பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா மதுரை மண்டல மாநாட்டில் வைகோ .15.09.2008
விவகாரங்கள்: மனித உரிமை, இலக்கியம், தேசிய, இலங்கைத் தமிழர்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: என்றும் இனியவை, சொற்பொழிவுகள்
அண்ணாவின் புகழை நிலைநிறுத்துவோம்!
திராவிட இயக்கக் கொள்கைகளைக் காப்போம்!
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா
மதுரை மண்டல மாநாட்டில் வைகோ 15.09.2008
கல்வியில் கரை இல்லாக் காஞ்சி மாநகரில், இன்றைக்குச் சரியாக 99 ஆண்டுகளுக்கு முன்னால் இதேநாளில், செப்டம்பர் 15 இல் கண்மலர்ந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், தனது 60 வயதைத் தொடங்கி ஐந்து திங்கள் முடியும் முன்பே இந்த மண்ணைவிட்டு மறைந்து விட்டார். அவர் மறைந்து 476 பிறைகள் கடந்துவிட்டன; அண்ணா மறைந்து 14,770 பகல்கள் ஓடி மறைந்து விட்டன; காஞ்சித் தலைவன் நம்மை விட்டுப் பிரிந்து 14,770 இரவுகள் கரைந்துவிட்டன; அண்ணாவுக்கு மரணம் இல்லை - அண்ணாவின் எண்ணத்துக்கு மரணம் இல்லை; அவர் எங்கள் இதயங்களில் வாழுகிறார்.
எதிர்காலத் தலைமுறை அவரையே பின்பற்றி வாருங்கள் தமிழர்களே என்று முன்னெடுத்துச்செல்கின்ற பணியைச் செய்வதற்காக, அண்ணன் பிறந்த நாளில் நூற்றாண்டின் தொடக்க விழாவை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்த மதுரை மாநகரில் நடத்திக் கொண்டு இருக்கிறது. நடைபெறுகிற இடம் மாட்டுத் தாவணித் திடல். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிவருகிற காளைகளின் திமில்மீது பாய்ந்து தோளால் அணைக்கத் துடிக்கின்ற காளையர் கூட்டத்தைப்போல, அடக்கு முறைக்கும் ஆபத்துக்கும் அஞ்சாது, எந்த எதிர்ப்பையும் தகர்க்கின்ற ஆற்றலாளர்களின் பட்டாளமான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வீரர் கூட்டத்தின் அணிவகுப்பை, இந்த மாட்டுத்தாவணித் திடலில் தமிழகம் இன்றைக்குப் பார்க்கிறது.
இம்மதுரை மாநகரில் மாநாட்டை நடத்துகின்றபோது எங்கள் இதயம் எல்லாம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது. எப்படி நன்றி உரைப்பேன்? என்று அழகுசுந்தரம் சொன்னார். எவ்விதம் எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவேன் என்று பலரும் பேசினார்கள். நானும் அதேநிலையில்தான் நிற்கிறேன். என் இருதயத்தின் எல்லா அறைகளிலும் குதூகலம். என் வாழ்க்கையின் வசந்தமான நாள்களுள் இதுவும் ஒரு நாள். நான் எதை எண்ணினேனோ அதைச் செய்து முடித்து இருக்கின்ற வீரசேனாதிபதிகளை இந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பெற்று இருப்பதைப் பார்த்து, உள்ளம் எல்லாம் ஆனந்த அலைகள் துள்ளிக்குதிக்க உங்கள் முன்னால் நான் நின்றுகொண்டு இருக்கிறேன்.
இந்த மாநாட்டுக்காக அரும்பாடுபட்ட தியாகவேங்கைகள் புதூர் பூமிநாதனுக்கும், வீர.இளவரசனுக்கும் இந்த மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டச் செயலாளர்கள் அனைவருக்கும் வீர உணர்ச்சியோடு நன்றி சொன்னாரே, இந்த மண்ணுக்கே உரிய வீரத்தோடு முழங்கினாரே என் அருமைச் சகோதரர் சின்ன செல்லம் உள்ளிட்ட இந்த மாநாட்டின் வெற்றிக்குப் பாடுபட்ட அத்தனைத் தோழர்களுக்கும் என் உளம் நிறைந்த நன்றியை அவர்கள் காலடியில் வைக்கிறேன்.
2000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே, ஏன் - எதனால் - எப்படி - என்று கேளுங்கள் என்று சாக்ரடீஸ் பேசுவதற்கு முன்னாலேயே,
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
என்று வள்ளுவப் பெருந்தகை வகுத்த வரிகளுக்கு இலக்கணமாக, கூறுகிறவன் எவனாக இருந்தால் என்ன? சொல்பவன் வேந்தனாக இருந்தால் என்ன? திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளாக இருந்தால் என்ன? அண்டசராசரங்களை ஆட்டுவிக்கின்றவனாகவே இருந்தால்தான் என்ன?
குற்றம் என்றால் குற்றம்தான்; இவன் சொன்னான் அவன் சொன்னான் என்று ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்ற பகுத்தறிவுச் சுடரை ஏந்திவந்த புலவன் நக்கீரன் உலவிய மதுரையில் நாங்கள் மாநாடு நடத்துகிறோம்.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ?
பயிலியது கெளீஇய நட்பின் மயிலியல் செறிஎயிற்று
அரிவை கூந்தலின் நறியவும் உளவோ
நீ அறியும் பூவோ?
‘இந்தப் பாட்டை எழுதியவன் முக்கண் முதல்வோன்’ என்றனர்.
ஆனால், இந்தப் பாட்டில் பொருட் குற்றம் இருக்கிறது. ஏற்க இயலாது. மங்கையின் கூந்தலில் இயற்கை மணம் கிடையாது. அது மலர்களாலும் வாசனாதி திரவியங்களினாலும் வருகின்ற மணம்தான். உமையவளாகவே இருந்தாலும் அதுதான் என்று கூறியது மட்டும் அல்ல, இதைச் சொன்னதால், உனது நெற்றிக்கண் எரிமலையாகத் திறந்து என்னைப் பொசுக்கினாலும் அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டேன் என்று சொன்ன நக்கீரன் உலவிய மதுரையில் நாங்கள் நிற்கிறோம்.
இந்த மாநாடு இரண்டு நோக்கங்களுக்காக!
ஒன்று: அடுத்த ஐந்தாறு திங்களுக்கு உள்ளாக, தமிழகத்து வாக்காளப் பெருமக்கள் சந்திக்க இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒருவேளை, தடுமாறிக் கொண்டு இருக்கின்ற கருணாநிதி அரசு கவிழ்ந்து, சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்தே வருமானால், எப்பொழுது தேர்தல் வந்தாலும் சரி, வேரோடும் வேரடி மண்ணோடும் அந்தக் கூட்டத்தை வீழ்த்துவதற்கு, தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் வாகை சூடுவதற்கு, புதுவையிலும் வெற்றிக்கொடி நாட்டுவதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தோள்சேர்ந்து இருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், அந்தக் களத்துக்கு ஆயத்தப்படுத்துகின்ற கடமையைச் செய்ய மக்கள் சக்தியைத் திரட்ட இந்த மாநாடு.
அதுமட்டும் அல்ல, எங்கள் நோக்கம்!அது ஒரு இடைக்காலப்பணி. அவ்வளவுதான். எங்கள் நோக்கம், நீண்ட தொலைதூரத்தைக் கடந்தது. 1949 இல் தொடங்கப்பட்ட இயக்கத்தின் அடுத்த கட்டம் நாங்கள். எங்கள் இயக்கம் தொடங்கப்பட்டது 1993 இல் அல்ல. சென்னையிலும் சொன்னேன். எங்கள் இயக்கம் 1949 இல் தொடங்கிய இயக்கத்தின் அடுத்த பரிணாமம். ‘Another dimension.’ இன்னும் 50 ஆண்டுகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பணி இருக்கிறது என்றாரே விருகம்பாக்கத்தில் அண்ணா.
இங்கே உரையாற்றிய கழகப் பொருளாளர் டாக்டர் மாசிலாமணியும், சம்பத்தும் சுட்டிக்காட்டியதைப் போல, ‘ஏ தாழ்ந்த தமிழ்நாடே?’ என்று முழங்கினாரே, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முழங்கினாரே, அதைப்போல, கேடுகெட்ட நிலைமை வந்து இருக்கின்ற காரணத்தினால், அண்ணா அன்று சொன்ன கடமையை நிறைவேற்ற, எங்களை ஒப்படைத்துக் கொள்ளச் சூளுரைக்க இந்த மாநாட்டைக் கூட்டி இருக்கிறோம்.
