தில்லி உண்ணாநிலை அறப்போரில் இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி.பரதன்
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள், சொற்பொழிவுகள்
விவகாரங்கள்: மனித உரிமை, தேசிய
ஈழப்படுகொலைகளை வேடிக்கை பார்க்கும் இந்திய அரசைக் குற்றம் சாட்டுகிறேன்!
தில்லி உண்ணாநிலை அறப்போரில் இந்தியக் கம்யூனிÞட் தலைவர் ஏ.பி.பரதன்
ஈழப்படுகொலைக்குத் துணை நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து, தலைநகர் தில்லியில் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் 13.02.2009 அன்று நடைபெற்ற உண்ணாநிலை அறப்போரில் பங்கேற்ற இந்தியக் கம்யூனிÞட் கட்சிப் பொதுச் செயலாளர்ஏ.பி.பரதன் ஆற்றிய உரையில் இருந்து...
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சகாக்களே, வணக்கம்.
நீங்களெல்லாம் ஒரு குறிக்கோளுடன் வந்திருக்கிறீர்கள். புது டெல்லி நகரத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக இங்கு வரவில்லை. புதுடெல்லி இந்தியாவின் தலைநகரம். இந்திய அரசாங்கத்தின் தலைமை இடமும் இங்கேதான் அமைந்துள்ளது.. நாடாளு மன்றக் கூட்டமும் தொடங்கி விட்டது. நாடாளுமன்றத்திலே உங்கள் குரல் கேட்பதற்கு சரியான தருணம். இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சிகள் தினந்தோறும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டில் நடைபெறுகின்ற சின்ன நிகழ்வுகளையும் சிறிய செய்திகளையும் கூட உடனுக்குடன் ஒளிபரப்புகின்றன. இன்று அந்தத் தொலைக்காட்சிகள் இந்த நிகழ்வைப் படம் பிடிப்பதற்கும் இங்கே நமது சகாக்கள் - தமிழர்கள் வெளிப்படுத் துகின்ற உணர்வை பதிவு செய்வதற்கும் வரவேண்டும் என்று விரும்புகிறேன்.
இங்கே குழுமி இருக்கின்ற கூட்டத்தின் நோக்கம் என்ன? ஆளுகின்ற அரசாங்கத்திற்கு தங்களுடைய உள் உணர்வை தெரியப்படுத்துவதற்காக நீங்கள் இங்கே உண்ணா நிலையை மேற்கொண்டு இருக்கின்றீர்கள்.
நண்பர்களே, உங்களுக்கு ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன். தமிழர்கள் தனித்து விடப்படவில்லை. உங்களு டைய மனக்குமுறலை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். மூன்று வருடத்திற்கு முன்பாக நாங்கள் ஒரு மாநாட்டை நடத்திய போது இலங்கையில் வாழுகின்ற தமிழர்களின் பிரச்சனையை மையப்படுத்தி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். கடந்த மார்ச் மாதம் ஐதராபாத்தில் எங்களுடைய கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றபோது இலங்கைப் பிரச்சனை தொடர்பாக மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
நமது கோரிக்கை என்ன? நமது முதல் கோரிக்கை இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சனை ஒரு நியாயமான பிரச்சனை. தமிழர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்தான். இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுடைய மொழி, கலாச்சாரம் மற்றும் அவர்களுடைய அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆதலால், தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்ற நிலை விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட வேண்டும். தமிழர்களை அழித்து விடக்கூடாது. படுகொலை செய்யக் கூடாது. அவர்களுக்குள்ள உரிமைகளை அவர்கள் எழுப்புகின்ற உரிமைகளை மறுத்துவிடக்கூடாது.
இலங்கைப் பிரச்சனையிலே நமது அணுகுமுறையில் மாறுபாடுகள் உண்டு. விடுதலைப் புலிகள் பிரச்சனையைப் பொறுத்தவரை கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் அது ஒரு பெரிய பிரச்சனை அல்ல. இப்பொழுது உள்ள பிரச்சனை பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களைப் பற்றியதுதான்.
