தமிழ்க்குலத்தின் பகைவன்; மனிதநேயத்தின்/மனிதகுலத்தின் ஒட்டுமொத்த எதிரி ராஜபக்சேவுக்கு வரவேற்பா? கண்டன அறப்போருக்கு அணிதிரண்டு வாரீர்! வைகோ அறிக்கை!

விவகாரங்கள்: மனித உரிமை, சர்வதேசம், இலங்கைத் தமிழர்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள்

Date: 
Fri, 04/06/2010

தமிழ்க்குலத்தின் பகைவன்;
மனிதநேயத்தின்/மனிதகுலத்தின் ஒட்டுமொத்த எதிரி
ராஜபக்சேவுக்கு வரவேற்பா?
கண்டன அறப்போருக்கு அணிதிரண்டு வாரீர்!
வைகோ அறிக்கை!


லங்கைத் தீவில் இலட்சக்கணக்கான தமிழர்களை, உலகம் தடை செய்த நாசகாரக் குண்டுகளை வீசியும், இந்தியா உள்ளிட்ட அணு ஆயுத வல்லரசு நாடுகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தியும், ஈவு இரக்கம் இன்றிப் படுகொலை செய்த கொடிய குற்றவாளியான இலங்கையின் அதிபர் மகிந்த ராஜபக்சே, அனைத்து உலக நாடுகளின் நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டிய மாபாவி ஆவான்.


தங்கள் தாயக விடுதலைக்குப் போராடிய விடுதலைப் புலிகளை, ஜெனீவா நெறிகளுக்கு மாறாக ராஜபக்சே அரசு, அக்கிரம யுத்தம் நடத்தி, படுகொலை செய்ய இந்திய அரசு ஆயுத உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்தது.


போரில் ஆயுதம் ஏந்தாத தமிழ் மக்களை, வயது முதிர்ந்தவர்கள், தாய்மார்கள், சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர் சிறுமியரை, குண்டுகள் வீசிக் கொன்றும், பீரங்கித் தாக்குதல் நடத்தியும், உணவுக்கே வழி இன்றிப் பட்டினி போட்டும், காயம் அடைந்தவர்களுக்குச் சிகிச்சைக்கு, வழி இன்றிச் செய்தும் சாகடித்த கொடியவன் ராஜபக்சே, போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டியவன் என்று, அயர்லாந்து நாட்டிலே கூடிய சர்வதேச மக்கள் தீர்ப்பு ஆயம் அறிவித்தது.


மனிதகுலத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் புரிந்த மகிந்த ராஜபக்சே நடத்திய அக்கிரமங்கள் குறித்து விசாரணை மன்றம் அமைக்க, ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்தது. தமிழ் ஈழ மண்ணில், தமிழ் இனத்தையே கரு அறுக்கும் ரத்த வேட்டை ஆடிய ராஜபக்சே, ‘ஈழத்தமிழர்களுக்குத் தாயகம் கிடையாது; தமிழ் இனம் தனித் தேசிய இனம் அல்ல என்றும்; தமிழர்களின் பூர்வீகத் தாயகமாக வடக்கு-கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று அறிவித்து உள்ளான்.


13 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் என்பது, உலக நாடுகளை ஏமாற்ற இலங்கை அதிபர் பயன்படுத்தும் பித்தலாட்ட வேலை ஆகும். அந்த 13 ஆவது திருத்தத்தைத் தமிழர்கள் அப்போதே நிராகரித்து விட்டனர்.

இலங்கைத் தீவில், தமிழ் ஈழத்தில், இலட்சக்கணக்கான தமிழர்களின் வீடுகளை, இடித்து நொறுக்கித் தரைமட்டம் ஆக்கிவிட்டு, தமிழர் தாயகத்தில் சிங்களர்களைக் குடியேற்றும் வேலையைத் தீவிரப்படுத்திவிட்டு, தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களையும் அழித்துவிட்டு, சிங்கள பெளத்த விஹாரைகளைக் கட்டும் வேலையைச் செய்துகொண்டே, தாயக விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களின் கல்லறைகளை எல்லாம் இடித்துத் தகர்த்து, அவ்வீரர்களின் எலும்புகளைக் குப்பையில் வீசிவிட்டு, கோர வெறியாட்டம் நடத்திக் கொண்டு இருக்கின்ற இலங்கை அதிபர், தமிழ்க்குலத்தின் ஜென்மப் பகைவன் மட்டும் அல்ல; மனிதநேயம் உள்ள மனிதகுலத்தின் ஒட்டுமொத்த எதிரி ஆவான்.


எண்ணற்ற தமிழ்ப்பெண்கள், பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதும், தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கி, கைகள், கண்களைக் கட்டி, சிங்களச் சிப்பாய்கள் சுட்டுக் கொன்றதும், நினைக்கும்போதே நம் நெஞ்சில் கண்ணீரையும், ரத்தத்தையும் கொட்டச் செய்கிறது.


இத்தனைப் படுகொலைகளையும் செய்வதற்கு, முழுக்க முழுக்க இந்திய அரசு ஆயுதங்கள், ரடார்கள், ஆயிரம் கோடிப் பணமும் அள்ளிக்கொடுத்து, சிங்கள இனவெறி அரசு நடத்திய யுத்தத்தை, உடன் இருந்து இயக்கியது. அதனால்தான், உலக நாடுகள் போர்நிறுத்தம் கேட்டபோதும், இந்திய அரசு ஒப்புக்குக் கூடப் போரை நிறுத்தச் சொல்லவில்லை.


இந்தியாவின் ஆயுத உதவியால்தான், போரை நடத்தி நாங்கள் வெற்றி பெற்றோம் என்று, அதிபர் ராஜபக்சேயும், அவன் சகோதரர்களும் பகிரங்கமாகவே கூறி விட்டனர்.


வேதனையால் வெந்து போன தமிழர் இதயத்தில், சூட்டுக்கோலை நுழைக்கும் வகையில், மகிந்த ராஜபக்சேவுக்கு, இந்திய அரசு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறது.


ஜூன் 8 ஆம் தேதி, இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேச, அதிபர் ராஜபக்சே, தலைநகர் டெல்லிக்கு வரப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழர்களின் இரத்தம் தோய்ந்த கரங்களோடு வருகின்ற கொடியவன் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும், வரவேற்பு அளிக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கவும், ஜூன் 8 ஆம் தேதி, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்துக்கு எதிரே, காலை பத்து மணி அளவில், கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெ றும் எனவும், அதே நாளில், மாவட்டத் தலைநகரங்களில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அறிவித்து இருக்கிறோம்.


இந்த ஆர்ப்பாட்டங்களில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்றும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் பங்கு ஏற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

‘தாயகம்’                                                        வைகோ
சென்னை-8                                                     பொதுச்செயலாளர்
04.06.2010                                                        மறுமலர்ச்சி தி.மு.க.

Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)