பெட்ரோல் டீசல் விலை உயர்வால் விலைவாசி மேலும் உயரும் - வைகோ கண்டனம்
விவகாரங்கள்: பொருளாதாரம், திறன், விவசாயம், வறுமை
மாவட்டம்: தமிழ்நாடு, பிற மாநிலங்கள்
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
பெட்ரோல் டீசல் விலை உயர்வால்
விலைவாசி மேலும் உயரும்
வைகோ கண்டனம்
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையை காரணம் காட்டி டகந்த ஆண்டு ஜூலை மாதம் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3.50, டீசல் விலை ரூ 2, மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூபாய் 3, சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ 35 என்று காங்கிரஸ் கூட்டணி அரசு உயர்த்தி இருக்கிறது. 2004 இல் காங்கிரÞ கூட்டணி அரசு மன்மோகன் சிங் தலைமையில் பதவியேற்றதில் இருந்து தொடர்ந்து பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்த்துவதை வாடிக்கையாக்கி விட்டது.
ஒவ்வொருமுறையும் கச்சா எண்ணெய் விலை உயர்வைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. ஏனெனில், 2008 ஜூன் மாதம் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 147 டாலர் என்ற அளவு உயர்ந்தபோது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5 ம், டீசல் விலை ரூ 3 ம் மத்திய அரசால் உயர்த்தப்பட்டது. அதன்பின்னர், 2008 டிசம்பர் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை 41 டாலர் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. ஆனால், அப்போது பெட்ரோல் டீசல் விலையை முழுமையாக குறைப்பதற்கு முன்வராமல் மத்திய அரசு கண்துடைப்பு நாடகம் ஆடியது.
தற்போது கச்சா எண்ணெய் விலை 85 டாலர் அளவில் இருந்தபோதிலும், 2010 - 11 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுகட்டவே பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நாட்டின் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கமாக 10.16 சதவிகிதமாகவும் உணவுப் பணவீக்கம் 16.49 சதவிகிதமாகவும் உயர்ந்து இருக்கிறது. தற்போது மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளதால் விலைவாசி தாறுமாறாக உயர்ந்து அனைத்துத் தரப்பு மக்களையும் வெகுவாக பாதிக்கும். மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு நடுத்தர ஏழை மக்களுக்கு தாங்கமுடியாத பெரும் சுமையாகும்.
ஆகவே, விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

