நாம் பெற்றது கெளரவமான தோல்வி! கருணாநிதி பெற்றது வெட்கக்கேடான வெற்றி!

விவகாரங்கள்: அரசியல்

மாவட்டம்: தூத்துக்குடி, தமிழ்நாடு

செய்தித்துறை: தலைப்பு செய்திகள், சொற்பொழிவுகள்

Date: 
Sat, 11/07/2009

நாம் பெற்றது கெளரவமான தோல்வி!

கருணாநிதி பெற்றது
வெட்கக்கேடான வெற்றி!

தூத்துக்குடி மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ
வைகோ உரை

தூத்துக்குடி மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம்
05.07.2009

தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தில், உங்களையெல்லாம் சந்திக்கின்ற நல்ல வாய்ப்பைப் பெற்று இருக்கிறேன். மாவட்டச் செயலாளர் ஜோயல் அவர்களின் உரைவீச்சு உணர்ச்சிப்பிரவாகமாக அமைந்து இருந்தது.
நொறுங்கிக்கிடந்த பாஞ்சாலங்குறிச்சி புழுதிக்காட்டில், 7 நாட்களில் திரும்பவும் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைக் கட்டிய வீரர்கள், இந்தத் தென்னாட்டில்தான் இருக்கிறார்கள். நான் சரித்திரத்தை ஓரளவு முறையாகப் படித்தவன். விடுதலைப் போராட்ட வரலாறையும் படித்தவன். எனக்கு மிகத் திகைப்பை ஊட்டுகிற சம்பவம் அதுதான்.

போர்க்களத்தில் தோற்றபிறகு, அந்தத் தோல்வியின் பிடியில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று, காயமுற்ற வேளையில் கோலார்பட்டி அரண்மனைக்குச் சென்று அது சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், தனாதிபதி சிவ சுப்பிரமணியப் பிள்ளை, தன் தலையைக் கொடுத்தேனும் தலைவனைக் காப்பாற்ற வேண்டும் என்று, கட்டபொம்மன் போலவே உடை அணிந்து, கீரிடம் அணிந்து, ஒரு பக்கத்தில் குதிரையில் ஓடுவதாக போக்குகாட்டி, அதன் விளைவாக கட்டபொம்மனும் ஊமைத்துரையும் அங்கிருந்து தப்பிச்சென்று, புதுக்கோட்டை அரசர் உதவியாக இருப்பார் என்று கருதி, அங்கு அவர்களுடைய விருந்தினர்களாக இருந்த வேளையில்தான், வெள்ளையர்களின் அச்சுறுத்தலால் அவர் காடுகளுக்கு உள்ளே இருந்து கைது செய்யப்பட்டு, கயத்தாறுக்குக் கொண்டு வந்து தூக்கில் இடப்பட்டார்.

தம்பி காசிராஜன் சொன்னதைப்போல, வெள்ளைக்காரர்கள் சிறையில் அடைபட்டுக் கிடந்த ஊமைத்துரை, சிறையை உடைத்து வந்த சம்பவம் இந்தியாவில் மிகமிக அபூர்வமானது. ஆனால், சிறையை உடைத்து வெளியேவந்து தப்பி நீண்டதூரம் வந்து விடாமல், பாளையங்கோட்டைக்குப் பத்து கிலோ மீட்டர் தொலைவிலே போர்க்களங்களை நடத்தினான். பாஞ்சாலங்குறிச்சிக்குத்தான் வருவான் என்று வெள்ளையர்கள் எதிர்பார்த்த நிலையில், அதே பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்து, 7 நாள்களில் கருப்பட்டியும் பதனீரும் இடுபொருள்களும் போட்டு, கோட்டையைக் கட்டி எழுப்பினான். மீண்டும் களத்தில் வெள்ளையர்களை மூன்று நான்கு சண்டைகளில் தோற்கடித்துவிட்டு, பீரங்கிகளால் அந்தக் கோட்டை தகர்க்கப்பட்ட நிலையில்தான் அவனிடம் நவீன ஆயுதங்கள் இருந்ததனால் எதிர்கொள்ளமுடியாத நிலையில் சிவகங்கையை நோக்கிச் சென்றான்.

இது அந்த நாட்களில் நடந்த உண்மையான சரித்திரம். ஆகவே, தோல்வி என்றோ, வீழ்ந்து விட்டோம் என்றோ, இனி நாம் ஒடுங்கி விடுவோம் என்கிற எண்ணம் இந்த மண்ணில் உலவுகிறவனுக்கு ஏற்படாது. இரத்த நாளங்களில் குருதியின் ஓட்டம் இருக்கின்றவரை, எதையும் தோல்வி என்று கருதி முடங்குவது இல்லை. இன்று எதிரியின் கை ஓங்கியது என்றால், அடுத்த களத்துக்குச் செல்வோம் என்ற உணர்ச்சி இந்த மண்ணிலே விடுதலைப் போராட்டக் காலத்தில் இயக்கியதன் விளைவாகத் தான் இங்கே வாழ்க்கையைக் காண முடிந்தது. வீர சிதம்பரம் பிள்ளையை இந்த மண் தரிசிக்க முடிந்தது. எட்டயபுரத்துக் கவிஞனின் கனல் தெறிக்கும் கவிதைகள் உலா வந்தன. அப்படிப்பட்ட சரித்திரப் புகழ் பெற்ற இந்த மண்ணில், நாங்கள் அந்த வழிவந்தவர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் என்று மீண்டும் இங்கே நிரூபித்து இருக்கிறார்கள்.

