முல்லைப் பெரியாறு வாழ்வாதாரப் பிரச்சனையில் கேரள அரசு திட்டமிட்ட அநீதியைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறது. வைகோ அறிக்கை
விவகாரங்கள்: விவசாயம், தேசிய, புறநகர்
மாவட்டம்: திண்டுக்கல், மதுரை - மாநகர், மதுரை - புறநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
வைகோ அறிக்கை
செந்தமிழ் நாட்டின் எதிர்காலத்தையே கடுமையாகப் பாதிக்கக்கூடிய முல்லைப் பெரியாறு வாழ்வாதாரப் பிரச்சனையில் கேரள அரசு திட்டமிட்ட அநீதியைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு சட்டரீதியான உத்தரவாதம் பெற்று இருக்கின்ற, பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை எத்தகைய வெள்ளம் வந்தாலும் தாங்கிக் கொள்ளும் வலுவும், பலமும் கொண்டதாகும். ஆனால், முல்லைப் பெரியாறு அணை உடையும் என்ற பொய்யான நச்சுப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்து வருகின்ற கேரள அரசு அணையை எப்படியாவது உடைக்க வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டி வருகிறது. இப்பிரச்சனை குறித்த வழக்கில் இருதரப்பையும் விசாரித்த உச்சநீதிமன்றம் அணை வலுவாக இருப்பதால், 142 அடிக்கு தண்ணீரைத் தேக்கலாம் என்று அளித்த தீர்ப்பை குப்பையில் போட்டுவிட்டு அக்கிரமமான சட்டத்தைக் கேரள அரசு நிறைவேற்றியது. முல்லைப் பெரியாறு அணையை உடைக்க தங்களுக்கு அதிகாரம் உண்டு என்று இந்திய இறையாண்மையையும் - மத்திய அரசையும் கேலிப் பொருளாக்கி சட்டம் போட்டது.
இதனை எதிர்த்து அ.தி.மு.க. அரசு அப்பொழுது தொடர்ந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு கடைசியில் தான் வழங்கிய நீதியை, உச்சநீதிமன்றமே பறித்துவிட்டு முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆய்வு செய்ய ஐவர் குழுவை நியமித்து உள்ளது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் பணியாற்றும் தமிழக பொதுப்பணித்துறை ஊழியர்களை சில மாதங்களுக்கு முன்பு கேரள காவல்துறையினரும், அதிகாரிகளும் தாக்கிய அராஜகம் நடந்தது. அதை கடுமையாகக் கண்டிக்க தமிழக அரசு தவறிவிட்டது. புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு ஆய்வுசெய்ய மத்திய அரசு அனுமதித்தது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும். இப்பிரச்சனை குறித்து ஐவர் குழுவை அமைத்து இருக்கின்ற நிலையிலேயே, கேரள அரசு மைய அரசு அனுமதி அளிக்காத இடங்களிலும் ஆய்வு நடத்தி முடித்துவிட்டோம் என்று கேரள நீர்ப்பாசன அமைச்சர் சட்டசபையில் அறிவித்து விட்டார்.
தற்போது, தமிழகப் பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் உரிய அனுமதி பெறாமல் ஏன் தகவலே தெரிவிக்காமல் கேரள அரசின் வருவாய்த் துறை அதிகாரிகளும், மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினரும் நமது முல்லைப் பெரியாறு அணைக்கு கேமராக்களுடன் வந்து படம்பிடித்து அணையைப்பற்றி ஆய்வு நடத்தி இருப்பது மிகப் பெரிய அக்கிரமம் ஆகும். இதில், மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படையினர் கேரள அரசு அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவது தமிழ்நாட்டுக்கு எதிரான நடவடிக்கை ஆகும்.
மத்திய அரசு கடந்த ஆறு ஆண்டுகாலமாக தமிழ்நாட்டுக்கு எதிராகவும், கேரளத்துக்கு ஆதரவாகவும் ஓரவஞ்சகமாகச் செயல்பட்டு வருகிறது. தமிழக உரிமைகள் எவ்வளவு காவு கொடுக்கப்பட்டாலும் அதை கண்டுகொள்ளாமல் தமிழக நலனைக் காக்கும் கடமையைச் செய்யாமல் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் கேடுகளுக்கு எல்லாம் கருணாநிதி அரசு உடந்தையாகவே இருப்பது மிகப்பெரிய சாபக்கேடாகும்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் தமிழகத்துக்கு தீங்கு செய்துவரும் கேரள அரசுக்கும், மத்திய அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பதோடு தமிழக அரசு இனியாவது இந்தப் பொய் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு செயல்பட முன்வரட்டும்.

