உறுதியான புரட்சியாளனை துன்ப வெள்ளத்தால் மூழ்கடிக்க முடியாது: வைகோ

விவகாரங்கள்: மனித உரிமை

மாவட்டம்: சென்னை - வடக்கு, சென்னை - தெற்கு, கோயம்புத்தூர் - மாநகர், கோயம்புத்தூர் - புறநகர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, காரைக்கால், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை - மாநகர், மதுரை - புறநகர், நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருநெல்வேலி - மாநகர், திருநெல்வேலி - புறநகர், திருப்பூர், திருச்சி - மாநகர், திருச்சி - புறநகர், தூத்துக்குடி, வேலூர் - கிழக்கு, வேலூர் - மேற்கு, விழுப்புரம், விருதுநகர், தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், சொற்பொழிவுகள்

Date: 
Sat, 01/02/2014
 
 
 
 
 
 
 
 
 
உறுதியான புரட்சியாளனை துன்ப வெள்ளத்தால் மூழ்கடிக்க முடியாது: வைகோ
 
றுதியான புரட்சியாளனை துன்ப வெள்ளத்தால் மூழ் கடிக்க முடியாது என்று 05.01.2014 அன்று விகடன் பிரசுரம் வழங்கிய வைகோவின் மூன்று இலக்கியப் படைப்புகள் நூல் வெளியீட்டு விழாவில் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் உரை ஆற்றினார். 
 
எனது வாழ்க்கையில் என்றைக்கும் இனி மறக்கமுடியாத நிகழ்வுகளில் ஒன்றாக நடைபெறுகிற, நான் மேடைகளில் ஆற்றிய உரை களையும், சிறைச்சாலையிலிருந்து நான் கண்ணின் மணிகளுக்குத் தீட்டிய கடிதங்களையும் மூன்று நூல்களாக விகடன் பிரசுரத்தார், வழங்கி இருக்கக்கூடிய நிலையில், இசைக்குப் பெருமை சேர்த்த அண்ணாமலை அரசர் குடும்பத்தார் அமைத்து இருக்கின்ற இந்த அண்ணாமலை மன்றத்தில் நடைபெறுகிற இந் நூல் வெளியீட்டு விழாவுக்கு தலையேற்று இருக்கின்ற தமிழருவி மணியன் அவர்களுக்கு நானும் என் தோழர்களும் எந்நாளும் நன்றிக் கடன் பட்டிருக்கின்றோம். நான் நன்றி மிக்கவன். திருக்குறளின் நட்பையும், நன்றியைப் பற்றிய கருத்தையும் நெஞ்சில் ஆழமாக பதித்திருப்பவன்.
 
இங்கே பலதுறைகளின் தலை சிறந்த விற்பன்னர்கள் இந்தச் தமிழ்ச் சமூகத்துக்கு தமிழ் நாட்டுக்கு விளம்பரம் இல்லாமல் அளப்பரிய சேவை செய்யக்கூடிய உன்னதமான மனிதர்கள் பலரும் இந்த அரங்கத்திற்கு ஐந்தரை மணிக்கு வந்து நெடுநேரமாக அவர்கள் அமர்ந்து இந்த அரிய உரைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிற இந்த நிலையில் நான் நெடுநேரம் பேசுவது உசிதமாகாது.
 
நான் பல நேரங்களில் சொல்லுவது பிரதி பலன் எதிர்பாராமல், நாம் உதவ வேண்டும். எதையும் எதிர்பாராமல் துன்பப்படுகிற வர்களுக்கு, காயப்பட்டவர்களுக்கு நம்மால் இயன்றதைச் செய்து கொண்டு வந்தால், அவர்களிடருந்து நாம் உதவியை எதிர்பார்க்க வேண்டியது இல்லை. நாம் எதிர்பாராத இடத்திலிருந்து யாரோ உதவுவார்கள். என் வாழ்க்கையில் இதை நான் நீண்ட நாட்களாக பார்த்துக்கொண்டே வருகிறேன். அதைத்தான் இந்த விழாவுக்குத் தலைமை தாங்குகிற காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் எனது பொது வாழ்க்கையில் எனக்கும் எனது சகாக்களுக்கும் செய்து வருகிறார்.
 
என்னுடைய நன்றி உணர்வுகளை வார்த்தைகளில் வடிக்கக்கூடிய வல்லமை என் நாக்குக்கு இல்லை. நான் ஹோமரைப் பார்ப்பது போல கம்பனைப் பார்ப்பவன். கம்பன் தீட்டிய பாடல்களில் சொல்லின் ஆளுமை, தமிழுக்கு எவ்வளவோ சிறப்பு உண்டு. இங்கு சாகித்ய அகாதமி விருதுக்குப் பெருமை சேர்த்த சிற்பி, சர்ப்ப யாகம் சிற்பி அமர்ந்திருக்கிறார். அந்தக் கம்பனே மனதில் யாரை மனதுக்குள் வடித்துக்கொண்டு அவன் பாடல் தீட்டுகிறபோது, ஒரு பூனை இந்த நெடுங்கடலைப் பருகி விழுங்க முயற்சிப்பதைப் போல என்னுடைய எளிய முயற்சி இந்தக் காவியம் என்று நுழை வாசலிலே அந்தப் பாட்டை எழுதியிருப்பான்.
 
நான் பெரிய எழுத்தாளனும் அல்ல, பெரிய படைப்பாளியும் அல்ல. நான் அவ்வப்போது எனது மனதில் பட்டதை எழுதி இருக்கிறேன். நான் மேடையில் பேசியதை நூலாகத் தொகுக்க வேண்டும் என்று தம்பி அருணகிரி நினைத்துக்கொண்டு இருந்த போது விகடன் பிரசுரம் மூன்று நூல்களாக வெளியிட முன் வந்தனர். ஆம்; நம்மால் முடியும்! நூலையும் அவர்கள்தான் வெளியிட்டார்கள். ஆனால், அந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு நான் வரமுடியவில்லை. அப்போது நான் புழல் மத்திய சிறையில் இருந்தேன். அந்த நூல் வெளியீட்டு விழா நான் இல்லாமலே நடந்தது. விகடன் பிரசுரத்தார் இந்த மூன்று நூல்களையும் வெளியிட வேண்டும் என்று நினைத்தபோது, கட்சி அடையாளம் இதில் இருக்கக்கூடாது என்று நான் விரும்பினேன்.
 
‘புருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே, தங்கச்சி கண்ணே’ என்ற அற்புதமான பாடல் இன்னும் திருமண வீடுகளில்கூட ஒலிக்குமே அந்தப் பாடலைப் பாடிய திருச்சி லோகநாதன் அவர்களின் அருமை மகன்தான் மகராசன், தமிழ் மொழி இன உணர்வுமிக்கவர். அவர் இங்கு பாடல்களை அருமையாகப் பாடினார். நான் பொன்னாடை அணிவிக்கிற பொழுது, ‘உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய பாட்டில் ஒரு பல்லவியை மட்டும் நான் சொல்லட்டுமா? என்று கேட்டார். மிகவும் விரும்பிக் கேட்கின்ற பொழுது மறுத்தால் அவருக்கு வருத்தமாக இருக்கும் என்று, சரி என்று சொன்னேன். அவர் ஐந்து பாடல்களின் பல்லவி யையும் சொல்லுவார் என்று எதிர்பார்க்க வில்லை. அதில் கடைசி பாட்டுப் பல்லவியைச் சொல்லுவார் என்று நான் எதிர் பார்க்கவில்லை. அவர் பாடி முடித்து வந்தவுடன் ஏன் கடைசிப் பாடலை இங்கு சொல்ல வேண்டும் என்றேன். அதற்கு அவர் சொன்னார், நான் கட்சி சின்னம் என்று சொல்ல வில்லையே! பம்பரம் என்றுதானே சொன்னேன்” என்றார்.
 
அசோக வனத்தில் வாயு மைந்தன் எப்படிச் சுழன்று சுழன்று இலங்கை அரக்கர் கோனின் படைகளை சிதற அடித்தார் என்பதற்கு பம்பரம் சுழல்வது போல் என்று கம்பன் எழுதியிருப்பார். அவர்களுக்கு யாரும் தடை போட முடியாது. அந்தச் சொல், எழுத்து, எண்ணம் எல்லாம் தன்னலமற்றது. இப்படி ஒருவர் தமிழ்நாட்டுக்குத் தேவை. துணிந்து பேசுவதற்கு. என் சகாக்கள் இன்றைக்கு அவர்கள் நெஞ்சில் உங்களைச் சுமக்கிறார்கள்.
 
முதலில் இந்த வெல்லும் சொல்லை யார் வெளியிடுவது என்று நினைத்த மாத்திரத்தில் என் மனதுக்குத் தோன்றியவர் சிற்பி தான். ஒருநாள் விமான நிலையத்தில் லக்கேஜ் எடுப்பதற் காக இருக்கிறேன். பக்கத்தில் ஒருவர் வந்தார். என்னிடம் பேச்சு கொடுத்தார். ஐயா நீங்கள் யாரு? என்றேன். நான் சிற்பி பாலசுப்பிர மணியம் என்றார். சர்ப்ப யாகம் சிற்பியா? என்றேன். அதை அவர் நினைவிலே வைத்திருந்து, ஒரு நிகழ்ச்சியில் என் பெயரைச் சொன்னவுடன், அவர் நான் எழுதிய சர்ப்ப யாகத்தைச் சொல்லி, சர்ப்ப யாகம் சிற்பியா? என்று கேட்டார் என்றார்.
 
