தமிழக அரசியலுக்குத் திசை காட்டும் கருவியாகத் தஞ்சை மாநாடு அமையும்! செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ

விவகாரங்கள்: மனித உரிமை, சட்ட ஒழுங்கு

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Sat, 15/07/2017

 

 


 

தமிழக அரசியலுக்குத் திசை காட்டும் கருவியாகத்
தஞ்சை மாநாடு அமையும்!

செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ

மிழக அரசியலுக்குத் திசை காட்டும் கருவியாகத்
தஞ்சை மாநாடு அமையும்! என்று 08.07.2017 அன்று தஞ்சையில் நடைபெற்ற தஞ்சை மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

மனதிற்குள் ஓராயிரம் எண்ண அலைகள், இன்று பிற்பகலில் இருந்து என் இதயச் சுவரில்  மோதியவண்ணம் இருக்கின்றன. என்ன பேசுவது என்றே எனக்குப் புரியவில்லை.

24 ஆண்டுகளாக இடர்ப்பாடுகளைச் சுமந்து கொண்டு இருக்கின்ற உங்களுக்கும், கழகக் கண்மணிகளுக்கும் நன்றி சொல்கின்ற உணர்வோடு உங்கள் முன்னால் நின்றுகொண்டு இருக்கின்றேன்.

பிற கட்சிகள் எல்லாம் தவறான வழிகளிலே அதிகாரத்தைக் கைப்பற்றிப் பணத்தைக் குவித்து மாட மாளிகைகள், கூட கோபுரங்களைக் கட்டி எழுப்பியதும், ஆடம்பரமான குளிர்பதனக் கார்களில் வலம் வருவதும், அவர்களுடைய பளபளக்கும் வாழ்க்கை, இவற்றுக்கு நடுவில், நடுத்தரக் குடும்பங்களாக இருந்து,  24 ஆண்டுகளாக நடைபெற்று இருக்கின்ற அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் வந்து பங்கேற்று, எவ்வளவோ பொருட்செலவுக்கு ஆளாகி, அத்தனைத் துன்பங்களையும் தாங்கிக்கொண்டு இந்த இயக்கத்தில் உறுதியாக இருக்கின்றார்களே, அவர்கள் கவலைகளைப் போக்குவதற்கு என்னவிதமான ஆலோசனைச் சொல்லலாம் என யோசித்துக் கொண்டு இருந்தபோது, பல்வேறு எண்ண அலைகள் என் மனதில் கிளர்ந்து எழுந்தன. 

கொள்கைப் பற்றோடும் இலட்சிய தாகத்தோடும் உருவாக்கப்பட்டு, எத்தனையோ போராட்டக் களங்களைச் சந்தித்து, துரோகங்கள் தோல்விகளை எதிர்கொண்டு, அடிமேல் வாங்கி, இருட்டடிப்புகள், ஏளனப் பேச்சுகள், இழிமொழிகள் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு தமிழகம் முழுமையும் இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றீர்கள். எந்த ஊரை எடுத்துக்கொண்டாலும் அங்கே பத்துத் தோழர்கள், இயக்கத்தின் தலைமை மீது நம்பிக்கை தளராதவர்களாக இருந்து இயக்கிக்கொண்டு இருக்கின்றார்களே, அதனுடைய பெருமையைப் பற்றிக் கூறுவதா?

திராவிட இயக்கங்களின் தோற்றம்

1944 ஆகஸ்ட் 27, 28 இல் சேலம் மாநகரில் அண்ணாவின் தீர்மானமாக, திராவிடர் கழகம்  உதயமாகி,  அறிவாசான் தந்தை பெரியாரை அந்தக் கட்சிக்குத் தலைவராகப் பிரகடனம் செய்து, அதன்பின்னர் தந்தையை விட்டுத் தனயன் விலகி 1949  செப்டெம்பர் 17 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி, அந்த இயக்கம் கொள்கையாளர்களால் கட்டிக் காக்கப்பட்டு, கிராமங்களில் கிளைக்கழகங்களாக, நகரங்களில் மாநகரங்களில் வட்டக் கழகங்களாக,  அதற்குப் பிறகு, கிராமங்கள் சிறு நகரங்களை உள்ளடக்கிய வட்டக் கழகங்கள், அதற்கு மேல் மாவட்டக் கழகங்கள் என ஒரு சங்கிலித் தொடர் போன்ற ஒரு அமைப்பைக் கட்டுமானப்படுத்தி, உலகில் சிறந்த பேச்சாளர்கள், உலகில் சிறந்த சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கோடிக்கணக்கான மக்களை ஈர்க்கின்ற கலை உலக நட்சத்திரங்கள், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜிகணேசன், இலட்சிய நடிகர் எஸ்ஸ்ஆர், நடிகமணி டி.வி. நாராயணசாமி, நடிப்பிசைப்புலவர் கே.ஆர். இராமசாமி எனக் கலை உலகின்பால், எழுத்து பேச்சு நாடகங்களை அண்ணாவே தயாரித்து நடித்து ஒரு கட்டுமானத்தை அமைத்து, அது தமிழகம் முழுமையும் சங்கிலித்தொடர்போன்ற அமைப்புக் கொண்ட கட்சியாக உருவெடுத்தது இந்தியாவிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுதான்.

தொடக்கத்தில் ஒன்பது மாவட்டங்கள்தான். அப்படிப் பிரிக்கப்படாத இந்தத் தஞ்சை மாவட்டத்திற்குச் செயலாளராக அரிமா போல் உலவியர் மன்னை. பிரிக்கப்படாத திருச்சி மாவட்டத்திற்குத் தலைதாழாச் சிங்கமாகத் திகழ்ந்தவர் அன்பில். பிரிக்கப்படாத மதுரை மண்டலத்தில் மாவீரனாக உலவியர் மதுரை முத்து. பிரிக்கப்படாத நெல்லை மாவட்டத்தில் திராவிடத்தின் தளபதி என்று தந்தை பெரியாரால் வருணிக்கப்பட்டு, நள்ளிரவில் நட்ட நடுவீதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டவர் கே.வி.கே. சாமி.

இப்படி அந்த இயக்கம் தியாகத்தால், இரத்தத்தால், கண்ணீரால் கட்டிக்காக்கப்பட்டு வளர்ந்து,  ஆகாயம் போல் விரிந்து பரந்த ஞானம் பெற்று இருந்த பேரறிஞர் அண்ணாவால், அலைகடல்போல் விரிந்து இருந்த அந்தப் பாச உள்ளத்தால், சாதி மதங்களை எல்லாம் கடந்து, தமிழர் வரலாறை நினைவூட்டி,  உன் முகத்தைப் பார்த்தாலே தொகுதிக்கு 30000 வாக்குகள் கூடுதலாகக் கிடைக்கும் என்று 1967 இல் விருகம்பாக்கம் மாநாட்டில் அண்ணா அறிவித்ததைப் போல ஒரு காந்த சக்தியாக இருந்த  எம்.ஜி.ஆர். அவர்களை, 1972 ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் கழகத்தில் இருந்து தூக்கி எறிந்தார்.

அவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினார். ஏழை எளிய மக்களின் ஆதரவு மக்கள் திலகத்திற்குக் குவிந்தது. அது ஒரு மாபெரும் சக்தியாக வளர்ந்தது. அதுவும்  கட்டுமான வளர்ச்சியைப் பெற்றது. தமிழகத்தில் அதன் கிளைக்கழகங்கள் இல்லாத இடம் இல்லை.

