ஊழல் ஆட்சியை வீழ்த்த இரட்டை இலைச் சின்னம் வெல்லட்டும்... நல்ல செய்தியை நாட்டுக்கு அறிவிக்கட்டும்!

விவகாரங்கள்: அரசியல்

மாவட்டம்: தூத்துக்குடி, தமிழ்நாடு

செய்தித்துறை: சொற்பொழிவுகள்

Date: 
Mon, 14/12/2009

ஊழல் ஆட்சியை வீழ்த்த
இரட்டை இலைச் சின்னம் வெல்லட்டும்...
நல்ல செய்தியை நாட்டுக்கு அறிவிக்கட்டும்!

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் டி.நாராயணனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கழகப் பொதுச் செயலாளர் வைகோ 3.12.2009 அன்று திருச்செந்தூரில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அவரது உரையில் இருந்து...

தமிழ்நாட்டின் புகழ்மிக்க திருத்தலங்களில் ஒன்றான திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூர் திருநகரில், தேரோடும் வீதியில், பல்லாயிரக் கணக்கான தமிழ்மக்கள் திரண்டு இருக்கின்ற இந்த மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகின்ற நல்ல வாய்ப்பை எனக்கு உருவாக்கிக் கொடுத்து இருக்கின்ற எனது ஆருயிர்ச் சகோதரர், மாவட்டச் செயலாளர் ஜோயல் அவர்களும், தென்திசை வீரனாக இயக்கத்துக்குக் கிடைத்திட்டவரும், விசுவாசத்துக்கு இலக்கணமாகத் திகழ்கின்றவருமான எனது ஆருயிர்ச் சகோதரர் துணைப் பொதுச் செயலாளர் நாசரேத் துரை அவர்களும், முன்னின்று ஏற்பாடு செய்து இருக்கின்ற இந்தக் கூட்டத்திலே, உங்களைச் சந்திக்கின்ற வாய்ப்புக்கு நன்றி தெரிவிக்க விழைகின்றேன்.

அழகுசுந்தரம் பேசுகிறபோது, என் உடல் நலம் பழுதுபட்டு காய்ச்சலால் பாதித்து இருக்கிற நிலையில், நிகழ்ச்சியைத் தள்ளி வைக்கலாமே என்று தோழர்கள் கூறியபோது, நான் அதை மறுத்தேன். எந்த நிலையிலும் அறிவித்த நிகழ்ச்சி நடைபெற்றாக வேண்டும்; மூன்றாம் தேதி கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்றேன்;
இயற்கையும் கருணை காட்டும் என்று நான் நம்புகின்றேன். பெருமழை பெய்தது நேற்றும் இன்று காலைப் பொழுதிலும். செங்கோட்டையன் சொன்னார் இரண்டடி உயரத்துக்குத் தண்ணீர் தேங்கி நின்றது. எப்படி மாலைக் கூட்டம் இந்த மைதானத்தில் நடக்கப் போகிறது என்று கவலையுற்றேன். அதன்பின்னர் வானம் வெளிவாங்கி, ஓய்ந்து விட்டது. எனவே நிகழ்ச்சியும் இன்றைக்கு வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வரலாற்றுப் புகழ்மிக்க இடம்தான் இந்த அலைகடல் தாலாட்டுகின்ற திருச்சீரலைவாய். இளங்கோ அடிகள் பாராட்டிய திருச்செந்தூர். சிலப்பதிகாரத்தில், ‘சீர்கெழு செந்தில்’ என்று பாராட்டப்பெற்ற திருச்செந்தூரில் நாம் கூடி இருக்கிறோம். அருணகிரிநாதர் போற்றிய திருச்செந்தூர். வைணவ பக்தராக இருந்த பகழிக்கூத்தர், ‘முருகன் பிள்ளைத் தமிழ்’ என்று சைவத் திருமுறைபாடிய திருச்செந்தூரில், சிவப்பிரகாச சாமிகளும், அடிகளார் பலரும் உலவிய திருச்செந்தூரில், படைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டம்.

நம்மைச் சூழ்ந்து இருக்கின்ற இருளை அகற்றுவதற்கு சூளுரை மேற்கொள்வதற்கான பொதுக்கூட்டம். தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் இல்லாத பேராபத்து ஜனநாயகத்துக்கு நேர்ந்து இருக்கின்ற காலகட்டத்தில் திருச்செந்தூரில் நாம் கூடி இருக்கிறோம்.

இந்தத் திருச்செந்தூர் நகரத்துக்குப் பல்வேறு பெருமைகள் உண்டு. குன்றுதோர் ஆடும் குமரனுக்குப் படை வீடுகள் ஆறு. ஆனால், அலைகடல் ஓரத்தில் அவன் படைவீடு அமைத்தது திருச்செந்தூரில்தான். அதனால்தான் உரையின் தொடக்கத்தில், ‘துள்ளி வருகுது வேல்’ என்று நான் சொன்னேன். தமிழ்க் கடவுள் என்று தமிழ் மன்னர்களும், புலவர் பெருமக்களும் போற்றிய கந்தன் ஏந்திய வேல், அது சூரனை சம்கரித்த வேல். அக்கிரமங்களைத் தூள்தூளாக்குகின்ற வல்லமை பெற்று இருக்கின்ற வேல் என்றுதான் கோடிக்கணக்கான மக்கள் முருகனைப் போற்றி வழிபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

சூரபத்மன் சக்தி வாய்ந்த வரங்களைப் பெற்றவன்.

அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் களங்களுக்குப் பிறகு திருச்செந்தூருக்கு நாம் வந்து இருக்கிறோம். கொலைவெறி தாண்டவமாடிய திருமங்கலத்தில் அக்கிரமக்காரர்களைச் சந்தித்தோம். கொடுவாளும் கையுமாக காவல் துறை உதவியோடு அக்கிரமங்கள் அங்கே அரங்கேற்றப்பட்டு ஜனநாயகத்தின் மென்னி குரல்வளை முறிக்கப்பட்டது. கோடிக்கணக்கான கொள்ளைப்பணம் வீதி வீதியாக வீடுவீடாகக் கொட்டி, வாக்காளர்கள் விலைக்கு வாங்கப்பட்டு ஜனநாயகத்தின்மீது கொடூரமான மரண காயங்கள் நிகழ்த்தப்பட்டதற்குப் பிறகு, ஒரு இடைவெளிக்குப்பின்னர் திருச்செந்தூரில் அண்ணா தி.மு.க. களம் காண்கிறது.

எங்களை யாராலும் வீழ்த்த முடியாது, எங்களிடம் ரத கஜ துரக பதாதிகள் இருக்கிறார்கள்; ஏவிவிட்டால் ஓடிவருவதற்கு மந்திரிமார்கள் பட்டாளம் இருக்கிறது; கைகட்டிச் சேவகம் செய்வதற்குக் காவல் துறையும் இருக்கின்றது’ என்கிறார்கள் ஆளவந்தார்கள்.

நான் பரிதாபப்படுகிறேன் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை எண்ணி. நல்ல மனிதர் நரேஷ்குப்தா. மெலிந்த உடல்தான். ஆனால், உருக்கைவிட உறுதியான, நேர்மையான மனிதர். அதில் எந்தச் சந்தேகமும் எனக்கு இல்லை. காலைவேளையில் அண்ணாநகரில் மளிகைக்கடையில் காய்கறிக் கடையில் ஒரு கைப்பையை எடுத்துக் கொண்டுதான் நரேஷ் குப்தா பொருள் வாங்க வருவார். அரசாங்க உத்தியோகத்தையோ, அரசாங்கச் சிப்பந்திகளையோ வீட்டு வாசலுக்கு அனுமதிப்பவர் அல்ல. அப்படிப்பட்ட நேர்மையாளர். ஆயினும், நான் அனுதாபப்படுகிறேன்.

‘பால்காரர்களே, பணத்தைக் கொண்டுபோய்க் கொடுக்காதீர்கள்; செய்தித்தாள்களை வீடுவீடாக விநியோகம் செய்பவர்களே, நீங்கள் கரன்சி நோட்டுகளை எடுத்துச் சென்று வீடுகளில் வீதிகளில் கொடுத்து விடாதீர்கள் என்கிறது தேர்தல் ஆணையம்.

நாட்டு நடப்பே தெரியவில்லையே நரேஷ்குப்தா அவர்களுக்கு? வருத்தப்படுகிறேன்.

காவல்நிலையத்தில் அல்லவா கவர் போடுகிறார்கள்? இரண்டாயிரமா- ஐந்தாயிரமா என்று பின் கவர் அடிப்பதே காவல் நிலையத்தில் அல்லவா? வேலி அல்லவா இங்கே பயிரை மேய்கிறது? இதுதானே நடந்தது திருமங்கலத்தில்?

நான் நேரிடையாக பாதிக்கப்பட்டவன். பாதிக்கப்பட்ட இன்னொருவர் பக்கத்தில் இருக்கிறார். அரசியலில் என் கருத்துகளை ஏற்றுக் கொள்ளாத சகோதரர்கள்கூட, நான் தோற்றதில் வருத்தப்பட்டார்கள். அரசியலில் என் நிலைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளாத நண்பர்கள்கூட, வைகோ நாடளுமன்றத்துக்குச் செல்ல வேண்டியவன் அல்லவா என்று ஆதங்கப்பட்டதை நான் அறிவேன்.

