெடுந்தொலைவுக்கு அப்பால் உள்ள பிரித்தானியத்தில் பிறந்த பென்னி குயிக் எனும் பெருந்தகையாளன், பொறியியல் மேதைகளோடு திட்டமிட்டு, தென்தமிழ்நாட்டு மக்களை வாழ்விக்க, தொலைநோக்கோடு முல்லைப்பெரியாறில் அற்புத அணை கட்டத் தொடங்கி, அன்றைய ஆங்கிலேய அரசு, நிதி தர மறுத்தபோது, தனது சொத்துகளை, அன்பு மனைவியின் சொத்துகள் அனைத்தையும் விற்று, கட்டி எழுப்பிய வலிய அணை, இதுவரை நேர்ந்த 30 நில அதிர்வுகளை எதிர்கொண்டும் கம்பீர அரணாய், செம்மாந்து நிற்கும் செந்தமிழ் நாட்டுக்குச் சீர்வளர்க்கும் அணை, நமது உரிமை வாழ்வு ஆதாரம் அல்லவா?

தங்களின் இடுக்கி அணைக்குத் தண்ணீர் கொண்டு செல்ல, அற்பப் புத்தியால் குறுக்கு வழி நாடிய சிலரின் வஞ்சகத் திட்டத்தால் எழுப்பப்பட்ட பொய்க்கூச்சல்தான், அணையிலே சேதம் என்பது ஆகும். கேரளத்தவரின் அராஜகக் கூச்சலை, முற்றிலும் நிராகரிக்கும் வேலையைச் செய்யாமல், 1979 நவம்பர் 25 இல், மத்திய அரசின் முன்னிலையில் இரு மாநில அரசுகளும் செய்துகொண்ட ஏற்பாடே, ஒருவகையில் நமக்குத் தீங்காக முடிந்தது. அணையின் நீர்மட்டத்தை, நமக்குச் சட்டப்படி உரிமையான 152 அடியில் இருந்து, 136 அடியாகக் குறைத்துக் கொள்வது என்றும், அணையைப் பலப்படுத்திப் பராமரிக்கும் வேலைகள் நிறைவு பெற்ற பின்னர், மீண்டும் 152 அடிக்கு உயர்த்திக் கொள்வது என்றும் முடிவு ஆயிற்று.

தேவைக்கு அதிகமாகவே பலப்படுத்தும் பணிகளைச் செய்தாகி விட்டது.

அணையின் கீழ்மட்ட அகலம் இப்போது 200 அடி 6 அங்குலம் ஆகி இருக்கிறது. இந்த வேலைகளைச் செய்ய விடாமல் கேரளம் தொடர் முட்டுக்கட்டைகளைப் போட்டுக்கொண்டே வந்தது. பிரச்சினை உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. மத்திய அரசின் சார்பிலே வந்த நிபுணர் குழுக்களான மித்தல் குழு, பிரார் குழு இரண்டும், அணை வலுவாக இருப்பதாகச் சான்றிதழும் தந்தது.

உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளான, மாட்சிமைக்கு உரிய சபர்வால், தக்கர், பாலசுப்பிரமணியம், 2006 பிப்ரவரி 27 இல், நீதி காக்கும் தீர்ப்பையும் தந்தனர்.

முல்லைப்பெரியாறில், 142 அடிக்குத் தண்ணீரைத் தமிழகம் தேக்கிக் கொள்ளலாம் என்றும், பேபி அணையை மேலும் வலுப்படுத்தும் பணிகளைச் செய்யலாம் என்றும், பின்னர் தமிழகத்துக்குச் சட்டப்படி உரிமை உள்ள தண்ணீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்றும், இனிமேல் கேரளம் எந்தக் குந்தகமும் இதற்குச் செய்யக்கூடாது என்றும் தீர்ப்பைத் தந்தனர்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் காலில் போட்டு மிதித்து விட்டு, நீதிக்குப் புறம்பானதும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைப்பதுமான சட்டத்தை, 2006 மார்ச் 18 இல் கேரள அரசு, சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.

