மறுமலர்ச்சி தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள்

விவகாரங்கள்: பொருளாதாரம், விவசாயம், மனித உரிமை, சர்வதேசம், சட்ட ஒழுங்கு, தேசிய, அரசியல், வறுமை

மாவட்டம்: சென்னை - வடக்கு, சென்னை - தெற்கு, கோயம்புத்தூர் - மாநகர், கோயம்புத்தூர் - புறநகர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, காரைக்கால், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை - மாநகர், மதுரை - புறநகர், நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருநெல்வேலி - மாநகர், திருநெல்வேலி - புறநகர், திருப்பூர், திருச்சி - மாநகர், திருச்சி - புறநகர், தூத்துக்குடி, வேலூர் - கிழக்கு, வேலூர் - மேற்கு, விழுப்புரம், விருதுநகர், தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், அறிவிப்புகள்

Date: 
Mon, 02/02/2015
 
 
 
 
 
 
 
 
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 23-ஆவது பொதுக்குழு இன்று 01.02.2015 ஞாயிற்றுக்கிழமை கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் தூத்துக்குடி - 628 002, எட்டையபுரம் சாலை, புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏ.வி.எம். கமலவேல் மஹாலில் நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் நிறைவேற்றட்டப்பட்ட தீர்மானங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
மறுமலர்ச்சி தி.மு.க. 23 ஆவது பொதுக்குழு
தூத்துக்குடி - 01.02.2015
தீர்மானங்கள்
 
தீர்மானம்-1
 
“தனக்காகக் கார்மேகம் பொழிவதில்லை;
தனக்காக சோழநதி பாய்வதில்லை;
தனக்காக பூங்குயில்கள் இசைப்பதில்லை;
தனக்காக செவ்வாழை செழிப்பதில்லை”
 
பேரறிஞர் அண்ணாவின் நெஞ்சைக் கவர்ந்த சிவகங்கைக் கவிஞர் மீராவின் கவிதை வரிகளுக்கு இலக்கணமாக, தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தன்னலம் கருதாமல் தமிழ்த் தேசிய இனத்திற்காக உழைத்து வரும் நமது தலைவர் வைகோ அவர்கள் பொதுவாழ்வில் ஈடுபட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவு அடைந்து விட்டன. 1964 ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய நான்காவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், மாநிலக் கல்லூரி மாணவராகப் பங்கேற்று மாணவர் புரட்சியில் பங்கேற்று,  பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையை ஏற்று திராவிட முன்னேற்றக் செயல்வீரர் ஆனார். இளம் வயதிலேயே கலிங்கப்பட்டி கிளைக்கழகத்தின் சார்பில் வட்டப் பிரதியாகப் பொறுப்பு ஏற்றார். படிப்படியாக உயர்ந்து தி.மு.கழகத்தின் போர்வாளாக தென்பாண்டி மண்டலத்தில் கழகத்தின் காவல் அரணாக வலம் வந்தார். ஏற்றுக்கொண்ட தலைமைக்கும் வரித்துக்கொண்ட இலட்சியங்களுக்காகவும் இடர் எது வரினும் அஞ்சாத நெஞ்சுரத்துடன் வீறுகொண்டு பணியாற்றியதால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சோப இலட்சம் தொண்டர்களின் இதய பீடத்தில் இடம் பெற்றார். தி.மு.கழகத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் இடம் பெற்று, 1978 ஆம் ஆண்டு முதல்  18 ஆண்டுகள் திராவிட இயக்கத்தின் வாளும் கேடயமுமாக நாடாளுமன்றத்தில் ஒளிவிட்டு பிரகாசித்த பெருமைமிக்க வரலாறு தலைவர் வைகோ அவர்களுக்கு மட்டுமே வாய்த்தது. 
 
காலச் சுழற்சியில், ஓயாது உழைத்த இயக்கத்தில் இருந்து அன்றைய தலைமை வைகோ அவர்களை வெளியேற்றியபோது, தாயின் மடியெனத் தி.மு.க. தொண்டர்கள் தாங்கிப் பிடித்தனர். திராவிட இயக்கத்தின் இன்னொரு பரிணாமமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் முகிழ்த்தது. 1994 மே ஆறாம் நாள் இயக்கம் உதயமான நாளில் இருந்து கடந்த 21 ஆண்டுகளாக ஓயாத கடல் அலைபோல் தமிழ் இனத்திற்காக உழைத்துக் கொண்டு இருக்கின்றார். நாடாளுமன்றத்தின் மக்கள் அவையில் ஆறு ஆண்டுகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இடம் பெற்றார். தேடிவந்த மத்திய அமைச்சர் பதவியைப் புறந்தள்ளிவிட்டு யமுனைக் கரையில் தமிழர் நலனுக்காகவும், திராவிட இயக்கத்தின் இலட்சியங்களுக்காகவும் தலைவர் வைகோ ஓங்கிக் குரல் எழுப்பினார். மொத்தம் 24 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பினை ஏற்று திராவிட இயக்க வரலாற்றில் எவரும் நிகழ்த்தாத சரித்திரச் சாதனை படைத்த வரலாறு நமது தலைவருக்கு மட்டுமே உண்டு.
 
தமிழர் நலனுக்குக் கேடு நிகழ்ந்த இடங்களில் எல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்யும் தலைவராக கடல் கடந்து வாழும் ஈழத்தமிழர்களின் உரிமைக் காவலராக விளங்குகின்றார். திராவிட இயக்க வரலாற்றில் ஜனநாயகம் காத்திடவும், பேச்சு உரிமைக்காகவும் தமிழ் இனத்தின் தன்மான உரிமைக்காகவும் 4 ஆண்டுகள் அடக்குமுறை சிறைவாசம் ஏற்றார். திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைக் கோட்பாடுகளில் உறுதி கொண்டவராக, எந்தவித சமரசத்திற்கும் இடம் கொடாதவராக தமிழக அரசியல் தளத்தில் மதிப்புக்கு உரியவராகத் திகழ்வதுடன், உலகத் தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்று இருக்கின்றார். தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களுக்கான உரிமைப் போராட்டத்தில் தலைவர் வைகோ அவர்கள்தான் ஈடில்லாத போராளியாக முன்னணியில் நிற்கின்றார். இந்தியத் திருநாட்டின் அரசியலில் புகழ்மிக்க தலைவர்களின் நன்மதிப்பையும், நட்பையும் பெற்றுள்ள பெருமை நமது தலைவருக்கு மட்டுமே உண்டு. 
 
