மத்திய அரசின் மூன்றரை ஆண்டுகால ஆட்சியின் தோல்வியைப் பறைசாற்றும் நிதிநிலை அறிக்கை வைகோ கருத்து

விவகாரங்கள்: பொருளாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், விவசாயம், மருத்துவம், மனித உரிமை, தொழிலாளர், சட்ட ஒழுங்கு, தேசிய, அரசியல், வறுமை, போக்குவரத்து

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Thu, 01/02/2018

 

 

 


மத்திய அரசின் மூன்றரை ஆண்டுகால ஆட்சியின்
தோல்வியைப் பறைசாற்றும் நிதிநிலை அறிக்கை

வைகோ கருத்து

த்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள 2018-19 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, மக்களின் எதிர்பார்ப்புகளைத் தவிடுபொடியாக்கி இருக்கிறது. பா.ஜ.க. அரசு முதல் மூன்று ஆண்டுகளில் 7.4 விழுக்காடு வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது; 8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை எட்டுவதில் அரசு உறுதியாக உள்ளதுஎன்று நிதி அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், ‘ஜி.எஸ்.டி. வரி, பணமதிப்பு நீக்கம் மற்றும் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறதுஎன்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் திரு. யஷ்வந்த் சின்ஹா மற்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வரும் கருத்துதான் உண்மை நிலையைப் பிரதிபலிக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறை பண வீக்கம் 3.3 விழுக்காடு அளவுக்குக் குறைந்திருந்தாலும், பொருட்களின் விலையோ சேவைத் துறைகளின் விலையோ குறையவில்லை என்பதுதான் யதார்த்த நிலை ஆகும்.

அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்கள், வர்த்தகம் செய்வதற்கான எளிமையான விதிமுறைகள், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் போன்ற பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளால் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களும், பன்னாட்டுப் பெரு நிறுவனங்களும்தான் பெரிதும் பயன் பெற்றுள்ளன. வேளாண்மைத் துறைக்கு அடுத்ததாக, வேலைவாய்ப்புகளை வழங்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடந்த மூன்றரை ஆண்டுகளில் சந்தித்து வரும் நெருக்கடிகளுக்கு நிதிநிலை அறிக்கையில் தீர்வு இல்லை. மோடி அரசின் முந்த்ரா வங்கி கடன் திட்டம்என்பது விளம்பரத்துக்குத்தான் பயன்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

பா.ஜ.க. அரசின் மேக் இன் இந்தியா’, ‘ஸ்டார்ட் அப் இந்தியாதிட்டங்கள் கடந்த கால நிதிநிலை அறிக்கைகளில் பெரிதாகச் சொல்லப்பட்டவை. ஆனால், நடைமுறைக்கு வந்ததா என்பதுதான் கேள்வி! பிரதமர் பொறுப்பை ஏற்றபோது ஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மோடி அளித்த வாக்குறுதியும் நிறைவேறியதா? இதுவரையில் 70 இலட்சம் வேலைவாய்ப்புகளே உருவாக்கி உள்ளதாக நிதி அமைச்சர் கூறி இருக்கிறார். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை நம்பிக்கையூட்டவில்லை.

வேளாண்மைத் துறைக்குச் சாதகமான நிதிநிலை அறிக்கை இது என்று பிரதமர் கூறுவது உண்மையா? நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு ஆண்டுதோறும் குறைந்து வருவது வேளாண் துறையின் தொடர் வீழ்ச்சியைத்தான் குறிக்கிறது. 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு ஆக்கப்படும் என்று மோடி அரசு கூறும் இலக்கை அடைய முன்வைத்துள்ள திட்டங்கள் என்ன? விவசாய விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன் ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்யப்படும் என்பது போதுமானது அல்ல.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை செய்தவாறு விவசாய விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50 விழுக்காடு சேர்த்து வழங்குவதுதான் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக அமையும். விவசாயத் துறை கட்டமைப்புக்குக் குறைநத அளவில் 22 ஆயிரம் கோடி ரூபாய்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நீர்ப் பாசனத்துக்காக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது வெறும் அறிவிப்போடு நின்று போனது.

விவசாயிகளின் தற்கொலைக்குத் தாங்க முடியாத கடன் சுமைதான் முக்கிய காரணம் ஆகும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிவரும் நிலையில், விவசாயக் கடன் அட்டைகள் விரிவாக்கப்படும்; மீனவர், கால்நடை வளர்ப்போர் இதனால் பயன் பெறுவர் என்ற அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது.

