அண்ணாவின் ஆணை!

விவகாரங்கள்: மனித உரிமை, தேசிய

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Fri, 12/01/2018

 

 

 

 

அண்ணாவின் ஆணை!

மைப்பொழுதும் நீங்காது என் இதயத் துடிப்போடும்

இரத்தச் சுழற்சியோடும் கலந்து விட்ட கண்ணின் மணிகளே!

பன்னெடுங்காலமாகத் தமிழர்கள் இயற்கையை வழிபட்டு, பயிர் வளர்த்துத் தானிய மணிகளைத் தரும் நிலத்திற்குப் பெருமை சேர்த்து, கோழைபடாத மேழிச்செல்வமான, தங்கள் இல்லத்துப் பிள்ளைகளைப் போல அன்புடன் பராமரிக்கும் எருதுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, ஆவினங்களுக்குப் படையல் இட்டு, நெல்மணிகள் தந்த அரிசியை, கன்னல் தந்த சர்க்கரையோடு கலந்து, தித்திக்கும் பொங்கலாய் இல்லத்தில் அனைவரும் உண்டு மகிழ்ந்து, ஏறு தழுவுதல் என்ற மரபு வழி வீர விளையாட்டை, சீறி வரும் காளைகளின் திமிலை, காளையர்கள் கரங்களை அணைத்து, இயற்கைக்கு ஆராதனை செய்வதுதான் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா ஆகும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக உழவர் பெருங்குடி மக்களின் வாழ்க்கை கண்ணீர் வெள்ளம் ஆயிற்று. உழுது பயிரிட்டு உலகத்திற்கு உணவு அளித்த விவசாயிகளின் விம்மல்கள் தணியவில்லை; பெருகிற்று.

பூச்சிக்கொல்லி மருந்துகளும், இரசாயன உரங்களும் நிலத்தை நஞ்சாக்கி, பயிர்கள் பரிசு தந்த தானிய மணிகளையும், காய்கறிகளையும், உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கும் நிலையை ஏற்படுத்திப் பாழாக்கியதால்தான், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், இந்நிலையை மாற்ற வீரமும் தீரமும் மிக்க அறப்போர் நடத்தினார்.

இன்று தமிழ்நாட்டின் நிலையைச் சிந்திக்கும் போதே நெஞ்சம் கலங்குகின்றது.

புரண்டோடி வந்த நதிகளின் வெள்ளத்தை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வந்த தண்ணீர் உரிமையை, அண்டை மாநிலங்கள் தடுக்கின்றன.

கார்பரேட் நிறுவனங்களின் முகமாகி விட்ட மத்திய அரசு, இன உணர்வையும், மொழி உணர்வையும் இரு கண்களாகக் கொண்ட தமிழ்க்குலத்திற்கு இயற்கை அன்னை தந்த அருட்கொடையான அனைத்தையும் அழித்து, பசியும், பஞ்சமும், பட்டினியும் தலைவிரித்து ஆடினால், இந்தியப் பெரு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என வகுக்கப்பட்ட தமிழ் நிலத்தை வேட்டைக் காடாக்கிட முடியும் என்று திட்டம் வகுத்துச் செயல்படுகின்றது. 

பல தேசிய இனங்களின் கூட்டு அமைப்பு தான் இந்தியத் துணைக் கண்டம், கிழக்கு இந்தியக் கம்பெனியார் துணைக் கண்டத்தில் கால் எடுத்து வைக்கும் முன்னர், இந்தியா என்ற ஒற்றை நாடு கிடையாது, பேரரசுகள், சிற்றரசுகள், பலப்பல நாடுகள். ஆங்கிலேயர் ஆட்சி, குமரி முதல் வடதிசை எல்லை வரை யிலும், லாகூரில் இருந்து கௌகாத்தி வரையிலும் இருப்புப் பாதைகள் அமைத்தது மட்டும் அல்ல, தங்கள் காலனி ஆட்சியின் வசதிக்காக ஒரு நாடு, அதுதான் இந்தியா என்ற நிலையை ஏற்படுத்தினர்.

இந்த அடிப்படை உண்மையை உணர்ந்து கொண்ட, உலக சரித்திரக் கடிதங்கள், இந்தியத் தேடல் ஆகிய நூல்களை எழுதிய நேரு பண்டிதர், ‘வேற்றுமையில் ஒற்றுமைஎன்ற கோட்பாட்டைச் சொன்னதோடு, ‘இந்தி பேசாத மக்கள் விரும்புகின்ற வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்கும்என்றார்.

இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இன்று இடம் பெற்றுள்ள 22 மொழிகளும் ஆட்சி மொழிகள் ஆக வேண்டும்; முதல் கட்டமாக, உலகின் தொன்மைச் செம்மொழி, இந்தியாவின் ஆட்சி மொழி ஆக வேண்டும்.

