லண்டன் ஒலிம்பிக் பந்தயம்: டோ கெமிகல் நிறுவனத்துக்கு ஒப்பந்தமா? இந்தியா எச்சரிக்க வேண்டும்! பிரதமருக்கு வைகோ கடிதம்

விவகாரங்கள்: சுற்றுச்சூழல், சர்வதேசம், சட்ட ஒழுங்கு

மாவட்டம்: தமிழ்நாடு, பிற மாநிலங்கள்

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், வைகோவின் பதில்கள்

Date: 
Mon, 30/01/2012

 

 

 

 

30 ஜனவரி 2012

லண்டன் ஒலிம்பிக் பந்தயம்:
டோ கெமிகல் நிறுவனத்துக்கு ஒப்பந்தமா?
இந்தியா எச்சரிக்க வேண்டும்!

பிரதமருக்கு வைகோ கடிதம்

1984 ஆம் ஆண்டு, பல்லாயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்த விஷவாயு விபத்துக்குக் காரணமான, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் உரிமையாளர்களான டோ கெமிகல் நிறுவனத்தாருக்கு, லண்டனில் நடைபெற இருக்கின்ற ஒலிம்பிக் பந்தயங்களுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு இருப்பதைத் தங்களின் கவனத்துக்குக் கொண்டு வர விழைகிறேன்.

இது தொடர்பாக, 2011 டிசம்பர் 7 ஆம் நாள் நான் தங்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில், இந்த ப்பிரச்சினையை, இங்கிலாந்து அரசாங்கம், ஒலிம்பிக் பந்தய அமைப்புக் குழுவினரின் கவனத்துக்கு, இந்திய அரசு கொண்டு செல்ல வேண்டுமெனக் கேட்டுக் கொண்டு உள்ளேன்.

இந்திய நீதிமன்றங்களின் ஆணையை, யூனியன் கார்பைடு நிறுவனம் மதிக்கவும் இல்லை; நீதிமன்ற விசாரணைகளில் பங்கு ஏற்கவும் இல்லை. டோ கெமிகல் நிறுவனம்தான், இப்போது யூனியன் கார்பைடு நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆவர்.

லண்டன் ஒலிம்பிக் பந்தயத் திடல்களில், தரைக் கம்பள விரிப்புகளைத் தயாரித்து வழங்குவதற்கான, 7 மில்லியன் பவுண்டு மதிப்பு உள்ள ஒப்பந்தம், இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. அது மட்டும் அல்ல; 100 மில்லியன் பவுண்டு மதிப்பு உள்ள, மேலும் 10 ஆண்டுகளுக்கான ஒப்பந்தங்களையும் வழங்கி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அம்னெஸ்டி அமைப்பும், தங்கள் எதிர்ப்பைக் கடுமையாகப் பதிவு செய்து உள்ளனர்.

போபால் விஷவாயுச் சாவுகளுக்கு, டோ கெமிகல் நிறுவனமே பொறுப்பு ஆகும். எனவேதான், அந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தங்கiளை வழங்கியதைக் கண்டித்து, ஒலிம்பிக் பந்தயங்களின் அறநெறிக் குழுவின் உறுப்பினரான மேடம் மெரெடித் அலெக்சாண்டர், அந்தக் குழுவில் இருந்து விலகி உள்ளார்.

போபால் விபத்தில் உயிர் இழந்தோரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பு ஈடு இன்னமும் வழங்கப்படவில்லை. அந்த விபத்தில் உடல் உறுப்புகளை இழந்த பல்லாயிரக்கணக்கானோர், இன்றுவரையிலும் வேதனையில் வாடுகின்றனர். இப்போது பிறக்கின்ற குழந்தைகள் வரையிலும் குறைபாடுகள் தொடர்கின்றன.

ஒலிம்பிக் பந்தயங்களை, பல்வேறு நாடுகள் புறக்கணித்து உள்ளன. 1976 ஆம் ஆண்டு, கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயங்களை, ஆப்பிரிக்க நாடுகள் புறக்கணித்தன; 1980 ஆம் ஆண்டு, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற பந்தயங்களில், அமெரிக்க ஆதரவு நாடுகள் பங்கு ஏற்கவில்லை; எனவே, 1984 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜெலஸ் நகரில் நடைபெற்ற பந்தயங்களை, ரஷ்ய ஆதரவு பொது உடைமை நாடுகள் புறக்கணித்தன.

இன்றைக்கு, உலகம் முழுமையும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், மனித உரிமைப் போராளிகளும், இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை உற்றுநோக்கிக் கொண்டு இருக்கின்றனர்.

இந்தியா ஒரு மக்கள் குடியரசு என்பதை உலகுக்கு உணர்த்துகின்ற வகையிலும், போபால் விபத்தில் பாதிக்கப்பட்டோரின் உணர்வுகளை மதிக்கின்ற வகையிலும், பன்னாட்டு ஒலிம்பிக் பந்தய அமைப்புக் குழுவுக்கும், லண்டன் ஒலிம்பிக் பந்தய அமைப்பாளர்களுக்கும், தன்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்; டோ கெமிகல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ள ஒப்பந்தங்களை ரத்துச் செய்ய வேண்டும் என எச்சரிக்க வேண்டும்.

அந்தக் கோரிக்கையை அவர்கள் ஏற்கவில்லையெனில், இந்தியா ஒலிம்பிக் பந்தயங்களைப் புறக்கணிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

‘தாயகம்’                              வைகோ
சென்னை - 8                         பொதுச் செயலாளர்,
30.01.2012                              மறுமலர்ச்சி தி.மு.க
 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)