இன்றைக்கு அவருக்கு கோவையில் ஈழத் தமிழ் விடுதலைக்கான பெரிய நிகழ்வு நடத்த முழுமையான பணி இருக்கிறது. நீங்கள் வெளி யிட்டால் நன்றாக இருக்கும், என் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்ச்சியாக இதை நான் நினைக்கின்றேன். இதில் கட்சிக் கொடிகள் இருக்காது. கட்சி அடையாளம் இருக்காது. இது நான் விரும்பி நடத்துகின்ற நிகழ்ச்சி என்றவுடன், அவசியம் வருகிறேன் என்று சொல்லிவிட்டு, ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் அவர்கள் அந்தத் தகவலை உறுதி செய்தார்கள். அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
 
அவர் உரையில் எல்லை மீறி என்னை புகழ்ந்திருந்தால்கூட, இந்த நூலின் உயிரோட்டமான பகுதிகளை உள்வாங்கி உரை ஆற்றினார். இங்கு வந்திருப் பவர்கள் எல்லாம் மிகவும் சாதாரண மானவர்கள் அல்ல. உலகப் புகழ்பெற்ற டாக்டர் தணிகாசலம் இங்கே வந்திருக்கிறார். அவருடைய ஆய்வு உரைகள் உலக நாட்டு மருத்துவ பல்கலைக் கழகங்களில் எடுத்து வைக்கப் பட்டிருக்கின்றன. அவர் ஐந்தரை மணிக்கு வந்து அமர்ந்திருக்கிறார். நான் சிலரது எழுத்தை விரும்பிப் படிக்கின்றவன். எஸ்.இராம கிருஷ்ணன் அவர்கள், வரலாற்றை இதுவரை யாரும் அணுகாத கோணத்தில் செய்தி களைத் தருகிறார். தெரியாத செய்தி களைத் தருகிறார். நான் வரலாற்றைப் பற்றிப் படித்தவன் என்று அனைவரும் சொல்வார்கள். நான் அறியாத, தெரிந்து கொள் ளாத செய்திகளை எஸ்.இராம கிருஷ்ணன் கட்டுரையில் படிக்கின்றேன். இன்றைக்கு இருக்கக்கூடிய எழுத்தாளர்களில் வரலாற்றுப் பதிவுகளை அந்தச் செய்திகளோடு தரக்கூடிய ஒரு தலைசிறந்த எழுத்தாளர் எஸ்.இராம கிருஷ்ணன். அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.
 
தமிழ் இனத்தின் தேசியக் கவிஞர் காசி ஆனந்தன் வந்திருக்கிறார். காவல்துறையில் நான் என்றைக்கும் மதிக்கின்ற உன்னத மான நேர்மையான அதிகாரியாகப் பணியாற்றிய, என் பொதுவாழ்வில் எனக்கும், என் இயக்கத்துக்கும் வெளிச்சம் வரவேண்டும் என்று ஏக்கத்தோடு இருக்கக்கூடிய நட்பால் என்னை மிகவும் பெருமைப்படுத்தியிருக்கிற ஜாபர் அலி அய்யா அவர்கள் வந்து இருக்கிறார். அவர் பேரறிஞர் அண்ணாவின் வார்ப்பு. கல்லூரி மாணவனாக இருந்தபோது, அண்ணாவின் கொள்கையில் ஈடுபாடு கொண்டு அதிலும் தீவிர திராவிட இயக்கக் கொள்கைப் பற்று உடையவர். அவர்கள் இல்லத்தில் ஒரு திருமண வரவேற்பு. அவர் கண்டிப்பாகப் போக வேண்டும்.
 
அருணகிரி அவர்களிடம் சொல்லி விட்டேன் வைகோ, இன்றைய நிகழ்ச்சிக்கு வர முடியாது. குடும்பத்து நிகழ்ச்சி, துணைவி யாருடைய மிக நெருங்கிய உறவினர் என்றார். உங்கள் துணைவியாரிடம் நான் சொன்னேன் என்று சொல்லுங்கள். என் வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. நான் நேசிக்கின்ற உங்களைப் போன்ற நண்பர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறவன் என்றேன். அவர் வந்திருக்கிறார்.
 
வி.ஜி.பி. சந்தோஷம் அவர்கள் இந்தத் தமிழ்ச் சமூகத்துக்கும் தமிழ் மொழிக்கும் செய்கிற சேவை பிறருக்குத் தெரியாது. உலகத்தில் பல நாடுகளில் அவர் சொந்தச் செலவில் திருவள்ளுவர் சிலையை அமைத்து பெரும் புகழைப் பெற்றிருக்கிறார். இப்படி பல துறைகளிலே இருக்கக்கூடிய பெருமக்கள் அனைவரின் பெயர்களையும் சொல்வதற்கு நேரம் போதாது.
 
என் வாழ்க்கையில் நான் என்ன சேர்த்து வைத்திருக்கிறேன் தெரியுமா? நட்புச் செல்வம். கட்சிகளைக் கடந்து மிக உயர்ந்த மனிதர்களின் நல்ல அன்பையும், நட்பையும் சேர்த்து வைத்திருப்பதுதான் நான் சேர்த்து வைத்திருக்கிற பெரும் செல்வம். என்னுடைய நண்பர்கள் அனைவரும் வந்திருக்கிறார்.
 
அடுத்து “என் அண்ணா” நூலை யார் வெளியிடுவது? அண்ணா என்கின்ற நூலை வெளியிடுவதற்கு நான் வேலூர் சிறையில் இருந்து எழுதினேனே, அந்த அண்ணாவின் மனதில் இடம்பெற்றவர்களில் ஒருவராக இருந்து, உலக நாடுகளுக் கெல்லாம் தமிழகத்தில் இப்படி ஒரு பல்கலைக் கழகம் இருக்கிறது என்று அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் இருக்கக்கூடிய பல்கலைக் கழகத்துக்காரர்கள் நேரடியாக வந்து ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, இங்கே படித்தால், அமெரிக்க பல்கலைக் கழகத்தில் படித்த பட்டத்திற்குச் சமமான பணியாற்ற முடியும் என்ற தகுதியைப் பெற்று, சீனாவில் இருந்து, ஜப்பானில் இருந்து காஞ்சி கடிகைக்கு நாலந்தாவில் இருந்து வந்தார்கள் என்று நான் படித்திருக்கிறேன். சீனாவில் இருந்த வந்தார்கள் என்று படித்திருக்கிறேன். இன்றைக்கு உலக நாடுகளில் இருந்து வந்து படிக்கிறார்கள் என்றால், அண்ணாவின் வார்ப்பான ஜி.வி. என்று அழைக்கப்படுகின்ற நம்முடைய ஜி.வி. அவர்களின் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தைச் சொல்லலாம்.
 
எனக்கு அவரை ஏன் மிகவும் பிடிக்கும் என்றால், நாடாளு மன்றத்தில் அறிஞர் அண்ணா அவர்கள், இரா.செழியன் அவர்கள், நாஞ்சில் மனோகரன் அவர்கள், செ.கந்தப்பன் அவர்கள், முரசொலி மாறன் ஆகிய இவர்கள் எல்லாம் ஒவ்வொரு விதத்தில் அங்கு முத்திரை பதித்திருக்கிறார்கள் என்றால், பேச்சிலும், குறுக்கிட்டுக் கேள்வி கேட்பதிலும் எதிராளியின் மீது சொற் கணைகளை வீசு வதிலும் அருமையான பணியை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது செய்தவர் ஜி.வி. அவர்கள். அவரிடம் நான் கேட்டேன் அவசியம் வருகிறேன் என்றார். அவருக்கும் நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.
 
புரட்சிக் கதிர்கள் நூலை யார் வெளியிடுவது? யார் வாங்குவது என்று என்னும்போது, உச்சிதனை முகர்ந்தால், காற்றுக்கென்ன வேலி திரைப்படத்தை எடுத்தவர், வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் த.வெள்ளையன் அவர்களின் உடன்பிறந்த தம்பி, புகழேந்தி தங்கராஜ். இன்றைக்கும் ‘தமிழக அரசியல்’ இதழில் வாரம் வாரம் எழுதுகின்ற கட்டுரையில் இந்த இனத்தினுடைய விம்மலை அதில் பதிவு செய்கிறார். அனைத்து இடங்களுக்கும், அனைத்துப் போராட்டங்களுக்கும் செல்வார். அனைத்து ஈழ விடுதலைக் களங்களுக்கும் செல்வார். விறுப்பு வெறுப்பு இன்றி பணியாற்றுவார். நானும் என் இயக்கமும் செய்திருப்பதை வெளி உலகத்துக்குச் சொன்ன ஒரே மனிதர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள்தான். நாங்கள் சொல்லிக் கொள்ளவில்லை. அப்படிப்பட்ட புகழேந்தி தங்கராஜ் வெளியிட்டால், யார் வாங்குவது? திருமுருகன் காந்தி கோவைக்குப் போக வேண்டும் அதனால் சென்றுவிட்டார். அவரிடம் தம்பி நீங்கள் வாங்குங்கள் என்று நான் சொன்னவுடன் அதிர்ச்சியாகி, அண்ணே என்ன பேசுவது என்றார்.
 
