சங்கரன்கோவில் இளைஞர் சாவு நடவடிக்கை எடுக்க வேண்டும்! வைகோ வலியுறுத்தல்
விவகாரங்கள்: மனித உரிமை, சட்ட ஒழுங்கு, அரசியல்
மாவட்டம்: கோயம்புத்தூர் - மாநகர்
செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், அறிவிப்புகள்
சங்கரன்கோவில் இளைஞர் சாவு
நடவடிக்கை எடுக்க வேண்டும்!
வைகோ வலியுறுத்தல்
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இரா.பாரதிராஜா (வயது 33) என்பவர், கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி காவல் சரகத்துக்கு உட்பட்ட சோமனூர் பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்தார்.
ஜனவரி 19 அன்று ஆட்டோவை வழிமறித்த கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் சிவகுமார். ஆட்டோவில் கூடுதலாக ஆள் ஏற்றி வந்ததாகக் கூறி காவல் நிலையத்திற்கு வரச் சொல்லி கடுமையாக தாக்கியுள்ளார். "ஆட்டோவைக் காவல் நிலையத்தில் நிறுத்திவிட்டு நீதிமன்றத்தில் அபராதம் கட்டிவிட்டு வா" என்று விரட்டியுள்ளார். மறுநாள் 20-ஆம் தேதி நீதிமன்றத்திற்கு பாரதிராஜா சென்று அபராதத்தைக் கட்ட முயற்சித்தபோது, வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தின் காரணமாக நீதிமன்றத்தில் அவரால் அபராதத்தைக் கட்ட முடியவில்லை. இதனால் காவல்துறையினரின் மிரட்டலுக்கு மீண்டும் ஆளாகி இருக்கிறார். அடிபட்ட வலி மற்றும் மன வேதனையுடன் சொந்த ஊரான பெருமாள்பட்டிக்கு ஜனவரி 21 காலையில் வந்த பாரதிராஜா தனது மனைவி மாரியம்மாளிடம், \"நேற்று காவல் அதிகாரி என்னைக் கடுமையாக அடித்ததால் உடம்பு முழுவதும் வலிக்கிறது. சங்கரன்கோவில் போய் ஊசி போட்டுவிட்டு வருகிறேன்\" என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
சங்கரன்கோவில் சென்ற பாரதிராஜா அங்கே உயிரைக் கொல்லும் விஷ மருந்தை வாங்கிக் கொண்டு வந்து பெருமாள்பட்டி கிராமத்தில் உள்ள தமது தோட்டத்தில் விஷம் அருந்தி இறந்து விட்டார். இவருடைய சாவுக்குக் கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் அடித்ததுதான் காரணம் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சோமனூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். பெருமாள்பட்டி பகுதியிலும் பதட்டம் நிலவுகிறது.
"சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பிரேதத்தை வாங்க மாட்டோம்" என்று பாரதிராஜாவின் குடும்பத்தினர் பனவடலிசத்திரம் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். கோவை மண்டலக் காவல்துறை ஐ.ஜி. அளவில் பேசி சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது நடவடிக்கை மேற்கொள்ள நெல்லை மாவட்டக் காவல்துறை அதிகாரிகளால் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இறந்துபோன பாரதிராஜாவுக்கு மாரியம்மாள் என்ற 26 வயது மனைவியும், உஷா நந்தினி (வயது 3), ஆதிரை (வயது 1) என்ற இரண்டு பச்சைக் குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் வாழ்வுக்கும் வருவாய்க்கும் ஒரே ஆதாரமாக விளங்கிய பாரதிராஜாவை இழந்து தவிக்கின்றனர்.
எனவே, பாரதிராஜாவின் சாவுக்குக் காரணமான காவல் அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாரதிராஜாவின் மனைவிக்குக் கல்வித் தகுதியில் இருந்து விலக்கு அளித்து சத்துணவுத் துறையில் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பும், இக்குடும்பத்திற்கு ரூபாய் 5 இலட்சம் நிவாரண நிதி வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
24.01.2012 மறுமலர்ச்சி தி.மு.க

