காவிரிக் கரையில் காஞ்சித் தலைவனின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு

விவகாரங்கள்: அரசியல்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: கடிதங்கள்

Date: 
Fri, 10/07/2009

இமைப்பொழுதும் நீங்காது என் இதயத்துடிப்போடும்
இரத்தச் சுழற்சியோடும் கலந்துவிட்ட கண்ணின்மணிகளே!

1993ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்திலும், 1994 ஆம் ஆண்டிலும் தோழர்களிடத்தில் கண்ட வீறுகொண்ட உணர்ச்சியையும் எழுச்சியையும், கடந்த ஒருமாத காலமாக மேற்கொண்டுள்ள என் பயணத்தில் காண்கிறேன். இதனை மிகையாகச் சொல்லவில்லை. நானே திகைத்தேன். எதனால் இப்படி? என்று வியக்கவும் செய்தேன்.

கழகத்தின் அமைப்புகளை வலுப்படுத்தக் கட்டுமான வேலைகளை முனைப்படுத்துவது என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திட்டம் வகுத்தோம். அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுச்செயலாளரே வர வேண்டும் என்று அவர்கள் விடுத்த வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றேன். திருவள்ளூர் மாவட்டத்தில் தொடக்கம். அடுத்து தென்சென்னை, வடசென்னை என ஒன்றன்பின் ஒன்றாக மாவட்டந்தோறும் நிகழ்ச்சிகள் அமைந்தன.

கழக உறுப்பினர் படிவம் 2 ரூபாய்தான். ஆனால், தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன், படிவம் ஒன்றுக்கு ரூ 100 கொடுத்து, என்னிடம் படிவங்களைப் பெற்றிடச் செய்த ஏற்பாட்டை, அனைத்து மாவட்டங்களுமே கடைப்பிடித்தன. ஐம்பது ஆயிரம், எழுபது ஆயிரம், இலட்சம், ஒன்றரை இலட்சம் என, மாவட்டந்தோறும் கணிசமான நிதி கழகத்துக்குச் சேர்ந்தது.

ஒரு இயக்கத்துக்கு, தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டால் அக்கட்சியின் தலைமை விமர்சனத்துக்கு ஆளாவதும், நிர்வாகிகள் ஒருவரை யொருவர் சாடுவதும், பழிப்பதும் உட்கட்சி பிரச்சனை பூசலாக வெடிப்பதும் சராசரி சம்பவமாக ஏடுகளில் வெளிவரும் நிலையில், நம் இயக்கத்தில் கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை சின்னதொரு முணுமுணுப்புக்கூட எழவில்லை என்பது ஆச்சரியம் தரும் உண்மை ஆகும்.

அதையும் விட மேலான ஆச்சரியம் யாதெனில், சிறு சிறு மனக்கசப்பும் வேற்றுமையும் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த இடங்களில்கூட, அவை முற்றிலும் மறைந்து இனிய ஒற்றுமை தானாக விளைந்ததுதான்.

உள்ளத்தில் மகிழ்ச்சியை மேலும் பூத்திடச் செய்யும் நிலைமை யாதெனில், இடைக்காலத்தில் சற்று ஒதுங்கி இருந்தோர் எல்லாம்கூட, ஆர்வத்தோடு பங்கு ஏற்றதும், அன்போடு என் கைகளைப் பற்றிக் கொண்டதும்தான்.

நாம் இலட்சிய வானம்பாடிகள். நம் சிறகுகளை முடக்க எவராலும் இயலாது. உயிர்ப்பறவை இருக்கும் வரை, அச்சிறகுகள் முடங்காது.

நாம் அறவழிப் போராளிகள். எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள். தன்னலம் என்பது துளியும் இல்லாதவர்கள். இலட்சியங்களைக் காதலிப்பவர்கள். அந்தக் காதல் ஒருபோதும் மங்குவது இல்லை.

ஆறுமுறை தோற்ற பிறகும் ஏழாவது முறை பெரும் பலம் கொண்ட பகையை எதிர்க்கத் துணிந்து களம் சென்ற இராபர்ட் புருஸின் சரித்திரத்தை, விழுப்புரம் மாநாட்டில் உரைத்தது ஒப்புக்கு அல்ல. நம்மை அழிக்கத் துடிக்கும் குடும்ப அரசியல் கூடாரம் ஏவும் பாணங்களை மார்பில் ஏந்தி, அவற்றைப் பறித்துப் பகைவன் மேல் தொடுக்கும் இந்திரசித்தர்கள் நாம்.