அண்ணாவின் புகழ் பரப்புகின்ற மாநாட்டில், தன்மான உணர்வோடு இந்த இயக்கத்தை நடத்துகின்ற நேரத்தில், ஒரு பெரும் களத்துக்குச் செல்ல நாங்கள் ஆயத்தமாகிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், அது ஆயுதம் ஏந்துகின்ற களம் அல்ல. ஆயுதத்துக்கு நாங்கள் அஞ்சுகின்றவர்களும் அல்ல. ஆனால், அண்ணா தந்த அறிவு ஆயுதத்தைத்தான் ஏந்தப் போகிறோம். தாய்மார்களே, வீரமிக்க மறக்குலத்து மாதரசிகளே, தமிழ்ப் பண்பாட்டைக் காத்து வந்த என் அன்னையரே, எங்களுக்கு ஆசி வழங்குங்கள். நாங்கள் ஒரு பெரிய போர்க்களத்துக்குப் போகப்போகிறோம். தமிழகத்தில் அண்ணாவை நிலைநாட்டுவதற்கான அந்தப் போரில் நாங்கள் வெல்ல வேண்டும் என்று ஆசி வழங்குங்கள்.
சூளுரைப்பதற்குத்தான் நாங்கள் வந்து இருக்கிறோம். சூளுரைப்பது என்றால் உதட்டளவில் மட்டுமல்ல. எங்கள் நெஞ்சின் ஆழத்தில் இருக்கின்ற உணர்வின் அடிப்படையில், இலட்சக்கணக்கான வர்கள் இங்கே திரண்டு இருக்கிறார்கள். சமீபகாலத்தில் இப்படி மதுரை சந்தித்து இருக்கமுடியாது இந்தக் கூட்டத்தை. இலட்சோப இலட்சம் பேர் திடல் நிறைந்து மைதானம் நிறைந்து சாலைகள் நிறைந்து நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் இலட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டு இருக்கக்கூடிய இந்த நேரத்தில் சூளுரைப்பதற்குத்தான் நான் வந்தேன்.
எந்த இடம்? வீரப் போர்க்களங்களைச் சந்தித்த இடம். சின்னஞ்சிறிய வயதில் இருந்து என் இயல்பு. மயிர்க்கூச்செறியும் போர்க்களக் காட்சிகள் நிறைந்த காவியங்களைப் படிக்கின்ற போது அதிலே நான் லயித்துப்போய் விடுவேன். அந்த உணர்வுகளால்தான் அண்ணாவின் கொள்கையில், எண்ணத்தில் ஈர்க்கப்பட்டு அந்தப் பாசறையில் ஒரு மாணவனாகப் போய்ச்சேர்ந்தேன். அப்படிப்பட்ட வீரம் நிறைந்த காட்சியை நினைப்பது இந்தத் தமிழகத்தில் பாண்டிய மண்டலத்தில் மதுரை மூதூரின் மண்ணைவிட இன்னொரு வீரம் செறிந்த மண் இருப்பதாக நான் சொல்லவில்லை. புலவர்கள் சொன்னார்கள். இது புலவர்களின் கருத்து.
சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் சொன்னாரே, தனக்கென்று எதையும் நாடாமல், அண்ணன் சென்ற வழியிலேயே தன் மனைவியை அரண்மனையில் விட்டுவிட்டு, அண்ணனும், அண்ணன் மனைவியும் தூங்குகிறபோது, கண் இமைக்கும் நேரத்தில்கூடப் பகைவர்கள் வந்து விடுவார்கள் என்று கருதி, கண் இமைக்காமல் வில் தூக்கிநின்ற இளையவனைப்பற்றிச் சொன்னாரே, அந்த இளையவன், வீரம் நிறைந்த இலக்குமணன் அவனே சொன்னான்:
‘என்னை எதிர்த்து களத்தில் நிற்கின்ற இவனைப்போன்ற ஒரு வீரனை இதுவரை நான் பார்த்தது இல்லை, அவன் மேனியெங்கும் நான் தொடுத்த அம்புகளால் இரத்தம் கொட்டிக் கொண்டு இருக்கிறது; ஆயினும், அந்த அம்புகளையே பிடுங்கி சரம்சரமாக என்மீது தொடுக்கிறான். இவனைப் போன்ற ஒரு வீரன் இதுவரை இந்த உலகில் பிறக்கவில்லை’
என்று அந்த இலக்குமணன் வர்ணித்ததாக கம்பன் சொன்ன இந்திரஜித்தன், அவனைத்தான் சின்னஞ்சிறு வயது பிராயத்தை மண்டோதரி கண்ணீர்விட்டுக் கதறிக் கொண்டு சொன்னாள்:
‘மகனே நீ சின்னஞ்சிறு பிள்ளையாக இருந்தபோது. நிலாமுற்றத்தில் நீ விளையாடுவதற்காக. இரண்டு சிங்கங்களைப் பிடித்துக் கொண்டுவந்து, அந்தச் சிங்கங்களுக்குக் கோபத்தை மூட்டி, அவைகளை மோதவிட்டு விளையாட்டுக் காட்டினாயே என் வீரமகனே’
என்று மண்டோதரி சொல்வாள். அது கம்பனின் காவியம். அது ஒரு இதிகாசம். இதிகாசம் என்றாலும் அந்த வரிகளைப் படிக்கிறபோது ஒரு நெகிழ்ச்சி. நான் சொல்லப் போவது காவியம் அல்ல. இதிகாசம் அல்ல. இங்கே நடந்த நிகழ்ச்சி.
சேர மன்னனும் - சோழ மன்னனும் - ஐந்து குறுநில மன்னர்களும் படையெடுத்து வருகிறபோது, பாண்டிய நாட்டின் அரச பொறுப்புக்கு அப்போது வந்து இருந்தவன் ஒரு சிறுவன். தேர்த்தட்டில் படைக்களத்துக்கு வருகிறான். சதுரங்கச் சேனைகளுக்கு முன்னால் வருகிறான். படையெடுத்து வருகிறவன் அவனோ, இவனோ அல்ல. யானைக்கட்செய் மாந்தறன் சேரல் இரும்பொறை எனும் சேர நாட்டு வேந்தன், இன்னொருவன் புலிக்கொடி பறக்கின்ற சோழ நாட்டு வேந்தன் கிள்ளி வளவன் எனும் சோழமன்னன். அவர்களோடு வருகிறவர்கள் யார்? திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மாள், பொருநன் என்கின்ற ஐந்து குறுநில மன்னர்கள். இந்த ஏழுபேரும் வருகிறார்கள். இவனோ சிறுவன். இடைக்குன்றூர்க்கிழார் வருகிறார். அவர் பார்க்கிறார்.
சேரல் செம்பியன் சினங்கெழு திதியன்
போர்வல் யானை பொலம்பூண் எழினி
நாரெறி நறவின் எருமையூரன், தேங்கமழ் அகலத்துப்
புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான்
இயல்தேர் பொருந நின் எழுவர்
இந்தப் பாலகனா? இவன் கால்களில் இருக்கின்ற கிண்கிணி கழற்றப்பட்டு இன்றைக்குத் தானே வீரக்கழல் அணிந்து இருக்கிறான். இவன் தலைக்குடும்பி சிரைக்கப்பட்டு இன்றைக்குத்தானே வேப்பம்பூ மாலையைத் தலையில் சூடி இருக்கிறான். அவன் கைகளில் இருந்த சிறுகுழந்தையின் வளையல்கள் கழற்றப்பட்டு, இன்றைக்குத்தானே வில் ஏந்தி நிற்கிறான். இன்றுதானே அவன் ஆவின் பால் உணவு மறந்து, இன்றைக்குத் தானே சோறு சாப்பிட்டான்.
நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன் யார் கொல்?
வாழ்க அவன் கண்ணி!
என்று சின்னஞ்சிறுவன் முன்னால் நிற்கிறான். இவனா போருக்குப் போகிறான்? அந்தத் தேர்த் தட்டிலில் நிற்கும் சிறுவன் சிறந்த கல்விமான். தமிழகத்திலே 31 மன்னர்கள் கவிதை எழுதி இருக்கிறார்கள். அந்த 31 மன்னர்களில் நான் குறிப்பிடும் சிறுவனும் ஒருவர். அவன் தான் சொன்னான்.
நகுதக் கனரே, நாடுமீக் கூறுநர்;
இளையவன் இவன் என உளையக் கூறிப்,
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும், தேரும், மாவும்,
படை அமை மறவரும், உடையம் யாம்’ என்று
உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்குஅகப் படேஎன் ஆயின் பொருந்திய
என்நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது
கொடியன் எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி,
மாங்கு மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே
இவர்கள் அத்தனைபெயரையும் நான் அவர்கள் அருஞ்சமம் சிதையத்தாக்கி ஒருங்ககப்படேன் ஆகில்,
கைப்பற்றி வெற்றிக் கொள்ளாவிட்டால், என் நாட்டுமக்கள் கொடியவன் கொடுங்கோலன் என்று என்னைத் தூற்றட்டும்; புலவர் பெருமக்கள் என்னைப் பாடாது இந்த நாட்டைவிட்டு வெளியேறட்டும்; என் உற்றார் உறவினர்களின் துன்பம் தீர்க்கின்ற வழங்குகின்ற கொடை கொடுக்கின்ற நான் வலி இல்லாமல் நான் வறுமையில் வாடட்டும் இது சபதம், இது சத்தியம் என்று சத்தியம் செய்து விட்டுப்போனார். யுத்தம் நடைபெற்றது தலையாலங்கானத்தில்.