வாக்குப்பதிவு நாளன்று, என் கிராமத்து வாக்குச் சாவடியிலே வாக்கைப் பதிவு செய்து விட்டு, வாக்குச் சாவடிகளுக்குச் சென்றபோது, பஞ்ச பாண்டவர்கள் திருதிராஷ்ரன் சபையிலே எப்படித் தலை கவிழ்ந்தார்களோ, அதைப் போல வாக்காளர்கள், முகத்தைக் கூடப் பார்க்க மனம் இன்றித் தலை கவிழ்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

என்ன நடந்தது? ஏது நடந்தது? தோழர்கள் ஓடி வந்து சொன்னார்கள். விடியற்காலையில் நான்கு மணி வரை காவல்துறை அதிகாரிகளோடு வீடுவீடாகக் கொண்டுபோய்ப் பணம் கொடுத்தார்கள்; ஓட்டுக்கு ஆயிரம் இரண்டாயிரம். ஆகவே, பணம் கொடுப்பது, யாரும் அறியாத ஒரு புதுமையான குற்றச்சாட்டு அல்ல. எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஜனநாயகத்துக்கு இதைவிட ஆபத்து வர முடியாது கொள்கைக்கு ஓட்டுப் போடட்டும்; யார் வேண்டுமென்றாலும் வெற்றி பெறட்டும். இன்றைக்குத் தோற்றவர் நாளை வெல்லலாம். அதுதான் மக்கள் ஆட்சி.

நான் வாக்காளர்களைக் குறை சொல்லவில்லை. ஏழ்மையில், வேதனையில் உழன்று கொண்டு இருக்கின்ற சாதாரண மக்களுக்கு, வறுமைப் பிடியில் சிக்கி இருக்கக்கூடிய குடும்பங்களில், பரிட்சை எழுதுவோருக்குப் பணம் கட்ட வசதி இல்லையே? ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவதற்குக் காசு இல்லையே? மாற்றுடை தைப்பதற்கு வாங்கிக் கொடுப்பதற்குப் பணம் இல்லையே?இப்படி எத்தனையோ தேவைகள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும்.

அப்படி வறுமையில், இல்லாமையில், ஏழ்மையில் உழல்கின்ற மக்களிடம் சென்று, வீட்டுக்குவீடு இரண்டாயிரம், ஐயாயிரம், பத்தாயிரம் என்று கொடுக்கின்றபோது, அந்தப் பணத்தை அவர்கள் வீதியிலேயே தூக்கி வீசி எறியவா முடியும்?

ஆனால், இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகும் திருமங்கலத்திலும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்களிலே பலருக்கு மனப் போராட்டம்.

வாசல்கதவைத் தட்டுகிறான் அதிகாலை ஐந்து மணிக்கு. கதவைத் திறந்தால், கவர் வந்து விழுகிறது. ‘அண்டா கா கசம், அபுக்கா கசம், திறந்திடு சீசேம்’ என்று அலிபாபா படத்திலே விழுவது போல பணம் வந்து பொத்தென்று விழுகின்றது. அது எந்த கட்சி சார்பாக என்பதற்கு அடையாளம் இருக்கின்றது. இதன் பிறகு என்ன செய்வார்கள்? ஒரு சில இடங்களில், இந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முயன்றவர்கள் மிரட்டப்பட்டார்கள். உங்கள் வீட்டுக்குப் பணம் கொடுத்தாகிவிட்டது.
நீங்கள் வாக்குச் சாவடிக்கு ஏன் போகவில்லை? என்று மிரட்டல் வேறு. வாக்குப் பதிவு முடிந்ததற்குப் பிறகு, நீங்கள் ஓட்டைப் பதிவு செய்யவில்லை, உங்கள் வீட்டுக்குப் பணம் கொடுத்து இருக்கிறோம் என்று, கத்தி முனையில் மிரட்டிப் பணத்தை திரும்பப் பறித்துக்கொண்டு போனார்கள். இத்தனையும் காவற்துறையின் துணையோடுதான் நடைபெற்றது.

நான் பொது மக்களுக்குச் சொல்லுகின்றேன். நீங்கள் தெருத்தெருவாகப் போய்ச் சொல்லுங்கள். வீடுகளில் இருக்கும் தாய்மார்களிடம் சொல்லுங்கள்.

‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்று சொல்லுவார்கள். இது பாவப்பட்ட பணம். இது பாவத்தின் கரங்கள் கொடுத்து இருக்கிற பணம். கேடு செய்தவர்கள், கொள்ளையடித்தவர்கள், ஊழலில் திரட்டிய பணம். இதை வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுவது பாவம். புண்ணியம் தேடித்தானே கோயிலுக்குப் போகிறார்கள்? பாவ மன்னிப்பைக் கேட்டுத்தானே தேவ ஆலயங் களுக்குப் போகிறார்கள்? துயர் களைய வேண்டுமென்று தானே மசூதிக்குப் போகிறார்கள்? வாழ்க்கையிலே தவறுகள் கூடாதென்றுதானே வழிபாட்டுத் தளங்களுக்குப் போகிறார்கள்?

இது உழைத்தபணமா? எங்கிருந்து வந்தது? அல்லது வீடுவீடாக, ஊர்ஊராகப் போய் தேர்தல் நிதியாகத் திரட்டிய பணமா? நாடாளுமன்றத் தேர்தலிலே ஆளுகின்ற கட்சி செலவழித்ததே 1200 கோடி பணம் எப்படி வந்தது?