இப்பொழுது ஜெர்மனியில் பிரேமன் நகரத்தில் மக்கள் தீர்ப்பாயத்திற்குப் (Peopels Tribunel) போய் பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறார் திருமுருகன் காந்தி. அந்த மக்கள் தீர்ப்பாயம் 2010 ஜனவரி 14, 15, 16, ஆகிய தேதிகளில் டப்ளினில் கூடியது. டெல்லி உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ராஜேந்திர சச்சார் அதில் ஒரு நீதிமான். அப்பொழுது இலங்கையில் போர்க்குற்றங்கள் நடத்தது என்று ஒரு முடிவுக்கு வந்தார்கள். இப்பொழுது ஜெர்மனி பிரேமன் நகரில் 7,8,9,10, டிசம்பர் 2013 இல் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தில் பல ஆவணங்கள் அங்கே கொடுக்கப்பட்டன. தீர்ப் பாயம் அறிவித்தது, இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் என்று சொல்லவில்லை. இலங்கையில் நடந்தது தமிழ் இனப் படுகொலை என்று. நான் பிரபாகரனை நெஞ்சில் பூசிப்பவன் என்பத னாலே இப்படிச் சொல்கிறார் என்று கணக்குப் போட்டுவிடுவார்கள். நான் சொல்லவில்லை. இது மக்கள் தீர்ப்பாயம் சொன்னது.
 
தமிழக பத்திரிகையாளர்களையும், ஊடகவியலாளர்களையும் நான் மிகவும் மதிப்பவன். வருத்தப்படக் கூடாது. டெல்லி ஊடகங்கள், தொலைக்காட்சிகள் எவ்வளவு வஞ்சகமாக சிங்களவனுக்கு ஆதரவாக, இராஜபக்சேவுக்கு ஆதரவாக நம்மையும், நமது மக்களையும் களங்கப்படுத்தி, கொச்சைப்படுத்தி குழந்தைகள் கொன்று குவிக்கப்பட்ட நேரத்திலே விஷத்தைக் கக்கினார்கள். குழந்தைகளும், பெண்களும் கொல்லப்பட்டபோது நம் மீது நஞ்சை கக்கினார்கள். ஒரு சேனல்கூட ஒருவரி செய்தி போட்டது கிடையாது. நம்ம செய்தி போட வில்லை என்றார்கள். செய்தியே போடாமல் தானே 20 வருடம் வண்டியை ஓட்டியிருக்கிறோம்.
 
அந்தத் தீர்ப்பாயம் தீர்ப்பு கொடுத்தது, நடந்தது இனப்படு கொலை என்று. விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்துவதற்கு முன்பே இனப்படுகொலை நடந்தது. 2009 க்குப் பின்னரும் இனப்படுகொலை தொடர்கிறது என்று சொல்லிவிட்டு, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் இராணுவ ரீதியாக உதவி செய்து இந்த இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தன. இந்தியா இந்த இனப்படுகொலையில் எந்த அளவிற்கு உடந்தையாக இருந்தது என்பதற்கான ஆவணங் களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். விரைவில் அறிக்கை தருவோம் என்றது. இந்தச் செய்தியை ஜெர்மனியில் இருந்து வாங்கி, நான் அறிக்கை கொடுத்தேன். இந்தியாவில் டெல்லியில் எந்த ஊடகமும், எந்தப் பத்திரிகையும் செய்தி போடவில்லையே? அதனால், தம்பியிடம் சொன்னேன், உங்களைப் போன்ற இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்லுங்கள். நாங்கள் பின்னால் நிற்கிறோம். நாங்கள் நண்பகலைத் தாண்டி விட்டோம். இனி நீங்கள் அடுத்த இடத்துக்கு வரவேண்டும். தன்னலம் இல்லாத, பதவி வேட்கை இல்லாத உங்களைப் போன்ற தம்பிகள் வரவேண்டும். ஆகையினால், இந்தப் புத்தகத்தை நீங்கள்தான் வாங்கவேண்டும் என்றேன்.
 
எழுத்தாளர் மதுரா, கலைமகள், கல்கியில் அவரது நாவல்களுக்கு, கதைகளுக்கு, சரித்திர நாவல் களுக்கு முதல் பரிசு பெற்று இருக்கிறார். பல விருதுகள் வாங்கியிருக்கிறார். தலை சிறந்த எழுத்தாளர். அவர் வெல்லும்சொல் நூலை பெற்றுக்கொண்டதற்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
 
சகோதரி முனைவர் பத்மலட்சுமி அவர்கள், தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு ‘நாடாளு மன்றத்தில் வைகோ’ என்ற என்னுடைய நாடாளுமன்ற உரை களை செந்திலதிபன் தொகுத்துத் தந்த நூலில் இருந்து பேச்சுப் போட்டி வைத்தோம். 1219 மாணவ மாணவவிகள், 540 பெண்கள் அனைவரும் படிக்கின்ற மாணவர்கள். மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரியில் இருந்து மாணவர்கள் கலந்துகொண்டனர். அதில் பங்கேற்ற நடுவர்கள் யாரும் கட்சிக்காரர்கள் அல்ல. முன்னாள் கல்லூரி முதல்வர்கள், தமிழ் பேராசிரியர்கள், தமிழறிஞர்கள் என்று வந்தவர்களில் ஒருவர்தான் சகோதரி. அவரின் பங்களிப்பை அறிந்து, அவர் இந்த நூலைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு ‘என் அண்ணா’ நூலை பெற்றுக் கொள்வதற்கு ஒப்புதல் பெற்று வந்தார்கள். அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
 
எல்லாவற்றையும்விட இன்றைக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவருக்கு முக்கிய நிகழ்ச்சி. தொலைபேசியில் அவரிடம் தொடர்புகொண்டு, நீங்கள் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினேன். அந்த நிகழ்ச்சிகளை எல்லாம் இரத்து செய்துவிட்டு வந்திருக்கிறார். இல.கணேசன் அவர்களுக்கு கண் சிகிச்சை செய்து நான்கு நாள்கள் தான் ஆகிறது. அவர் இன்னும் ஒரு வாரத்திற்கு வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்று மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் நம் நிகழ்ச்சிக்காக வந்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்களோடு இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியில் முன்னணியில் இருக்கக் கூடிய மோகன்ராஜூலு வந்திருக்கிறார். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களுக்கும் நன்றி.
 
இந்த நிகழ்ச்சியைத் தொகுத்துத் தந்தாரே, திறமைகள் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? செந்திலதிபன், ஈழவாளேந்தி. அவருக்கு பேச்சு மாதிரி எழுத்து இருக்கும். சங்கொலியில் அற்புத மான கட்டுரைகள் எழுதுவார்கள். என்னிடம் அற்புதமான திறமை சாலிகள் இருக்கிறார்கள். தமிழ் மறவனைப்போல, வந்தியத் தேவனைப்போல, மணிவேந்தனைப் போல அருமையான கட்டுரைகள். வருகிற அரசியல் கட்சி வார ஏடுகளில் பொருட்செறிவும், அடர்த்தியும் துடிப்பும் உள்ள பத்திரிகை சங்கொலி பத்திரிகை என்று ஒரு பெரிய கட்சியின் ஒரு மூத்த தலைவர், மிகவும் தியாகம் செய்த தலைவர் பாராட்டினார். அதைப் போல பெரியார் அண்ணாவை நேசிக்கின்ற பெரும் மனிதர்கள் மத்தியில் எங்கள் செந்திலதிபன் கட்டுரை எழுதுகிறார்.
 
அழகுசுந்தரம் அவருடைய பேச்சைக் கேட்டீர்கள். அதில் ஒரு சதவீதம்தான் பேசியிருக்கிறார். புலவர் செவந்தியப்பனைப்போல, கணேசமூர்த்தியைப்போல, பூமிநாதனைப்போல, அவரும் எங்களோடு ஈழத்தமிழர்களுக்காக வேலூர் சிறையில் இருந்தவர். அவர் வரவேற்புரை ஆற்றினார். அவருக்கும் நன்றி.
 
அருணகிரிநாதன் பேச மாட்டார். நான் கட்டாயப்படுத்தி பேச வைத்தேன். உதவியாளர் என்றால், உதவியாளர் மட்டுமா? அவரிடம் என்ன திறமை இருக்கிறதோ அதை வெளியில் கொண்டு வருவோம். அவர் திறமை வெளியே வரட்டும். அவருடைய மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியை நாங்கள் நடத்தினோம். அவருக்குள்ளே இருக்கின்ற திறமையை வெளியே கொண்டு வந்தோம். என்னுடைய உரைகளை எல்லாம் நூல்களாக்கு வதற்கு இரவு பகலாக வேலை செய்யக்கூடியவர். அவருடைய தந்தையார் பழனிச்சாமி பி.காம்., சங்கரன்கோவில் நகர திமு கழகத்தின் முதல் நகர செயலாளர். பெரியார் தலைமையில் திருமணம் முடித்துக்கொண்டவர். என்னை சங்கரன்கோவிலில் முதன் முதலாக மேடை ஏற்றியவர் அவர்தான். அவர் இங்கே நன்றி சொல்ல வந்தார். அதிகமான செய்திகளை எல்லாம் கூறினார்.
 
