1965 மாணவர் புரட்சி மீண்டும் அரங்கேறட்டும்! ஈழத்தமிழினம் காக்கும் அறப்போர் வெல்லட்டும்! வைகோ அறிக்கை

விவகாரங்கள்: இலங்கைத் தமிழர்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: சொற்பொழிவுகள்

இந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அன்னைத் தமிழ்மொழியின் உரிமை காக்கத் தமிழர்களைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் அறப்போர்க்களம் காண அறைகூவி அழைத்ததால், 1963 ஆம் ஆண்டில்  இருந்தே தீவிரம் அடைந்த மொழிப்போராட்டம், 1964 ஜனவரி 24 இல் சிங்கத் தமிழன் சின்னச்சாமி நெருப்புக்குத் தன் உயிரைத் தாரை வார்க்க, கிளர்ச்சித் தீ தமிழர்களின் மனங்களில் பரவ, 1965 ஜனவரி 25 இல் தமிழ்நாட்டின் மாணவர் சமுதாயம் சிங்கமெனச் சிலிர்த்து எழுந்து போராட்டத்தில் குதித்து, இலட்சக்கணக்கான மாணவர்கள் கல்லூரிகள், பள்ளிகள், வகுப்புகளைப் புறக்கணித்துப் பிரளயம்போல் பொங்கி எழுந்தனர்.

அன்றைய காங்கிரÞ அரசு அடக்குமுறையை ஏவிற்று. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவர் இராஜேந்திரன் போலீÞ துப்பாக்கிச் சூட்டில் மாண்டான். காட்டுத் தீயெனக் கிளர்ச்சி நாடெங்கும் பரவியது. தமிழக வரலாறு சந்தித்து இராத புரட்சியாக வெடித்தது. மத்திய அரசு அலுவலகங்கள் மாணவர்களின் பிடிக்குள் வந்தன. அஞ்சல் அலுவலகங்கள், ரயில் நிலையங்கள் முற்றுகைக்கு உள்ளாயின. அடக்கு முறைகண்டு அஞ்சவில்லை மாணவர் படை.
தமிழகப் போலீசார் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாததால், இந்திய இராணுவம் தமிழகத்துக்கு உள்ளே நுழைந்தது. இராணுவத் துப்பாக்கிகள் சீறின. நூற்றுக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏழு வீரத்தமிழர்கள் தீக்குளித்து மாண்டனர். தமிழகம் எரிமலையாகச் சீறி, இந்திய அரசுக்கு எச்சரிக்கை செய்தபின், பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் இராஜாஜியின் வேண்டுகோளை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.
1967 இல் காங்கிரÞ ஆட்சி தூக்கி எறியப்பட்டது. 42 ஆண்டுகள் ஆனபின்பும் தமிழகத்தில் காங்கிரÞ, ஆட்சி பீடத்தை நெருங்க முடியவில்லை.
1965 இல் மொழிப் புரட்சியில் ஈடுபட்ட மாணவர்கள் அரசியல் நோக்கத்துடனோ, கட்சி நோக்கத்துடனோ களம் காணவில்லை. தமிழ் காக்கும் உணர்வுடன் தங்கள் தாய்மொழிக்குக் கடமை செய்தனர்.
இந்திய விடுதலைப் போர் நடந்த காலத்திலும், வெள்ளையரின் ஆதிக்கத்தை அகற்ற, 1942 இல் ஆகÞட் புரட்சியில் பிற மாநிலங்களைப் போலவே அன்றைய சென்னை மாகாணத்திலும்  மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, ஏன்? தங்கள் படிப்பையே முற்றிலுமாகத் துறந்து, தங்களின் சொந்த எதிர்கால வாழ்வு நலனை எண்ணாமல் நாட்டின் விடுதலைக்காகத் தியாக வேள்வியில் குதித்தனர்.