‘கேரள நதிகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புத் திருத்தச் சட்டம்’ எனும், இப்புதிய சட்டத்தில், கேரளத்துக்கு உட்பட்ட அணைகள், நீர்த்தேக்கங்கள் பட்டியலில், அதுவரை இடம் பெறாத முல்லைப்பெரியாறை, முதல் பெயராகப் பதிவும் செய்தது. அதில் தண்ணீர் தேக்கும் அளவு 136 அடிதான் என்றும், அக்கிரமமாக, இச்சட்டத்தில் குறிப்பிட்டது. இந்த அராஜகப் போக்கை எதிர்த்து, தமிழ்நாட்டில் அன்று இருந்த அண்ணா தி.மு.க. அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

அந்த வழக்கைத் தள்ளுபடி செய்யச் சொல்லி, கேரள அரசு, ஒன்றன்பின் ஒன்றாக, பல அமைப்புகளின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடுகள் அனைத்தையும், உச்சநீதிமன்றம் ஒதுக்கித் தள்ளியது.

இதற்கு இடையில், முல்லைப்பெரியாறு உடையும் என்றும், பல்லாயிரக்கணக்கான கேரள மக்கள், வெள்ளத்தில் மூழ்கிப் பலியாவார்கள் என்றும் அப்பட்டமான பொய்களை ஆவணமாக்கி, கிராஃபிக்ஸ் குறுந்தகடுகளாக ஆக்கி, கேரள மக்களிடம் பீதியை, அச்சத்தை, காம்ரேடு அச்சுதானந்தன் அரசு திட்டமிட்டு ஏற்படுத்தியது.

இதற்கு இடையில், தண்ணீர் மட்டத்தைக் குறைத்ததால், 78,000 ஏக்கர் பாசனத்தைத் தமிழகம் இழந்தது. ஒருமைப்பாட்டை நாம் பெரிதாகவே மதித்தோம். மத்திய அரசு, நடுநிலை காக்கும்; அண்டை மாநிலத்தின் அநீதியைத் தடுக்கும் என்று நாம் எண்ணியது, தப்புக்கணக்கு ஆயிற்று.

முதல்வர் பொறுப்பு ஏற்றவுடன் அச்சுதானந்தன், முதல் வேலையாக ஜூலை 3 இல் புது தில்லி சென்று, இந்தியப் பிரதமரிடம் முல்லைப்பெரியாறு நிர்வாகத்தையும், பராமரிப்பையும் கேரள அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற, முறையற்றதும் சட்டத்துக்கு எதிரானதுமான கோரிக்கையை வைத்தார். அடுத்த மாதத்தில், அனைத்துக்கட்சியினரையும் அழைத்துக்கொண்டு போய், அணைக்கு ஆபத்து என்றும் பிரதமரிடம் ஓலமிட்டார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் குப்பைத் தொட்டியிலே வீசிவிட்டு, அநீதி இழைக்க முற்படும் கேரள அரசின் போக்கை, தடுக்க வேண்டிய கடமையைச் செய்யாமல் விட்டதோடு, இந்தியப் பிரதமர், கேரளத்தின் கோரிக்கையை மத்திய சட்ட அமைச்சகத்துக்கும், நீர்ப்பாசன அமைச்சகத்துக்கும் அனுப்பி வைத்தது, தமிழ்நாட்டுக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் இழைத்த பச்சைத் துரோகம் ஆகும்.

உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பைச் செயல்படுத்தும் கடமையில் கலைஞர் கருணாநிதி அரசு, திட்டமிட்டே தவறியது.

உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நமக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால், இழுத்தடித்துக் காலம் கடத்துவதற்குப் பல உபாயங்களைக் கையாளுவதில் கைதேர்ந்த கேரள அரசு, 31 முறை உச்சநீதிமன்றத்தில் வாய்தா வாங்கியது.

