மேலும் ஒரு புதிய அணை; கேரளம் அக்கிரமம்! வைகோ குற்றச்சாட்டு!
விவகாரங்கள்: பொருளாதாரம், விவசாயம், தேசிய, புறநகர்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
மேலும் ஒரு புதிய அணை; கேரளம் அக்கிரமம்!
வைகோ குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டின் நதிநீர் வாழ்வாதாரங்களுக்குத் தீங்கான கேடு செய்யும் வகையில், கேரள அரசு செயல்பட்டு வருகிறது. முல்லைப்பெரியாறு பிரச்சினையில் அராஜகப் போக்கை மேற்கொண்டு உள்ள கேரள அரசு, தற்போது, கொங்குச் சீமையிலும் நமக்குக் கேடு செய்ய முற்பட்டு விட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணைக்கு, கேரள மாநிலத்தில் உள்ள பாம்பாறு, தேனாறு, தமிழக எல்லையில் உள்ள சின்னாறு ஆகிய மூன்று ஆறுகளில் இருந்து தண்ணீர் வருகின்றது. 1956-ஆம் ஆண்டு இந்த அணை நீர்ப் பாசனத்துக்குத் திறந்து விடப்பட்டது. அணை கட்டுவதற்கு முன்பே உடுமலைப்பேட்டை வட்டத்தில் இருந்து கரூர் வரை, ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டி, சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெற்று வந்தது. அமராவதி அணை கட்டிய பின்னர், புதிதாக 25 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது.
திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களின் வழியாகச் செல்லும் இந்தத் தண்ணீரால், 30-க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலம் பல கிராமங்களுக்கும் தாராபுரம் போன்ற நகரங்களுக்கும் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இது அல்லாமல், ஆற்றோரத்தில் பல தொழிற்சாலைகளுக்கும் இந்த ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. மேலும், சின்ன தாராபுரம், கரூர் வரையிலும் பல விவசாயிகள் அனுமதி பெற்று ஆற்றில் மோட்டார் பம்பு செட்டு வைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
அணையின் கொள்ளளவு, மொத்தம் 4 டி.எம்.சி. ஆகும். வருடத்திற்கு இரண்டு முறை தென்மேற்குப் பருவ மழை, வடகிழக்குப் பருவ மழையினால் அணை நிறையும்பொழுது, மொத்தம் 8 டி.எம்.சி., தண்ணீர் தேக்க முடியும். மேலே சொன்ன 55 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கும் குடிதண்ணீருக்கும் மற்ற உபயோகங்களுக்கும், ஆண்டுக்கு 9 டி.எம்.சி. தண்ணீர் இருந்தால்தான் ஈடுகட்ட முடியும்.
வேனில் காலங்களில், குடிதண்ணீர்ப் பற்றாக்குறையால் தாராபுரம் போன்ற நகரங்களுக்குத் தற்சமயம் காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக-கேரள எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள, மறையூர் அருகே ரூ. 230 கோடி செலவில் புதிய அணை கட்ட கேரள அரசு ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக அமராவதி அணையின் நீராதாரமாக விளங்கிவரும் பாம்பாற்றின் குறுக்கே, 110 ஏக்கர் பரப்பளவில் அணை கட்டுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இந்த அணையின் மூலம் சுமார் 40 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப் போவதாகக் கூறும் கேரள அரசு, இதற்கான இறுதிக்கட்ட சர்வேயை முடித்து உள்ளது. பாம்பாற்றின் வழித்தடத்தில் உள்ள தூவானம் அருவிக்கு மேல்புறம் 170 மீட்டம் நீளமும், 30 மீட்டர் உயரமும் கொண்ட இந்த அணையின் கட்டுமானப் பணிகளை, அடுத்த ஆண்டு துவங்குவது எனவும், நான்கு ஆண்டுகளில் அணையைக் கட்டி முடித்து விடுவது எனவும் கேரள அரசு முடிவு செய்து உள்ளது.
ஜனவரி 6-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி, காவிரி நடுவர் மன்றம், மத்திய சுற்றுச்சூழல் துறை, நீர்வளம் மற்றும் மின்சாரத்துறை ஆகியவற்றின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
மின்சாரம் தயாரிக்கத்தான் அணை கட்டுகிறோம் என கேரள அரசு சொல்வது ஏமாற்று வேலை. தனியார் குளிர்பானக் கம்பெனிகளின் வசதிக்காகத்தான் இந்த அணை கட்டப்படுவதாகத் தெரிகிறது.
ஏற்கனவே காவிரியின் உப நதிகளில் கட்டப்பட்டுள்ள அமராவதி அணைப் பகுதி, காவிரி நடுவர் மன்றத்திற்கு உட்பட்ட வழக்கின் ஒரு பகுதி ஆகும். அந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
எனவே, புதிய அணைக்கு, காவிரி நடுவர் மன்றமும், மத்திய சுற்றுச்சூழல் துறையும் அனுமதி தரக் கூடாது. இது, அமராவதி அணையை நம்பி வாழும் இலட்சக்கணக்கான விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் முயற்சி ஆகும். இதனால் ஏறத்தாழ 60 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், குடிநீரை நம்பி உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் பாலைவனமாகி விடும். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையைச் சார்ந்து உள்ள, சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி விடும்.
தங்களுக்குத் தேவையான அரிசி, காய்கறிகள், பால், கால்நடைகள் உள்ளிட்ட அனைத்தையும், நாள் தவறாமல் தமிழகத்தில் இருந்து பெற்று வருகின்ற கேரள மாநில மக்களுக்கு, உண்மை நிலையைக் கூறாமல், அப்பட்டமான பொய்களைச் சொல்லி நச்சுப்பிரச்சாரம் செய்யும் கேரள அரசு, இப்போது பாம்பாற்றில் அணை கட்டப் போகிறோம் என்று தமிழகத்துக்கு மேலும் துன்பம் விளைவிக்க முயற்சிப்பதால், தொடக்கத்திலேயே இதைத் தடுக்க வேண்டிய உரிய நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இந்நிலையில், பாம்பாற்றில் கேரளா அணை கட்டுவதற்கு மத்திய அரசு, குறிப்பாக சுற்றுச்சூழல் அமைச்சரகம், அனுமதி தரக்கூடாது.
முல்லைப்பெரியாறு பிரச்சினையில், மத்திய அரசு, தமிழகத்தின் நியாயமான உரிமைகளுக்கு எதிராக, புதிய அணை கட்ட, ஆய்வுக்கு அனுமதி அளித்த துரோகத்தை, பாம்பாற்றுப் பிரச்சினையிலும் செய்துவிடக்கூடாது என வலியுறுத்துகிறேன்.

