திராவிட இயக்கத்தின் வைரமணித்தூண் சாய்ந்தது மங்கா மணிவிளக்கு அணைந்தது இரா. செழியன் மறைவுக்கு வைகோ இரங்கல்

விவகாரங்கள்: மனித உரிமை, சட்ட ஒழுங்கு, அரசியல்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Tue, 06/06/2017

 

 

 

 


திராவிட இயக்கத்தின் வைரமணித்தூண் சாய்ந்தது
மங்கா மணிவிளக்கு அணைந்தது
இரா. செழியன் மறைவுக்கு வைகோ இரங்கல்

 

பேரறிஞர் அண்ணா அவர்களின் முழு நம்பிக்கையைப் பெற்று, அவரது மனச்சாட்சியாக உலவிய அண்ணன் இரா. செழியன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டுத் தாங்க முடியாத அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

நடமாடும் பல்கலைக்கழகமான டாக்டர் நாவலர் அவர்களின் உடன்பிறந்த சகோதரரான அண்ணன் இரா. செழியன் அவர்கள், உன்னதமான இலட்சியவாதியாகத் திராவிட இயக்கத்தில் வளர்ந்தவர்; 62 முதல் 77 வரை நாடாளுமன்ற மக்கள் அவையிலும், 78 முதல் 84 வரை மாநிலங்கள் அவையிலும் மொத்தம் இருபது ஆண்டுகள் பொறுப்பு வகித்த காலத்தில், தமிழக உரிமைகளைக் காப்பதிலும், பேரறிஞர் அண்ணா அவர்களின் இலட்சியங்களை எடுத்து உரைப்பதிலும், நாடாளுமன்றத்தில் அனைவர் கவனத்தையும் கவர்ந்தார். அவர் விடுத்த கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல், மத்திய அமைச்சர்கள் திணறினார்கள் என்று ஏடுகள் பலமுறை பாராட்டி உள்ளன.

நாடாளுமன்ற விதிகள், மரபுகள் குறித்து அவருக்கு ஈடான மேதைகள் இல்லைஎன்று நாடாளுமன்றத்தின் புகழ்மிக்க தலைவர்களால் பாராட்டப் பெற்றார்; இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களின் அன்பையும் பெற்றவர்; லோகநாயகர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் உள்ளம் கவர்ந்தவர் ஆவார்.

தனிமனித ஒழுக்கம், மிக அமைதியான அணுகுமுறை, எழுத்திலும் பேச்சிலும், கூரிய சிந்தனைகளை வடிப்பதில் வல்லமை, எவரிடத்திலும் பகைமை பாராட்டாமல் பரிவு காட்டும் பண்பு, அவரைக் குன்றின் மேல் இட்ட விளக்காக உயர்த்தின. பேரறிஞர் அண்ணா அவர்களின் அயல்நாட்டுப் பயணங்களில் பங்கேற்றதுடன், அமெரிக்க மருத்துவமனையில் அண்ணா சிகிச்சை பெற்றபோது உடன் இருந்து கவனித்துக் கொண்டவர் அண்ணன் செழியன் ஆவார்கள்.

என்னுடைய அழைப்பை ஏற்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய மாநாடுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் பங்கேற்று, பேரறிஞர் அண்ணாவின் இலட்சியங்களை முழங்கினார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரபூர்வ வார ஏடாகிய சங்கொலியின் முதல் இதழ் தொடங்கி எத்தனையோ அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். அந்த அறிவுச் சுரங்கத்தை வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் வேந்தர் விஸ்வநாதன் மிகச்சிறப்பாகப் பயன்படுத்தினார்கள்.

அண்ணா நகரில் என் வீட்டுக்கு அடுத்த தெருவில் வசித்த அண்ணன் செழியன் அவர்களை அடிக்கடி சந்தித்து மணிக்கணக்கில் உரையாடிப் பயன் பெற்றேன். தனிப்பட்ட முறையில் என் மீது எல்லையற்ற வாஞ்சையும், பாசமும் கொண்டு இருந்தார்கள். அவரது மறைவு எனக்கு மட்டும் அல்லாது திராவிட இயக்கத்திற்கே பேரிழப்பு.

அண்ணன் செழியன் அவர்களை இழந்து கண்ணீரில் தவிக்கும் உற்றார் உறவினர்கள், அவர் மீது பற்றுக் கொண்ட பெருந்தகையாளர்கள் அனைவருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

தாயகம்                                        வைகோ
சென்னை -
8                               பொதுச்செயலாளர்
06.06.2017                                மறுமலர்ச்சி தி.மு.க.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)