தமிழ் மொழியின் வேரில் இருந்து கிளைத்து எழுந்த கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் திராவிட இனத்தவர் என்ற அடிப்படையில், திராவிட நாடு கோரிக்கையை, பேரறிஞர் அண்ணா அவர்கள் முன்வைத்தார்கள். ஆனால், அதிகார ஆதிக்கத்தால் பிரிவினைக் கோரிக்கையை நசுக்கிட மத்திய அரசு முனைந்து தடைச்சட்டம் கொண்டு வந்தபோது, வலி அறிதல், இடன் அறிதல், காலம் அறிதல் என்ற உணர்வுடன், எண்ணித் துணிக கருமம் என்று, தனிநாடு கோரிக்கையை ஒத்தி வைப்பதாக  அறிவித்தார்.

இதுகுறித்து, 1963 டிசம்பரில் மாநிலங்கள் அவையில் அறிஞர் அண்ணா ஆற்றிய ஆங்கில உரையின், மொழி ஆக்கப் பகுதிகள் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

ஒரு இலட்சியத்திற்காகப் பணி ஆற்று பவனை அழிக்க, சர்க்காருக்கு ஒரு புதிய சட்ட ஆயுதத்தைத் தருவதற்காக, அரசியல் சட்டத்திற்கும் கொண்டு வரப்படும் ஒரு திருத்தம் பற்றி நாம் இன்று விவாதித்துக் கொண்டு இருப்பது வேதனையுள்ள விசித்திரம் ஆகும்.

சட்டத்தைத் துணை கொண்டு அடக்கி விட நீங்கள் முயலும் அந்த இலட்சிய எண்ணத்தைப் புகுத்தியவன் என்ற முறையில், எமது கோரிக்கைகள் குறித்து ஏற்பட்டுள்ள சில தப்பு அர்த்தங்களைப் போக்கும் வகையில் விளக்கம் அளிக்க விரும்புகின்றேன்; வரலாறை எடுத்துக் கூற விரும்புகிறேன்.

இந்தப் பிரச்சினையில், கம்யூனிஸ்ட் கட்சி எங்கள் கொள்கையை ஏற்க வில்லை. இலட்சியங்களுக்கும், தேர்தல் தொடர்புகள், உடன்பாடுகள் ஆகிய வற்றுக்கும் சம்பந்தம் இல்லை.

இந்த மசோதா, இந்தியாவின் அரச உரிமையையும், பிரதேச ஒற்றுமையையும் பாதுகாக்க, நிலை நிறுத்த எனக் கொண்டு வரப்பட்டுள்ளது; அந்த அரச உரிமைக்கு என்ன ஆபத்து வந்திருக்கின்றது? 

மன்றத்தில் உள்ள ஒவ்வொரு உறுப் பினரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.

சர் சி.பி.இராமசாமி ஐயர் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டுக் கமிட்டி, நாகரிகத்திற்காகவாவது, எங்கள் கட்சியோடு தொடர்பு கொண்டு இருக்க வேண்டாமா? இல்லை.

நாங்கள் சட்டத்தை மீறிய நடவடிக்கை களில் ஈடுபட்டோமா? சீன ஆக்கிரமிப்பு ஏற்பட்டவுடன் தங்கு தடை அற்ற ஒத்துழைப்பைத் தந்தோம். நாங்கள் சாமான்யர்கள். 34 இலட்சம் வாக்காளர் களின் பிரதிநிதிகள். எங்கள் முன்னேற் றத்தைச் சட்டத்துணையுடன் அடக்கி ஒழிக்கும் முறைகளைக் கொண்டுவராமல் இருந்தால், நாங்கள்தான் சென்னையில் அடுத்து வரப்போகும் ஆளுங்கட்சி.

மசோதாவை மக்கள் மன்றத்தில் விவாதி யுங்கள். தவறு எம்மிடம் இருந்தால் திருத்துங்கள். தக்க காரணம் காட்ட இருந்தால், எங்கள் மனதை மாற்றுங்கள். அதை விட்டுவிட்டு ஏன் திணிக்கின் றீர்கள்? எல்லாக் கட்சியினரும் கொண்ட கமிட்டி அமைப்போம்; எல்லோரும் நாடு சுற்றி வருவோம்; விவாதிப்போம். என் கோரிக்கை தவறு என்று சொல்லுங்கள். அதற்காக இப்படி ஒரு மசோதா கொண்டு வராதீர்கள். 

என் நண்பர் பூபேஷ் குப்தா சொன்னார், நாங்கள் தலைமறைவு ஆகி விடுவோம் என்று. நாங்கள் எப்போதும் வெளியில் உலவுகின்றவர்கள். தலைமறைவு ஆகும் எண்ணம் இல்லை.

