தணலுக்கு உயிர்களை ஈந்த தியாகிகள் ஊட்டிய உணர்வில், அண்ணா வழியில், திராவிட இயக்க இலட்சியங்களை வென்றெடுப்போம்! வைகோ சூளுரை.

செய்தித்துறை: தலைப்பு செய்திகள், சொற்பொழிவுகள்

மாவட்டம்: விருதுநகர், தமிழ்நாடு

Date: 
Fri, 29/01/2010

தணலுக்கு உயிர்களை ஈந்த
தியாகிகள் ஊட்டிய உணர்வில், அண்ணா வழியில்,
திராவிட இயக்க இலட்சியங்களை வென்றெடுப்போம்!

வைகோ
சூளுரை

இந்தி ஆதிக்க உணர்வுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து, தமிழ் மொழி காக்க தம் இன்னுயிரை ஈந்த மொழிப் போர்த் தியாகிகளின் நினைவாக கழகத்தின் சார்பில் தமிழகம் எங்கும் வீரவணக்க நாள் நிகழ்ச்சிகள் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றன. 25.01.2010 அன்று இராஜபாளையத்தில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...

 

அன்னைத் தமிழுக்குத் தங்கள் உயிர்களைத் தந்த வீரத் தியாகிகளுக்கு புகழ் அஞ்சலி செலுத்துகின்ற கூட்டம். மாவட்டச் செயலாளர் ஆருயிர்ச் சகோதரர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் தலைமை தாங்கும் கூட்டம். மாணவர் அணி செல்வராஜ் வரவேற்க, நகரச் செயலாளர் ராஜா நன்றிகூற, துணைப் பொதுச் செயலாளர் நாசரேத்துரையும், சட்டமன்ற உறுப்பினர்கள் வரதராஜன், ஞானதாசும் உரையாற்றிட, இராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் நான் உங்கள் முன்னால் நிற்கின்றேன். பெருங்கூட்டம். கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு அப்பாலும் கட்டுக்கு அடங்காத கூட்டம். என்ன காரணம்? என்று யோசித்துப் பார்க்கிறேன். இதுவரை நடைபெற்ற கூட்டங்களில், இதுவே முத்தாய்ப்பாக அமைந்த கூட்டம் என்றார் வரதராஜன். அடிபட்ட வேங்கைகள் அல்லவா நீங்கள்? அதனால் திரண்டு வந்து இருக்கிறீர்கள்.


உங்கள் நெஞ்சில் நேசிக்கின்ற உங்கள் சகோதரன் தோற்றுப்போனான் அல்லவா? நாடாளுமன்றம் செல்ல வேண்டிய உங்கள் சகோதரன் தோற்றுப் போனான் அல்லவா? தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கின்ற ஒரு குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க இயலாமல் போயிற்று அல்லவா?


பணபலத்தால், ஆதிக்கவாதிகளின் அராஜகத்தால், விருது நகர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றியை இழந்தோம். அந்த வேதனை ஒருபக்கத்திலும், 100 கோடி ரூபாயை விருதுநகர் தொகுதியில் கொட்டினார்கள். ஆனால், இந்த இராஜபாளையம் உள்ளிட்ட தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் நமது அணி வெற்றி பெற்று இருக்கிறது. இங்கே இந்தக் கூட்டம் நடைபெறுவதால், பல்லாயிரக் கணக்கில் திரண்டு வந்து இருக்கிறீர்கள். நடுநிலையாளர்கள், உழவர் பெருங்குடி மக்கள், பாட்டாளிகள், மாணவச் செல்வங்கள் என பெருந்திரளாகத் திரண்டு வந்து இருக்கிறீர்கள்.