மீண்டும் இடைக்குன்றூர்க்கிழார் சொன்னார். அலைஅலையாக வருகிறது படை. அப்படி வந்தவர்களை
வயின்வயின் உடன்று மேல்வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே
அவரை அழுந்தப் பற்றி, அகல்விசும்பு ஆர்ப்பு எழ
கவிழ்ந்த நிலஞ்சேர அட்டதை
மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே
ஆகாயத்தில் வீசி தரையில் கவிழ்ந்து வீழ்த்தி சொன்னதைச் செய்து முடித்தான். ஏழு மன்னர்களின் படைகளைச் சிதறடித்தான். இது கற்பனை அல்ல. சின்னமனூர்ச் செப்பு ஏடுகளில் இருக்கிறது. இதுவரை எந்த மன்னனையும் இவ்வளவு புலவர்கள் பாடியது இல்லை என்பேன். அகநாநூற்றில், புறநாநூற்றில், நற்றிணையும், கலித்தொகையும், சிறுபாணாற்றுப் படையும், ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில், மணிமேகலையில், இம்மன்னனைப் பற்றித்தான் பாடல் வருகிறது.
நம்மிடம் பெருமை இருக்கிறபோது, நாம் வேறெங்கும் தேடிச்செல்ல வேண்டியது இல்லை. இதை எல்லாம் நினைவூட்டித்தான் அண்ணா தமிழர்கள் இதயத்தில் உணர்ச்சியை உருவாக்கினார். அந்த மன்னன் அவன் எண்ணியதை எண்ணியாங்கு செய்து முடித்தான். தலையானங்கலத்தில் வென்றது மட்டும் அல்ல, அவர்கள் மூலபலம் எங்கே இருக்கிறது என்று தேடிச்சென்று, அவர்கள் நாட்டுக்கு உள்ளேயே சென்று சூறையாடிச் சின்னாபின்னமாக்கிவிட்டு வந்தான். இதெல்லாம் வரலாறு. அத்தனை இலக்கியங்களில் எழுதப்பட்ட ஒரேமன்னன், அவன்தான் பாண்டியன் நெடுஞ்செழியன். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
அவனுடைய படைகள் உலவிய இடத்தில் இருந்து நான் சொல்கிறேன். அவனது படையில் இருந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? தென்னவன் ஆபத்து உதவிகள். இந்தப் பாண்டிய நாட்டு வீரர்கள். மன்னன் உயிருக்கு ஆபத்து என்றால், அதைத்தடுக்க முடியாவிட்டால், அந்த நேரத்தில் எங்கள் தலையை வெட்டிக் கொண்டு நாங்கள் மடிவோம் என்று, உடைவாளால் உள்ளங்கையைக் கீறி, தெறிக்கின்ற இரத்தத்துளிகளில் துர்க்கைக் கோவிலுக்குச் சென்று, காளி சிலைக்கு முன்னால் நின்று, அந்த இரத்தத்தில் சபதம் செய்தவர்கள்தான் பாண்டிய நாட்டுதென்னவன் ஆபத்து உதவிகள்.
மணிமுத்தாறில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மணலுக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்ட சிலை ஆபத்து உதவி ஒருவன் தலையை வெட்டுவதைப்போல ஒரு சிலை எடுக்கப்பட்டு இருக்கிறது. அப்படிப்பட்ட வீரம் விளைந்த மண்ணில் நாங்கள் இந்த மாநாட்டை இன்றைக்குக் கூட்டியிருக்கிறோம். திரண்டு இருக்கின்ற தோழர்கள் யார்? படங்கள் திறந்து வைக்கப்பட்டு இருக்கின்றன. ஐவரின் படங்கள். மன்னன் உயிருக்கு ஆபத்து என்றால் தலையை வெட்டிக் கொண்டு மடிந்தவர்களைப்போல நெருப்பில் உயிர்களைப் பலியிட்ட தியாக வீரர்கள் அந்த ஐவர்.
இங்கே அண்ணாவின் இயக்கத்தில் அடிமட்டத் தொண்டன் ஒருவனுக்குக் கேடு விளைந்தது என்பதற்காகத் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்டார்கள் ஆபத்து உதவிகள். அந்த ஐவரின் படங்களை நாங்கள் இங்கே திறந்து வைத்து இருக்கிறோம். அவர்களது தியாகத் தணலில், அவர்களது சிதை நெருப்பில் உருவாக்கப்பட்ட கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். இந்தச் சாதாரண ஊழியனுக்காக அவர்கள் தீக்குளித்தார்கள். நான் துடித்தேன். அன்று மட்டும் அல்ல, இன்றுவரை சொல்கிறேன். என் சகாக்கள் முகங்களில் வாட்டம் என்றால் என்னால் தாங்க முடியாது. என் சகோதரர்கள் வீட்டில் துக்கம் என்றால் என்னால் தாங்க முடியாது. அவர்களால்தான் நான். கண் விழிக்காத கரிசல் மண்ணில் ஒரு கடைகோடிக் கிராமத்தில், விவசாயி வீட்டுப்பிள்ளையாக வந்து, அண்ணாவின் இயக்கத்தில் சேர்ந்து, இன்றைக்கு இலட்சக்கணக்கானவர்கள் மத்தியில் நான் உரையாற்றக்கூடிய தகுதியை உருவாக்கிக் கொடுத்தவர்கள் இதோ இங்கே இருக்கிறார்களே, இந்தத் தளகர்த்தர்கள் எதிரில் இருக்கும் தொண்டர்கள்.
உடனிருக்கும் சகோதரர்கள், எதிரே இருக்கும் தோழர்கள். உங்களுக்கு ஒரு சிறு துன்பம் என்றாலும் நான் தாங்கிக்கொள்ளமாட்டேன். வருகின்ற துன்பங்கள் எனக்கு வரட்டும். உங்களை மலர்ப்படுக்கையில் நடக்க வைக்கத்தான் வைகோ விரும்புவானே தவிர, முட்கள் நிறைந்த பாதையில் போவதற்கு என்றைக்கும் சித்தமாக இருக்கக்கூடியவன் நான்.
இது மதுரை அல்லவா? பரஞ்சோதி முனிவர் சொன்ன திருவிளையாடற்புராணம் நிகழ்ந்த இடம் மதுரை அல்லவா? வைகையில் மண் எடுத்துப்போட வந்திக் கிழவிக்குஆள் இல்லை என்று அவள் கவலைப்பட்டபோது ஓடிவந்தான் சோமசுந்தரப் பெருமான். ‘என்ன கூலி கொடுப்பாய்?’ என்றதற்கு, ‘எதுவுமே இல்லையப்பா;புட்டு தருகிறேன்’ என்று சொன்னவுடன், அந்தப் புட்டை வாங்கித் தின்றுவிட்டு மண்ணையும் எடுத்துப் போடாமல், உடைப்பையும் அடைக்காமல் ஓடுவதும் குதிப்பதும் தண்ணீரில் குதிப்பதும் வைகையில் விளையாடுவதும் பிறகு படுத்துத் தூங்குவதும் இப்படித் திருவிளையாடல் நடத்துகின்ற செய்தியைச் சேவகன் சொல்ல, ஆத்திரப்பட்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன், அந்தச் சிறுவன்மீது பிரம்பால் அடிக்க, அந்த அடி அமைச்சர்களின் முதுகில், பட்டத்து அரசியின் முதுகில், அரசிளங்குமாரர்கள் முதுகில், படைவீரர்கள் முதுகில், பணியாளர்கள் முதுகில், யானையின் முதுகில், குதிரைகள் முதுகில், பறவைகள் முதுகில், மரங்களின் முதுகில், கர்ப்பத்தில் இருக்கின்ற கருவின் முதுகில், வரையப்பட்ட சித்திரத்தின் முதுகில், ஏன் பிரம்பு எடுத்து அடித்த அரிமர்த்தன பாண்டியன் முதுகிலும் விழுந்தது என்று புராணத்தில் எழுதி இருக்கிறது. அது புராணம். புராணத்தில் அவன் இறைவன்.
நான் இந்தத் தாய்த் தமிழகத்தில் உங்களோடு சேர்ந்து உங்களைப்போல் உழைக்கின்ற சாதாரண வேலைக்காரன். ஒரு ஊழியன்.இந்த இயக்கத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தொண்டனுடைய சிறு துயரத்தையும், அவர்கள் கண்களில் கண்ணீர் இருந்தால் என் நெஞ்சில் குருதி;இந்த உலகத்தின் கடைக்கோடியில் இருக்கின்ற ஒரு தமிழனுக்கு துன்பம் என்றால் அதைத் தடுப்பதற்கு ஆவியையும் தரவேண்டும் என்ற உணர்ச்சி. இப்படித்தான் நாங்கள் இயக்கத்தை உருவாக்கி வந்து இருக்கிறோம்.
அண்ணாவின் புகழை அழிக்கத் துடிக்கும் கருணாநிதி!