பல இலட்சக்கணக்கான மக்களின் மனதில் கிடக்கும் அதிருப்தியைத் தாக்கி ஒழிக்கும் முறையை, அரசியல்  தத்துவ முறை இன்னும் கண்டுபிடித்தது இல்லை. இந்தியா ஒரு துணைக்கண்டம். பல்வேறு விதமான மனப்பான்மைகள், பல்வேறான பாரம்பரிய உணர்ச்சிகள், பல்வேறு வகையான வரலாறு இருப்பதனால், இங்கு இரும்புக்கூடு போன்ற ஓரரசு முறை இருக்க முடியாது.

கூட்டு ஆட்சி முறையை, ஓர் அரசு முறையாக ஆக்கும் முயற்சிக்குக் கிளம்பி உள்ள எதிர்ப்பின் ஈட்டிமுனை தி.மு.க. என்று கொள்ள வேண்டும்.

நீ பிரிவினை பற்றி அல்லவா பேசுகிறாய்? என்று சிலர் கேட்கின்றார்கள். நினைத்துக் கூடப் பார்க்கக்கூடாது என்கிறார் பூபேஷ் குப்தா. சோவியத் அரசியல் சட்ட திட்டம் பிரிந்து போகும் உரிமையை அளிக் கின்றது. அதனால் அரசு உரிமைக்கு ஆபத்து வந்து விட்டது என்று யாரும் கூச்சல் போடவில்லை. நானும், என் கட்சி யினர் சிலரும் சேர்ந்து கொண்டு பொது மக்களை ஏய்த்துவிட முடியும்; தவறான வழியில் அழைத்துச் செல்ல முடியும் என்று கருதாதீர்கள். மற்ற ஜனநாயக நாடுகளில் உள்ள முற்போக்கான, தாராளத் தன்மை உள்ள பாரம்பரியத்தைப் பின்பற்ற வேண்டும்.

அதற்குப் பதிலாக, எந்தக் எதிர்க்கட்சி யையும் அழிக்கும் வலிவு எங்களுக்கு இருக்கின்றது; இன்று தி.மு.க., நாளைக்குக் கம்யூனிஸ்ட் கட்சி என்று கூறுவதானால், செய்து கொள்ளுங்கள். ஆனால், அடக்குமுறை நடத்தி ஆதிக்கம் தேடிய சர்க்கார்கள் எங்கு சென்றன? எப்படி ஆயின? என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த மசோதா சட்டப்புத்தகத்தில் ஏறி விட்டால், இந்தியாவில் ஒரு தன்னந்தனி ஆளைச் சமாளிக்க, இந்திய அரசியல் சட்டத்திற்கே திருத்தம் கொண்டு வந்தனர் என்று இப்போது மட்டும் அல்ல; என்றைக்கும் கருதுவர்.

எனவே, இந்த மசோதாவை விட்டு விடுங்கள். இல்லை எனில், ஒத்திப் போடவாவது செய்யுங்கள். என் வேண்டு கோளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், துணைத் தலைவர் அவர்களே, ஆளுங்கட்சியின் முறைகள், நடவடிக்கைகள், மசோதா இவற்றுக்கு என் கண்டன எதிர்ப்பைப் பதிவு செய்திட அனுமதி கொடுங்கள்.

இதனை 1963 டிசம்பர் 3 ஆம் தேதி, தம்பிக்கு எழுதிய கடிதத்தில் காணலாம்.

1967 ஜனவரி 1 ஆம் நாள், விருகம்பாக்கம் மாநாட்டில், அறிஞர் அண்ணா அவர்கள் தனது உரையில், ‘தமிழரின் கலை மரபு பண்பாட்டைப் பாதுகாக்க, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பணி, இன்னும் 50 ஆண்டுக் காலத்திற்குத் தேவைப்படு கின்றதுஎன்றார்.

தோழர்களே,

50 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். ஆனால், தமிழர்களின் மொழிக்கும், கலை, மரபு, பண்பாட்டுக்கும், 67 ல் ஏற்படாத ஆபத்து, பன்மடங்கு அதிகரித்து, திராவிட இயக்கத்தை மட்டும் அல்ல, தமிழ் இனத்தின் தனித்தன்மையை அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு, வடபுலத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்த சங் பரிவார் அமைப்புகளும், புற்றீசல் போலப் புதிது புதிதாக முளைத்துவிட்ட சில சக்திகளும், மனதிற்குள் கருவிக்கொண்டு தாக்க முற்பட்டுவிட்ட நிலையில், கடற்கரை வெள்ளிய மணல்பரப்பின் கல்லறைக்குள் இருந்து, அண்ணா அழைக்கின்றார்.