நான் உங்களுக்கு எப்படி நன்றிதெரிவிப்பது என்றே தெரியவில்லை. உங்களைப் பார்க்க வேண்டும் என்று எனக்கொரு ஆசை. எப்படி நீங்கள் கவலையோடு இருக்கிறீர்களோ, இந்தத் தேர்தல் தோல்வியினால் வேதனைப்படுகிறீர்களோ என்று நான் உங்களைத் தேடிவந்தபிறகு, நீங்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்று வந்தீர்கள். துணைப்பொதுச் செயலாளர் சொன்னார், ‘இடைக்காலத்தில் சற்று ஒதுங்கி இருந்த சகோதரர்கள்கூட இன்றைக்கு இந்த நிகழ்ச்சிக்கு விருப்பத்தோடு வந்து இருக்கிறார்கள்’ என்று சொன்னார்.

புதிய இளைஞர்களைப் பார்க்கிறேன். வாலிப வேங்கைளைப் பார்க்கிறேன். அவர்கள் தான் இயக்கத்தை இன்னும் அதிகமாக வேகமாக முன்னெடுத்துச் சொல்லக் கூடியவர்கள். எவ்வளவு ஆர்வத்தோடு படிவங்களை வாங்க வந்தார்கள். நம் பொதுச் செயலாளர் விருதுநகரில் தோற்றுப் போனாரே ஒரு எட்டுப்போய் பார்த்துவிட்டு வருவோம் என்பது மனித இயற்கை. துன்பப்படுகிறபோதுதான் தேடிச்செல்வார்கள் நண்பர்கள். உறவினர்கள்கூட மகிழ்ச்சிகரமான வேளைகளில் வீடுகளுக்குச் செல்லா விட்டால்கூட, அந்த வீட்டில் துன்பம் என்று கேள்விப்பட்டால், ஒரு வருத்தம் என்று கேள்விப்பட்டால் தவறாமல் அவர்களுடைய துக்கத்தில் வேதனையில் நாம் பங்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று செல்வார்கள். இது நமது மரபு.

அந்த அடிப்படையில்தான் நீங்கள் வந்து இருக்கிறீர்கள். வைகோவே நேராகப் பார்ப்போம் சோர்வாக இருக்கிறாரா? கலகலப்பாக இருக்கிறாரா? அல்லது கவலையோடு இருக்கிறாரா? என்கிற இந்தப் பாச உணர்வுதான் நம்மைப் பிணைத்து இருக்கிறது. வந்தவர்கள் வெறுமனே வரவில்லை. உங்கள் வீட்டில் எவ்வளவு காசு, பணம் இருக்கிறதோ,உங்கள் குடும்பச் செலவுகளுக்கு வைத்து இருக்கிற காசைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

இங்கே கொடுக்கப்பட்டு இருக்கிற நிதி சாதாரணத் தொகை அல்ல. உறுப்பினர் படிவங்களைப் பெறுவதற்கு, படிவம் ஒன்றுக்கு 100 ரூபாய் என்று ஒரு வரைமுறையை மாவட்டச் செயலாளர்களாகவே வகுத்துக் கொண்ட அடிப்படையில், நேற்றைக்கு விருதுநகர் மாவட்டத்தில் 2,25,000 ரூபாய் படிவங்களுக்காகக் கொடுக்கப்பட்டது. எனக்கு ரொம்ப வியப்பாக இருந்தது. தமிழ்நாட்டிலேயே அதிகத் தொகையை கொடுத்து விட்டது விருதுநகர் மாவட்டம். இதுவரை நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் விருதுநகர் மாவட்டம்தான் முதல் இடத்தைப் பெற்று இருக்கிறது என்று சொல்லிவிட்டு வந்தேன்.

மாவட்டச் செயலாளர் இரவு ஒரு மணிக்கு என்னைச் சந்தித்தபோது, ‘விருதுநகரில் இரண்டேகால் இலட்சம் கொடுத்து விட்டார்கள். உங்கள் மாவட்டத்திலும் ஓரளவு நல்ல தொகை கிடைக்கும் என்று நினைக்கிறேன்’ என்றேன். அவரும், ‘வரலாம்’ என்று சொன்னார். அவர் எப்பொழுதுமே இன்ப அதிர்ச்சிகளைத் தருகின்றவர். சஸ்பென்சில் வைக்கிறவர். அவர் இந்த மேடையிலேயே உட்காரவில்லை. நான் அனைத்தையும் கவனித்துக் கொண்டே இருப்பேன்.

இங்கே நமது தம்பிகள் பேசினார்கள். கருப்பசாமி பாண்டியன் பேசினார். காசி ராஜன் அறிவித்துக் கொண்டு இருந்தார். மாவட்டச் செயலாளரை மேடையிலேயே காணோம். அவர் ஒவ்வொருவரையும் சந்தித்து, வாசலில் வருவதற்கு முன்பாகவே அவரது மடியில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பரிசோதனை செய்து, இந்த வேலைகளை எல்லாம் கவனித்துக் கொண்டு இருந்தார்.

