இலங்கையில் தமிழர்கள் வாழமுடியாது! தனி ஈழம் அமைவதுதான் ஒரே தீர்வு! மக்களவையில் அ.கணேசமூர்த்தி உறுதி.இந்த நிதி நிலை அறிக்கையில் கைத்தறி மற்றும் விசைத்தறிக்கு எந்த ஒரு சிறந்த அறிவிப்பும் வெளிவராதது துரதிர்ஷ்டவசமானது. மேலும், வருத்தத்தை அளிக்கிறது.

விவகாரங்கள்: பொருளாதாரம், விவசாயம், மருத்துவம், மனித உரிமை, இலங்கைத் தமிழர்

மாவட்டம்: ஈரோடு, தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள்

Date: 
Fri, 24/07/2009

இலங்கையில் தமிழர்கள் வாழமுடியாது! தனி ஈழம் அமைவதுதான் ஒரே தீர்வு!
மக்களவையில் அ.கணேசமூர்த்தி உறுதி

2009 - 2010ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பொது விவாதத்தின் போது ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்கள் மக்களவையில் 13.07.2009ஆம் தேதியன்று ஆற்றிய உரையின் விவரம்...

அவைத்தலைவர் அவர்களே,

2009-2010ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின்போது எனக்குப் பேச வாய்ப்பளித்ததற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகப் பொருளாதார வீழ்ச்சியில் இந்தியப் பொருளாதார மந்தம் தட்டியுள்ள நிலையில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள இந்த நிதி நிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

மாதச் சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினரக்கு தினக்கூலி பெறும் ஏழை மக்களுக்கு ஒரு சிறிய வரி விலக்கு அளித்து இருப்பது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. ஆகவே, இவர்களுக்கு அரசு முழு உதவி செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வதில் இந்த நிதி நிலை அறிக்கையில் எந்த ஒரு ஊக்குவிப்பும் இல்லை. விவசாயக் கடனுக்கு 7 சதவீதம் வட்டி விதித்தது விவசாயிகளுக்கு பெரிய சுமையாகவும் கசக்கிப் பிழிவதாகவும் உள்ளது. அதனால் ஏழை விவசாயிகளின் வரிச் சுமையைக் குறைக்க மேலும் வட்டி விகிதத்தை குறைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய டீசல் விலை ஏற்றத்தைத் தடுக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபடாமல் உயர்நிலைக் குழுவை அமைத்தது வெறும் கண்துடைப்பே.

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையைக் காட்டிலும் நடப்பு நிதிநிலை அறிக்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கான நிதி ஒதுக்கீடு பாதியாக குறைத்திருப்பது எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை.

இந்த நிதி நிலை அறிக்கை தொலைநோக்குப் பார்வையைக் கொண்டு நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்வதை கருத்தில் கொண்டு தயாரிக்கப்படவில்லை.

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி அளிப்புத் திட்டத்தின் கீழ் தினக்கூலி ரூபாய் 80லிருந்து ரூ. 100 அக உயர்த்தியதை வரவேற்கிறேன்.

வளர்ச்சிப் பணிக்கு உபயோகமானதாக இல்லை. தவறுகள் நடக்கிறது. அரசின் நோக்கம் நிறைவேறவில்லை. கிராமப்புற வளர்ச்சிக்கு அது பயன்படு வதில்லை. இவர்களுக்காக வேலை என்பதைவிட வேலைக்காக இவர்கள் என்கிற வகையில் திட்டமிட வேண்டும்.

பாரத் நிர்மான் இந்திர அவாஸ் யோஜ்னா போன்ற சில நலிவுற்றோர்க் கான திட்டங்களை அந்தந்த நாடாளு மன்றத் தொகுதியில் அமல்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேற் பார்வையில் கொண்ட வரவேண்டும். இதன் மூலம் அரசின் இத்திட்டத்தின் நோக்கமும் நிறைவேறும். இதனால் அரசுக்கு நற்பெயர் ஏற்படும்.

இந்த நிதி நிலை அறிக்கையில் கைத்தறி மற்றும் விசைத்தறிக்கு எந்த ஒரு சிறந்த அறிவிப்பும் வெளிவராதது துரதிர்ஷ்டவசமானது. மேலும், வருத்தத்தை அளிக்கிறது.

சென்ற நிதி நிலை அறிக்கையில் “விசைத்தறி பூங்கா” ஈரோட்டில் அமையும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அது வெறும் அறிவிப்பாகவே இருந்தது. எனவே, இந்த முறையாவது ஈரோட்டுக்கு ‘விசைத்தறி பூங்கா’ திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

தேசிய நதியான கங்கை நதி மற்றும் ஆற்றுப் படுகையை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள இந்த நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்து தேசிய கங்கை நதிநீர் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று தமிழ்நாட்டில் பாயும் காவிரி, பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆகிய ஆறுகள் தொழில் நகரங்களான ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் வழியாகப் பாய்கின்றன.

இந்த தொழில் நகரங்களிலிருந்து வெளியேறும் கழிவுகள், சாயக் கழிவுகள், தோல் கழிவுகள் ஆகியவை இந்த ஆறுகளில் கலப்பதால் ஆற்றுத் தண்ணீர் மாசுபடுகின்றது. இதனால், இந்த ஆற்றுத் தண்ணீர் குடிப்பதற்கோ அல்லது விவசாயம் செய்யவோ உகந்ததாக இல்லை.