திருச்செந்தூர் வீதியிலே கடைவீதியிலே வசூல் செய்யப்பட்டதா? கட்சிக்காகத் திரட்டப்பட்டதா?

பேரறிஞர் அண்ணா அவர்கள், சாமான்யர்களுக்காக, ஏழை எளியவர்களுக்காக இயக்கத்தை உருவாக்கினார். ஏழை எளியோரை உயர் பதவிகளிலே உட்கார வைத்தார். எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டது, கலைஞர் கருணாநிதியின் சாம்ராஜ்யத்திலே.

இது ஸ்பெக்ட்ரம் ஊழலிலே திரட்டப்பட்ட பணம் ஒரு லட்சம் கோடி.

பணத்தைக் கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்று, அதிகாரத்தைக் கைப்பற்றுவது; அதை வைத்துக் கொண்டு மேலும் லட்சக்கணக்கான கோடிகள் ஊழலில் பணம் திரட்டுவது; அந்தப் பணத்தை அடுத்த தேர்தலில் அதைவிட அதிகமாகச் செலவழிப்பது என்பது ஒரு விஷச்சுழல், புதை மணல், இந்தப் புதை மண்ணிலே தமிழ் நாடு சிக்கிவிடக்கூடாது. வாக்காளப் பெருமக்கள் - பொதுமக்கள் பாதுகாப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.

1200 கோடி ரூபாயைக் கொட்டியும், அரசு அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தும், அமைச்சர்கள் நாடெங்கும் முற்றுகையிட்டும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை விட வெறும் 15லட்சம் வாக்குகள் தான் அவர்கள் முன்னிலையிலே வந்தார்கள். 12 இடங்களையும் பறி கொடுத்தார்கள். குறைந்த வாக்கு வித்தியாசத்திலே சில தொகுதிகளை நாம் இழந்தோம்.

ஏனெனில் இதைவிட அதிகாரம் எவரும் பெற்றிருக்க முடியாது என்கின்ற அளவுக்கு 1008 அண்டங்களையும் ஆட்டிப்படைக்கின்ற அதிகாரத்தை முக்கண் முதல்வனிடமே வரத்திலே பெற்றவன் சூரபத்மன். எவராலுமே நெருங்க முடியாத வச்சிர தேகத்தைப் பெற்றவன், நினைத்த நேரத்தில் நினைத்த கணத்தில் நினைத்த வடிவம் எடுக்கக்கூடிய ஆற்றல்மிக்கவன், தம்பிமார் படையோடு கடலுக்குள் வீர மகேந்திர கோட்டை எழுப்பிக்கொண்டு, யாராலும் தன்னை நெருங்க முடியாது அழிக்க முடியாது என்று கருதி இருந்தான் சூரபத்மன்.

அந்த சூரபத்மனை, இந்தத் திருச்செந்தூரில்தான் வேலன் வீழ்த்தினான்.

1008 அண்டங்களையும் ஆட்டிப்படைக்கின்ற அதிகாரம் பெற்று இருந்தவன் நொறுக்கப்பட்டதைப் போல, அக்கிரமத்துக்கு ஒரு முடிவு வந்துதான் தீரும். அந்த முடிவை எழுதுகின்ற முதல் இடமாக திருச்செந்தூர் இடைத் தேர்தல் களம் இருக்க வேண்டும். அதற்கு உறுதி எடுத்துக்கொள்ளத்தான் நாம் கூடி இருக்கிறோம்.

இந்தத் தேர்தல்களத்திலே போட்டியிடுகின்ற ஆளும் கட்சியின் வேட்பாளரைப்பற்றி, நம்முடைய செங்கோட்டையன் அவர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னோடிகளும் சில கேள்விகளை எடுத்து உரைத்தார்கள். தொலைவில் இருந்து கேட்டுக்கொண்டு இருக்கின்ற நடுநிலையாளர்களே, நீங்கள்தாம் நீதிபதிகள். உங்கள் முன் வழக்கு உரைப்பதற்காக நான் வந்து இருக்கின்றேன். நீங்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.

திருச்செந்தூரில் எத்தனையோ நூறு ஆண்டுகளுக்கு முன்பு, தேரை நகர்த்த முடியவில்லை. நெருப்பாக வெய்யில் தகித்துக்கொண்டு இருந்தது. தேரைக் கொண்டு செல்ல முடியவில்லை. என்ன செய்வது?

ஆதித்த புலவன் அருமையாகப் பாசுரம் பாடினான். அவ்வளவுதான், நெருப்பாகத் தகித்துக் கொண்டு இருந்த வெயில் மறைந்தது, கார் முகில்கள் கூடின. மழைத் துளிகள் விழுந்தன. தென்றல் வீசியது, மக்களுக்கு ஊக்கம் பிறந்தது. தேரை நகர்த்தினார்கள், நகர்ந்தது. குறிப்பிட்ட இடத்துக்குப் போய்ச் சேர்ந்தது. அந்த சக்தியை இந்த மண் மக்களுக்குத் தந்தது.