மகிழ்ச்சியாகக் கொண்டுவந்து கொடுத்தார்கள். தோழர்களே, நீங்கள் தமிழ்நாட்டில் முதல் இடத்துக்கு வந்து விட்டீர்கள். 3,12,100 ரூபாய். இனி உங்களை யாரும் வெற்றி பெற முடியாது. அடுத்து, இரண்டு மாவட்டங்கள் ஒருவேளை உங்களைவிட அதிகம் கொடுக்கலாம். ஒன்று கோவை மாவட்டம் - இன்னொன்று காஞ்சிபுரம் மாவட்டம். ஆனால், அந்த மாவட்டங்களின் நிலப்பரப்பு அதிகம். ஒன்றியங்களின் எண்ணிக்கை அதிகம். நகரங்களின் எண்ணிக்கை அதிகம்.

அவர்கள் உங்களைவிட அதிகம் கொடுத்தாலும், மாவட்ட எல்லைக் கணக்கில் தமிழ்நாட்டில் முதலிடத்தில் தூத்துக்குடி மாவட்டம்தான் இருக்கும். காஞ்சி அதிகம் தந்தாலும் - கோவை அதிகம் தந்தாலும் நீங்கள்தான் முதல் இடத்தைப் பெறுகிறீர்கள். எவ்வளவு மகிழ்ச்சி. நிருபர்கள் நினைக்கலாம். ஒரு வார்டுக்கு 2 கோடியை அள்ளிக் கொடுக்கிறார்கள் ஆளுங்கட்சியினர். ஓட்டுக்கு ஒரு தெருவுக்கு கோடி கொடுக்கிறார்கள். இவர்கள் மாவட்டம் முழுவதும் சேர்ந்து கொடுத்த 3,12,000 ரூபாயை பொதுச் செயலாளர் எவ்வளவு பெரிய தொகை என்று சொல்கிறார். நாட்டு நடப்பே இவர்களுக்குத் தெரியாது போல் இருக்கிறதே, என்று நினைக்கலாம்.

அந்தப் பணம் குஷ்டரோகியின் கையில் இருக்கிற வெண்ணெய். இது உழைக்கின்ற பாட்டாளியின் கையில் இருக்கிற கொம்புத் தேன். இந்தப் பணத்தின் மதிப்பு. இதில் ஒவ்வொரு ரூபாயின் பின்னாலும் உழைப்பு இருக்கிறது - உண்மை இருக்கிறது - சத்தியம் இருக்கிறது - நேர்மை இருக்கிறது. எவ்வளவு மகிழ்ச்சியோடு சக்திக்கு மீறித் தருகிறார்கள்.

1000 ரூபாய் - 2000 ரூபாய் என்பதெல்லாம் நமக்கு பெரிய தொகை. மிகப்பெரிய தொகையைக் கொடுத்தது மட்டும் அல்ல, இந்த இயக்கத்தை முதல் மாவட்டமாகக் கொண்டு வரவும் உங்களால் முடியும். கழகக் கொடிகளை அமைக்கின்ற பணியில், பிற மாவட்டங்களுக்கு எடுத்துக்காட்டான வேலைகளைச் செய்தவரே என் அருமைத் தம்பி ஜோயல் அவர்கள்தான். வித்தியாசமான ஒருமுறையில் அழகாக அமைத்துக் காட்டினார்.

ஆகவே தூத்துக்குடி மாவட்டம் கழகத்தின் எஃகு கோட்டையாக நிர்மாணிக்கப்படும் என்றவகையில் படிவங்களைப் பெற்று விட்டீர்கள். இந்த படிவங்களை எடுத்துக் கொண்டு உடனடியாக வேலைகளைத் தொடங்குங்கள். 365 நாளும் உங்களை உழைக்கச் சொல்லவில்லை. வாரத்தில் ஒரு நாளாவது பணியாற்ற வேண்டும் என்றார் சம்பத்குமார். உங்களது முழு நேரத்தையும் கட்சிக்காகச் செலவழிக்கச் சொல்லி நான் கேட்கவில்லை.

பொதுச் செயலாளர் உழைக்கிறாரே, அதில் ஒருபங்காவது உழைக்க வேண்டாமா என்று அவர் கூறினார். அதுவும் எனக்கு உடன்பாடு இல்லை. என்னை நீங்கள் பொதுச் செயலாளராக்கி இருக்கிறீர்கள். இலட்சக்கணக்கான மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து பொதுச்செயலாளராக ஆக்கி இருக்கிறீர்கள். என்னுடைய கடமை, நான் ஓய்வு இன்றி உழைத்தே தீரவேண்டும்.

நீங்கள் உங்களுடைய குடும்பத்தைப் பாதுகாத்து கொண்டு, - நீங்கள் ஏற்கனவே உங்கள் வாழ்க்கையை சிரமங்களிலே நடத்திக்கொண்டு கட்சிக்கும் உங்களது நேரத்தை செலவழியுங்கள். இந்தநேரத்தில் செலவழியுங்கள். இப்பொழுது இந்தக் காலகட்டத்தில் உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