பொது உடைமை இயக்கங்கள், காங்கிரஸ் கட்சியிலும் நல்ல தலைவர்கள் இருந்தார்கள். ஒரு காலகட்டம் வரையிலும் காங்கிரஸ் கட்சிக்கு வழிகாட்டிக் கொண்டு இருந்த மூதறிஞர் இராஜாஜி, தியாகச்சுடர் காமராசர், ஓமந்தூரார்  போன்ற தலைவர்களைப் பெற்று இருந்தது காங்கிரஸ் கட்சி.

நமது இயக்கம்

இதற்குப்பிறகு, 1993 முதல் தமிழகம் முழுமையும் ஒரு கட்டமைப்பாக உருவாகி இயங்கிக் கொண்டு இருப்பது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான்.

நாம் எண்ணிக்கை பலத்தில் அவர்களுக்குச் சமமாக இல்லை. ஆனால் அந்த இரண்டு பெரிய கட்சிகளுக்கும் அடுத்தபடியாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், ஒன்றிய நகரக் கழகங்கள், மாவட்டக் கழகங்கள் என ஒரு கட்டுமான அமைப்பைப் பெற்று இருக்கின்றோம். நகரங்களில் சில வட்டங்களில் அமைப்புகள் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், அமைப்புகளின் அடிப்படையில் தமிழகத்தில் வேர் ஊன்றி வளர்ந்து இருக்கின்றோம். அதற்குக் காரணம் நீங்கள்தான். உங்களைப் போன்றவர்களுடைய உழைப்பால்தான் கடந்த 24 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டு இருக்கின்றோம்.

அன்றைக்கு அண்ணா பேசினால் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு கேட்டார்கள். அவருக்கு ஈடான பேச்சாளர், எழுத்தாளர் வேறு ஒருவர் கிடையாது. அருவி நடைபோல் ஆற்றொழுக்காகப் பேசுவார் நாவலர்...கனல் தெறிக்கப் பேசுவார் கலைஞர், கூர்மையான கேள்விகளை எடுத்து வீசுவார் ஆசைத்தம்பி, விலா நோகச் சிரிக்க வைப்பார் சிந்தனைச் சிற்பி சிற்றரசு, கூர்த்த மதியோடு கேள்விகளைத் தொடுப்பார் கே.ஏ. மதியழகன், இப்படி இவ்வளவு சக்திகளும் சேர்ந்து இயக்கம் நடத்திய அந்தக் காலகட்டத்தைப் பாருங்கள்.

நாம் இயக்கம் தொடங்கியபோது ஒரு பேரலை எழுந்தது. தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் ஒரு பேரணியைப் பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி, மறுநாள் விடியற்காலை பொழுது விடிகின்ற வரையிலும் தொடர்ந்து நடத்திய வரலாறு, தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் கிடையாது; அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் கிடையாது.

அப்படி அலையலையாகப் பேரலையாக ஆதரவு எழுந்த வந்த காலத்தைப் பார்க்கிறேன். அதன்பிறகு 96 தேர்தலில் தோல்வி.

அப்பொழுது நான் சொன்னேன்: மலைச்சரிவில் ஒரு பெருவெள்ளம் பாய்ந்து வந்தது; அந்த மலைச்சரிவில் வளர்ந்து நின்ற மரங்களைச் சாய்த்தது; தேக்கு மரங்களும், சந்தன மரங்களும் வீழ்ந்தன. அப்படி ஒடிந்து விழுந்தாலும் தேக்கு மரம் உத்திரமாகப் பயன்படும்; சந்தன மரம் என்றைக்கும்  மணம் தரும் என்று நான் அறிக்கை கொடுத்தேன்.

அந்தத் தோல்விக்குப் பிறகு, இரண்டு நாள்கள் இந்தத் தஞ்சையில்தான் பொதுக்குழுவை நடத்தினோம். இரண்டரை மணி நேரம் நிறைவுரை ஆற்றினேன்.

நான் ஒவ்வொன்றாக எண்ணிப் பார்க்கின்றேன். அந்த இயக்கங்களுக்கு இருக்கின்ற பலம் என்ன என்பது தெரியும். அவர்களிடம் மலைபோல் குவிந்து இருக்கின்ற பொருட்செல்வத்திற்கு முன்னால் நாம் வெறும் குன்றிமணிதான். காசு, பொருள், நிதி என்று பார்க்கின்றபொழுது நாம் வெறும் குன்றிமணிகள்தான். ஆனால், இதை வைத்துக்கொண்டு, அவர்கள் சாதிக்காததைத் தமிழக வரலாற்றில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சாதித்துக் காட்டியது.

அண்ணாவின் பிறந்த நாள்

அண்ணாவின் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்ற வழக்கத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் மெல்லமெல்லக் கைவிட்டது. அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டு இருக்கின்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெரிதாக நடத்தவில்லை. அவர்களிடம் ஆள் அம்பு படை பலம் பரிவாரங்கள் ரத கஜ துரக பதாதிகள் எல்லாம் உண்டு. கண் அசைத்தால் போதும்; பொருள்களைக் குவிப்பதற்கு எல்லாவித சக்திகளும் உண்டு. ஆனால் அண்ணா பிறந்த நாளுக்கென நாடு போற்றுகின்ற அளவில் ஒரு மாநாட்டை அவர்கள் நடத்தியது உண்டா? ஆட்சியில் இருந்த தி.மு.க. நடத்தியது உண்டா? ஆட்சியில் இருந்த அண்ணா தி.மு.க. நடத்தியது உண்டா?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அவர்கள் அண்ணாவை அடித்தட்டு மக்களிடம் கொண்டு வந்து சேர்த்தார். அண்ணாவின் பெயரைத் தன் கட்சியின் பெயராக ஆக்கி, அரசியல் வரலாற்றில் இருந்து அந்தப் பெயரை அழிக்க முடியாத வகையில் நிலைநிறுத்தினார். பறக்கும் பதாகைகளில் அண்ணாவின் உருவத்தைப் பொறித்தார். எந்த வகையிலும் அண்ணாவை மறக்க விடாதபடி செய்தார். வாழ்த்துகிறேன் மக்கள் திலகத்தை.

ஆனால், அவர்களுக்கு இருந்த செல்வாக்கில், அனைத்து இந்தியத் தலைவர்களை எல்லாம் அழைத்துக்கொண்டு வந்து ஒரு மாநாட்டை நடத்தி, இந்த அண்ணாதான் எங்களுக்குத் தலைவர்,  எங்கள் தமிழ் இனத்தின் தலைவர், உலகெலாம் வாழும் தமிழர்களுக்கு வழிகாட்டும் தலைவர், இவருக்கு நிகரான ஒரு தலைவர் இந்தியாவிலேயே இல்லை,

மலேசியாவில் சிங்கப்பூரில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு அண்ணா வரவேற்பதைப் பார்த்த லீ குவான், ஜவகர்லால் நேருவுக்கு வந்த கூட்டத்தை விடப் பெரிய கூட்டமாக இருக்கின்றது என்று திகைத்து நின்றாரே, அந்த அண்ணா அவர்களுக்கு உரிய பெருமையைத் திராவிட முன்னேற்றக் கழகமோ, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமோ அவர் பிறந்த நாளில் செய்தது இல்லை. அப்படிச் செய்து காட்டிய ஒரே கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான். ஒரு கொள்கை இலட்சியத்திற்காக நாம் ஒன்றாக இணைந்து, இயங்கிக் கொண்டு இருக்கின்றோம். நான் ஒரு சாதாரணத் தொண்டன். ஒரு வட்டப்பிரதிநிதியாகக் கட்சிக்குள் அடி எடுத்து வைத்தவன். கலிங்கப்பட்டி கிராமத்தின் சங்கரன்கோவில் வட்டக்கழகப் பிரதிநிதி நான். சட்டக் கல்லூரி மாணவான இருந்தபோது மாவட்டக் கழகப் பிரதிநிதி ஆகி, பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர் ஆகி, பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்ற இடத்தில் முந்தைய இரவு முழுவதும் தேநீர் அருந்திக்கொண்டு குழி தோண்டிக் கம்பு நட்டுக் கொடி கட்டி, தோரணங்கள் கட்டி, ஒரு மாணவனாக அடிமட்டத்தில் தரைப்படையில் இருந்து வந்தவன் நான். இயக்கத்தில் படிப்படியாக வார்ப்பிக்கப்பட்டவன்.

