என்.எல்.சி. நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சி வைகோ கண்டனம்
விவகாரங்கள்: பொருளாதாரம், திறன், தொழிலாளர், தேசிய, புறநகர்
மாவட்டம்: விழுப்புரம், தமிழ்நாடு
செய்தித்துறை: தொகுப்புகள்
என்.எல்.சி. நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சி
வைகோ கண்டனம்
இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ‘நவரத்னா’ பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வளர்ச்சி பெற்று உள்ளது. கடந்த 2009 - 2010 நிதி ஆண்டில் ரூபாய் ஆயிரத்து 247 கோடி லாபம் ஈட்டி, தலைசிறந்த பொதுத்துறை நிறுவனமாக என்.எல்.சி. தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்து வருகிறது. பதினைந்தாயிரம் நிரந்தரத் தொழிலாளர்கள், ஆறாயிரம் பொறியாளர்கள், பதிமூன்றாயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கடும் உழைப்பால் இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது.
என்.எல்.சி. நிறுவனத்தின் 51 விழுக்காடு பங்குகளை விற்க, 2002 ஆம் ஆண்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயற்சி செய்தநேரத்தில், நாடாளுமன்றத்திலும், பிரதமர் வாஜ்பாய் அவர்களிடமும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவித்தேன். அன்றையப் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், தமிழக மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பு அளித்து, ‘என்.எல்.சி. பங்குகளை விற்க மாட்டோம்; தனியார்மயமாக்க மாட்டோம்’ எனவும் அறிவித்தார். என்.எல்.சி. தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.
ஆனால், காங்கிரஸ் கூட்டணி அரசு பொறுப்பு ஏற்ற பிறகு, 2006 இல் என்.எல்.சி.யின் 15 விழுக்காடு பங்குகளை விற்கவும், 2009 இல் 10 விழுக்காடு பங்குகளை விற்கவும் நடவடிக்கை மேற்கொண்டது. என்.எல்.சி. தொழிலாளர்களின் போராட்டத்தாலும், அனைத்துக் கட்சிகளின் கடும் எதிர்ப்பாலும் மத்திய அரசு பணிந்தது. பங்கு விற்பனை நடவடிக்கையையும் நிறுத்தி வைத்து இருந்தது.
தற்போது, மத்திய நிலக்கரித்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால், என்.எல்.சி.யின் 10 விழுக்காடு பங்குகளை விற்று, 2400 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என்று அறிவித்து உள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், ஒரு லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுத்தி உள்ள மத்தியத் தகவல் தொழில் நுட்பத் துறையின் தி.மு.க. அமைச்சர் ஊழலைக் கண்டுகொள்ளாத காங்கிரஸ் அரசு, லாபத்தில் இயங்கும் என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டத் தீர்மானித்து உள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மத்திய அரசு என்.எல்.சி. நிறுவனத்தை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டு உள்ளதை மத்திய நிலக்கரித்துறை அமைச்சரின் அறிவிப்பினால் அறிய முடிகிறது. இல்லையெனில், ஆயிரம் கோடி ரூபாய் லாபம்தரும் என்.எல்.சி. பங்குகளை விற்பதற்கு, காங்கிரஸ் அரசு தொடர்ந்து முயற்சித்து வருவது ஏன்?
என்.எல்.சி. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட தொழிலாளர்கள், 2007 ஆம் ஆண்டில் இருந்து நிலுவையில் உள்ள ஊதிய மாற்று ஒப்பந்தம் கேட்டுப் போராடி வருகின்றனர். பணிநிரந்தரம் கோரி ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராடுகின்றனர். ஊக்க ஊதியம், போனஸ் குறித்துப் பேசுமாறு பொறியாளர்களும் கோரி வருகின்றனர். போராட்டக்களமாக மாறி உள்ள நெய்வேலி தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்க்க முன்வராத நிலக்கரித்துறை அமைச்சர், என்.எல்.சி. பங்குகளை விற்பதில் மட்டும் ஆர்வம் காட்டி வருவதைக் கண்டு, தொழிலாளர்கள் கொந்தளித்து உள்ளார்கள்.
தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டு வேலைநிறுத்தம் மேற்கொண்டால், தமிழ்நாடே இருளில் மூழ்கி விடும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புகளை மீறி, என்.எல்.சி. நிறுவனத்தை தனியார்மயமாக்கிட தொடர்ந்து முயற்சித்துவரும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், என்.எல்.சி. பங்குகள் விற்கும் திட்டத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்துகிறேன்.

