தவறுக்குமேல் தவறு செய்யாமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்! வைகோ அறிக்கை

விவகாரங்கள்: கல்வி, சுற்றுச்சூழல், மனித உரிமை

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Tue, 19/07/2011

 

 

 

 

தவறுக்குமேல் தவறு செய்யாமல்
சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்!
வைகோ அறிக்கை

மிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திருத்த சட்டத்தை ரத்துசெய்து, சமச்சீர் கல்வி முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வரவேற்கத்தக்க சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற உடனேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை காலவரையற்று ஒத்திவைக்கும் மசோதாவை தன்னிச்சையாக சட்டசபையில் கொண்டுவந்து நிறைவேற்றியது. தமிழக அரசின் இச்சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததுடன், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு கடந்த கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது பாடத்திட்டம் தொடரவேண்டும் என்றும், சமச்சீர் கல்வித் திட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அதை நடைமுறைப்படுத்த முனையாமல் அ.தி.மு.க. அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை குழிதோண்டிப் புதைப்பதிலேயே முனைப்பாக இருந்தது. உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரிய தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதலே சமச்சீர் கல்வி தொடரவேண்டும் என்றும் மற்ற வகுப்புகளுக்கு நடைமுறைப்படுத்த பொதுப்பாடத்திட்டத்தில் உள்ளதாகக் கூறப்படும் குறைபாடுகளை நீக்கி, அதன் தரத்தை ஆராயவும் ஒன்பது பேர் கொண்ட கல்வி நிபுணர்கள் குழுவை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால், தமிழக அரசோ ஒரேயடியாக சமச்சீர் கல்வித் திட்டத்தையே ஆராய நிபுணர் குழு அமைக்க உத்திரவிட்டதைப்போன்று செயல்பட்டது. சமச்சீர் கல்வி முறையை முழுமூச்சுடன் எதிர்ப்பவர்களைக் கொண்டு பாரபட்சமான குழு ஒன்றை தமிழக அரசு நியமித்தது.

தமிழக அரசின் வீண் பிடிவாதத்தால் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்க வேண்டிய தேதியில் திறக்கப்படாமல் பதினைந்து நாட்கள் தள்ளிப்போனது. பின்னர் திறந்து ஒன்றரை மாதங்கள் ஆகியும் பள்ளி மாணவர்கள் எந்தப் பாடங்களைப் படிப்பது என்ற தவிப்பும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. தமிழக வரலாற்றிலேயே இதுபோன்ற ஒரு சூழல் கல்வித் துறையில் இதுவரை ஏற்பட்டதில்லை. எனவேதான், உயர்நீதிமன்றம் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வரும் 22 ஆம் தேதிக்குள் சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும், ஆசிரியர்கள் பாடங்களை தொடங்க வேண்டும் என்றும் குறைபாடுகளை களைந்து புதிய பாடங்களை கூடுதல் புத்தகங்களாக அச்சிட்டு மூன்று மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டத்தை தற்போதைய அரசினுடைய தவறான போக்கால் ஒரு கோடியே இருபத்து மூன்று இலட்சம் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், மாணவர்களே நாட்டின் வளமான எதிர்காலம். தமிழக அரசு அதைக் கருத்தில் கொண்டு நீதிமன்ற உத்தரவை உடனே செயல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மகத்தான தீர்ப்பை அளித்துள்ளது.

ஆனால், இதனை ஏற்காமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ள தமிழக அரசின் நெறிமுறையற்ற, தான்தோன்றித்தனமான போக்கை வன்மையாக கண்டிப்பதுடன் தவறுக்கு மேல் தவறு செய்து நாட்களை வீணடித்து மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிடாமல், உடனடியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

தாயகம்                                              வைகோ
சென்னை - 8                                      பொதுச் செயலாளர்
19.07.2011                                           மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)