காலம் விசித்திரமான சூழலை என் வாழ்க்கையில் ஏற்படுத்தியது. என் வாழ்க்கையில் நான் நடந்து வந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கின்றேன்.

53 ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. 1964 ஆகஸ்ட் மாதம் சென்னை கோகலே அரங்கில்  அறிஞர் அண்ணா அவர்களுக்கு முன்பு நின்று பேசியபோது, அண்ணன் பெ.சீனிவாசன், எல்.ஜி., நாவளவன் ஆகியோர் பக்கத்தில் அமர்ந்து இருந்தார்கள். இன்றைக்கு 2017. 53 ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டன. அரசியலில் நுழைந்த காலம் முதல்  ஏதேனும் ஒரு பெரிய பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற கனவு எதுவும் எனக்குக் கிடையாது.

இந்த மண்ணைக் காதலித்தேன். தமிழ் மண்ணைக் காதலித்தேன். தமிழை உயிருக்கும் மேலாக என் நெஞ்சில் நேசித்தேன். இந்த இனத்தின் வரலாறை எண்ணி, உலகில் இதற்கு நிகரான வேறு ஒரு இனம் இல்லை என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியதே இந்தத் தஞ்சைத் தரணிதான், தஞ்சை மண்டலம்தான். அதை ஆயிரம் மேடைகளில் சொல்லி இருக்கின்றேன். சின்ன வயதில் கல்கியின் பொன்னியின் செல்வன்தான் எனக்கு அந்த எண்ணத்தை ஏற்படுத்திற்று.  அண்ணாவின் எழுத்துகளைப் படிப்பதற்கு முன்பு, ஏழாவது எட்டாவது வகுப்பு படித்துக்கொண்டு இருந்த காலத்தில் இந்தத் தமிழ் இனத்தின் மீதான பாசத்தை ஏற்படுத்தியது சோழ மண்டல வரலாறுதான்.

இப்போது நான் உங்களைப் பற்றி மட்டும்தான் சிந்தித்துக்கொண்டுஇருக்கின்றேன். உங்களைப் போலத் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற தொண்டர்களைப் பற்றி மட்டும்தான் நினைத்துக் கொண்டு இருக்கின்றேன். ஒன்றியச் செயலாளரை, நகரச் செயலாளரை, கிளைக்கழகச் செயலாளரை, அவைத்தலைவரை, பொருளாளரை, மாவட்டச் செயலாளரை, தலைமைக் கழக நிர்வாகிகளை, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மையம் எனப் பல பொறுப்புகளில் இருப்பவர்களை, எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும் இந்தச் சிவப்புக் கருப்பு சிவப்பு வேட்டியைக் கட்டிக் கொண்டு இருப்பவர்களை, இந்தக் கட்சியைத் தன் நெஞ்சில் சுமந்து கொண்டு இருக்கின்றானே,  அந்தத் தொண்டர்களைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றேன். இதைத் தவிர எனக்கு வேறு உலகம் எதுவும் இல்லை.

என்னிடம் உள்ள நல்ல குணம் எது என்பதும் எனக்குத் தெரியும்; மோசமான குணம் எது என்பதும் எனக்குத் தெரியும். நீங்கள் செய்த உதவி மட்டும்தான் என் மனதில் நிற்கும். நீங்கள் எதையாவது சரியாகச் செய்யவில்லை என்றால் அது என் மனதில் நிற்காது. திட்டி இருந்தால் மனதில் நிற்காது. நீங்கள் என்னைப் பற்றி அன்பாகச் சொன்னது மட்டும்தான் மனதில் நிற்கும்.

கலைஞருக்கு உடல் நலம் குன்றியபோது, மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரிக்கப் போனேன். நான் வரப்போகிறேன் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, என்னைத் தாக்குவதற்கு ஏற்பாடு செய்த, தி.மு.க. செயல்தலைவர், அடுத்த பத்தாவது நிமிடத்திலேயே கண்டன அறிக்கை வெளியிட்டார்.

எத்தனையோ வேதனைகளை மனதில் சுமந்து கொண்டு இருக்கின்றேன். ஊடகங்கள் மீது நமக்கு வருத்தம் எதுவும் இல்லை. செய்தியாளர்களை நான் மிகவும் மதிக்கின்றேன்..அவர்களும் என்னை மதிக்கின்றார்கள். மறுமலர்ச்சி தி.மு.கழகம் இலட்சிய தாகம் கொண்ட திராவிட இயக்கமாகக் கிளர்ந்து எழுந்து வந்து விடக்கூடாது என்பதில், எல்லோருக்கும் ஒரு பொது எதிரியாக நாம் இருக்கின்றோம் என்பதை மறந்துவிடக் கூடாது.

அதனுடைய விளைவு, எந்தக் கொள்கைகளுக்காகப் பெரியார் வாழ்ந்தாரோ, எந்தக் கொள்கைகளுக்காக அண்ணா பாடுபட்டாரோ, எந்தக் கொள்கைகளுக்காக இரத்தம் சிந்தினார்களோ, கண்ணீர் சிந்தினார்களோ, அவை எல்லாம் பாழாய்ப் போய்விடுமோ என்கிற அளவிற்கு, இரண்டு பெரிய திராவிட இயக்கங்களும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, இனப்படுகொலை என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகி, சுயநலத்திற்காகக் குடும்ப அரசியலுக்காகத்தான் கட்சி என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகி நிற்கின்றார்கள். காசு கொடுத்துத்தான் கூட்டத்திற்கு ஆள் சேர்க்கின்றார்கள். பணம் கொடுக்காமலேயே தொண்டர்கள் வருவார்கள். ஆனால், அவர்கள் மனதைக் கெடுத்து விட்டார்கள். எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டார்கள். 200 ரூபாய், 300 ரூபாய் என எதிர்பார்க்க வைத்து விட்டார்கள். தொண்டர்களின் மனதையும் கெடுத்து விட்டார்கள்.

அப்படி ஒரு இழிநிலைக்கு ஆளாகாதவர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கண்மணிகள்தான். உங்களைப் புகழ்வதற்காக நான் இதைச் சொல்லவில்லை. என் மனதில் எவ்வளவு பாரம் இருக்கின்றது தெரியுமா? நீங்கள் வெற்றிகளைப் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.

தி.மு.க. எவ்வளவு பெரிய கட்சி. அங்கிருந்து நம்மோடு வருகின்ற தொண்டர்கள் கஷ்டப்படுவார்களே? எத்தனை ஆண்டுகளாக உழைத்து இருக்கின்றார்கள்? நம்மால் இவர்களது அரசியல் வாழ்க்கை பாழாகிவிடக் கூடாது என்று கருதித்தான், மன்னை உடலுக்கு மாலை வைத்துவிட்டு, மறுநாள் மாலையில் பாளையங்கோட்டையில் பேசினேன். டேவிட் திருமண வரவேற்பில் பேசினேன். என் பின்னால் வந்தால், கண்ணீர்துளிகளும், இரத்தத்துளிகளும், வியர்வைத்துளிகளும் கலந்த போராட்டக் களத்தை மட்டுமே நீங்கள் காண முடியும்; பட்டம் பதவி எதையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது; அதற்கு ஆயத்தமானவர்கள் மட்டும் என்னோடு அணிவகுத்து வாருங்கள்; மற்றவர்கள் விலகி நில்லுங்கள் என்று பேசினேன். ஏடுகளில் வெளிவந்து இருக்கின்றது.