இந்த மாநாட்டின் வாயிலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிற இந்நாள் முதல் அமைச்சரைக் கேட்கிறேன். முதல் அமைச்சர் அவர்களே, பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை நீங்கள் ஏன் விழாவாகக் கொண்டாடவில்லை? ஐநூறு பேரை அழைத்து, கவியரங்கத்தை ஏற்பாடு செய்து, அதிலே உங்களைப்பற்றி பத்துப்பேர் பல்லாண்டு பாட, போனால் போகட்டும் என்று அண்ணாவையும் அதில் சேர்த்துக் கொள்ள, அதுவும்கூட மண்டல மாநாடே நடத்துகிறானே பாவிப்பயல் சகாக்களின் துணையோடு, அண்ணா நூற்றாண்டு விழா என்றல்லவா சொல்கிறான் என்று எரிச்சல் கொண்டு ஐநூறுபேரை அரங்கத்துக்கு உள்ளே வைத்து கவியரங்கம் நடத்துகின்ற கருணாநிதி அவர்களைக் கேட்கிறேன்.
அண்ணாவின் நூற்றாண்டு விழாவை ஒப்புக்கு முப்பெரும் விழாவாக இந்த மாதம் 21 ஆம் தேதி திருச்சியில்நடத்துவதாக அறிவித்து இருக்கிறீர்கள் அல்லவா? நான் கேட்கிறேன். அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15 தான். செப் 21 அல்ல. பிறந்த நாள் அன்றுதானே விழா நடத்த வேண்டும்.
ஜீசஸ் பிறந்த நாளை வேறு தேதியில் நடத்துகிறோம் என்றால், எந்தக் கிறித்தவன் ஏற்றுக் கொள்வான்? பிறை தெரிந்தால் ரமலான். மீண்டும் பிறை தெரிந்தால் நோன்பு முடிவு. எந்த இஸ்லாமியன் இதை மாற்ற ஏற்றுக்கொள்வான்? லெனின் நூற்றாண்டு விழா தேதியை மாற்றுவானா கம்யூனிஸ்ட் தோழன்? மார்க்ஸின் பிறந்தநாளை வேறு தேதியில் கொண்டாடுவானா ஒரு பொதுவுடைமையாளன்? லிங்கனின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா அண்ணா பிறந்த ஆண்டில், 1909 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 இல். அமெரிக்காக்காரன் லிங்கன் பிறந்த நாளை வேறு தேதியில் கொண்டாடுவானா? விசாகத் திருவிழாவுக்கு முருக பக்தர்கள் வேறுதேதியில் திருப்பரங்குன்றத்துக்குப் போவார்களா?
செப்டம்பர் 21 இல் விழாவா? அண்ணா பிறந்த நாள் 15. ஞாபகம் இல்லை போலும். பாண்டிச்சேரி முதல் அமைச்சர் இன்று அரசு விடுமுறை என்று நேற்று பகலில் கோப்பில் கையெழுத்து இட்ட செய்தி கிடைத்த ஒரு மணி நேரம் கழித்து, வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இல்லாத முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதி விடுமுறை அறிவித்து இருக்கிறார். ஏன் ஒரு வாரத்துக்கு முன்னால் அறிவிக்கக்கூடாதா? அண்ணா பிறந்தது செப்டம்பர் 15 என்று நேற்று பகல் 12 மணிக்குத்தான் திருவாளருக்குத் தெரியுமா? முன்னரே தெரியாதா?
நான் ஒவ்வொரு பிறந்த நாளையும் கேட்கவில்லை. நூற்றாண்டு விழா என்பது நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான்வரும். அடப்பாவி!உன் கையில் கட்சியை ஆட்சியைக் கொடுத்ததன் விளைவு, அண்ணா நூற்றாண்டு விழாத் தொடக்கத்தை, ஒரு காங்கிரஸ் முதல்வர் அறிவித்தபிறகுதான் அறிவிக்கிற அவலமா? அதுவும் ஊரை ஏமாற்றுவதற்கா? நான் இன்னும் கேட்கிறேன். உங்கள் பிறந்த நாளை, ஜூன் 3 ஆம் தேதியை மாற்றி ஜூன் 12 ஆம் தேதி நடத்தலாமே? 18, 19 இல் வசதியாக நடத்தலாமே? எந்த ஆண்டிலாவது உங்களுக்கு விழா எடுக்காமல் இருந்திருக்கிறீர்களா?
சொரணை கெட்ட பிறவிகள் சிலபேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். சோற்றால் அடித்த பிண்டங்கள். இவர் சொல்லுவாராம், இந்த வருடம் பிறந்த நாள் விழா வேண்டாம் என்பாராம்;ஆர்க்காடுவீராசாமி உடனே அறிக்கை விடுவாராம்; அதன்பிறகு அன்பழகனார் இன்னொரு அறிக்கை விடுவாராம். ‘ஆஹா உடன்பிறப்பே எல்லோரும் சேர்ந்து கொண்டாடியே தீர வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். இந்தச் சுமையையும் ஏற்றுக்கொண்டே, என் பிறந்தநாளில் உங்களைச் சந்திக்கிறேன் என்று அறிக்கை விடுவாராம்.
நான் இன்னும் கேட்கிறேன். நீங்கள் முதல்வராக ஐந்து முறை பொறுப்பு வகித்தீர்களே, எந்த ஒரு அண்ணா விழாவையாவது இந்தியத் தலைவர்களை அழைத்து வந்து நடத்தியது உண்டா? நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவதற்கு மன்மோகன் சிங் இருக்கிறார்; அழைத்தால் வருவதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவி இருக்கிறார்; அழைத்தால் வருவதற்கு ஐந்தாறு மாநில முதல்வர்கள் இருக்கிறார்கள்; ஆள், அம்பு அத்தனை அதிகாரம் எல்லாம் உங்களிடம் இருக்கிறது. அதிகாரம் உங்கள் கையில். என்றாவது ஒரு நாள், அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15 ஐ அகில இந்தியத் தலைவர்களை அழைத்து நடத்தியது உண்டா? உங்கள் பிறந்த நாளைக்கு இந்நாள் பிரதமர், முந்நாள் பிரதமர் என எல்லாப் பிரதமர்களும் வந்து உங்கள் பிறந்தநாளை ஜூன் 3 ஆம் தேதி எத்தனை முறை நடத்திÜர்கள்?
திராவிட இயக்கத் தோழர்களே, தொலைவில் இருந்து என் பேச்சைக் கேட்டுக் கொண்டு இருக்கின்ற உண்மையான திராவிட முன்னேற்றக் கழகத்தின் பழைய தொண்டர்களே உங்களைக் கேட்கிறேன். கமிஷனுக்கு வந்தவனை - காண்டிராக்ட்டுக்கு வந்தவனை - கூலிப்படைக்கு வந்த கபோதிகள் கூட்டத்தை நான் கேட்கவில்லை, அண்ணாவின் தம்பிகளைக் கேட்கிறேன். என்றைக்காவது அண்ணா பிறந்த நாளை நடத்தியது உண்டா இவர்? இவருடைய விழாவுக்கு இத்தனைத் தலைவர்களை அழைக்கிறாரே, அண்ணாவின் நூற்றாண்டு விழா தொடக்க விழாவை இந்தியத் தலைவர்களை அழைத்துவந்து ஏன் நடத்தவில்லை?
மலர்மன்னனும், நடராசனும் சொன்னார்கள், திருச்சியில் தி.மு.க.வினர் நடத்தப் போகிறார்கள் செப்டம்பர் 15 இல் அண்ணா நூற்றாண்டு விழா என்று சொன்னதால், ஏட்டிக்குப் போட்டியாக அல்ல, அவர்கள் நடத்துவதற்கு எதிராக அல்ல, அவர்கள் திருச்சியில் நடத்துகிறார்களா? அப்படியானால் நாம் மதுரைக்குப் போய் விடுவோம் திருச்சியில் அவர்கள் நன்றாக நடத்திக் கொள்ளட்டும் என்றுதான் நாங்கள் மதுரையைத் தேர்ந்து எடுத்தோம். ஆனால், அவர்கள் நடத்தவில்லை.
என் அருமைச் சகோதரர்களே, திராவிட இயக்க வரலாறுகளைப் புரட்டிப்போடுவதில் கருணாநிதிக்கு நிகர் இன்னொருவர் கிடையாது. கேட்டால் சொல்வார். என்ன விளக்கம் சொல்வார்? மஞ்சள் ஆடையை ஏன் அணிகிறீர்கள்? என்றால், புத்தர் இதைத்தான் போதிமரத்துக்குக் கீழே அவர் ஞானம் பெற்றபோது அணிந்து இருந்தார் என்று சொல்கிறாரே என்ன துணிச்சல்? அந்த சித்தார்த்தனை எழுப்பி, நீங்கள் மஞ்சள் உடையில் இருந்தீர்களா? என கேட்க முடியாது என்ற துணிச்சலில் அளந்து விடுகிறார் - அள்ளி விடுகிறார்.