முதல் அமைச்சர் நாற்காலிக்கு மரியாதை தேடிக் கொடுத்த பி.எஸ்.குமாரசாமி ராஜா பிறந்த இராஜபாளையத்தில், நேர்மையும், நாணயமும் பொது வாழ்வில், அரசியலில் நிலைக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட பெருமக்கள் நிறைந்து இருக்கக்கூடிய இராஜபாளையம் திருநகரில், இந்த அரிய வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த, இந்த நகரத்தில் இயக்கத்துக்குப் பாடுபடுகின்ற ஆருயிர்த் தம்பிமார்களுக்கு, சகோதரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த நிகழ்ச்சிக்காக நாங்கள் கடைத்தெருவில் வசூலிக்கவில்லை; யாரிடமும் பொருள் உதவி கேட்கவில்லை. எங்கள் சக்திக்கு மீறிய செலவை, நாங்களே பகிர்ந்து கொண்டோம் என்று மாவட்டத் துணைச் செயலாளர் விநாயக மூர்த்தி கூறினார். அப்படி சொல்லக்கூடிய தியாக மாணிக்கங்கள் இங்கே இருக்கின்றார்கள். நான் நன்றி தெரிவிக்கிறேன் உங்களுக்கு. நீங்கள் இருக்கின்ற வரையிலும், இந்த இயக்கத்தை யாரும் சாய்க்க முடியாது. நான் இங்கே பேசிக்கொண்டு இருக்கின்ற இதேவேளையில், தமிழகம் முழுவதும், நமது கழகச் சொற்பொழிவாளர்களும் முழங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து உயிர்நீத்த உத்தமர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.


தலைநகர் சென்னையில் நமது கழகத்தின் பொருளாளர் டாக்டர் மாசிலாமணி அவர்கள் பேசுகிறார்கள். சில நிமிடங்களுக்கு முன்னாலே எனக்கு ஒரு செய்தி வந்தது. தென்சென்னையில் நடைபெறுகிற கூட்டத்தில், மேடையை நோக்கிக் கல் வீசி இருக்கிறார்கள். மகளிர் அணிச் செயலாளர், அருமைத் தங்கை குமரிவிஜயகுமார் அவர்கள் உரை ஆற்றிக்கொண்டு இருந்த வேளையில், காலிகள் மேடைக்கு அருகே வந்து கல் வீசி இருக்கிறார்கள். சட்டத்துறைச் செயலாளர் என் ஆருயிர்ச் சகோதரர் தேவதாஸ் மீது அந்தக் கல் தாக்கி இருக்கிறது.


அராஜகத்தின் உச்சகட்டத்துக்குச் சென்றுவிட்ட ஆளுங்கூட்டத்துக்குத் தெரிவிக்கின்றேன். மிரட்டிப் பார்க்காதே. கலவரம் செய்ய நினைக்காதே. எந்த அடக்குமுறைக்கும், ஆபத்துகளுக்கும் அஞ்சியவர்கள் அல்ல நாங்கள். உங்கள் அதிகாரக் கோட்டை உடைந்து நொறுங்குகிறது என்பதற்கு அடையாளம்தான் அந்த மேடையில் வந்து விழுந்த கல். உங்கள் அதிகாரத்துக்கு,அக்கிரமத்துக்கு, அராஜகத்துக்கு மக்களே கல்லறை எழுப்புவார்கள்.


தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற கூட்டம் இது. ஒரு கொள்கைக்காக உயிர்நீத்த உத்தமர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். அந்தக் கொள்கை, இலட்சியங்கள் அழியாது. அதற்காகத் தங்கள் உயிரைத் தந்தவர்கள், உதிரம் சிந்தியவர்கள், தணலுக்குத் தங்கள் ஆவியைத் தந்தவர்கள், அப்படிப்பட்ட வீரத்தியாகிகளுக்கு ஜனவரி 25 ஆம் நாள், புகழ் அஞ்சலி செலுத்தி சூளுரை மேற்கொள்வதற்காகக் கூடி இருக்கிறோம். இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கின்ற போராட்டம் என்பது ஒரு நெடிய வரலாறு.


இந்தக் கூட்டம், கடந்த ஆண்டுகளைவிடச் சற்று வித்தியாசமானது. ஏனெனில், கடந்த ஜனவரி 29 ஆம் நாள்தான், எங்கள் முத்துக்குமார், ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து உயிரைப் பலிகொடுத்தான். நம் தொப்புள் கொடி உறவுகள் அழிந்து மடிகின்றனரே என்ற வேதனையில் தீக்குளித்தான்.


விதியே, விதியே என் தமிழ்ச்சாதியை என் செய நினைத்தாய்? என்றான் முண்டாசுக்கவிஞன் பாரதி.


அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?
வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?
கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?
விதியே விதியே என் தமிழ்ச் சாதியை
எவ்வகை விதித்தாய் என்பதன்
மெய் எனக்கு உணர்த்துவாய்


ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டிலும், தென்முனை அடுத்த தீவுகள் பலவிலும், பூமிப்பந்தின் கீழ்ப்புறம் உள்ள பற்பல நாடுகளிலும், இந்த எளிய தமிழ்ச்சாதி, கைத்தடி உண்டும், தடி உதை உண்டும், மடிந்திடும் செய்தியும், மாய்ந்திடும் செய்தியும், பிணிகளால், நோய்களால் சாவதும், நெடுந்தொலைவு தன் நாட்டு மக்களைப் பிரிந்த நலிவினால் சாவதும், இவையெலாம் கேட்டும் என் உளம் அழிந்திலேன். என் நெஞ்சு இன்னமும் வெடிக்கவில்லை என்று எங்கோ பிஜித் தீவுகளில் அடிபட்டவர்களுக்காக வேதனைப்பட்ட பாரதி, தமிழர்கள், மண்வெட்டிக் கூலி தின்னலாச்சே நம் வாள்வலியும் தோள்வலியும் போச்சே என்று தன் இதயக்குமுறலை வெளியிட்ட கவிஞன், தமிழன் அடிபட்டதற்காகத் துடித்தான். சவுக்கடி பட்டதற்காக என் இருதயம் வெடிக்கவில்லையே என்று துடித்தான்.


ஆனால், இன்று நம் தமிழ்ச் சமுதாயத்துக்கு நடந்த கொடுமையும், அழிவும், இழிவும் சாதாரண மானதல்ல. இரத்தம் ஆறாக ஓடியது. தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனர். நாதியற்றுப் போய் விட்டானா தமிழன்? இந்த நானிலத்தில் தமிழ்ச் சாதி மனிதச் சாதி இல்லையா? என்ற கேள்விகள் எழுகிற நிலையில், இந்த ஜனவரி 25 தியாகிகள் நினைவுநாளில் நாம் கூடி இருக்கிறோம். பருந்துப் பார்வையில் சில வரலாற்றுச் செய்திகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.


1925 ஆம் ஆண்டு, அதுவரை காங்கிரஸ் கட்சியின் நடுநாயகமாக நின்று போராடிய ஈரோட்டுத் தந்தை பெரியார், தமிழகத்தில் இந்தி நுழைய முயற்சிக்கிறது என்பதால், தமிழுக்கு வருகின்ற ஆபத்துகளைத் தடுக்க, ‘தமிழுக்குத் துரோகம்; இந்தி ரகசியம்’ என்று குடியரசு ஏட்டில் எழுதினார். அதற்குப் பிறகு காங்கிரசை விட்டு வெளியே வந்தார். 1931 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி, குடியரசு இதழில், இந்தித் திட்டம் ஆரியப் புரட்டு; என்று எழுதினார். தமிழ் அறிஞர்கள் ஆர்த்து எழுந்தனர். ஒருபக்கத்தில் பசுமலை சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள், தமிழுக்கு ஆபத்தா? என்று துடித்து எழுந்து வந்தனர். 1938 ஆம் ஆண்டு, பிப்ரவரி 25 ஆம் தேதி, தமிழ்நாட்டில் இந்தியை ஆச்சாரியார் ஆட்சியில் திணித்தார். அதை எதிர்த்துப் போர்முரசு கொட்டினார் தந்தை பெரியார். சிலிர்த்து எழுந்தார் பேரறிஞர் அண்ணா. எதிர்ப்பு உணர்வுகள் வளர்ந்தன. அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி, ஆகஸ்ட் 1 ஆம் தேதி புறப்பட்டு திருச்சி உறையூரில் இருந்து, தமிழ் காக்கும் பெரும்பயணம் மேற்கொண்டு, 42 நாள்கள் நடந்து, தலைநகர் சென்னைக்குச் சென்று, தந்தை பெரியாரிடம் வாழ்த்துப் பெற்றார்.