அந்தோ, தமிழ்நாட்டின் தலைவிதி! தமிழக அரசின் வழக்கறிஞர், ஒருமுறைகூட இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. எனினும், நீதி கிடைக்கும் அல்லவா என்று நாம் எண்ணி இருந்த நேரத்தில், இந்த வழக்கை அரசியல் சட்டத்தை ஆய்வு செய்யும், அமர்வில்தான் விசாரிக்க வேண்டும் என்று, கேரள அரசு புதிதாக ஒரு குண்டைத் துhக்கிப் போட்டது. அதுவும், மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர். உச்சநீதிமன்றத்தில் விசித்திரமான காட்சி அன்று அரங்கு ஏறியது.

ஆம்; முற்பகலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழக அரசின் வழக்கறிஞர், நண்பகல் உணவு இடைவேளைக்குப் பின்னர், கேரள அரசின் கோரிக்கையை ஏற்று, எழுத்து மூலமாகவே ஒப்புதலும் தந்து விட்டார்.

ஏ... தமிழா, உன் தலைவிதி இதுதானோ?

தென்தமிழ்நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உயிரான இப்பிரச்சினையில், இப்படி ஒரு ஒப்புதலை, முதல் அமைச்சரிடம் கேட்காமல், தமிழக அரசின் வழக்கறிஞர் தந்து இருக்கவே மாட்டார் என்பது, சின்னப்பிள்ளைக்கும் சொல்லாமல் விளங்கும். அப்படி ஒப்புதல் கொடுத்து இருந்தால், அந்த வழக்கறிஞர், அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் நீக்கப்பட்டு இருக்க வேண்டும்.

பாம்புக்குத் தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் விலாங்கு மீன் வேலை, இன்றைய தமிழக முதல்வருக்குக் கைவந்த கலை. ஆம்; மறுநாளே அறிக்கை ஒன்றும் தந்துவிட்டார். உச்சநீதிமன்றத்தில் அரசியல் சட்ட ஆய்வு அமர்வுக்கு இவ்வழக்கை அனுப்பியது குறித்து, ஒரு கையறு நிலைப் புலம்பல் அறிக்கை அது. ‘தாமதமாகும் நீதி, மறுக்கப்படும் நீதி’ என்றார்.

இந்தப் பிரச்சினையின் பின்னணியில், தென்தமிழ்நாட்டுக்குப் பெருங்கேடு செய்யும், ஒரு சதிவேலை, கேரளத்தினரால், மிகத் திறமையாகவும், மிகச் சாதுர்யமாகத் தீட்டப்பட்டு, இன்று, விடம் கக்கும் ஐந்து தலைநாகமாக, நம் மீது சீறி நிற்கிறது. அதுதான், ‘புதிய அணை’ என்ற திட்டம் ஆகும்.

நமது முல்லைப் பெரியாறு அணையை உடைப்பது ஒன்றுதான், கேரளத்தில் உள்ள வஞ்சக சூத்திரதாரிகளின் குறிக்கோள் ஆகும்.

முல்லைப்பெரியாறு தண்ணீர் ஓடும் பாதையிலேயே, அவர்கள் புதிய அணைகள் பலவற்றைக் கட்டி உள்ளனர். அதுபோல, இப்போதும், பத்து கிலோ மீட்டருக்கு அப்பால், அவர்கள் புதிய அணை கட்டட்டும்; நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், முல்லைப் பெரியாறு அணைக்குப் பக்கத்தில், 100 மீட்டர் தொலைவில் புதிய அணையைக் கட்ட முற்பட்டு உள்ளனர். இதற்காக, 1 லட்சத்து 20 ஆயிரம் டன் பாறைகளை உடைக்கப் போகிறார்கள்.
அதற்குத் தேவையான, 1200 கிலோ கரிமருந்தைச் சேகரித்து விட்டார்கள்.

அங்கே உடைக்கின்ற பாறையை, நம் தலை மீது தூக்கிப் போடும் இந்த வேலைக்கு ஏற்பாடு செய்யும் கருவிகளையும் தமிழ்நாட்டில் இருந்துதான் கொண்டு செல்லுகிறார்கள். என்ன கொடுமை இது? ஆம்; புதிய அணை கட்டுவதற்குத் தேவையான மணல், தமிழ் நாட்டில் இருந்துதான், லாரிலாரியாகப் போயிருக்கிறது. கருங்கல் தூள் போயிருக்கிறது.