சில நாட்களுக்கு முன்னால் மதுரையில் இருந்து சொல்கிறார், ஒரு அணுகுண்டுப் பொய்யைத் தூக்கிப்போட்டார். பெரியார் இவர் வீட்டுக்கு வந்தாராம். அப்பொழுது இவருடைய மகன், இன்றைக்கு இந்த மதுரை மண்டலத்தையும் ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் நாசப்படுத்திக் கொண்டு இருக்கும் அந்த மகனை மடியிலே எடுத்துவைத்து பெரியார் கொஞ்சினாராம். ‘பெயர் என்ன?’ என்று கேட்டாராம். ‘அழகிரி’ என்று இவர் சொன்னாராம். ‘சபாக்ஷ்; முரட்டுப் பெயராகத்தான் நீ வைத்து இருக்கிறாய்’ என்றாராம். இது பித்தலாட்டம், மோசடி.
நாம் இந்த மாநாட்டை நடத்துவதே எதற்காகத் தெரியுமா? அண்ணாவை இருட்டடிப்புச் செய்கின்ற மோசடிகளை, அந்தத் திரைகளைக் கிழித்து எறிந்துவிட்டு இந்த வரலாற்றுப்புரட்டுகளை நாம் அம்பலப்படுத்தாமல்விடில், வருங்காலத் தலைமுறைக்கு உண்மை தெரியாமல்போய்விடும். துணிந்து சொல்வதற்குப் பலர் இல்லை. புழுங்கிக் கொண்டு இருக்கும் திராவிட இயக்கத் தோழர்கள் பலர் மனசாட்சியைப் புதைத்து விட்டார்கள்.
கலைஞர் கருணாநிதி இன்றைக்கு ஏன் இப்படிச் சொல்கிறார்? இனி வருங்கால உலகம் திராவிட இயக்க வரலாறைப் படிக்கிறபோது, அஞ்சா நெஞ்சன் அழகிரியைப் படிக்கிறபோது, அது இவருடைய மகன்தான் எனத் தெரியவேண்டும் என்பதற்காக, நாசகாரம் செய்துகொண்டு இருக்கின்ற, கோர விளையாட்டுகளை நடத்திக் கொண்டு இருக்கின்ற ஒரு கொடியவனைத்தான் நினைக்க வேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்கிறார்.
பொறுக்குமா இது? சகிக்குமா இது? இதோ பக்கத்தில் கூப்பிடுதொலைவில், காததூரத்தில் இருக்கின்ற வாவிடமருதூரில், தாய் கண்ணம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவர் அழகிரி. பட்டாளத்துக்குப் போய்விட்டு வந்த முரட்டு இளைஞன். பகுத்தறிவுச் சிங்கம்.
தந்தை பெரியாருக்கு விருதுநகரில் கொடும்பாவி கொளுத்தி விட்டார்கள் என்பதைக் கேள்வியுற்று, தஞ்சாவூரில் நோட்டீஸ் அடித்துக் கொண்டு, அங்கிருந்து விருதுநகருக்கு வந்து, ‘யாரடா அவன் பெருந்தோழர் ராமசாமி உருவபொம்மைக்கு தீ வைத்தவன்? என்று கர்ஜித்த அந்தச் சிங்கம் எங்கே!
பேசினாரே கணேசமூர்த்தி. 1948 இல் மாநாடு. அந்த மாநாட்டுக்கு பழையகோட்டைக் காளைகள் பூட்டப்பட்ட வண்டியில் அண்ணா வருகிறார். அதைப்பற்றி எழுதுகிறார். ‘‘என் மேனி சிலிர்க்கிறது அது ஒரு வசந்தகாலம். பழையகோட்டைக் காளைகள் பூட்டப்பட்ட வண்டியில் நான் அமர்ந்து இருக்க, ‘திராவிடத்தின் செங்கோல்’ என நினைக்கப்பட்ட தடியைக் கையில் வீசியவாறு, வெண்தாடி காற்றில் அசைய, வலதுபக்கத்திலும் இடது பக்கத்திலும் பார்வையைச் செலுத்தியவாறு பெரியார் முன்னால் நடக்க, அது என் வாழ்வில் ஓர் வசந்தத் திருநாள்’ என்று சொன்னாரே, 1948 இல் ஈரோட்டில் நடந்த அந்த மாநாட்டில், அழகிரிசாமியைப் பேச அழைத்துக் கொண்டு வந்தார்கள்.
நின்று பேசும்போது குதிகாலை உயர்த்தி இது மன்னை சொன்னது. அவர் பேச்சும் எடுத்து வைக்கின்ற லாகவமும் அனைவரையும் காந்தமென இழுக்கும் என்று செருப்பு மாலை கட்டியவன் செருப்பைக் கழற்றி விட்டு,இந்தி எதிர்ப்புப் படை நடத்தியபோது அழகிரிக்கு மலர்மாலை சூட்டிய வரலாறு படைத்த அந்த மாபெரும் சிங்கத்தை நடக்க முடியாமல் மேடைக்குக் கொண்டுவந்து நாற்காலியில் உட்கார வைத்தபோது, எழும்பும்தோலுமாக இருந்த பட்டுக்கோட்டைஅழகிரிசாமியைப் பார்த்து அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் அழுதார்கள்.
அப்பொழுதுசொன்னார்:
‘‘நான் நலிந்துவிட்டேன்-மெலிந்து விட்டேன்-நோயால் தளர்ந்து விட்டேன். நான் கலந்து கொள்கின்ற கடைசி மாநாடு இதுதான். உங்களை எல்லாம் கடைசியாக ஒருமுறை பார்த்து வணக்கம் சொல்லிவிட்டுப் போகவே நான் இப்போது வந்தேன்’ என்று அவர் பேசியபோது, மேடையில் இருந்தவர்கள் கண்ணீர் உகுத்தனர். திராவிடத் தோழர்களும் கண்ணீர்விட்டனர். இதற்குப்பிறகு பட்டுக் கோட்டைக்கு வந்த அவரது உடல் நலம் மிகவும் கெட்டது என அறிந்த அண்ணா அவர்கள், காலையில் கணேசமூர்த்தி சொன்னதைப்போல, மாநாட்டில் திரட்டிய நிதி, 600 ரூபாய். அன்றைய 600 ரூபாய், இன்றைய மதிப்பு 60,000 ரூபாய்.
அந்த 600 ரூபாயை கே.ஏ.மதியழகனிடம் கொடுத்து, நீ பட்டுக்கோட்டைக்குச்சென்று அழகிரியை அழைத்துக்கொண்டு, தாம்பரம் சானட்டோரியத்தில் சிகிச்சைக்குச் சேர்க்க வேண்டும் என்று சொல்ல, அழகிரியை அங்கே இருந்து அழைத்துவந்து, தாம்பரம் சானட்டோரியத்தில் டாக்டர் சந்தோசம் அவர்களிடம் சிகிச்சைக்குச் சேர்க்க, சந்தோசம் அவர்கள் பிரெஞ்சு நாட்டில் இருந்து மருந்தை வரவழைத்து சிகிச்சைக் கொடுத்து, கொஞ்சம் தேறியதுபோல இருக்கிறது, இனி மருந்து சாப்பிட்டுக் கொண்டு ஊருக்குப் போய் இருக்கலாம் எனக்கூற, அவரது உதவியாளர் டாக்டர் ராஜமாணிக்கத்தோடு இரயிலில் அனுப்பிவைத்த செய்தி கிடைத்தஉடன், அவசர அவசரமாக காரில் செங்கல்பட்டு இரயிலடி நோக்கி விரைந்து வந்தார் அண்ணா.
அங்கு இரயிலடியில் அவரைச் சில நிமிடங்கள் சந்தித்தபோது, அண்ணன் அழகிரியார் அவர்களே என்று அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்டு தன் வேதனையை வெளிப்படுத்தி, உங்கள் வைத்தியத்துக்கு வைத்துக் கொள்ளுங்கள் என மேலும் 400 ரூபாயை அவர் கையில் அண்ணா கொடுத்தபோது அழகிரி சொன்னார்: என் உடம்பில் பாதியை கட்சி தின்றுவிட்டது - மீதியை நோய் தின்றுவிட்டது. அண்ணாத் துரையார் அவர்களே, உங்களைப்பற்றி நான் தப்புக் கணக்குப் போட்டு இருந்தேன். தவறாகக் கணித்து இருந்தேன். ஆனால், மனிதாபிமானம் மறைந்துவிடவில்லை என்பதை உங்களிடம் இன்றைக்குப் பார்க்கிறேன் என் உடம்பில் பாதியை கட்சி தின்றுவிட்டது. மீதியை நோய்தின்று விட்டது. என் வாழ்நாளில் உங்களை மறக்க மாட்டேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.
இதற்கு மேலும், பொதுக்கூட்டத்துக்கு என்னை அழைக்கிறீர்களா? 100 ரூபாயை அழகிரிசாமிக்கு அனுப்பிவிட்டு, ஆதாரத்தைக் காட்டினால் நான் தேதியை உறுதி செய்வேன் என்று சொன்ன அண்ணா அவர்களின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக 10 பேர் அனுப்பிவைத்தார்கள். ஆயிரம் ரூபாய் சேர்ந்தது.