தம்பிமார்களே, தடந்தோள் தட்டித் திடம் கொண்டு புறப்படுங்கள். இதே கடற் கரையில், நான் 67 பிப்ரவரி 26 ஆம் தேதி, நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் கூறியதை நினைவில் கொள்ளுங்கள். மகத்தான தியாகத்தாலும், தன்னல மறுப்பாலும், செந்நீராலும், கண்ணீராலும், ஒப்புமை சொல்ல முடியாத உழைப்பாலும், என் தலைவர் பெரியாரும், நானும் தம்பி மார்களும் கட்டிக் காத்து வளர்த்த திராவிட இயக்கத்தை, அதன் இலக்கான தமிழ் இனத்தின் மேன்மையை உயர்வை நலத்தினைக் காப்பாற்ற, சர்வபரித் தியாகத்திற்கும் ஆயத்தம் ஆகுங்கள்.

அண்ணா மானசீகமாக, சந்தனப் பேழையில் இருந்து நமக்குக் கட்டளை இடுவதாகவே நான் எண்ணுகிறேன். 1967 ஜூன் 27 ஆம் நாள், அண்ணா அவர்கள் ஆற்றிய உரையை, கழகக் கண்மணிகளுக்குச் சுட்டிக் காட்டுவது என் கடமை.

நான் திராவிட நாடு கோரிக்கையை விட்டு விட்டேன். ஆனால், திராவிட நாடு கேட்பதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அவற்றில் ஒன்றைக் கூட விட்டு விடவில்லை. அதில் ஒளிவு, மறைவு இல்லை. அதைச் சொல்லிக் கொள் வதற்கு, வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை. திராவிட நாடு என்று தனியாக இருந்தால், நாம் தொழில் வளர்ச்சி பெற முடியும் என்று சொன்னோம். திராவிட நாடு வேண்டும் என்று கேட்டதற்குக் காரணமே இங்கே தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான். அதை நாங்கள் விட்டுவிடவில்லை.

அடுத்து, மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகத் திராவிட நாடு கேட்டோம்.

மொழி பாதுகாப்புக் கொள்கையை விட்டு விடவில்லை.

மாநில சர்க்கார் பல அதிகாரங்களைப் பல துறைகளிலும் பெற வேண்டும என்பதற் காகக் கேட்டோம். அதை நாங்கள் விட்டு விடவில்லை.

பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகக் கேட்டோம். அதை நாங்கள் விட்டுவிடவில்லை. ஆகவே, திராவிட நாடு கேட்டதற்கான காரணங் களில் ஒன்றைக் கூட நாங்கள் விட்டுவிட வில்லை.

என் இனிய சகாக்களே,

தமிழர் திருநாளுக்கு மடல் தீட்டும்போது, முக்கியமான காரணங்களை மனதில் கருதித்தான் இதனை எல்லாம் எழுதுகிறேன். திராவிட இயக்கம் சாதித்தது, தமிழகத்தின் மறுமலர்ச்சி ஆகும். ‘‘இந்தத் தமிழகத்தில், தூய்மையுடன், மனதிற்குச் சரி என்று பட்டதை, எவரும் எடுத்துரைக்கலாம் என்ற நிலை, உறுதிப் படுத்தப்பட்டு இருக்கின்றது, அறிவுப் புரட்சியின் மூலம். முதல் கட்ட வெற்றி இது. இதற்கு முழுக்க முழுக்கப் பொறுப்பாளர் பெரியார்என்று அண்ணா கூறுகின்றார்.

1968 டிசம்பர் 1 இல் தமிழ்நாடு பெயர் மாற்ற விழா, சென்னை பாலர் அரங்கத்தில் (இப்போதைய கலைவாணர் அரங்கம்) நடைபெற்றது.  அந்த நிகழ்வில் பங்கேற்று, ‘அன்புள்ள தலைவர்அவர்களே என்ற அண்ணாவின் குரல் கேட்டு வாழ்த்து முழக்கங்கள் எழுப்பியவர் களுள் நானும் ஒருவன்.

அண்ணா பேசுகிறார்:

நான் இந்த மகிழ்ச்சி விழாவில் கலந்து கொள்ள முடிவு எடுத்தபோது, நீங்கள் கூட்டத்தில் பேசக் கூடாது; உடலுக்கு ஊறு நேரக்கூடும் என்று டாக்டர்கள் தடை விதித்தனர். இன்றைய தினம் நான் பேசுவதாலேயே இந்த உடலுக்கு ஊறு நேரும் என்றால், இந்த உடல் இருந்தே பயன் இல்லை என்று நான் கூறினேன். சில நிகழ்ச்சிகள், சிலரால்தான் ஏற்படுகின்றன. மாமல்லனுக்குப் பிறகு தான், மாமல்லபுரம் தோன்றியது. அதைப் போல, ‘தமிழ்நாடுஎன்ற பெயர் மாற்றம் கூட, இந்த அரசு வந்தபிறகுதான் நடைபெற வேண்டும் என்ற வரலாற்று நியதி இருந்துள்ளது. இந்த ஈராண்டுக் காலத்தில், நம் ஆட்சியில், வரலாற்றுச் சிறப்புக்குரிய காரியங்களைச் செய்து இருக்கின்றோம்; இனி தமிழகத்தை ஆள எந்தக் கட்சி வந்தாலும் சரி, காங்கிரசாரே மீண்டும் வந்தாலும் சரி, தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தை மாற்றுவது ஒருக்காலும் நடக்காது. இது மணலில் எழுதப்பட்ட எழுத்து அல்ல. கல்லில் செதுக்கப்பட்டதும் அல்ல. தமிழ் மக்களின் இதயத்தில் பொறிக்கப்பட்டது. நெடுங் காலமாக நிலைத்துவிட்ட மணமுறை மாற்றி, சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்படி செல்லத்தக்கதாகச் செய்தது, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி ஆகும்.