நம் இயக்கத்துக்காக உறுப்பினர் படிவங்களை எல்லா காலத்திலும் எடுத்துச் செல்கிறபோது சிலவேளைகளில் வரவேற்பு இல்லாமல் இருந்திருக்கலாம். இப்பொழுது மக்கள் மனதில் நம்மீது ஒரு பரிவு இருக்கிறது. அரசியலில், பல பகுதிகளில் ஒரு சலிப்பு இருக்கிறது. இந்தக் கட்டத்தில் நீங்கள் செல்கிறபோது நம் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதால் கழகத்தில் சேர்வதற்கு விரும்புவார்கள். இது என்னுடைய கருத்து.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 1200 கோடி ரூபாய் தி.மு.கழகம் செலவழித்து இருக்கிறது. தோழமைக்கட்சிகளுக்கும் சேர்த்தே, காங்கிரசுக்கும் சேர்த்தே பல தொகுதிகளில் செலவழித்தார்கள். சராசரியாக 30 கோடி. 40 தொகுதிகளுக்கு 1200 கோடி ரூபாய் ஆளும் கட்சி செலவழித்து இருக்கிறது. இந்த 1200 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது? மக்கள் ஆட்சித் தத்துவத்துக்கு இதைவிடப் பேராபத்து இருக்க முடியாது.

இப்படிப்பட்ட அக்கிரமத்தை இன்றைக்குத் தமிழ்நாட்டில் செய்து கொண்டு இருக்கிறார் கலைஞர் கருணாநிதி. நமக்கு இப்பொழுதுதான் வேலை அதிகமாக இருக்கிறது. நேற்று முன்தினம் மருத்துவர் ஒருவர் விமானநிலையத்தில் சந்தித்தார். அவர் மதுரையில் புகழ்பெற்ற மருத்துவர். அவர் நான் காத்து இருக்கிற இடத்துக்குத் தேடி வந்தார். அவரைப் போன்றவர்களது மனதில் என்ன நினைப்பு இருக்கிறது என்றால், ‘இனிமேல் இந்த நாட்டில் மக்கள் ஆட்சி கிடையாது சார், மிகப்பெரிய கோடீஸ்வரர்களை எல்லாம் ஒவ்வொரு கட்சிகளில் தயார்செய்து கொண்டு, ஒரு தொகுதிக்கு கட்சி செலவழிப்பதைவிட அவர்களை நிறைய பணத்தை செலவழித்தால், அவர்களை வெற்றி பெற வைத்து, அரசையே அவர்கள் நடத்தலாம். அடுத்த கட்டம். பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருந்து வந்து, அவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தீர்மானிக்கிறார்கள். இதன்பிறகு இந்த நாட்டிலே மக்களாட்சி என்பது ஒருகாலத்திலும் இருக்கப்போவது இல்லை’ என்று விரக்தியில் சொன்னார்.

நான் அதை ஏற்றுக் கொள்ளவே இல்லை. இந்தியாவில் இருக்கும் நான்கைந்து கம்பெனிகளின் பெயரைச்சொல்லி, ‘இவர்கள் நினைத்தால், ஒவ்வொரு கம்பெனியும் நூறு எம்.பி.யை உண்டாக்கலாம்’ என்றார்.

இந்த விஷச் சுழலில் இருந்து விடுபட முடியாது என்று கருதக்கூடாது. இது ஒரு புதைமணல். இப்பொழுது வெற்றி பெற்றவர்கள். அதிகாரத்தைக் கைப்பற்றி இதைவிட அதிகப் பணத்தைக் கொள்ளை அடிப்பார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழல் மாதிரி கொள்ளை அடிப்பார்கள். இந்தத் தேர்தலில் 500 கொடுத்தது என்பது அடுத்தத் தேர்தலில் 1000 ஆகலாம்.

பிறகு எப்படி இதில் இருந்து விடுபட முடியும்? என்று நீங்கள் நினைத்தால், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு விடும். மாநகரங்களில் இந்தத் தேர்தலில் ஏற்பட்ட விழிப்பு உணர்வுதான் - இந்தப் பணவெள்ளைத்தையும்தாண்டி அண்ணா தி.மு.க. அணி 12 இடங்களில் வெற்றிபெற முடிந்தது. கிராமப்புறங்களிலும் இந்த விழிப்பு உணர்வு வந்துவிடும்.
இப்பொழுது விருதுநகர் தொகுதியில் 50 கோடி ரூபாய் ஆளும்தரப்பில் செலவழித்தும், 15,000 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் அவர்கள் வெற்றிபெற்றார்கள். எனக்கு மூன்று இலட்சம் வாக்குகள் கிடைத்து இருக்கிறது.

ஆகவே, நம்பிக்கை இழக்க வேண்டியது இல்லை. மக்களிடம் சொல்வோம். ஒருகாலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உழைத்தவர்கள்தான், இந்த மண்ணில் பெரியாரின் பெரும்படை தளகர்த்தராக உலவிய கே.வி.கே.சாமி. அவர் பேனா முனையில் எழுதப்பட்ட கருத்துகளை எண்ணங்களை, ஒரு நூலாக வரலாற்று ஆய்வாளரும் ஆராய்ச்சியாளரும் பல நூல்களை எழுதிக் குவித்தவருமான என் செயலாளர் திவான் இங்கே வெளியிட்டு இருக்கிறார்.கே.வி.கே.சாமியின் கருத்துகளை இங்கே நாம் பார்க்கிறோம். எவ்வளவு பொருத்தமாக அவர் சொல்கிறார். எல்லாக் காலத்துக்கும் பொருந்துகிற கருத்துகள்.