38 ஆம் ஆண்டு, டிசம்பர் 5 ஆம் தேதி, நடராசன் கைது செய்யப்பட்டார். 6 ஆம் தேதி தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு, பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் அறிவித்த மாநாடு நிற்கவில்லை. டிசம்பர் 29,30,31 ஆகிய மூன்று நாள்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில், ஓமன் கடலில் மடிந்தாரே சர் ஏ.டி.பன்னீர்செல்வம், தந்தை பெரியாரின் படத்தை ஊர்வலமாகக் கொண்டு வந்து, மேடையில் படத்தை வைத்து, ‘என் தோளுக்குச் சூட்டிய மாலையை, பெரியாரின் தாளுக்கு இடுகிறேன்’ என்று பேசினார்.


அந்தக் காலகட்டத்தில் சட்டமன்றத்தில், முதல் அமைச்சராக இருந்த ராஜாஜி, இந்தியை எதிர்ப்பவர்கள் இரண்டு பேர்தான். ஒருவர் ஈரோட்டு நாயக்கர், இன்னொருவர் பன்னீர்செல்வம் என்றார்.

பன்னீர் செல்வம் உடனே எழுந்து சொன்னார். ஆம்; இந்தியைத் திணிப்பவர் நீங்கள் ஒருவர்தான். எதிர்ப்பவர்கள் நாங்கள் இரண்டு பேர். எனவே, இதிலும் எதிர்ப்புத்தான் மெஜாரிட்டி’ என்று பதில் சொன்னார். இப்படி வளர்ந்தது இந்தி எதிர்ப்புப் போராட்டம். ஜனவரி 15 ஆம் தேதி, சிறைக்கு உள்ளே அடைக்கப்பட்டு இருந்த நடராசன் மடிந்தார். மார்ச் 12 ஆம் தேதி, தாளமுத்து மறைந்தார். ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தில், பிற்படுத்தப்பட்ட நாடார் குலத்தில் பிறந்த இவர்கள் தங்கள் உயிர்களைத் தந்தனர். நடராசனின் மூலக்கொத்தளம் சுடுகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச்சென்றபோது, மேயர் பாசுதேவும், முத்தையா செட்டியாரும் இறுதி ஊர்வலத்தில் வர, மூலக்கொத்தளம் சுடுகாட்டிலே பேசுகிறபோது, அண்ணா சொன்னார்.


‘இந்தச் சிதையில் எரிகிற நெருப்பு அணைந்து போகும். ஆனால், எங்கள் நெஞ்சில் மூண்ட நெருப்பு அணையாது. அது எரிமலையாக வெடிக்கும்’ என்று சொன்னார். அதே மூலக்கொத்தளம் சுடுகாட்டில் தான், கடந்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி, முத்துக்குமாரின் சடலத்தைக் கொண்டுபோய் நாங்கள் அடக்கம் செய்தோம். நள்ளிரவு நேரத்தில் முத்துக்குமாரின் உடலைக் கொளத்தூரில் இருந்து தூக்கிக்கொண்டு போகிறபோது, சாலையின் இருமருங்கிலும் தாய்மார்கள் வரிசையாகச் சுடர் விளக்குகளை ஏந்திக்கொண்டு, மெழுகுவர்த்திகளை ஏந்திக்கொண்டு நின்றனர்.

முத்துக்குமாரின் சடலம் வந்த வாகனத்தைப் பார்த்து வணங்கினார்கள்.


வீரத்தாய்மார்கள், தங்கள் குழந்தைகளைக் கொண்டு வந்து, முத்துக்குமார் சடலம் இருந்த வண்டியைத் தொட்டுக் கும்பிடச் சொன்னார்கள். அந்தக் காட்சியைக் கண்டேன். கண்ணீரும், கம்பலையுமாக வழி நெடுகிலும் தமிழர்கள். உணர்ச்சி அழியவில்லை. தமிழகத்தில் உணர்ச்சி செத்துப் போய்விடவில்லை. இலட்சக்கணக் கான மக்கள் அந்த ஊர்வலத்தில் கண்ணீரைக் கொட்டினார்கள். அதற்குப் பிறகும் நடைபெற்ற இன அழிவு, தாங்க முடியாதது. ஆகவேதான், இந்தி எதிர்ப்புத் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற வேளை யில், நான் இந்த நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டினேன்.


