விகடன் மேடை - வைகோ - 04.01.2012

விவகாரங்கள்: பொருளாதாரம், கல்வி, தேசிய, அரசியல்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், புத்தகங்கள்

Date: 
Fri, 20/01/2012
விகடன் மேடை - வைகோ

ச.செந்தூரன், சலையப்பூக்குளம்.
 ''அறிஞர் அண்ணாவைக் கண்டு இன்றளவும் நீங்கள் வியக்கும் விஷயம்?''
 
 ''இன்றல்ல.... என்றுமே வியக்கும் விஷயம் அவரது பேச்சாற்றல்தான்!

'அர்ச்சுனன் கண்ணுக்கு, அம்பின் நுனியும் குருவியின் கழுத்தும் தெரிந்ததுபோல, என் தம்பிமார்களுக்கு 67 தேர்தல் வெற்றி ஒன்றுதான் கண்ணுக்குத் தெரிய வேண்டும்’ என்ற அண்ணாவின் ஒற்றை வாக்கியத்துக்கே ஆட்சி அதிகாரத்தைப் பரிசாக அளித்தவர்கள்தான் இந்தத் தம்பிகள்!

1965 மார்ச் இறுதிவாக்கில், தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியில், அறிஞர் அண்ணா அவர்கள், Philosophy of D.M.K - 'தி.மு.க-வின் தத்துவம்’ எனும் தலைப்பில், ஆங்கிலத்தில் ஆற்றிய உரைக்கு நிகராக இன்றளவும் எந்த தி.மு.க. தலைவரும் ஆற்றியது இல்லை! அண்ணாவின் அந்த உரைக்கு, அந்தக் கல்லூரியின் அன்றைய முதல்வர் சந்திரன் தேவநேசன், 'இங்கிலாந்து நாட்டில் தொழிற்கட்சி வென்று, வில்சன் பிரதமர் ஆனதுபோல், இங்கு அண்ணா முதல்வர் ஆவார்’ என்று பாராட்டுரை அளித்தபோது, அரங்கமே அதிர்ந்தது.

அத்தகைய பிதாமகர் வாயாலேயே மேடைப் பேச்சுக்காகப் பாராட்டு பெற்றதுதான் என் வாழ்க்கையில் நான் செய்த பெரும்பேறு!

1968-ம் ஆண்டு, ஜூன் மாதம், சட்டக் கல்லூரி திறந்தவுடன் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நான், நேரடிப் போட்டியில் குறைந்த வாக்குகளில் தோல்வியுற்றேன். மும்முனைப் போட்டியில், செயலாளர் பொறுப்புக்கு, தி.மு.க-வின் ஜின்னா(இன்றைய நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினர்) வெற்றிபெற்றார். முதல் அமைச்சர் அண்ணா அவர்களைக் காண நாங்கள் சென்றோம்.
 
'Take it sportively’ என்று என்னிடம் சொல்லி விட்டு, 'சொந்த ஊர் எது?’ என்று கேட்டார். 'சங்கரன்கோவில் தாலுகாவில், கலிங்கப்பட்டி கிராமம்’ என்றேன். அந்தச் சில நிமிடங்கள், என் மேனியெங்கும் புளகாங்கிதம் மின்சாரமாய்ப் பாய்ந்தது.

ஒரு பிப்ரவரி 2-ம் தேதி இரவு, அறிஞர் அண்ணா உயிர் பிரியும் சில நிமிடங்களுக்கு முன் அவர் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனை அறைக்குள் செல்ல முடிந்தது. அவரது உடலில் பொருத்தப்பட்டு இருந்த கருவிகளை மருத்துவர்கள் ஒவ்வொன்றாக அகற்றிக்கொண்டு இருந்தார்கள்.

அந்த அறைக்கு எதிரே அழுதுகொண்டு இருந்த மாதவனின் தோளைத் தட்டியவாறு, தரையில் எம்.ஜி.ஆர். அமர்ந்து இருந்தார்.
 
மறுநாள்... 'அன்னை பூமி அண்ணாவை அணைந்தாள்’ என்று, ஏடுகள் தலைப்பு இட்டன. என் வாழ்வின் மிகத் துயரமான நாள் அது!''
 
