சட்டத்திற்குப் புறம்பாக, நியூட்ரினோ திட்டத்தைத் தொடங்க முயற்சித்தால், மக்கள் போராட்டம் வெடிக்கும் வைகோ எச்சரிக்கை

விவகாரங்கள்: சுற்றுச்சூழல், மனித உரிமை, சட்ட ஒழுங்கு, அரசியல், வறுமை

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Tue, 09/01/2018

 

 

 

சட்டத்திற்குப் புறம்பாக,
நியூட்ரினோ திட்டத்தைத் தொடங்க முயற்சித்தால்,
மக்கள் போராட்டம் வெடிக்கும்

வைகோ எச்சரிக்கை

தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள பொட்டிபுரத்தில் அமைய இருந்த நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரிய போராட்டங்களை நடத்தி வந்தனர். தமிழகம் போராடிப்பெற்ற முல்லைப்பெரியாறு அணை உள்ளிட்ட 12 நீர்நிலைகளுக்கு அருகே இந்தத் திட்டத்தை அமைக்க முயற்சிக்கின்றார்கள். 

மேற்குத் தொடர்ச்சி மலைகளை யுனெஸ்கோ நிறுவனம், " பாரம்பரியமிக்க பாதுகாக்கப்பட்ட பல்லுயிரிய மண்டலம்" என்று அறிவித்துள்ளது. மாதவ் காட்கில் மற்றும் கஸ்துரிரங்கன் குழுவும், உத்தமபாளையம் தாலுகாவை "பாதுகாக்கப்பட்ட சூழல் மண்டலம்" என்று அறிவித்துள்ளது.அருகில் மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா இருப்பதால் "தேசிய வனவிலங்கு வாரியத்திடம்" அனுமதி வாங்க வேண்டும்.  

இவ்வளவு சூழல் முக்கியத்துவம் சார்ந்த விசயங்கள் உள்ள இடத்தில், பல்வேறு ஆய்வுகளை "திட்ட முன்னெடுப்பாளர்கள்" செய்து இருக்கவேண்டும், 

ஆனால் ஒரு சாதாரணக் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி போல, சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கை இன்றி, மக்களின் கருத்தைக் கேட்காமல் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அனுமதி வழங்கி இருந்தார்கள்.

எனவே, நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி வாங்காமல் திட்டப் பணிகளை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.  

பூவுலக நண்பர்கள் அமைப்பின் சார்பில் தொடுத்த வழக்கில், எந்தவிதமான ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் வாங்கப்பட்ட "சுற்றுச்சூழல்" அனுமதியை "தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின்" தென்னக அமர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி ரத்து செய்து தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. 

இந்த நிலையில் கடந்த மாதம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற அணுசக்தித் துறையின் ஆய்வுக் கூட்டத்தில், நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்றுவதற்காக. இந்திய அரசின் "தலைமைச் செயலரை" பொறுப்பாக நியமித்து இருப்பதாகச் செய்திகள் வந்தன. 

இந்திய அரசியல் அமைப்பு மாநிலங்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளின்படி, ஒரு மாநிலத்தில் எந்த மாதிரியான திட்டத்தை அனுமதிக்கலாம் என முடிவு எடுப்பது, மாநில அரசின்  அரசின் உரிமை ஆகும். இதைக்  கருத்தில் கொள்ளாமல், மத்திய அரசுத் துறைச் செயலர்களின் கூட்டம் நடைபெற்று அவர்களாகவே முடிவு எடுத்துக் கொண்டு, தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார்கள். 

தற்போது, நியூட்ரினோ திட்டத்தை " சிறப்புத் திட்டமாக"(one of) பிரிவு "B" திட்டமாக அறிவித்து, எல்லாத் தடைகளையும் நீக்கி,  "சுற்றுச்சூழல்" அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தயாராக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வாறு செய்வது சட்டத்திற்குப் புறம்பான செயல் ஆகும். சட்டத்தை மதித்துக் கடைபிடிக்க வேண்டிய மத்திய அரசே, சட்டத்தைக் காலில் போட்டு மிதிக்க முயற்சிக்கின்றது.   

நியூட்ரினோவுக்கு எதிராக மக்கள் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றார்கள், இந்த நிலையில் மத்திய அரசு மக்களின் உணர்வுகளை மதிக்காமல் திட்டத்திற்கு அனுமதிவழங்கி பணிகளைத் தொடங்கினால், மத்திய அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டுவோம் போராட்டக் களத்தில் இறங்குவோம்.   

இந்தத் தவறான போக்கைக் கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்துகின்றேன். மத்திய அரசின் அழுத்தத்திற்குப் பணிந்து "திட்ட நிறுவுதல்" அனுமதியைத் தமிழக அரசு வழங்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன்.

‘தாயகம்’                                                 வைகோ
சென்னை - 8                                  பொதுச்செயலாளர்,
09.01.2018                                        மறுமலர்ச்சி தி.மு.க.,

 

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)