தமிழ் ஈழம் மலரக் கடமை ஆற்றுவோம்! அதுவே அன்னை பார்வதிக்கு நம் அஞ்சலி! வைகோ உரை
விவகாரங்கள்: மனித உரிமை, சர்வதேசம், தேசிய, இலங்கைத் தமிழர்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தொகுப்புகள், சொற்பொழிவுகள்
தமிழ் ஈழம் மலரக் கடமை ஆற்றுவோம்!
அதுவே அன்னை பார்வதிக்கு நம் அஞ்சலி!
வைகோ உரை
அன்புச் சகோதரர்களே, தமிழ் ஈழ விடுதலை இன உணர்வாளர்களே, ஊடகவியலாளர்களே, செய்தியாளர்களே, சகோதரிகளே வணக்கம்.
தேனிசை செல்லப்பா அவர்கள், நெஞ்சை உருக்குகின்ற பாடலைப் பாடியதற்குப் பிறகு, பேராசிரியர் அரசேந்திரன் அவர்கள் தீட்டிய இரங்கல் கவிதையின் வரிகளை நான் வாசித்ததில், என் மனதை ஈர்த்த அதே வரிகளை, மீண்டும் அன்னையின் நினைவாக இந்த மன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன்.
உலகத் தமிழரெல்லாம் உள்ள உணர்வால்
உகுக்கும் கண்ணீரால்
உம் பாதம் பற்றி நின்று
உரைக்கும் சொல் ஒன்று
உரைக்கும் சொல் ஒன்று
கொள்ளி வைப்பானா பிள்ளை?
கொள்ளி வைப்பானா பிள்ளை?
எனக் கோடி முறை நினைந்து
நனைந்திருப்பாய்,
நலிந்திருப்பாய் நாடி தளர்ந்திருப்பாய்
கொள்ளி வைப்பான் பிள்ளை
குமுறும் எரிமலையாய் வெடித்து
கோடை இடியாய் முழக்கமிட்டுக்
கொக்கரிக்கும் சிங்களனைக்
கொன்று தீயிலிட்டுக்
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
கொண்ட உன் தவம் பலிக்கும்
தாயே,
கோடி ஆண்டு உன் பெயர் நிலைக்கும்
தாயே வணக்கங்கள்
தலை தாழ்ந்த வணக்கங்கள்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் நாள், அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களும், நானும், சென்னை விமான நிலையத்தில், கவலையோடு காத்து இருந்தோம்.
சிங்கப்பூரில் இருந்து விமானம் புறப்பட்டு விட்டது. நமது அன்னை பார்வதி அம்மாள் வருகிறார்கள். உடன் இருந்து உதவிட, விஜயலெட்சுமி எனும் தங்கையும் வருகிறார். விமான நிலையத்தில் அவர்கள், விமானத்தில் இருந்து இறங்கியவுடன், தள்ளு நாற்காலியில் அவர்களை அமர வைத்து, பத்திரமாக வெளியே அழைத்துக் கொண்டு வந்து, அங்கே ஏற்கனவே ஏற்பாடு செய்து இருக்கின்ற வாகனத்தில் அமர வைத்து, அண்ணன் நெடுமாறன் இல்லத்துக்கு அழைத்துச் செல்வது. ஓரிரு நாள் கழித்து, உலகத்தின் பல நாடுகளில் இருந்து தேடி வருகிறார்களே உயர்தரமான மருத்துவச் சிகிச்சை கிடைக்கின்ற மருத்துவமனைகள் சென்னை மாநகரில் இருக்கிறது எனத் தேடி வருகிறார்களே, அப்படி ஒரு மருத்துவமனையில் அவர்களைச் சேர்த்து, தக்க சிகிச்சை வழங்குவது என்று திட்டமிட்டுக் காத்து இருந்தோம்.
அந்த நாளோடு, அந்த நாட்டில் அவர்கள் தங்குவதற்கான அனுமதி முடிகிறது. இந்திய அரசுக்கு அவர்கள் முறைப்படி விண்ணப்பித்து, அதை இந்தியத் துhதரகம் பரிசீலித்து, அனுமதி வழங்கி விசாவும் தந்து விட்டது. எனவே, உரிய அனுமதிச் சீட்டோடு வருகிறார்கள். திடீரென்று, தமிழ்நாட்டுக் காவல்துறையின் அணிகள் கொண்டு வந்து குவிக்கப்பட்டன. நுhற்றுக்கணக்கான காவலர்கள் வந்து குவிந்தனர். காவல்துறையின் புகைப்படக் கலைஞர்கள் வந்தார்கள். காவல்துறையைச் சேர்ந்த காணொளி தயாரிக்கக்கூடிய கலைஞர்கள், தங்கள் கருவிகளோடு வந்தார்கள்.
எங்களுக்கு ஐயம் ஏற்பட்டது. அந்த வேளையில், உளவுத்துறையைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரி, அருமைச் சகோதரர் வழக்கறிஞர் சந்திரசேகரன் அவர்களுக்குத் தகவல் கொடுத்து, பார்வதி அம்மாள் அவர்களை விமானத்தில் இருந்து கீழே இறங்குவதற்கே அனுமதிக்கப் போவது இல்லை; அப்படியே திருப்பி அனுப்புவதற்கு ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது என்று தெரிவித்தவுடன் பதட்டம் அடைந்தவர்களாக, அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களும், நானும், விமான நிலையத்தில் பயணிகளை வரவேற்க வருகின்ற, பொதுமக்கள் நடமாடுகின்ற இடத்துக்குச் சென்றோம். இந்தப் புகழ் அஞ்சலியை முறைப்படி தக்கவிதத்தில் ஏற்பாடு செய்து இருக்கின்ற அருமைச் சகோதரர் வேளச்சேரி மணிமாறனும் எங்களோடு வந்தார்.