அதைப்போல, கார்த்திகைத் திங்களில் கார் மேகங்கள் மழை பொழிந்து இருக்கின்ற ஒரு முன்இரவுப் பொழுதில், குளிர்ந்த காற்று வீசுகின்ற நேரத்தில், மக்கள் சக்திக்கு நிகரானது எதுவும் இல்லை என்ற நம்பிக்கையோடு நான் சொல்லுகிறேன். மக்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். மக்கள் சத்தியே மகேசன் சக்தி என்பதை நிருபிக்கின்ற இடம்தான் இந்தத் தேர்தல்களம். பணநாயகத்தை வீழ்த்த, ஜனநாயகத்தை உயிர்ப்பிக்க நாம் கடமை ஆற்ற வேண்டும். இல்லையேல் எதிர்காலம் பாழாகிவிடும்.

அந்தத் திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்ற இடமாக திருச்செந்தூர் இருக்கட்டும். இனிமேல் கொள்ளைப் பணத்தைக்கொண்டு, ஊழல் பணத்தைக்கொண்டு வாக்காளர்களை விலைக்கு வாங்கலாம் என்ற எண்ணமே வரக்கூடாது ஆளும்கட்சிக்கு, இந்தத் தேர்தலுக்குப் பிறகு. ஜனநாயகத்தைக் காக்கின்ற வழி இது ஒன்று தான். ஒரு முறை தோற்றால் 50 கோடி பணத்தைச் செலவழித்துத் தோற்றால் அதன் பின்னர் ஊழல் பணத்தைக்கொண்டு வாக்காளர்களை விலைக்கு வாங்குகின்ற முயற்சியில் ஆளும் கட்சி ஈடுபட முடியாது. கொள்கையடிப்படையில் யார் வேண்டுமென்றாலும் வெற்றி பெறட்டும். கருத்துக்கு கருத்து - கொள்கைக்கு கொள்கை - அந்த அடிப்படையில் வெற்றி பெறட்டும். ஜனநாயகம் தழைக்கட்டும். அப்படிப்பட்ட உரைகல்லாக திருச்செந்தூர் இடைத்தேர்தல் இருக்கும் என்று நான் நம்புகின்றேன். நான் நடுநிலையாளர்களைக் கேட்கிறேன்.

இன்றைக்கு ஆளும் கட்சி வேட்பாளராக நிற்பவரை ஆதரித்து, 2006 தேர்தலில், இதே இடத்தில் நான் பேசினேன்.

வாக்காளப் பெருமக்களே, அண்ணா தி.மு.க வுக்கு வாக்கு அளித்தீர்கள். இரட்டை இலைக்கு வாக்கு அளித்தீர்கள். அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப் பட்டார். சில தொகுதிகளின் தேர்தல் முடிவு சற்றே மாறி இருந்தால் - குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலே, நம்முடைய அணி வாய்ப்பை இழந்தது - அந்தத் தேர்தல் முடிவு கொஞ்சம் மாறி இருந்தால் இவரை அமைச்சராகவே கூட ஆக்கியிருப்பாரே அண்ணா தி.மு.க பொதுச் செயலாளர். எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தார்?

உங்களுக்கு முகவரி கொடுத்தது யார்? லட்சோபலட்சம் அண்ணா தி.மு.க அடலேறுகளின் வியர்வைத் துளிகளில், இரத்தத் துளிகளில், கண்ணீர் துளிகளில் உருவாக்கப் பட்ட புரட்சித் தலைவர் இயக்கத்தில், உங்களை அடையாளம் காட்டி, சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி, மந்திரி ஆக்கி மகோன்னதமான வாழ்வுக்குச் சொந்தக்காரர் ஆக்கி, உங்கள் அருமை மகள் கல்யாண வீட்டில் மேடையிலே பேச வரும்போது கூட, அடுத்து இவரை அமைச்சர் ஆக்குவேன் என்று சொல்லுகின்ற அளவுக்கு உங்கள் மீது நம்பிக்கை வைத்து இருந்தாரே? ஒரு நம்பிக்கைத் துரோகி இங்கே வேட்பாளராக நிற்கிறார். எனக்கொன்றும் தனிப்பட்ட விரோதம் யார் மீதும் கிடையாது.

சகோதரர்களே, இந்தத் தேர்தல் களம் - எதனாலே இந்தத் தேர்தல் வந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு தர்மபுரி மாவட்டத்திலே ஒரு இடைத் தேர்தல் வரப்போகிறது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் புற்று நோயாலே மறைந்து விட்டார். நமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனால், திருச்செந்தூரில் எதனாலே இடைத்தேர்தல்? நீங்கள் இரட்டைஇலை சின்னத்துக்கு ஓட்டுப்போட்டு அவரை ஜெயிக்க வைத்தீர்கள். அவர் எதற்காக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்? இந்தத் தொகுதி மக்களுக்கு, வாக்காளர்களுக்குத் துரோகம் செய்து இருக்கிறார். கொள்கை அடிப்படையில், அவருக்குக் கருத்து மாற்றம் ஏற்பட்டு விட்டதா?