அண்ணா தந்த உணர்வுகள், இன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிறதா? பழைய தோழர்களைக் கேட்கிறேன். அந்த இயக்கத்துக்காகத் தங்கள் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்ட உண்மைத் தொண்டர்களைக் கேட்கிறேன். எங்கே கொள்கை? எங்கே இலட்சியம்? என்ன ஆயிற்று தியாகம்? இன்றைக்குக் கல் வீசுகிறீர்களே? இயக்கத்துக்காகப் பாடுபட்ட மாவட்டச் செயலாளரை, வீட்டு வாசலில் வெட்டிக் கொன்றீர்கள். இன்றைக்கு அதிகார பீடத்தில் இருந்து கொக்கரிக்கின்றீர்கள்.


நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இல்லை என்று சொல்லி, கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்களைத் தோற்கடிப்பதற்கு வேட்பாளர்களை நிறுத்தியபோது, மதிப்புக்குரிய பேராசிரியர் அவர்களிடம் கேட்டார்கள். இன்றைய முதல் அமைச்சரின் மகன் இப்படிச் செய்கிறாரே என்று கேட்டபோது, ‘அவர் தி.மு.கழகத்திலேயே கிடையாது; உறுப்பினர் கூட இல்லை’ என்று சொன்னதை நான் நினைவூட்டுகிறேன்.


எத்தனைத் தோழர்கள் கண்ணீரும், ரத்தமும் சிந்தி உருவாக்கிய இயக்கம் தி.மு.க.? ஒரு தியாக வேள்வியின் பின்னணியில் அண்ணா ஆட்சிக்கு வந்தார். அவர் உருவாக்கிய அரசியல் எங்கே? மதுரைக் கொலை வழக்கு என்ன ஆயிற்று? குற்றம் சாட்டப்பட்ட முதல் அமைச்சரின் மகனை எதிர்த்து, ஒருவரைத் தவிர, அனைத்துச் சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாகி, அவர் விடுதலையாகி விட்டார். கொலைக்குற்றத்தில் கூண்டில் நிறுத்தப்பட்டவர்களுக்கு மதுரையில் மாபெரும் வரவேற்பு. அதே மதுரையில், பட்டப்பகலில் தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த வழக்கிலும், காவல்துறை அதிகாரி உட்பட அனைவருமே பிறழ் சாட்சிகளாகி விட்டார்கள். வழக்கு தள்ளுபடியாகி விட்டது. கொலைகாரர்கள், சுதந்திரமாகத் திரிகிறார்கள்.

அதன் விளைவுதான், இன்றைக்குத் தலைநகர் சென்னையில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை.


பணத்தைக் காட்டி ஓட்டு வாங்கலாம்; கயவர்களை ஏவிவிட்டுக் கை கால்களை வெட்டலாம் என்கிற கொடுமை நிலவுகிறது. இதற்காகவா அண்ணா போராடினார்? பாடுபட்டார்? இன்றைக்கு ஒரே குடும்பத்தின் கையில் தமிழகத்தின் ஆட்சி அதிகாரங்கள். இதுவா ஜனநாயகம்?


இந்தக் கேட்டில் இருந்து தமிழகத்தை மீட்டாக வேண்டும். அந்த உறுதியோடு பாடுபடுகிற இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். எனவேதான், இலட்சியத்துக்காக உயிர்களை ஈந்த உத்தமர்களின் நினைவுநாளில் வீரவணக்கம் செலுத்துகிறோம்.


தந்தை பெரியார் பெல்லாரிச் சிறையில் இருந்து வெளியே வந்தபோது சொன்னார்: ‘நான் சிறையிலேயே செத்து இருந்தால், இந்தக் கொள்கைக்கு இன்னும் வீரியம் ஏற்பட்டு இருக்கும்’ என்றார்.