பொதுமக்கள் நடமாடுகின்ற இடத்தில், திடீரெனக் காவல்துறை அதிகாரிகள் வந்து எங்கள் இருவரையும் மறித்தார்கள். இதற்கு அப்பால் நீங்கள் போகக்கூடாது என்றார்கள். இது என்ன சர்வாதிகார நாடா?
பொதுமக்கள் நடமாடுகின்ற இடத்தில், நாங்கள் நடமாடக்கூடாது என்று கூறியதை நிராகரித்து விட்டு நாங்கள் சென்றோம். மீண்டும் காவல்துறை அதிகாரிகள் வந்து எங்களை மறித்தார்கள். அப்போது, எங்களிடம் விமான நிலையத்துக்கு உள்ளே செல்வதற்கான அனுமதிச் சீட்டு இருந்தது. பயணிகளை வரவேற்பதற்கு, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்ற இடத்துக்கான அனுமதிச் சீட்டை நாங்கள் முதலிலேயே பெற்று இருந்தோம். அதை அவர்களிடம் காண்பித்தவாறு நாங்கள் சென்றபோது, அந்த விமான நிலையத்துக்கு உள்ளே பார்வையாளர்கள், பயணிகளை வரவேற்பதற்கு ஒதுக்கப்பட்டு இருந்த இடத்தின் வாசலில் எங்களை உள்ளே விடாமல், காவல்துறை அதிகாரிகள் சுவர் போல மறித்து நின்றார்கள். அவர்கள், விமான நிலையப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருக்கின்ற மத்திய அரசின் காவல் அதிகாரிகள் அல்ல. தமிழக அரசின் காவல்துறை அதிகாரிகள்தான். அவர்கள், விமான நிலையப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடாத அதிகாரிகள். அவர்கள் எங்களை மறித்தபோது, அண்ணன் நெடுமாறன் அவர்கள், அவர்களிடம் காரணம் கேட்டார். பதில் ஏதும் சொல்லவில்லை.
எங்களிடம் அனுமதிச் சீட்டு இருக்கிறது என்று கூறி நாங்கள் உள்ளே செல்ல முயன்றபோது, எனது தோளைப் பற்றி, என் வலதுகரத்தை முறுக்கி, ஒரு அதிகாரி என்னைக் கீழே தள்ள முயன்றார். அப்போது, அண்ணன் நெடுமாறன் அவர்கள், அக்கிரமம் செய்யாதீர்கள், விளைவுகளை நீங்கள் விரைவிலேயே அனுபவிப்பீர்கள் என்று அந்த அதிகாரியை எச்சரித்தார்.
அதன்பிறகு, உங்கள் துப்பாக்கிகளுக்கோ, குண்டாந்தடிகளுக்கோ நாங்கள் பயப்படுகிறவர்கள் அல்ல என்று அந்த இடத்திலேயே உட்கார்ந்தோம். அதன்பிறகு அவர்கள் எதுவும் செய்ய முடியவில்லை. விமானம் தரை இறங்கி விட்டது. பார்வதி அம்மையாருடைய பொருள்கள், அவர்களுக்குத் தேவைப்படுகின்ற மருந்துகள், உடைகள் வைத்து இருக்கின்ற பெட்டி, கன்வேயர் பெல்டில் வந்து சேர்ந்து விட்டது. ஆனால், அதை மீண்டும் எடுத்துச் சென்று, அன்னை பார்வதி அம்மையார் அவர்களை விமானத்தில் இருந்து கீழே இறங்குவதற்குக்கூட அனுமதிக்காமல், அந்த விமானத்துக்கு உள்ளே மணிக்கணக்கிலே உட்கார வைத்து, நடுநிசிக்குமேல், அந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பினார்கள்.
அப்போது செய்தியாளர்கள், தொலைக்காட்சி ஊடகங்களைச் சேர்ந்தவர்கள், எங்களிடம் கருத்துக் கேட்டார்கள். நாங்கள் சொன்னோம்: தாங்க முடியாத வேதனை, அன்னை பார்வதி அம்மையார் இந்தத் தமிழ் மண்ணிலே கால் எடுத்து வைப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று சொன்னோம்.
முதல் அமைச்சர் அவர்களே, மறுநாள் நீங்கள் என்ன சொன்னீர்கள்? அவர் திருப்பி அனுப்பப்பட்டது எனக்குத் தெரியவே தெரியாது. காலை செய்தித்தாள்களைப் படித்துத்தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னீர்கள். இதைவிட ஒரு பித்தலாட்டமான, மோசடியான பொய்யை யாரும் சொல்ல முடியாது. உங்களுக்குத் தெரியாமலேயே, தமிழ்நாட்டுக் காவல்துறை இயங்கியதா? அப்படியானால், அது உங்கள் கட்டுப்பாட்டிலே இல்லையா? ஐ.ஜி., டி.ஐ.ஜி., ஏ.சி., டி.சி., இவர்கள் எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையா? காவல்துறையை இயக்குவதற்குப் பயன்படுகின்ற உளவுத்துறை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையா? உளவுத்துறை உங்களுக்கு ஒன்றும் சொல்லவில்லையா?