இந்தப் பயணம் புறப்பட்டபோது, ஊக்கம் குன்றாத உறுதி கொண்ட என் அடிமனதில், கழகத்தைக் கட்டி எழுப்ப தோழர்களின் தோள்களைத் தட்டிக் கொடுத்துக் கடமை ஆற்றுவோம் என்றுதான் ஊர் ஊராகச் சென்றேன்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நான் செல்லும் வழிகளில், நகரங்களிலும், கிராமங்களிலும் பொதுமக்களின் கண்களில் கனிவையும், பரிவையும் கண்டேன். அந்த விழிகளில் அலட்சியம் இல்லை. வெறுப்பின் சாயல் இம்மியும் இல்லை.

இதற்குமுன் நான் பார்த்து அறியாத, இனம் அறியாத பரிவு உணர்ச்சி மட்டுமே பளிச்சிடக் கண்டேன். கடந்த முப்பது நாள்களில் இந்த வரவேற்புதான் மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்தது. செயல் வீரர்கள் கூட்டத்திலோ இதயத்தில் இன்பச் சிலிர்ப்பு.

இச்சுற்றுப்பயணத்தில் எனது ஆருயிர்ச் சகோதரர்களான கழகப் பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை. பாலகிருஷ்ணன், அரசியல் ஆலோசனைக் குழுச் செயலாளர் திருப்பூர் துரைசாமி, கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆருயிர் சகோதரர் நாஞ்சில் சம்பத், தேர்தல் பணிச் செயலாளர் அருமைத் தம்பி ந. மனோகரன் பங்கு ஏற்றுச் சிறப்பித்தனர். ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும், அம்மாவட்ட முன்னோடிகள், பொறுப்பாளர்களின் துணையுடன் சக்திக்கு மேல் செலவழித்து நெடுந்தொலைவுக்குக் கழகக் கொடிகளையும், தோரணங்களையும் அலங்கரித்து இருந்தனர்.

இதற்கு நடுவில், என் தம்பி மகன் இந்திரஜித் திருமணம், ஜூன் 14இல் அண்ணன் பழ. நெடுமாறன் தலைமையில் தேனியில் நடந்தது. எனது இல்லத் திருமண நிகழ்ச்சிகளில் அழைப்பிதழ் அச்சிடுவது இல்லை என்பது நீங்கள் அறிந்ததே. தோழர்களுக்குப் பொருட் செலவும், சிரமமும் தரக்கூடாது என்பதால்தான் உங்களை எல்லாம் நான் அழைக்கவில்லை.

ஒற்றுமையும் பாசப்பிணைப்பும் கொண்ட எங்கள் கூட்டுக் குடும்பத்தில் நடந்த இனிய நிகழ்ச்சியில், நமது முன்னணித் தோழர்கள் அனைவரும் உரிமையோடு கலந்து கொண்டதில் மகிழ்ச்சியில் திளைத்தேன். திருமணத்துக்கு மறுநாளே சுற்றுப் பயணத்தையும் தொடர்ந்தேன்.

மகிழ்ச்சியும் துயரமும் கலந்ததுதானே வாழ்க்கை. நான் விருதுநகரில் தோற்றுப் போனதால் மனம் உடைந்த கழகக் கண்மணி அய்யனார், அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தன்னையே மாய்த்துக் கொள்ள எண்ணித் தீக்குளித்ததால் அதிர்ச்சியுற்ற நான், மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, மரணத்தின் பிடியில் இருந்து அத்தம்பியை மீட்டதில் என் கவலை நீங்கியது. கழகக் கண்மணிகளின் குடும்பத்தில் எவரேனும் எதிர்பாராத ஆபத்தில், விபத்தில் சிக்கி உயிர் துறக்கும் பெருந்துன்பம் விளைகையில், அந்த அதிர்ச்சியில் நான் கலங்கித் தவிக்கிறேன்.