அப்படித் தியாகத்தால், அன்னைத் தமிழ் காக்க அவர்கள் போராடினார்கள். 1963 ஏப்ரல் 13 இல், அன்றைய உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி, ‘இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழி’ என்று இந்திய நாடாளுமன்றத்தில் ஆட்சிமொழிச் சட்டத்தைத் தாக்கல் செய்தார். அக்டோபர் 13 இல் கோடம் பாக்கத்தில் அண்ணாவின் இயக்கம் மாநாடு கூட்டியது. ‘அரசியல் சட்டத்துக்குத் தீயிடுவோம்’ என்று முடிவு எடுத்தார். அந்தப் போராட்டத்தின் விளைவாகத்தான் கீழப்பழுவூர் சின்னச்சாமி, 1964 ஆம் ஆண்டு, ஜனவரி 24 ஆம் தேதி, தன் உடம்பில் பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்துக்கொண்டு தன்னைத்தானே மாய்த்துக் கொண்டான். மாணவர் கிளர்ச்சி உருவாயிற்று.


1965 ஜனவரியில் மொழிப்புரட்சி வெடித்தது. இலட்சக்கணக்கான மாணவர்கள், தலைநகர் சென்னையில், மதுரையில், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில், பள்ளி மாணவர்கள், மாணவிகள், கல்
லூரி மாணவர்கள் வீதிக்கு வந்தார்கள். இந்திக்கு இந்நாட்டில் ஆதிக்கமா? இங்கு எல்லோரும் வாருங்கள் தோழர்களே என்று போர்க்களத்துக்கு வந்தார்கள். அடக்குமுறை தாண்டவம் ஆடியது.

காவல்துறையின் குண்டாந்தடிகள் மண்டைகளை உடைத்தன. இரத்தம் சிந்தினார்கள் மாணவர்கள். மதுரை மாசி வீதியில் வெட்டப்பட்டார்கள்.


அப்படி வெடித்த போராட்டம், 48 மணி நேரத்தில் சிதம்பரத்தில் வெடித்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து மாணவர்கள் திரண்டு வந்த ஊர்வலத்தின் மீது துப்பாக்கியால் சுட்டார்கள். சிவகங்கை தந்த வீரன் இராஜேந்திரன் தொண்டைக்குழியில் குண்டு பாய்ந்து மடிந்தான். அந்தச் செய்தி காட்டுத் தீயெனப் பரவியது. மாணவர் கிளர்ச்சி வெடித்தது. மத்திய அரசு அலுவலகங்கள் மாணவர்களின் கைகளிலே. அஞ்சல் அலுவலகங்கள், ரயில் நிலையங்கள் மாணவர்களின் கைகளிலே. அதன் விளைவு, எல்லையைப் பாதுகாக்க வேண்டிய இந்திய இராணுவம், தமிழகத்துக்கு உள்ளே நுழைந்தது.

காக்கை குருவிகளைச் சுடுவதுபோல, திருப்பூரில், ஆரணி, பொள்ளாச்சியில் துப்பாக்கியால் சுட்டனர். செத்து விழுந்தனர் வாலிபர்கள். பிணங்களின் எண்ணிக்கை தெரியக்கூடாது என்பதற்காக, கோவை மதுக்கரைக் காடுகளில் பள்ளங்களைத் தோண்டி, பிணங்களைப் போட்டு, பெட்ரோலை ஊற்றிக் கொளுத்திச் சாம்பலாக்கினார்கள். இந்தப் போராட்டம், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், இந்தியாவின் தெற்கு மாநிலத்தில் பெரும் போராட்டம் வெடித்து விட்டது; எரிமலை வெடித்து விட்டது என்று எழுதுகிற அளவுக்கு, அகிலத்தின் கவனத்தை ஈர்த்தது.


கீழப்பழுவூர் சின்னச்சாமி வகுத்த பாதையில், சிவலிங்கம், அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், சத்திய மங்கலம் முத்து, கீரனுhர் முத்து, மாயவரம் சாரங்கபாணி, பீளமேடு தண்டபாணி ஆகியோர் நெருப்புத் தணலுக்குத் தங்களைத் தந்தார்கள். அவர்கள் மடிந்து, மண்ணோடு மண்ணாகி விட்டார்கள். இந்தி தமிழ்நாட்டுக்கு உள்ளே நுழையக்கூடாது என்ற போராட்டத்தின் விளைவாகத்தான் அண்ணா ஆட்சிக்கு வந்தார். ‘இந்திக்கு இங்கே இடம் இல்லை’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அதன் விளைவாகத்தான், இன்று இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய இடத்துக்குத் தமிழகம் வந்து இருக்கிறது.


