விவசாயிகள் புரட்சி வெடிக்கும்! சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத மேடையில் மத்திய மாநில அரசுகளுக்கு வைகோ எச்சரிக்கை.

விவகாரங்கள்: பொருளாதாரம், விவசாயம், தேசிய, புறநகர்

மாவட்டம்: பிற மாநிலங்கள்

செய்தித்துறை: தொகுப்புகள், பத்திரிகை அறிக்கைகள், சொற்பொழிவுகள்

Date: 
Mon, 20/12/2010

 

 

விவசாயிகள் புரட்சி வெடிக்கும்!


சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத மேடையில்
மத்திய மாநில அரசுகளுக்கு வைகோ எச்சரிக்கை.

விவசாயிகளின் துயர் துடைக்கத் தவறிய மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் ஹைதராபாத் நகரில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டபோது உண்ணாநிலைப் போராட்டத்தின் நோக்கத்தை ஆதரித்து டிசம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை அன்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரை:

உணர்ச்சிப் பிழம்பாக இங்கே கூடியிருக்கின்ற சகோதர சகோதரிகளே, தெலுங்கு தேசக் கட்சித் தலைவர்களே, அரசியல் கட்சித் தலைவர்களே வணக்கம்.

ஆந்திர மாநிலத்தில் வறட்சியாலும், அடுத்தடுத்து வீசிய புயலாலும் மழை இன்மையாலும் காலம் கடந்து பெய்த மழையாலும் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க முன்வராத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து எனது அன்புச் சகோதரர் - தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கிறார் என்று அறிந்தவுடன் கவலையோடு இங்கு வந்திருக்கிறேன்.

ஆந்திர மாநில மக்களை, காங்கிரஸ் கட்சியை ஆட்டிப் படைக்கும் டெல்லி தலைமை அவமானப்படுத்தியதை எதிர்த்து உதயமான தெலுங்கு தேசக் கட்சியை எந்த இடத்தில் புகழ்மிக்க தலைவர் என்.டி.ராமாராவ் தொடங்கினாரோ அதே சட்டமன்ற உறுப்பினர் விடுதி வளாகத்தில் சந்திரபாபு நாயுடு அவர்கள் காந்தியார் காட்டிய வழியில் விவசாயிகளுக்காக உண்ணாவிரத அறப்போர் நடத்துகிறார்.

இன்று மூன்றாவது நாளாகிவிட்டது. வீசிய புயல் மழையால் 20 இலட்சம் ஏக்கர் நெல் பயிரும், 10 இலட்சம் ஏக்கர் பருத்தி செடிகளும், 10 இலட்சம் ஏக்கர் மற்ற தானிய பயிர்களும் காய்கறித் தோட்டங்களும் அழிந்துவிட்டன. ஏறத்தாழ 30 இலட்சம் டன் நெல் அரசு அறிவித்த விலையில் கொள்முதல் செய்யாததால் கட்டுபடியாகத சொற்ப விலைக்கு விற்கும் நிர்கதிக்கு ஆளாகிவிட்டனர். பருத்திக்கும் விலை கிடைக்கவில்லை. கரும்புக்கும் விலை கிடைக்கவில்லை.

விவசாயிகள் பயன்படுத்தும் இடுபொருட்களான உரம், பூச்சி மருந்து விலையும் தாறுமாறாக உயர்ந்து வேலைக்கும் ஆள் கிடைக்காமல் விவசாயிகள் நொறுங்கிப் போய்விட்டனர். நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி மாடாக உழைத்து உணவு தானியங்களை உற்பத்தி செய்து அனைத்து மக்களின் பசியைப் போக்கி, வயிற்றுக்குச் சோறு போடும் விவசாயி கடன் தொல்லையாலும், தாங்க முடியாத பொருளாதாரச் சுமையாலும், வாழ்க்கையை நகர்த்த முடியாமல் எந்த நிலத்தில் பயிரிடுகிறானோ அந்த நிலத்திற்கே சென்று பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்ளும் கொடும் துயரத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. ஆந்திர மாநிலத்தில் மட்டும் அண்மையில் 62 விவசாயிகள் இப்படி தற்கொலை செய்துகொண்டு மடிந்தனர். இந்த வாரத்தில் மட்டும 10 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

விவசாயிகள் இடுபொருட்களுக்கு மானியம் தருவதற்கு எம்.எஸ்.சாமிநாதன் தந்த அறிக்கை மத்திய சர்க்கார் குப்பையில் போட்டுவிட்டது போலும்.

மத்திய மாநில அரசுகளை எச்சரிக்கிறேன். விவசாயிகள் பொங்கி எழுந்தால் அதுவே புரட்சியாக வெடிக்கும்.