ஒன்பது மணிக்கே தமிழகக் காவல்துறை அங்கே கொண்டு வந்து குவிக்கப்பட்டு விட்டதே, யாருடைய உத்தரவால்?
மாவீரர் திலகம் பிரபாகரனைத் தன் மணிவயிற்றில் சுமந்த பார்வதி அம்மையார் வருகிறார். அவரை இந்த மண்ணிலேயே கால் எடுத்து வைக்கக்கூடாது என்று திருப்பி அனுப்புவதற்கு, டெல்லியோடு தொடர்புகொண்டு, உள்துறை அமைச்சரோடு தொடர்புகொண்டு, குடிவரவு அதிகாரிகளிடம் சொல்ல வைத்து, வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்ப வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளைச் செய்தது நீங்கள்தான்.
இந்திய அரசு அனுமதி கொடுத்தபிறகு, இந்தியாவுக்கு உள்ளே நுழைவதற்கு நுழைவு உரிமை (விசா) கொடுத்தபிறகு எப்படித் திருப்பி அனுப்பினீர்கள்?
நோய்வாய்ப்பட்டவர், 81 வயதைக் கடந்தவர், ஏற்கனவே, சிங்கப்பூர் விமான நிலையத்துக்கு வந்து மூன்றரை மணி நேரம் காத்து இருந்து, விமானத்தில் நான்கு மணி நேரம் பயணித்து வந்தவர். நோயாளி. மீண்டும், அவரை இங்கே விமானத்துக்கு உள்ளேயே நான்கு மணி நேரம் உட்கார வைத்து, அதே விமானத்தில் திருப்பி அனுப்புகிறபோது, அவரது உயிருக்கு ஊறு நேரிடும் என்ற எண்ணம் வேண்டாமா? பதற்றம் வேண்டாமா?
திரும்பிச் செல்லுகின்ற வழியில் விமானத்திலேயே அவரது உயிருக்கு ஊறு நேர்ந்துவிட்டால், இந்தத் தமிழ் இனத்துக்கு அல்லவா வந்து சேரும் பழி? என்று நினைத்தீர்களா? ஈவு இரக்கம் பச்சாத்தாபம் மனிதாபிமானம் எதுவுமே உங்களுக்குக் கிடையாதா? எல்லாவற்றையும் குழிதோண்டிப் புதைத்து விட்டீர்களா?
நீங்கள் சொல்லித்தான், இந்திய உள்துறை அமைச்சர், விமானத்தை விட்டுக் கீழே இறங்குவதற்கே அனுமதிக்கவில்லை. அந்தத் தாயின் உள்ளம் என்ன எண்ணி இருக்கும்? ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டுமென்றா ஆசைப்பட்டு இருப்பார்? இலட்சக்கணக்கான தமிழ் மக்கள், குஞ்சும் குழுவானுமாகக் கொல்லப்பட்டு, எத்தனைப் பெண்கள் நாசமாக்கப்பட்டு, பசியில், பட்டினியில், நோயில், குண்டுவீச்சில், இரத்தச் சகதியில் துடிதுடிக்கக் கொல்லப்பட்டு, எவ்வளவு அழிவுக்குப் பின்னாலே, சிங்கள இராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டுக் கிடந்தாரே அந்தத் தாய்? உத்தமர் வேலுப்பிள்ளை அவர்களோடு சேர்ந்து அடைக்கப்பட்டுக் கிடந்தாரே? உத்தமர் வேலுப்பிள்ளை அந்த இராணுவ முகாமிலேயே மடிந்து போனாரே?
மனிதனுக்கு மரணம் வந்துதான் தீரும். துன்பங்கள், துயரங்கள் இல்லாத வாழ்க்கை கிடையாது. ஆனால், எப்படிப்பட்ட துன்பம்? சின்னஞ்சிறு பருவத்திலேயே, தமிழ் ஈழத்தை மீட்பதற்கு ஆயுதம் ஏந்திப் போர்க்களத்துக்குச் சென்று விட்டாரே மகன்? எத்தனை நாள்கள், எத்தனை பகல்கள், எத்தனை இரவுகள், எத்தனை வாரங்கள், எத்தனை மாதங்கள், எத்தனை ஆண்டுகள், தன் வீர மைந்தனை உலகமே போற்றுகின்றதே அந்த மகனைப் பார்த்தது உண்டா?
அந்தத் தாயும், தகப்பனும் தங்கள் பிள்ளையைப் பார்த்தது உண்டா? அந்த வீரனைப் பெற்றதற்காகப் பெருமைப்பட்டார்கள். அந்த மகன், தன் தாயைக் காண வேண்டும், தந்தையைக் காண வேண்டும் என்பதற்காக, போராட்டக் களத்தை விட்டுவிட்டுச் சென்றாரா எப்போதாவது?
அவ்வளவு அழிவுக்குப் பின்னாலே, அவர் உயிருக்கும் மேலாக நெஞ்சிலே பூசித்த கணவனும் இறந்ததற்குப் பிறகு, இல்லை, கொல்லப்பட்டதற்குப் பிறகு, ஆம்; அவர் கொல்லப்பட்டார். சிங்கள இராணுவத்தின் வதைமுகாமில்தானே உயிர் இழந்தார்? அதற்குப்பிறகு, ஐயா, ஐயா என்ற குரல்தானே ஒலித்துக் கொண்டு இருந்தது அந்தத் தாயின் உதடுகளில்? தன் கணவனை ஐயா, ஐயா என்றுதானே அவர் அழைத்துக் கொண்டு இருந்தார்?