அப்படித்தான் தோழர்களே, மூன்று துயர நிகழ்ச்சிகள். என் மனதை இன்னமும் தேற்றிக் கொள்ள முடியவில்லை என்றால், அந்தக் குடும்பத்தார் துயரத்தை தாங்கவா இயலும்? கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி நகரப் பொறுப்பாளர் அன்புச் சகோதரர் செந்தில் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். குகன் மில் செந்தில் என்றால், அந்த வட்டாரத்திலேயே அவ்வளவு மரியாதை. பாரம்பரியமான குடும்பம். பண்பாட்டுப் பெட்டகம். பார்ப்பதற்குக் கம்பீரமான தோற்றம்.

எந்தநேரமும் புன்னகை தவழும் முகம். இனிய இல்லறம். அவர்களுக்கு ஒரே மகன். தவம் இருந்து பெற்ற பிள்ளை.

ஹரிஹரசுதன் என்னும் அப்பிள்ளை, படிப்பில் முதல் மாணவன். விளையாட்டுத் துறையிலும் சாதனையாளன். பள்ளியில் படிக்கும்போதே மாநிலக் கூடைப்பந்து விளையாட்டுக் குழுவில் இடம் பெற்ற தீரன். தகுதி அடிப்படையில் புகழ் பெற்ற பொறியியல் கல்லூரியில் சேர்ந்து, இரண்டாம் ஆண்டு முடித்து மூன்றாம் ஆண்டுக்குச் செல்லும் நேரம்.

மாநில அளவில் பல்கலைக் கழக விளையாட்டுக் குழுவிலும் தேர்வு பெற்று உள்ளான். கல்லூரிக்கு விருதுகளும் பெற்றுத் தந்து உள்ளான். ஏற்காட்டில் உடன் பயின்ற பள்ளித் தோழனின் திருமணத்தில் கலந்து கொள்ள ஹைதராபாத்துக்குச் சென்றான். திருமணத்தில் பங்கு ஏற்றான். அதன்பின்னர் அந்நகரில் காரில் பயணிக்கையில் கார் விபத்தில் சிக்கியது. சம்பவ இடத்திலேயே பலியாகிப் போனான் அப்பிள்ளைச் செல்வம்.

காலை 5 மணிக்கு செந்திலின் தொலைபேசி மரண ஒலியாயிற்று, முதல் நாள்தானே அந்தப் பிள்ளை பெற்றோரிடம் உரையாடி மகிழ்ந்து உள்ளான்? நூறு இடிகள் ஒருசேர தலையில் விழ, அப்பெற்றோரின் உலகம் சுக்குநூறாகிவிட்டது.
நான் அந்த வீட்டுக்குச் சென்றபோது, தந்தையைப் போலவே மந்தகாசப் புன்னகையுடன் காட்சி அளித்த அந்த அன்பு மகனின் படத்தைக் கண்டேன். என் கண்ணீர்த்துளிகளே இரங்கல் பூக்கள் ஆகின. என் மகனும், நானும் நண்பர்களாகத்தான் பழகுவோம் என்றார் செந்தில். அன்னையிடம் அவ்வளவு செல்லமாம். சொல்லும்போதே கேவிக்கேவி அழுதார் செந்தில்.

துயர்ப்படும் எவராயினும் தேடிச்சென்று உதவும் உத்தமர்தாம் நமது செந்தில். பிறருக்கு மனிதநேயத்தோடு உதவும் குணக்குன்று, இந்தத் துயரத்துக்கு யாரால் ஆறுதல் சொல்ல முடியும்? காலங்கள் சென்றாலும் இருதயத்தில் ரணம் ஆறவே ஆறாது. வெறுமை மிக்கதாய் சூன்ய வெளியாக வாழ்க்கை தோன்றும். துன்புறும் மக்களுக்கு மனிதநேயப் பணி செய்திடும் செந்தில், தன்னை ஆற்றுப்படுத்திக்கொண்டு அந்த இல்லத்தரசிக்குத் தரும் ஆறுதல்தான், சூழ்ந்துள்ள துயர இருளைச் சிறிதுசிறிதாக அகற்ற முடியும் என ஆறுதல் சொன்னேன். கனத்த இதயத்தோடு அங்கிருந்து கோவை சென்றேன்.