அனைத்து மொழிகளும் ஆட்சிமொழிகளாக ஆகின்ற நாள்வரையில், என் மனம் நிறைவு அடையாது என்று மாநிலங்கள் அவையில் முழங்கினார் அண்ணா. அதே உணர்வோடு, மாநிலங்கள் அவையில் நான் கடமை ஆற்றியதை, தம்பி இராஜேந்திரன் இங்கே எடுத்துச் சொன்னார். கட்சிக் கட்டளையை ஏற்று, பதவி பறிபோனாலும் கவலை இல்லை என்று அரசியல் சட்டத்துக்குத் தீயிட்டேன். சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பறிபோனது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும் என்ற நிலையில், கொளுத்தியது அரசியல் சட்டம் அல்ல; அது வெறும் காகிதம் என்ற ஒரு விளக்கத்தைத் தி.மு.க. தலைமை, முரசொலியில் வெளியிட்டது.


அப்போது பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யச் சொன்னார்கள். ‘நாங்கள் அரசியல் சட்டத்தை ஒரு தாளில் எழுதித்தான் கொளுத்தினோம்’ என்று சொல்லச் சொன்னார்கள். ஆனால், நான் தனியாகப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தேன். ‘நான் இந்திய அரசியல் சட்டத்தைத்தான் தீ வைத்துக் கொளுத்தினேன்’ என்று எழுதிக் கொடுத்தேன். அன்றைக்கு உள்துறை இணை அமைச்சராக இருந்த சிதம்பரம், நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், அண்ணாவின் இயக்கத்தைப் பரிகாசம் செய்கின்ற வகையில், ‘அரசியல் சட்டத்தைக் கொளுத்துவோம் என்று தம்பட்டம் அடித்தார்கள். ஆனால், பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற நிலையில், வெறும் கடிதம் என்று சொல்லிவிட்டு ஓடிப்போனார்கள்’ என்று கேலியாகப் பேசினார். நான் இடைமறித்துச் சொன்னேன்: ‘பொட்டல் காட்டில் நின்றுகொண்டு அல்ல; இந்த நாடாளுமன்றத்தில் நின்று கொண்டு சொல்லுகிறேன். ‘நான் அரசியல் சட்டத்தைத்தான் கொளுத்தினேன். வெறும் காகிதத்தை அல்ல. என்ன தண்டனை? எந்த ஆபத்தையும் ஏற்றுக்கொள்ள அஞ்சுபவர்கள் அல்ல நாங்கள்’ என்று சொன்னேன். இது அண்ணா ஊட்டிய உணர்வு.


அதே உணர்வோடுதான், 1987 ஆம் ஆண்டு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்திய இராணுவம் துப்பாக்கி ஏந்துமானால், அந்த இராணுவத்தை நான் குற்றம் சாட்டுவேன். அதற்குத்தண்டனை கிடைக்கும் என்றால், விளைவு விபரீதம் என்றால், துhக்குத் தண்டனைதான் என்றால், அதற்கும் நான் ஆயத்தமாக இருக்கிறேன்’ என்று நாடாளுமன்றத்தில் பேசினேன்.


திராவிட முன்னேற்றக் கழகத்தின் பழைய தோழர்களைக் கேட்கிறேன். அந்த உணர்வு எங்கே? எதற்காக இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது? நான் புதிய இளைஞர்களுக்காக, நடந்த சம்பவங்களைச் சொல்லுகிறேன்.


இந்தியில் எழுதப்பட்ட அரசியல் சட்டத்தை ஏற்க வேண்டும் என்று ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அந்த மசோதாவை எதிர்த்து நான் திருத்தத் தீர்மானம் கொடுத்தேன். அதற்கு முன்பு பண்டித நேருவிடம் இந்தியில் மொழிபெயர்த்த அரசியல் சட்டத்தைக் கொண்டுபோய்க் கொடுத்தபோது, இது இரயில்வே வழிகாட்டிப் புத்தகத்தைப் போல இருக்கிறது. இதை ஏற்க முடியாது என்று சொன்னார். அதை நான் நினைவூட்டினேன். ஆங்கிலம் ஆட்சிமொழியாக நீடிக்கும் என்று உறுதிமொழி கொடுத்த நேரு பெயரால் அமைந்து இருக்கின்ற மைதானத்தில் பேசுகிறேன்.