இப்புதிய அணை கட்டுவதற்கு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்தாக வேண்டும். புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு செய்ய, கேரளம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டது.

நம் தலை மீதே கொள்ளி வைக்க முற்படும் முயற்சியை, மத்திய அரசு முளையிலேயே கிள்ளி எறிந்து இருக்க வேண்டாமா? கொடுமையிலும் கொடுமை என்ன வெனில், இந்த அனுமதியை மறுக்கின்ற இடத்தில் அமர்ந்து இருந்த மத்திய அமைச்சர், தமிழ்நாட்டுக்காரர், தி.மு.க. அமைச்சர்.
அவர்தான், ஆண்டிமுத்து இராசா.

தென்தமிழ்நாட்டின் வாழ்வுக்கே கேடா? என்று நியாயமான ஆத்திரமும், பதட்டமும் அவருக்கு ஏற்பட்டு இருக்க வேண்டாமா? ஏன் இல்லை?

குண்டூசிப் பிரச்சினை ஆனாலும், மூலவர் முதல்வரிடம் கட்டளை யாசகம் கேட்கும் குற்றேவல் புரிகிற அமைச்சர் கேட்டுத்தான் இருப்பார். மத்திய அரசு மூலம் தனக்கு ஆகவேண்டிய காரியங்களுக்கு இடையூறு ஏதும் வந்திடக் கூடாது என்று முதல்வர் எண்ணி இருப்பார். அடுத்து அந்தத் துறைக்கு அமைச்சராகப் பொறுப்பு ஏற்றவரும் தி.மு.க.வின் டி.ஆர். பாலுதான். அனுமதி இல்லை என்று, அவரும் ஏன் மறுக்கவில்லை? அதுதான், தமிழ்நாட்டின் தலைவிதி.

கடைசியில் என்ன ஆயிற்று? அத்துறைக்கு இப்போது பொறுப்பு ஏற்ற ஜெயராம் ரமேஷ், ஆய்வுக்கு அனுமதியும் கொடுத்து விட்டார். ‘முதல் சுற்றில் வெற்றி பெற்று விட்டோம் என்று கேரளத்தின் இந்நாள், முன்னாள் முதல்வர்கள் கெக்கலி கொட்டுகின்றனர்.

‘மத்திய அமைச்சரை எதிர்த்து, மதுரையில் கண்டனக்கூட்டம் என்றும், தனயன் தலைமையில் முதல்வர் முழங்குவார்’’ என்றும் ஊரெல்லாம் விளம்பரம் செய்தனர். ‘ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து, தி.மு.க. அமைச்சர் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை’ என்ற செய்தி வெளியானதும், மதுரைக்கூட்டமே இரத்து ஆகிவிட்டது.

நாம் நடுவண் அரசைக் குற்றம் சாட்டுகிறோம், ஆய்வுக்கு நீ எப்படி அனுமதி கொடுத்தாய்? என்று. தலைக்குமேலே ஆபத்து வருகிறதே என்ற கவலையில் இருக்கிறோம் நாம். 2004 ஆம் ஆண்டிலேயே, முல்லைப்பெரியாறு பிரச்சினை குறித்து பிரதமரிடம் முறையிட்டேன். 2005 தொடங்கியவுடன், வேடசந்துhரில், விவசாயிகள் மாநாடு கூட்டி, தீர்மானம் நிறைவேற்றிய கையோடு, மறுநாள் பிப்ரவரி 7 ஆம் தேதி, திருவனந்தபுரம் சென்று, அன்றைய முதல்வர் உம்மண் சாண்டி அவர்களைச் சந்தித்து, தமிழகத்தின் நியாயத்தை எடுத்துச் சொன்னேன்.

நிலைமை மோசமாவதை எண்ணிக் கவலைப்பட்டு, 2006 செப்டம்பர் 19 இல், மதுரையில், முல்லைப்பெரியாறு உரிமை காக்க, பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கு ஏற்ற, பேரணி நடத்தினோம்.

