அ.தி.மு.க. அரசின் அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை! ஆளுநர் உரை குறித்து வைகோ கருத்து

விவகாரங்கள்: சுற்றுச்சூழல், மனித உரிமை, சட்ட ஒழுங்கு, அரசியல், வறுமை

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், அபிப்ராயம்

Date: 
Mon, 30/01/2012

 

 

 

 

 

அ.தி.மு.க. அரசின் அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை!
ஆளுநர் உரை குறித்து வைகோ கருத்து

முல்லைப் பெரியாறு அணை உரிமையைத் தமிழக அரசு விட்டுக் கொடுக்காது என்றும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கேரள மாநிலம் கட்டுப்பட வேண்டும் என்றும், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக ஆளுநர் உரையில் குறிப்பிட்டு இருப்பது வரவேற்க தக்கதாகும்.

மாநில அதிகாரங்களில் தலையிடும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து இருப்பதும், மாநில அரசின் திட்டங்களை வடிவமைக்கும் உரிமை மாநிலங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் உரையில் தெரிவித்திருப்பது நியாயமான கோரிக்கை.

மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்வித் துறையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள பொது நுழைவுத் தேர்வை ஏற்க முடியாது என்ற நிலைப்பாடும் சரியானதே.

ஆனால், தமிழகத்தின் இன்றியமையாத பிரச்சினைகளில், ஆளுநர் உரை மிகுந்த ஏமாற்றம் அளிக்கின்றது. உலகப் பொருளாதார மந்த நிலையைக் காரணம் காட்டி, விலைவாசி உயர்வைப் பற்றிக் கவலைக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தி இருப்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பொருளாதாரச் சுமையை அ.தி.மு.க. அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதை உணர்த்துகின்றது.

கடந்த ஆட்சியில் மக்கள் அனுபவித்த மின்பற்றாக்குறை அவலம் இன்னும் தொடரும் நிலையில், மின் உற்பத்திக்கான உறுதியான திட்டங்கள் எதுவும் இல்லை. வேளாண் விளைச்சலைப் பெருக்குவோம் என்று அ.தி.மு.க. அரசு தனது முதல் ஆளுநர் உரையில் கூறியதையே இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. வேளாண் விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் குறித்தும், கரும்பு டன்னுக்கு ரூ. 3,000/- வழங்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை குறித்தும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை.

‘தானே’ புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்குத் தமிழக அரசு ஓரளவு நிவாரணப் பணிகள் செய்து இருந்தாலும் விவசாயிகளின் துயரங்கள் முழுமையாகப் போக்கப்படவில்லை. முந்திரி, பலா, தென்னை விவசாயிகளுக்கு அரசு அறிவித்து உள்ள இழப்பீட்டுத் தொகை மிகமிக சொற்பமானது ஆகும். ஏக்கருக்கு ரூ. 25,000/- வழங்க வேண்டும் என்று கோரிய, புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், ஆளுநர் உரையில் மிகுந்த அதிருப்தி அடைந்து உள்ளனர்.

வடகிழக்குப் பருவ மழையால் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் சாலைகள், குண்டும் குழியுமாக ஆகி விட்டன. அவற்றைப் போர்க்கால அடிப்படையில் செப்பனிட இதுவரை நடவடிக்கை இல்லை. இந்நிலையில் சாலைப் பணிகளில் தனியார் பங்களிப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு உடனடிப் பயனைத் தராது.

மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்தது செல்லாது என்றும் அவர்களை உடனடியாகப் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்திரவிட்ட பின்னரும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள தமிழக முதல்வரின் அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதையும் ஆளுநர் உரை பிரதிபலிக்கிறது.

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரும்போது, அவற்றை மின் ஆளுமை முறையில் செயல்படுத்த அ.தி.மு.க. அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. ஆளுங்கட்சியின் ஆசி பெற்றுள்ள ஒப்பந்ததாரர்களுக்கே ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஊழல் இல்லாத, திறமையான, வெளிப்படையான நிர்வாகம் அளிப்பதாகவும், நாள்தோறும் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு வரும் நிலையில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருப்பதாகவும் ஆளுநர் உரையில் தெரிவித்து இருப்பது கேலிக் கூத்தாகும்!

‘தாயகம்’                          வைகோ
சென்னை - 8                     பொதுச் செயலாளர்,
30.01.2012                          மறுமலர்ச்சி தி.மு.க

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)