இத்தகைய சிறப்புகளுடன் புகழ் குவித்துள்ள தலைவர் வைகோ அவர்கள், பொதுவாழ்வில் தனக்கென புடம் போட்டவராகத் திகழ்கின்றார். தமது பிறந்த நாள் விழாவைக் கொண்டாட அவர் அனுமதித்தது இல்லை. 
 
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சக்கணக்கான தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில்,  தலைவர் வைகோ அவர்களின் 50 ஆண்டுகால பொதுவாழ்வு பொன் விழா மாநாட்டை, 2015 ஜூன் 27, 28 ஆகிய இருநாட்களில் தலைநகர் சென்னையில்  வெற்றிகரமாக நடத்துவது என்றும் இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலரையும் பங்கேற்கச் செய்வது என்றும் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 23 ஆவது பொதுக்குழு தீர்மானிக்கின்றது.
 
 தீர்மானம் -2
 
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 16ஆவது மக்கள் அவைத் தேர்தலில் இந்திய நாட்டு மக்கள் பெரும் நம்பிக்கையோடும், எதிர்பார்ப்புகளுடனும் வாக்கு அளித்ததால், மிகப் பெரும்பான்மை பலத்துடன் திரு. நரேந்திரமோடி அவர்கள் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் அரசு அமைந்தது. ஆனால், கடந்த எட்டு மாத கால ஆட்சியில் மத்திய அரசின் செயல்பாடுகள் அனைத்தும் மக்கள் நலனுக்கு எதிராகவே இருக்கின்றன.
 
வளர்ச்சித் திட்டங்களை மையப்படுத்தி தேர்தலைச் சந்தித்த பாரதிய ஜனதா கட்சி பன்னாட்டு ஏகபோகப் பெரு முதலாளிகளின் வளர்ச்சிக்காக மட்டும் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகின்றது. அதற்காகவே நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்களைத் திருத்த முடிவு எடுத்து உள்ளது. திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு, “நிதி ஆயோக்” என்ற பெயரில் புதிய அமைப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து 44 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டுகின்றது. கடந்த ஆட்சியின்போது, சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு கொண்டுவரப்பட்டபோது, கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த பாரதிய ஜனதா கட்சி, “தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதனைத் திரும்பப் பெறுவோம்” என்று கொடுத்த வாக்குறுதி காற்றில் பறக்கின்றது. அதுமட்டும் இன்றி, காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 26 விழுக்காட்டில் இருந்து 49 விழுக்காடு அளவு உயர்த்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. 
 
மக்களுக்குச் சேவை அளிக்கும் தொடர்வண்டித் துறையிலும் தனியார் மயத்தைத் திணிக்கின்றது. மானியங்களை இரத்து செய்ததின் மூலம் உரவிலை பன்மடங்கு உயர்ந்து வருகின்றது. பொது பங்கீட்டு முறையில் வழங்கப்பட்டு வரும் உணவுப் பண்டங்கள், மண்எண்ணெய் ஆகியவற்றுக்கான மானியத்தையும் இரத்து செய்து வருகின்றது. சமையல் எரிவாயு மானியத்தைப் படிப்படியாக இரத்து செய்யும் நோக்கத்துடன் மானியத் தொகையை பயனீட்டாளர்களுக்கு வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தைக் கொண்டு வந்து உள்ளது. விவசாய விளை பொருட்களான நெல், கரும்பு உள்ளிட்டவற்றுக்கு மாநில அரசுகள் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கக்கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. விவசாயத் துறையில் தற்சார்பை அழிக்கும் வகையில் மரபு அணு மாற்றுப் பயிர்களுக்குச் சோதனை அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
 
ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் குறைந்து வந்தாலும் விலைவாசி குறையாமல் இருப்பதற்கு பாரதிய ஜனதா அரசின் பொருளாதாரக் கொள்கைகளே காரணம் ஆகும். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கைகளையே பா.ஜ.க. அரசு பின்பற்றி வருவதற்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுக்குழு கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றது.
 
தீர்மானம் -3
 
இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஊறு விளைவித்து, சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இந்துத்துவ அமைப்புகள் மதவெறி கொண்டு மக்களிடையே கலவர விதைகளைத் தூவி வருகின்றன. பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் சாசனத்தை மீறிச் செயல்பட்டு வருகின்றனர். ‘இந்து - இந்தி- இந்து ராஷ்டிரா’ என்கின்ற முழக்கத்தைத் தற்போது இந்துத்துவா அமைப்புகள் தீவிரப்படுத்தி உள்ளனர். 
 
சமஸ்கிருதம், இந்தி மொழித் திணிப்பைத் தீவிரமாக்கி வருவதும், கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்து காவி மயமாக்கிடத் துடிப்பதும், சிறுபான்மை மக்களை மதமாற்றம் செய்திட ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்துவதும், அண்ணல் காந்தி அடிகளைச் சுட்டுக்கொன்ற மாபாவி கோட்சே புகழ் பாடி வருவதும், சிறுபான்மை கிறிஸ்தவ மக்களின் புனித நாளான ஏசு கிறிஸ்து பிறந்த தினத்தைக் கொண்டாடத் தடை போடுவதும், பகவத் கீதையைத் தேசிய நூல் என்பதும், நாட்டில் விரும்பத்தாகாத எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிப்பதுடன் இந்துத்வா நாசகார சக்திகளின் அக்கிரம முயற்சிகளை வேறுடன் களைய பாடுபடுவது என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
 
தீர்மானம் -4
 
தமிழ்நாட்டின் உயிர் ஆதாரமான காவிரி நதி நீரைத் தடுத்து, நமது பாரம்பரிய மரபு உரிமையைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் பறித்து வருகின்றது. அரசியல் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுடன் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல், உதாசீனப்படுத்தி வருகிறது. கர்நாடக மாநிலத்தின் சட்ட விரோத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி, அரசியல் சட்ட வரம்புக்குள் நீதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ள மத்திய அரசு தமிழகத்திற்குக் கேடு செய்து வருகின்றது.
 