இந்திய அரசாங்கமே, இந்திய மக்களே, இந்திய மக்கள் தொகையில் தமிழர்களும் பெரிய எண்ணிக்கையிலே இருக்கின்றார்கள். அவர்களுடைய பிரச்சனையில் நீங்கள் எப்படி பாரா முகமாக இருக்க முடியும். இலங்கையிலே தமிழர்களின் அவலநிலையைக் கண்டும் காணாமலும் எப்படி இருக்க முடியும். நாம் ஒரு பாரம்பரியத்திலே வளர்ந்து வந்திருக்கிறோம். மகாத்மா காந்தி வாழ்ந்த நாள் முதல் அதற்கு முன்னரும், அதற்குப் பின்னரும் மத்தியிலே செயல்பட்ட காங்கிரÞ அரசாங்கத்தோடு நமக்கு மனமாச்சர்யங்கள் இருந்தாலும், அன்றிலிருந்து இன்றுவரை நாம் அனைவரும் நமது பாரம்பரியத்தைக் கட்டிக் காத்து வருகின்றோம். இலங்கையிலே மக்கள் தங்கள் உரிமை களுக்காக போராடி வருகிறார்கள். என்றுமே உரிமைகளுக்காகவும் நீதிக் காகவும், மொழிக்காகவும். இன அடையா ளத்திற்காகவும், கலாச்சாரத்திற்காகவும், அரசியல் உரிமைகளுக் காகவும் போராடுகின்ற மக்களுக்கு என்றுமே நாம் உறுதுணையாக இருந்திருக்கின்றோம். அவர்கள் தோளோடு தோளாக நின்றிருக்கின்றோம்.
சீன மக்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்தோம். வியட்நாம் மக்களின் போராட்டத்திற்கு உறு துணையாக இருந்தோம். ஈராக் மக்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்தோம். பாலÞதீன மக்களுக்கு நமது ஆதரவை தெரிவிக்கின்றபோது இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களின் துயரத்திற்கு அதை விட நூறு மடங்கு துணை நிற்போம் என்று தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவில் உள்ள தமிழ் மக்கள் பேசுகின்ற மொழியைத்தான் அவர்களும் பேசுகிறார்கள். அங்கே ஒரு யுத்தம் நடைபெறுகிறது. தொடக்கத் திலிருந்தே இலங்கைத் தமிழர் பிரச்சனை பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்க்கப்பட வேண்டும் என்பதை உறுதியாக தெரிவித்து வருகிறோம். இது யுத்தத்தினால் முடிவு செய்யப்பட வேண்டிய பிரச்சனை இல்லை. இது மக்களை படுகொலை செய்வதன் மூலமாக தீருகின்ற பிரச்சனை அல்ல. துப்பாக்கி முனையைக் காட்டி பேசாதீர்கள். அடக்கு முறை மூலமாக இந்தப் பிரச்சனையைத் தீர்த்து விடலாம் என்று எண்ணாதீர்கள்.
தமிழர்களோடு பேசுங்கள். அவர்களது தலைவர்களோடு பேசுங்கள் அவர்கள் கோரிக்கையை காது கொடுத்துக் கேளுங்கள். அந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பெரும்பான்மையாகத் தமிழர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு அதிகார பகிர்வு என்ற கேள்வி இலங்கைத் தமிழர்கள் முன்பாகவும், இந்திய மக்களின் முன்பாகவும் பல ஆண்டு களாக இருக்கின்றது. இலங்கைத் தமிழர் பிரச்சனை புதிய பிரச்சனை அல்ல. பல நாடுகள் இந்தப் பிரச்சனையில் சமரச நடவடிக்கையில் ஈடுபட்டன.
