தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்க இலங்கை அரசு திட்டம்! இந்திய அரசு வேடிக்கை பார்ப்பதா? வைகோ கண்டனம்

விவகாரங்கள்: மனித உரிமை

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Sat, 08/07/2017

 

 

 

 

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்க
இலங்கை அரசு திட்டம்!

இந்திய அரசு வேடிக்கை பார்ப்பதா?

வைகோ கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, 2016 டிசம்பர் 15 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து, தமிழக அரசு கேட்டவாறு வறட்சி நிவாரண நிதி, வார்தா புயல் சேதங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். தமிழகத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிக்கு உச்சநீதிமன்றத்தின் தடையை நீக்க, காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகளின் பட்டியலிலிருந்து காளை மாடுகளை அகற்ற வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளுடன் மூன்றாவதாக முக்கியமான தகவலை பிரதமர் கவனத்துக்கு எடுத்துரைத்தேன்.

தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் பரப்பிலும், பன்னாட்டுக் கடல் பரப்பிலும் மீன் பிடித்தால் எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி சிங்களக் கடற்படையினர் அவர்களைக் கைது செய்து கொண்டு போய் இலங்கைச் சிறையில் அடைக்கிறார்கள். படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டு போகிறார்கள்.

இந்நிலையில், இலங்கை அரசு 2017 ஜனவரி மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்ற இருக்கிறது. அத்திட்டத்தின் மூலம் தமிழக மீனவர்களுக்கு ஏழு லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்க இலங்கை அரசு முடிவு செய்து இருப்பது, உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காத கொடுமை. எனவே, நீங்கள் தூதரக உறவுகள் மூலமாக இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தத்தைக் கொடுத்து, இந்தச் சட்டம் நிறைவேறவிடாமல் தடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்களிடம் கூறினேன். இதுகுறித்து வெளியுறவுத்துறையோடு ஆலோசிப்பதாக அவர் கூறினார். கடந்த ஆறு மாத காலமாக இந்திய அரசு இச்சட்டம் குறித்து அலட்சியப் போக்குடன் நடந்துகொண்டது.

பிரதமர் மோடி மே 11 ஆம் தேதி, இலங்கையில் நடந்த விசாக நாள் விழாவில் பங்கேற்க சென்றபோதும் தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் சட்டம் பற்றி பெயரளவுக்குக்கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதன் விளைவாக இலங்கை அரசு, இலங்கையின் கடற்தொழில் சட்டத்திருத்த முன்வடிவு ஒன்றை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது தமிழக மீனவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இச்சட்டத் திருத்தத்தின்படி தமிழக மற்றும் புதுவை மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்தால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டாலும், இந்திய மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் உரிமை அந்தப் பகுதியில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இலங்கைக் கடற்படையினர், எல்லை தாண்டி வந்து இந்திய கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும், தாக்குதல் நடத்துவதும், மீன்பிடிப் படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துகொண்டு போவதும் சர்வசாதாரண நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன.

இந்திய அரசின் சார்பில், இலங்கை அரசுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுக்காமல், ஏனோ தானோ என்று பிரச்சினையைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால், இன்று வரையில் தமிழக மீனவர்கள் 50 பேர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கான மதிப்பு கொண்ட 143 மீன்பிடிப் படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்து வைத்திருக்கிறது. இவற்றுக்குத் தீர்வு காண முயலாமல் இந்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது கண்டனத்துக்கு உரியது.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலும், மீன்பிடித் தொழிலைவிட்டே மீனவர்களை விரட்ட வேண்டும் என்ற நோக்கத்துடனும் தமிழக மீனவர்களுக்கு எதிரான சட்டத்தை சிங்கள அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கிறது. இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்கும் உண்மையான அக்கறையுடன் மத்திய அரசு செயல்பட வேண்டும். தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டு வர இருக்கும் அநீதியான சட்டத்தை திரும்பப் பெற அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

 

தாயகம்                                                                             வைகோ
சென்னை - 8                                                            பொதுச்செயலாளர்
08.07.2017                                                                    மறுமலர்ச்சி தி.மு.க.,

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)