அதற்காக என்னோடு வந்தவர்கள் கஷ்டப்பட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. நான் ஆசை வார்த்தை காட்டிப் பேசவில்லை. ஆட்சி அமைப்போம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக்குவோம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆக்குவோம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆக்குவோம் என்று சொல்லவில்லை. காரணம், நான் ஒரு கட்சியை உருவாக்குவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை. சூழ்நிலைகள் அப்படி ஒரு நிலைமைக்கு என்னை ஆளாக்கியது.  இந்தஇடத்திற்குக் கொண்டு வந்து தள்ளியது.

அண்ணா அப்படிச் சொன்னார். நான் அண்ணா அல்ல. நான் ஒரு சாதாரணத் தொண்டன். அன்றைய சூழல் என்னை அந்த நிலைமைக்கு ஆளாக்கியது. 

நான் இலட்சியங்களைக் காதலித்தேன். அண்ணா, நாவலர், கலைஞர் போன்றவர்கள் ஊட்டிய இனமான உணர்ச்சியால் உந்தப்பட்டு வளர்ந்தோம். அதனால்தானே நான் பிரபாகரனை ஆதரிக்கிறேன், விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்றேன், தமிழனுக்கு என்று உலகில் ஒரு நாடு வேண்டும் என்று சொல்லுகிறேன். அதற்காகத்தான் ஆயுதப் போராட்டத்தை நாம் ஆதரிக்கின்றோம். தமிழக அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தமட்டில், இந்த உணர்ச்சியின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கின்றோம். பத்துப் பதினைந்து பேர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனால் போதும் என்று நினைப்பதா? ஈழத்தமிழ் இனத்தையே அழித்தார்களே?

இன்றைக்கு இங்கே வந்திருக்கின்ற உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பாரங்கள் இருக்கும். வீட்டிலே கஷ்டம் இருக்கும். அடுத்துச் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கும். தீவிரமாகக் களத்தில் இறங்கிச் செயல்பட முடியவில்லை என்றாலும் இந்த இயக்கத்தை விட்டுப் போகவில்லை அல்லவா? நீங்கள் கஷ்டப்படுகின்றீர்கள். எனவே, நீங்கள் செய்வதை விட நான் அதிகம் வேலை செய்தாக வேண்டும் என்று கருதித்தான், கடந்த 24 ஆண்டுகளாக இரவு பகலாக ஓடி ஓடி , என் உடம்புக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைத்து இருக்கின்றேன்.

தொழிலைப் பார்க்க வேண்டும், கடையைப் பார்க்க வேண்டும், உங்களால் முடியாது. கஷ்டம். விவசாயத்தைப் பார்க்க வேண்டும். மிகவும் நடுத்தரக் குடும்பங்கள்.

அதனால்தான் நான் 5000 கிலோ மீட்டர்கள் நடந்தேன்; 50000 ஊர்களுக்குச் சென்று கழகக் கொடிகளை ஏற்றினேன். இரவு பகலாகக் காரிலேயே பயணித்தேன். தமிழத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் நாம்தான் முன்னெடுத்துக் களத்தில் இறங்கி இருக்கின்றோம். தமிழகத்தின் இயற்கை வளங்களை, சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்க நம்மை விடப் போராடியவர்கள் யார்?

மீத்தேனால் ஆபத்து என்று நம்மாழ்வார் எச்சரித்தார். அதற்காக நாம் மக்களைத் திரட்டினோம். ஊர் ஊராகச் சென்றோம். கடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆர்டிஎம் உட்படப் பலர் சொன்னார்கள். நமது பிரச்சாரப் பயணங்களில் கொடி கட்டிக்கொண்டு போகக்கூடாது என்று நீங்கள் சொன்னது தவறு என்றார்கள். அதை நான் ஏற்றுக்கொண்டேன். எந்தக் கட்சி செய்கிறது? என்பது மக்களுக்குத் தெரிய வேண்டாமா? நம்ம கட்சிக்காரர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்தார்கள். அவர்கள் கைகளில் கொடி பிடித்துக்கொண்டு வரக்கூடாது என்றீர்கள். இந்தப் பணியை யார் செய்கின்றார்கள் என்பது மக்களுக்குத்தெரிய வேண்டும் அல்லவா? என்று கேட்டார்கள். அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஒரு பெரும் பாலைவனமாகத் தமிழகம்ஆகி விடுமோ என்ற கவலை நமக்க இருக்கின்றது. தமிழகத்தைப் பாதுகாப்பதற்காக நாம் மக்களைத் திரட்டுவோம்.

நம்மிடம் பொருளாதார பலம் இல்லை. ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது என்றால் எவ்வளவு செலவு? மேலும்மேலும் செய்ய வேண்டும் என்றால் எப்படி முடியும்? மீத்தேன் எதிர்ப்பு உணர்வை ஏற்படுத்தினோம். நெடுவாசலுக்குச் சென்று பேசினேன். காவிரியின் குறுக்கே இரண்டு புதிய அணைகளைக் கட்டப்போகிறார்கள் என்று முதலில் நாம்தான் எச்சரித்தோம்.

இப்போது தமிழக மீனவர்களைக் கைது செய்து கோடிக்கணக்கில் அபராதம் போடுவதற்கு இலங்கை அரசு ஒரு சட்டம் கொண்டு வந்து இருக்கின்றது. இப்படி ஒரு சட்டம் வரப்போகிறது, இதைத் தடுக்க வேண்டும் என்று, எட்டு மாதங்களுக்கு முன்பே பிரதமரைச் சந்தித்துக் கூறினேன். தமிழகத்தில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், நாம்தான் முதலில் போராட்டக் குரல் எழுப்பி இருக்கின்றோம். 2400 கோடி ரூபாய் நியூட்ரினோ திட்டத்தைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றேன் தன்னந்தனி ஆளாக. இதை அங்கீகரிக்கின்றார்களா? நான் தொடுத்த வழக்கின் அடிப்படையில்தான் தடை. அதன்பிறகு பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வேண்டும் என்று சொன்னார்கள். அதுவும் நான் சொன்னதற்குப் பிறகுதான். பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் நம்பிக்கை இல்லாமல் இருந்தார்கள். வழக்கு விசாரணைக்கு வந்தபோது நான் எழுந்து நீதிபதியிடம் சொன்னேன். நியூட்ரினோ திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து இருக்கின்றது என்று சொன்னேன். அப்படியா? தடை இருக்கின்றதா? என்று கேட்டார்கள். ஆம். நான்தான் வழக்குத் தொடுத்து இருக்கின்றேன். வாதாடினேன் என்று சொன்னேன். 19 மாதங்களாகத் தடை இருக்கின்றது என்று சொன்னேன்.

உடனே அந்த நிபுணரிடம் பேசினார் நீதிபதி ஜோதிமணி. அதற்குப்பிறகுதான், சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

இப்படி நாம் செய்ததை எல்லாம் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கின்ற சக்தி நம்மிடம் இல்லை. நமக்கு ஊடக பலம் இல்லை.