திராவிடர் கழகத்தின் தீரனாக இருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சேனாதிபதியானவர். இங்கேதான் வெட்டிக் கொல்லப்பட்டார். அப்படிப்பட்ட கே.வி.கே.சாமி சொல்கிறார் ‘தொடர்ந்து யுத்தகளத்தில் இருப்போம்’ திராவிடர் கழகத்தில் சொல்கிறார். போர் தன்மானப் போர்; போர் விடுதலைப்போர். புறப்படுகிறாயா? போரில் ஈடுபடு. போர் முனைக்குப் புறப்படு. களமுனையில் போரிடு, கூலி என்னவென்று கேட்டுவிடாதே.குடும்பத்துக்கு வழி என்ன? என்று கேட்டுவிடாதே. போர் முடிந்தபின்பும்கூட ஏதாவது உண்டா? என்று கேட்டுவிடாதே, இதற்கெல்லாம் இஷ்டப்பட்டால் போரில் ஈடுபடு. வீட்டை விட்டுக்கிளம்பும்போது மரணசாசனம் எழுதிவைத்துவிட்டு வந்து விடு. கட்டளை பிறப்பித்து விட்டால், அதற்கு உடன்பட்டு ஆயிரமாயிரம் வாலிபர்கள், இன்று பெரியாரைப்பற்றிக் கொண்டு திரிகிறோம் என்பதை மந்திரிமார்கள் உணரட்டும்.’ என்று கே.வி.கே.சாமி இந்த மண்ணில் இருந்து எழுப்பிய உணர்ச்சிக்குரல்.

இதே மண்ணில் அவர் வெட்டிக்கொல்லப்பட்டார். மரண சாசனம் எழுதிக் கொடுத்து விட்டுத்தான் நான் பெரியாருக்குப் பின்னாலே வந்து இருக்கிறேன் என்று சொன்ன கே.வி.கே.சாமி தூத்துக்குடியில் வெட்டிக் கொல்லப்பட்டார். நம்மைப் பொறுத்தவரை எதிலும் நம்பிக்கையை இழக்கிறவர்கள் அல்ல. மக்கள் இடத்தில் நிலைமையை எடுத்துச் சொல்வோம்.
இந்த இயக்கம் ஏன் இன்றைக்கு இவ்வளவு உயிர்த்தன்மையோடு இருக்கிறது?

என்னிடம் சுயநலம் இருந்திருந்தால், இந்த இயக்கம் தோல்விகளில் சிதறிப்போய் இருக்கும். என்மீது நம்பிக்கை கொண்டு, இந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தீர்கள். பொதுச் செயலாளராக ஆக்கினீர்கள். என்னிடம் துளி அளவேனும் சுயநலம் தலைதூக்கி இருக்குமானால், என்னையோ என் குடும்பத்தையோ அது வளம்பெறுவதற்கு இந்த இயக்கத்தின் பதவிகளை குடும்ப அரசியலுக்குக் கொண்டுபோகின்ற எண்ணம் ஒரு மூலையில் துளிர்விட்டு இருக்குமானால், இந்த இயக்கம் இந்தத் தோல்விகளில் நொறுங்கிப்போய் இருக்கும்.

அது இல்லை. ஆகவே, தோற்கிறபோதுதான் மிகுந்த ஆறுதல் உணர்ச்சியோடு ஆர்வத்தோடு நீங்கள் வருகிறீர்கள்.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கிற அத்தனை மாவட்டங்களும் சென்று விட்டேன் இன்னும் ஐந்து மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டும். புதுவைக்குச் செல்ல வேண்டும். தேர்தல் முடிவு வந்தவேளையில், இருந்து நான் உழைத்துக் கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த எழுச்சியைக் கண்டேன்.

ஆனால், அந்தந்த மாவட்டத்தைத்தவிர தமிழ்நாட்டில் எந்தப் பத்திரிகையிலும் என்னுடைய 40 நாள் சுற்றுப்பயணம் இதுவரை இடம்பெறவில்லை. வாரப்பத்திரி கைகளில் மட்டும வந்து இருக்கிறது. வாரப்பத்திரிகைகளில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். நான் இதைத் தவறு என்று சொல்லவில்லை. பத்திரிகைகள்மீது வருத்தப்படவில்லை.

எப்பொழுது செய்திவரும் என்றால், பூமி அமைதியாக இருக்கிறது. அது அமைதியாக இருக்கின்றவரை செய்தி அல்ல. பூகம்பம் ஏற்பட்டுவிட்டால் அது செய்தி. அதைப்போலத்தான் ஒரு இயக்கமும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டுப்பாடுடன் நடப்பதால் அது செய்தி ஆகாது.

ஏதாவது ஒரு மாவட்டத்தில் ஒருதரப்புமீது இன்னொரு தரப்பு குற்றச்சாட்டுகளை வைத்து, அதனால் ஒரு கலகம் விளைந்து அந்தக் கூட்டம் சலசலப்பில் முடிந்து இருந்தால் நிச்சயமாக முதல் இடத்துக்கு வந்துவிடும். மறுமலர்ச்சி தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் கலவரம் என்று செய்தி வரும்.