அவர் மீது வழக்கு. வருவாய்க்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பு வழக்கு. ஊழல் வழக்கு. கூண்டில் நிறுத்தப்பட்டார். அரசியல் வஞ்சம் தீர்ப்பதற்காக பழிவாங்குவதற்காக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரை மிரட்டுவதற்காக, அச்சுறுத்துவதற்காக, அந்தக் கட்சிக்குத் தொல்லை கொடுக்கவேண்டும் என்பதற்காக ஆட்சியை நடத்துகின்ற முதல்வர் கருணாநிதியின் ஏவுதலில் வழக்குப் போட்டார்கள்.

அவர் மீது, குடும்பத்தினர் மீது, சகோதரர்கள் மீது, அவர்களது பிள்ளைகள் மீது வழக்கு. இந்த வழக்கை ஏன் எதிர்நோக்க முடியவில்லை. ஏன் பயம்?

இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகின்ற நிலைமையில் அண்ணா தி.மு.க எம்.எல்.ஏ கட்சி மாறுகிறார். தி.மு.க வில் சேருகின்றார். பதவியை ராஜினாமா செய்கின்றார்.

பெரிய கொள்கை வீரனா? பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்திலே பதவி பறிபோய் விடும். அதனால் ராஜினாமா செய்கிறார்.

என்ன பேரம்?

முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மிரட்டல்கள் தான் காரணம் என்று நான் குற்றம் சாட்டுகின்றேன். ஒரு சட்ட மன்ற உறுப்பினரை பிளாக்மெயில் செய்வதற்கும், வழிப்பறிக் கொள்ளைக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம்?

ஆனால், இவரது மிரட்டலுக்கு எல்லோரும் பலியாகி விடவில்லை. எந்தச் சூழ்நிலையிலும், பிரளயமே வந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியாக கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்.

இதோ இருப்பவர்களைப்போல, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட மன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். மற்ற இயக்கங்களிலும் இருக்கின்றார்கள். அனைவரையும் அசைத்து விட முடியாது.

இந்தத் தேர்தல் களத்திலே, 50 கோடி ரூபாயைச் செலவழித்து நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோமே என்று மமதையிலே இருக்கின்றது ஆளுங்கட்சி.

வாக்காளப் பெருமக்களே, ஐந்தாண்டு கால உங்கள் வாழ்க்கையை எண்ணிப்பாருங்கள். விண்ணை நோக்கி வேகமாகச் சென்றுவிட்ட விலைவாசியைப் பற்றி இங்கே சொன்னார்கள். மளிகைக் கடையிலே பொருட்களை வாங்க முடியவில்லை. காய்கறிக் கடையிலே கட்டுப்படியாகவில்லை. நம்முடைய குடும்பத்தினுடைய வருமானத்திற்கும் செலவுக்கும் எட்டவில்லை.

ஒவ்வொரு குடும்பத்தின் நிலவரம், தலையில் கல்லைப் போட்டது போல இருக்கின்றது. ஒரு குடும்பத்திற்கு குறைந்த பட்சம் இந்த விலைவாசி ஏற்றத்தில் மாதத்தில் 1000 ரூபாய் அதிகச் செலவு என்றால், பன்னிரண்டு மாதத்திற்கு பன்னிரண்டாயிரம் ரூபாய்.

பாறாங்கல்லை உங்கள் தலையில் போட்டு விட்டு, ஆயிரம் ரூபாயைக் காட்டி ஓட்டு வாங்கி திரும்பவும் வெற்றி பெற்று மேலும் ஊழலில் கொள்ளையடிக்கலாம் என்று திட்டம் போடுகின்ற கூட்டத்தை நீங்கள் முறியடிக்கவேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை திருச்செந்தூர் தொகுதி மக்களுக்கு இருக்கின்றது.

தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்கள் அனைத்தும் பறிபோய்க்கொண்டு இருக்கின்றன. காவிரியாகட்டும், பாலாறாகட்டும், முல்லைப்பெரியாறு ஆகட்டும், அனைத்து உரிமைகளையும் காவு கொடுத்துக் கொண்டு இருக்கின்ற நிலைதான் தொடருகிறது.

நம்முடைய மீனவ மக்களினுடைய துயரத்தைப் பற்றி இங்கே சொன்னார்கள். என்னுடைய அருமை மீனவச் சகோதரர்கள் பலர் இங்கே வந்து இருக்கிறார்கள்.

மீனவர்களுக்கு இந்திய அரசு செய்து இருக்கின்ற துரோகத்தைப் போல, அதற்கு உடந்தையாக கலைஞர் கருணாநிதி செயல்பட்ட துரோகத்தைப்போல, வரலாற்றிலே இதுவரை நடந்தது கிடையாது.

