ஜெர்மனியில் பெரியார் சுயமரியாதை இயக்க மாநாடு! வைகோ வாழ்த்து

விவகாரங்கள்: மனித உரிமை, சர்வதேசம், தேசிய

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Wed, 26/07/2017

 

 

 


ஜெர்மனியில் பெரியார் சுயமரியாதை இயக்க மாநாடு!

வைகோ வாழ்த்து

1932 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தந்தை பெரியார் அவர்கள், 17.05.1932 இரவு 7.30 மணிக்கு மாஸ்கோவில் இருந்து இரயில் மூலம் ஜெர்மனிக்குப் புறப்பட்டு, 19.05.1932 அன்று காலை 9.30 மணிக்கு பெர்லின் நகரை அடைந்தார். 14.06.1932 வரை அங்கேயே தங்கி, ஜெர்மனி முழுவதிலும் பயணம் செய்து பல்வேறு மக்களையும், தலைவர்களையும் சந்தித்து அவர்களின் கலை, பண்பாடு குறித்து அறிந்துகொண்டார்.

அத்தகைய பெருமைக்கு உரிய ஜெர்மனியில் கொலோன் பல்கலைக் கழக வளாகத்தில் இந்த மாதம் 27, 28, 29 ஆகிய நாட்களில் சுயமரியாதை இயக்கத்தின் 91 ஆம் ஆண்டு நிறைவு விழாவினை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் ஜெர்மனி கிளை நடத்துகின்றது.

தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், பெரியாரின் கடவுளும் மனிதனும் என்னும் நூல்கள் ஜெர்மனி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, மாநாட்டின் தொடக்க விழாவில் வெளியிடப்பட உள்ளது. பெரியாரின் Revolt ஆங்கில ஏட்டில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு, பெரியாரின் நினைவிடம், கல்வெட்டு, பொன்மொழிகள் ஆகிய ஆங்கில நூல்களும் பெரியார் சுயமரியாதை எனும் தமிழ் நூலும் இதே நிகழ்வில் வெளியிடப்பட உள்ளன. பெரியார் திரைப்படமும் ஒளிபரப்பாகின்றது.

மூன்று நாட்கள் நடைபெற உள்ள சிறப்புமிகு மாநாட்டில் அறிஞர் பெருமக்கள் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை அளிக்க உள்ளனர். சுயமரியாதை இயக்கம் குறித்து நடத்தப்பட்ட பன்னாட்டுக் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விழாவில் பாராட்டி சிறப்பிக்கப்படுகின்றார்கள்.

கிராய்டன் மாநகராட்சியின் துணை மேயர் மைக்கேல் செல்வநாயகம் அவர்களுக்கு, மானமிகு கி.வீரமணி பெயரிலான சமூக நீதி விருது வழங்கப்பட உள்ளது.

பெரியார் பன்னாட்டு மையத்தின் ஜெர்மனி கிளையின் தலைவர் பேராசிரியர் டாக்டர் யுர்லிக் நிக்லசு, துணைத் தலைவர் கவன்வோர்ட், செயலாளர் கிளவுடியா வெப்பர் ஆகியோர் முன்னின்று மாநாட்டு நிகழ்ச்சிகளை நேர்த்தியாக ஏற்பாடு செய்து வருகின்றார்கள்.

தமிழகத்தில் இருந்து திராவிடர் கழகத்தின் 41 பேராளர்கள் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் சரித்திரச் சிறப்புமிக்க அந்த மாநாட்டில் கலந்துகொண்டு பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளை ஆய்வு செய்து உரையாற்றுகின்றார்கள் என்பது நமக்கு அளவு கடந்த மகிழ்ச்சியினை அளிக்கின்றது.

நூறாண்டுக்கால வரலாற்றுப் பின்னணியும், சிறப்பும் கொண்ட நம் திராவிடர் இயக்கத்தின் துவக்கமான சுயமரியாதை இயக்கத்தின் விழாவை அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து முதலான நாடுகளின் பேராளர்கள் எல்லாம் ஜெர்மனியில் கூடிக்கொண்டாடுவதும், பெரியாரின் தனிச்சிறப்பை பன்னாட்டு பெருமக்களிடையே பரப்புவதும் நாம் அனைவரும் உவகையுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரவேற்கத்தக்கதாகும்.

தொண்டு செய்து பழுத்த பழம்

தூயதாடி மார்பில் விழும்

மண்டைச்சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும்

என்று பாவேந்தர் பாரதிதாசன் பாராட்டிப் பாடினாரே, அத்தகைய சிறப்புமிகு நம் தந்தை பெரியாரின் உலகுதொழும் தத்துவங்களை உலகமயமாக்கும் உன்னதமான பணியில் ஈடுபட்டுள்ள தி.க. தலைவர் ஆசிரியர் அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கும், மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வில்லில் இருந்து புறப்பட்ட கணை எப்படி போய்ச் சேர வேண்டிய இலக்கை அடைந்துதான் நிற்குமோ, அதனைப்போலவே பெரியாரின் பெரும்பணியும் வெற்றியை ஈட்டும்வரை ஓயாதுஎன்று முழக்கமிட்ட அறிஞர் பெருந்தகை அண்ணாவின் எண்ணத்திற்கு வலுசேர்க்கவும், வாகை சூடவும் உள்ள ஜெர்மனியின் சுயமரியாதை மாநாடு வெற்றிகளைக் குவித்திட மறுமலர்ச்சி தி.மு.கழகம் பாசமலர்களை, வாச மலர்களை தூவி வாழ்த்துகின்றது! பாராட்டி மகிழ்கின்றது!

தாயகம்                                                                வைகோ
சென்னை - 8                                                 பொதுச்செயலாளர்
26.07.2017                                                         மறுமலர்ச்சி தி.மு.க.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)