1942-ஆம் ஆண்டிலும், 1965-ஆம் ஆண்டிலும் தமிழ்நாட்டில் மாணவர்கள் போராடியதைப் போலவே, ஈழத்தமிழர்களின் நிலை, இன்றைய மாணவ சமுதாயத்தினரைப் போராட வாருங்கள்... தமிழ் இனம் காக்க எழுக என அறைகூவி அழைக்கிறது. அதனால்தான், எவருடைய ஏவுதலும் தூண்டுதலும் இல்லாமல், தான்ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற உணர்வுடன், நம் தொப்புள்கொடி ஈழத்தமிழ் உறவுகளை மரணத்தின் பிடியில் இருந்து காக்க அறப்போரில் குதித்து உள்ளனர்.
அந்த மாணவர்களுக்கு அரசியல் நோக்கம் கிடையாது, சுயநலம் கிடையாது. தமிழ்க்குலங் காக்கும் உணர்வுடன் கிளர்ச்சியில் ஈடுபடும் மாணவர்களை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். தமிழ் நாட்டில் இலட்சோபஇலட்சம் மாணவர்கள் படிப்பு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் பயிலுகின்றனர். விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நிகழ்வுகளைத்தவிர கல்லூரி வளாகங்களில் கிளர்ச்சிகள் கிடையாது.
ஆனால், இலங்கைத் தீவில் தமிழ் இனத்துக்கே  பேரழிவு நேருகையில், சிங்கள இனவெறி அரசின் இராணுவம் கொலை வெறித்தாக்குதல் நடத்துகையில், அதற்கு இந்திய அரசாங்கமே முழுக்க முழுக்க உதவியும், ராணுவ ஆயுதங்களும் வழங்கி, அந்தப் போரை சிங்கள அரசின் தாக்குதலை பின்னால் இருந்து இயக்குகையில், அந்தத் துரோகத்துக்குத் தமிழக அரசு துணையாக இருந்து கொண்டே, இன்னொரு பக்கத்தில் தமிழக மக்களை ஏமாற்றுகின்ற வஞ்சகத்தை, நீலிக்கண்ணீர் நாடகத்தை நடத்துகையில், மரண முற்றுகைக்கு ஆளாகி உள்ள ஈழத் தமிழ் குலங்காக்க வழியே இல்லையா? என தன்மானத் தமிழர் மனம் அழுது புலம்புகையில், நம்பிக்கை தரும் வெளிச்சமாக மாணவர் கிளர்ச்சி எழுந்து உள்ளது.
ஆஷாடபூதி வேடம் போடும் தமிழக அரசு, மாணவர்களை மிரட்டத் தொடங்கி உள்ளது. திருச்சி சட்டக்கல்லூரி மாணவர் ச.சிவக்குமார் உள்ளிட்ட ஐவரை இடை நீக்கம் செய்துள்ள செயல், மாணவர்கள் போராட்டத்தை நசுக்குவதற்காக, ஒடுக்குவதற்காக எடுக்கப்பட்ட ஈனத்தனமான நடவடிக்கை ஆகும்.
மாணவக் கண்மணிகளே அஞ்சாதீர்கள்! ஈழத்தில் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் இல்லை, கல்லூரிகள் இல்லை, பதுங்குகுழிகளில் நாளும் பதுங்கி செத்து மடிகின்றனர். குண்டு வீச்சு இரவு பகலாக நிற்கவே இல்லை.
தமிழ்நாட்டில் இலட்சோப இலட்சம் மாணவர்களின் கிளர்ச்சி வலுப்பெற வேண்டும்; தமிழகத்தில் சோர்ந்து உள்ள தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்டுங்கள்.  ஈழத்தமிழ் மக்களுக்குச் செய்கின்ற துரோகத்துக்குத் தமிழக மக்கள் அரசியல்  ரீதியாகத் தண்டிப்பார்கள் என்ற அச்சம் மத்திய-மாநில அரசுகளுக்கு ஏற்படட்டும். அதன்மூலமாவது இந்திய அரசு செய்துவரும் துரோகத்தை நிறுத்தட்டும்!
இராணுவரீதியான உதவிகளையும் நிறுத்தட்டும்! இலங்கைக்கு உதவ அனுப்பிய இராணுவ நிபுணர்களைத் திரும்பப் பெறட்டும்!