இப்பகுதியில் உள்ள ஆலைக் கழிவு நீர், சாயக் கழிவு, தோல் கழிவு மற்றும் சாக்கடை நீர் ஆகியவை நதிகளில் கலக்காமல் இருப்பதற்குப் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து பாதுகாப்பான இடத்துக்கு செல்வதற்கு உரிய திட்டத்தினை வழி வகுத்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு இதை உடனடியாக நிறைவேற்ற hவிட்டால் தமிழ்நாட்டில் இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு குடிநீர் தட்டப்பாடு ஏற்படுவதுடன், விவசாயம் செய்ய இயலாமல் விளை நிலங்கள் வறண்ட பாலைவனமாகக் காட்சியளிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டம் வெளியிடப் பட்டுள்ளதை வரவேற்கிறேன். இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பல மாநிலங்களில் கள் இறக்கும் தொழிலாளர்களின் நிலை பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ளது. இதற்கு மத்திய அரசு ஒரு தேசிய திட்டத்தை உருவாக்கி கள் மருத்துவ குணம் படைத்தது. சைவ மூலிகைப் பொருள் என்று அறிவிக்க வேண்டும். கள்ளை மதுபானப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் இலங்கைத் தமிழர்களின் மறு வாழ்வுக்காக அந்நாட்டுக்கு ரூ. 500 கோடி நிதி உதவி அளித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் ஏற்கெனவே குடியிருந்து வந்த இடத்தில் அமர்த்தி அவர்கள் வாழ்வாதாரத்தை மறு சீரமைப்பு செய்வது குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இலங்கைத் தமிழர்கள் ஏற்கெனவே வசித்து வந்த இடங்களில் தற்போது சிங்களர்களை அந்நாட்டு அரசு குடியமர்த்தி உள்ளதாகத் தெரிய வருகிறது.

இதிலிருந்து இலங்கைத் தமிழர்கள் சொந்த மண்ணில் அகதிகளாக, உறவுகள் இருந்தும் அநாதைகளாக - உரிமைகள் இருந்தும் அடிமைகளாய் கம்பி வேலிக்குள்ளாக துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டில் அடைபட்டு அல்லாடு கிறார்கள். அல்லல்படுகிறார்கள். வறண்டுப்போன தொண்டையின் தாகம் தீர்க்க தண்ணீர் கூட கிடைக்காமல் இயற்கை உபாதைகளை எதிர்கொள்ள இடமில்லாமல் ரணத்தின் வேதனையில் இருந்து நிவாரணம் பெற வைத்திய வசதி பெற முடியாமல் உணவு மற்றும் இதர அடிப்படை தேவைகளை இராணுவ கட்டுப்பாட்டு அலுவலர்களிடம் கையேந்தும் நிலையில் உள்ளனர். இது போன்று 6 முகாம்களில் சுமார் 3 இலட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அடிமைகளாக அடைக்கப்பட்டு உள்ளனர்.

இலங்கையின் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. சரத்தானந்த் டி சில்வா அவர்கள் ஐ.நா. சார்பில் செட்டிகுளம் முகாமை பார்வையிடச் சென்றபோது அங்கு உலகிலேயே அதிக அளவில் அகதிகள் மோசமான நிலையில் வாழ்வதாகச் சுட்டிக் காட்டியுள்ளார். ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் திரு. பான்கி மூன் அவர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

இலண்டனிலிருந்து வெளியாகும் ‘தி டைம்ஸ் நாளிதழில்’ இலங்கையில் உள்ள இலங்கையின் அகதிகள் முகாம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும், இலங்கை அரசு இங்கு எவ்விதமான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காத காரணத்தினால் வாரத்தில் ஆயிரத்து நானூறு பேர் இறந்து வருகிறார்கள் என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பல நாடுகளில் இருந்து இலங்கைத் தமிழர்களுக்கு வழங்குவதற்கு வரப்பெற்ற நிவாரணப் பொருள்கள் சென்னையில் கிடக்கிறது. இலங்கையில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு அனுப்ப முடியவில்லை.

தன்னார்வத் தொண்ட நிறுவனம், செஞ்சிலுவை சங்கம் ஆகியோர்களை வலுக்கட்டாயமாக இலங்கையிலிருந்து வெளியேற்றுகிறார்கள். இது துரதிஷ்டவசமானது.

ஆகவே, நிவாரணப் பொருட்களை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்காமல் நேடியாக இலங்கைத் தமிழர்களின் முகாம்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு ஒதுக்கிய தொகை இலங்கைத் தமிழர்களை அழிக்கக் கூடியதற்கு இல்லாமல் அவர்கள் வாழ்வாதாரத்துக்குப் பயன்படுமாறு உரிய நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை செய்கிறேன்.

இதற்கு ஒரே தீர்வு ‘தமிழ் ஈழம்’ அமைவதுதான் இல்லை எனில் அங்கு தமிழர்கள் வாழ முடியாது.
பலுசிஸ்தான் என்பது சாத்தியமானால் இதுவும் சாத்தியமே.

எனவே, இலங்கைத்தமிழக்ரள் சுதந்திரமாக வாழ மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அ.கணேசமூர்த்தி எம்.பி. உரையாற்றினார்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)