சிங்கப்பூரில் இருந்து உங்களைத் தமிழ்நாட்டுக்கு அழைத்துக்கொண்டு போகிறோம் என்றுதானே அவரிடம் அந்தச் சகோதரர்கள் சொன்னார்கள். தமிழ்நாட்டில் அண்ணன் நெடுமாறன் அவர்களின் இல்லத்திலே தங்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்து இருக்கிறோம் என்றுதானே சொன்னார்கள்?
இந்தத் தாயகத்தில், தமிழ்நாட்டில் ஏழு கோடித் தமிழர்கள் இருக்கிறார்கள். இந்தத் தமிழ் மண்ணுக்கு வருகிறோம் என்றுதானே எண்ணி இருப்பார்?
விமானத்தில் இருந்து எல்லோரும் இறங்குகிறபோது, எங்கள் தாயும், அவருக்குத் துணையாக வந்த விஜயலெட்சுமியும் கீழே இறங்குவதற்கு அனுமதி இல்லை என்று மறுத்தபோது, எப்படித் துடிதுடித்து இருக்கும் அந்த உள்ளம்?
தமிழ்நாட்டில் நாம் கால் வைக்க அனுமதி கிடையாதா? புகல் அற்றுப் போய்விட்டதா? இல்லை, இல்லை தாயே. இதோ எரிகிறதே தாயே, இந்த நெருப்பு, இதற்கு உள்ளே முத்துக்குமார் இருக்கிறான். தமிழகத்தைச் சேர்ந்த 16 பேர் தணலுக்குத் தங்கள் உயிர்களைத் தந்தார்கள். எனவே, நம்பிக்கை அற்றுப் பேசக்கூடாது.
இந்த மேடை, அரசியல் எல்லைகளைக் கடந்த ஒரு பொது மேடை. நம்மை நாமே நம்பிக்கை அற்றவர்களாக ஆக்கிக் கொள்ளக்கூடாது. தற்காலிகமாக ஒரு தோல்வி ஏற்பட்டு இருக்கிறது. அதனால் அவநம்பிக்கை எதற்காக? நம்மை நாமே நிந்தித்துக் கொள்வது எதற்காக? தாயே, உன் வீர மகனை நெஞ்சிலே பூசித்த 16 பேர், எங்கள் மண்ணிலே உயிர்களைத் தந்தார்கள். இன்னும் தருவார்கள். நெருப்புக்குத் தரச் சொல்லவில்லை நான். தீயிட்டு மடியச் சொல்லவில்லை, தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளச் சொல்லவில்லை. ஆனால், எங்கள் மூதாதை கரிகாலனும், இராஜராஜனும், பராந்தகச் சோழனும், குலோத்துங்கனும், வருணகுலத்தானும் இங்கிருந்து படை எடுத்துச் சென்றதைப் போல, எதிர்காலத்தில் வீர வாலிபர்கள் கடல் கடந்து வருவார்கள். இந்தக் கடல் தடுக்க முடியாது. இது வெறும் பேச்சு அல்ல. இரத்தத்தில் இருந்து ஆவேசத்தோடு பீறிட்டு வருகின்ற வார்த்தைகள்.
எங்கள் தாயைத் திருப்பி அனுப்பிய பாவத்தைச் செய்தீர்களே? மடியில் விழுந்தது ஒரு மணிப்புறா. என் பசியைப் போக்குவதற்காக அதைத் துரத்தி வந்து இருக்கிறேன். எனக்கு அந்த மணிப்புறா வேண்டும் என்று பார்வையிலேயே கேள்வி விடுத்தது அந்தப் பருந்து.
உன் பசியைப் போக்க வேண்டும். அது இயற்கையின் நியதி. அதற்காக என் தொடையை அறுத்துத்தருகிறேன். தஞ்சம் என என் மடியிலே வந்து விழுந்த மணிப்புறாவுக்காக, என் உடலை அரிந்து தருகிறேன் என்ற மன்னனின் வீர காவியம் படைத்த நாடு இந்தத் தமிழ்நாடு. அந்தத் தமிழ்நாட்டிலா?
வந்தவரையெல்லாம் வாழ வைத்த தமிழ்நாட்டிலா? யார் நாடி வந்தாலும், அவர்களது பசியைப் போக்க, துயரத்தைப் போக்க ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அருள் மழை பொழிந்த தமிழ்நாட்டிலா எங்கள் அன்னை கால் வைப்பதற்கு அனுமதி இல்லை?
இயக்குநர் கெளதமன் நேரடியாகக் குற்றச்சாட்டைத் தொடுத்தார். ஆத்திரப்பட வேண்டாம் முதல் அமைச்சர் அவர்களே, சரித்திரத்திலே இந்தக் குற்றச்சாட்டுதான் உங்கள் மீது பதிந்து இருக்கிறது. அவர்களது உள்ளம் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்படுவதற்கு உங்கள் உத்தரவுதான் காரணம்.
