மறுமலர்ச்சி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக் குமார் சட்டப் பேரவையில் 25.06.2009 அன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று ஆற்றிய உரை...

விவகாரங்கள்: மருத்துவம்

மாவட்டம்: திருநெல்வேலி - புறநகர், தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள்

Date: 
Thu, 09/07/2009

மறுமலர்ச்சி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக் குமார் சட்டப் பேரவையில் 25.06.2009 அன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று ஆற்றிய உரை...

‘ Health should mean a lot more than escape from death or for that matter escape from disease ’ என்பார்கள். மனிதன் நோயினால் தாக்கப்படாமல் நலமான வாழ்வு வாழ்வதற்கு, நோய்த் தடுப்பு முறைகளில் அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

பரவிவரும் சில தொற்று நோய்களைத் தடுப்பதற்கு தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். என்று கேட்டுக் கொள்கின்றேன்.

தற்போது, உலகின் பல பகுதிகளில் பரவிவரும் பன்றிக் காய்ச்சல், அதாவது Swine Flu -வினால் பாதிக்கப்பட்டவர் களில் சிலர், நமது தமிழக மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டு இருப்பதாகத் தெரிகிறது.

Influenza -A H1 N1 என்ற வைரஸ் வகையைச் சேர்ந்தது இந்த நோய். இதுபோன்ற ஒரு நோய், ஸ்பெயின் நாட்டில் ஒரு பெரிய Epidemic attack -ஐ ஏற்படுத்தி, சுமார் 18,000 பேர்களை பலி கொண்டதாக செய்திகள் உள்ளன.

மூச்சுக் காற்றால் பரவும் Droplet Infection என்ற இந்நோயை கட்டுப்படுத்தா விட்டால், Respiratory Failure ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உலகச் சுகாதார நிறுவனம், இந்நோயை Pandemic 6 Stages என்று அறிவித்து இருக்கிறது. எனவே, அரசு இந்நோயைத் தடுப்பதில் தனிகவனம் செலுத்த வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை பரிசோதிப்பதை நான் அறிவேன். ஆனால், அந்த நோயினால் பாதிக்கப் பட்ட இருவர் தண்டையார் பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை அமைச்சர் ஒப்புக் கொண்டிருக்கின்றார். அவர்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்குப் பரவுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அதற்கு தக்க நடவடிக்கை எடுப்பதற்கு, அங்கு பணிபுரிகின்ற மருத்துவர்களுக்கும், அதற்குண்டான அந்த மூன்றடுக்கு முக பாதுகாப்பு கவசம் போதிய அளவு இருக்கின்றதா? அது வந்தால் தடுப்பதற்கு, அதற்கு வைத்தியம் செய்வதற்கு, அதற்குண்டான மருந்துகள் நம்மிடம் இருக்கின்றதா என்பதை நான் அறிய விரும்புகிறேன்.

எம்.எஸ்சி., நர்ஸிங் மற்றும் எம்.பார்ம் போன்ற பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கைக் கலந்தாய்வில் சான்றிதழ்கள் சரிபார்ப்பதிலும் சில குளறுபடிகள் ஏற்பட்டு, நடந்து முடிந்த கலந்தாய்வு முறை இரத்து செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதேபோன்று குளறுபடிகள் எம்.பி.,பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மாணவ, மாணவியர் சேர்க்கையில் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக பட்டயப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, உயர் சிறப்பு மேற்படிப்பு ஆகியவற்றுக்கான மாணவ, மாணவியர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருகிவரும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு, மருத்துவ மாணவர் களின் நலன் கருதி மருத்துவமனைசாரா பாடத்திற்கான நான்-கிளினிகல் சப்ஜெக்ட்ஸ் ஆசிரியர்களை அதிக அளவில் உருவாக்கிட ஆவன செய்ய வேண்டும்.

மேலும், சிறப்பு வாய்ந்த அதிமுக்கியமான துறைகளில் ஒன்றான சட்டம் சார்ந்த மருத்துவத் துறையில் பட்ட மேற்படிப்பு படித்த மருத்துவர்கள் மிகக் குறைவாக இருக்கிறார்கள். இதனால், சில சந்தேகத்திற்கிடமான மரணங்களில் நடைபெறும் பிரேதப் பரிசோதனையின் போதும், வன்புணர்ச்சி, வயதுச் சான்றிதழ், ஆண்மைத் தன்மை கண்டறிதல் போன்றவற்றிலும் எக்ஸ்பெர்ட் ஒபினியன் வாங்குவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ஆதலால், இத்துறையில் வல்லுநர்கள் அதிகமாக வருவதற்கு குறைந்தபட்சம் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை இடங்களை உருவாக்குவதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது தமிழ்நாட்டில் தடயவியல் மருத்துவத்துக்கான மாணவர் சேர்க்கையில் மூன்று இடங்கள் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது. இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியிலும் மற்றும் நமது அண்டை மாநிலங்களான பாண்டி, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இருப்பதைப்போல் நமது தமிழ்நாட்டில் தமிழக அரசால் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டு, இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த சட்டம் சார்ந்த மருத்துவர் களைக் கொண்டு இயங்கிவரும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும்.