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்திட காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய இரு அமைப்புகளை ஏற்படுத்தாமல் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகின்றது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் 171 டி.எம்.சி. சொற்ப நீரைக் கூட திறந்துவிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு கர்நாடக மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு காவிரிஆற்றின் குறுக்கே மேகதாட்டு, தாதுமணல் ஆகிய இடங்களில் தடுப்பு அணைகள் கட்டுவதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
 
கர்நாடக மாநிலத்தின் சதித்திட்டத்துக்கு மத்திய அரசும் துணை போகின்றது. சோழவள நாட்டின் காவிரி பாசனப் பகுதிகளுக்குக் காவிரி நதி நீரைத் தடுத்து நிறுத்துவதற்குத் திட்டமிடும் மத்திய அரசு, பல இலட்சம் ஏக்கரில் விவசாயச் சாகுபடியைச் சீர்குலைக்கும் வகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை விவசாயிகளின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் செயல்படுத்தி வருகின்றது.
 
தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் ஆபத்துகளைத் தடுத்து நிறுத்துவதற்கு மக்கள் சக்தியைத் திரட்டும் நோக்கத்துடன் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், காவிரி பாசனப் பகுதிகளில் 2014 டிசம்பர் 12 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டு இலட்சக்கணக்கான மக்களைச் சந்தித்தார்கள். 
 
இதன் தொடர்ச்சியாக, காவிரியின் குறுக்கே அணைகள் கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநிலத்திற்குத் துணை போவதுடன், மீத்தேன் எரிவாயு எடுக்கும் நாசகாரத் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்தி வரும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும், காவிரி நிதி நீர் உரிமையைப் பாதுகாக்கவும் ‘காவிரி பாதுகாப்பு இயக்கம்’ எனும் அமைப்பு 2015 ஜனவரி 20 ஆம் தேதி தஞ்சை மாநகரில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது. 
 
காவிரி உரிமையைப் பாதுகாத்திட தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், வணிகர் நல அமைப்புகள், பொதுநல அமைப்புகள் ஓரணியில் திரள வேண்டும் என்று கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, தஞ்சையில் காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் உள்ளிட்ட 215 அமைப்புகள் பங்கேற்றன.
 
தமிழ்நாடு அனைத்து வகையிலும் சோதனைகளைச் சந்தித்து வரும் இக்கட்டான காலகட்டத்தில், காவிரி உரிமையை நிலைநாட்ட காவிரி பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்கி, அதன் ஒருங்கிணைப்பாளராகவும், சீரிய பணியாற்றிட பொறுப்பு ஏற்று தமிழக விவசாயிகளின் எதிர்கால நலனை காப்பாற்றும் கடமையைத் தன் தோள்மீது சுமந்துள்ள கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு கழகப் பொதுக்குழு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.
 
தீர்மானம் -5
 
தலைவர் வைகோ அவர்களின் அழைப்பு ஏற்று தஞ்சையில் 2015 ஜனவரி 20ஆம் தேதி, காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டதுடன், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திட அறைகூவல் விடுக்கும் தீர்மானத்தைச் செயல்படுத்த இசைவு அளித்த அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள், வணிகர் சங்கப் பேரவை, மீத்தேன் எதிர்ப்பு இயக்கங்கள் உள்ளிட்ட 215 அமைப்புகளுக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுக்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
 
தீர்மானம் -6
 
ஜனவரி 20 ஆம் தேதி நடைபெற்ற காவிரி பாதுகப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, காவிரியின் குறுக்கே அணைகள் கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்தவும், நாசகார மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை தமிழகத்தில் இருந்து விரட்டி அடிக்கவும், மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பாக பிப்ரவரி 18 ஆம் தேதி தலைநகர் சென்னையைத் தவித்து புதுவையில் காரைக்கால் உள்ளிட்ட14 மாவட்டங்களிலும், மார்ச் 11 ஆம் தேதி தலைநகர் சென்னையிலும், மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளான மார்ச் 23 இல் தலைநகர் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும் முற்றுகைப் போராட்டத்தை காவிரி பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்துவது என்று கழகப் பொதுக்குழு தீர்மானிக்கின்றது.
 
தீர்மானம் -7
 
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2010 ஆம் ஆண்டு நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கான கருத்துரு வெளியிடப்பட்டு, தேனி மாவட்டத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்த முயன்றபோது, தமிழ்நாட்டில் முதன் முதலாக அதை எதிர்த்துக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அறிக்கை விடுத்தார்கள். 
 
தற்போது பா.ஜ.க. அரசு, தேனி மாவட்டம், போடி மலைப்பகுதியில் பொட்டிப்புரம் கிராமத்தில், ‘இந்திய நியூட்ரினோ ஆராய்ச்சி மையம்’ (ஐ.என்.ஏ) சார்பில் ரூபாய் 1500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க 2015 ஜனவரி 5 ஆம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்து உள்ளது.
 
இதன்படி, தேவாரம் பகுதியில் உள்ள மலையைப் பக்கவாட்டில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்குக் குடைந்து ஒரு சுரங்கம் ஏற்படுத்தி அதற்குள் நியூட்ரினோ ஆராய்ச்சிக் கருவிகள் அமைக்கப்படும். சூரிய ஒளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர் அணுக்களைப் பிளந்து அவற்றில் இருந்து வரக்கூடிய நியூட்ரினோ துகள்களைப் பூமிக்கடியில் பொருத்தப்படும் மின்காந்த ஏற்பிகள் மூலம் கண்டு அறிவதே இந்த ஆய்வகத்தின் செயல்பாடு ஆகும். 
 