ஆனால், இலங்கை அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. இது ஒரு துர்பாக்கியமான உண்மை.. ஆனால், இன்று இலங்கையிலே தலைமை பொறுப்பிலே இருக்கின்ற மகிந்தா ராஜபக்சே எதைப்பற்றியும் கண்டு கொள்ளாமல் யுத்தத்தின் மூலமாகத் தான் இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பேன் என்று முடிவாக இருக்கிறார். இன்று நடப்பது என்ன? அங்கு நடைபெறுகின்ற போரினால் எழுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக நமது நாட்டிற்கு வந்திருக்கின்றார்கள். வேறு நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுள்ளார்கள். தமிழர்கள் தென் ஆப்பிரிக்காவிற்கும் அகதிகளாக சென்றுள்ளார்கள் என்பது எனக்குத் தெரியும்.
இடம்பெயர்ந்த தமிழர்களின் வீடுகளெல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. இரத்த வெள்ளத்தில் அங்கே யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தப் போரின் விளைவாக இன்று ஒரு அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களெல்லாம், இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அவர்கள் வாழ்ந்த பூமியில், இருந்து பலவந்தமாக அகற்றப்பட்டு ஒரு சிறிய நிலப்பரப்பில் அடைக்கப்பட்ட நிலை யிலேயே தள்ளப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது நடைபெறுகின்ற யுத்தத்தில் இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடுவதாக அறிவித்தாலும், அந்தக் குறுகிய நிலப்பகுதியில் வாழ்கின்ற அப்பாவி மக்களின் மீது விமானத்திலிருந்து குண்டு மழை பொழிந்தும், தொலைதூரம் வெடித்துத் தாக்குகின்ற ஏவுகணையைச் செலுத்தியும், பீரங்கி மூலமாக தாக்குதல் நடத்தியும் எத்தனை பேர் இறந்திருக் கின்றார்கள்.
நீங்கள் கொல்வது விடுதலைப் புலிகளையா? அல்லது அப்பாவித் தமிழர்களையா? இது சாதாரண மனித அழிவல்ல. அதைவிடப் பெரிது. இது ஒரு இனப் படுகொலை. சில கருத்துகளில் வைகோவுடன் நான் முரண்பட்டு இருக்கலாம். பல பிரச்சனைகளில் வைகோவுடன் நான் மாறுபடலாம். நாங்கள் தனித்தனி இயக்கத்தைச் சார்ந்தவர்கள். இங்கே நாங்கள், எங்கள் கட்சியின் நிகழ்ச்சிகளைப் பற்றியோ கொள்கைகளைப் பற்றியோ விவாதிக்கவில்லை. இங்கே நாங்கள் விவாதிக்கின்ற பிரச்சனையைப் பொறுத்தவரை எங்களுக்குள் எந்த வேறுபாடும் கிடையாது. நாங்கள் விடுக்கின்ற கோரிக்கையே போரை நிறுத்த வேண்டும். உடனடியாக அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதுதான்.
நண்பர்களே! நான் இங்கே வந்திருப்பது இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் வைப்பதற்காக மட்டும் அல்ல. நான் இந்திய அரசாங்கத்தை இலங்கைத் தமிழர் பிரச்சனையில் வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டுகிறேன்.
அதுமட்டுமல்லாது இலங்கை அரசுக்கு இந்திய அரசு எல்லா உதவிகளையும் செய்து வருகிறது. நீங்கள் சாலை யோரத்தில் நின்று கொண்டு இருக்கும் போது, ஒரு குழந்தை வதை செய்யப்பட்டால் அதைக் கண்டு வேடிக்கை பார்ப்பீர்களா? நான் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்ல முடியுமா?
