மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்க! வைகோ அறிக்கை

விவகாரங்கள்: கல்வி, மனித உரிமை, சட்ட ஒழுங்கு, அரசியல், வறுமை

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Sun, 11/02/2018


 

 

 

 

 

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில்
முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்க!

வைகோ அறிக்கை

ரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே வரி, ஒரே கல்விக் கொள்கை என்கிற இந்துத்துவா கோட்பாட்டை நடைமுறைப்படுத்திட நாட்டின் பன்முகத் தன்மையை வேரறுக்கும் வேலையை பா.ஜ.க. அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தபோது, எப்படியும் விலக்கு அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கையூட்டினார்.

மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு நீட்நடத்துவதிலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2017 பிப்ரவரியில் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்தச் சட்ட முன்வரைவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பரிந்துரை செய்து அனுப்பாமல் மத்திய பா.ஜ.க. அரசு ஓராண்டு காலமாக கிடப்பில் போட்டுவிட்டது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் நுழைவுத் தேர்வை வலிந்து திணித்து, மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறித்துவிட்டது.

எடப்பாடி பழனிச்சாமி அரசும் தமிழக மாணவர்களை நம்பிக்கை பெற வைத்து கடைசியில் கைவிரித்து, தனது கையாலாகாதத் தனத்தைக் காட்டியது. இதன் விளைவாக மருத்துவக் கனவுடன் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட துயரம், தமிழகத்தையே உலுக்கியது.

முன்பு போலவே பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் மறுமலர்ச்சி தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு ஆகும். இதற்கு இடையில் தற்போது மே 6 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும், மார்ச் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 2017, மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டபோது, ஏராளமான குளறுபடிகள் நடந்தன. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கேள்விகள் வினாத்தாள்களில் இடம் பெற்றன. ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழியைவிட குஜராத், மராத்தி மொழியில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்ததால் நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மாணவர்கள் வழக்குத் தொடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேர்வு எழுத வந்த மாணவ - மாணவியரிடம் சோதனை என்ற பெயரால் நடத்தப்பட்ட அருவருக்கத்தக்க செயல்கள் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாயின.

தேர்வு முடிவுகள் வெளிவந்த பின்னர் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டபோது, வெளி மாநில மாணவர்கள் இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மூலம் தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் சர்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 1269 பேர் இதுபோன்று சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த குழு நடத்திய விசாரணையில், இருப்பிடச் சான்று முறையாக விசாரிக்கப்படாமலும், ஆவணங்கள் சரி பார்க்கப்படாமலும் கடந்த ஆண்டு, வெளிமாநில மாணவர்கள் 296 பேர் மருத்துவக் கல்லுரிகளில் சேர்க்கப்பட்ட விவரம் வெட்டவெளிச்சம் ஆகியது. இதனால் நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் தவிக்கும் நிலைமை உருவானது.

மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த ஆண்டு நீட் தேர்வு மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் நடத்தப்படும் என்று கூறினார். அதற்கு அடுத்த நாளே சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் மூலம்தான் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் சி.பி.எஸ்.சி. மாணவர்கள் மட்டுமே அதிக அளவில் வெற்றி பெற்றனர்.

எனவே இந்த ஆண்டாவது மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்த வேண்டும். மேலும் நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தவிர்த்து, மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


தாயகம்                                                      வைகோ

சென்னை - 8                                       பொதுச்செயலாளர்,
11.02.2018                                                   மறுமலர்ச்சி தி.மு.க.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)