மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை உறுதி செய்க! வைகோ அறிக்கை

விவகாரங்கள்: மனித உரிமை, சட்ட ஒழுங்கு

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Mon, 11/12/2017

 

 

 

 


 

மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு
27
விழுக்காடு இடஒதுக்கீட்டை உறுதி செய்க!

வைகோ அறிக்கை

மூக நீதிக் காவலர் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு 1990 ஆகஸ்டு 7 ஆம் நாள், மண்டல் குழு பரிந்துரைகளை மத்திய அரசு செயல்படுத்தும் என்று வரலாற்றுப் பிரகடனத்தை வெளியிட்டார். 1993 செப்டம்பர் 8 இல் மண்டல் குழு பரிந்துரையின்படி மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அரசாணையும் பிறபிக்கப்பட்டது. கடந்த 24 ஆண்டுகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓ.பி.சி.) அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு குறித்து மத்திய அரசிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி பெறப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் தி இந்துஆங்கில நாளிதழில் டிசம்பர் 10 அன்று வெளியாகி உள்ளது. மத்திய அரசுப் பணிகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு 27 விழுக்காடு அளவை எட்டவில்லை என்ற தகவல் கவலை அளிக்கிறது.

மத்திய பணியாளர் நலத்துறை வழங்கியுள்ள தகவல்களின்படி 2017 ஜனவரி 1 வரையில் மத்திய அரசின் 24 அமைச்சகங்களின் குரூப் ஏ பிரிவு அதிகாரிகளில் ஓ.பி.சி. பிரிவினர் வெறும் 17 விழுக்காடு மட்டுமே உள்ளனர். அதே போன்று குரூப் -பி பிரிவில் 14 விழுக்காடு, குரூப் -சி பிரிவில் 11 விழுக்காடு, குரூப் -டி பிரிவில் 10 விழுக்காடு அளவுக்கு மட்டுமே ஓ.பி.சி. பிரிவினர் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர்.

மத்திய அரசின் இதர 57 அமைச்சகங்கள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள். அரசியல் சட்ட அமைப்புகள் போன்றவற்றில் குரூப் -ஏ பிரிவில் 14 விழுக்காடு, குரூப் -பி பிரிவில் 15 விழுக்காடு, குரூப் -சி பிரிவில் 17  விழுக்காடு, குரூப் -டி பிரிவில் 18 விழுக்காடு அளவுக்கு மட்டுமே இதர பிற்படுத்தப்பட்டோர் இடம் பெற்றிருக்கின்றனர். இந்திய அரசை இயக்கி வரும் முக்கியத்துவம் வாய்ந்த மத்திய அமைச்சரவை செயலகங்களில் மொத்தம் உள்ள 64 குரூப் -ஏ உயர் பதவிகளில் ஒருவர்கூட ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர் இல்லை என்ற தகவல் அதிர்ச்சி தருகிறது. சமூக நீதிக்கு எதிராக இழைக்கப்பட்டு வரும் அநீதியை மேற்கண்ட புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்டுள்ள இந்த விபரங்கள்கூட முழுமையானவை அல்ல, இந்தப் புள்ளிவிவரங்கள் மத்திய அரசின் மொத்த வேலை வாய்ப்புகளில் வெறும் 8.75 விழுக்காடு மட்டுமே 24 துறைகளிலிருந்து பெறப்பட்டுள்ளன. ஆனால் 91.25 விழுக்காடு மத்திய அரசுப் பணியாளர்கள் நிரம்பிய தொடர்வண்டித்துறை, நிதித்துறை, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த 11 அமைச்சகங்கள், பணியாளர்கள் பற்றிய விபரங்களை அளிக்க மறுத்துவிட்டன. இவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் மத்திய அரசின் மொத்த வேலை வாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு சராசரியாக ஒற்றை இலக்கத்தில்தான் இருக்கும்.

2014 மே மாதம் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றபோது மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிஜேந்திரசிங், மத்திய அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு பற்றி ஆய்வு செய்யப்படும், பின்னடைவு காலப் பணி இடங்கள் ஆகஸ்டு 2016க்குள் நிரப்பப்படும் என்று அறிவித்தார். ஆனால் இதுவரை இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கு பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

இதர பிற்படுதப்பட்டோர் இடஒதுக்கீடு உரிமையை உறுதி செய்யவும், சமூக நீதியை நிலைநாட்டவும் மத்திய அரசு உடனடியாக பின்னடைவு பணியிடங்களை நிரப்ப சிறப்பு ஆள் தேர்வு முகாம்களை நடத்த வேண்டும். 52 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதே போதுமானது அல்ல. இந்நிலையில், மண்டல் குழு பரிந்துரைகளின்படி மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டையாவது உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தாயகம்                                                                         வைகோ
சென்னை - 8                                                        பொதுச்செயலாளர்
11.12.2017                                                                 மறுமலர்ச்சி தி.மு.க.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)