உலகில் இதுபோன்ற ஆய்வுக் கூடங்கள் கனடா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் அமைந்து உள்ளன. கனடா, அமெரிக்காவில் ஏற்கனவே தோண்டப்பட்ட சுரங்கங்களை மட்டுமே பயன்படுத்தினர். ஜப்பான், இத்தாலியில் பாலைவனம் மற்றும் மனித நடமாட்டம் அற்ற வனப்பகுதிகளில் அமைத்தனர். 
 
இந்தியாவில் இவ்வாறு மலைகளைக் குடைந்து சுரங்கம் உருவாக்கி ஆய்வுக்கூடம் அமைக்க இமயமலையில் டார்ஜிலிங், மனாலி, ரோத்தால் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. சுற்றுச் சூழல் பிரச்சினையால் நீலகிரியில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அங்கும் எதிர்ப்பு எழுந்ததால், அசாம் மாநிலத்தில்  அமைக்க முயற்சித்தனர். சுற்றுச் சூழல் வனப்பாதுகாப்பு ஆர்வலர்களால் எதிர்ப்பு எழுந்ததும், தேனி மாவட்டம் - தேவாரம் பகுதியில் நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடம் அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது.
 
பூமிக்கு அடியில் குறைந்தபட்சம் 2 கிலோமீட்டர் ஆழத்தில் தோண்டப்படும் சுரங்கத்தின் விட்டம் 20 அடி முதல் 100 அடி வரையிலும், நீளம் 2 கிலோ மீட்டர் ஆகவும் இருக்கும். இதற்காக 2 இலட்சத்து 25  ஆயிரம் கன மீட்டர் அளவுக்கு பாறைகள் வெட்டி எடுக்கப்படும். 
 
ஒரு நாளைக்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் காலன்கள் தண்ணீர் தேவைப்படும்.  கட்டுமானத்திற்கு 37 ஆயிரம் டன் சிமெண்ட், மணல் மற்றும் பெருமளவு மின்சாரமும் தேவைப்படும். மின்காந்த ஏற்பியின் எடை 50 ஆயிரம் டன் கொண்டதாக இருக்கும். 
 
இந்த ஆய்வகத்திற்கான நீர் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுருளி ஆற்றில் இருந்து கொண்டு செல்லப்படும். கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக சுமார் 160 கனரக வாகனங்கள் அருகில் உள்ள இரயில் நிலையத்தில் இருந்து தேவாரம் நகருக்குள் வந்து போக வேண்டும்.
 
பாறைகளை வெட்டி எடுக்க வெடி மருந்து வைத்துப் பிளக்கும்போது, முல்லைப் பெரியாறு மட்டுமின்றி, கேரள எல்லையில் உள்ள இடுக்கி அணையும் உடைந்துவிடும் ஆபத்து இருக்கின்றது. சுற்றுச் சூழல் நாசமாவதுடன், காட்டு உயிர்களும், பசுமைக் காடுகளும் அழிவதுடன், விவசாயமும் செய்ய முடியாமல் நிலத்தடி நீர் ஆதாரங்களும் பாதிக்கப்படும்.
 
நியூட்ரினோ ஆய்வகத்தால் தேனி மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்போ, தொழில் வளர்ச்சியோ ஏற்படாது. தேனி மலைப்பகுதியை அழிப்பது மட்டும் இன்றி, அங்கு வசிக்கும் மக்களையும் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய நிலைமைதான் உருவாகும். 
 
எனவே, மத்திய அரசு தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
 
தீர்மானம் -8
 
இந்தியாவில் தற்போது உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சக்தி (Solar Energy) அளவை 20 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து ஒரு இலட்சம் மெகாவாட்டாக உயர்த்துவதற்குத் திட்டமிட்டு வருவதாக மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் பியுஸ் கோயல் தெரிவித்து உள்ளார். சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டங்களைச் செயல்படுத்த தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து நிலங்களைக் கையகப்படுத்திட மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகின்றது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. 
 
குஜராத் மாநிலத்தில் மோடி ஆதரவுடன் மிகப்பெரிய வளர்சசி பெற்றுள்ள அதானி குழுமம்தான், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டங்களை செயல்படுத்திட விவசாயிகளிடம் இருந்து நிலங்களைக் கைப்பற்ற முயற்சி செய்கின்றது.
 
குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடாவை ஒட்டி அமைந்துள்ள முந்த்ரா பகுதியில் 7500 கோடி ரூபாய் மதிப்புமிக்க 5 கோடி சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை மோடி தனக்கு மிகவும் நெருக்கமான அதானி குழுமத்திற்கு வெறும் 160 கோடி ரூபாய்க்கு தாரை வார்த்துக் கொடுத்தார்.
 
அதானி குழுமம் முந்த்ரா பகுதியில் 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் அமைத்துள்ள சிறப்புப் பொருளாதார மண்டலம் 56 மீனவ கிராமங்களையும் 126 குடியிருப்புப் பகுதிகளையும் அடியோடு அழித்தது. 
 
தொழில் தொடங்கப் போவதாக குஜராத் மாநிலத்தில் நிலங்களை கைப்பற்றிய அதானி குழுமம், பெரும்பகுதியைக் குடியிருப்பு மனைகளாக ஆக்கி விற்பனை செய்து கொள்ளை இலாபம் ஈட்டியது. மத்திய அரசின் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்தும் முகவராக அதானி குழுமம் தென் மாவட்டங்களில் நிலங்களை விலை கொடுத்து வாங்கும் முயற்சியைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், தென் மாவட்ட விவசாயிகள், அதானி குழுமத்தின் சதித் திட்டங்களுக்குப் பலியாகிவிடக்கூடாது என்றும் கழகப் பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
 
தீர்மானம் -9
 
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுஉலைகளை மூட வலியுறுத்தி இடிந்தகரை மக்கள் உலக வரலாறு காணாத போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அணுஉலைகளால் ஏற்படும் கதிர்வீச்சின் காரணமாக மனிதகுலம் சந்தித்து வரும் பேரழிவுகளை உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வரும் அணுமின் திட்டங்கள் மூலம் வெளிப்பட்டு இருக்கின்றன.
 