எதற்காக எங்களுக்கு இந்தக் கொடுமையைச் செய்கிறார்கள்? என்று அந்தத் தாய் கேட்டார். நெடுமாறனும், வைகோவும் விமான நிலையத்துக்குப் போனதால்தான், இந்தப் பிரச்சினை வந்து திருப்பி அனுப்பி விட்டார்கள் என்று அறிக்கை விட்டார் முதல் அமைச்சர். நாங்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் திரட்டிக் கொண்டு போயிருந்தால், மாவீரர் திலகம் பிரபாகரன் வாழ்க என்ற முழக்கம் விண் அதிர எழுந்து இருந்தால், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு திரட்டுவதற்கு, அவரது தாயாரை அழைத்துக்கொண்டு வந்து இந்த வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று எங்கள் மீது குற்றம் சுமத்துவீர்கள் என்று யோசித்துத்தான், நானும், அண்ணன் நெடுமாறனும், காருக்கு உள்ளேயே அமர்ந்து இருந்தோம்.
ஆனால், நாங்கள் வந்தது உங்களுக்குத் தெரியும். அந்தத் தாயை இங்கே இறங்க விடக்கூடாது என்று நீங்கள் திருப்பி அனுப்பியது எங்களுக்குத் தெரியும்.
முடியாதா உங்களால்? ஒரு முதல் அமைச்சர் நினைத்தால், மத்திய அரசிடம், நோய்வாய்ப்பட்டு வருகிறார். வயது முதிர்ந்த ஒரு தாய். சிகிச்சைக்காக வருகிறார். அவரை இங்கே அனுமதிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கலாமே? இந்திய அரசிடம் முறையாக விண்ணப்பித்து, அவர்களும் பரிசீலித்து அனுமதி பெற்றுத்தானே இங்கே வந்து இருக்கிறார்? இல்லை அவர்கள் முடிவை மாற்றிக்கொண்டார்கள் என்றால், அந்த நேரத்திலேயே நீங்கள் மத்திய அரசைத் தொடர்பு கொண்டு அனுமதிபெற்றுக் கொடுத்து இருக்க முடியும். தணி.சேரன் அவர்களை சென்னை விமான நிலையத்தில் தடுத்தபோது, மத்திய அரசைத் தொடர்புகொண்டு, அனுமதி பெற எங்களால் முடிந்ததே? நான் பெரிய பதவியிலும் இல்லை அன்று.
நீங்கள்தான் திருப்பி அனுப்ப வைத்தீர்கள். அதன்பிறகு, ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று, அண்ணன் நெடுமாறன் அவர்கள் தலைமையில், பல்லாயிரக்கணக்கானோர் உண்ணாநிலை அறப்போராட்டத்தை நடத்தினோம். தா.பா. அவர்கள், நிறைவு செய்ய வந்தார்கள். தமிழ் உணர்வாளர்கள், கலைஞர்கள் வந்தார்கள். நெஞ்சம் வெடிக்க உரை ஆற்றினார்கள். இத்தனைக்குப் பிறகும், நீங்கள் என்ன சொன்னீர்கள்?
பார்வதி அம்மையார் சில நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அவர் இங்கே யாரையும் சந்திக்கக்கூடாது; எந்த அரசியல் கட்சித் தலைவரையும் சந்திக்கக்கூடாது என்ற நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு மத்திய அரசுக்கு விண்ணப்பித்தால், அதைப் பரிசீலிக்கலாம் என்ற ஏற்பாட்டைச் செய்வோம் என்று சட்டமன்றத்தில் கூறி, அடிப்படையிலே ஈன ஜென்மங்களான இந்தியத் துhதரக அதிகாரிகள், எங்கள் தாயைச் சந்தித்து, அவர்கள் உடல்நலக் குறைவால் நினைவு தவறுகிற வேளையில், அவரது விரல் ரேகையை, நீங்கள் தயாரித்துக் கொடுத்த கடிதத்தில் பதிய வைத்தீர்களே? அயோக்கியத்தனத்துக்கு எல்லையே கிடையாதா? இதைவிடக் கொடுமை உண்டா?
அவர் விரல் ரேகையை நீங்கள் பதிய வைத்தீர்கள். அவர் விரும்பவில்லை. தன்மானத்துக்கு அடையாளமாக இருக்கின்ற, கணைக்கால் இரும்பொறையின் புகழ் பாடக்கூடிய எங்கள் தாயா மன்றாடுவார் இந்திய அரசிடம்? அப்படி ஒரு கடிதம் வருவதற்கு, நீங்கள்தான் ஏற்பாடு செய்தீர்கள்.
அப்படி என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நான் தமிழ்நாட்டுக்கு வர எண்ணினேன். ஆனால், இந்திய அரசாங்கத்திடம் மடிப்பிச்சை ஏந்தத் தயாராக இல்லை என்று சொன்னார்.
வீரனைச் சுமந்த வயிறு அல்லவா? வீரனைச் சுமந்த தாய் அல்லவா? திலீபன் ஆவி அடங்கிய தன் மண்ணுக்கே திரும்பிச் சென்றார். கிட்டுவின் தாய் உயிர் அடங்கிய தங்கள் ஊருக்கே சென்றார். வேல்மயில் வாகனன் என்ற அந்த அரசு மருத்துவ அதிகாரி, ஓய்வு பெற்றதற்குப்பிறகு, இப்போது, நம் தாயைக் கவனிப்பதற்காகவே வந்து சிகிச்சை அளித்தார்.
