மரபு அணு மாற்றுக் கத்திரி: மத்திய அமைச்சருடன் மறுமலர்ச்சி தி.மு.கவினர் நேருக்கு நேர் வாதம்! மரபு அணு மாற்று கத்திரி வெளிவருவதை தடுக்கும் முயற்சியில் மறுமலர்ச்சி தி.மு.க. தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது.
விவகாரங்கள்: பொருளாதாரம், சுற்றுச்சூழல், விவசாயம், தேசிய, புறநகர், அறிவியல் தொழில்நுட்பம்
மாவட்டம்: தமிழ்நாடு, பிற மாநிலங்கள்
செய்தித்துறை: தலைப்பு செய்திகள்
மரபு அணு மாற்றுக் கத்திரி: மத்திய அமைச்சருடன் மறுமலர்ச்சி தி.மு.கவினர் நேருக்கு நேர் வாதம்!
மரபணு மாற்றுக் கத்திரியை இந்தியாவில் அனுமதிப்பதா? வேண்டாமா? என்பது பற்றிய கருத்துக் கேட்புக் கூட்டம் பெங்களூரில் 6.2.2010 அன்று நடைபெற்றது. அதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சி.கிருஷ்ணன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் வே.ஈசுவரன், மறுமலர்ச்சி கண்ணன், கன்னிமுத்து, கந்தசாமி ஆகியோரும் கலந்துகொண்டனர். எதிர்ப்புக் கருத்துகளைப் பதிவு செய்தனர்.
கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்ற அரங்கின் நுழைவுவாயிலில், மறுமலர்ச்சி தி.மு.க. சார்பாக பி.டி.கத்திரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரிய பேனர் வைக்கப்பட்டது. அதைப் பார்த்ததும், பி.டி.கத்திரிக்கு ஆதரவாக கம்பெனிக்காரர்கள் கூட்டிக் கொண்டு வந்த கூலிப்பட்டாளம் கூச்சல் எழுப்பினர். ஆனால், ம.தி.மு.க.வினர் அதே இடத்தில் அமைதியாக நின்று கொண்டு இருந்தனர். சிறிதுநேரத்தில் எதிர்ப்பாளர்கள் கலைந்து சென்றுவிட்டனர்.
மத்திய அமைச்சர் மாண்புமிகு ஜெயராம் ரமேஷ் அவர்கள் சுமார் 10 மணிக்கு அரங்கத்துக்கு உள்ளே வந்து அமர்ந்தார். அவரிடம் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் கடிதத்தை டாக்டர் சி.கிருஷ்ணன் அவர்கள் கொடுத்தார்.
அதை வாங்கியதுமே, ‘நான் அரங்கத்துக்கு உள்ளே நுழையும்போதே வைகோ அவர்களின் படத்துடன் பேனர் இருப்பதை பார்த்தேன். உங்கள் கடிதத்தை கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன்’ என்று கூறினார். பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் நலம் விசாரித்தார்.
இந்தக் கருத்து அரங்கில், தமிழ்நாட்டில் இருந்து சென்று எதிர்ப்புக் கடிதம் கொடுத்த ஒரே அரசியல் இயக்கம் மறுமலர்ச்சி தி.மு.க.தான்.
டாக்டர் சி.கிருஷ்ணன் அவர்கள், ‘மரபு அணு மாற்று உணவுப் பொருட்கள் மனிதனை எவ்வகையில் எல்லாம் பாதிக்கும் என்பதை சரியாக ஆராயாமல் அதனை அனுமதிப்பது மிகப்பெரிய தீங்கு’ என்று நமது கருத்தை பதிவு செய்தார்.
சென்ட்ரல் கல்லுhரி வளாகத்தில், ஜனன ஜோதி அரங்கத்தில் கூட்டம் நடைபெற்றது. ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், மாணவர்கள் பல்வேறு சமுதாய அமைப்பை சார்ந்தவர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் என சுமார் 700 பேர் வந்து இருந்தனர். சுமார் மூன்றரை மணி நேரம் கருத்துக் கேட்பு நிகழ்வு நடைபெற்றது. விவசாய ஆராய்ச்சியாளர்கள் பலரும் பி.டி.கத்திரிக்கு எதிர்ப்பு தெரிவித்தது மிகவும் வியப்பாக இருந்தது.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது முன்னாள் பிரதமர் தேவேகெளடா அவர்களும் அரங்கத்துக்கு வந்து, முடியும்வரை அமர்ந்து இருந்தார். சுமார் 2 மணி அளவில், அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அவர்கள், ‘கருத்துக் கேட்பு முடிந்துவிட்டது என்றும் என்னால் முடிந்தவரை கருத்துக்களைக் கேட்டுவிட்டேன். இருக்கின்ற விபரங்களை வைத்து எனது அமைச்சர் அவை முடிவு எடுக்கும்’ என்று கூறிவிட்டு முடிவுரையைத் தொடங்கினார்.
உடனே மறுமலர்ச்சி தி.மு.க. மாநிலப் பொறியாளர் அணித் துணை அமைப்பாளர் வே.ஈÞவரன் அவர்கள் குறுக்கிட்டு, “நீங்கள் தமிழகத்தைப் புறக்கணிக்கிறீர்கள். தமிழகத்திலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது” என்று ஆணித்தரமாகக் கூறினார்.
அமைச்சர் திடுக்கிட்டு பின்பு சுதாரித்துக்கொண்டு, 7 இடங்களில் என்னென்ன காரணத்துக்காக நடத்தப்பட்டது என்பதை விளக்கினார்.
அமைச்சர் விளக்கம் கொடுத்து முடிந்தவுடன், அதைமறித்து மீண்டும் ஈசுவரன் அவர்கள் “இந்தியாவிலேயே தமிழகத்தில் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம் தான் (TNAU) 4 வகை பி.டி. கத்திரியை தயாரித்து (மான்சாண்டோவின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி) வைத்து இருக்கிறது. அதற்கான ஆராய்ச்சியும், களப்பரிசோதனையும் கோவையில்தான் நடைபெறுகிறது. ஆனால், அதற்கு மட்டும் தமிழகத்தைத் தேர்ந்து எடுத்து இருக்கிறீர்கள். தமிழக மக்களின் கருத்தை மட்டும் கேட்காமல் எப்படி முடிவு எடுக்கிறீர்கள்?” என்று வாதிட்டார்.
தொடர்ந்து அமைச்சரை பேசவிடாமல் குறுக்கீடு செய்வதாகக்கூறி, அவரை அரங்கத்தை விட்டு காவலர்கள் வெளியேற்றி விட்டனர். பின்பு டாக்டர் சி.கிருஷ்ணன் அவர்களும் மற்ற அனைவரும் அரங்கத்தில் இருந்து வெளியேறினர்.
மரபு அணு மாற்று கத்திரி வெளிவருவதை தடுக்கும் முயற்சியில் மறுமலர்ச்சி தி.மு.க. தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது. எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டிய இடத்தில் கடுமையாகவும் முழுமையாகவும் பதிவுசெய்தனர்.