கதிர்வீச்சு, புற்றுநோய், மனவளர்ச்சி  இன்மை, குழந்தை இன்மை என பல பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படுவதுடன் மனித குலமே அழியும் அபாயம் ஏற்படும். அணுஉலையில் இருந்து வெளியேற்றப்படும் வெப்ப நீரால் கடல் வாழ் உயிரினங்கள் அழியும் பேராபத்து உருவாகின்றது. 
 
கூடங்குளத்தில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அணுஉலைகளின் கழிவுகளைப் பாதுகாப்பாகப் பூமிக்கு அடியில் புதைத்து வைத்தாலும் கதிர் வீச்சு அபாயத்தை முற்றாகத் தடை செய்ய முடியாது. 
 
இந்நிலையில், கூடங்குளத்தில் 3 மற்றும் 4 ஆவது அணுஉலைகள் அமைக்கும் பணி, 39 ஆயிரத்து 746 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கின்றது. மேலும், 6 அணுஉலைகள் அமைப்பதற்குத் தேவையான கட்டமைப்பு வசதி கூடங்குளத்தில் இருப்பதாக அணுமின் நிலைய வளாக இயக்குநர் தெரிவித்து உள்ளார். 
 
இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் வெறும் 2.7 விழுக்காடு அளவு மட்டுமே உள்ள அணுமின்சக்தி தயாரிப்புக்காக மக்கள் நலனைப் பலியிடும் மத்திய அரசுக்கு கழகப் பொதுக்குழு கண்டனம் தெரிவிப்பதுடன், கூடங்குளத்தில் 3 மற்றும் 4 ஆவது அணுஉலை அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
 
தீர்மானம் -10
 
இலங்கையில் ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள ஈழத் தமிழர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியதால் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சே ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டு இருக்கின்றார். இலங்கையின் அதிபராக மைத்திரி பால சிறிசேன பொறுப்பு ஏற்ற பின்னர் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, ஜனவரி 19 ஆம் தேதி இந்தியாவுக்கு வந்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களான ஏதிலிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்காக இலங்கை-இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தமிழக அரசின் சார்பில் பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுறுத்தி இருக்கின்றது. 
 
இதற்குப் பதில் அளித்துள்ள தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், இலங்கையின் வடக்கு-கிழக்கு பகுதிகளில் நிலைமை இதுவரை சீராகவில்லை, இராணுவ முகாம்கள் இன்னமும் தமிழர்கள் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கின்றது; எனவே, தமிழகத்தில் இருந்து ஈழத் தமிழ் ஏதிலிகளை இலங்கைக்கு அனுப்புவதற்கு இது உகந்த நேரம் அல்ல என்று மத்திய அரசுக்கு மிகச் சரியாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றார். ஈழத்தமிழ் அகதிகளை மைய அரசு இலங்கைக்கு அனுப்பக் கூடாது.
 
வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஈழத் தமிழர்களின் பூர்வீக தயாகப் பகுதியில் இருந்து இராணுவ முகாம்களை உடனடியாக அப்புறப்படுத்தவும், 2009 இல் நடைபெற்ற போரில் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, சொந்த நிலங்களையும் வீடுகளையும் இழந்து நிற்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு அவர்களின் உடைமைகள் திரும்பக் கிடைக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.
 
தீர்மானம் -11
 
இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கும், அவர்களின் மீன்பிடி கருவிகள், படகுகளைப் பறிப்பதற்கும் முற்றுப்புள்ளி வைத்து, தமிழக மீனவர்கள் அச்சம் இன்றி மீன்பிடித் தொழில் நடத்தவும், கச்சத் தீவு பகுதியில் மீன்பிடி வலைகளை உலர்த்துதல், ஓய்வு எடுக்கும் உரிமைகளை நிலைநாட்டவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 87 படகுகளை உடனடியாகத் திரும்பப் பெற இந்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
 
தீர்மானம் -12
 
தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு சிலுவைப்போரைத் தொடங்கி இருக்கின்றது, தமிழகத்தை அனைத்து வகைகளிலும் நாசமாக்கி வரும் மதுப்பழக்கத்தில் இருந்து மக்களை மீட்க தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும், இதற்காகவே விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்ளவும், 2012 டிசம்பர் 12 ஆம் தேதி, நெல்லை மாவட்டம் உவரியில் இருந்து தலைவர் வைகோ அவர்கள் நடைப்பயணம் மேற்கொண்டார்கள். மூன்று கட்ட நடைப்பயணத்தில் 1500 கிலோ மீட்டர் தூரம் இலட்சக் கணக்கான மக்களையும் தாய்மார்களையும் சந்தித்து மது ஒழிப்புக் கோரிக்கைக்கு ஆதரவு திரட்டினார்கள். 
 
தமிழ்நாட்டின் வரலாறு இதுவரை காணாத அளவுக்கு ஒரு இலட்சம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியரைத் திரட்டி, மது ஒழிப்பு மராத்தான் ஓட்டத்தைத் தலைவர் வைகோ தலைமையில் கழகம் வெற்றிகரமாக கடத்திக் காட்டியது. 
 
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடும்வரை மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் போராட்டம் ஓயாது என்பதை தெரிவித்துக்கொள்வதுடன், விழுப்புரம், திருவள்ளூர், வேலூர் மேற்கு மாவட்டங்களில் தலைவர் வைகோ அவர்கள்  மதுஒழிப்பு விழிப்புணர்வு முதல்கட்ட வாகனப் பிரச்சாரத்தை மேற்கொள்வது என்று கழகப் பொதுக்குழு தீர்மானிக்கின்றது.
 
தீர்மானம் -13
 
தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்ற மூன்றரை ஆண்டு காலத்தில் 30 விழுக்காடு அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கின்றது. தமிழக மின்சார வாரியத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் உடனடியாகத் தேவைப்பட்டதால், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டண உயர்வை மக்கள் மீது சுமத்தி இருப்பது கண்டனத்துக்கு உரியதாகும். 
 