அதன்பிறகு நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் குத்தூசி குருசாமி அவர்களும் பட்டுக்கோட்டைக்குச் சென்று, உங்கள் சிகிச்சைக்கு மேலும் நிதி வேண்டும் என்று விடுதலையில் அறிக்கை விடலாமே என்று சொன்னபோது, தழுதழுத்த குரலில் சொன்னார் பட்டுக்கோட்டை அழகிரி: ‘நான் கூலிக்காகப் பேசவில்லை. நான் கொள்கைக்காக கட்சிக்குப் பணியாற்றுகிறேன். நான் இன்னும் அதிகபட்சம் நாட்களோ ஒரு மாதமோதான் உயிரோடு இருப்பேன். இப்பொழுதா என்னை பிச்சைக் கேட்கச் சொல்கிறீர்கள்? என்று சொன்னபோது, அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
அந்தத் திராவிடச் சிங்கம் எங்கே? திராவிட இயக்கத்துக்காகவே போராடிய அந்த வீரத்திருமகன் எங்கே? அந்தப் பெயரையா திராவிடஇயக்கத்தின் வரலாற்றில் அழித்துவிட்டு, ஒரு கொலைபாதகனை, கொடூரம்விளைவிப்பவனை, குடி கெடுப்பவனை, அக்கிரமக்காரனை நீங்கள் பெரியார் பாராட்டியதாகச் சொல்கிறீர்கள்?அஞ்சா நெஞ்சன் அழகிரியின் பெயரை திராவிட இயக்கத்தின் வரலாற்றிலும் அழித்துவிட்டு, உங்கள் மகனை பெரியார் பாராட்டியதாகக் கூறும் கருணாநிதியைக் கேட்கிறேன். நெஞ்சுக்கு நீதியில் நீங்கள் இதை ஏன் எழுதவில்லை? தடுக்கி விழுந்தால் எழுதுவீர்களே, நெஞ்சுக்கு நீதியில் ஏன் நீங்கள் பெரியார் என் வீட்டுக்கு வந்தார், மடியிலேயே போட்டுக் கொண்டார், முரட்டுப் பெயர் என்று பாராட்டினார் என்று எழுதினீர்கள்? யாரை ஏமாற்றுகிறீர்கள்? இந்தப் புரட்டு நீண்ட நாளைக்கு நிற்காது. யாருக்கு அந்தப் பட்டத்தைச் சூட்டினீர்கள்? யார் அஞ்சா நெஞ்சன்?
தீவட்டிக் கொள்ளைக்காரன் அஞ்சா நெஞ்சனா? பட்டப்பகலில் தினகரன் அலுவலகத்தைத் தீ இடச் சொன்னவன் அஞ்சா நெஞ்சனா? மூன்று உயிர்கள் - இரண்டு மறக்குல வாலிபர்கள் - ஒரு யாதவக் குலக் கண்மணி என மூன்று உயிர்கள் பறிக்கப்பட்டன. அக்கொடுமை செய்தவன் அஞ்சாநெஞ்சனா? நாதி இல்லை என்று நினைக்கிறீர்களா? ஏன் பிரிட்டிக்ஷ் ஏகாதிபத்தியத்தின் பிடரி மயிரைப் பிடித்து பாஞ்சாலங் குறிச்சி வீழ்ந்ததற்குப்பிறகும் அஞ்சாமல் போரிட்டார்களே மருதுபாண்டியர்கள். பாஞ்சாலங்குறிச்சி வீழ்ந்தது. கயத்தாறில் கட்டைப்புளியமரத்தில் கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்டான். இனி நமக்கும் அதுதான் கதி என்று அஞ்சாது தங்களிடம்வந்த ஊமைத்துரையை அரவணைத்துக் கொண்டு, திருப்பத்தூரிலும், காளையார்கோவிலிலும் இத்தென்னாட்டிலும் சிவகங்கையிலும் வீரப்போர்புரிந்த அந்த வீரர்கள் காட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில்தான் கொல்லப்பட்டார்கள். வளரி வீசும் ரணகளச் சூரன் சின்னமருதுவை தொடையில் துப்பாக்கியால் சுட்டுச் சாய்த்து கைதுசெய்து இரும்புக்கூண்டில் அடைத்துப்பின் தூக்கில் இட்டனர். இரண்டு பாக்குமரங்களை நட்டு கயிற்றில்கட்டி அதில் தூக்கிலிடப் பட்டு கொன்றனர், பெரியமருதுவை. அந்த பிரிட்டிக்ஷ்காரனைவிட கொடூரமாக அம்மருது பாண்டியர் வழி வந்த தா.கிருக்ஷ்ணனை விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் வீட்டுவாசலில் வெட்டிக் கொன்றனரே கயவர்கள்! அவர்களை ஏவியவனா அஞ்சாநெஞ்சன்?
கருணாநிதியாரின் புரட்டுகள் இன்றல்ல, அன்றே தொடங்கிவிட்டது,
தோழர்களே, இன்றைக்கு நான் பேசுகின்ற இந்த நல்ல வாய்ப்பு, என் வாழ்க்கையில் இனியொருமுறை வாய்க்காது. ஒளி இழைகளில் இந்த உரை பதிவுசெய்யப்பட்டு தமிழர்கள் வீடுகளுக்கெல்லாம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற ஏக்கத்தோடு பேசுகிறேன்.
அண்ணனே, உங்கள் பொன்மொழிகளை, உங்கள் தேன்மொழிகளை, மணிவாசகங்களை இந்த மதுரையம்பதியின் தெருக்களில் நாங்கள் பொறித்து இருக்கிறோம். அண்ணன் கண்ணப்பன் பாராட்டிச் சொன்னார். ஆம்; இங்கே அண்ணனைத் தவிர வேறு யாருக்கும் இடம் இல்லை. அண்ணன் ஒருவரே எங்களின் தலைவர். அண்ணாதான் ஒரேதலைவர். என்றைக்கும் தலைவர். மரித்துப்போகாத தலைவர்.
அண்ணனே, நீங்கள் 1967 இல் ஆட்சிப் பீடத்துக்கு வந்தபிறகு, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய அந்த நிகழ்ச்சியில், ‘வாழ்க வாழ்க’ என முழக்கம் எழுப்பிய திராவிட இயக்கத்துச் சிங்கங்கள் இரண்டுபேர் இந்த மேடையில் அமர்ந்து இருக்கிறார்கள். இந்த மேடையில் இருந்து கொண்டு நான் சொல்ல விரும்புகிறேன். 1968 ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் முதல்நாள் - அன்றைக்கு பாலர் அரங்கில் அண்ணா பேசினார்.
அந்தக் கூட்டத்திலே இருந்த தொண்டர்களுள் ஒருவன் நான். அண்ணனே, நா தழுதழுக்கப் பேசினீர்கள். புற்றுநோயின் கொடுமையில் வேதனைப்பட்ட உங்கள் மெலிந்த தோற்றத்தைக் கண்டு அனைவரும் குமுறியபோது, நீங்கள் தலைவர் அவர்களே என்று உச்சரித்தபோது ஐந்து நிமிடம் கைதட்டல் ஓயவில்லை. அப்பொழுதுதான் சொன்னீர்கள்: இன்றைய தினம் நான் பேசுவதாலேயே இந்த உடலுக்கு ஊறு நேரும் என்றால் பரவாயில்லை. இதில் கலந்து கொள்ளாமல்போனால் இந்த உயிர் இருந்தே பயன் இல்லை என்றீர்கள்.
அன்றுதான் சொன்னார் அண்ணா. ‘நாம் வரலாற்றில் செய்து இருக்கக்கூடிய சில நிகழ்ச்சிகளையாராலும் மாற்ற முடியாது.‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டியதை காங்கிரஸ்காரரும் மாற்ற முடியாது. சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டம் ஆக்கி, செல்லுபடியாகும் என்றதை எவரும் மாற்ற முடியாது. இந்திக்கு இடம் இல்லை என்பதை எவரும் மாற்ற முடியாது. இவை எல்லாம் மணலில் எழுதிய எழுத்து அல்ல. கல்லில் செதுக்கிய எழுத்தும் அல்ல. தமிழர்களின் இதயங்களில் பொறிக்கப்பட்ட வாசகம்’ இது அண்ணா சொன்னது.
நான் இன்றைக்குச் சொல்கிறேன். ஏதோ மதுரைத் தெருக்களில் வைக்கப்பட்டு இருக்கின்ற வாசகங்கள், ஒரு சம்பிரதாயத்துக்காக இன்றைக்கு வைக்கின்ற வாசகங்கள் அல்ல. இது எங்கள் இதயங்களில், எங்கள் இரத்தத்தால் எழுதி இருக்கின்ற வாசகங்கள். இதைத் தமிழகத்தின் வருங்காலத் தலைமுறையின் இதயங்களில் கொண்டுபோய்ப் பதிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. அண்ணா அவர்களே, எங்களுக்கு அந்தச் சக்தியைத் தாருங்கள்.
புரட்டுகளை அம்பலப்படுத்த வேண்டும் என்று நீங்கள்தான் சொன்னீர்கள். எப்பொழுது?