எம்.கல்யாணசுந்தரம், கோயம்புத்தூர்.
''தமிழக வாக்காளப் பெருமக்களைப் பற்றி உங்களின் மனம் திறந்த கணிப்பு என்ன?''
 
 ''இந்திய ஜனநாயகத்துக்கே மகுடம் சூட்டியவர்கள், தமிழகத்து வாக்காளர்கள்!
சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தோம் என்ற பெருமை முழக்கோடு களம் கண்ட காங்கிரஸை, 1952 முதல் பொதுத்தேர்தலிலேயே, தனித்து வெற்றி பெறவிடாமல் தடுத்த பெருமை இவர்களுக்கே உண்டு.
 
1967 தேர்தலில், காங்கிரஸை வீழ்த்தி, அண்ணாவுக்கு அரியணை தந்து, மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கவைத்தவர்களும் இவர்கள்தான்.

1977-ல் வடபுலம், முழுக்க ஜனதாவுக்கு வெற்றி தந்தபோது, மக்கள் திலகத்துக்கும் இந்திரா காந்திக்கும் வாகை மாலை சூட்டியவர்கள் இவர்கள்தான். ஊழலற்ற அரசியல் என்று, அன்றைக்கு எம்.ஜி.ஆர். எழுப்பிய முழக்கமே அந்த வெற்றிக்குக் காரணம்.

இனி, எம்.ஜி.ஆர். நோய்ப்படுக்கையில் இருந்து எழப்போவது இல்லை என்று சொல்லப்பட்டபோது, மீண்டும் அவருக்கே அரியணையைத் தந்தனர்.

91-ல் ஒரு இடமும் இல்லை. அஸ்தமித்தேவிட்டது என்று விமர்சிக்கப்பட்ட தி.மு. கழகம், 96-ல் மூப்பனார் அவர்களின் தமிழ் மாநில காங்கிரஸோடு கரம் கோத்துப் பெரும் வெற்றியைப் பெறத் தீர்ப்பு அளித்த வர்களும் இவர்களே. அதில் வெறும் நான்கு இடங்களைப் பெற்ற அண்ணா தி.மு.க-வை, அடுத்த தேர்தலில் ஆட்சியில் அமர்த்தியவர் களும் இவர்களே.

அண்மைக்கால இடைத் தேர்தல்களில், ஊழல் பணத்துக்கு மரியாதை செய்தவர்களும் இந்தப் பெருமக்களே. ஆனால், 2011 சட்டமன்றத் தேர்தலில், காந்தித் தாத்தாவின் புன்னகையைத் தரிசித்தவாறே, ஊழலை எதிர்த்து ஓட்டுப்போட்டு, நாங்களே எஜமானர்கள் என்பதை நிரூபித்துவிட்டனர்.

இப்போதெல்லாம் தமிழக வாக்காளர்கள், வேட்பாளர்களை ஏமாற்றுவதில் கில்லாடிகள் ஆகிவிட்டார்கள். யார் வந்தாலும் முகம்சுழிக்காமல் முகமன் கூறி வரவேற்று, சிரித்துக் கொண்டே வழி அனுப்பிவிட்டு, மனதில் நினைப்பதை வெளிக்காட்டிக்கொள்ளாமலே ஓட்டுப் போடும் திறமை பெற்றுவிட்டார்கள். இதில் ஏமாந்த வேட்பாளர்கள் ஏராளம்!

தமிழ்நாட்டில் ஜனநாயகத்தின் மணி விளக்கை உயர்த்துவார்கள், வருங்காலத் தில் இந்த வாக்காளர்கள்!''
 
பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
''உங்கள் பார்வையில் பத்திரிகைகள்?''
 