ஆம். மீன் பிடித்தொழிலைக் கட்டுப்படுத்துகின்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வரப்போகிறோம் என்று ஒரு மசோதா தாக்கல் செய்கிறார்களே, அந்த மசோதாவின் அடிப்படையில், கடல் எல்லையில் 12 கடல் மைல்களுக்கு அப்பால் சென்றால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை. ஒன்பது லட்சம் அபராதமாம். இதை விட ஒரு கொடூரமான சட்டத்தை, எந்த நாட்டிலும் கொண்டு வர முடியாது.

கடலில் எல்லை வகுத்து விடுவீர்களா? கடலில் கோடு கிழித்து விடுவீர்களா?

அதைவிடக் கொடுமை என்ன தெரியுமா? சிறிய கண் வலையைப் பயன்படுத்தக் கூடாதாம். என்ன வலை பயன்படுத்த வேண்டும் என்பதை மீனவன்தான் தீர்மானிக்க வேண்டும்.

என்ன மீன் பிடிக்க வேண்டும்?எவ்வளவு மீன் பிடிக்க வேண்டும் என்பதையெல்லாம் அரசாங்க அதிகாரிகள்தாம் தீர்மானிப்பார்களாம். நீங்கள் பத்தாயிரம் ரூபாய் மதிப்புக்கு மேல் அதிக மதிப்பு உள்ள மீனைப் பிடித்துவிட்டால், இருபத்துஐயாயிரம் ரூபாய் அபராதம்.

இப்படி ஒரு கேடுகெட்ட சட்டத்தை உலகத்தில் எந்த நாட்டிலும் கொண்டு வந்திருக்க முடியாது. இவ்வளவு கொடூரமான ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்ற பொழுது கலைஞர் கருணாநிதி ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை?

அண்ணா தி.மு.க பொதுச் செயலாளர் சவுக்கால் அடித்தபிறகு, மறுமலர்ச்சி தி.மு.க எதிர்ப்புக் குரல் எழுப்பிய பிறகு, மீனவ அமைப்புகள் எல்லாம் ஒன்று திரண்டு கடலோடு போராடுகின்ற, சூறைக் காற்றோடும் சுறா மீனோடும் போராடுகின்ற வலிய கரையோரமுள்ள அந்த பரதவகுல மக்கள், எங்கள் வாழ்வு அழிந்து போகுமே போராடப் போகிறோம் என்று அறிவித்ததற்குப் பிறகு ஒரு அறிக்கை விட்டார்.

கிட்டத்தட்ட 6086 கிலோமீட்டர் கடலோரப் பகுதி இந்தியாவில் இருக்கின்றது. 1076 கிலோ மீட்டர் தமிழ்நாட்டில் மாத்திரம் இருக்கின்றது. கடலோரப்பகுதியில், ஏறத்தாழ ஒரு கோடி குடும்பங்கள் இருக்கின்றன. அந்தக் குடும்பத்தினர் அனைவருமே மீன் பிடித் தொழிலை நம்பி வாழுகிறார்கள்.

நான் இந்த மீனவ மக்களுக்குச் சொல்லுகின்றேன். உங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் ஒன்றல்ல, இரண்டல்ல.

ஒரு நாள் போவார், ஒரு நாள் வருவார், ஒவ்வொரு நாளும் துயரம் என்றாரே, அன்றைக்கு மக்கள் திலகம். அதைப் போல, ஒவ்வோருநாளும் துயரமாகக் கொண்டு இருக்கக்கூடிய மக்கள், கடலுக்குச் சென்று அவர்கள் உயிரோடு வந்தால்தானே உறுதி.

அப்படிச் செல்லும்போதும், இலங்கைக் கடற்படைக் காரன், வந்து சுட்டுக் கொல்கிறானே? மீனவர்களின் இரத்தம் கடலோடு கலக்கிறதே? இங்கே ஒரு இந்திய அரசு இருக்கிறதா?

அங்கே இருந்து இலங்கையில் இருந்து கடற்படையினர் நமது மீனவர்களை வந்து தாக்குவது, படகுகளை நாசப்படுத்துவது, வலைகளை அறுத்து எறிவது, பிடித்த மீன்களை அள்ளிக்கொண்டு செல்வது, அதோடு மட்டுமல்ல, மீனவர்களைச் சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்வது, பல வேளைகளில் சுட்டுக் கொன்று கடலில் பிணங்களாகத் தூக்கி வீசி விட்டுப் போவது, இப்படித் தொடர்ந்து இதுவரை ஆயிரம் தடவைக்கு மேல் தாக்கி இருக்கிறார்கள். ஐந்நூறுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

நான் கேட்கிறேன். நமக்கும் பாகிஸ்தானுக்கும் நாடு தழுவிய யுத்தம் நடைபெற்றது. ஆனால், குஜராத் மீனவர்கள் அரபிக் கடலில் மீன் பிடிக்கப்போய், நம் எல்லையைத் தாண்டிச் சென்றதால், இன்றுவரை ஒரு குஜராத் மீனவனையாவது பாகிÞதான் கடற்படை சுட்டதாக ஒரு சம்பவத்தை நீ சொல்ல முடியுமா?