ஒரு சகோதரர் சொன்னார். ஏடுகளில் வராவிட்டால் என்ன? நான் வியாபார நிமித்தமாக தமிழ்நாட்டில் அத்தனை மாவட்டங்களுக்கும் சென்று வருகிறேன். எந்த மாவட்டத்துக்குச் சென்றாலும் அந்த மாவட்டம் முழுவதும் செய்யப்பட்டு இருக்கிற விளம்பரங் களையும் கட்டப்பட்டு இருக்கிற கொடிகளைப் பார்க்கிறேன். எவ்வளவு உயிரோட்டத்தோடு மறுமலர்ச்சி தி.மு.க. இருக்கிறது’ என்று அவர் சொன்னார்.

ஆகவே தோழர்களே. கழகம் இந்தத் தோல்விக்குப்பிறகுதான் வீறுகொண்டு எழுந்து இருக்கிறது. என்னிடம்கூட சொன்னார்கள். நீங்கள் வெற்றிபெற்று இருந்தால் இதைவிட நன்றாக இருந்து இருக்கும். கழகம் இதைவிட வேகமாக வளர்ந்து இருக்கும் என்றார். நான் அவரிடம் மறுத்துச் சொன்னேன்.

நான் இப்பொழுது 40 நாட்கள் சுற்றுப்பயணத்தில் பார்த்தது, தோற்றதுதான் நமக்கு நன்மையாக முடிந்து இருக்கிறது என்று நான் சொன்னேன். ஏனென்றால் மக்களைப் பார்க்கிறபோது நம்மீது ஒரு பரிவும் பணிவும், நம்முடைய தோல்வியினால் அவர்களது மனதில் ஒரு சங்கடமும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆர்வம் இருக்கிறது நன் மதிப்பு இருக்கிறது. நம்மை வரவேற்கின்ற மனோபாவம் இருக்கிறது. ஆகவே, இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வோம்.

எனவே பொதுமக்கள் நம்மீது அன்பாக இருக்கின்ற நேரத்தில் நீங்கள் படிவங்களைக் கொண்டு செல்லுங்கள். 25 உறுப்பினரோடு நின்றுவிடாதீர்கள். 50 ஆக்குங்கள். 50 நூறாகட்டும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு வட்டத்திலும் கிளைக்கழகம் இருந்தால்தான், இயக்கத்தை எதிர்காலத்தில் நீங்கள் நினைக்கின்ற வெற்றிபுரிக்கு கொண்டு செல்ல முடியும். இப்பொழுது அதைச் செய்யுங்கள். படிவம் வாங்கி 30 நாட்களுக்கு அதே வேலையாக இருங்கள்.

இன்னும் அதிகமான படிவங்களை வாங்குங்கள். இளைஞர்களைப் பாருங்கள். வாலிபர்களைப் பாருங்கள். கழகத்தின் உறுப்பினர்கள் ஆக்குங்கள். அந்தக் கடமையைச் செய்யுங்கள். கழகத்துக்குப் புதிய எழுச்சி நிச்சயம் ஏற்படும். நிரம்ப வேலைகளை உங்களுக்கு வைத்து இருக்கிறேன்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு வேலைத் திட்டத்தை வைத்து இருக்கிறேன். அவ்வாறு வைத்துத்தான் நான் இயங்குகிறேன். தேர்தல் முடிவுகள் வந்ததில் இருந்து அவ்வாறுதான் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கிறேன்.
ஏனென்றால் ரிசல்ட் வந்தவுடன் மாவட்டச் செயலாளர்கள் எல்லாம் மனதுடைந்து விட்டார்கள். அழுதார்கள். கண்ணீர்விட்டார்கள். தாங்கிக்கொள்ள முடியாத வேதனையைச் சுமந்தார்கள். நான் அவர்களுக்கு ஆறுதல் சொன்னேன். ஒன்றும் கவலைப்படாதீர்கள். கொள்கையைக் கொண்டு செல்வோம். மக்களிடத்தில் கெட்டபெயரைக் கொண்டுசென்றோமா? ஏன் தோற்றோம் என்பது அனைவருக்கும் தெரியும். நம்மிடம் பணம் இல்லை. நெஞ்சில் மாசு இல்லை.

நம்மிடம் பணம் இல்லை என்பது மட்டுமல்ல, எதிராளிகள் ஊழல் பணத்தை வீடு வீடாகச்சென்று கொடுத்து நம்மைத் தோற்கடித்தார்கள். ஆகவே இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நாம் பெருமிதமான - கெளரவமான தோல்வியைப் பெற்று இருக்கிறோம். கருணாநிதி வெட்கக்கேடான - ஈனத்தனமான - அவமானகரமான வெற்றியைப் பெற்று இருக்கிறார். மக்கள் ஆட்சித் தத்துவத்துக்குச் சாவு மணி அடித்துவிட்டு வெற்றி பெற்று இருக்கிறார்.

இது எங்கே போய் நிற்கும்? நமது இயக்கத்தில் உயிர்த்தன்மை இருக்கிறது. மேலும் மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. கட்சிக்கு உரம் இடப்படுகிறது. அங்கே செல்லரித்துக் கொண்டு இருக்கிறது. என்ன காரணம்? கட்சியின் உயிர்த்தன்மை சாகடிக்கப்பட்டுவிட்டது தி.மு.கவில். கட்சியின் கொள்கை என்ன? கட்சியே இடம் இல்லாமல்போய்விட்டது. தன்னலம் அற்ற உணர்வு செத்துப்போய்விட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சரிவு ஏற்படும். ஏற்பட்டுத்தீரும். இனிமேல் சரிவு ஏற்பட்டால் அது மீண்டும் எழவே முடியாது என்பது மட்டும் உறுதி.