''மக்கள் நலனைப் போற்றவும், ஜனநாயக ஒளியைப் பரப்பவும், தமிழகத்துக்கு உயர்வு தரவும், உயர்ந்த குறிக்கோளுடன், தமிழகத்தின் நாளேடுகள் சேவை செய்துவருகின்றன.
அன்றைய நெல்லை மாவட்டத்தில் பிறந்து, பத்திரிகை உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய, தினத்தந்தியைத் தந்த தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார்;
 
தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க, தினமலரைப் பூக்கச் செய்த, அதே நெல்லைச் சீமையின் ராமசுப்பையர்;

யதேச்சதிகாரத்தை எதிர்த்து முரசுகொட்டிய தினமணிக்குப் பெருமை சேர்த்த பொருநைக் காரை ஏ.என்.சிவராமன்;

தமிழக அரசியலில் தான் நேசித்த இயக் கத்துக்கு அரண் அமைக்க அரும்பாடுபட்டு தினகரனை உருவாக்கிய கே.பி.கந்தசாமி; இவர்கள் எல்லாம் தமிழ்ப் பத்திரிகை உலகின் ஆணிவேர்கள்.

அனைத்துத் துறைகளிலும் மகத்தான சேவை புரிந்த இந்து ஆங்கில நாளேடு, நெருக்கடி நிலை கொடுமைக்கும் அஞ்சாது போராடிய கோயங்காவின் இந்தியன் எக்ஸ் பிரஸ் என நாட்டு நலன், சமூக முன்னேற் றம், இவற்றை மையப்படுத்தி இயங்குபவைதான், தமிழகத்தின் ஏடுகள்!''
 
இரா.தியாகராஜன், நாகப்பட்டினம்.
''வருவாய் வருகிறது என்பதற்காக, ஓர் அரசாங்கமே சாராயக் கடைகளை நடத்துவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
 
''பேரறிஞர் அண்ணா காலம் வரையிலும், தமிழ்நாட்டில் மதுவுக்கு அனுமதி இல்லை. அதன் பின்னரே, மது அரக்கன் நுழைந்தான்.

மதுவிலக்கு அமலில் இருந்தபோது, வெளியில் தெரியாமல் பயந்து பயந்து மது அருந்தும் நிலை இருந்தது. இப்போது, இளம் தலைமுறையினர், ஏன் மாணவர்கள் அன்றாடம் மது அருந்துவதும், ஏன் இதைக் கூறுவதற்கே எனக்கு மனம் வரவில்லை; பெண்கள்கூட மது அருந்துவதும், இதனால் குடும்ப வாழ்வும், காலம் காலமாக நாம் போற்றி வந்த நெறிகளும் அழிக்கப்படுகின்றனவே? நாம் எங்கே போகிறோம்? துணிந்து முடிவு எடுக்க வேண்டும். மதுக் கடைகளை மூடியே ஆக வேண்டும். அதனால், எத்தனைச் சிரமங்கள் இருப்பினும், மது விலக்கு அமலாக வேண்டும்!''
 
அறிவழகன், திருச்சி.
''உங்கள் கல்லூரி வாழ்க்கையின் சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''  
 
 ''பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் புகுமுக வகுப்பும், இளங்கலை பொருளியலும் படித்தேன். பள்ளி இறுதி வகுப்பு வரை, கிராமத்தைத் தவிர வெளி உலகமே அறியாமல் வளர்ந்த எனக்கு, முதலில் கொஞ்சம் அச்சமாகவும் கூச்சமாகவும் இருந்தது.
 
ல்லூரி விடுதியில், மூன்று வேளையும் உணவு அவ்வளவு சுவையாக இருக்கும். மாதம் 34 ரூபாய்தான் கட்டணம். விருப்பம்போலச் சாப்பிடலாம். அளவு கிடையாது. எனவே, கல்லூரி ஹாக்கி விளையாட்டுக்கு குழுத் தலைவர் என் நண்பர் சீமைச்சாமி, குறைந்தது 34 பூரிகள் சாப்பிடுவார்.

மதியம் நன்கு சாப்பிட்டுவிட்டு, அதனால் பிற்பகல் வகுப்புகளில் தூங்கியதற்காக, பேராசிரியர்கள் என்னைக் கண்டித்ததும் உண்டு. புதுமுக வகுப்பில், பேராசிரியர் டிமெல், ஸ்பார்ட்டா வீரர்களின் தெர்மாபிளை யுத்த களக் காட்சியை வருணித்தது, என் மனதில் ஆழப் பதிந்தது. அதைத்தான், இன்றைக்கும் பல மேடைகளில் பேசி வருகிறேன்.