ஆனால், இங்கே நம்முடைய மீனவர்களை சிங்களவன் தினம்தோறும் வந்து சுடுகிறான். ஆடைகளை அவிழ்த்து அம்மணமாக்கி இழிவுபடுத்தி அவமானப்படுத்தி, காலால் எட்டி மிதித்து சித்திரவதை செய்கிறானே, இதுவரை இந்தியக் கடற்படை தடுத்தது உண்டா? ஒரு வேட்டுச் சத்தத்தை எழுப்பியது உண்டா? ஒன்றும் கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக, எந்த ஆபத்து வரக்கூடாது என்று பயந்தோமோ, அந்த ஆபத்து வந்து விட்டது.

ஈழத்தமிழர்களை அழித்தொழிக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு, சீனர்கள் அங்கே கால் வைத்து விட்டார் கள். சிங்களவன் கொண்டுவந்து உட்காரவைத்து விட் டான். சீனர்கள் தளம் அமைத்து விட்டார்கள், அம்மாந் தோட்டையில் துறைமுகம் அமைக்கிறான். இப்போது, சிங்களவர்களோடு சேர்ந்து சீனனும் தாக்குகின்றான்.

இந்திராகாந்தி அம்மையாருக்கு இருந்த தொலை நோக்குப் பார்வை, மன்மோகன் சிங் அரசுக்கு இல்லை. ஈழத்தமிழர்களுக்குச் செய்த துரோகத்துக்கு மன்னிப்பே இல்லை.

அதனுடைய விளைவு சீனர்கள் இங்கே கால் வைத்து விட்டார்கள். தெற்கே இருந்துதான் ஆபத்து வரப் போகிறது. இனி அந்த ஆபத்தை எப்படித் தடுக்கப் போகிறது இந்திய சர்க்கார். அருணாசலப் பிரதேசத்துக்கு உரிமை கொண்டாடுகிற சீனாக்காரன், இமயப் பருவதத்தின் சரிவில், 24 இடங்களில் விமான ஓடுதளம் அமைத்து இருக்கின்றான். நம்மைச் சுற்றிலும் ஆபத்து சூழ்ந்து விட்டது. 1962இலே ஆபத்து ஏற்பட்டபோது, அன்றைக்கு பாராளுமன்றம் அதிர்ந்தது. நேரு தலை குனிந்தார்.
‘ஏமாந்து விட்டோம். முதுகிலே குத்தி விட்டது சீனா’ என்றார்கள். இன்றைக்கு நம் கண் முன்னாலே அதைவிடப் பெரிய ஆபத்து நம்மைச் சூழ்ந்து இருக்கின்றது.
இனி தெற்கே இருந்துதான் ஆபத்து வரும். என்றைக்கும் சிங்களவன் இந்தியருக்கு நண்பன் அல்ல. அவன் என்றைக்கும் நமக்கு விரோதி. அவன் சீனர்களோடு, பாகிஸ்தானோடு கைகோர்த்து விட்டான். இனி எதிர் காலத்தில் ஆபத்து வருகிறபோது தெற்கே இருந்து தாக்குதல் வருகின்றபோது, என் தமிழ்ச் சமுதாயமே நமக்குத்தான் அழிவு.

கேள்வி கேட்பார் எவரும் இல்லையா? இதற்கெல்லாம் சரியான சம்மட்டி அடியாக இருக்க வேண்டும், இரட்டை இலைக்குப் போடுகின்ற ஓட்டு. திருச்செந்தூரிலே, 50 கோடிப் பணத் தையும் அள்ளிவீசியும், காவல்துறை கைலாகு கொடுத்தும், மந்திரிமார்கள் சுற்றிச்சுற்றி வந்தும், ஆளுகிற கட்சி மண்ணைக் கவ்வியது, அண்ணா தி.மு.க ஜெயித்தது என்ற செய்தி வருகின்ற போதுதான் ஒரு திருப்பம் ஏற்படும்.

இது ஒரு தொகுதிக்குப் போடுகின்ற ஓட்டு என்று கருதாதீர்கள். ஒரு எம்.எல்.ஏ வெற்றி பெற்று என்ன ஆகப் போகிறது என்று நினைக்காதீர்கள். இங்கே நீங்கள் வழங்குகின்ற தீர்ப்பு, இனிமேல் இந்த ஊழல் பணத்தைத் திரட்டிக்கொண்டு தேர்தல் களத்திலே வருகிற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது.

அப்பொழுதுதான் ஊழல் அற்ற ஒரு ஜனநாயகத்தை நாம் நிலை நாட்ட முடியும். நல்ல செய்தியை நாட்டுக்கு அறிவிக்கின்ற நாளாக வாக்குப்பதிவு நாள் இருக்கட்டும். இரட்டை இலைச் சின்னம் வெற்றி பெறட்டும். அம்மன் நாராயணன் உங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆகட்டும்.

பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)