ஆட்சிப் பொறுப்பு ஏற்றபிறகு, இந்திக்கு இங்கே இடம் இல்லை என்று சட்டம் போட்டோம். தமிழ்நாடு என்று பெயர் மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவற்றில் தமிழர்களாக வாழாமல், தமிழ்நெறி தவறியவர்களாகவே வாழ்ந்துகொண்டு இருப்பதை மாற்றி அமைக்க வேண்டும். எதிர்கால வேலைத்திட்டம் தெளிவாக இருக்கின்றது. தமிழன் தமிழனாக வேண்டும்; தமிழ்மொழியைப் போற்ற வேண்டும். என்றார்.

அறிஞர் அண்ணா அவர்கள், மாநிலங்கள் அவையில் ஆணித்தரமாக ஒன்றைச் சொன்னார்.

எந்தமொழியில் எங்கள் மூதாதையர்கள் பேசினார்களே, எங்கள் கவிஞர்கள் பாடினார்களோ, ஈடு சொல்ல முடியாத இலக்கியங்கள் தோன்றினவோ, அந்தத் தமிழ் மொழி இந்திய நாட்டின் ஆட்சி மொழி ஆகின்ற நாள்தான் நான் மன நிறைவு அடைகின்ற நாள் என்றார். இன்றைய நிலை என்ன?

எப்பக்கம் வந்து புகுந்து விடும்? இந்தி, எத்தனைப் பட்டாளம் கூட்டி வரும்? என்ற புரட்சிக்கவிஞனின் பாடல் வரிகளை, பொங்கி வரும் வேதனையோடு குறிப்பிட விரும்புகின்றேன். இந்தி, எல்லாப் பக்கமும் புகுந்து விட்டது. மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் புகுந்து விட்டது. வானொலி, தொலைக்காட்சி, அஞ்சல் வங்கி, நிதி, கல்வி என அனைத்துத் துறைகளிலும் இந்தி மயம். எத்தகைய அபாய வளையத்திற்குள் தமிழகம் சிக்கி இருக்கின்றது.

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, பற்றி எரியும் நெருப்புக்குத் தங்கள் உயிர் களைத் தந்தவர்களை, சீறி வரும் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு மார்பு காட்டியவர்களை, 37 ஆம் ஆண்டு முதல் இந்தியை எதிர்த்துப் போராடிய தமிழ் அறிஞர்களை, சில மணித்துளிகள் மனதில் நிறுத்துங்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள்,

தோழர்களே, இன்றைய இருள் அகல வேண்டும் எனில், இழிநிலை அகற்றப்பட வேண்டும் எனில், திராவிட இயக்கத்தின் பரம எதிரிகளின் முயற்சிகளைத் தகர்க்க வேண்டும் எனில், நம்மைத் தியாக வாழ்வுக்கும், துன்ப வாழ்வுக்கும் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

இதோ அண்ணா சொல்லுகிறார் நமக்காக, மரண சாசனம் எனும் பிரகடனத்தில்,

காலம் காலமாக இருந்து வருகின்ற ஏற்பாடுகளை நாம் திருத்தி அமைக்க விரும்புகின்றோம். மமதை மலைக்கு வேட்டு வைக்கின்றோம். அப்போது மலர் நம் தலை மீது விழும் என்று எதிர்பார்க்க முடியாது. பாறைத் துண்டுகள்தான் விழும். நாமாகவே இந்தப் பணிக்கு ஒப்படைத்துக் கொண்டு இருக்கின்றோம். 

அன்று சாக்ரடீஸ் குடித்த விஷம், இன்று அவரைச் சாகா நிலைக்கு உயர்த்தி விட்டது. நமக்கு இன்னலும் இடையூறும் இருக்கத்தான் செய்யும்; ஆனால், நமது உழைப்பு ஒருநாளும் வீண்போகாது. சமூகப் புரட்சிப் பணியில் ஈடுபட்டோர், காரிருட் சிறையில் அடைபட்டனர்; கல்லால் அடித்துத் துரத்தப்பட்டனர். சீர்திருத்தம் பேசியோர் பெரும்பாலும் சாகவில்லை; பெரும்பாலும் கொல்லப் பட்டனர். அதனாலேயே இன்று அவர்கள் சாகாதவராக உள்ளனர். இன்று அறிஞர் உலகின் அணிமணிகள் ஆயினர்.

