டி.சுதர்சனம் மறைவு வைகோ இரங்கல்
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
மாவட்டம்: தமிழ்நாடு
டி.சுதர்சனம் மறைவு
வைகோ இரங்கல்
தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம் அவர்கள், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் தந்தது.
பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே மாணவர் காங்கிரசில் சேர்ந்து, தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு அரிய சேவை செய்துவந்த மதிப்புக்குரிய சுதர்சனம் அவர்கள், நயத்தகு நாகரிகமிக்கவர். கடுஞ்சொல் பேசி அறியாதவர், கட்சி எல்லைகளைக் கடந்து பண்போடு அனைவரிடமும் நட்பு பாராட்டும் உயர்ந்த பண்பாளர் ஆவார்.
பல ஆண்டுகளாக நான் அவரிடத்திலே பழகி இருக்கிறேன். எந்தச் சூழலிலும் மலர்ந்த முகத்தோடு, புன்முறுவல் ததும்ப அனைவரிடமும் பேசிப் பழகும் சுதர்சனம் அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து அவரது இயக்கத்துக்கும், தமிழ்நாட்டின் பொதுவாழ்வுக்கும் தொண்டாற்ற இருந்த அவரை மரணம் இப்படிக் கொத்திச் சென்றது மிகுந்த துயரத்தைத் தருகிறது. அவரை இழந்து கண்ணீரில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் இயக்கத் தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