உலகத்தில் பெரும் உணவு பஞ்சம் வரப்போகிறது என்று ஐ.நா-வின் ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவிலும் வரும். விவசாயிகளின் அருமை அப்போதுதுhன் அனைவருக்கும் புரியும். மத்தியில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஸ்பெட்க்ரம் ஊழலில் மட்டும் ஒரு இலட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி கொள்ளையடித்து உள்ளனர். தி.மு.க மத்திய அமைச்சர் ராசா இந்த ஊழலை செய்திருந்தாலும, 2008-லேயே இந்த பகாசூரக் கொள்ளை நடத்திய அதே ஆண்டிமுத்து இராசாவுக்கு மீண்டும் 2009 இல் அதே தொலைதொடர்புத் துறையை பிரதமர் வழங்குவதற்கு சோனியா காந்தி வழி நடத்தும் காங்கிரஸ் ஏற்பாடு செய்ய என்ன காரணம்? இந்த கொள்ளைப் பணத்தில் பெரும் பங்கு காங்கிரசின் காஜானாவுக்கும் சேர்ந்திருக்க வேண்டும்.

ஸ்பெட்ரம் ஊழல் கொள்ளையில் 10 சதவிகிதம் பணத்தை அரசு செலவழித்திருந்தாலே விவசாயிகளின் துயரத்தை துடைத்திருக்கலாம்.

தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கடுகளவும் கரை படியாத நேர்மையான தலைவர். அவரது நேர்மை, நாணயத்தை விரல் நீட்டிக் குற்றம் சாட்ட எவராலும் முடியாது.

மத்தியில் காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு ஆறு ஆண்டுகள் நிலையாக செயல்பட காரணமானவர் சந்திரபாபு நாயுடு ஆவார்.

வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் தெலுங்கு தேசக் கட்சி பங்கு பெறாமலே ஆந்திர மக்கள் நலனுக்கும் இந்திய ஜனநாயகத்திற்கும் சேவை செய்வதையே குறிக்கோளாகக் கொண்டார். 1998 ஆம் ஆண்டில் என்னிடம் வாஜ்பாய் உங்களை மந்திரி சபையில் சேர்த்துக் கொள்ள விரும்புகிறாரே! நீங்கள் சேரலாம் என்றார். நான் சந்திரபாபு நாயுடு அவர்களிடம் தெலுங்கு தேசக் கட்சி சேரவில்லை அல்லவா? மறுமலர்ச்சி தி.மு.க.வும் சேரவில்லை என்றேன்.

1999 ஆம் ஆண்டு எங்கள் கட்சியின் சில நிர்பந்தங்களால் அமைச்சர் அவையில் சேர்ந்தோம். ஆனால், நான் அமைச்சர் பொறுப்பை ஏற்கவில்லை.

வாஜ்பாய் அரசை ஆதரித்தாலும், சந்திரபாபு நாயுடு அவர்கள் மதச்சார்பு இன்மை உள்ளிட்ட தன் கட்சியின் கொள்கையை எந்த கட்டத்திலும சமரசம் செய்து கொண்டதில்லை. மத்திய அரசுக்கு பிரச்சனைகள் வந்தபோதெல்லாம் அந்த அரசு நிலைக்குமா? அல்லது கவிழுமா? என்பதை அறிந்து கொள்ள இந்தியாவின் கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும் அனைவரது விழிகளும் ஹைதராபாத்தை நோக்கியே திரும்பின. ஒரு தலைவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்றே அரசியல் உலகம் அறிய துடித்தது. அந்த தலைவர்தான் இதோ இங்கே உண்ணாவிரதம் இருக்கும் சந்திரபாபு நாயுடு ஆவார்.

கணிப்பொறித்துறையில் உலக வரைபடத்தில் ஹைதராபாத் நகரத்தை இடம் பெறச் செய்தவர் என்ற பெருமை சந்திரபாபு நாயுடு அவர்களுக்கே உண்டு என்பதை அன்றைய அமெரிக்க குடியரசுத் தலைவர் பில் கிளிண்டன் கலிபோர்னியா நகரத்திலே அறிவித்தார்.

அதே வேளையில், ஜென்ம பூமி என்ற செயல்முறைத் திட்டத்தை ஆந்திர மாநிலத்தில் அறிமுகப்படுத்தி அரசாங்க நிர்வகத்தைக் கடைகோடி கிராமத்திற்கும் நேரடியாகக் கொண்டு சென்று அதுவரை கவனிப்பாரற்று கிடந்த ஏழை எளியவர்களின் துயரத்தையும் துடைத்தார். அனைத்துத் துறை அதிகாரிகளையும் தன்னோடு அந்த கிராமத்திற்கு அழைத்துச் செல்வார். சாதி மத கட்சி வேறுபாடு இன்றி கிராமத்து மக்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டு அந்த இடத்திலேயே அவற்றுக்குப் பரிகாரம் காண உத்தரவிடுவார்.

ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் 8 மணிக்குள்ளாக மாநிலம் எங்கும் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நீர்பாசனத்துறை, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்களுடன் தொலைபேசியில் செய்திகள் பரிமாறி ஆலோசனைகள் வழங்கும் புதுமையான திட்டத்தை செயல்படுத்தினார்.