கூடங்குளம் அணு உலை அமைக்கப்போகின்ற செய்தி வெளியானபோது, இந்தியாவிலேயே அதை எதிர்த்த ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் நான்தான். மதுவை எதிர்த்து மக்களிடம் போனோம். நதிகள் இணைப்பைப் பற்றிச் சொன்னார்கள். நதிகளை இணைக்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா தாக்கல் செய்து விவாதத்திற்குக் கொண்டு வந்தோம்.  அந்த விவாதத்தில் பங்கேற்காத ஒரே கட்சி தி.மு.க., மார்க்சிஸ்டுகள் எதிர் நிலையைத் தெரிவித்தார்கள். அதை வலியுறுத்தி 2004 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி நடைபயணம் வந்தபோது, இந்தத் தஞ்சை மண்டலத்தின் வழியாகச் சென்றேன். பல்லடம் மாநாட்டுக்கு வி.பி.சிங் அவர்களை அழைத்துவந்து அறிவிக்கச் செய்தோம். வேடசந்தூர் மாநாட்டில் பேசிய பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, வைகோ எம்.பியா. இருந்தால், இந்நேரம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கும். அவர் வெற்றி பெறாமல் போனது பெரிய இழப்பு என்று பேசினார்.

இப்படித் தமிழகத்தின் அனைத்து வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து இருக்கின்றோம். சீமைக் கருவேல மரங்களை அகற்றக் களத்தில் இறங்கினோம். சிறையில் இருந்துகொண்டே கட்சியை இயக்கிக் கொண்டு இருந்தேன். 1500 கடிதங்கள் எழுதினேன். உங்களோடு தொடர்பு கொண்டே இருந்தேன். பொடாவில் இருந்தபோதும் அப்படித்தான் செயல்பட்டேன். இந்திய அரசியல் வரலாற்றில் தலைமறைவு இயக்கங்கள் இருந்தன. ஆனால், சிறைக்குள் இருந்துகொண்டு கட்சியை இயக்கிய வரலாறு இல்லை.

நமக்கு ஒன்றும் இல்லை என்று நினைக்காதீர்கள். பழிச்சொற்கள் தூசாகப் பறந்து போய்விட்டன. நெருப்பைக் கரையான் அரிக்க முடியாது; நம்மீது எந்தப் பழிச்சொல்லும் நிற்காது. நாம் ஊழலை எதிர்க்கின்ற நெருப்பு; ஊழல் கரையான்கள் நம்மை நெருங்க முடியாது. என் கரங்கள் சுத்தமானவை. அதனால்தான் உங்கள் முன்னால் வந்து நின்று பேசுகின்ற தகுதியோடு இருக்கின்றேன்.

இந்தக் கட்டத்தில் தஞ்சையில் நாம் மாநாடு நடத்துகின்றோம். பந்தல் போட்டுக் காலையில் இருந்தே  நடத்தத்தான் ஆசை. ஆனால் உங்களுக்குச் செலவுகள் அதிகம் ஆகும். முதல்நாளே வண்டிபிடித்து ஊரில் இருந்து புறப்பட்டு வர வேண்டும். அதை எல்லாம் யோசிக்க வேண்டி இருக்கின்றது.

தஞ்சையில் மாநாடு நடத்த வேண்டும் என்பதை எப்படிச் சொல்வது என்ற கவலை எனக்கு இருந்தது. ஏனென்றால் நீங்கள் படுகின்ற கஷ்டம் எனக்குத் தெரியும். நாங்கள் கரிசல் காட்டில் மண்வெட்டியைத் தூக்கி வெட்டிக் கஷ்டப்படுகின்றோம். ஆனால் நீங்கள் காலாலேயே மடையைத் திருப்பி விட்டு விடுகின்றீர்கள்; விறால் மீனைச் சாப்பிட்டு விட்டு வெத்தலையைப் போட்டுக்கொண்டு பச்சைப் பெல்ட் கட்டிக்கொண்டு திரிகின்றீர்கள்  என்று ஒரு காலத்தில் நான் கேலி பேசி இருக்கின்றேன். ஆனால் இப்பொழுது உங்கள் நிலைமை, எங்களை விட மோசமாகப் போய்க்கொண்டு இருக்கின்றது.

இந்த நிலையில் நமது தோழர்களிடம் சென்று எவ்வளவு நிதியைத் திரட்ட முடியும்? எப்படிக் கேட்பது?

வீரபாண்டியன்தான் சொன்னார்: நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் துணைப்பொதுச்செயலாளரிடம் பேசுகிறேன்; உதயகுமாரிடம் பேசுகிறேன் என்றார். நான் துணைப்பொதுச்செயலாளரை அலைபேசியில் தொடர்புகொண்டு, கொஞ்சம் சென்னை வரையிலும் வந்துவிட்டுப் போங்க என்று அழைத்தேன். உடனே புறப்பட்டு வந்து விட்டார்.  தஞ்சாவூரில் மாநாடு நடத்த வேண்டும் என்றேன். அவர் நீண்ட காலமாக அரசியலில் இருப்பவர். அந்தப் பெரிய வெள்ளத்திலேயே மாவட்ட ஊராட்சி உறுப்பினராக வெற்றி பெற்றவர். எப்பொழுதோ எம்எல்ஏ ஆகி இருக்க வேண்டியவர். அப்போது அதையும் நான்தான் கெடுத்தேன். உண்மையைச் சொல்லுகிறேன்.

மாநாடு நடத்த வேண்டும் என்று சொன்னவுடன், எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; சிறப்பாக நடத்துவோம் என்றார். உதயகுமாரையும் கொஞ்சம் அணைத்துக் கொள்ளுங்கள் என்றேன். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். வேலைகளைத் தொடங்கி விட்டார்கள்.

கொஞ்ச நேரம் பேசிவிட்டு, வரிசையாக உங்களிடம் டிக்கட் புத்தகங்களைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணித்தான் வந்தேன்.

மானம் பெரிது

மலேசியாவில் கோலா லம்பூரில் கைப்பிடி இல்லாத சேரில் 14 மணி நேரம் உட்கார்ந்து இருந்தேன். கடுங்காப்பியாவது குடியுங்கள் என்றார் அருணகிரி. வேண்டாம். வெளியே போய்ச் சாப்பிடக்கூடாது; வேண்டுமானால் வாங்கிக்கொண்டு வந்து இங்கே சாப்பிடுங்கள் என்று சொல்கிறான். அப்படி என்ன சாப்பாடு வேண்டி இருக்கிறது? என்றேன். அருணகிரிக்குக் கண் கலங்கி விட்டது. நீங்கள் சாப்பிடவில்லை என்றால் நான் ஏன் சாப்பிட வேண்டும்? என்றார்.

அப்பொழுது நான் நினைத்தேன். சோழ மன்னனின் சிறையில் இருந்த கணைக்கால் இரும்பொறைக்குத் தாமதமாகத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான் என்பதற்காக, இந்தத் தண்ணீரைக் குடிப்பதற்குப் பதிலாக நான் சாவது மேல் என்று உண்ணாநோன்பு இருந்து செத்துப் போவேன் என்று சொல்லிவிட்டு, குழவி இறப்பினும்... என்ற பாடலைப் பாடிவிட்டு வடக்கிருந்து உயிர் நீத்தான். அத்தகைய மான உணர்ச்சி நிறைந்த மண் இது.