தமிழக அரசு மின் உற்பத்தித் திட்டங்களை முறைப்படுத்தி, தேவைக்குஏற்ப முழு வேகத்துடன் செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டியதன் விளைவாக மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்றது. இதனால் தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதால் தமிழ்நாடு மின்சார வாரியம் பெரும் நட்டத்தைச் சந்திக்க நேர்ந்து இருக்கிறது. மின்வெட்டின் காரணமாக விவசாயத்தொழிலும், சிறு, குறு தொழிற்சாலைகளும் பெரும் பாதிப்பு அடைந்து உள்ளன. உயர் அழுத்த மின்சாரம் பண்படுத்தும் தொழிற்சாலைகளும் முடங்கிக் கிடக்கின்றன, இந்நிலையில், மின் கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்றது. எனவே, தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து இரத்து செய்ய வேண்டும் என்று கழகப் பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
 
தீர்மானம் -14
 
2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது சமன்படுத்தப்பட்ட ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ,18.50 ஆக இருந்தது. தற்போது ரூ.34 ஆக உயர்த்தப்பட்டு இருக்கின்றது. அ.தி.மு.க. ஆட்சியில் ஆவின் பால் விலை 84 விழுக்காடு அளவு அதிகரித்து இருப்பது சாதாரண ஏழை, எளிய மக்களை மிகவும் பாதிக்கும். ஆவின் பால் விலை உயர்வைத் திரும்பப் பெறக்கோரி தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், மக்களும் போரடியபோதும் தமிழக அரசு செவி சாய்க்காதது கண்டனத்திற்குரியது. ஆவின் பாலில் கலப்படம் செய்து கோடிக் கணக்கில் கொள்ளையடித்த கும்பல் கைது செய்யட்டபோதுதான் ஆவின் பாலின் தரம் எப்படிப்பட்டது என்பதை மக்கள் உணர்ந்தார்கள். ஆவின் நிறுவனம் திட்டமிட்டே நலிவு அடையச் செய்யப்பட்டு, தனியார் நிறுவனங்கள் வளர்ச்சி அடைய சில அக்கறையுள்ள சக்திகள் முனைப்புக் காட்டுகின்றன. தமிழக அரசு இதில் தீவிர கவனம் செலுத்தி, ஆவின் நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டும்.
 
இலவசத் திட்டங்களுக்காகக் கோடிக் கணக்கில் செலவழிக்கும் தமிழக அரசு, பால் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கு மானியம் அளித்து உதவ முன்வரவேண்டும் என்று கோருவதுடன், ஆவின் பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கழகப் பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.
 
தீர்மானம் -15
 
தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. ஒரே மாதத்தில் சிமெண்ட் விலை ரூ.330 இல் இருந்து ரூ.380 ஆக உயர்ந்துள்ளது.  விலை உயர்வைக் கட்டுப்படுத்திட அரசு தவறி விட்டது. இதனால் கட்டுமானத் தொழில் நலிவு அடைவது மட்டும் இன்றி, ஏழை, எளிய நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கின்ற அம்மா சிமெண்ட் திட்டம் மாநில அளவில் மொத்தம் 6 விழுக்காடு தேவையை மட்டுமே நிறைவு செய்ய முடியும். மற்ற தேவைகளுக்கு அதிக விலை கொடுத்து சிமெண்ட் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் மூலப்பொருட்களின் விலைகள் குறைந்துள்ள நிலையில், சிமெண்ட் விலையை மட்டும் உற்பத்தி நிறுவனங்கள் அதிகரித்து வருவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. எனவே, மக்களுக்கு நியாயமான விலையில் சிமெண்ட் கிடைக்க நடவடிக்கை தமிழக அரசு  எடுக்க வேண்டும் என்று கழகப் பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
 
தீர்மானம் -16
 
2013-14 ஆம் ஆண்டில் தமிழக அரசு வரையறுத்த கரும்பு கொள்முதல் விலையை தனியார் சர்க்கரை ஆலைகளிடம் இருந்து பெற்றுத்தரவேண்டும் என்று தமிழகத்தின் பல மாவட்டங்களில்  கரும்பு விவசாயிகள் போராடி வருகின்றனர். 
 
கடந்த சாகுபடிப் பருவத்தில் தமிழக அரசு கரும்பு டன் ஒன்றுக்கு கொள்முதல் விலையாக ரூபாய் 2650 என்று நிர்ணயித்தது. இதில் வாகன வாடகை 100 ரூபாய் போக மீதி 2550 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சர்க்கரை ஆலைகள் ரூ,350 குறைத்துக் கொண்டு வழங்கின. அந்த வகையில் தனியார் சர்க்கரை ஆலைகள் 490 கோடி ரூபாய் விவசாயிகளுக்குப் பட்டுவடா செய்யாமல் நிலுவையில் வைத்து இருக்கின்றன. இதை உடனடியாக வழங்கிடத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உற்பத்தி செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தாமல், பழைய விலையையே நடப்பு ஆண்டுக்கும் தமிழக அரசு நிர்ணயித்து இருப்பது, விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
எனவே, கரும்பு விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு 3500 ரூபாய் ஆகத் தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கழகப் பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
 
தீர்மானம் -17
 
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் பயன் பெறுகின்ற வகையில், 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தாமிரபரணி - நம்பியாறு, கருமேனியாறு நதிநீர் இணைப்பு, வெள்ள நீர் கால்வாய் வெட்டும் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த நதிநீர் இணைப்புத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், தாமிரபரணியில் இருந்து ஆண்டுதோறும் 13 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க முடியும். வறட்சிப் பகுதிகளான ராதாபுரம், நான்குநேரி மற்றும் சாத்தான்குளம் பகுதி விவசாயம் செழிப்பது மட்டும் இன்றி, நிலத்தடி நீரும் உயரும். எனவே, தமிழக அரசு தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கழகப் பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
 
தீர்மானம் -18
 
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணியின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அணை சுமார் 100 ஆண்டுகளாகத் தூர் வாரப்படாமல் மண்மேடாகி விட்டது. இதனால், மழைக்காலங்களில் ஆற்றில் வரும் அதிகப்படியான தண்ணீரைச் (ஆண்டுக்கு 10முதல் 16டி.எம்.சி வரை) சேமித்து வைக்க வழி இன்றி வீணாகக் கடலில் கலக்கின்றது. இதனால் சுமார் 25ஆயிரத்து 560 ஏக்கர் விவசாய நிலங்கள் சாகுபடி இன்றி பாதிக்கப்பட்டு வருகின்றது. எனவே ஸ்ரீ வைகுண்டம் அணையைத் தூர்வாரி ஆழப்படுத்திட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது. 
 