தமிழகத்தின் மாநில எல்லையில் கழகத்தைக் காத்திடும் தீரன்தான் ஓசூர் நகரச் செயலாளர் இராமச்சந்திரன் ஆவார். அவருக்கு ஒரு புதல்வன், ஒரு புதல்வி. ஆசை மகன் விஜய் கார்த்திக், படிப்பில் கெட்டிக்காரன். பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறான். கல்லூரி கிரிக்கெட் ஆட்டக் குழுவுக்கு அவன்தான் கேப்டன். நான்கு நாள் விடுமுறையில் வீட்டுக்கு வந்து உள்ளான். நண்பர்கள் அழைத்ததால் தாயிடம் சொல்லிவிட்டு நீச்சல் குளத்துக்குச் சென்று உள்ளான். பிற்பகலில் இராமச்சந்திரனுக்குத் தொலைபேசித் தகவல், உங்கள் மகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறான் என்று. கேட்டவுடன் பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைகிறார். அங்கே அந்த மகனின் உயிரற்ற சடலத்தைத்தான் கண்டார். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனார். அய்யோ, எப்படித் தாங்கும் அந்தக் குடும்பம்? பார்க்கக் களை பொருந்திய முகம். வாட்ட சாட்டமான வாலிபன். துயரத்தில் துடிதுடித்துப் போன அப்பெற்றோரிடம் என்ன ஆறுதல் சொல்லமுடியும்?

அந்தத் தாய் சொன்னாள்: இவ்வளவு பெரியவனான பின்பும், உணவைப் பிசைந்து நானே ஊட்டி விடுவேன். ஏனடா, இன்னும் நீ சின்னக் குழந்தையா? என்று அவன் அப்பா செல்லமாகக் கண்டிப்பார். இருசக்கர வண்டியில் சென்றாலும் பத்திரமாகச் செல்ல வேண்டும் என்று தெருமுனை தாண்டும் வரை பார்த்துக்கொண்டே இருப்பேன். இரண்டு நாள்களுக்கு ஒரு முறையாவது கல்லூரி விடுதியில் இருந்து தொலைபேசியில் தவறாமல் பேசுவான் என் பிள்ளை என அழுது கதறும் தாய்க்கும், தந்தைக்கும் ஆறுதல் கூறவே இயலவில்லை.

அந்த நீச்சல் குளத்தில் மூன்று பேர் இதுவரை இறந்து விட்டார்கள். உரிய அனுமதியோ பாதுகாப்பு ஏற்பாடுகளோ எதுவும் கிடையாதாம். நீச்சல் குளத்தில் தலைகீழாகக் கர்ணம் அடிக்கவில்லை இந்தப் பிள்ளை. கடைசியாக அவன் தண்ணீரில் குளித்து நீந்துவதைக்கூட, கைத்தொலைபேசியில் நண்பர்கள் படம் பிடித்து உள்ளதை என்னிடம் காண்பித்தார்கள். அடுத்த 15 நிமிடங்களில் எப்படி இறந்தான் என்பதுதான் மர்மமாக உள்ளது. என் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தி விட்டுத் திரும்பினேன். செயல்வீரர்கள் கூட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் இத்துயரத்தால், இரத்து செய்து விட்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் கழகத்தின் தொண்டர் அணியில் துடிப்புடன் பணி ஆற்றிய தம்பியின் பெயர் கார்த்திகேயன். தீவுத்திடல் மாநாட்டிலும், மதுரை மாநாட்டிலும் ஓடியாடி உழைத்த கண்மணி அவன். நாமக்கல் மாவட்டம் கட்டநாச்சம்பட்டியைச் சேர்ந்த மாதேஸ்வரன் அவர்களின் செல்லப் பிள்ளை. திடீரென்று பாம்பு கடித்து இறந்து போனான்.

ஒரே ஆண் பிள்ளை, ஒரு சகோதரி இருக்கிறாள். அப் பெற்றோரின் துக்கத்தில் பங்கு ஏற்கச் சென்றேன். எளிய நெசவுக் குடும்பம். தாயும், தந்தையும் என் கைகளைப் பற்றிக் கொண்டு கதறினர். அந்த வீட்டினுள் ஒரேயொரு சின்ன அறை. கார்த்திகேயனின் தாயும், அக்காளும் அழுதுகொண்டே சொன்னார்கள். ‘இது தானய்யா அவனது அறை; உள்ளே பாருங்கள்’ என்றனர்.