தி.மு.க.வில் நாம் இருந்தபோதும் வீழ்ந்தோம். அப்போது கட்சியில் உயிர்த்தன்மை இருந்ததால் எழ முடிந்தது. இப்பொழுது சாகடிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது யாருக்காகக் கட்சி? கருணாநிதியின் குடும்பத்துக்காகக் கட்சி.
யாருக்காக ஆட்சி? கருணாநிதியின் குடும்பத்துக்காக ஆட்சி. தமிழ்நாட்டுச் சரித்திரத்துக்கு இந்தத் தீங்கு இதுவரை நடக்கவில்லை. எந்தத் தலைவர்களும் இதுவரை இப்படிப்பட்ட தீங்கு ஏற்படுத்தவில்லை.

நாங்கள் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கைக் கேட்கிறோம். பிரதமர் அவர்களே, உங்கள் அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சர், உயர்நீதிமன்ற நீதிபதியை மிரட்டினார். தமிழ்நாட்டில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியிடம் இன்னாருக்கு நீங்கள் ஜாமீன் கொடுங்கள் என்று சொன்னார்.

அது என்ன வழக்கு? பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் படித்த மாணவர்களின் மதிப்பெண்கள் திருத்தப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டு.

ஒரு பொறியியல் கல்லூரியில் படித்தவற் பெற்ற மதிப்பெண் வெறும் 6 மதிப்பெண். அது 66 மதிப்பெண்ணாகத் திருத்தப்பட்டது. இதைக் கணிப்பொறியை இயக்குகின்ற அலுவலர் கண்டுபிடித்தார். அவர் பெயர் ஜெயராமன். கண்டுபிடித்து உயர் அதிகாரிகளுக்குச் சொன்னதன் விளைவாக அவர் மிரட்டப்பட்டார். அவரே இதில் சம்பந்தப்பட்டதாக மிரட்டப்பட்டார். அவரது குடும்பம் மிரட்டப்பட்டது. தற்கொலைக்கு முயன்றார். பிரச்சனை விசுவரூபம் எடுத்தது.
பொறியியல் கல்லூரி மாணவன் மட்டுமல்ல - மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களும் திருத்தப்பட்டு இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

பெரம்பலூரைச் சேர்ந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறான். அவன் மதிப்பெண் திருத்தப்பட்டு இருக்கிறது என்று இருவரும் இன்றைக்குக் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். டாக்டர் கிருஷ்ணமூர்த்தி மீதும் அவரது மகன் மீதும் கிரிமினல் வழக்கு. இந்த வழக்கில்தான் உயர்நீதி மன்ற நீதிபதியிடம், இவர்களுக்கு நீங்கள் நிபந்தனையற்ற ஜாமீன் கொடுங்கள் என்று மத்திய அமைச்சர் தொலைபேசியில் சொல்கிறார்.

அதை அந்த நீதிபதி வெளிப்படையாகத் தெரிவித்து விட்டார். யார் என்று அவர் பெயரைச் சொல்லவில்லை. எனவே, நாங்கள் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் ?என்று கருணாநிதியின் மேலான ஆலோசனையின்பேரில் ஒரு மந்திரி சட்டசபையில் பேசுகிறார். நான் இரண்டு கேள்விகளை வைக்க விரும்புகிறேன். ஒரு கிரிமினல் குற்றம் நடக்கிறது. அந்தக் குற்றம் குறித்து யாரும் தகவல் கொடுக்காவிட்டால், காவல்துறை வழக்குப் பதிவு செய்வது இல்லையா?
தூத்துக்குடியில் சாலை ஓரத்தில் ஒருவன் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறான். யாரும் புகார் கொடுக்கவில்லை.
காவல்துறையினர் வழக்கைப் பதிவு செய்வார்களா? இல்லையா? என்று நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
வழக்கைப் பதிவு செய்து விட்டு விசாரிக்க வேண்டியது காவல்துறையின்வேலை. தூத்துக்குடியில் ஒரு வீட்டில் வீட்டை உடைத்து பீரோவை உடைத்து திருடிக்கொண்டுப் போய்விட்டார்கள் என்ற செய்தி காவல்துறையினருக்குத் தெரிகிறது. வீட்டார் புகார் கொடுக்கவில்லை. காவல் துறை வழக்குப் பதியுமா? இல்லையா? நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

கிரிமினல் குற்றம் எங்கே நடந்தாலும் புகார் கொடுக்கப்படாவிட்டாலும் வழக்குப் பதிவு செய்ய வேண்டியது காவல்துறையினரின் வேலை. விசாரிப்பது காவல்துறையின் வேலை. ஒரு மத்திய அமைச்சர் மிரட்டினார் என்று நீதிபதியே சொல்கிறார். கிரிமினல் சட்டப்படி அது குற்றம். வழக்கை நீங்களே பதிவு செய்யலாமே? ஏன் பதிவு செய்யவில்லை?