தீர்மானம் -19
 
மாவடிப்பண்ணையில் சுமார் ரூ.627கோடி திட்ட மதிப்பீட்டில் 4டி.எம்.சி தண்ணீரை தேக்கும் அளவிற்கு மிகப்பெரிய நீர்த்தேக்கம் அமைத்து சுற்றுவட்டாரப்பகுதி குளங்கள், வாய்க்கால்கள் மூலமாக விவசாயம், குடிநீர்த் தேவைக்கும் பயன்படுத்தும் திட்டத்தையும், வல்லநாடு அருகேயுள்ள மருதூர் அணைக்கட்டில் ரூ.450கோடி திட்ட மதிப்பீட்டில் 3டி.எம்.சி தண்ணீரைத் தேக்கும் அளவிற்கு நீர்த்தேக்கம் அமைத்து, சடையநேரி கால்வாய் வழியாக சாத்தான்குளம், உடன்குடி, நாசரேத் போன்ற வறட்சிப் பகுதிகளுக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தையும் நிறைவேற்றிடவேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.  
 
தீர்மானம் -20
 
தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு முக்கியக் காரணியாக இருப்பதுடன், பொதுமக்களின் உயிருக்குக் கேடு விளைவித்து வரும் வகையில் செயல்பட்டு வருகின்ற நாசகார   ஸ்டெர்லைட் நச்சுத் தொழிற்சாலையை மக்கள் நலன் கருதி உடனடியாக அகற்றிட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
 
தீர்மானம் -21
 
தூத்துக்குடி உட்பட தென்மாவட்டங்களில் கடலோர மக்களின் வாழ்வாதாரங்களை அழித்துவரும் கனிமவளத் தாதுமணல் கொள்ளை குறித்து நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும்;   இயற்கை வளங்களை முழுமையாகச் சுரண்டும் தாது மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது. 
 
தீர்மானம் 22
 
பாரதிய ஜனதா கட்சி அரசின் திட்டங்கள் அனைத்தும், பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும்தான் தீட்டப்பட்டு வருகின்றன. 21 ஆம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில், இந்தியா  முழுவதும் 100 நவீன நகரங்கள் ஏற்படுத்தப்படும் என மோடி அரசு அறிவித்து உள்ளது. 
 
ஒவ்வொரு நகரமும் 1000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்றும், இந்த நவீன நகரங்கள் பொருளாதார நடவடிக்கைகளின் மையமாகத் திகழும் என்றும் பிரதமர் மோடி அறிவித்து இருக்கின்றார். இத்திட்டத்தைச் செயற்படுத்திட, ஜனவரி 31 ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு பேசியபோது, அரசு-தனியார் கூட்டுப் பங்களிப்புடன் இந்த ஆண்டு நவீன நகரங்கள் தொடங்கப்படும் என்றும், தற்போதைய நகர்ப்புற வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகள் இல்லாமல் மேம்பட்ட வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கின்ற வகையில் இருக்கும் என்றும் தெரிவித்து இருக்கின்றார். 
 
நவீன நகரங்கள் அமைப்பதற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்காகவே மத்திய அரசு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தைக் கொண்டு வந்து இருக்கின்றது. மேலும், நகர்ப்புறங்களில் வாழும் குடிசை வாழ் மக்களை, வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலங்களைப் பறிக்கவும் திட்டமிடும் மோடி அரசின் நடவடிக்கைக்கு இப்பொதுக்குழு கண்டனம் தெரிவிப்பதுடன், வளர்ச்சியின் பெயரால் வசதி நிறைந்த வாழ்க்கையை நடத்துவதற்கு ஏழை எளிய மக்களையும் விவசாயிகளையும் சூறையாடும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது. 
 
தீர்மானம் 23
 
தமிழ்நாட்டு அரசியலில் தனித்தன்மை வாய்ந்த இயக்கமாக, 21 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உறுப்பினர் சேர்த்தல் கடமையை பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15, 2015 முதல் தொடங்குவது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
 
தீர்மானம் 24
 
இலட்சோபலட்சம் ஈழத்தமிழர்களை, பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள், வயது முதிர்ந்தோர், பிணிவாய்ப்பட்டோர் என எவரையும் விட்டு வைக்காமல் ஈவு இரக்கம் இன்றி ஜெர்மானிய இட்லர் யூதர்களைக் கொன்று குவித்ததைப் போல், தமிழ் மக்களை கோரப் படுகொலை செய்த கொடியோன் இலங்கை அதிபர் இராஜபக்சே இலங்கையில் திடீரென்று அதிபர் தேர்தலை அறிவித்துப் போட்டியிட்டான். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தான் கடைபிடிக்க வேண்டிய நெறிசார்ந்த வெளியுறவுக் கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டு, ராஜபக்சேதான் மீண்டும் அதிபராக வர வேண்டும் என நேபாளத்தில் நடைபெற்ற சார்க் மாநாட்டு உரையில் வாழ்த்தியது மன்னிக்க முடியாத செயல் ஆகும். 
 
தமிழ் இனக் கொலைகாரனுக்கு இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று, பாரதிய ஜனதா கட்சியில் ஒட்டுண்ணியாகச் சேர்ந்த இலங்கையின் கைக்கூலி அறிவித்த அக்கிரமும் நடந்தது. மாபாவி ராஜபக்சேவை திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத்துக்கு அழைத்து வந்தது இந்திய அரசு. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கண்மணிகள், திருப்பதி கோவில் வாசலில், ராஜபக்சே முகத்துக்கு நேரே கருப்புக்கொடி காட்டி கண்டன முழக்கம் இட்டு, காவல்துறையின் தடியடிக்கு ஆளாயினர். 
 