ஆந்திராவுக்குள் என் படத்தைப் போட்டுக் கொண்டு போனால் அடிக்கிறான் என்று நந்தகுமார் சொன்னார். உண்மைதான். நம்ம கொடியைக் கட்டிக்கொண்டு போனால், வைகோ ஆள் என்று பிடிக்கிறார்கள். சந்திரபாபு நாயுடு எனக்கு நல்ல நண்பர். உயிராக இருப்பார். பதவிப் பிரமாணத்திற்கு சிறப்பு அழைப்புக்கொடுத்து வரவழைத்துச் சிறப்பித்தார். 20 தமிழர்களை அங்கே சுட்டுக் கொன்றதைக் கண்டித்தோம், போராட்டம் நடத்தினோம். வாய் திறந்ததா தி.மு.க.? வாய் திறந்தாரா செயல் தலைவர்? சந்திரபாபு நாயுடு அரசு கொலைகார அரசு என்றேன். முதல்வரைக் குற்றம் சாட்டுகிறேன். காவல்துறைத் தலைவரைக் குற்றம் சாட்டுகிறேன் என்றேன். அது ஆந்திராவில் தொலைக்காட்சிகள் ஏடுகளில் செய்தியாயிற்று. அதனால் என் படத்தைப் போட்டுக்கொண்டு இப்போது ஆந்திராவுக்குள் போக முடியாது. திருப்பதிக்குப் போக முடியாது. வேறு எந்த நாட்டுக்கும் போக முடியாது. நீங்கள் அனுமதிக்காவிட்டால் என்ன, நான் தமிழ்நாட்டுக்குள் இருக்கின்றேனே... அது போதும் எனக்கு. (கைதட்டல்). இது  நான் பிறந்த மண்; நான் அடங்கப் போகின்ற மண். அந்த மண் என்னைத் தூக்கிப் பிடிக்கின்றது அல்லவா, அது போதும். இலட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கின்றீர்களே, வாழ்க்கையில் இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்?

நம்முடைய நல்லு லிங்கம், அம்மாபேட்டை கருணாகரன் மற்றும் பல இணையதளத் தோழர்கள் இன்று என்னிடம் வந்தார்கள். வைகோவை மலேசியாவுக்குள் நுழையவிடவில்லை என்பதால் நெருப்பாக வருவார்; பயங்கரக் கோபத்தில் இருப்பார்; தொலைக்காட்சிகளில் எரிமலையாக வெடிப்பார் என்று கருதினார்கள். அவ்வளவு அமைதியாக, அனைத்துக் கேள்விகளுக்கும் சிரித்துக்கொண்டே பதில் சொல்லிவிட்டுப் போய்விட்டாரே.. வியப்பாக இருக்கிறதே என்று எல்லோரும் வரவேற்கிறார்கள்என்று சொன்னார்கள்.

இனிமேல் எப்போதும் அப்படித்தான் இருப்பேன்என்று சொன்னேன். உடனே ஜீவன், ‘இல்லண்ணே நீங்கள் அப்படி இருந்து விடக் கூடாது; கோபம் இருக்க வேண்டும்என்றார்.

இல்லையில்லை. நான் மிகவும் பக்குவப்பட்டு விட்டேன்என்று சொன்னேன்.  முன்பெல்லாம் ஒரு நாளைக்குப் 18 மணி நேரம் 20 மணி நேரம் உழைத்தேன். இப்போது அப்படி முடியவில்லை என்றாலும், ஒரு சிறிய வெற்றி கண்ணில் பட்டால் போதும், 24 மணி நேரமும் உழைப்பேன். ஒரு திருப்பம், ஒரு சிறிய துரும்பு கிடைத்தால் போதும். கிடைக்காது என்று மட்டும் கருதாதீர்கள். துரும்பு என்ன தூணே கிடைக்கும். சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, கடந்த பத்து மாதங்களுக்குள் தமிழக அரசியலில் எத்தனையோ திருப்பங்கள் ஏற்பட்டு விட்டனவே? நம் தொண்டர்கள் எங்கும் போய்விடவில்லையே? நம்மோடுதானே இருக்கின்றார்கள்? இனி சலித்து எடுப்பதற்கு ஒன்றும் இல்லையே? ஒன்றும் வேண்டாம். கடைசிவரைக்கும் இப்படியே இருந்துவிட்டுப் போகிறோம் என்றுதானே நீங்கள் எல்லோரும் முடிவு எடுத்து என்னோடு இருக்கின்றீர்களே? இனிமேல் என்ன?

தமிழக அரசியலில் வெற்று இடம்; யார் நிரப்பப் போகின்றார்கள்? அவர் வருவாரா? இவர் வருவாரா? என்கிறார்கள். அவசரப்பட வேண்டாம். அனைத்தையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். சுத்தமான ஊழல் இல்லாத நிர்வாகத்தைக் கொடுப்போம் என்று சொல்லக்கூடிய தகுதி உள்ள கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான். அதற்கு அடித்தளம் அமைக்கின்ற இடம்தான் தஞ்சை மாநாடு.

ஏன் இவ்வளவு காலம் தள்ளி வந்து இருக்கின்றது என்றால், காரணத்தோடுதான் தள்ளி வந்திருக்கின்றது.

சட்டமன்றத் தேர்தலில்...

சட்டமன்றத் தேர்தலின்போது,  எப்படியாவது கேப்டனை நம் அணிக்குள் கொண்டு வர வேண்டும்; அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தாலும் பரவாயில்லை என்று சொன்னார்கள். நாம்தான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது இல்லை என்று முடிவு எடுத்து இருக்கின்றோமே என்றபோது, சிபிஎம்,சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் எல்லோருமே எப்படியாவது கேப்டனைக் கொண்டு வந்து விடுங்கள் என்றார்கள்.

நான் ஒருங்கிணைப்பாளர். என்னிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டார்கள்.  நான் என்ன செய்வது?  நான்கு கட்சிகள் போதும். நமக்குள் பேசி முடித்துக்கொள்வோம் என்று ஒப்பந்தம் கையெழுத்துப் போடுகின்ற நிலைமையில், பேச்சு திசை திரும்பிவிட்டது. அவரைக் கூட்டணிக்குத் தலைவர் என்று சொல்ல வேண்டும் என்றார்கள். அது முடியாது. நான் ஒருங்கிணைப்பாளர் என்றேன். நீண்ட நேரம் பேசி, கடைசியாக, சரி உங்களை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்கின்றோம் என்று சொன்னோம். அன்றைக்கு மூன்று கட்சித்தலைவர்களும் என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு உலகத்தில் எவராலும் சாதிக்க முடியாததை நீங்கள் சாதித்து விட்டீர்கள் என்று சொன்னார்கள். அவ்வளவு சீட்டு, பணம் எல்லாம் தருவதாகச் சொன்னபோதும், அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு நமது அணிக்கு வருகிறார் என்றபோது, அதனால் எவ்வளவு விமர்சனங்கள்? என் மீது எத்தனை பழிச்சொற்கள், ஏளனங்கள்?

நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. என் மீது எத்தனையோ முட்கள் பாய்ந்து இருக்கின்றன. நாம் அனைவரையும் மதிக்கின்றோம். அடுத்து நாம் செய்ய வேண்டியது, ஊர் ஊருக்குப் பொதுப்பிரச்சினைகளை முன்னெடுத்துச் செய்யுங்கள். சீனத்தைப் போலத் தமிழகத்தில் சுவர் எழுத்துகளை எழுதிய கட்சி மறுமலர்ச்சி தி.மு.க.தான் என்பது வரலாறு.