குறிப்பாக ஆனந்தவிகடனுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். நான் சிறையைவிட்டு வெளியே வந்தபோது, என்னைப் பாராட்டி ‘அரசியல் அதிசயம்’ என்று ஒரு தலையங்கம் எழுதினார்கள். நான் பிரேம் போட்டு வைத்து இருக்கிறேன். அருங்காட்சி யகத்தில் மட்டும் காணக்கூடிய ஒன்றை, அரசியல் அரங்கத்தில் பார்க்கிறோம் என்று முழுப்பக்க தலையங்கத்திலும் என்னை பாராட்டி எழுதி இருந்தார்கள். விகடன் நண்பர்களிடம் நான் கேட்டேன், அவர்களின் தலைமை ஆசிரியர், பெரியவர் அனைவரிடம் கருத்துக் கேட்டுள்ளார்.
 
அதற்கு ஒருவர்கூட மறுப்புச் சொல்லாமல், ஏகோபித்து ஒருமனதாக எழுதப்பட்ட தலையங்கம். அதுமட்டுமல்ல தமிழுக்குச் சேவை செய்தது உ.வே.சா. அவர் இல்லை யென்றால், சிலப்பதி காரம், சங்க இலக்கிய நூல்கள் பல இல்லை. அந்த ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா.வின் ‘என் சரித்திரம்’ நூலை விகடன் பிரசுரம் வெளி யிட்டபோது, என்னை மட்டும் அணிந்துரை எழுதச் சொன்னார்கள். எவ்வளவு பெரிய அறிஞர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். நான் தமிழ்த் தாத்தா உ.வே.சா. வின் என் சரித்திரம் நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறேன். ஆனந்த விகடன்தான் அந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்தது. அந்த விகடன் பிரசுரத்தாருக்கு, பதிப் பகத்தாருக்கு நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
‘வெல்லும் சொல்’ என்பது, பொன்னமராவதியில் ‘நெஞ்சை அள்ளும் சிலம்பு’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை. தஞ்சையில் பூண்டி வாண்டையார் தலைமையில் ‘பொன்னியின் செல்வனை’ப் பற்றி ஆற்றிய உரை. சென்னையில் கல்கி இராஜேந்திரன் குடும்பத் தாரோடு முன்னால் அமர்ந்திருக்க, ‘சிவகாமியின் சபதம்’ பற்றி ஆற்றிய உரை, ஈரோடு புத்தகத் திருவிழாவில், ‘எழுத்து எனும் கருவறை’ என்று ஆற்றிய உரை, சென்னை புத்தகத் திருவிழாவில், ‘சொல்லாற்றல்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை.
 
‘வரலாறு சந்தித்த வழக்குகள்’ என்று தஞ்சை வழக்கறிஞர் மன்றத்தில் ஆற்றிய உரை. தென்காசியில் இஸ்லாமிய இலக்கிய நிறுவன அமைப்பு நடத்திய விழாவில், கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்.இராமகிருஷ்ணன், பிரபஞ்சன் எல்லாம் வந்திருந்தார்கள். அங்கு ‘இஸ்லாமிய இலக்கியங்கள்’ என்று நான் ஆற்றிய உரை. இதுபோன்ற உரைகளைத் தொகுத்து, ‘வெல்லும் சொல்’ என்ற தலைப்பில் அதை நூலாக்க வேண்டும் என்று விரும்பினேன்.
 
நான் நேசிக்கின்ற பிரபாகரன் மிகவும் நேசித்த, அதனால் நான் மிகவும் நேசிக்கின்ற இந்திய நாட்டுத் தலைவர்களில் நான் மிகவும் உயர்வான நினைக்கின்ற நேதாஜியைப் பற்றிப் பல புத்தகங்கள் வந்திருக்கிறது. எந்தெந்த புத்தகங்களில் இருந்து குறிப்பு எடுத்திருக்கிறேன் என்று இதில் சொல்லியிருக்கிறேன். ‘நெஞ்சில் நிறைந்த நேதாஜி’ என்று நான் சிறையில் இருந்து எழுதினேன். நேதாஜியின் வரலாற்றைப் படிக்கும்போதே கண்ணீர் வரும். நேதாஜி யினுடைய அண்ணன் மகன்தான் சுசில் குமார் போஸ் அவரும் அவருடைய துணைவியார் எம்.பி.யாக திரிணாமுல் காங்கிரசியில் இருந்த டாக்டர் கிருஷ்ணா இருவரும் என்னுடைய வீட்டிற்கு இருமுறை வந்து உணவு அருந்தியிருக் கிறார்கள். அவருடைய இளைய மகன் கலிஃபோர்னியா பல்கலைக் கழத்தில் இருந்துகொண்டு ‘Tamil National Question’ என்று தமிழ் ஈழத்தைப் பற்றி அருமையான புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்.
 
“சரியாக இருக்கிறவரை ஒன்றாகப் போ, சரியில்லை என்றால், வேறு பாதையைத் தேடு” என்று ஆபிரகாம் லிங்கன் சொன்னதை நான் புத்தகத்தில் எழுதியிருக் கிறேன். ஆகவே, ஆபிரகாம் லிங்கன், உமர் முக்தார், மாவீரன் கரிபால்டி பற்றிச் சொல்லியிருக் கிறேன். அதைப்போல நான் கல்லூரி புகுமுக வகுப்புக்குப் போனபோது, எனது பேராசிரியர் டிமல் அவர்கள், அந்தத் தெர்மாப்பிளே யுத்தகள காட்சியை வர்ணித்தபோது, எப்படி சின்ன வயதில் 13ஆம் போர்ச் சதுக்கம், அபிமன்யுவைப் படித்தபோது மனதில் பட்டபோது, அந்த தெர்மாப்பிளே யுத்த கள காட்சி மனதிலே பதிந்தது அல்லவா? அது 300 வீரர்கள் என்ற படமாக வந்தது. அது உண்மையாக நடந்த சம்பவம்.
 
ஸ்பார்ட்டா வீரர்களைப் பற்றி 1990 ஆம் வருடம் பிப்ரவரி 11 ஆம் தேதி திருச்சி மாநாட்டில் ‘உலகை குலுக்கிய புரட்சிகள்’ என்ற தலைப்பில் நான் பேசினேன். நான் பேசுவதற்கு ஆரம்பிக்கும் போது மதியம் மணி 1.50. எல்லோரும் உணவுக்குப் போய்விட்டார்கள். ஆனால் அந்த மாநாட்டில் இந்த உரை இலட்சக் கணக்கானவர் களைக் கவர்ந்தது. அன்றைக்குத் தான் நெல்சன் மண்டேலா விடுதலை பெறுகிறார். நான் இராணுவ மைதானத்தில் நின்று பேசுகிறேன். மின்னல் வேகத்தில் துப்பாக்கிக் குழாய்களிலே இருந்து பாய்ந்து வருகின்ற ரவைகள் ஒலிக்கின்ற சத்தம் எதிரொலிக்கக் கூடிய இடத்திலிருந்து பேசுகிறேன் என்று பேசினேன். அந்த மாநாட்டில் ஆற்றிய உரைதான் ‘உலகை குலுக்கிய புரட்சிகள்’ இந்த உரையும் சேர்ந்துதான் ‘புரட்சி கதிர்கள்’ என்ற என்ற நூல்.
 
அறிஞர் அண்ணாவைப் பற்றி நான் ஒன்றும் பெரிதாக எழுதிவிட வில்லை. அறிஞர் அண்ணா எழுதிய கட்டுரைகள், நாடகங்கள், நாவல்கள், சிறுகதைகள், அவர் ஆற்றிய உரைகள், சட்ட மன்றத்தில் ஆற்றிய உரைகள், மாநிலங்கள் அவையில் ஆற்றிய உரைகள் இவற்றில் எதுவெல்லாம் வருங்கால தலைமுறைக்குத் தெரிய வேண்டுமோ அவற்றின் சாரத்தையும் நான் ஏழு வார காலம் வேலூர் மத்திய சிறையில் இருந்து ‘ஒளி மலர; இருள் அகல’ என்ற தலைப்பில் ‘சங்கொலியில்’ எழுதினேன்.
 
அது வருங்கால தலைமுறைக்குப் போய்ச் சேரவேண்டும் என்பத னால் விகடன் பிரசுரத்தார் அதை நூலாக வெளியிட முன்வந்தார்கள். மூன்று நூல்களும் இன்று வெளியிடப்பட்டு இருக்கின்றன.
 
