மரபு அணு மாற்று விதைகள்: சொந்தக் கருத்துகளைத் திணித்து, மக்கள் கருத்துகளைப் புறக்கணிப்பதா? வைகோ கண்டனம்

விவகாரங்கள்: பொருளாதாரம், விவசாயம், தேசிய, புறநகர்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்

Date: 
Thu, 21/01/2010

மரபு அணு மாற்று விதைகள்: சொந்தக் கருத்துகளைத் திணித்து, மக்கள் கருத்துகளைப் புறக்கணிப்பதா? வைகோ கண்டனம்

மரபு அணு மாற்று உணவுப் பயிர்களை இந்தியாவில் அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பதைப் பற்றி மக்களின் கருத்தைக் கேட்பதற்காக, மத்திய அரசு கருத்துக் கேட்பு நிகழ்வுகளை இந்தியாவில் ஏழு இடங்களில் நடத்துகிறது.


ஆனால், தமிழக விவசாய அமைச்சர், மக்களிடம் கருத்துகளைக் கேட்காமல், மரபு அணு மாற்றுப் பயிர்களை அனுமதிப்பதற்கு ஆதரவாகப் பேசுகிறார். ஒரு கருத்துத் திணிப்பைத் தமிழக அரசு நடத்துகிறது. தமிழக அரசும், தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகமும், மரபு அணு மாற்று விதைகள் விரைவாகப் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்று, மான்சான்டோ கம்பெனியின் ஏஜெண்ட் போல தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.


இதுகுறித்து மத்திய அரசு தமிழகத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாத நிலையில், அப்படி ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் வற்புறுத்தாதது ஏன்?


மரபு அணு மாற்று விதை கூடாது என்ற ஆராய்ச்சியாளர்களின் நிலைப்பாட்டை, தமிழக விவசாயிகளைப் பாதுகாக்கும் கருத்தைப் பதிவு செய்யக்கூடாது என்று முதல் அமைச்சர் கருதுவது தான் இதற்குக் காரணம் ஆகும். இதைப்பற்றி எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை.


தமிழக மக்களின் கருத்தே தேவையில்லை என்று நினைக்கிறாரா?


முல்லைப் பெரியாறு பிரச்சினையில் எதுவும் பேசாத முதல் அமைச்சர், இதிலும் மெளனமாகவே இருக்கிறார்.


இந்தியாவில் முதல் மரபு அணு திணிப்பு உணவுப் பயிராகத் திணிக்கப்பட உள்ள BT கத்திரிக்காயை உண்பதால், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை முழுமையாக ஆராயாமல், சில குறைந்த கால ஆய்வுகளின் அடிப்படையில் BT கத்திரிகாயை அனுமதிப்பது தவறு.


மரபு அணு மாற்று பருத்தி விதைகளைப் பயன்படுத்தியதால் மராட்டிய, மாநிலத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஆடு, மாடுகள் செத்துப்போயின. பருத்திப் பயிர்த் தொழிலுக்கே பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மரபு அணு மாற்று கத்திரிக்காயை விளைவித்தால், அது குணப்படுத்த இயலாத உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும் என்பதை, இத்துறையின் விற்பன்னர்களும் ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்து உள்ளனர்.


எனவே, இந்த மிக முக்கியமான பிரச்சனை குறித்து, தமிழக மக்களின் கருத்துகளைப் பதிவுசெய்கின்ற வகையில், தமிழகத்திலும் கருத்துக் கேட்புக் கூட்டத்தை மத்திய அரசு நடத்த வேண்டும். அந்தக் கூட்டத்தில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அவர்களும் கலந்து கொள்ள வேண்டும்.


அத்தகைய கூட்டத்தை மத்திய அரசு நடத்தவில்லை என்றால், தமிழக அரசே அனைத்து மாவட்டங்களிலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி, தமிழக மக்களின் எண்ணங்களை மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.


மிகவும் முக்கியமான இப்பிரச்சினையில் மத்திய - மாநில அரசுகள் ஏன் இத்தனை அவசரப்படுகின்றன? என்பது புரியாத புதிராக இருக்கிறது.


அனைத்து மக்களின் கருத்துகளையும் அறிந்த பின்புதான் முடிவெடுக்க வேண்டும். தமிழக அரசும் தன்னுடைய உரிமையை மத்திய அரசிடம் விட்டுக் கொடுக்கக் கூடாது. மக்கள் உணர்வுகளின் அடிப்படையில்தான் எந்த முடிவையும் மேற்கொள்ள வேண்டும்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)