மறுமலர்ச்சி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ஞானதாஸ் சட்டப் பேரவையில் 23.06.2009 அன்று உயர்கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று ஆற்றிய உரை...
விவகாரங்கள்: கல்வி
மாவட்டம்: விருதுநகர், தமிழ்நாடு
செய்தித்துறை: தொகுப்புகள்
மறுமலர்ச்சி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ஞானதாஸ் சட்டப் பேரவையில் 23.06.2009 அன்று உயர்கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று ஆற்றிய உரை...
உயர்கல்வி என்றதுமே தொழிற் கல்வியைத்தான் குறிக்கிறது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அனைத்து விவாதங்களும் தொழிற் கல்வியைப் பற்றியும், அக்கல்லூரிகளைப் பற்றியுமே உள்ளது. உயர் கல்வியில் 80 சதவிகிதக் கல்விக்கு தொழில் சாராக் கல்வியாகத் தான் உள்ளது. எனவே, கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அக்கல்லூரிகள் இணைப்பு முறை -Affiliating System- உயர் கல்வியின் தரத்தக்கும், பயனுக்கும் வசதியாக இல்லை என்கின்றனர் நிபுணர்கள். நாம் இம்முறையை இலண்டன் பல்கலைக் கழகத்திலிருந்து கடைபிடித்தோம். இலண்டன் பல்கலைக் கழகம் இம்முறையை பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிட்டுவிட்டது.
ஆனால், நாம் அதை இன்னும் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றோம்.
நம்நாட்டில் பல்கலைக்கழகங்களில் அதிகமான மாணவர்கள் படிக்கிறார்கள் என்ற தோற்றம் உள்ளது. உண்மையில், 18 வயதுக்குட்பட்ட 100 பேரில் 7 பேர் மட்டுமே நம் நாட்டில் உயர் கல்வி பெறுகிறார்கள். பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிக மிகக் குறைவாகும். ஜப்பானில் 87 சதமும், கனடாவில் 100க்கு 100 என்ற நிலையில் தமிழகத்தில் உயர் கல்வியின் முன்னேற்றத்திற்கென வழிவகைகளை மேலும் தீவிரமாக நாம் ஆய்வு செய்ய வேண்டும். ஏனென்றால் கல்வி அதிகரிக்கும்போதுதான் அறியாமை விடுபட்டு வறுமையும் மறையும்.
தமிழகக் கல்லூரிகளில் 6 இலட்சத்து 85 ஆயிரத்து 856 மாணவர்களும், 3 இலட்சத்து 67 ஆயிரத்து 913 மாணவிகளும் படிக்கின்றனர். கல்லூரி படிப்பு படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க நடவடிக்கை தேவை. அதேபோன்று தமிழக பொறியியல் கல்லூரிகளில் 1 இலட்சத்து 22 ஆயிரத்து 933 மாணவர்கள் படிக்கின்றனர். பொறியியல் பாடத்தில் பெரும்பாலும் மாணவர்கள் பட்டப்படிப்போடு நின்று விடுகின்றனர். பட்ட மேற்படிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் அதிக வசதிகளைச் செய்ய வேண்டும். ஜப்பான் தனது எதிர்கால முன்னேற்றத்திற்கு, பொறியியல் பட்டதாரிகளையும், தொழில் வல்லுநர்களையும் நம்பியுள்ளது. அங்கு 21.6 சதவிகித மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்கிறார்கள். நம் நாட்டில் வெறும் 4.9 சதம் மட்டுமே பொறியியல் கல்லூரியில் சேருகின்றனர். அங்கு 50 சதவிகித பொறியியல் மாணவர்கள் பட்ட மேற்படிப்புக்குச் செல்கின்றனர். பொறியியல் பட்ட மேற்படிப்பு பெற்ற மாணவர்களில் 50 சதம் Ph.Dக்குச் செல்கின்றனர். இங்கும் அந்த நிலை வர வேண்டும். உயர் கல்வியில் தரம் சிறப்படைய ஆசிரியர்களின் பங்கு மிக மிக முக்கியமானது. மாணவர் சேர்த்தல், பாடத் திட்டம் உருவாக்குதல், தேர்வு நடத்துதல், தேர்வு முடிவுகளை வெளியிடுவது என அனைத்திலும் ஆசிரியர்களின் பங்கு பிற நாடுகளில் உள்ளது.
ஆனால், நம் நாட்டில் நிருவாகம் மாணவர்கள் சேர்க்கை யையும், ஒரு குழு பாடத்திட்டத்தையும் கவனிக்கிறது. யாரோ ஒருவர் வினாத்தாள் தயாரிக்கிறார். வேறு யாரோ விடைத்தாளைத் திருத்துகிறார். பல்கலைக் கழகம் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறது. இது சரியான முறை அல்ல என்பது பல நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஆராய்ச்சி களுக்காகவோ, படிப்பதற்காகவோ விண்ணப்பிக்கும் மாணவர்களைத் தமது திறமையாலும், அனுபவத்தாலும், அறிவாலும் கல்லூரிக்கோ, பல்கலைக் கழத்திற்கோ ஈர்க்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை.
இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ் போர்டு, அமெரிக்காவில் ஹார்வர்டு, கொலம்பியா, யேல் போன்ற பல நாடுகளில் பல்கலைக் கழகங்கள் புகழ் பெறுவதற்குக் காரணம் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள்தான். ஆகையால்தான், “ A teacher affects sternity,He can never tell where his influence stops ” ஆசிரியர்களின் தாக்கத்துக்கு எல்லையே இல்லை என்றார் ஓர் அறிஞர். அதேபோன்று, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களும், உயர்ந்த கட்டடங்கள் சிறந்த ஆசிரியர்களுக்கு மாற்று ஆகாது என்று கூறினார்.
கேரளாவில் யு.ஆர்.அனந்தமூர்த்தி தலைமையிலான Kerala State Higher Education Council உயர் கல்விக் கொள்கையைச் சமர்ப்பித்தபோது கல்லூரிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க College Service Commission ஒன்றை பரிந்துரை செய்தது. தமிழக அரசும் இதை ஆய்வு செய்ய வேண்டும்.
ஆந்திர மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தரும் மதிய உணவு, கல்லூரி மாணவர்களுக்கும் தரப்படும் என முடிவு செய்தது. கோவா மாநிலத்தில் கோவா கல்வி மேம்பாட்டுக் கழகம் Education Estate என்ற ஒன்றை நிறுவத் திட்டம் தயாரித்தது. கர்நாடகா மாநிலம் Karnataka Higher Education Development Corporation என்ற நிறுவனத்தை நிறுவி மாணவர்களுக்கு 2 சதவிகிதம் முதல் 6 சதவிகிதம் வட்டியில் கல்விக் கடன் வழங்கவும், பெண்களுக்கும் உடல் ஊனமுற்றோர் களுக்கும் 1 சதவிகித வட்டியிலும் கடன் வழங்குவதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசு இவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.
உயர்கல்வியில் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிக்காக சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். “தொழில் நுட்பச் செய்திகளைக் கேட்டேன், மறந்து விட்டது. படித்தேன், கொஞ்சநேரமே நினைவில் நின்றது. பார்த்தேன், அதுவும் சற்று அதிகமான நேரம் நினைவில் நின்று மறைந்தது. அவ்வேலைகளைச் செய்தேன், எப்போதும் மறக்க இயலாமல் நிலைத்துவிட்டது.” என்பதுதான் சீனக் கல்விமுறை.
எனவே, அரசுக் கல்லூரிகளில் ஆய்வுக் கூடங்களை நவீனப்படுத்த வேண்டும்.
ஆசிய ஆராய்ச்சி நிறுவனங்களின் தர வரிசையில் முதல் இடத்தில் இருப்பது தென் கொரியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள Postec என்றழைக்கப்படும் ‘பொகாங்’ அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம். அங்கு நூலகத்தின் முன் உள்ள சதுக்கத்தில் எடிசன், ஐன்ஸ்டீன், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளின் சிலைகள் வைக்கப்பட்டு, இரண்டு பீடங்களைக் காலியாக வைத்துள்ளனர். காலியாக உள்ள பீடங்களில் ‘கொரியாவின் எதிர்கால விஞ்ஞானி’ என்று பொறித்து உள்ளனர். இது அவர்களின் அறிவியல் வேட்கையைக் காட்டுகிறது. அதைப் போல் நமது அறிவியல் வேட்கையும் இருக்க வேண்டும். ‘ The Scientist seeks to understand what is,the engineer seeks to create what never was ’ விஞ்ஞானி இருக்கும் ஒன்றை அறிந்து கொள்ளவும், பொறியாளர் இதுவரை இல்லாத ஒன்றை உருவாக்கவும் முற்படுகின்றனர் என்பார்கள்.
புதிய பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்காகப் படைகளுக்குத் தலைமை தாங்கிச் செல்லக்கூடிய முரடர்களை உருவாக்க ஏற்பட்ட பழக்கமான ‘ராக்கிங்,’ கல்லூரிகளில் தடுக்கப்பட வேண்டும். ஆர்.கே. ராகவன் கமிட்டி பரிந்துரைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பேராசிரியர் யஷ்பால் அளித்திருக்கும் Renovation and Rejuvenation of Universities அறிக்கையை ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் உயர் கல்வி படிக்கும் நமது மாணவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
மாவட்டத்துக்கு ஒரு பொறியியல் கல்லூரி, மருத்தவக் கல்லூரி என்ற முறையில், கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டே அக்கல்லூரிகளை அரசு நிறுவ வேண்டும்.
உயர் கல்வி வியாபாரமாகிக் கொண்டு வருவது, ஏழை மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிப்பது மட்டுமல்ல, சமுதாயத்தில் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி சமூகப் பிரச்சனைகள் ஏற்படும். எனவே, அரசு இதில் போதிய கவனம் செலுத்த வேண்டும்.
ஆர்.ஞானதாஸ் எம்.எல்.ஏ., இவ்வாறு உரையாற்றினார்.