நவம்பர் 20 ஆம் நாள், பத்து ஆயிரம் பேர் பங்கு ஏற்ற உண்ணாநிலை அறப்போர் நடத்தினோம்.

நவம்பர் 24 ஆம் நாள், இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களைச் சந்தித்து, முல்லைப்பெரியாறு உரிமை காக்க, மீண்டும் முறையிட்டேன்.

முல்லைப்பெரியாறு உரிமை காக்க, மதுரையில் இருந்து கூடலூருக்கு, 2006 டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்கி, பல்லாயிரக்கணக்கானவர்களோடு ஒரு வார கால நடைப்பயணம் மேற்கொண்டோம். கேரள அரசின் புதிய அணை கட்டும் திட்டம் தீய நோக்கம் கொண்டது என்பதை இந்த நடைப்பயணத்தின்போதே எச்சரித்தேன். 2007 ஆம் ஆண்டு, நவம்பர் 19 இல், மதுரையில், மாபெரும் உண்ணாநிலை அறப்போரை நடத்தினோம்.

நமக்கு வரும் ஆபத்தைத் தடுக்க, கேரளத்துக்குப் பொருளாதார முற்றுகை போட வேண்டும் என்று கூறினேன். புதிய அணை கட்டுவதற்கான வேலையை, கேரள அரசு தீவிரப்படுத்தி விட்டது என்பதால், நேரப்போகும் ஆபத்தைத் தடுக்க, மக்களைத் திரட்டுவது என்று தீர்மானித்தோம்.

2009 நவம்பர் 8 ஆம் தேதி தேனியில், கொட்டும் மழையில், மிகப் பிரமாண்டமான விழிப்பு உணர்வுக் கூட்டத்தை நடத்தினோம். நவம்பர் 14 ஆம் தேதி, இயக்க வரலாற்றிலேயே மைல் கல்லாக அமைந்த, முல்லைப் பெரியாறு உரிமை காக்கும் உண்ணாநிலை அறப்போரை மதுரை மாநகரில் விடாது பெய்த மழைக்கு மத்தியிலும் வெற்றிகரமாக நடத்தினோம்.

கேரளத்துக்குச் செல்லும் பொருள்களை, அரிசி, பருப்பு,காய்கறிகள், ஆடு, மாடுகள் அனைத்தையும், அடையாள நிமித்தமாக ஒரு நாள் தடுப்போம்.

‘அணையை உடைக்கும் திட்டத்தைக் கைவிடு; புதிய அணை கட்டாதே’ என்று வலியுறுத்துவோம். இதற்குப் பின்னரும் தொடர்ந்து கேடு செய்தால், தமிழகத்தில் இருந்து கேரளத்துக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளையும் மறிப்போம்; நிரந்தரப் பொருளாதார முற்றுகை போடுவோம் என எச்சரிப்பதற்குத்தான், டிசம்பர் 29 ஆம் தேதி, செவ்வாய்க் கிழமை, கேரளம் செல்லும் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்துகிற, அமைதி வழி மறியல் அறப்போர், எனது தலைமையில் நடைபெறும் என்று அறிவித்தோம்.

ஐந்து மாவட்ட முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவரான, கண்ணியத்துக்கு உரிய கே.எம். அப்பாஸ் அவர்கள்,தேனி பொதுக்கூட்டத்தில் பங்கு ஏற்றதோடு, மதுரை உண்ணாநிலை அறப்போரையும் தொடங்கி வைத்து, முழுமையாகப் பங்கு ஏற்றார்.

முல்லைப்பெரியாறு உரிமை காக்க, தென்தமிழ்நாட்டு மக்களை ஆயத்தப்படுத்துகின்ற விழிப்பு உணர்வுப் பிரச்சாரப் பயணத்தை, நான் கிராமம் கிராமமாக மேற்கொண்டேன்.

நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு ஊரிலும், ஊரே திரண்டு பேரெழுச்சியோடு ஆதரவு தருவார்கள் என்பதை. குறிப்பாகத் தாய்மார்கள், குலவை இட்டு, வாழ்த்துச் சொன்னார்கள். இலட்சக்கணக்கான மக்களைச் சந்தித்து விட்டேன்.