நாம் அந்த இனம். நம்மையும் பின் சந்ததி மறவாது. எனவேதான், மரண சாசனம் தயாரித்துக் கொண்டு, இந்த மகத்தான போராட்டத்தில் இறங்க வேண்டும் என்று கூறுகின்றோம் என்றார்.

போர் முரசு

மறைமலை அடிகளாரும், திரு வி.க. அவர்களும், இந்தியால் தமிழகம் கெடும்; தமிழர் பண்பாடு அழியும் என்று அழுத்தத் திருத்தமாகக் கூறிவிட்ட பிறகு, போர் முழக்கம் செய்வதைத் தவிர,  போர் முரசு கொட்டுவதைத் தவிர, நமக்கு வேறு என்ன வேலை இருக்கின்றது? தமிழ்நாட்டு மூவேந்தர் போற்றிக் காப்பாற்றி வளர்த்த தமிழ்ப் பண்பை, தமிழ்க் கலாச்சாரத்தை, கனக விசயன் சந்ததியினர் கெடுக்க முன்வந்து விட்டனர். இனி நாம் சும்மா இருக்க முடியாது. தமிழனுக்கு இருப்பது உயர்தனித் தோள்கள். அவை, தமிழ் காக்க, வாள் ஏற்கத்தான் இருக்கின்றன. தமிழைப் பாதுகாக்கவே அறப்போர் என்று அறைகூவல் விடுத்தார்.

தன்னைத்தானே அறியத்தொடங்கிய பிறகு, தமிழன்தான் இழந்தவைகளைத் தேடத் தொடங்கினான். தேடிக்கொண்டும் இருக்கின்றான். அழிவுக்குக் காரணம் என்ன? என்று கண்டுபிடித்தான். அதனைக் களைய முற்படுகிறான்.

தமிழகத்திற்கு மறுமலர்ச்சி தேவை. திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் கொக் கரிக்கும் வேளையில், அதன் தேவை பன்மடங்கு ஆகிறது. தமிழகத்தின் உரிமைகளையும், வாழ்வாதாரங்களையும் காக்க, அறப்போர்க்களத்தில் நாமே முன்னணியில் நின்றோம்.

முல்லைப்பெரியாறு உரிமை காக்க எட்டு ஆண்டுகள் போராடினோம். வளம் கொழித்து வந்த காவிரி தீரத்தைப் பாலை வனம் ஆக்கும் நோக்குடன் மத்திய அரசு திணிக்க முற்பட்ட மீத்தேன் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடித் தடை பெற்றோம். வெற்றியும் ஈட்டினோம். ஆனால், ஆபத்து புதிய புதிய வடிவங் களில் முளைக்கின்றது. மீத்தேன் எரிவாயு, சேல் எரிவாயு, பாறைப்படிம எரிவாயு என அனைத்தையும் உள்ளடக்கிய ஹைட்ரோ கார்பன் எரிவாயுத் திட்டத்தை நெடுவாசலில் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்து விட்டது. மாதங்கள் பலவாக அங்கு தமிழர்கள் நடத்தி வரும் போராட்டத்தைத் துச்ச மெனக் கருதுகின்றது மோடி அரசு. அதனால்தான், கர்நாடகத்தில் பாரதிய ஜனதா குடும்பத்தினர் ஜெம் லேபரட் டரீஸ் நிறுவனத்திற்கு அனுமதியும் கொடுத்து விட்டது. அதனை எதிர்த்து, தென் மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் நான் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது.

ஆனால், நடப்பது என்ன தெரியுமா? அக்கிரமம், அநீதி. இப்போது தீர்ப்பு ஆயத்திற்கு நீதிபதியே இல்லை. இருந்த ஒருவரும் ஓய்வு பெற்று விட்டார். தீர்ப்பு ஆயத்தின் உறுப்பினரான நிபுணரும் ஓய்வு பெற்றுவிட்டார். நீதிபதியும் இல்லை, நிபுணரும் இல்லை. தீர்ப்பு ஆயங்களையே மூடிவிட, மத்திய அரசு ரகசியத் திட்டம் வைத்து இருப்பதாகத் தகவல் வருகின்றது.

நியூட்ரினோ

முல்லைப்பெரியாறு பென்னி குயிக் அணையைப் பாதுகாத்து விட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். ஆனால், அதற்கும் பேராபத்து வரு கின்றது. தேனி மாவட்டத்தில் பொட்டிப் புரம் அருகே, அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை அமைத்தே தீருவது என்று, மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், நீதியரசர் தமிழ்வாணன், நீதியரசர் ரவி அவர்கள் அமர்வில், தடை ஆணை பெற்றேன்.

