முற்றுகைப் பேராட்டம் அனைவரும் பங்கேற்பீர்! வைகோ அறிக்கை
விவகாரங்கள்: பொருளாதாரம், சுற்றுச்சூழல், விவசாயம், மனித உரிமை, தொழிலாளர், சட்ட ஒழுங்கு, அரசியல், வறுமை, புறநகர்
மாவட்டம்: தமிழ்நாடு, பிற மாநிலங்கள்
செய்தித்துறை: தொகுப்புகள், வைகோவின் பதில்கள், பத்திரிகை அறிக்கைகள், அறிவிப்புகள்
டிசம்பர் 21
முற்றுகைப் பேராட்டம்
அனைவரும் பங்கேற்பீர்!
வைகோ அறிக்கை
தென்தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே அடியோடு பாழாக்கும் நோக்கத்தில் கேரள அரசும் அங்குள்ள அரசியல் கட்சிகளும் நமக்கு உரிமையுள்ள பென்னி குக் கட்டிய அணையை உடைத்தே விடுவது என்று முடிவு செய்துவிட்டார்கள்.
அணையை உடைக்க ஆறுகோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துவிட்டதாக கேரள அரசும் அறிவித்துவிட்டது. கடப்பாறைகளோடும், சம்மட்டிகளோடும் அணையை உடைக்க வன்முறையாளர்கள் தொடர்ந்து ஊர்வலம் நடத்துகின்ற நிலையில் கேரள காவல்துறையால் அiணையைப் பாதுகாக்க இயலாது. எனவே, அணையைக் காப்பதற்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பட்டாளத்தை அல்லது தொழில் பாதுகாப்புப்
பட்டாளத்தை மத்திய அரசு அங்கே குவிக்க வேண்டும் என நியாயமான கோரிக்கையை தமிழக அரசு முன் வைத்தது.
கேரள அரசின் ஒப்புதலின்றி அப்படிச் செய்ய இயலாது என்றும், உச்சநீதிமன்றம் இதுபற்றி முடிவெடுக்கலாம் என்றும், மத்திய அரசு உச்சநீதிமன்றத்திற்கு தெரிவித்தது. ஆனால், நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் மத்திய ரிசர்வ் படையை அணை பாதுகாப்புக்கு அனுப்பக் கேட்டுக்கொண்ட தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதனை கேரள அரசும் அங்குள்ளவர்களும் வரவேற்றதோடு, அணையை உடைக்கும் முடிவை தீவிரப்படுத்தியுள்ளார்கள். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள நியாயமான கொந்தளிப்பை போக்குவதற்கும், நம்மை ஏமாற்றுவதற்கும் தங்கள் போராட்டங்களை கைவிட்டுவிட்டதாக மோசடி நாடகத்தை கேரள கட்சிகள் நடத்துகின்றன.
புதிய அணை கட்டியே தீருவோம் என்றும், மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என்றும், கேரள அரசு கூறிவிட்டது. புதிய அணை கட்டுவது இன்றைக்கா, நாளைக்கா என்றுதான் முடிவு செய்யப்போகிறோம் என்று கேரள முதல்வர் உம்மண்சாண்டி நேற்று சொல்லிவிட்டார்.
புதிய அணை என்றால் தமிழ்நாட்டிற்கு சொட்டுத் தண்ணீரும் கிடைக்காது. எந்த பூகம்பத்திற்கும் ஈடுகொடுக்கும் பலம்வாய்ந்த பென்னி குக் அணையை பாதுகாப்பதுதான் நம் கண்முன்னால் நிற்கின்ற தலையாய கடமையாகும்.
அணையை உடைக்கும் திட்டத்தை கேரளம் கைவிடச்செய்வதற்கு அவர்கள் இழைக்க முற்படும் அநீதியை தடுப்பதற்கு பதிமூன்று சாலைகளிலும் கேரளம் செல்லும் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி, பொருளாதார முற்றுகை போடுவதுதான் மிகவும் அவசியமாகும்.
இந்தப் போராட்டம் அறவழியில் அமைதி வழியில் நடைபெறும். போராட்டம் ஏற்கனவே அறிவித்த வாறு டிசம்பர் 21 ஆம் தேதி புதன்கிழமை அன்று நடைபெறும். போராட்ட இடங்கள், பங்கேற்கும் அமைப்புகள் அதன் தலைவர்கள் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் தங்களை அடையாளப்படுத்தும் கட்சிக்கொடிகளையும், பேனர்களையும் கண்டிப்பாக தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
விவசாயிகளும், வணிக பெருமக்களும், தொழிலாளர்களும், குறிப்பாக இளைஞர்களும், அனைத்துத் தரப்பினரும் செந்தமிழ் நாட்டின் உரிமை காக்க இம்முற்றுகைப்போராட்டத்தில் பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.