தங்கை கயல்விழி அங்கயற்கண்ணி, பாவேந்தர் ஏறுவின் பேத்தி, இங்கே உரை ஆற்றிய இறைக்குருவனார் அவர்களின் மகள், வழக்கறிஞர் கயல்விழி, தமிழ் ஈழ விடுதலைக்காகவே தன்னை ஒப்படைத்துக் கொண்டு இருக்கின்ற அந்த வீரத் தங்கை, அங்கே சென்று வந்த செய்தியை, இறைக்குருவனார் அவர்கள் இங்கே சொன்னார்கள். அந்தத் தங்கை, என்னிடமும் கூறினார்.
தமிழ்நாட்டில் இருந்து வந்து இருக்கிறோம் என்ற சொன்ன உடனே, அவரது கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென்று உதிர்ந்து ஓடியது. நல்ல நினைவு இருக்கிறது. உணரும் சக்தி இருக்கிறது என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.
கலைஞர் கருணாநிதி செய்த பாவத்துக்கு மன்னிப்பே கிடையாது. இதோ, யுத்த பேரிகை முழங்கி விட்டது. படைகள் புறப்பட்டு விட்டன. என் வில்லில் இருந்து இப்போது அம்புகள் புறப்படப் போகின்றன. அதற்கு முன்பாக, குழந்தைகளே வெளியேறி விடுங்கள். பெண்களே வெளியேறி விடுங்கள். தாய்மார்களே வெளியேறி விடுங்கள். வயதில் மூத்தோரே வெளியேறி விடுங்கள், நோயுற்றவர்களே வெளியேறி விடுங்கள் என்று அறிவித்து விட்டுக் களத்துக்குச் சென்றான் தமிழ் மன்னன் என்று, புறநானூறு சொல்லுகிறது.
அப்படிப்பட்ட தமிழகத்தில், வயது முதிர்ந்த எங்கள் தாயாரை, இந்தத் தமிழ் மண்ணிலேயே கால் எடுத்து வைக்க விடாமல் திருப்பி அனுப்பிய பாவத்துக்கு மன்னிப்பே கிடையாது. கலைஞர் கருணாநிதி அவர்களே! உங்களால் வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது தமிழகம். ஈழத்தில் நடந்த படுகொலைக்கு இந்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து, ஆயுதங்களை அளித்து, உலக வல்லரசுகளின் ஆயுத பலம் கொண்டு அவர்களைத்தாக்கி, போர்க்களத்தில் அவர்களுக்குத் தற்காலிகமாகப் பின்னடைவை ஏற்படுத்தியது இந்திய அரசு. அதற்குப் பக்கபலமாக இருந்து கங்காணி வேலை பார்த்தது கலைஞர் கருணாநிதி அரசு. இந்தத் துரோகத்துக்கு மன்னிப்பு கிடையாது.
எங்கள் தாயின் உடல் இப்போது வல்வெட்டித்துறையில் வைக்கப்பட்டு இருக்கிறது. அண்ணன் நெடுமாறன் அவர்கள், நமது பிரதிநிதிகளை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தார். அங்கே இராணுவத்தின் அனுமதி கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று தகவல் வந்தது. நாளை அடக்கம் நடைபெறப் போகிறது.
தாயே, உங்களுடைய காலடிகள் எங்கள் மண்ணில் படுகின்ற பாக்கியம் எங்களுக்குக் கிடைக்கவில்லை. வெட்கித் தலைகுனிகிறோம். இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதற்காக. உங்கள் திருவடிகள், 1997 ஆம் ஆண்டிலே என் இல்லத்தில் பதிந்து, என் பேரப் பிள்ளையை உங்கள் மடியிலே தூக்கி வைத்து, பிரபாகரன் என்று பெயர் சூட்டினீர்கள். அந்த உங்கள் திருவடிகளிலே, வேலுப்பிள்ளையின் திருவடிகளிலே என் மகனும், மருமகளும் திருமண நாளில் உங்கள் தாள் பணிந்து வாழ்த்துப் பெற்றார்கள்.
அன்னை பார்வதி அம்மையார், பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குத் திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு விட்டார் என்ற செய்தியை, அடைக்கலம் இரவு ஒரு மணிக்கு என்னிடம் சொன்னபோது, விடியற்காலை ஐந்து மணிக்கு உள்ளாக நான் அங்கே ஓடோடி வந்தேன், கோயம்புத்தூரில் இருந்து. பின்னர் முசிறியில் மருத்துவர் ராசேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும் மும்முறை பார்த்தேன்.
தாயே! உங்களைக் காண அன்றைக்கு எவ்வளவோ ஆசையோடு வந்தேன். கவிஞர் காசி ஆனந்தனும் பக்கத்திலேயே இருந்தார். உங்கள் காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் என்று ஆசையோடு வந்தேன். எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. என்னுடைய தாயாரின் காலடியில் எப்போதும் விழுந்து ஆசி பெறுவேன்.
எரிகிறது எங்கள் நெஞ்சிலே நெருப்பு. ஒன்று மட்டும் சொல்லுகிறேன். நம்முடைய இளைஞர் கூட்டத்துக்கு, தமிழ் உணர்வாளர்களுக்குச் சொல்லுகிறேன்.