அறையின் நான்கு சுவர்களிலும் எனது படம் ஒட்டப்பட்டு இருந்தது. தொண்டர் அணிச் சீருடையும், தொப்பியும், பெல்ட்டும் மடித்து வைக்கப்பட்டு இருந்தன. ஊருக்குத் தண்ணீர் கொண்டு வர ஆழ்குழாய் அமைக்கும் வேலை நடந்த இடத்துக்கு நண்பர்களோடு இரவில் சென்று உள்ளான். மின்சார விளக்கு வெளிச்சத்தில் நண்பர்கள், ‘என்ன கார்த்திக் உன் காலில் இரத்தம் வருகிறது?’ என்றனர். கீழே பார்த்ததில், அங்கு கண்ணாடி விரியன் பாம்பு காணப்பட்டது. அந்த விரியன் பாம்புதான் கடித்து உள்ளது. நிமிடத்தில் விடம் தலைக்கு ஏறிவிட்டது. அடுத்த சில நிமிடங்களில் தம்பி பிணமாகி விட்டான் என்றதைக் கேட்டபோது, என் இருதயத்தை வேதனை முறுக்கிப் பிழிந்தது.

இந்த மூன்று துயரச் சம்பவங்களும், மனித வாழ்வில் உச்ச கட்ட சோகம் ஆகும். கொள்ளி வைக்க வேண்டிய பிள்ளையைச் சிதை நெருப்பில் இடுகின்ற துக்கமும், புத்திர சோகமும் தாங்க இயலாதது. நீர்க்குமிழி போன்ற இம்மனித வாழ்வில் துயரங்களை நினைத்துக் கலங்கியவாறே பயணத்தைத் தொடர்ந்தேன்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

என்றார் வான்புகழ் வள்ளுவர்.

நம் கழகக் கண்மணிகளின் சுக துக்கங்களில் பங்கேற்கும் பாசப் பிணைப்புதானே நம் இயக்கத்தின் தன்மை ஆகும்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டுத் தொடக்கத்தை நான்மாடக் கூடலில் மாநாடாக விழா எடுத்துக் கொண்டாடினோம். வரப்போகும் செப்டம்பர் 15 அண்ணனின் நூற்றாண்டு நிறைவுத் திருநாள் அல்லவா! அந்த நாளில் மாநாடு கண்டிடத் தீர்மானித்து உள்ளோம். தீரர்களின் கோட்டம் என்று அண்ணா அவர்கள் பாராட்டிய திருச்சியில் மாநாடு.

தலைவனின் புகழ்ப்பரணி பாடுவோம். திருச்சியில் மாநாடு செப்டம்பர் 15இல். அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு.

‘வாருங்கள் தமிழர்களே! வைகோ அழைக்கின்றார்’ என்று, இதற்கு உள்ளாகவே புதுக்கோட்டையில், காரைக்குடியில், ஏன் விழுப்புரம் மாவட்டத்தில் பனைமலை என்ற கிராமத்துச் சுவர்களில் கூட மாநாட்டுச் செய்தியினை வரைந்து தள்ளி விட்டனர் நமது கண்மணிகள்.

நான் பிறந்தநாள் கொண்டாடுவது இல்லை, நீங்கள் அறிவீர்கள். அண்ணாவின் பிறந்த நாளையே நாம் கொண்டாடுகிறோம். அகிலம் வியக்க 1998இல் செப்டம்பர் 15இல் சென்னை மாநகரில் அந்த அண்ணனுக்கு விழா எடுத்ததும் நாம்தான். அனைத்து இந்தியத் தலைவர்களை அதில் பங்கு ஏற்கச் செய்த சிறப்பும் நமக்குத்தான் உண்டு.
எனவே, இம்முறையும் உங்களுக்கு வேலை வைக்கிறேன்.

தமிழக அரசியல் களத்தில் நாம் வலிமை பெறுவதற்கான சூழல் கனிந்து உள்ளது. 1994 ஏப்ரல் 16 எழுச்சிப் பேரணிச் செய்தியை, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பட்டிதொட்டி, பட்டினக்கரை எல்லாம் சுவர்களில் எவ்வாறு சித்தரித் தீர்களோ, அதைப்போன்றதொரு நிலையை ஏற்படுத்துங்கள். வரலாறு திரும்புகிறது; அந்த ஏப்ரல் 16 இன் எழுச்சி மீண்டும் எழுகிறது என்ற நிலைமையை உருவாக்குங்கள். தாமதம் செய்யாதீர்கள்.