இலங்கை வேறொரு நாடாக இருக்கலாம். அதனால் சில வரையறைகளும் இருக்கலாம். ஆனால், இந்திய அரசிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். கனடா அரசாங்கம் போர் நிறுத்தம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. நீங்கள் ஏன் நிறைவேற்றவில்லை? பிரிட்டிக்ஷ் அரசாங்கம் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. நீங்கள் ஏன் நிறைவேற்றவில்லை? ஐ.நா. சபை போர் நிறுத்தத்தைப் பற்றி பேசுகிறது. நீங்கள் ஏன் பேசவில்லை?
நீங்கள் ஒரு அண்டை நாடு, உங்கள் நாட்டில் எண்ணற்ற தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் இலங்கையில் உள்ள தமிழர்களோடு தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள். இந்திய அரசாங்கம் இனியும் இலங்கையின் விவகாரத்தில் நாங்கள் எப்படி தலையிட முடியும் என்று நொண்டி சாக்கு சொல்லக்கூடாது. இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் வேண்டுவதெல்லாம் அரசியல் அதிகார பலத்தைப் பயன்படுத்துங்கள், தார்மீக பலத்தைப் பயன்படுத்துங்கள் தமிழர்களின் நலனில் அக்கறையுள்ள ஒரு அண்டை நாடாக உங்கள் பலத்தை பிரயோகியுங்கள். நாம் அனைவரும் கேட்பது போர் நிறுத்தம்தான். இராணுவ தீர்வுதான் முடிவு என்பதை நாங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதை இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்துங்கள்.
நீங்கள் இலங்கைக்கு உதவி செய்வது உண்மைதானா சொல்லுங்கள். அப்படி என்றால் எந்த அளவிற்கு எந்த வழியில் உதவுகின்றீர்கள் என்பதைச் சொல்லுங்கள். நான் இந்தப் பிரச்சனையில் ஆழமாகச் சென்று எதையும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், நீங்கள் உதவி செய்கின்றீர்கள் என்பதுதான் உண்மை. அனைத்து உதவிகளையும் உடனே நிறுத்துங்கள்.
ஐ.நா. சபையில் இந்தப் பிரச்சனையை எழுப்புங்கள். போர் நிறுத்தத்தை அறிவிக்கச் சொல்லுங்கள். உடனடியாக பேச்சுவார்த்தை நடக்கட்டும். அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும். தமிழர்கள் உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற பகுதிகளில் சுயாட்சி வழங்குவது பரிசீலிக்கப்பட வேண்டும். இந்த பிரச்சனைகளை எல்லாம் பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்க்க முயலுங்கள். துப்பாக்கிகளின் வாயிலாக தீர்க்க முயலாதீர்கள்.
இது எங்களுடைய கோரிக்கை. என்னுடைய இயக்கம், இந்திய கம்யூனிÞடு கட்சி, மேற்சொன்ன குறிக்கோளை நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாங்கள் தமிழ் நாட்டிலே இருக்கின்ற செய்தி ஊடகங்களையும், அரசியல் கட்சிகளையும் தமிழ் மக்களுக்காக உரத்த குரல் கொடுங்கள் என்று வேண்டுகிறேன். இது ஒன்றும் பிரிவினை கோரிக்கை அல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் உரிமை பிரச்சனை, வாழ்க்கைப் பிரச்சனை விடுதலைப் புலிகளின் விசயத்தில் மாறுபட்டாலும் தமிழர்களுக்காக தமிழ் மக்களுக்காக உங்களோடு நாங்கள் இருப்போம். இதை நான் வைகோவிடமே தெரிவித்து இருக்கின்றேன்.
நண்பர்களே, இது வெறும் உணர்ச்சி வசப்படக்கூடிய விஷயம் மட்டும் அல்ல. இது ஒரு மனிதாபிமான பிரச்சனை. இது அரசியல் சார்ந்த பிரச்சனை. இது அண்டை நாட்டோடு நட்புறவை வளர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சனை. இது ஒரு அமைதிக்கான, மக்களின் உரிமைக்கான பிரச்சனை. இந்தப் பிரச்சனையை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.
ஏ.பி.பரதன் அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.