1942 ஆம் ஆண்டு நீங்கள் திராவிட நாடு பத்திரிகையைத் தொடங்கினீர்களே, மார்ச் 8 ஆம் தேதி. என் கையில் இருப்பது கருணாநிதியின் முரசொலி பத்திரிகை. இவர் சொல்கிறார், தொடக்கம் 1942 என்றார். தொடர்ந்து அச்சிட்டு வந்து கொண்டு இருக்கிறது சில ஆண்டுகளாக. இதே கருணாநிதி, தின இதழ்கூட அல்ல, வார இதழாக நடத்தினார். கே.வி.கே.சாமி மடிந்தபிறகு, 1956 இல் வெளியிட்ட முரசொலியில், கருணாநிதி பெயர்போட்ட முரசொலியில், மலர் 3 என்று அச்சிட்டு இருக்கிறார். அப்படியானால், 1953 இல் தொடங்கினீர்களா? எது உண்மை?
இன்னும் சொல்வேன். நெஞ்சுக்கு நீதியில் பல பொய்களை எல்லாம் சொல்லிப் பதிவு செய்கிறார். நான் வாதத்துக்கு அதைக்கூட ஒப்புக்கொள்கிறேன்.
1948 ஜனவரி 16 இல் முரசொலி தொடங்கியதாக நெஞ்சுக்கு நீதியில் எழுதி இருக்கிறீர்கள். எழுதியவர் ஒரே நபர். பெயர் கலைஞர் கருணாநிதி. ஆனால், மூன்று விதத்தில் செய்திகள். இவரைத்தவிர இந்த ஜெகஜ்ஜாலப் புரட்டை எவரும் செய்ய முடியாது. 1942 என்று ஏன் சொல்கிறார்? திராவிட நாட்டை அண்ணா தொடங்கும்போதே, முரசொலியை நான் தொடங்கி விட்டேன் என்று நிறுவப் பார்க்கிறார். இது அக்கிரமம் அல்லவா? அயோக்கியத்தனம் அல்லவா? நெஞ்சு பொறுக்குமா? அண்ணா பொறுக்கலாம். எங்களுக்கு எப்படிப் பொறுக்கும்? இப்படி நூற்றுக்கணக்கான பொய்ச்செய்திகள். 1938 கதைக்குள் எல்லாம் இப்போது போக விரும்பவில்லை. காலம்வரும்.
அதுமட்டும் அல்ல தோழர்களே, இதன்பிறகு 1949 செப்டம்பர் 17. காலை ஏழு மணி சென்னை - பவழக்காரத் தெருவில், 7 ஆம் நம்பர் வீட்டுக்கு வரிசையாக வருகிறார்கள். அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராசன், ஈ.வி.கே.சம்பத் வருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்குவதற்கு 17 ஆம் தேதி காலையில் முடிவு எடுக்கப்படுகிறது. குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அந்தக் குழுக்களில், பிரச்சாரக்குழுவில் கருணாநிதி பெயர் இருக்கிறது. செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன். பொதுக்குழுவில் பெயர் உள்ளது. அவ்வளவுதான்.
ஆனால், அமைப்புத் திட்டக்குழுவுக்கு கே.ஏ.மதியழகன் செயலாளர். அமைப்புத் திட்டக்குழுவில் கருணாநிதி பெயர் கிடையாது. நிதிக்குழுவில் கிடையாது. இதெல்லாம் ஆதாரம். கடைசியாக டி.ஏ.பார்த்தசாரதி எழுதிய தி.மு.க. வரலாற்றில் - முதற்பதிப்பில் - அதில் சொல்கிறார். நிகழ்ச்சி முடிகிற போது அந்த இடத்திற்கு வெளியே காத்து இருந்தவர்களின் பெயர்களுள், போனால்போகிறது என்று கடைசியாக கருணாநிதி, கண்ணதாசன் என்று இரண்டு பெயர்களைச் சேர்த்து இருக்கலாம். உள்ளே நடைபெறுகிற கூட்டத்தில் இருக்கிறவர்களில் இவர் பெயர் கிடையாது.
காலப்போக்கில் என்ன செய்தார் தெரியுமா? டி.எம். பார்த்தசாரதி அடித்த புத்தகப் பதிப்புகளில் இந்த முதல் பதிப்பு எங்கும் கிடைக்காதபடி செய்துவிட்டார். அமைப்புத் திட்டக் குழு என்பதே இன்றைக்கு எந்தப் பதிப்புகளிலும் கிடையாது. ஏனென்றால், அந்த அமைப்புத் திட்டக் குழுவில் இவர் கிடையாது. இதுதான் கொடியையும், கொள்கையையும் வகுக்கின்ற குழு. நான்தான் இரத்தத்தைச் சிந்தி கொடியை உருவாக்கினேன் தி.மு.க.வில் என்கிறாரே, அது ஈரோடு சண்முகவேலாயுதம் வடிவமைத்தது.
இந்தச் சூழ்நிலையில் இப்படிப்பட்ட புரட்டுகளைப்பற்றி அண்ணா சொல்கிறார்.
அண்ணா திராவிட நாட்டைத் தொடங்கிய முதல் இதழில் எழுதிய தலையங்கத்தின் பெயர் என்ன தெரியுமா? தோழர்களே. நமக்குப் பொருத்தமான தலைப்பு! ‘கொந்தளிப்பு’, அதில் எழுதுகிறார் காற்றடிக்குது, கடல் குமுறுது, கப்பல் தன் பயணத்தைத் தொடங்கி விட்டது. இருண்ட வானம், சுருண்டு எழுகின்ற அலைகள், ஓ! மையிருட்டு. ஆனால், பயணத்தைத் தொடர்ந்தே ஆகவேண்டும். காலத்தினாலும் கக்ஷ்டத்தைக் கருதி கடமையைச் செய்யாதவர்களுக்கு மன்னிப்புக் கிடையாது. திராவிடப் பட்டாளத்துக்கு ஆள் சேர்க்கிறோம் நாம். திராவிடத்தின் உரிமைக்குரலாகத் திகழ வேண்டும் நாம். திராவிடத்தின் பாசறையில் ஒரு கருவியாக இருக்க வேண்டும்.
அடுத்த வரிகள்தான் முக்கியம். அதைத்தான் நாங்கள் இப்போது செய்கிறோம். அவர் சொல்கிறார்: திராவிடர்களாகிய நாம் தயவு, தாட்சண்யம், அச்சம் எதுவும் இன்றி புரட்டுகளை வெளிப்படுத்துவோம். புல்லர்களைப் பொசுக்குவோம். வில்லினை எடுடா அந்தப் புல்லியர் கூட்டத்தைப் புழுதி செய்திடவே என்பதைப்போல, புரட்டுகளை வெளிப்படுத்துவோம் என்று அண்ணா சொன்னார் அல்லவா? அந்தப் புரட்டுகளை வெளிப்படுத்துகின்ற வேலையைத்தான் ஒரு சாதாரணத் தொண்டனாகிய வைகோ இங்கே செய்து கொண்டு இருக்கிறான்.
எப்படிப்பட்ட பித்தலாட்டங்கள்? எத்தனை நிகழ்ச்சிகளில்? கல்லக்குடி போராட்டம் ஆம். ஆச்சார்யார் வீட்டுக்கு முன்னால் அண்ணா மறியல் செய்யப் போகிறார். சொல்லின் செல்வர் சம்பத்தோடு, நாவலர் நெடுஞ்செழியனோடு, மதியழகனோடு, நடராசனோடு. அண்ணாவும் மற்ற நால்வரும் 13 ஆம் தேதி இரவே கைது செய்யப்பட்டுவிட்டார்கள். பின்னாளில் ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்ற அருள் அவர்களும், சண்முக வேலும்தான் போகிறார்கள் கைதுசெய்ய. ‘வந்து விட்டோம்’ என்கிறார்கள். அண்ணா, ‘நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்கிறார். கைதாகிறார்கள். இந்தச் செய்தி மறுநாள் நாடு முழுவதும் பரவுகிறது.
பதினைந்தாம் தேதி காலையில் கல்லக்குடி என்று எழுத்துகளால் எழுதப்பட்ட தாளை டால்மியாபுரத்தில் ஒட்டுவதற்குப் போகிறார், கைது செய்வார்கள் என எதிர்பார்த்து. அங்கே கைது செய்யவில்லை. ஆச்சார்யார் ரொம்பத் தந்திரமாக என்ன செய்துவிட்டார் தெரியுமா? யாரையும் கைது செய்ய வேண்டாம். எழுதியதை பிறகு நாம் அழித்துக் கொள்ளலாம் என்றார்.
உடனே இவர் என்ன செய்தார்? தண்டவாளத்தில் தலைவைத்து அதில் படுத்துக் கொண்டார். யாரையும் கொச்சைப்படுத்துவது எனது நோக்கம் அல்ல. ஆனால், நான் கேட்கிறேன். அதிகப்பிரசங்கித்தனமாக நீங்கள் செய்தீர்கள் என்று அண்ணா சொன்னாரா? முந்திரிக்கொட்டை வேலை பார்த்தீர்கள் என்று சொன்னாரா? அதை இயக்கத்துக்கு உரமாகப் பயன்படுத்தினார். உங்களைப் புகழ்ந்தார். உங்களைப் பாராட்டினார், உங்களை உயர்த்தினார். நீங்கள் சிறையில் இருந்து வருகிறபோது இரயில்வே ஸ்டேஷனுக்கு வரவேற்பதற்குத் தம்பிமார்கள் பட்டாளத்தையே அனுப்பினார்.