வைகோ அழைக்கிறார்..எழுச்சிப் பேரணிக்கு வாரீர் என்று தமிழகத்தில் எழுதாத சுவர்கள் இல்லை. தஞ்சை மாநாட்டுக்கு நாங்கள் 100 வண்டிகளில் வருவோம் என்று திருச்சி மாவட்டம் அறிவித்து இருக்கின்றது. சாயங்காலம் மாநாடு. கடந்த ஆண்டு சோதனையான கட்டத்தில் கை கொடுத்த வெல்லமண்டி சோமுவை நான் மறக்க மாட்டேன். அவருக்குப் பக்கபலமாக இருந்த சேரனை மறக்க மாட்டேன். இப்பொழுது அவ்வளவு சோதனைகள் இல்லை. என்ன நடக்குமோ என்று தெரியாத ஒரு திகைப்பில் எல்லோரும் இருக்கின்றார்கள். இந்த நிலையில், இனி நாம்தான் எதிர்காலத்திற்கான வெளிச்சத்தை ஏற்படுத்தப் போகின்றோம் என்பதைச் சொல்லி மாநாட்டுக்கு அழைத்துக் கொண்டு வாருங்கள். நமது மாநாட்டுக்கு வருகின்ற கூட்டம், கொட்டுகின்ற மழையிலும் கலைந்து போகாது என்பதை ஏற்கனவே பலமுறை நிரூபித்து இருக்கின்றோம். கடைசிவரையிலும் அசையாமல் அமர்ந்து இருப்பார்கள். ஆனால் மற்ற கட்சிகளில் இலட்சம் பேரை அழைத்து வந்தாலும், அடுத்த ஒரு மணி நேரத்தில் 90 ஆயிரம் பேர் எழுந்து போய்விடுவார்கள்.

மதிமுகம் தொலைக்காட்சி

மதிமுகம் தொலைக்காட்சியைத் தொடங்கினார் தங்கதுரை. பாவப்பட்ட கட்சிக்காரன். நடுத்தரக் குடும்பம்தான். அருமையான தம்பி. பகுதிச் செயலாளராக, இளைஞர் அணி மாநிலத்துணை அமைப்பாளராக இருக்கின்றார். அவரும், செல்வபாண்டியன் மைத்துனரும் சேர்ந்து, எனக்கே தெரியாமல் கைக்காசைச் செலவழித்து இந்தத் தொலைக்காட்சியைத் தொடங்கி இருக்கின்றார்கள்.   திறக்கப்போகின்ற நாளில்தான் எனக்குத் தெரியும். நான் ஏதோ பம்பரம் டி.வி. போல என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். தொடங்கினார்கள். ஓராண்டாக நடத்த முடியாமல் மிகுந்த சிரமப்ப்டடார்கள். இப்போதுதான் அரசுத் தொலைக்காட்சியில் இடம் கிடைத்து இருக்கின்றது. திருமாவளவன் அவர்கள் தொடங்கிய வெளிச்சம் தொலைக்காட்சிக்கு ஐந்தாறு மாதங்களுக்கு முன்பே இடம் கிடைத்துவிட்டது. நமக்கு இப்போது கிடைத்து இருக்கின்றது.

அரசு அலைவரிசையில் 50 அல்லது 60 ஏதோ ஒரு இடத்தில் வரும். சனிக்கிழமை தோறும் இரவு 8.30 மணிக்குப் பொதுச்செயலாளர் உரையைக் கேட்கலாம்.  அரசியல் கலப்பு இல்லாத 65 உரைகள் ஒளிபரப்பாக இருக்கின்றன. ஒரு நாளைக்கு நான்கு முறை செய்திகள் ஒளிபரப்பாகின்றன. அதில் நமது அறிக்கைகளை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். நமது நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொள்ளலாம். நமது அறிக்கைகள் கத்தரிக்கப்படாமல் வரி விடாமல் முழுமையாக ஒளிபரப்பாகும். கழக நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

இதற்காக நாம் எந்த உதவியும் செய்யவில்லை. ஏற்கனவே ஒருவரை நம்பி ஏமாந்ததால், உங்களிடம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு கேட்பது என்கிற கவலையோடு கேட்கவில்லை. இப்போது ஓராண்டு ஆகிவிட்டது. உங்கள் கோபம் தணிந்து இருக்கும் என்று நம்பித்தான் கேட்கின்றோம்.  மாநாட்டை நடத்த வேண்டும். சங்கொலிக்கு மாவட்டங்களைப் பார்த்து வாங்கிக் கொள்கின்றோம்.

பொதுச்செயலாளரை வைத்துக்கொண்டு ஈட்டி வசூல்காரனைப் போல, எவ்வளவு கொடுப்பீர்கள்? என்று துணைப்பொதுச்செயலாளரும், உதயகுமாரும் கேட்கின்றார்களே என்று நினைக்காதீர்கள். அன்பாகத்தான் கேட்டு இருக்கின்றோம். நீங்களும் அன்பாகத்தான் சொல்லி இருக்கின்றீர்கள். இவ்வளவு காலம் கஷ்டப்பட்டீர்களே, இனி கொஞ்சம் சிரமத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.

நமக்கு ஒரு விடிவு காலம் வரும். உறுதியாக வரும். நமக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன. கொள்கை இருக்கின்றது, இலட்சியம் இருக்கின்றது, உறுதி இருக்கிறது, வீரம் இருக்கிறது, விவேகம் இருக்கிறது, துணிச்சல் இருக்கிறது, தன்னம்பிக்கை இருக்கின்றது. இவை எல்லாவற்றையும் விடப் பாச உணர்வு இருக்கின்றது.

என் கவலை

துபையில் இருக்கின்ற தம்பி ஸ்டாலின் பீட்டர் பாபு கட்சி வெறி பிடித்தவர். தஞ்சாவூர்க்காரர். துபையில் இருந்த மீனவர்கள் 20 பேருக்கு ஒன்றரை மாதம் அவர் செலவழித்துச் சாப்பாடு போட்டார். அவர்களைப் பாதுகாத்தார். அவர்கள் எல்லாம் உங்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை கொடுப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால் அவர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்தார்கள். அதைப்பற்றிக் கவலை இல்லை. ஆனால் அந்த ஸ்டாலின் தந்தையும், தங்கையும் 11 மணிக்கு விபத்தில் இறந்து விட்டார்கள். தங்கையின் கணவர் மீனாட்சி மிசன் மருத்துவமனையில் இருக்கின்றார். செய்தி வந்தவுடனே, மாவட்டச் செயலாளரை அனுப்பினேன்; காவல்துறைக் கண்காணிப்பாளரோடு பேசி உடல் கிடைக்க ஏற்பாடு செய்தேன். அதற்கு அவர் நன்றி சொல்கின்றார். தங்கை கணவரின் உயிருக்கு ஆபத்து இல்லை.

இன்றைக்கு இறந்து போனாரே மற்றொரு தம்பி அமலதாஸ். நமது மாணவர் அணி நடத்திய பேச்சுப்போட்டியில் முதல் பரிசைக் கொடுத்தவர்.

இந்த இயக்கத்தில் யாருக்கேனும் ஒரு சிறு துன்பம் என்றாலும், அது என் மனதை மிகவும் பாதிக்கின்றது. யாருக்கேனும் உடல் நலம் இல்லை என்றால், அதுகுறித்து மிகவும் கவலைப்படுகின்றேன். துணைப்பொதுச்செயலாளர், உதயகுமார் எல்லாம் இடையில் உடல்நலம் குன்றி இருந்தார்கள். இப்போது நன்றாக இருக்கின்றார்கள். மணி அண்ணன் நன்றாக இருக்கின்றார்.  நாம் எவ்வளவு கவலையோடு இருந்தாலும் நம்முடைய உதயகுமார் சர்க்கரையாகப் பேசி ஒரு பத்தாயிரம் யானை பலத்தைக் கொண்டு வந்து சேர்த்துவிடுவார். அவன் அப்படி இருக்கிறான், இவன் இங்கே கிடக்கிறான், நாம் பிச்சு உதறி விடலாம் என்பார். நம்ம வண்டிதானே ஓடிக்கிட்டிருக்கு என்பார்.  (சிரிப்பு) தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதில் பயங்கரமான ஆளு.