நான் கடந்த பத்து நாட்களில் படித்த இரண்டு மூன்று நூல்களில் இருந்து ஒன்றிரண்டு செய்தி களைச் சொல்ல விரும்புகிறேன். பொதுவாக இந்த மாதிரி நிகழ்ச்சி களில் பேசுவதற்கு எனக்குப் பேச்சு வராது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் மகிழ்ச்சியாக இருந்தால் பேச்சு நல்ல முறையில் அமையாது. சோதனைகளும் துன்பங்களும் சேர்ந்திருந்தால் தான் பேச்சு நன்றாக அமையும். இன்று நான் அனைவருக்கும் நன்றி சொல்ல வந்திருக்கிறேன். இன்று நான் உங்கள் பேச்சைக் கேட்க வேண்டும் என்று வந்தேன். அனைவரும் மிகவும் நிறைவாகப் பேசினீர்கள்.
 
 
சிற்பி இன்னும் பேச மாட்டாரா என்று நான் ஏங்கிக் கொண்டு இருந்தேன். சாகியத்ய அகாடமி விருது பெற்று பெருமை பெற்றவர். அவர் தலைசிறந்த கவிஞர். தலைசிறந்த எழுத்தாளர். நான் எழுதியதில் எனக்கே தோன்றாத செய்தியை அவர் சொல்கிறார். அது அறிஞர்களுக் காக பேசுகிற பேச்சு. சிந்தனை யாளர்களுக்குப் பேசுகிற பேச்சு. உயர்ந்த எண்ணம் கொண்டவர் களுக்காகப் பேசுகிற பேச்சு. இலட்சியவாதிகளுக்கான பேச்சு அது. இலட்சியவாதிகளின் பாடி வீட்டில் பேசப்பட வேண்டிய பேச்சு. இதிலிருந்து புரிந்தகொள் வீர்கள். கட்டுப்பாடு உள்ள சமூகம் தான் நாட்டிலே முன்னேற்றம் அடைய முடியும்.
 
இந்த மாதம் முத்துக்குமார் தீக்குளித்து இறந்த மாதம். நானும், புகழேந்தி தங்கராசும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம். அதில் தமிழருவி மணியன் அவர்கள் பேசுவதற்கு வருகிறார். நேரம் 10 மணிக்கு உள்ளாக பேசி முடிக்க வேண்டும் என்றனர் காவல்துறையினர். பேசும்போது நீங்கள் நேரத்தை குறைக்க வேண்டும் என்று சொல்லவில்லை, பேசுவதற்கு வந்தார்கள். நேரம் அதிகமாகி விட்டது. நீங்கள் அனைவரும் வைகோ பேச்சை கேட்பதற்கு ஆவலாக இருக்கிறீர்கள் வணக்கம் என்று சொல்லிவிட்டு, உட்கார்ந்து விட்டார்கள். நான் எழுந்து ஒலி பெருக்கி முன் சென்று, நீங்கள் பேச வேண்டும். நீங்கள் பேசி முடிக்கும் வரை நான் உட்கார்ந்திருப்பேன். இப்பொழுது தமிழருவி மணியன் அவர்கள் பேசுவார்கள் என்று சொன்னேன். அவர் அதை எதிர்பார்க்கவில்லை. அவர் மிகவும் சுயமரியாதை, தன்மானம் உள்ளவர். அவர் ஒரு தலைசிறந்த சிந்தனையாளர். ஆகவே அவரைப் பேசச் சொன்னேன்.
 
இந்த நிகழ்ச்சியில் எங்கள் அவைத் தலைவர், எங்கள் பொருளாளர், எங்கள் துணைப் பொதுச் செயலாளர்கள், இயக்க முன்னோடி கள் அனைவரும் வந்திருக் கிறார்கள்.
 
சில நாட்களாக என் மனதை பாதித்த இரண்டு மூன்று நூல்களைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன். நான் மிகவும் மன நெகிழ்வோடு இருக்கிறேன். ‘அல்கெமிஸ்ட்’ என்ற புத்தகம் பாலோ கோகிலோ என்பவர் எழுதியிருக்கின்ற புத்தகம். அது மிகவும் பிரபலமான புத்தகம். அந்தப் புத்தகத்தை அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பில்க் கிளின்டன் படிப்பதைப் போல ஒரு புகைப்படம் உலக நாடுகளில் உள்ள பத்திரிகைகளில் எல்லாம் வந்தது. ஜூலிய ராபர்ட்ஸ் என்கின்ற புகழ்மிக்க நடிகை தன் வாழ்நாளில் தான் மிக விரும்பிப் படித்தப் புத்தகம் என்று அல்கெமிஸ்ட் புத்தகத்தைச் சொல்கிறார். இந்தப் புத்தகம் மூன்று கோடிப் பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. அறுபத்தியொரு மொழிகளில் இது மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது.
 
ஸ்பெயின் நாட்டில் இருக்கக்கூடிய ஆடு மேய்க்கின்ற சாண்டியாகோ என்கின்ற சிறுவன் ஆடு மேய்த்துக் கொண்டு வருகிறான். அப்படித்தான் தொடங்குகிறது இந்தக் கதை. அதில் என் மனதுக்கு மிகவும் பிடித்த கருத்து, (The secret of success in life though is to falls seven times have to getup eight times) நீ ஏழு முறை தோற்று கீழே விழுந்தாலும், ஏழு முறை எழுவது மட்டுமல்ல, எட்டாவது முறையும் எழுகையில் தான் உன் வாழ்க்கையின் வெற்றியின் இரகசியம் இருக்கிறது.
 
பிரமிடுகளுக்கு பக்கத்தில் பெரிய புதையல் கிடைக்கும் என்று மிகவும் துன்பங்களை அனுபவித்து விட்டுப் போகிறான். அவன் தோண்டிக்கொண்டு இருக்கும் போது அவனை அடித்து உதைத்து கொல்லப் போகின்ற நேரத்தில் கொல்லாமல், கட்டிப்போட்டு விட்டு, உன்னை கொலை செய்ய வில்லை போ என்று சொல்லி விட்டு, சிறிது தூரம் சென்று திரும்பி வந்து, என்னிடம் இப்படித் தான் ஒருவன் சொன்னான், ஸ்பெயின் நாட்டில் ஒரு பழமையான தேவாலயத்திற்குப் பக்கத்தில் உடைந்து நொறுங்கிய இடங்களுக்குக் கீழே ஒரு பெரிய புதையல் இருக்கிறது என்று ஒருவன் சொன்னான். நான் அப்படிப் போய் தேடுகின்ற முட்டாள்தனமான வேலையைச் செய்யவில்லை. உன்னைப்போல் தேடிக்கொண்டு வரவில்லை என்று சொல்லிவிட்டுப் போய்விடு கிறான். இதுதான் அந்த நாவலின் கிளைமாக்ஸ். அவனைக் கொல்ல வில்லை. வந்துவிடுகிறான். இவன் முதல் அத்தியாயத்தில் ஆடு மேய்த்துக்கொண்டு, உடைந்து நொறுங்கியிருந்த தேவாலயத்தின் பக்கத்தில் போய் படுத்துக் கிடந்தானே, அந்த இடத்தைச் சொல்கிறான். இந்தப் புத்தகம் மூன்றுகோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன.
 
இதேபோன்று என் மனதைப் பாதித்த இன்னொரு புத்தகம், ‘ஆணிபிராங்’. ஜெர்மனியில் யூத குடும்பத்தில் பிறந்த ஒரு சின்ன பெண் தாய் தந்தைரோடு ஜெர்மனியை விட்டு வெளியேறி, நெதர்லாந்தில் ஹாலந்து நாட்டிலே அம்ஸ்ரடாங் நகரத்தில் ஒரு நல்ல வளமான வசதியான வாழ்வு நடத்துகிறார்கள். அப்போது ஸ்வஸ்திக் கொடி உயர்ந்துவிட்டது. ஹிட்லர் சான்சலராகிவிட்டான். அடால்ப் ஹிட்லருடைய ஆட்சி நடக்கிறது. இரண்டாம் உலகப்போர் மூண்டு விட்டது. 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். 1942 ஜூன் இறுதியில் அம்ஸ்ரடாமில் இந்தப் பெண் ஆணிபிராங்க்கு 12 வயது. யூதர்கள் குறி வைத்து வரிசை யாகக் கொல்லப்படுகிறார்கள். இவளது தந்தைக்கு விசாரணைக்கு அழைப்பு வந்து விட்டது. குடும்பத்தோடு கொன்றுவிடுவார்கள் என்று அதிகாலை நேரத்தில் அந்தக் குடும்பம் வீட்டை விட்டு வெளியேறுகிறது. வெளியேறி ஒரு பெரிய பண்டக சாலையில் பதுங்கி வாழ்வதற்குரிய அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு இந்தக் குடும்பத்தில் உள்ளவர் களும், இன்னொரு குடும்பத்தில் உள்ளவர்களும் மொத்தம் 50 பேர் அங்கே போய் இருக்கிறார்கள். 1944 ஆம் வருடம் டைரிக்கு கிட்டி என்று பெயர் வைக்கிறாள். தினமும் டைரி எழுதுவாள். ஒருவாரம் உன்னை நான் பார்க்க முடியவில்லை. பேச முடிய வில்லை என்று அதற்கு வருத்தம் தெரிவிப்பாள்.
 