கழகத்துக்குப் புதிய உறுப்பினர் களைச் சேர்க்கவும், ஏற்கனவே இருந்தவர்கள் புதுப்பிக்கவும் தீவிரமான வேலையில் நீங்கள் ஈடுபட வேண்டும். அத்துடன் சுவர் எழுத்துப் பணியிலும் முழு முனைப்புக் காட்டுங்கள். நீங்கள் நினைத்தால் இதைச் சாதிக்க முடியும். எங்கிருந்தது இவர்களுக்கு மூல பலம் என்று, மாற்றார் மருளட்டும்; நம்மவர் மகிழட்டும்.
அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுக்கு, காவேரி தீரத்தில், திருச்சி மண்டலத்தில் அண்ணாவின் தம்பியாக உலாவிய நம் இயக்க முன்னோடிகளில் ஒருவரான ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளருமான மலர்மன்னன் தலைமை தாங்குகிறார். அத்திருச்சி மண்டலத்தில் அண்ணாவின் அருமைத் தம்பியாய்க் களம் அமைத்துப் பாடுபடும் திருச்சி மாவட்டச் செயலாளர் ஆருயிர்ச் சகோதரர் மண்ணச்சநல்லூர் நடராசன் மாநாட்டைத் திறந்து வைக்கிறார்.

நம் மனங்களில் மிக்க பெருமிதம் தருகின்ற இனிய விழா ஒன்றும் விரைவில் நடைபெற இருக்கிறது. கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகப் பெருமை சேர்த்தவரும் நம் நெஞ்சை விட்டு நீங்காத தத்துவக் கவிஞர் குடியரசு அவர்கள், 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் நாள் மறைந்தார்கள். கிழிந்த ஓலைகள் வேய்ந்த குடிசையில்தான் அவர் உயிர் பிரிந்தது. ‘அந்தக் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டித் தருவோம்’ என்று இறுதிச் சடங்கில் நான் அறிவித்தேன். அந்தத் திருப்பணியைச் செய்து முடித்து விட்டோம்.

ஏறத்தாழ 50 இலட்சம் ரூபாய் செலவில் வீடுகள் தியாகராய நகரில் கட்டப்பட்டு விட்டன.

ஜூலை 12 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு, கவிஞர் குடியரசு இல்லத் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இந்த இனிய விழாவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத் தலைவர், சகோதரர் மதுசூதனன் பங்கு ஏற்று வாழ்த்துகிறார். அறிஞர் அண்ணாவின் அளவில்லா அன்பையும் மதிப்பையும் பெற்றவரான, நாடாளுமன்ற மேதை அண்ணன் இரா. செழியன் வாழ்த்து உரைக்கிறார்.

தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன் விழாவுக்கு தலைமை தாங்க, காஞ்சி மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் சோமு, திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், வட சென்னை மாவட்டப் பொறுப்புக்குழுத் தலைவர் சு. ஜீவன் முன்னிலை ஏற்க, கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் வரவேற்புரை நிகழ்த்த, கவிஞரின் இல்லத்தை நான் திறந்து வைக்க உள்ளேன்.

கழகப் பொருளாளர் டாக்டர் மாசிலாமணி அவர்களும் துணைப் பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை. பாலகிருஷ்ணன் ஆகியோரும், முன்னனியினரும் கலந்து கொள் கிறார்கள். தியாகராய நகர் பகுதிச் செயலாளர் வேலு நன்றியுரை நிகழ்த்த, கவிஞர் இல்லத் திறப்பு விழா வெகு சிறப்புடன் நடைபெற உள்ளது.

கவிஞரின் இல்லம் திறப்போம்! காஞ்சித் தலைவனுக்குக் கவின்மிகு விழா எடுப்போம்! கழகக் கோட்டையைக் கட்டி எழுப்பும் பணிதனைச் செய்வோம்!

எழுச்சிச் சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!

பாசமுடன்
வைகோ

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)