நான் கொடுத்த திருத்தத் தீர்மானத்தின் மீது நள்ளிரவு இரண்டு மணிக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது.


குரல் வாக்கெடுப்பு நடத்தலாம் என்றபோது, நான் ஏற்றுக்கொள்ளவில்லை. வாக்குப்பதிவு நடைபெற்றது. அனைத்தும் பச்சை விளக்குகள். ஒரே ஒரு வாக்கு மட்டுமே சிவப்பு விளக்கு. அது, நான் எதிர்த்துப் போட்ட ஒரே ஒரு ஓட்டு. காஷ்மீரத்து உறுப்பினர் சொன்னார்; ‘கடைசியில் நீ தனித்து விடப்பட்டு விட்டாய். ஒருவரும் உனக்குத் துணை இல்லை’ என்றார். நான் உடனே சொன்னேன். ‘ஆம்; தனித்து விடப்பட்டேன். காட்டில் சிங்கமும் தனியாகத்தான் இருக்கிறது. ஆனால், சிங்கம், சிங்கம் தான்’ என்று சொன்னேன். (பலத்த கைதட்டல்). இவையெல்லாம் வரலாறு. எங்கள் இரத்த ஓட்டத்தில் கலந்து இருக்கின்ற உணர்ச்சி. எங்கள் நாடி நரம்புகளில் கலந்து இருக்கின்ற எண்ணம்.


இந்தியா என்கின்ற இந்தத் துணைக்கண்டத்தின் ஒருமைப்பாடு காப்பாற்றப்பட வேண்டுமானால், அனைத்து மொழிகளும் ஆட்சி மொழிகளாக வேண்டும். இது அண்ணாவின் எண்ணம். அதற்கு ஒருநாள் வரும். அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழிகளாக ஆக்காவிட்டால், இந்தியாவின் ஒருமைப்பாடு சிதைந்து போகும், உடைந்து நொறுங்கும். இதை நான் இங்கே சொல்லுகிறேன்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான டி.டி.கிருஷ்ணமாச்சாரி அன்றைக்கே சொன்னார். ஒன்றுபட்ட இந்தியா வேண்டுமா? அல்லது இந்தி மட்டுமே இருக்கின்ற இந்தியா வேண்டுமா? என்று கேட்டார் அவர். அதையே நான் நாடாளுமன்றத்தில் சொன்னபோது, ’அதை வாபஸ் வாங்குகிறாயா? இல்லையா?’ என்று மிரட்டினார்கள். ‘வாபஸ் என்கின்ற பேச்சுக்கே இடம் இல்லை’ என்று சொன்னேன். ‘வாபஸ் வாங்காவிட்டால், உன்னை இந்தச் சபையிலேயே உதைத்து மிதித்துத் துவைப்போம்’ என்று ஒரிசா மாநில உறுப்பினர் சொன்னார். ‘நீ மிதித்துத் துவைத்தாலும், ஒரு தடவை அல்ல, ஆயிரம் தடவை அதையே திரும்பத் திரும்பச் சொல்வேன்’ என்றேன். அந்த உணர்ச்சி, தகுதி,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உண்டு. அந்த உணர்வோடுதான், இயங்குகிறோம். அண்ணாவின் கொள்கையை வெற்றி பெறச் செய்வதற்காகப் பாடுபடுகிறோம்.

பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

செய்திகள் ஒளிபரப்பாகும் நேரம்:
காலை 8 மணி; பிற்பகல் 1.30 மணி; முன்னிரவு 8 மணி; இரவு 10 மணி

நிகழ்ச்சிகள் நாள்குறிப்பு

S M T W T F S
 
 
 
1
 
2
 
3
 
4
 
5
 
6
 
7
 
8
 
9
 
10
 
11
 
12
 
13
 
14
 
15
 
16
 
17
 
18
 
19
 
20
 
21
 
22
 
23
 
24
 
25
 
26
 
27
 
28
 
29
 
30
 
 
 
 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)