1944 ஆம் வருடம் ஜனவரியில், ஹாலந்து நாட்டின் Dutch Government in Exide அங்கே கிட்லருடைய கொடி பறக்கிறது. எக்சைடு பிரெஞ்சு நாட்டின் உண்மையான அரசு என்று சொல்வதைப்போல, ஹாலந்து நாட்டின் டச்சு அரசாங்கத் தினுடைய அமைச்சர் என்று அங்கே இருந்துகொண்டு ஒரு வேண்டுகோள் விடுகிறாள். இவர்கள் பதுங்கி இருக்கின்ற இடத்தில் இரவு நேரத்தில் ரேடியோ கேட்கிறார்கள். அப்படி ரேடியோ ஒலிபரப்பு கேட்கும் போது, அந்த அமைச்சர் சொல்கிறார், இந்த யுத்தத்துக்குப் பிறகு நாஜிகள் தோற்கடிக்கப் படுவார்கள். இழைக்கப்பட்ட கொடுமைகள், அனுபவித்த துன்பங்கள் குறித்து ஆவணங்கள், நாட்குறிப்புகள் எதுவாக இருந்தாலும் நீங்கள் எங்களிடம் சமர்ப்பிக்கலாம் என்று வெளி நாட்டில் இருந்துகொண்டு அந்த அமைச்சர் வானொலியில் நாங்கள் தான் உண்மையான ஹாலந்து அரசாங்கம் என்று அவர் சொல்வதை இந்தப் பெண் கேட்கிறாள். எழுதியிருக்கின்ற நாட்குறிப்பை சில இடங்களில் திருத்துகிறாள். 1944 ஜூலை மாதத்தில் ஹிட்லரின் நாஜி படைகள் கைது செய்கிறது.
 
அங்கிருந்து கொடூரமான வதை முகாம்களுக்கு கொண்டு போகிறார்கள். ஆஸ்விஸ் கான்சன்ட்ரேசன் கேம்புக்குக் கொண்டு செல்கிறார்கள். அங்கு கொடிய நோயினால் அதிகம்பேர் இறந்துபோகிறார்கள். அதில் அந்தப் பெண் ஆணிபிராங்கும் இறந்து போய்விட்டாள். அந்த முகாமுக்குள் நுழையும்போது, இந்த நாட்குறிப்பை உடன் இருக்கக்கூடிய ஒரு பெண் மிகவும் சாமர்த்தியமாக பத்திரமாக மறைத்து வைத்துவிட்டாள். இந்த நாட்குறிப்பு வெளியே வந்து, ஜெனிவின் டைரி என்று சொல்லி அரசு வெளியிட்டது. 1958 இல் திரைப்படமாகவும் வந்திருக்கிறது.
 
அன்று எழுதிய இந்த நாட்குறிப்பு எப்படி ஆவணமாக்கப்பட்டதோ, ஹிட்லரின் ஒரே ஒரு படை வீரன் புறாவை வைத்திருந்த ரஷ்ய நாட்டுக் காரனையும், அவர் வைத்திருந்த புறாவையும் சுட்டுக் கொன்றான். இந்த ஒரு ஆவண புகைப்படத்தை நூரம் பெர்க் ட்ரயலில் கொண்டுவந்து கொடுத் தார்கள். ஹிட்லரின் தளபதிகள் நாஜி படைகளுக்கு எதிராக. அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த ஆவணங்கள் எல்லாம் மறையாது.
 
இதுபோன்று கொடுமைகளை ஈழத்தில் குழந்தைகள், சின்னஞ் சிறுவர்கள் என்று மக்கள் அனுபவித்தார்களே அதற்குரிய ஆவணங்கள் எல்லாம் திரட்டப்பட வேண்டும். இந்த ஆணிபிராங்கின் புத்தகத்தைப் படித்தபொழுது என் மனதில் அதுதான் ஏற்பட்டது.
 
“Conversation with myself” என்ற நெல்சன் மண்டேலாவின் புத்தகம். Long walk to freedom என்ற புத்தகத்தை நான் இரண்டுமுறை படித்திருக்கிறேன். தேவநேயப்பாவாணருடைய நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்கு 2002 இல் சிகாகோவுக்குச் சென்றபோதுதான் Long walk to freedom என்ற புத்தகத்தை விமானத்தில் படித்துக்கொண்டு சென்றேன். முழுமையாக படித்தேன். திரும்ப வரும்பொழுதும் படித்தேன். வந்தவுடன் நேராக வேலூர் சிறைச்சாலைக்குச் சென்று விட்டேன். Conversation with myself என்பது மிகவும் அற்புதமான புத்தகம். அதன்பிறகு இப்பொழுது இரண்டு நாட்களுக்கு முன்புதான் படித்தேன். அதில் மரண தண்டனை விதிக்கப்படும் நிரபராதிகளும் தூக்குத் தண்டனைக்கு ஆளாவார்கள். விக்டோரியா மகாராணியினுடைய அரசு காலத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. உலகம் முழுவதும் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இவர்கள் குற்ற வாளிகள் அல்ல, இவர்களுக்கு மரண தண்டனை கொடியது என்று மனித உரிமை காவலர் களால் உலகம் முழுவதும் எதிர்ப்புக்குரல் எழுந்ததனால், மரண தண்டனை குறைக்கப் பட்டு, ஒன்பது பேரும் நாடு கடத்தப்பட்டார்கள். மரண தண்டனை நிறுத்தப்பட்டது.
 
விந்தைக்கும் ஆச்சரியத்துக்கும் உரிய செய்தி என்னவென்றால், இந்த ஒன்பது பேரில் ஒருவர் ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஆனார். இன்னொருவர் ஆஸ்திரேலிய நாட்டின் அட்டார்னி ஜெனரல் ஆனார். இன்னொருவர் அமெரிக்க இராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் ஆனார். மற்றொருவர் அமெரிக்க இராணுவத்தின் இன்னொரு பிரிகேடியர் ஜெனரல் ஆனார். இன்னொருவெர் அமெரிக்க நாட்டினுடைய மாண்டனா மாநிலத்தின் கவர்னர் ஜெனரல் ஆனார். இன்னொருவர் கனடா நாட்டின் விவசாய அமைச்சர் ஆனார். இன்னொருவர் கனடா நாட்டின் அட்டர்னி ஜெனரல் ஆனார். இன்னொருவர் நியூயார்க் நகரத்தின் புகழ்மிக்க அரசியல்வாதி ஆனார். நெல்சன் மண்டேலா 1969 இல் ரேபான் ஹைலேண்ட் சிறையில் இருந்து எழுதும்போது இதைக் குறிப்பிடுகிறார்.
 
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒன்பது பேரும் உலகத்தின் உயர்ந்த பதவிகளுக்கு வந்தார்கள். அப்பொழுது சொல்கிறார், நான் தொழுநோயாளிகள் அடைக்கப் பட்டிருந்த லோபஸ் காலனியாக இருந்த ரோபன் சிறைச்சாலையில் இப்பொழுது இருக்கிறேன். I live of the citizen of the heals கடல் அலைகளினுடைய பிரஜையாக இங்கே இருக்கிறேன். நெல்சன் மண்டேலா தன் வாழ்க்கையில் வால்டர் சுசிலோ அவருக்கு மானசீகமாக வழிகாட்டிய தலைவர். 1944 இல் அவருக்கு முதல் திருமணம் நடைபெற்றது. எல்.வி.மேர்ஸ் எனும் சுசில்வில் உறவு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். முழுக்க ஆப்பிரிக்க மக்களின் விடு தலைக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காலம். முதல் மனைவிக்கு நான்கு குழந்தைகள். மூத்த மகன் மெடிபா டெம்பிக்கல், மெடிபா என்பது அவர்களது குடும்பப் பெயர். மண்டேலா வையும் மெடிபா என்றுதான் சொல்வார்கள். இவர் விடுதலை இயக்கத்தில் இருந்த தனால், மனவேறுபாடு ஏற்பட்டு திருமணம் முறிந்துவிட்டது. இவர் சிறையில் இருக்கிறார். 1967 செப்டம்பர் 9 இல் மண்டேலாவின் தாயார் நெடுந்தொலைவு பயணம் செய்து வந்து வருடத்துக்கு ஒருமுறை வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார். இத்தனை கடிதங்கள் தான், மூன்று மாதத்திற்கு ஒருமுறைதான் நேர்காணல். தாயார் வந்து பார்த்துவிட்டுச் சென்றபிறகு, தளர்ந்த நடையாக அம்மா போறாங்களே, இதுவே கடைசி சந்திப்பாக இருக்குமோ? அதற்கு அடுத்த வருடமே அவருடைய தாயார் இறந்து விட்டார். தாமதமாகச் செய்தி வருகிறது. என் தாயின் கல்லறையில் வணக்கம் செலுத்த பரோல் கொடுக்க வாய்ப்புக் கொடுங்கள் என்று நீதித்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதுகிறார். அதற்கு அவர்கள் பதில்கூட அனுப்பவில்லை.
 