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியுற்று மண்ணைக் கவ்வினான். தமிழ் மக்களும், இஸ்லாமியர்களும் எடுத்த நிலைப்பாடு அவனது தோல்விக்குக் காரணம் ஆயிற்று. புதிதாக அதிபர் பொறுப்புக்கு வந்துள்ள மைத்ரி சிறிபாலசேனா, ஈழத்தமிழர் படுகொலையின்போது மகிந்தனின் அரசில் ராணுவ அமைச்சராக இருந்தவர்தான். வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து இராணுவம் திரும்பப் பெறப்பட மாட்டாது என்று புதிய அதிபர் அறிவித்து விட்டார். 13 ஆவது சட்டத்திருத்தம் என்பது, ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்காத ஏமாற்றுத் திட்டம் என்பதால், விடுதலைப்புலிகளும், தமிழ் ஈழ மக்களும் தொடக்கத்திலேயே நிராகரித்து விட்டனர். 
 
இலங்கையின் பிரதமர் ஆகப்  பொறுப்பு ஏற்று உள்ள ரணில் விக்கிரமசிங்கே, இலங்கையில் கூட்டு ஆட்சி முறையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; ஒற்றை ஆட்சி முறைதான் என்று வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார். புதிய அரசு ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்கப்போவது இல்லை. 
 
இந்தப் பின்னணியில் இலங்கை அரசும், இந்தியாவின் நரேந்திர மோடி அரசும் கூட்டாகச் சதித்திட்டம் வகுக்கின்றன. மார்ச் மாதத்தில் நடைபெற இருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில்  கூட்டத்தில், இலங்கை அரசின் இனக்கொலைக் குற்றத்திற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள விடாமல் தடுப்பதற்காகவே தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்ப நரேந்திர மோடி அரசு முனைந்துள்ள துரோகம் கண்டனத்திற்குரியது ஆகும். 
 
தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளை தமிழர்களின் மரணபூமியாக்கப்பட்ட இலங்கைக்கு அனுப்ப முயலும் நடவடிக்கையை இந்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். 
 
இலங்கையின் புதிய அதிபர் இந்தியா வருவதற்கும், மார்ச் மாதத்தில் இந்தியப் பிரதமர் மோடி இலங்கை செல்வதற்கும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடும், உலக நாடுகளை ஏமாற்றி, மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்காகத்தான் என்பதே உண்மை ஆகும். 
 
எண்ணற்ற தமிழர்கள் சிங்கள இனவாத அரசுகளால் கொலையுண்டு மடிந்ததும், தங்கள் தாயக விடுதலைக்காக உலகம் போற்றும் தலைவர் பிரபாகரன் அவர்களின் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அகிலம் இதுவரை கண்டும் கேட்டும் இராத வீரச்சமர் புரிந்து மகத்தான தியாகம் செய்ததும், சுதந்திரத் தமிழ் ஈழத்தை வென்றிடத்தான் என்பதால், அந்த இலட்சியத்தை இலக்காகக் கொண்டு ஈழத்தமிழர்களும் தாய்த்தமிழகத்திலும் தரணியெங்கும் வாழும் தமிழர்களும் மாறாத உறுதியுடன் அனைத்து முனைகளிலும் செயல்படவும், உலக நாடுகளில் ஆதரவைத் திரட்டிடவும், மறைந்த மாவீரர்களை எண்ணி சூளுரைக்க வேண்டும். 
 
ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழமே தீர்வு ஆகும் என்று, 1995 ஜூலை 1 ஆம் தேதி, திருச்சியில் நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.க.வின் மாநில மாநாடு, தொலைநோக்கோடு தீர்மானம் நிறைவேற்றியது. அதே நிலையில், எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், ஈழவிடுதலைக்காகப் போராடுகிறது. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரும், தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களர் குடியேற்றமும் வேகமாக நடக்கின்றது. சிங்கள இராணுவமும், போலீசும், தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ளன. அவர்களையும், சிங்கள குடியேற்றங்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்றும், சுதந்திரத் தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்து, ஒரு பொதுவாக்கெடுப்பை, அனைத்து உலக நாடுகளும், ஐ.நா. மன்றமும் நடத்த வேண்டும் என்றும், அந்தப் பொதுவாக்கெடுப்பில், உலகின் பல நாடுகளில் ஏதிலிகளாக வாழும் ஈழத்தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே, அந்த வாக்குப்பதிவில் பங்கு ஏற்க வகை செய்ய வேண்டும் என்றும், 2011 ஆம் ஆண்டு, ஜூன் 1 ஆம் தேதி, பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற மாநாட்டில், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பிரகடனம் செய்தார்.
 
எனவே,தமிழ் இனக்கொலை புரிந்த ராஜபக்சே கூட்டத்தை, அனைத்து உலக நீதிமன்றக் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதையும், பொது வாக்கெடுப்பு மூலம் சுதந்திரத் தமிழ் ஈழம் அமைப்பதையும் ஒரே இலக்காகக் கொண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடும்; தமிழகத்திலும் தரணியிலும் இதற்கான ஆதரவைத் திரட்டுகின்ற பணியில் ஈடுபடுத்துவது என இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது. 
 
தீர்மானம் 25
 
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு உறுப்பினரும், இமயம் தொலைக்காட்சியின் நிறுவனருமான இமயம் ஜெபராஜ் அவர்கள் தமிழ்நாட்டின் ஜனநாயகத்திற்கு அரண் சேர்க்கும் விதத்திலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்திகள் அன்றாடம் உரிய முறையில் இடம்பெறும் விதத்திலும் நாளேடு ஒன்று தொடங்க இருப்பது வரவேற்கத்தக்கதாகும். அப்படி தொடங்கப்படும் நாளேடு மகத்தான வெற்றிபெற இப்பொதுக்குழு வாழ்த்துகிறது.
 
‘தாயகம்’ தலைமைக் கழகம்
சென்னை - 8 மறுமலர்ச்சி தி.மு.க

01.02.2015

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)