அணைகளின் நீர் மட்டம், பாசன வசதி, நெடுஞ்சாலை நிலைமைகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் அனைத்தையும் கேட்டு அறிந்து மேல் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடும் செய்வார். முதல் அமைச்சர் தொலைபேசியில் எந்த நேரமும் பேசுவார் என்பதால்விடியற்காலை 5 மணிக்கு மேல் எந்த அமைச்சரும் தூங்க முடியாது. பிற்பகலில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களோடும் தொலைக்காட்சியில் கருத்து பரிமாற்றம் (வீடியோ கான்பரன்ஸ்) நடத்துவார்; சம்மந்தப்பட்ட அமைச்சர்களும் உடன் இருப்பார்கள். நான் மக்களின் முதல் சேவகன் என்ற அடையாள இலட்சினையைத்தான் சட்டையில் பொருத்தியிருப்பார்.

இந்தியாவில் இன்றைய அரசியல் நிலைமை என்னவெனில் ஊழலுக்கு எதிரான தர்ம யுத்தத்தை நடத்த வேண்டிய நிலையாகும்.

மத்தியிலுள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு ஓராண்டுக்கு மேல் நீடிக்காது. ஆந்திர மாநில காங்கிரஸ் அரசும் விரைவில் கவிழ்ந்துவிடும்.

இந்தியாவில் உண்மையான ஜனநாயகம் தழைக்க வேண்டுமானால், மத்தியில் கூட்டாட்சி முறையே மலர வேண்டும். மாநில கட்சிகளின் கூட்டமைப்பே மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும்.

அத்தகைய நிலைமை விரைவில் உருவாகும். அதில் முக்கிய பங்காற்றும் தகுதியும், பொறுப்பும் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு உண்டு.

விவசாயிகளுக்காகத் தன்னையே வருத்திக் கொண்டு சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் இருக்கிறார். ஆனால் இதுகுறித்து, மாநில அரசு எந்த வாக்குறுதியும் தர முன்வரவில்லை. அவரது கோரிக்கைகள் குறித்து அறிக்கையும் தரவில்லை. அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு விடுமோ என நான் அஞ்சுகிறேன்.

அவரது உடல்நலம் தனிப்பட்ட சொத்து அல்ல. ஆந்திர மாநிலத்திலுள்ள மக்கள் சொத்தாகும். இந்திய ஜனநாயகத்தைக் காக்க நாட்டுக்குச் சேவை செய்ய அவர் பல்லாண்டுகள் வாழ வேண்டும். எனவே, அவர் இந்த உண்ணாவிரத அறப்போரைச் சீக்கிரத்திலே முடித்துக் கொண்டு காங்கிரஸ் அரசை எதிர்த்துப் பல முனைகளில் போராட முடியும். எங்கள் கட்சிகளின் மாநாடுகள் அனைத்துக்கும் நான் அழைத்த போதெல்லாம் பங்கேற்றுச் சிறப்பித்தவர் ஆவார்.

காங்கிரஸ் எதேச்சதிகாரத்தை எதிர்க்கவும் கூட்டாட்சிக் கொள்கையை வெற்றி பெறச் செய்யவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் துணை நிற்கும். தோளோடு தோள் சேர்ந்து போராட என்றும் சித்தமாக இருப்போம்.

உண்ணாவிரதத் திடலுக்குப் பல்லாயிரக்கணக்கில் போலீஸ் தடைகளையும் மீறி மக்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். இந்த அறப்போரின் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துவதற்கு வாய்ப்பளித்தமைக்கு நான் நன்றி சொல்லி முடிக்கிறேன்.

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வைகோ அவர்கள் காலையில் உண்ணாவிரத மேடைக்குச் சென்று மாலை வரை உண்ணாவிரத மேடையில் இருந்துவிட்டு திரும்பினார்.

அதன்பிறகு நள்ளிரவிலிருந்து ஆந்திர மாநிலப் போலீஸார் சந்திரபாபு நாயுடு அவர்களைக் கைது செய்ய முற்பட்டனர். கட்சித் தொண்டர்களின் எதிர்ப்பால் கைது செய்ய முடியவில்லை. ஆனால், அதிகாலை 4.30 மணிக்கு சந்திரபாபு நாயுடு அவர்களைக் கைது செய்து நிஜாம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தெலுங்கு தேசக் கட்சியின் கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் சந்திரபாபு நாயுடு அவர்களைக் கைது செய்ததற்குப் பலத்த கண்டனம் தெரிவிப்பதாகவும், இது காங்கிரஸ் அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையாகும் என்றும் வைகோ தெரிவித்தார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

‘தாயகம்’                                             தலைமைக் கழகம்
சென்னை-8                                          மறுமலர்ச்சி தி.மு.க.
20.12.2010

Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)