கோயம்புத்தூர் மத்திய அரசு அச்சகம் தொடர்ந்து செயல்பட பிரதமருக்கு வைகோ கடிதம்

விவகாரங்கள்: பொருளாதாரம், மனித உரிமை, தொழிலாளர், தேசிய, அரசியல்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Sat, 09/12/2017

 

 

 

 


கோயம்புத்தூர் மத்திய அரசு அச்சகம் தொடர்ந்து செயல்பட

பிரதமருக்கு வைகோ கடிதம்

கோயம்புத்தூர் மத்திய அரசு அச்சகம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். கடித விவரம் வருமாறு:-

மதிப்பிற்குரிய பிரதமர் மோடி அவர்களே,

கோவை மத்திய அரசு அச்சகத்தை நான் பார்வையிட்டபோது என் கவனத்திற்கு வந்த காட்சிகளை, நிகழ்வுகளை தங்களின் மேலான பார்வைக்குக் கொண்டு வருகின்றேன்.

அச்சகங்கங்களின் மறுசீரமைப்பு / இணைப்பு என்ற மத்திய அரசின் முடிவின் காரணமாக கோவை மத்திய அரசு அச்சகத்தை மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மத்திய அரசு அச்சகத்துடன் இணைக்க முடிவு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக அறிந்தேன்.

அந்த முடிவுக்குப் பிறகு தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் வருத்தத்துடனும், கலக்கத்துடனும் இந்தப் பிரச்சினை தொடர்பாக உடனடியாக நீங்கள் மாண்புகுமிகு இந்தியப் பிரதமரிடம் தெரிவித்து, இணைப்பு நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வேண்டுகோளும் விடுத்தனர்.

மத்திய அமைச்சரவை முடிவுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கின்ற சூழலை அறிந்துகொள்வதற்காக 1.12.2017 அன்று கோயம்புத்தூர் அச்சகத்திற்கு நேரிடையாகச் சென்று கள ஆய்வு செய்தேன். அச்சக வளாகத்திற்கு வெளியே குழுமி இருந்த பாதிக்கப்பட்ட மக்களையும், தொழிலாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தேன்.

கோயம்புத்தூர் மத்திய அரசு அச்சகம் நிறுவப்பட்டு, அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளோடு நன்றாகச் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது. தொழிலாளர்களின் குடும்பத்தினர் நலன், அந்தப் பகுதி மக்கள் மற்றும் தேசிய நலன் கருதியும் தென்னிந்தியாவில் ஒரு பெரிய நிறுவனமாக செயல்பட்டு வரும் கோயம்புத்தூர் அரசு அச்சகத்தை அதே நிலையில் தொடர அனுமதிக்க வேண்டும்.

அச்சகம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு முன்னிலையிலேயே இருப்பதாக அறிகின்றேன்.  மேலும் நான்கு வருடங்கள் இயங்குவதற்குத் தேவையான பணி உத்தரவுகளை அச்சகம் பெற்றுள்ளது. தென்னிந்தியாவில் உள்ள அரசு அமைப்புகளுக்குத் தேவையான அச்சுப் பிரதிகளை இந்த அச்சகம் முழுமையாக நிறைவு செய்து வருகின்றது.

தொழிலாளர்களின் துயரம் மற்றும் மனப்பூர்வமான வேண்டுகோளும் அரசின் முடிவைவிட முக்கியமானதாக உள்ளதால், அவர்களின் துயர் நீக்க கருணையோடு தங்களுடைய முடிவை பரிசீலனை செய்ய வேண்டும்.

கோயம்புத்தூர் அச்சகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுடைய நடு வயதைக் கடந்த நிலையில், பிள்ளைகளும் பள்ளிப் பருவத்தைக் கடந்து உயர்கல்வி பெற்று வரும் நிலையிலும், பெண் பிள்ளைகள் திருமண வயதை எட்டிய நிலையிலும், வயதான பெற்றோர்களுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கி வருகின்ற நிலையிலும் அனைத்தையும் பராமரித்து வாழ்க்கையின் முக்கியப் பிராயத்தில் பொறுப்போடு பணியாற்றி வருகின்றார்கள். எனவே இந்தத் தருணத்தில் புதிய இடத்தில் வாழ்க்கையைத் தொடங்குவது கற்பனை செய்ய முடியாத நிலையாக உள்ளது. மேற்படி அச்சகத்தில் தொழிற்கல்வி பயிற்சி பெற்ற இளைஞர்கள் அதே அச்சகத்தில் வேலை வாய்ப்புப் பெறுவதற்காகக் காத்திருக்கின்றார்கள். இப்படிப்பட்ட வேலையில்லா இளைஞர்களின் ஏக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

நான் கோயம்புத்தூர் அச்சகத்தைப் பார்வையிடச் சென்றபோது, தசை வளர்ச்சி பாதிப்புக்கு உள்ளான ஒரு குழந்தையை கையிலேந்திய தொழிலாளியின் பரிதாபமான நிலை என் இதயத்தையே உருக்குலைத்துவிட்டது. வாழ்நாள் முழுவதும் பெற்றோரின் பராமரிப்பு அக்குழந்தைக்குத் தேவை. மறுசீரமைப்பு மற்றும் இணைப்பு நடந்தால் அக்குழந்தையைக் கைவிட்டுத்தான் அந்த ஊழியர் வேறு இடத்திற்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுவார்.

எனவே தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார் துயரம் நீக்க தமிழக மக்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்ய கோயம்புத்தூர் மத்திய அரசு அச்சகத்தை மூடுகின்ற முடிவை கைவிட்டு, மற்ற அச்சகங்கள் போலவே கோயம்புத்தூர் அச்சகத்தையும் மென்மேலும் முன்னேற்றமடையச் செய்ய வேண்டுகிறேன்.

இவ்வாறு வைகோ அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தாயகம்                                                 தலைமை நிலையம்
சென்னை - 8                                         மறுமலர்ச்சி தி.மு.க.,
09.12.2017

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)