ஆளுநர் உரை..... தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றம்! வைகோ அறிக்கை
விவகாரங்கள்: பொருளாதாரம், விவசாயம், தொழிலாளர், அரசியல்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
ஆளுநர் உரை..... தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றம்! வைகோ அறிக்கை
ஆளுநர் உரையில் அரசின் சாதனைகளைப் போற்றி இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் வெற்றிகளை வழங்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது தவறாகும்.
திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியின் பண பலம்; அதிகார துஷ்பிரயோகம் பட்டவர்த்தனமாகப் பயன்படுத்தப்பட்டன. அதன் விளைவாக ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. அரசின் சாதனைகளை பாராட்டித்தான் வாக்களித்திருக்கிறார்கள் என்றால் ஓர் ஊருக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்; ஐந்து ஊர்களுக்கு ஓர் அமைச்சர் வாக்கு சேகரித்தது ஏன்? மற்றும் வாக்காளர்களுக்குத் தண்ணீராகப் பணம் பரிமாறப்பட்டது ஏன்?
தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணை உரிமையை நிலைநாட்ட இவ்வரசு தவறி விட்டது. உரிய முறையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பயன்படுத்தாமல் இழுத்தடித்து இப்போது அரசியல் சட்ட அமர்வுக்கு வழக்கைக் கொண்டு செல்ல தமிழக அரசு சம்மதித்த செயல் வஞ்சகமானது.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே முறியடிக்கும் மத்திய அரசின் மீன் பிடி ஒழுங்குமுறை மசோதாவை இரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறியது தமிழக மீனவர்களை வஞ்சிக்கும் செயலாகும்.
பருவமழை பொய்த்த விருதுநகர் போன்ற மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எந்தக் குறிப்பும் ஆளுநர் உரையில் இடைம் பெறாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
மாநிலம் முழுவதும் சிக்குன் குனியா போன்ற கொடிய வைரஸ் காய்ச்சல் தாக்கப்பட்டு பொது மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தகுந்த தடுப்பு முறைகளும் மருத்துகளும் அரசு மருத்துவமனைகளில் இல்லாத நிலைமை உள்ளது. இந்தோய்க்கு தகுந்த சிகிச்சை அளிப்பது பற்றியும் ஆளுநர் உரையில் எவ்வித குறிப்பும் இல்லாதது வருந்தத்தக்கது.
அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த முறையில் மீண்டும் பணியில் அமர்த்தும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள 55 இலட்சம் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயலாகும்.
தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு நிலவுகளிறது. விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. சீரான மின்சாரம் கிடைக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி எவ்விதக் குறிப்பும் ஆளுநர் உரையில் இடம் பெறாதது வருந்தத்தக்கது.
தொடரும் மணல் கொள்ளையைத் தடுக்க எவ்வித உறுதியான நடவடிக்கையும் எடுப்பதாக ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை.
கரும்பு விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. ஆளுநர் உரையில் கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி எவ்விதக் குறிப்பும் இடம் பெறாதது கரும்பு விவசாயிகளை ஏமாற்றம் அடையச் செய்திருக்கிறது.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
06.01.2010