ஆனால், இந்தப் பிரச்சாரப் பயணத்தில், ஒன்றிரண்டு இடங்களில்தான், தி.மு.க. அரசு, கடமை தவறியதைச் சொன்னேன். தமிழக முதல்வரையோ, ஆளுங்கட்சி யையோ, பெரும்பாலும் நான் விமர்சிக்கவே இல்லை.

ஏனெனில், எனது போராட்டம், பிரச்சாரப் பயணம் இவற்றின் நோக்கம், ஆட்சியாளர்களைக் குறை சொல்லுவதோ, நம் கட்சிக்குச் செல்வாக்குத் தேடுவதோ அல்ல. தென்தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களையும், அனைத்துக்கட்சியினரையும், அணி திரட்டி, உரிமைக்குப் போராடுவதுதான் என் நோக்கம். அனைத்துக் கிராமங்களிலும், நமது போராட்டத்துக்குப் பேராதரவு உள்ளது. நிலைமையை எடுத்துச் சொன்னவுடன் புரிந்துகொண்டு, கவலைப்படுகிறார்கள்.

‘உங்களுக்கு ஒரு வைகோ என்றால், எங்களிடம் ஆயிரம் வைகோக்கள் இருக்கிறார்கள்’ என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன், திருவனந்தபுரத்தில் சொன்னார்.

என்னுடைய விருப்பம் எல்லாம், தெற்குச் சீமையின் தீரர் கூட்டம், மேழி நாட்டு உழவர் கூட்டம், சீறி எழ வேண்டும் என்பதுதான். 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் பாசனத்தை நாம் இழக்க நேரிடும். 65 இலட்சம் மக்களுக்குக் குடிதண்ணீர் கிடைக்காமல் போகும். பசிய வயல்கள் பட்டுப் போகும். தென்னை மரங்கள் காய்ந்து கருகும். நிலத்தடி நீரும் வறண்டு போய், பஞ்சப் பிரதேசம் ஆகிவிடும்.

இந்தப் பேராபத்தைத் தடுக்க வேண்டியது நமது கடமை அல்லவா? அதற்காகத்தான் அறப்போர். அதற்கான ஆயத்த வேலைகளை, ஐந்து மாவட்டக் கழகங்களின் செயலாளர்களும், முன்னணியினரும், மிக முனைப்பாகச் செய்து வருகின்றனர்.

நான் சென்ற பல கிராமங்களில், நன்றி மறக்காத தமிழர்கள், பென்னி குயிக் சிலை வைத்து இருப்பதைக் கண்டேன். அவர் பெயரால் கலை அரங்கங்கள். ஒரு விந்தையான மகிழ்ச்சிச் செய்தி. பென்னி குயிக் பிறந்தது, ஜனவரி 15 ஆம் நாள். அன்றைக்குத்தான், உழவர்கள் நன்றி பாராட்டும் மாட்டுப் பொங்கல். எவ்வளவு பொருத்தம் பாருங்கள்!

கேரளத்தின் பெரும் பணக்காரர்கள் சிலர், பிரபலமான பத்திரிகை உள்ளிட்ட நிறுவனங்களை நடத்துகிறார்கள். முல்லைப்பெரியாறு பிரச்சினையில், அவர்களின் உள்வேலையும் 79 இல் இருந்தே நீடிக்கிறது. அவர்களுக்கு, இப்போது ஒன்றிரண்டு கைக்கூலிகள் தமிழ்நாட்டில் கிடைத்து உள்ளார்கள். அவர்களைக் கொண்டு அறிக்கையும் வெளியிடச் செய்து உள்ளனர்.

கேரளாவுக்குச் செல்லுகின்ற பொருள்களைத் தடுத்து நிறுத்தினால், தமிழ்நாட்டின் வணிகம் கெட்டுப் போகுமாம். விவசாயமே அழிந்துபோனால், பிறகு இவர்கள் எதை விற்பார்கள்? இந்த அரிச்சுவடிப் பாடம், பாமரனுக்குக்கூடத் தெரியுமே? கரும்பே விளையா விடில், சர்க்கரை ஆலைகளை மூட வேண்டியதுதானே?

