மக்கள் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி! வைகோ அறிக்கை
விவகாரங்கள்: சுற்றுச்சூழல், புறநகர்
மாவட்டம்: மதுரை - புறநகர், தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
மக்கள் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி! வைகோ அறிக்கை
யானைமலையை உடைக்கத் திட்டமிட்ட தமிழக அரசு மக்கள் கொந்தளிப்பால் அத்திட்டத்தைக் கைவிட்டது. ஒற்றைக் கல்லாக அமைந்து உள்ள யானைமலையை உடைத்தும், குடைந்தும் சிற்பக்கலை நகரத்தை உருவாக்கிட, பெருந்தச்சர் அவையம் தந்த கருத்துரு குறித்து, தமிழக அரசின் தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர், கலை பண்பாட்டுத்துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் கருத்துக்களைப் பெற்றதாகவும், அரசு கவனத்தோடு பரிசீலனை செய்ததன்பேரிலேயே இம்மலையைக் குடைந்து சிற்ப நகரம் உருவாக்க ஆய்வுக் குழுவை அமைத்ததாகவும் அரசு ஆணை 207 தெரிவித்தது. யானைமலை வட்டார மக்களின் கோபாவேச எதிர்ப்புப் போராட்டம் எழுந்த நிலையில், ‘மலையை உடைக்க அரசு முற்படவே இல்லை’ என்று முதல் அமைச்சர் கூறினார்.
இந்நிலையில், மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் மகபூப் பாஷா தொடர்ந்த வழக்கில், ‘யானைமலையை உடைக்கக் கூடாது’ என்று உயர்நீதிமன்றம் தடைவிதித்ததைச் சுட்டிக்காட்டியதோடு, ஆய்வுக்குழு கலைக்கப்பட்டது என்றும், முந்தைய அரசு ஆணை இரத்து செய்யப்பட்டது என்றும், தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிக்கும்வரை, யானைமலை பாதுகாப்புப் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என பிப்ரவரி 24-ஆம் தேதி காலையில் நான் அறிக்கை வெளியிட்டேன்.
அதே தேதியில் (24.02.2010) தமிழக அரசு வெளியிட்ட அரசு ஆணை எண். 39-இன்படி, ‘சிற்ப நகரம் உருவாக்க சாத்தியம் இல்லை’ என ஆய்வுக்குழு பரிந்து உரைத்ததாகக் கூறி, யானைமலையை உடைக்கும் கோரிக்கையை நிராகரித்து விட்டதாக அரசு ஆணை வெளியிட்டு உள்ளதால், மார்ச் திங்கள் 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள போராட்டம் நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது. எந்த அநீதியையும், மக்கள் சக்தியால் வீழ்த்த முடியும் என்பது இதன்மூலம் நிரூபணமாகி விட்டது.

