எல்.கே.அத்வானி உரை தில்லி உண்ணாநிலை அறப்போரில்
செய்தித்துறை: சொற்பொழிவுகள்
விவகாரங்கள்: மனித உரிமை, தேசிய
எல்.கே.அத்வானி உரை
தில்லி உண்ணாநிலை அறப்போரில்.
நண்பர்களே,
உங்கள் தாய்மொழியாகிய, மிகவும் இனிமையான தமிழ் மொழியில் பேச வேண்டும் என்று நான் விழைகிறேன். (கைதட்டல்). ஆனால், அது என்னால் இயலவில்லை. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள், மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக இருந்தபோது, நான் அவரைப் பலமுறை சந்தித்து இருக்கிறேன். அப்போது நான் அவரிடம் சொன்னேன்: ‘என்னால் தமிழ் மொழியைப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், நீங்கள் நடித்த திரைப்படம் ஒன்றை நான் பார்த்து இருக்கிறேன். வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற படத்தை நான் பார்த்து இருக்கிறேன்.(கைதட்டல்).
எனது ஸ்வர்ண ஜெயந்தி தேர்ப்பயணத்தை நான் கன்னியாகுமரியில் தொடங்கி, நாடு முழுவதும் சுற்றி வந்தேன். வெள்ளையர்களை எதிர்த்துப் போராடி வீரச்சமர் புரிந்த, இந்திய தேசியத் தியாகிகளின் நினைவு இடங்களுக்குச் சென்று வணங்கினேன்.அப்போது, நான் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு இடத்துக்கும் சென்று மலர்தூவி வணங்கினேன்.
தில்லியில் நான் எத்தனையோ கூட்டங்களில் பேசி இருக்கிறேன். இந்தியா முழுவதும் பேசி இருக்கிறேன்.ஆனால், வைகோ அவர்களையும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களாகிய உங்களையும் நான் பாராட்டக் கடமைப்பட்டு இருக்கிறேன். ஏனெனில், நீங்கள் அனைவரும், நெடுந்தொலைவில், தமிழ்நாட்டில் இருந்து தில்லிக்கு வந்து இருக்கிறீர்கள். இங்கே தில்லியிலும் தமிழர்கள் வசிக்கிறார்கள். ஆனால், இங்கே வருகை தந்து இருக்கின்ற உங்கள் அனைவரின் முகங்களையும் பார்க்கின்றபோது, உங்களில் பலர், தில்லிக்கு முதன்முறையாக வந்து இருக்கிறீர்கள் என்பதை என்னால் அறிய முடிகிறது. (கைதட்டல்)
இது அவ்வளவு எளிதாக நடந்து விடக்கூடியது அல்ல. எப்போது நடக்கும் என்றால், ஒரு பிரச்சினையில் உள்ளார்ந்த ஈடுபாடு இருக்கும்போதுதான், இப்படி மக்கள் ஒன்றுதிரள முடியும். ஈழத்தமிழர்களுடைய பிரச்சினையில், தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் மட்டும் கவலைப்பட வில்லை, இந்திய நாட்டு மக்கள் அனைவருமே கவலையோடு கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு நாடு எப்போது வலுப்பெறும் என்றால்,ஒரு நாடு எப்போது உயர்ந்த நிலையை அடையும் என்றால், அந்த நாட்டு மக்களுக்கு இடையே எல்லைகளைக் கடந்த ஒருமைப்பாடு நிலவும் போது, அந்த நாடு மேன்மை பெறும். இன்று உலகில் இரண்டு நாடுகளுக்கு இடையேதான், உலகில் முதல் இடத்தைப் பெறுவது யார்? என்ற போட்டி நிலவுகிறது. அது இந்தியாவா? சைனாவா? என்பதுதான் கேள்வி.
சீனா, தன்னுடைய மக்களிடம் இருந்தே வலிமையைப் பெறுகிறது. அதுபோலவே, சீனத் தாயகத்தைச் சேர்ந்த மக்கள், உலகின் பல நாடுகளில் பரவி, பல்கிப் பெருகி வாழ்ந்து வருகிறார்கள். அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது,உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கின்ற இந்தியர்களுக்கு இடையேயான தொடர்புகளை மேம்படுத்த, அவர்களை ஒருங்கிணைக்கின்ற முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டோம்.
இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுடைய பிரச்சினையை, இந்தியாவில் வாழ்கின்ற அனைத்து மக்களுமே உன்னிப்போடு கவனிக்கின்றார்கள்.
இலங்கையில் நீண்டகாலமாகப் பிரச்சினை நிலவி வருகிறது என்பதை நாம் அறிவோம். அதற்காக, தமிழர்கள் மீது இப்படிக் குண்டுகளை வீசிக்கொல்வதை நாம் ஏற்க முடியாது. அவர்களுக்காக நீங்கள் மட்டும் கவலைப்படவில்லை, ஒவ்வொரு இந்தியனும் கவலைப்படுகிறான்.
ஆனால், இங்கே தில்லியில் இருக்கின்ற ஆட்சியாளர்களோ, அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை என்பதைச் சொல்லுவதற்காக நான் வருந்துகிறேன்.
சில நாள்களுக்கு முன்பு வைகோ அவர்கள் என்னைச் சந்தித்தார். இலங்கையில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை எடுத்துக் கூறினார். அவர்களுக்கு ஆதரவாக தலைநகர் தில்லியில் இந்த உண்ணாநிலை அறப்போரை நடத்துவதாகவும், தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான சகோதரர்கள் வருவதாகவும் சொன்னார். ‘நானும் வருகிறேன்’ என்று சொன்னேன் (பலத்த கைதட்டல்).
பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக நான் இங்கே வந்து இருக்கிறேன். உங்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு என்பதைத் தெரிவிப்பதற்காக வந்து இருக்கிறேன்.
என் வாழ்க்கையில், மருத்துவமனைகளின் மீது குண்டு வீசியதாக நான் கேள்விப்பட்டதே இல்லை. அங்கே சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இப்படி எங்கேயும் நடந்தது இல்லை. எனவே, உங்கள் போராட்டம் நியாயமானது.
சில நாள்களுக்கு முன்பு எங்கள் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நாக்பூரில் கூடியது. தமிழ்நாட்டில் இருந்து வந்து இருந்த எங்கள் கட்சித் தோழர்களுடன், ஈழப்பிரச்சினை குறித்து விவாதித்தோம். ‘இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்’ என்பதை வலியுறுத்தி, எங்கள் கட்சி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன. ஆனால், பின்னர் அவை பிரிக்கப்பட்டு விட்டன. இதுபற்றிய முழு விவரங்களையெல்லாம் நீங்கள் நன்றாக அறிவீர்கள்.
ஆனால், இன்றைக்குத் தமிழர்கள்,அவர்களுடைய வாழ்விடங்களில் இருந்து விரட்டப்படு கிறார்கள். அவர்கள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன. இலங்கை இனப்பிரச்சினையை, படைபலத்தைக் கொண்டு தீர்த்துவிட முடியாது. பேச்சுவார்த்தைகளின் மூலமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
அதற்காகப் போராடுகின்ற உங்களுக்கு, இந்திய நாட்டு மக்கள் அனைவரும், ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
நீண்ட நெடுங்காலமாக எனது நண்பராகத் திகழும் திரு வைகோ அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் முதல்முறை, மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, வைகோவும் உறுப்பினராக இருந்தார். எங்களுடைய அரசாங்கத்துக்கு அவர் ஆதரவு தெரிவித்த போது, எங்களுடைய உறவு மேலும் வலுப்பெற்றது. ஒரு நல்ல திறமைசாலியான வைகோ அவர்களை நான் எப்போதும் மதிக்கிறேன். அவரது அழைப்பை ஏற்று, இரண்டு முறை உங்கள் இயக்கம் நடத்திய பேரணிகளில் நான் பங்கு ஏற்று இருக்கிறேன்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்ற வகையில், இந்தியத் தலைநகர் தில்லிக்கு,பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து இருக்கின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