விடுதியில் இரவு வருகை சரிபார்த்தல் நடக்காத நாட்களில் சுற்றுச் சுவரைத் தாண்டிக் குதித்து, பேருந்தில் திருநெல்வேலி டவுனுக்கு வந்து சினிமா பார்ப்போம்.இரவில் பேருந்துகள் கிடையாது. அல்வா சாப்பிட்டு விட்டு, அங்கிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் நடந்தே விடுதிக்கு வந்து சேருவோம்.

63 மார்ச் முதல் வாரத்தில், இரண்டாம் ஆண்டு பி.ஏ. வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது, பேட்டை மீனாட்சி தியேட்டரில் ஸ்ரீதரின் 'சுமைதாங்கி’ படம் திரையிடப்பட்டு இருந்தது. நானும் என்னுடைய உயிர் நண்பர் ஏரல் கவிஞர் மாரி ராமச்சந்திரன் அவர்களும், இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு விடுதிக்கு வந்து, காம்பவுண்டு சுவரைத் தாண்டிக் குதித்து அறைக்கு வந்தோம். இரவுக் காவலாளியான மீசைக்காரப் பாண்டியன், ஐந்து செல் பேட்டரியோடு வந்தார். என் மீது அவருக்குக் கொள்ளைப் பிரியம். 'தம்பி,  நீங்கள் வெளியே போனதை, வார்டன் அருள் ஜோசப்பிடம் எவனோ போட்டுக் கொடுத்து விட்டான். அவர், இரவு 10 மணிக்கு வந்து பார்த்து, நீங்கள் இரண்டு பேரும் இல்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போய் விட்டார். காலையில் விசாரணை இருக்கும்’ என்றார்.

அதேபோல, காலை 7 மணிக்கு வார்டன் அழைத்தார். மாரி ராமச்சந்திரனைக் கண்டித்து அனுப்பிவிட்டார். என்னைப் பார்த்து, 'நீதான் அவனை அழைத்துக்கொண்டு போயிருக்கின்றாய். எனவே, உன்னை இந்த ஆண்டு தேர்வு எழுத விட மாட்டேன்’ என்றார். சொன்னபடியே செய்யவும் செய்தார். அதை எல்லாம் சமாளித்து படிப்பைத் தொடர்ந்த அந்த நாளெல்லாம் மனதில் பசுமை பரப்பி நிற்கிறது!''
 
அனந்தசயனன், திருவீழிமிழலை.
''எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத உங்கள் கட்சி குறித்து, எந்த வகையில் பெருமைப்படுகிறீர்கள்?''
 
 ''1993-ல் உதித்து, 94-ல் பெயரிடப்பட்டு, 18 ஆண்டுகளைக் கடக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில், இளைஞர்கள்தான் தொடக்கத்தில் ஏராளமாக இணைந்தனர். ஆனால், பொதுமக்களுக்குத் தொல்லை விளைவிக்கின்ற எந்தச் செயலிலும் எங்கள் இயக்கம் எப்போதும் ஈடுபட்டது இல்லை. மது அருந்திவிட்டு, கூட்டங்களில் கூச்சலிடுவது இல்லை. கடைத்தெருக்களில் கலவரம் செய்தது இல்லை. கல் வீசியது இல்லை. வசூலுக்கு மிரட்டியது இல்லை. பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தது இல்லை. நான் பொடாவில் கைது செய்யப்பட்டபோதும், இதே நிலைதான்!

எங்கள் மாநாடுகள், பேரணிகள், நடை பயணங்கள், ஊர்வலங்களில் பெண்களை எவரும் கேலி செய்தது இல்லை. எங்கள் நிகழ்ச்சிகள் நடந்தால், குடும்பத்தோடு அந்த வழியாகப் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் செல்ல முடியும்.

நாங்கள் வலுவாக வளர்வது தமிழ்நாட்டுக்கு நல்லது!''

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)