பா.ஜ.க. அரசு அறிவித்த தேசிய சுகாதாரக் கொள்கை முழுக்க முழுக்க சுகாதாரத் துறை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தனியாரிடம் ஒப்படைக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பொது சுகாதாரத் திட்டத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 விழுக்காடு ஒதுக்க வேண்டும் என்று கோரி வரும் நிலையில், மருத்துவத் துறையை அரசு கைகழுவி விடுவதும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயற்படுத்துவதும் பயன் அளிக்காது. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அறிவிப்பு இல்லை.

மாத ஊதியம் பெறுவோர், வருமான வரி உச்சவரம்பை ரூ. 5 இலட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரி வரும்போது, அதில் எந்த மாற்றமும் செய்யப்படாதது அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கல்வித்துறைக்காக ஒதுக்கீடுகள் குறைந்து வருவது மட்டுமின்றி, தனியார் துறைக்கு மட்டுமே ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் வகையில் பா.ஜ.க. அரசின் கொள்கை இருக்கிறது. உயர் கல்வித் துறையில் அரசின் முதலீடுகளை அதிகரிக்காமல் உயர் கல்வி பயில்வோருக்குக் கடனுதவி அளிக்க நிதியம் ஏற்படுத்தப்படும்; அதில் தனியார் பங்கு கோரப்படும் என்பது, உயர் கல்வி என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகி விடும்.

80 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டுவதற்கு இலாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்வது ஏற்கத் தக்கது அல்ல.

தமிழகம் மிகவும் எதிர்பார்த்த திட்டங்கள் பலவற்றுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் தருகிறது. குறிப்பாக ரூ. 9,446 கோடி செலவில் சென்னை சுற்றுச்சாலைத் திட்டத்துக்கு அனுமதி, தேசிய நெடுஞ்சாலை 45 ஏ மேம்படுத்துதல் மற்றும் அதை 4 வழிச் சாலையாக மாற்றுதல், நாகை-குமரி இடையேயான சாலையை மேம்படுத்துதல், கோதாவரி-பாலாறு-பென்னாறு-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு அறிவிப்பு, கோயம்பேடு-பூவிருந்தவல்லி-வாலாஜாபேட்டை இடையே 6 வழிப் பாதை போன்ற திட்டங்கள் கவனிக்கப்படவில்லை.

முதன்முறையாக தொடர்வண்டித் துறைக்கான நிதி அறிக்கையும், பொது நிதிநிலை அறிக்கையுடன் சேர்த்து இப்போது தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இருப்புப் பாதை அமைப்பு, தொடர் வண்டி நிலையங்கள் மேம்பாடு, தொடர் வண்டிப் பாதை மின்சார மயமாக்குதல் போன்ற அனைத்துக்கும் தனியார் பங்களிப்பு பயன்படுத்தப்படும் என்ற அறிவிப்பு, தனியார் மயத்தை நோக்கி தொடர்வண்டித் துறை போய்க் கொண்டிருப்பதை உறுதி செய்கிறது.

நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கும் தமிழ்நாட்டுத் திட்டங்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடுகள் இல்லை. சென்னை - தூத்துக்குடி இடையேயான சரக்குத் தொடர்வண்டிப் பாதை, சென்னை - மதுரை - கன்னியாகுமரி இடையேயும், மதுரை - கோவை இடையேயும் பயணிகள் தொடர்வண்டித் திட்டம், சென்னை மெட்ரோ தொடர்வண்டி இரண்டாவது கட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு போன்றவை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது தமிழகம் தொடர்வண்டித் துறையில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைக் காட்டுகிறது.

மொத்தத்தில் பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கை மூன்றரை ஆண்டுகால தோல்வியை எதிரொலிக்கிறதேயொழிய அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் இல்லை.

இதுவரை ஆங்கிலத்தில் மட்டும்தான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் இந்தியிலும் தாக்கல் செய்து இருக்கிறார். எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் மட்டுமே வரவேற்கத் தக்கது. அனைத்துத் துறைகளிலும் மிக வேகமாக இந்தியைத் திணித்து வருகிற மத்திய அரசினுடைய இந்தி ஆதிக்க வெறி பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

நிதிநிலை அறிக்கையை இந்தியில் தாக்கல் செய்ததற்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.

தாயகம்                                                                    வைகோ
சென்னை - 8                                                   பொதுச்செயலாளர்,
01.02.2018                                                          மறுமலர்ச்சி தி.மு.க.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)