இதன் பிறகு 1968 ஆம் வருடம் ஜூலை மாதம் 23 ஆம் தேதி பகல் 2.30 மணிக்கு சுண்ணாம்பு கல்குவாரியில் சம்மட்டி எடுத்து உடைத்துவிட்டு, நல்ல நெருப்பு வெய்யில் நேரத்தில் அவருடைய செல்லுக்கு வருகிறார் மண்டேலா. ஜூலை 16 ஆம் தேதி அன்று அவருடைய மூத்த மகன் தந்தை மீது பாசமாக இருக்கக்கூடிய  அற்புதமான இளைஞன். அவர் கார் விபத்தில் இறந்துபோனார். 2.30 மணிக்கு அவர் அந்த செல்லுக்குள் செல்கிறபோது அந்தச் செய்தியைச் சொல்கிறார்கள். அவர் எழுதுகிறார், My Heart seemed to suddenly stop brething and the warm blood which was flowing freely in my wains for the last 51 years frows in to eyes என் இதயம் திடீரென்று துடிப்பை நிறுத்திவிட்டதைப்போல நான் உணர்ந்தேன். 51 ஆண்டுகளாக என்னுடைய நரம்புகளில் சுதந்திரமாக ஓடிக்கொண்டிருந்த அந்த இரத்தம் பனியாக உறைந்து விட்டதைப்போல உணர்ந்தேன். அதற்குப் பிறகு அவர் சொல்கிறார், எவ்வளவோ துன்பங்களும் துயரங்களும் வரலாம். எந்தச் சூழ்நிலையிலும், நம் இலட்சியத்தை கொள்கை உறுதியை நாம் விட்டுவிடக் கூடாது. அப்பொழுது அந்தக் கேள்வி வருகிறது. உன் குடும்பம், உன் மனைவி, உன் மக்கள், உன் உறவுகள் அவர்களை எல்லாம் பாதுகாக்காமல் நீ நாட்டுக்காக என்ன செய்துவிடப் போகிறாய்? என்று.
 
அதற்கு அவர் பதில் சொல்கிறார், கோடிக்கணக்கான மக்களுக்காக அவர்களை துன்பத்திலிருந்து விடுவிப்பதற்காக போராடுகிற போது, மனைவி, மக்கள், குழந்தைகள் அவர்களுக்கு ஏற்படுகிற துன்பத்தைத் தடுத்து அதற்காக மட்டும் கடமையாற்ற வேண்டும் என்று நான் இருக்க முடியாது. i am ...... convince thats floods of personal disaster would never turn a determent revoualessnary தனிப்பட்ட முறையில் வந்து மோதுகிற துன்ப வெள்ளங்கள் உறுதியான கொள்கையாளனை, உறுதியான புரட்சியாளனை இந்தத் துன்ப வெள்ளத்தில் மூழ்கடிக்க முடியாது. இப்படித்தான் அவர் வாழ்கிறார்.
 
என்னுடைய அன்புத் தோழர்களே, நெல்சன் மண்டேலா பின்னர் அதிபராக இருந்தார். பின்னி மண்டேலாவின் இன்னொரு மகன் மருத்துவமனையில் இறந்து போனான். இலட்சக்கணக்கான மக்கள் இவருக்காக கண்ணீர் விட்டார்கள். வேதனைப் பட்டார்கள். மருத்துவமனைக்கு முன்பு பெரும் கூட்டம் திரண்டிருந்தது. அதிபர் நெல்சன் மண்டேலா வந்தார். அனைவரும் கண்ணீரும் வேதனையுமாக இருந்தபொழுது அவர் ஒலிபெருக்கியைக் கொண்டுவரச் சொல்லி அமைத்து அதில் பேசினார். என்னுடைய மகன் எய்ட்ஸ் நோயால் இறந்து போனான். என் நாட்டு இளைஞர் களுக்கு அவன் ஒரு பாடமாக இருக்கட்டும். அவன் எய்ட்ஸ் நோயால்தான் இறந்தான் என்பது யாருக்கும் தெரியாது. வாழ்க்கையில் எவ்வளவு துன்ப முட்கள் தோழர்களே...
 
இதற்கு முன்பு நடந்த உலக கோப்பை கால்பந்துப் போட்டி மண்டேலாவின் விருப்பப்படி தென்னாப்பிரிக்காவில் நடந்தது. அவர் விளையாட்டுப் பிரியர். அவர் ஆயுதம் ஏந்தி பயிற்சி பெற்றவர்.
 
நான் கால்பந்து இரசிகன். யுரோப்பியன் கோப்பை கால்பந்து போட்டி, உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்தால் நான் விடிய விடிய பார்ப்பவன். உலக கோப்பை கால்பந்துபோட்டி தென்னாப்பிரிக்காவில் நடந்த பொழுது, நான் தென்னாப்பிரிக்கா செல்ல ஆசைப்பட்டு, பணச் சீட்டுக் கெல்லாம் ஏற்பாடு செய்தேன். அதன்பின் நான் போகவில்லை.
 
அந்த உலக கோப்பை தொடக்க நிகழ்ச்சி காலையில் நடக்கப் போகிறது. காலையில் 11 மணிக்கு நெல்சன் மண்டேலாவின் 9 வயது பேத்தி, தாத்தாவோடு சென்று கால்பந்து போட்டியை பார்க்க வேண்டும் என்று நினைத்த அந்தப் பெண் ஒரு விபத்தில் இறந்துவிட்டாள். மனம் உடைந்தவராக இருந்த அவர் பத்து நிமிடம் வந்து பேத்தியின் உடலைப் பார்த்துவிட்டுச் சென்று விட்டார். நான் நினைப்பேன். இந்த மனிதனின் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள். தாய் இறந்த போது, மகன் இறந்தபோது அவனுடைய உயிரற்ற சடலத்தை பார்க்க முடியாவிட்டாலும்கூட, அவன் புதைக்கப்பட்ட இடத்தில் பூ வைத்துவிட்டு வருவதற்கு எனக்கு அனுமதி கொடுங்கள் என்றார்.
 
1969 செப்டம்பரில் நீதித்துறை அமைச்சருக்கு அவர் எழுதுகிற கடிதத்தில் அவர் சொல்கிறார், Whend a tarcherous regime as close the all the channels of the constitutional struggle the armed struggled is the invitable option சட்ட ரீதியான போராட்டங் களுக்கு எல்லாம் வழியில்லாத அளவுக்கு ஒரு அரசு கொடுமை செய்யுமானால், அழிவைச் செய்யு மானால், ஆயுதம் ஏந்தி போராடுவது ஒன்றுதான் அதற்கு சரியான தீர்வாக இருக்க முடியும். இதை யார் சொல்வது?
 
உலகம் போற்றுகின்ற நெல்சன் மண்டேலா. இன்னும் சொல்கிறார், இதற்கு வேறு வழியே இருக்க முடியாது. the should not be any other option இவற்றையெல்லாம் புத்தகத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறார்.
 
மாலதி என்கின்ற ஈழத்துக் குடும்பத்தில் பிறந்த தமிழ் பெண், நியூசிலாந்தில் மனித உரிமை களுக்காக பணியாற்றிவிட்டு. மீண்டும்  2002 இல் வந்து  North East seccretariat and Human Resource என்ற அந்த அமைப்பில் கர்ணரத்தின பாதிரியார் தலைவராக இருந்த காலத்தில் இந்த சகோதரி செயலாளராக இருந்து 2002 இல் இருந்து 2009 முள்ளிவாய்க்கால் முடிகிற வரை அங்கே இருக்கிறாள்.
 
எனது நாட்டில் ஒரு துளி நேரம் (A Bleeting minit in my Country) என்ற நூலை எழுதியிருக்கிறாள். அந்தப் புத்தகத்தைப் படியுங்கள். ஆங்கிலத்திலும் படியுங்கள். யாருக்காவது நீங்கள் அன்பளிப்பு கொடுக்க நினைத்தால், அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள்.
 
அதில் விருப்பு வெறுப்பு இல்லாமல் செய்திகளை பதிவு செய்திருக்கிறார். உலகம் ஈழத் தமிழர்கள் மீது, விடுதலைப் புலிகள் மீது வைக்கின்ற அத்தனை கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது. அவர்கள் சிறுவர் களை படையில் சேர்த்தவர்கள் என்ற குற்றச் சாட்டை யுனிசெப் வைத்ததே அது எவ்வளவு பெரிய மோசடி என்று ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். இன்னும் சொல்லப் போனால், அவர்களை வற்புறுத்தி அழைக்கவில்லை.
 
ஒவ்வொரு வீட்டுப் பிள்ளையும் தன் தகப்பன் இறந்தபோதும், அண்ணன் இறந்த போதும், தன் இறந்தபோதும், தன் சகோதரி கற்பழித்துக் கொல்லப் பட்டாள் என்றகிறபோது அவர் களாகவே தேடிச் சென்று சேர்ந்தார்கள். இது ஒரு குற்றச் சாட்டாக எழுந்ததால், அவர்கள் அனைவரையும் வீடுகளுக்கு அனுப்பினார்கள். திரும்பவும் ஓடிவந்தார்கள் அவர்கள். விடுதலைப்புலிகளின் ஒன்றிரண்டு குறைகளையும் சொல்லி எழுதியிருக்கிறார்கள். இந்த புத்தகம் எல்லோரும் படிக்க வேண்டிய ஒன்று. இந்த ஐந்தாண்டு காலத்தில் அவர் களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை எழுதியிருக்கிறார்கள்.
 