பிரதமருக்கு ஒரு கேள்வி. பிரதமர் அவர்களே, மத்திய மந்திரி ஒருவர் என்னை மிரட்டினார் என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தெரிவித்துவிட்டார். யார் என்று கண்டு அறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டியது உங்கள் வேலை.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்து இருக்கிறார். அவர்மூலம் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதியிடம் வாக்குமூலம் தரச்சொல்லி, யார் அந்த மத்திய அமைச்சர் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய முழுப்பொறுப்பு மன்மோகன் சிங்குக்கு உண்டு. நீங்கள் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்கவேண்டும். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படிச் செய்யாவிட்டால், மன்மோகன் சிங் அவர்களே, உங்கள் அமைச்சரவையில் உள்ள எல்லா அமைச்சர்களும் இந்த அக்கிரமத்தை அயோக்கியத்தனத்தைச் செய்து இருப்பார்கள் என்ற குற்றச்சாட்டு வரும். உங்கள் ஒருவரைத்தவிர, ஏனென்றால், பிரதமர் என்கிற வார்த்தையை அந்த நீதிபதி சொல்லவில்லை. சொன்னால் உங்களையும் சேர்த்துச் சொல்வோம் நாங்கள்.

சம்பந்தப்பட்ட மருத்துவரின் கட்டடத்தில்தான் மத்திய மந்திரி ராஜா அலுவலகம் வைத்து இருந்தார் என்று பயனீர் (Pioneer) பத்திரிகை எழுதி இருக்கிறதே? சம்பந்தப்பட்ட மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி மேனஜராக இருக்கிற கம்பெனியில்தான் மத்திய அமைச்சர் ராஜாவின் குடும்ப உறுப்பினர்கள் இயக்குநர்களாக இருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு இருக்கிறதே? அப்படியானால் யாருக்கு யார் நெருக்கம்?

குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணமூர்த்திக்கு மிக வேண்டியவரான மத்திய அமைச்சர் ராஜாதான் இதைச் செய்தாரா? அல்லது இந்தக் காரியத்தை எனக்குச் செய்து கொடுங்கள் என்று இன்னொருவரிடம் ராஜா சொல்லி அந்த அமைச்சர் பேசினாரா? தில்லி பத்திரிகைகளில் நேற்று முன்தினம் எட்டுக்காலம் போட்டு இருக்கிறார்கள். இன்னும் பல விவரங்கள் போட்டு இருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கவேண்டியது பிரதமரின் கடமை.

நம் இயக்கத்தைப் பொறுத்தமட்டில், அடுத்த மூன்று மாதங்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் அல்லவா? உறுப்பினர்களைச் சேருங்கள். உறுப்பினர் சேர்ப்பை ஒவ்வொரு ஒன்றியத்திலும் கண்காணிப்பதற்கு நான் ஆட்களை அனுப்பப் போகிறேன். மாவட்டச் செயலளார்கள் மூலமாக யார் விருப்பப்படுகிறார்களோ சேருங்கள். எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என்று, திண்ணையில் உட்கார்ந்துகொண்டே எண்ணிக்கையை அதிகப்படுத்தி விடாதீர்கள். போலி உறுப்பினர்கள் எல்லாம் சேர்க்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அடுத்த வேலை, திருச்சியில் மாநாடு. அண்ணா நூற்றாண்டு நிறைவு மாநாடு. செப்டம்பர் 15. சென்ற ஆண்டு மதுரைக்கு எப்படி வந்தீர்களோ, அதைப்போல திருச்சிக்கும் வாருங்கள். இங்கிருந்து சென்றவுடன் முதல் வேலையாக திருச்சி மாநாட்டை சுவர்களில் எழுதிப்போடுங்கள் ஒரு வாரத்துக்குள் எழுதிப்போடுங்கள். அப்பொழுது எல்லோரும் திகைப்பார்கள்.

இந்தக் கட்சி உண்மையிலேயே தோற்றதா? அல்லது மறுஎண்ணிக்கை செய்து வைகோ வெற்றிபெற்றதாக அறிவித்து விட்டார்களா? ஒன்றும் புரியவில்லையே? என எல்லோரும் திகைப்பார்கள். அந்த அளவுக்கு நீங்கள் பணியாற்றுங்கள். உங்கள் வேலையைச் செய்யுங்கள். நீங்கள் விரும்புகிற வெற்றியைக் கொண்டுவந்து கொடுப்பது என்னுடைய பொறுப்பு. மக்களிடம் அன்பையும் ஆதரவையும் பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த கழகத்துக்கு புத்துணர்ச்சியை தந்திருக்கக்கூடிய ஆருயிர்த்தம்பி ஜோயல் அவர்களையும் அவருக்கு உறுதுணை யாக இருக்கின்ற தோழர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன்.

கழகத்தின் பணிகளை தீவிரப்படுத்துங்கள். திருச்சி மாநாட்டுக்கு இப்பொழுதே ஆயத்த மாகுங்கள். கிளைக்கழக அமைப்புகளை வலுப்படுத்துங்கள். ஒவ்வொரு கிளைக் கழகத்திலும் குறிப்பிட்ட அளவுக்கு முடிந்தால் 50 சதவிகித விழுக்காடுகளாவது முடிந்தால் நம் சகோதரிகளை உறுப்பினர்களாக சேருங்கள். உறுப்பினர்கள் குடும்பத்தில் அந்தச் சகோதரிகளும் உறுப்பினர்களாக இடம்பெற வேண்டும் என்று சொல்லி மீண்டும் ஒருமுறை பாராட்டும் வாழ்த்தும்கூறி செப்டம்பர் 15 திருச்சிக்கு வாருங்கள் எனக்கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)