மணச்சநல்லூர் நடராஜன் மறைவு வைகோ இரங்கல்
விவகாரங்கள்: அரசியல்
மாவட்டம்: திருநெல்வேலி - மாநகர், திருநெல்வேலி - புறநகர்
செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், வைகோவின் பதில்கள்
Date:
Mon, 16/01/2012
மணச்சநல்லூர் நடராஜன் மறைவு
வைகோ இரங்கல்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மணிவிளக்குகளில் ஒன்று அணைந்து விட்டது. வலுவோடு கழகத்தைத் தாங்கி நின்ற வைரத் தூண்களில் ஒன்று சாய்ந்து விட்டது. ஆபத்துகளுக்கு அஞ்சாது களம்காணும் காலத்தில் படைக்கருவிகளில் ஒன்றாக உறுதி தந்த வில் முறிந்து விட்டது. கழகத்தின் திருச்சி மாவட்டச் செயலாளரும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான எனது ஆருயிர் சகோதரர் மணச்சநல்லூர் நடராஜன் மாரடைப்பால் இன்று (16.01.2012) அதிகாலை மறைந்து விட்டார். பள்ளிப் பருவத்தில் அண்ணாவின் இயக்கத்தில் சேர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்மாமணியாய் திருச்சி மாவட்டத்தில் திகழ்ந்த இலட்சிய வேங்கை நடராஜன் 1993 அக்டோபரில் என்னைத் தாங்கிப் பிடிக்கின்ற தாயின் மடியாக துன்பங்களை எதிர்கொள்ள உதவும் தோளாக கவலை போக்கும் மாமருந்தாக விளங்கி வந்தார்.
அடிக்கடி அவர் சொல்வதெல்லாம், “உங்கள் கரத்தைப் பற்றிக் கொண்டேன்; என் மூச்சு அடங்கும்வரை உங்களோடே இருப்பேன்”. இந்தச் சொற்களை நினைக்கும்போது துக்கம் என் நெஞ்சை அடைக்கிறது. உடம்பெல்லாம் பதறுகிறது. இலட்சோப இலட்சம் கழகத் தொண்டர்கள் இதயமெல்லாம் நேசித்த என் உயிரினும் இனிய சகோதரர் இன்று இல்லையே என்பதை நினைத்துப் பார்க்கவே மனம் நடுங்குகிறது. அழுவதற்கும் என் கண்களுக்கு வலு இல்லை. உழைப்பால் உயர்ந்து நேர்மையில் சிகரமாக விளங்கிய இந்த மாவீரனை இழந்து துடிக்கிறேன்.
உன்னதமான அவரது குடும்பத்தினர் இந்தக் கொடும் துயரத்தை எப்படித் தாங்க முடியும்? அவர்கள் மீது பேரிடி விழுந்து விட்டது. ஆற்றுவார் யார்? தேற்றுவார் யார்?
இப்படி ஒரு பெரும் துன்பமும், துயரமும் சூழ்ந்து விட்ட இந்த நேரத்தில் கழகத்தின் கொள்கை மாமணி மணச்சநல்லூர் நடராஜன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மூன்று நாள்கள் கழகம் துக்கம் கடைபிடிக்கும். மூன்று நாட்களும் கழகக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
16.01.2012 மறுமலர்ச்சி தி.மு.க