ஒரு குறுந்தட்டிலே இசைப்பிரியாவுக்கு ஏற்பட்ட கொடுமையை இரண்டு நிமிடம் அதைப் பார்க்க முடியவில்லை என்று துடிக்கிற உள்ளங்களுக்குச் சொல்லுவேன், சகோதரர்களே, இன்னும் சில காட்சிகள் இருக்கின்றன. அதைப் பார்த்தால் நெஞ்சு வெடித்து விடும். கூட்டம் கூட்டமாகப் பெண்கள் சிங்கள இராணுவத்தினரால் கற்பழிக்கப்படுகின்ற காட்சிகள் இருக்கின்றன. அதைக் காட்ட முடியாது என்று சேனல் 4 நிர்வாகிகள் சொல்லுகிறார்கள். அதை ஐரோப்பிய நாடுகளில் ஆவணங்களாக வைத்து இருக்கிறார்கள்.
இவ்வளவு கொடுமைகளையும் செய்து, இன்றைக்குத் தமிழர் குடியிருப்புகளைச் சுற்றிலும் நிற்கிறது சிங்கள இராணுவம். கயல்விழி சொன்னார்.
தமிழர்களின் தாயக மண்ணில் சிங்களர்கள் குடியேறுகிறார்கள். தமிழர்களின் ஆலயங்களுக்கு உள்ளே, பெளத்த விகாரங்கள், புத்தர் சிலைகள். தமிழர்களை முழுமையாக அழிக்கத் திட்டமிட்டுச் செயலாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். எங்கும் பசி, பட்டினி. முகாமில் இருந்த ஒரு நான்கு வயதுக் குழந்தையிடம் சாப்பிட்டாயா? என்று கேட்டாராம் கயல்விழி. நேற்று காலையில் சாப்பிட்டேன் என்று சொன்னது அந்தக் குழந்தை என்றார்.
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
என்று அட்சய பாத்திரத்தை ஏந்திய மணிமேகலையின் காவியம் பாடிய நாடா இந்த நாடு?
இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் ஒரு முடிவு வரும். அது எப்படி வெடிக்கும்? புரட்சி சொல்லிக்கொண்டு வராது. முன்கூட்டி அறிவித்துக் கொண்டு வராது.
அது ஒரு கந்தகக் கிடங்கு. உரிய வேளையில் ஒரு பொறி அதில் விழுகிறபோதுதான் அது வெடிக்கும். தன்மானத் தமிழர்களின் உள்ளம், இன்றைக்குக் கந்தகக் கிடங்காகத் தகித்துக் கொண்டு இருக்கிறது.
நம்முடைய வாழ்நாளிலேயே தமிழ் ஈழம் மலரும். அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.
இதோ, தெற்கு சூடான் புதிய நாடாக மலர்ந்து விட்டது. ஜூலை 9 இல் அறிவிக்கப்பட இருக்கிறது. அந்தத் தெற்கு சூடான், தனி நாடாக இருக்க முடியாது; பொருளாதார அடிப்படையில் வடக்கு சூடானைச் சார்ந்துதான் இருக்க வேண்டும் என்றார்கள். எத்தனை இலட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்? தெற்கு சூடானிலே, டர்புரிலே? அவர்கள் நம்பிக்கை இழந்தார்களா? இல்லை. இன்றைக்கு உலகத்தின் மனசாட்சி அவர்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. அதே கட்டத்துக்குக் கொண்டு வருவோம். நாம் ஏழு கோடிப் பேர் இருக்கிறோம்.
தந்தை செல்வா அவர்கள், தனித் தமிழ் ஈழமே தீர்வு என்று வட்டுக்கோட்டையில் தீர்மானம் நிறைவேற்றியதற்குப் பிறகு, அன்றே வாக்கெடுப்பு நடந்து விட்டது. மீண்டும் ஒரு வாக்கெடுப்பு நடத்த வேண்டுமானால், தமிழ் ஈழ மண்ணில் இருந்து, சிங்களர்கள் அத்தனை பேரும் வெளியேற்றப்பட வேண்டும்.
சிங்கள இராணுவ முகாம்கள், காவல் முகாம்கள் அகற்றப்பட வேண்டும். அது ஒரு முறை.
இன்னொரு முறை, ஆயுதத்தின் மூலமாகத் தமிழ் ஈழத்தை நிறுவுவது. அது, உலகம் பார்த்து இருக்கின்றது பல நாடுகளில். போரிலே தோற்று விட்டார்களே? என்கிறார்கள்.
1939 இல் போலந்து தோற்கவில்லையா? ஐரோப்பிய நாடுகள் தோற்கவில்லையா? அடால்ப் ஹிட்லர் கொட்டமடிக்கவில்லையா? நாஜிப் படைகள் ஜெயிக்கவில்லையா? இனி, ஹிட்லரை யாரும் எதிர்க்க முடியாது என்று சொல்லவில்லையா? அபிசீனியாவில் முசோலினியின் அதிகாரம் கொடி கட்டிப் பறந்ததே? அது நிரந்தரமானதா? நின்றதா அந்த வெற்றி? எல்லாம் இடிந்து சாம்பல் மேடாகி விட்டது என்ற சொன்னார்களே, அதில் இருந்து அவர்கள் எழவில்லையா? வெற்றி பெறவில்லையா? கொடியவன் ஹிட்லர் அழியவில்லையா?
அதேபோலத்தான், ஒரு ராஜபக்சே போனாலும், இன்னொருவன் வருவான். ஆனால், ராஜபக்சேக்களுக்கு இதுதான் முடிவு என்று ஏற்பட்டபிறகு, எவன் வர முடியும்? எங்கள் மீனவன் ஜெயக்குமாரின் கழுத்தை இறுக்கிக் கொன்ற அதே கயிற்றில், அவனைத் தொங்க விட வேண்டும் என்பதுதான் நம்முடைய கோரிக்கை.