உங்களை எல்லாம் பார்த்துப் பேசியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

திருப்பம் தரும் மாநாடு

இந்தத் தஞ்சைத் தரணி, சோழ மண்டலம் நமக்கு ஒரு பெரிய திருப்பத்தைக் கொடுக்கும். கடந்த ஆண்டு திருச்சி மாநாட்டில் பேசும்போது, திருப்புறம்பியம் பள்ளிப்படையில் உள்ள நடுகற்களைப் பற்றியும், அங்கே நிகழ்ந்த போர்க்களத்தைப் பற்றியும் சொன்னேன். விஜயாலயச் சோழன் கட்டி எழுப்பிய பிற்காலச் சோழப் பேரரசின் எழுச்சியைப் பற்றிச் சொன்னேன். அதை இப்போது நினைவூட்டுகிறேன்.

நம்மிடம் உறுதி இருக்கின்றது. யாருக்கும் எந்தச் சலனமும் கிடையாது. ஊசலாட்டம் இல்லை. எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. இப்படி எதிர்பார்ப்பு இல்லாத தோழர்களால்தான் ஒரு கட்சியைக் காப்பாற்ற முடியும். அப்படி நீங்கள் காப்பாற்றிக் கொண்டு இருக்கின்றீர்கள். (கைதட்டல்).

எனக்கு எந்தச் சோர்வும் இல்லை. உங்களைப் பற்றி நினைப்பதைத் தவிர வேறு கவலை எதுவும் இல்லை. கழகத் தோழர்களின் வீடுகளுக்குப் போகும்போது, அவர்களுடைய குடும்பத்தினரின் உடல்நலத்தைப் பற்றிக் கவலைப்படுகிறேன்.

ஒரத்தநாடு  கோபு வந்தார். கட்டணத்தைக் குறைத்து வாங்கிக் கொண்டு, அனைத்து ஊர்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்யுங்கள். மாநாடு, நமது துணைப்பொதுச்செயலாளர் துரை. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற இருக்கின்றது. மற்ற நிகழ்வுகளைக் கூடிப்பேசி அறிவிப்போம். நானும் இங்கே வந்து உங்களோடு இருந்து வேலை செய்யப் போகின்றேன்.

இந்த மாநாட்டை இங்கே நடத்துவதற்கு ஊக்கம் கொடுத்தவர் புதுக்கோட்டை சந்திரசேகரன். புதுக்கோட்டை மாவட்டத் தீரர்கள் எல்லாம் வந்திருக்கின்றீர்கள். கலியமூர்த்தி, சிற்றரசு மற்றும் முக்கியமானவர்கள் வந்திருக்கின்றார்கள். அரியலூர் சின்னப்பா நல்ல தைரியம் கொடுத்தார். வாரணவாசி இராஜேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் வந்திருக்கின்றார்கள். நம்முடைய ரோவர் வரதராஜன் அவர்கள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, மாநாட்டுக்குப் பெரிய அளவில் பக்கபலமாக இருப்போம் என்று உறுதி அளித்து இருக்கின்றார்கள். பெரம்பலூர் துரைராஜ் அவர்களும் ஒத்துழைப்பதாக உறுதி அளித்து இருக்கின்றார்.

இதுதான் முதல் செயல்வீரர்கள் கூட்டம். வேறு யாரிடம் போய் நான் பேச முடியும்? நாமெல்லாம் ஒரு குடும்பம். உங்களிடம்தான் நான் பேச முடியும். இன்று இரவு நிம்மதியாக உறங்குவேன். கொடுப்பது இருக்கட்டும், இவ்வளவு தொகை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. குறைவாகத்தான் சொல்லுவார்கள் என்று நினைத்தேன். என்ன வைகோ டல்லாக இருக்கின்றாரோ, நாம ஓங்கி அடிப்போம் என்று தொகையைச் சொல்லி இருக்கின்றார்கள். எப்படியாவது புரட்டிக் கொடுத்து விடுவீர்கள் (சிரிப்பு) என்று நம்புகிறேன்.

இங்கே அறிவிக்கப்பட்டு இருக்கின்ற தொகை 77 இலட்சத்து 25 ஆயிரம். (கைதட்டல்).

இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்திக் கொடுத்தமைக்காக,  தஞ்சை மாவட்டச் செயலாளர் உதயகுமார், மாநகரச் செயலாளர் அருமைத் தம்பி தமிழ்ச்செல்வனுக்கும், இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்ட இருக்கின்ற எங்கள் துணைப்பொதுச்செயலாளர் ஆருயிர்ச் சகோதரர் துரை. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், மாவட்டக் கழகத்தின் அவைத்தலைவர் அப்பர் நாட்டார் உள்ளிட்ட மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கும் நன்றி.

கலங்கரை விளக்கமாக..திசை காட்டும் கருவியாக...

மாநாடு மாபெரும் வெற்றியைப் பெறும். எந்தத்திசையில் செல்வது எனத் தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றது தமிழக அரசியல். We are standing at the cross roads.  எந்தப் பாதையைத் தேர்ந்து எடுப்பது எனத் தெரியாமல் திகைத்து போய் நிற்கின்றார்கள். அந்தக் கட்டத்தில் தமிழக அரசியல் இருக்கின்றது, திராவிட இயக்கம் இருக்கின்றது. தமிழகத்திற்கு விடியலை ஏற்படுத்த யார் முன்னெடுத்துச் செல்வார்கள்? என்ற கேள்விக்குறி விஸ்வரூபம் எடுத்து இருக்கின்றது.

இரண்டு பாதைகள் செல்லுகின்றன.  நீ எந்தப் பாதையில் செல்லப் போகிறாய்? என்று ஒருவனிடம் கேட்டார்கள். இது எல்லோரும் வழக்கமாகச் செல்லுகின்ற பாதை. இதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது; எந்த ஆபத்தும் கிடையாது. இன்னொரு பாதை, இதுவரை யாரும் சரியாகப் பயணிக்காத பாதை. போகாத பாதை. அதில் கல்லும் முள்ளும் காடும் மேடும் விலங்குகளின் தாக்குதலும் இருக்கலாம். நீ எந்தப் பாதையைத் தேர்ந்து எடுக்க விரும்புகிறாய்?

முதலாமவன் சொன்னான்: எதற்குப் பிரச்சினை? நான் நல்ல பாதையிலேயே செல்கிறேன் என்று சொன்னான்.

இரண்டாமவன் சொன்னான்: இதுவரை யாரும் பயணிக்காத பாதையில் நான் செல்லுகிறேன் என்றான்.

அந்த இரண்டாமவன் தேர்ந்து எடுத்த பாதையைப் போல நாம் தேர்ந்து எடுத்து நடந்து வந்து இருக்கின்றோம். இனி நமக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. மக்கள் நம்பிக்கையைப் பெற்று இருக்கின்றோம். தமிழக வாழ்வாதாரங்களைக் காப்பாற்றி இருக்கின்றோம்; தமிழ் இனத்தைப் பற்றிப் பேசுகின்ற தகுதியைப் பெற்று இருக்கின்றோம்; திராவிட இயக்கத்தில், தமிழ்த் தேசியவாதிகளால் குற்றம் சொல்ல முடியாத நிலைமையில் நாம் மட்டுமே இருக்கின்றோம்.

இத்தகைய தகுதிகளோடு இருக்கின்ற நாம்தான் திராவிட இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லுகின்ற முற்போக்குப் படையாகத் திகழ முடியும். அந்த வழியில் அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்குத் தஞ்சை மாநாடு திசை காட்டும் கருவியாக, கலங்கரை விளக்கமாகத் தமிழக அரசியலுக்கு அமையும்.

சங்கொலி, 21.07.2017

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)