இலங்கையில் போர்நிறுத்தம் செய்யுமாறு ஜெர்மனி அரசு சொல்லிவிட்டது. போர் நிறுத்தம் செய்திடச் சொல்லி ஜப்பான் அரசு சொல்கிறது. இன்னும் பல வெளிநாடுகள் போரை நிறுத்தச் சொல்லத் துடிக்கின்றன. ஆனால், அந்த நாடுகளுக்குக் குறுக்கே நிற்பது இந்திய அரசுதான்.
கடந்த நான்கு மாத காலமாக, போர் நிறுத்தப் பிரச்சினையில், தமிழக முதல் அமைச்சர் திட்டமிட்டு ஒரு கபடநாடகம் ஆடுகிறார். ஈழத்தமிழ் மக்களின் ஒரே காவல் அரணான விடுதலைப்புலிகளை முற்றாக அழிக்க, கொலைகாரன் ராஜபக்சேவோடு இந்திய அரசு ஒரு சதித்திட்டம் தீட்டியது. அந்தத் திட்டத்தைச் செய்து முடிப்பதற்கு அவகாசம் தரும்வகையில், கடந்த அக்டோபர் முதலே தவணை கேட்டுக்கொண்டே செல்கிறார். இந்திய அரசு, போர்நிறுத்தம் செய்யுங்கள்’ என ஒப்புக்குக்கூடச் சொல்ல முன்வரவில்லை. மத்திய அரசின் திட்டத்தைத் தெரிந்து கொண்டே இந்த நயவஞ்சக நாடகத்துக்குத் தமிழக முதல்வர் கருணாநிதி முழுக்க உடந்தையாக இருக்கிறார்.
இந்திய அரசின்மீதும், தன் மீதும் துரோகக் குற்றச்சாட்டு வந்துவிடாமலும், தமிழக மக்களின் வெறுப்புக்கும் பழிப்புக்கும் ஆளாகிவிடாமலும் இருப்பதற்காக, முதல்வர் கருணாநிதி ‘எம்.பி.க்கள் ராஜினாமா’ எனச்சொல்லி சிறிதுகாலத்தைக் கடத்திய பின்னர், டெல்லி போகிறேன் என்று கூறி அதில் இரண்டு வாரங்களைக் கடத்தி, அதன்பின்னர் பிரணாப்முகர்ஜி போகப்போகிறார் என்று அதில் இரண்டு வாரங்களைக் கடத்தி, தமிழகச் சட்டமன்றத்தின் ஒருமனதான தீர்மானத்தை மத்திய அரசு காலடியில் போட்டு மிதித்த அவமானத்தைத் தனக்குத் தரப்பட்ட பூச்செண்டாக ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்ற ‘அய்யகோ! இறுதி வேண்டுகோள்’ என்று பித்தலாட்டம் செய்கிறார்.
அக்டோபரில் ‘உயிரையே தருவோம்’ என்றார். இப்போது ‘ஆட்சியையே இழக்கத் தயார்’ என்கிறார். தமிழ் இனமே ஈழத்தில் செத்துமடியும் அபாயத்தை எதிர்நோக்கி இருக்கையில் உலகத் தமிழர்களை ஏமாற்ற, ‘தமிழ் ஈழம் மலர்ந்தால் மகிழ்ச்சி?’ என்று சம்பந்தம் இல்லாமல் பிதற்றுகிறார்.
தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கிறேன். இலங்கையில் சிங்கள அரசு நடத்தும் தமிழர் இன அழிப்பு யுத்தம், இந்திய அரசால் வகுக்கப்பட்ட சதித்திட்டம் ஆகும். அப்படுகொலைக்குத் துணையாக இருந்துகொண்டே தமிழ்மக்களை ஏமாற்ற ஒப்பாரிக் கவிதைகளை எழுதியும், உருக்கப் பேச்சுக்களைப் பேசியும், தமிழக முதல்வர் தந்திரமாக ஏமாற்றுகிறார் என்பதைத்  தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில், ஈழத்தமிழர்களைக் காக்க மாணவர்கள் நடத்திடும் அறப்போராட்டத்துக்கு அனைவரும் முழு ஆதரவு தர வேண்டுகிறேன்

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)