நம்மிடம் பொருள்களை வாங்காவிட்டால், ஆந்திராவில் இருந்தும், கர்நாடகத்தில் இருந்தும் கேரளம் பொருள்களை வாங்கிக் கொள்ளுமாம்.

அங்கிருந்து இவர்கள் ஆகாய மார்க்கமாகக் கொண்டு போவார்களா? அல்லது கடல்வழியாகக் கொண்டு செல்வார்களா? ஒரேயொரு சாலையைத் தவிர, அனைத்துச் சாலைகளும் தமிழ்நாட்டின் வழியாகத்தானே போக வேண்டும்?

தமிழ்நாட்டில் சுரண்டும் மணலைக் கொண்டு போய்த்தான், அங்கே வீடுகளைக் கட்டுகிறார்கள். கேரள மாநில மக்கள், நமது எதிரிகள் அல்ல.

அவர்களை நம் சகோதரர்களாகவே நேசிக்கிறோம். அரிசியும், பருப்பும், அனைத்துப் பண்டங்களும் அட்டியின்றித் தருவோம். ஆனால், நம் வாழ்வுக்கே கேடு செய்ய முனையும் சில கெடுமதியாளர்களின் திட்டத்தை, அக்கேரள மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதுதான், நமது போராட்டத்தின் நோக்கம் ஆகும்.

நிம்மதியான வாழ்க்கையா?அல்லது நீங்காத துன்பமா? இருப்பதைத் தக்கவைப்பதா? அல்லது அனைத்தையும் இழப்பதா? இதுதான், நம்முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் கேள்வி.

நான் பயணித்த ஊர்களில் எல்லாம், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, அனைவரும் போராட்டத்துக்கு ஆதரவுக்குரல் எழுப்பினர். விவசாய சங்கத் தலைவர்கள் பெரிதாக வரவேற்றனர்.

டிசம்பர் 29 என்பது, போராட்டத்தின் தொடக்கம்தான். மிகப்பெரிய போராட்டங்களுக்கு, இது பாயிரம்தான். தோழர்களே, இந்த அறப்போரில் பங்கு ஏற்கத் தவறாமல் வாருங்கள்.

‘கெடல் எங்கே தமிழர் நலன், அங்கெல்லாம் தலை யிட்டுக் கிளர்ச்சி செய்க’ என்ற பாவேந்தரின், பாட்டு வரிகளைக் காலத்தின் கட்டளையாகக் கொள்வோம். வேளாண் பெருங்குடி மக்களையும், அனைவரையும் அறப்போரில் பங்கு ஏற்க, அழைத்து வாருங்கள்.

வன்முறை துளியும் தலைகாட்டாது, நம் போராட்டத்தில். அண்ணா வழியில், அறவழியில், உரிமை காக்கும் போராட்டம். இதைவிடப் பன்மடங்கு போராட்டம் வெடிக்கும் என்பதை, கேரள அரசும், தீங்கு இழைக்க முனைவோரும் உணர வேண்டும். முல்லைப்பெரியாறு அணையை உடைப்பது தான் அவர்களது குறிக்கோள். அதனைத் தடுப்பதுதான் நமது போராட்டம்.

உச்சநீதிமன்றத்தைக் கேரள அரசு கிள்ளுக்கீரையாகவே கருதுகிறது. அணையை உடைக்க முயல்வதை, மத்திய அரசு தடுக்கப் போவது இல்லை.

தெற்குச் சீமை மக்களைப் பாதுகாக்க, கிளர்ச்சி ஒன்றுதான் ஒரே வழி.

களம் அழைக்கிறது; கம்பத்துக்கு வாருங்கள்!

டிசம்பர் 29, செவ்வாய்க்கிழமை, அறப்போர்க் களத்தில் உங்களை வரவேற்கக் காத்து இருக்கிறேன்.

எழுச்சிச் சங்கொலிக்கும்
உங்கள் பணிகள் வளரட்டும்!

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)