இரண்டு மாநிலங்கள் இணைகின்ற இடத்தில், இரண்டு பக்கங்களிலும் பத்துக் கிலோ மீட்டர் தொலைவிற்குள், தொழிற் சாலை உள்ளிட்ட எந்தத் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்றாலும், அவை பிரிவு என்ற பகுதியில் சேர்க்கப்படும்; சுற்றுச்சூழல் ஆய்வு நடத்தப்பட வேண்டும்; பொதுமக்கள் கருத்து அறிய வேண்டும்; அந்த மாநிலங்களின் அனுமதியும் பெற வேண்டும். அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ திட்டம் அமைய இருக்கின்ற இடத்தில் இருந்து நான்கரைக் கிலோமீட்டர் தொலைவிலேயே கேரள மாநிலம் இருக்கின்றது. மதிகெட்டான் சோலைஎன்ற தேசியப் பூங்கா இருக்கின்றது.

தற்போது மத்திய அரசு பத்துக் கிலோ மீட்டர் தொலைவை, ஐந்து கிலோ மீட்டராக மாற்றுகின்ற திட்டத்தில் இருப்பதாக அறிகிறேன். அப்படி அவர்கள் தூரத்தை வகுத்தாலும், நியூட்ரினோ திட்டம் பிரிவிற்குள்தான் வரும். ஆனால், மத்திய அரசு, சட்டத்தைத் தன் விருப்பம்போல வளைத்துக் கொள்ளும் நோக்கத்தில், நியூட்ரினோ திட்டத்தை பி பிரிவில் சேர்க்க முடிவு செய்துள்ளது.

தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் சார்பில் சகோதரர் பூவுலகு சுந்தர்ராஜன் தொடுத்த வழககில், நியூட்ரினோ திட்டம் பிரிவைச் சேர்ந்ததுதான்; சுற்றுச் சூழல்ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பு ஆயம் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளது.

அண்ணா தி.மு.க அரசு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் காலத்தில், நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி கொடுக்கவில்லை. இன்றைய அண்ணா தி.மு.க அரசை, மைய அரசு ஆட்டிப் படைத்து வருவதால், நமக்குக் கவலையும் அச்சமும் ஏற்படுகின்றது. தமிழக வாழ்வாதாரங்களில் மிக முக்கிய மான முல்லைப்பெரியாறுக்குக் கேடு விளைவிக்கும் வகையில், நியூட்ரினோ திட்டத்தால், பென்னி குயிக் அணையும், இடுக்கி அணையும் இடிபடக் கூடும் என்ற ஆபத்து நம் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்குகின்றது. அப்படி ஒரு பேரபாயம் நேர்ந்தால், தென் மாவட்டத்தில் ஐந்து மாவட்டங்கள் பட்டினிப் பிரதேசம் ஆகிவிடும். பாசனத்திற்குத் தண்ணீர் கிடைக்காது; ஒரு கோடி மக்களுக்குக் குடிக்கத் தண்ணீரும் கிடைக்காது.

இதற்காகக,சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கரை அழைத்து வந்து, நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் சார்பில், மதுரையில் இருந்து பொட்டிப்புரம் வரையிலும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தினோம். மதுரை மாநகரில் உண்ணாநிலை அறப்போர் நடத்தினோம். மீண்டும் மக்களைத் திரட்ட வேண்டிய கடமை நம்மை அழைக்கின்றது.

ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்க, வாக்குகளை விலைக்கு வாங்கும் அவலம் நம் நெஞ்சில் வேலாகப் பாய்கின்றது. இதயத்தை ஈட்டியாய்த் துளைக்கின்றது. நடுத்தரக் குடும்பத்தினரே பணம் வாங்கு கின்றனரே? ஓட்டு என்பது விற்பதற்காகவே என்று கருதி விட்டனரே? இந்நிலையை மாற்றுவதற்கும் உரிய சூழல் மலர வேண்டும்.

அதேவேளையில், இவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டு மூலையில் முடங்கி விடாமல் தமிழக வாழ்வாதாரங் களைக் காக்கின்ற கடமையைத் தொடர்ந்து செய்வோம். அந்தக் குறிக் கோளோடுதான், வேலிக்காத்தான் எனப் படும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தீர்ப்பைப் பெற்றோம். நாமே களத்தில் இறங்கிப் பணி ஆற்றினோம். அதற்கும் தடை வந்தது. அந்த வழக்கும் இப்போது சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதில் அமர்வில் நிலுவையில் இருக்கின்றது.