பெரும்பாலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஊருக்கு வெளிப்புறத்தில் இயங்குகின்றன. தற்போது அவற்றில் பணிபுரிவதற்கு செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் பணியின் நிமித்தம் சுகாதார நிலையத்திலேயே தங்குகிறார்கள். அவர்களுக்கு போதிய பாதுகாப்பு கிடைக்க இரவு நேரக் காவலர் பணி உருவாக்கி, அதில் நிரந்தரமாக பணியாளரை நியமிக்க வேண்டும்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் தொகையான ரூபாய் ஆறாயிரத்தை அதை நாடும் அல்லது வேண்டுகின்ற கருவுற்ற அனைத்து மகளிருக்கும் எளிதில் கிடைக்கும்படி செய்ய வேண்டும். எந்த மருத்துவ மனையில், அது அரசு மருத்துவ மனையாக இருந்தாலும் சரி, தனியார் மருத்துவமனையாக இருந்தாலும் சரி, மகப்பேறு நடந்தாலும் வழங்கப்பட வேண்டும்.

அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவமாகின்ற அனைத்து குழந்தைகளையும் குறைந்தபட்சம் ஆறு மணி நேரத்திற்குள் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரிடம் பரிசோதனை செய்வதற்கு எளிய முறை வசதிகள் செய்ய வேண்டும்.

மாவட்டத் தலைமை மருத்துவ மனைகளில் உயர் சிறப்பு பட்ட மேற்படிப்பு படித்த மருத்துவர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும்.

மாவட்டத் தலைமை மருத்துவமனை, வட்ட மருத்துவமனைகளில் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகளில் பணியாற்றுகின்ற மருத்துவர்கள், வருமுன் காப்போம் போன்ற சிறப்பு முகாம்களுக்கு அடிக்கடி செல்வதால் பல்வேறு பணிகளை, அதாவது மருத்துவமனைப் பணிகள், பிணவறைப் பணிகள் என்று போய் விடுவதால் வெளி நோயாளிகளைப் பார்ப்பதற்காக தனியாக எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும்.

பெருகிவரும் மக்கள் தொகையையும், நோயாளிகளையும் கணக்கில் கொண்டு, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உள்ள மருத்துவப் பணியாளர்களைக் கூடுதலாக நியமனம் செய்ய வேண்டும்.

இ.எஸ்.ஐ. மருத்துவமனை இல்லாத நகராட்சிப் பகுதிகளில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை உருவாக்க வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பல் மருத்துவர், இந்திய முறை மருத்துவர்கள் மற்றும் பிசியோ தெரபிÞட்டுகள் நியமனம் செய்யப்பட வேண்டும்.

பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி, அறிஞர் அண்ணா சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை ஆகியவற்றில் காலியாக உள்ள இணை இயக்குநர் பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும்.

காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்கின்ற பாளையங்கோட்டை சித்த வைத்தியக் கல்லூரி மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும்.

ஆறாவது ஊதியக் குழுவில் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைந்து மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசு மருத்துவர்களுக்கும், அதாவது Dynamic Assured Career Progression முறையை பின்பற்றி வழங்க வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தோடு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எங்கள் தொகுதியாகிய வாசுதேவ நல்லூர் தொகுதியில் உள்ள தென்மலையில் ஓர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். 35,000 மக்களுக்கு மேல் வசிக்கின்ற பகுதி அது. பேருந்து வசதி கூட இல்லாத ஒரு கிராமம். 15 கிலோ மீட்டர் சுற்றளவில் எந்தவொரு மருத்துவமனையும் இல்லை. அது தொடர்பாக அங்கேயுள்ள டி.டி. -யே கருத்துரு அனுப்பி இருக்கிறார். ஆகவே, அங்கே ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றை அங்கே அமைத்துத் தர வேண்டும்.

டாக்டர் சதன் திருமலைக் குமார் இவ்வாறு உரையாற்றினார்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)