ஆற்றல் உண்டு, அறிவு உண்டு, மதிநுட்பம் உண்டு, வீரம் உண்டு. எல்லாம் உண்டு. ஆகவே, நம்பிக்கை இழக்க வேண்டியது இல்லை. ஒரு நாட்டின் விடுதலைக்கு அத்தனை பேரும் போராடி விட மாட்டார்கள். போராடும் உணர்வு உள்ளவர்கள் மூலமாக அனைவரும் திரண்டு வருவார்கள். அந்த வீர உணர்ச்சியை நெஞ்சில் ஏந்துவதற்காகத்தான், அன்னை பார்வதி அம்மையாருக்குப் புகழ் அஞ்சலி செலுத்துகின்ற வேளையில், தாயே, தமிழர் சரித்திரம் இருக்கின்றவரையில், எங்கள் அன்னையே உங்கள் பெயர் இருக்கும். உங்கள் மணிவயிற்றில் பத்து மாதம் சுமந்த எங்கள் மாவீரர் திலகத்தைப் போல உலகத்தில் எந்தப் புரட்சியாளனும் தோன்றியது இல்லை. அவருக்கு நிகர் எவருமே இல்லை. இது தற்பெருமை அல்ல. எந்த நாட்டின் உதவியும் இல்லாமல், வல்லரசுகளின் துணை கொண்டு ஆதிக்கக்காரன் அழிக்க முயன்றபோது, தரைப்படை, கடற்படை வான்படை அமைத்தவன் எங்கள் பிரபாகரன். உலகத்தில் வேறு யாரும் இல்லை. அவனைப் பெற்ற தாயே, நீங்கள் உயிர் அற்ற சடலமாக இருக்கலாம். ஆனால், எங்கள் உள்ளத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் இருக்கின்ற திசை நோக்கி நாங்கள் வணங்குகின்றோம்.
இந்த வேளையில் நாங்கள் உறுதி எடுத்துக் கொள்கிறோம் தாய்த்தமிழகத்து வாலிபர்களை, தமிழ் இன உணர்வாளர்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், நம் கண் முன்னாலேயே தமிழ் ஈழ நாடு, இரத்தமும், சதையுமாக நம்முடைய நெஞ்சில் நிறைந்து இருக்கின்ற தமிழ் ஈழம் மலர வேண்டும். சிந்திய இரத்தம் வீண்போகாது. கொடுக்கப்பட்ட உயிர்களின் தியாகம் வீண்போகாது. இன்றைக்கு அங்கே சுற்றி நிற்கின்ற சிங்கள இராணுவத்தை வெளியேற்றுகின்ற காலம் வரும்.
ஏ இந்திய அரசே! தொடர்ந்து துரோகம் செய்கிறாய். தெற்கே ஒரு காஷ்மீரை உருவாக்கிக் கொண்டே இருக்கிறாய். உன்னுடைய துரோகத்துக்கு ஒருபோதும் மன்னிப்பு கிடையாது. தமிழ் ஈழத்தை அமைப்பதற்குத் தடை விதித்து இருக்கின்ற நிலையில், தமிழகத்தையும் சேர்த்து அவர்கள் தனிநாடு ஆக்க முயற்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்து நீ தடை விதித்து இருக்கிறாய். தாய்த் தமிழகத்து மண்ணையும் சேர்க்க வேண்டும் என்று பிரபாகரன் ஆசைப்படவில்லை. தமிழ் ஈழ விடுதலைக் களத்தில் அவர்கள் அதைக் கோரிக்கையாக வைக்கவில்லை. நீயாகச் சொல்லுகிறாய். தடை விதிக்க வேண்டும் என்பதற்காகச் சொன்னாய். எதிர்காலத்தில் அது உண்மையாவதற்கு நீயே வழிவகுத்து விடாதே. (பலத்த கைதட்டல்).
கடல் நம்மைப் பிரிக்க முடியாது. அந்த உணர்வோடு, அன்னை பார்வதிக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம். நாங்கள் வீர சபதம் பூணுகிறோம்.
நிறைவாக இருக்கும் வரை எங்கள் தலைவன் மறைவாக இருக்கிறான். அவனே, விடுதலைப் போரை இயக்குகின்ற சக்தி. தமிழ் ஈழத்தை மலரச் செய்யும் சக்தி. அதன் பெயர்தான் மாவீரர் திலகம் பிரபாகரன். அவரை ஈன்ற எங்கள் தாயே, உன் புகழ் நீடு வாழ்க!
தமிழ் ஈழம் மலர உறுதி எடுத்துக் கொள்கிறோம். அதுவே எங்கள் கடமை.
பல்வேறு துறைகளில் நீங்கள் இருக்கலாம். உங்களுக்கு அரசியல் எண்ணங்கள் இருக்கலாம். பல்வேறு சிந்தனைகள் இருக்கலாம். அது அவரவர் விருப்பம்.
ஆனால், நம்முடைய இலக்கு, நம்முடைய வாழ்நாளில், தமிழ் ஈழத்தைக் கட்டமைப்பதற்கு நாம் தோள் கொடுப்போம், துணை நிற்போம்.
தமிழ் ஈழம் மலர்வதையும், நம் வாழ்நாளிலேயே காண்போம். வணக்கம்.
பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