தமிழக நலன்களை, நம் சக்திக்கு மீறிப் போராடிக் காத்து இருக்கின்றோம். இந்தியாவின் நவரத்தினங்களுள் ஒன்றான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தனியார் மயமாக்க மத்திய அரசின் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்ட பின்னர், அன்றைய தலைமை அமைச்சர் மாண்புறு வாஜ்பாய் அவர்களிடம் நான் நேரில் மிக விரிவாக எடுத்து விளக்கி, கேபினெட் எடுத்த முடிவையே மாற்ற வைத்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். தொலைக்காட்சி ஊடக விவாதங்களில், ஏடுகளின் கட்டுரையில், எந்தக் கட்டத்திலாவது, எவராவது இதனைக் குறிப்பிட்டார்களா? என்றால் இல்லை.

தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு

கொடிய இனப்படுகொலைக்கு ஆளான ஈழத்தமிழ் இனத்தின் தேசிய இனப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு பொது வாக்கெடுப்புதான் என்று, ஈழத்தமிழர் வரலாற்றிலேயே நாம்தான் முதன்முதலாக பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் முழங்கினோம். அதற்குப்பின்னரே பொது வாக்கெடுப்பு என்ற கருத்து பரவலாயிற்று. கடந்த செப்டெம்பரில் ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலுக்குச் சென்று, 11 அமர்வுகளில் நான் வலியுறுத்திய பொது வாக்கெடுப்பு குறித்து, மனித உரிமைக் கவுன்சிலின் கவனம் திரும்பி இருக்கின்றது என்று சில நாட்களுக்கு முன்பு நான் கேள்விப்பட்டேன்.

கண்மணிகளே,

கணக்கில் அடங்காத சோதனைகளைத் தாங்கிக் கொண்டு 24 ஆண்டுகளைக் களைத்துப் போகாமல் கடந்திருக்கின் றோம். கால் நூற்றாண்டில் கால் எடுத்து வைக்கப் போகின்றோம். வெற்றிகளைக் காணாமல், அடுக்கடுக்கான அல்லல் களைத் தாங்கிக்கொண்டு, கைக்காசைச் செலவழித்து நம் இயக்கத்தைக் காப்பாற்றி வருகின்ற காவல் வீரர்கள்தான் நம் கண்மணிகள்.

டிசம்பர் 3 ஆம் தேதியன்று நடைபெற்ற உயர்நிலைக்குழு கூட்டத்தில், இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிப்பது என்று, நாள் முழுக்க ஆலோசனை மேற்கொண்டு ஒருமித்த முடிவு எடுத்தோம்.

2018 ஆங்கிலப் புத்தாண்டு மலர்ந்த வுடன், 6 ஆம் தேதியன்று நடைபெற்ற உயர்நிலைக்குழுக் கூட்டத்திலும், 7 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மையம், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் கூட்டத்திலும், அரசியல் களத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு குறித்து, இரண்டு நாள் களிலும விவாதங்கள் நடைபெற்றன. கருத்துகள் பரிமாறப்பட்டன.

என் மகிழ்ச்சியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இருவேறுபட்ட கருத்துகள் எதுவுமே இல்லாமல், அனை வருமே ஒருமித்த கருத்தைக் கூறியது ஆச்சர்யம் அளித்தது. அதன் அடிப் படையில்தான், திராவிட இயக்கத்தைக் காக்கவும், தமிழக வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், மாநில சுயாட்சி இலக்கினை அடையவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் தொடர்வது என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது.

7 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அனைவரும் வலியுறுத்தியது யாதெனில், ‘பொங்கல் விழாவை முன்னிட்டு, நமது கொடி மரங்களுக்குப் புது வண்ணம் தீட்டி, புதுக்கொடிகளைப் பறக்க விட வேண்டும். கொடி மரங்கள் இல்லாத இடங்களில், புதிய கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும். ஜனவரி 14 ஆம் தேதி முதல் 31 வரையிலும், ஒன்றிய, நகர, பேரூர்க் கழகங்கள், மாநகராட்சி பகுதிக் கழகங்கள் திட்டமிட்டு இந்தப் பணியில் ஈடுபட வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் உரிய முறையில் திட்டங் களைத் தயாரித்துத் தருவர்.

கழகத்தின் 26 ஆவது பொதுக்குழுவை, 2018 மார்ச் 6 ஆம் தேதியன்று, ஈரோடு மாநகரில் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. 2002 ஆம் ஆண்டுக்குப் பிறகு, 15 ஆண்டுகள் கழித்து, ஈரோட்டில் பொதுக்குழு கூடுகின்றது.

எனது உயிரான சகாக்களே,

உங்களுக்குப் பொங்கல் வாழ்த்துச் சொல்லுகிறேன். தமிழர் திருநாளாம், தை நன்னாளில், உங்கள் இல்லத்தில் அனைவரோடும் தைப்பொங்கலைக் கொண்டாடி மகிழவும், உங்கள் இல்லத்தில் வளமும் நலமும் பெருகவும், பொங்கல் வாழ்த்துகளை, நெஞ்சார்ந்த உவகையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!

பாசமுடன்,

வைகோ

சங்கொலி, 19.01.2018

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)