அந்தப் பெண் முள்ளிவாய்க் காலில் மாணிக் பார்ம்மில் அடைக்கப்பட்டு, அதன்பிறகு எப்படியே நியூசிலாந்து சென்றிருக்கிறாள். இந்த நூலில் இவ்வளவு கொடுமைகளும் நடந்திருக்கின்றன இந்த இனத்துக்கு என்று நான் நினைத்தேன்.
 
நம் மீது பெரும் அன்பைப் பெற்றிருக்கின்ற பெருமக்கள் இங்கே வந்திருக்கிறார்கள். பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். பெரிய எழுத் தாளர்கள் வந்திருக்கிறார்கள். பல்துறை விற்பன்னர்கள் வந்திருக் கிறார்கள். சமூக நோக்கத்தோடு அமைப்பு நடத்தக்கூடியவர்கள் வந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் நிகழ்ச்சிக்கு வந்து இவ்வளவு நேரம் அமர்ந்து அமைதியாகக் கேட்டதற்கு நன்றி.
 
ஒரு ஒரு செய்தி, மாமன்னர் பூலித்தேவன் சிலையைத் திறந்து வைத்துவிட்டு, நான் சென்னைக்கு வரும்பொழுது இரயில் மிகவும் காலதாமதம். அப்பொழுது அலைபேசி எல்லாம் இல்லை. பத்தரை மணிக்கு நான் வீட்டுக்கு போகும்போது என் துணைவியார் வாசலில் வந்து கவலையோடு நின்றிருந்தார். பிள்ளைகள் எல்லாம் படிக்கச் சென்றிருந்தார்கள்.
 
காயப்பட்ட புலிகளை வீட்டில் வைத்திருந்தார் என்பதற்காக தம்பியை கைது செய்து விட்டார்கள் என்று சொன்னார். வீட்டில் மூன்று பேர் மாடியில் இருந்தார்களே, அவர்கள் மூன்று பேரும் காயப்படாதவர்கள். காயப் பட்டவர்களுக்கு உதவி செய்வதற் காக இருந்தவர்கள். எப்படி சமாளித்தீர்கள் என்று கேட்டேன். டாக்டர் கருணாகரன் அவர்களுக்கு தொலைபேசியில் சொன்னோம், அவர்தான் வீட்டுக்கு அழைத்துப் போய் வைத்திருக்கிறார் என்றார்.
 
கருணாகரன் அவர்களுடைய அப்பா சத்தியேந்திரன், பெரியாரின் உண்மையான சீடர். நீதிபதியாக இருந்தவர். இதைச் சொல்வதில் கொஞ்சம் தர்ம சங்கடமாக இருந்தாலும், நாட்டுக்குச் சொல்ல வேண்டும். இரண்டு மருத்துவர் களை நான் மறக்க முடியாது.
 
யானையிறவு யுத்தத்தைப் பற்றி இங்கே சொன்னார்கள் அல்லவா, அந்த யானையிறவு யுத்தத்தில் இருபது மடங்கு படையை புலிகள் தோற்கடித்தார்கள். இது போர் வரலாற்றில் ஒரு மிகப் பெரிய சம்பவம். அதற்கு பால்ராஜ்தான் தலைமை தாங்கிச் சென்றார். கொடியேற்றியது பானு. பானுவுக்கு துப்பாக்கியைப் பிடிக்கும் பொழுது கை நடுங்க ஆரம்பித்து. இதை நான் வன்னிக்குச் சென்றபொழுது, தலைவர் என்னிடம் சொல்லி, வன்னியிலிருந்து என்னுடன் கடாபியையும், பானுவையும் சிகிச்சைக்காக என்னுடன் அனுப்பி வைத்தார்.
 
நான் இங்கு வந்து உலகப்புகழ் பெற்ற நரம்பியல் டாக்டர் இராம மூர்த்தியிடம் அழைத்துச் சென்றேன். இவர் விடுதலைப் புலியில் முக்கியத் தளபதி, நான் அழைத்துக்கொண்டு வந்திருக் கிறேன். நீங்கள் தான் சிகிச்சை பார்க்க வேண்டும் என்று உள்ளதை அவரிடம் சொல்லி விட்டேன். என் மீது மிகவும் பிரியமாக இருப்பார். வாரத்தில் ஒரு நாள் ஓய்வு எடுக்க வேண்டும். நீங்கள் அதை செய்வதே இல்லை என்று என் மீது கோபித்துக் கொள்வார். அவருக்கு சோதனை களை எல்லாம் செய்துவிட்டு, ஒன்றும் செய்யாது. மூன்று மாதத்திற்கு இந்த மாத்திரயைச் சாப்பிடுங்கள் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார். பானு குணமான பின்பு அவரை நாட்டுக்கு அனுப்பிவிட்டோம்.
 
நான் அங்கிருந்து வரும்போது, என் காலில் காயம் இருந்ததால், தண்ணீர் இருக்கின்ற இடத்தில் என்னால் நடக்க முடியாது. ஒரு வினாடியில் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு ஒருவர் நடப்பார். நல்ல பாம்பு படம் எடுக்கும்போதே அதை பிடித்து விடுவார். அவருக்குப் பெயர் பாம்பு அஜீத். தலைவரின் நம்பிக்கைக் குரிய தளபதிகளில் சொர்ணத் துடன் அவரும் இருந்தவர்.
 
சண்டைகளில் ஈடுபட்டவர். அவர்கள்தான் கடற்கரையில் இருந்து என்னை வரவேற்றார். இங்கே வரும்போது என்னுடனே வந்தார். ஏனென்றால், ஒரு குண்டு அவரது உடம்பில் பாய்ந்து, இதயத்துக்கு ஒரு மில்லி மீட்டருக்கு முன்போய் நின்று கொண்டது. கொஞ்சம் உள்ளே அந்த குண்டு சென்றிருந்தால் அவர் இறந்திருப்பார். இந்தக் குண்டை வெளியே எடுக்க வேண்டும்.
 
இந்தச் செய்தியை உலகப் புகழ் பெற்ற மருத்துவரிடம் சொன்னேன். அவர் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் என்று ஒரு மருத்துவமனையை ஏற்பாடு செய்து, அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவருக்குச் சொல்லி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அறுவைச்சிகிச்சை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பு வந்து பார்த்து ஆலோசனை கூறிவிட்டுச் சென்று, அறுவைச் சிகிச்சை முடிந்த பின்பு வந்து பார்த்துவிட்டு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.
 
நானும் எனது தம்பியும்தான் கூடவே நான்கு நாட்கள் இருந்தோம். அஜீத் தற்பொது இலண்டனில் இருக்கிறார். அவர் உடம்பிலிருந்து எடுத்த குண்டை நான் வைத்திருக்கிறேன். அந்த பெரிய செயலைச் செய்த மருத்துவரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அவருக்கு நான் நன்றி சொல்கிறேன்.
 
 
ஒரு வாரத்திற்கு முன்பு பெரிய மருத்துவரைப் பார்த்தேன். அவர் வெளிநாட்டில் இருந்தவர். அவர் சொன்னார், பிரிட்டிஷ் பிரதமருக்கு இருக்கக்கூடிய உணர்வுகூட இந்தியாவில் இருப்பவர்களுக்குக் கிடையாதா? என்ன நடக்கிறது? தமிழர்கள் எல்லாம் அநாதையா? அவர் அப்படிச் சொன்னவுடன் எனக்கு மனதுக்கு ஆறுதலாக இருந்தது.
 
தலைவர் பிரபாகரனைப் பற்றி எழுத வேண்டும் என்றார், புகழேந்தி தங்கராஜ். எனக்கு நேரம் கிடைக்க வேண்டும் என்றால், சிறையில் பிடித்து அடைத்தால் தான் எழுத முடியும். ஆனால், எனக்கு ஒரே ஒரு ஆசை இருக்கிறது. என் வாழ்க்கையை புத்தகமாக எழுதுகிற அளவுக்கு நான் பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை.  ஆனாலும், வருங்கால தலைமுறைக்கு செய்திகள் கிடைக்கலாம். ஒரு உத்வேகம் கிடைக்கலாம். கடந்த கால நிகழ்வுகளை எல்லாம் எழுத வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது.
 
கல்கிக்கு அனைத்தும் சிறப்பாக இருந்தாலும் பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் இன்னும் சிறப்பு. அது அவருக்கு மிகவும் அற்புதமாக அமைந்தது. நான் அவரைப்போன்ற எழுத் தாளன் அல்ல.
 
ஆனால் எனக்குள் ஒரு ஆசை, இந்த ஐம்பதாண்டு களில் இப்பொழுது சொன்னேன் அல்லவா! அதைப் போன்று. பெயர்கள் முதற்கொண்டு அனைத்தையும் எழுதுவேன். அப்படி எழுத வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அப்பொழுது தலைவர் பிரபாகரனோடு இருந்த நிகழ்வுகளை ஒரு சதவிகிதம் கூட பொய் இல்லாமல் எழுதுவேன்.
 
இந்த நூல் வெளியீட்டு விழாவுக் காக பாடுபட்ட அனைத்துத் தோழர்களுக்கும், இந்த மண்டபத் தினைத் தந்த ஏ.சி.முத்தையா அவர்களுக்கும், இவ்வளவு நேரம் அமர்ந்திருந்த அனைத்து பெரு மக்களுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்.
 
பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)