தலைமை தாங்கி வந்தவர் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரயில்வே ஸ்டேசனில் கூட்டத்தில் இறங்கிய போது, அந்தக் கூட்டத்தில் உங்களைப் பாதுகாத்து, நெரிசலில் சிக்காமல் இரண்டு கைகளாலும் துhக்கி வந்தார். தேக்குமரத் தேகம். உடல் நலிவுற்ற நிலையிலும்கூட, அமெரிக்காவில் போய் சிறுநீரக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு வந்து எம்.ஜி.ஆர். உடல் நலம் கெட்டு, அவர் தேக்குமரத் தேகத்தின் வலிமை குறைந்துவிட்டது என எல்லோரும் நினைத்தபோது, அந்த மேடையில் ஒரு மூட்டையை அப்படியே தூக்கி எறிந்தாரே, இந்த மனிதரிடம் என்ன மனவலிமை? உடல்வலிமை? என எல்லோரும் திகைத்துப் போனார்கள். நான் இன்றைக்கும் எண்ணிப் பார்க்கிறேன். அந்த மூட்டையை என் போன்றவர்களும் தூக்க முடியாது, வாலிபர்களும் தூக்க முடியாது.
மா சே துங் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார் என்று ஏகாதிபத்திய நாடுகள் கேலி செய்தபோது, எவரும் எதிர்பாராதபோது, மஞ்சள் நதியை நீந்திக் கடந்தார் மா சே துங். உலகம் திகைத்தது. பனிப்பாறைகளில் நடந்துசென்றானே வீர இளைஞன் மா சே துங். அதே வீரத்தை, வலிமையை வயோதிகத்திலும் நிரூபித்தார் மாவோ! எம்.ஜி.ஆரின் உடல்வலிமை அப்படிப்பட்டது. அவர் இரண்டு கைகளாலும் உங்களைத் தூக்கிக் கொண்டுபோகிறபோது அவருடைய கைக்கடிகாரம் காணாமற்போய்விட்டது. அப்படி உங்களை உயர்த்தினார் அண்ணா. உங்களைப் புகழ்ந்தார் அண்ணா.
நான் கேட்கிறேன். இதோ கடலுக்கு அப்பாலே அலைகடலின் சமுத்திரத்துக்கு அப்பாலே, மரணப் பள்ளத் தாக்கில் கொல்லப்பட்டு அழிந்து கொண்டு இருக்கிறதே ஈழத்துத் தமிழ் இனம். இந்தியாவின் இராணுவம், கடற்படை, விமானப்படை எல்லாம் சேர்ந்து சிங்களப் படையோடு சேர்ந்து, அங்கே தாக்குதல் நடத்தி எண்ணற்ற தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நேரத்தில், அமைதி பிறக்காதா? அந்தத் தமிழர்கள் வாழ்வில் வெளிச்சம் தோன்றாதா? என்ற கவலையில், நான் ஒரு இரவு நேரத்தில் கடல்வழியாகச் சென்றேன்.
‘கள்ளத்தோணி’ என்று என்னை ஏளனப்படுத்தினர். இழிச்சொல் வீசினர். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. உயிரோடு திரும்பி வருவதற்கு வாய்ப்பில்லை என்ற நிலையில்தான் நான் சென்றேன்.
இதோ என் எதிரே அமர்ந்து இருக்கின்றார் என்னைப் பெற்ற தாய். நான் எனது கிராமத்துக்குச் சென்றேன். ஒருவேளை நான் உயிரோடு திரும்பி வரப்போவது இல்லை என்ற எண்ணத்தில் அவரைப் பார்க்கச் சென்றேன். எப்பொழுது சென்றாலும், எங்கு சென்றாலும், எங்கிருந்து சென்றாலும், என் தாயின் கால்களில் விழுந்து வணங்கி அவர்களிடம் ஆசிபெற்றுச் செல்வது என் வழக்கம். அந்தத் தாயின் காலடி தான் தெய்வத்தின் காலடியாகக் கருதுகிறவன் நான். அந்தத் தாயின் காலடியைத்தான் சொர்க்கமாகக் கருதுகிறவன் நான். ஒரு வீரத்தாயின் வயிற்றில் பிறந்தேன் நான். அவர்களுக்கு மத நம்பிக்கை உண்டு. கடவுள் நம்பிக்கை உண்டு.
ஆகவே, கற்பூரத்தை ஏற்றி எனக்கு ஆசி வழங்குவது அவர்கள் வழக்கம். அன்றைக்கு அவர்கள் கற்பூரத்தை ஏற்றும்போது தற்செயலாக அது அணைந்துவிட்டது. அவர்கள் கவலையோடு கேட்டார்கள். ‘வெளிநாட்டுக்குப் போகிறேன் என்கிறாயே, கற்பூரம் அணைந்து விட்டதே?’ என்றார்கள். நான் இலண்டனுக்கு ஒரு மாநாட்டுக்குச் செல்கிறேன். அதனால் என்னம்மா? காற்றடித்து கற்பூரம் அணைந்து இருக்கும். அதனால் ஒன்றும் இல்லை என்றேன். நான் உயிரோடு திரும்பி வரப்போவது இல்லை என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டுதான், என் மனைவியை, பிள்ளைகளை ஜவுளிக் கடைக்கு அழைத்துக் கொண்டுபோய் புதுத்துணி வாங்கிக் கொடுத்தேன். எதற்காக திடீரென்று புதுத்துணி? என்று அவர்கள் கேட்டபோது, ‘தி.மு.க. ஆட்சிக்கு வந்து இருக்கிறது அல்லவா? அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்கு உங்களுக்குப் புதுத்துணி’ என்று சொல்லிவிட்டு வாங்கிக் கொடுத்தேன்.
இவருக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டுப்போனேன். தி.மு.கழகத்திற்குக் கடுகு அளவும் என்னால் கேடு நேருமானால், அக்கணத்தில் என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போனேன். நான் கேட்கிறேன். அண்ணா அவர்கள் கல்லக்குடி போராட்டத்தில் உங்களை உயர்த்தினார். ஆனால், நான் திரும்பிவருவேன் என்று நீங்கள் நினைக்கவில்லை. சுட்டுக்கொல்லப்பட்டதாகப் பத்திரிகை செய்திகள் வந்தன. நீங்கள் அதை நம்பினீர்கள். துறைமுகம் கூட்டத்தில் சொன்னீர்கள், ‘தம்பியை நினைத்து நான் தவிக்கிறேன்’ என்று. பத்திரிகைகள் ஆகா தம்பிக்காக எப்படித் தவிக்கிறார் என எழுதின.
ஆனால், நான் செத்துப்போய்விட்டேன் என எண்ணி இருந்தார். நான் திரும்பி வரப்போவதில்லை என்று கருதிக்கொண்டு இருந்தார். அதனால்தான் நான் எழுதிய கடிதத்தை வெளியிட்டார். நான் மறுநாள் வந்தேன். ‘பைந்தமிழ்த் தேர்ப்பாகன்’ என்று அண்ணாவால் பாராட்டப்பட்ட அண்ணன் பேராசிரியர் வீட்டுக்கு அன்று மாலை சென்றபோது - இவரைச் சந்தித்த அன்று சாயங்காலம் சென்றபோது - என்னைப் பார்த்த மாத்திரத்தில் வேட்டி கட்டிக் கொண்டு அண்ணா போடுகின்ற பாணியிலேயே பனியன் போடுவாரே அதேபோல பனியனோடு உட்கார்ந்து இருந்தார் பேராசிரியர். உணர்ச்சி வசப்பட மாட்டார். நெகிழ்ந்து போக மாட்டார் அவர். எதற்கும் இயல்பான சுபாவம் கொண்டவர்.
நான் எதிர்பார்க்கவேயில்லை. அவர் என்னைப் பார்த்ததும், ‘வந்துட்டாயாப்பா?’ என்று எவ்வளவு பாசத்தோடு அரவணைத்துக் கொண்டார். நீங்கள் நெருப்பைக் கக்கினீர்களே? அதுமட்டும் அல்ல. அன்று மாலையே அறிக்கை விட்டீர்களே, ‘விளம்பரத்துக்குப் போனான்’ என்று. கொழும்புவிற்கு விமானத்தில் போய் இருக்கலாம் என்று சொன்னீர்களே? அதைச்சொன்னபோது, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தோழர்கள் கண்டித்து எழுதிய கடிதங்கள் இன்றைக்கும் என்னிடம் இருக்கின்றன.
விளம்பரத்துக்குப் போனான் என்று சொன்னதோடு மட்டுமா? அடுத்துச் சொன்னார். இப்பொழுது இந்தச் சட்டமன்றத்தில். இவரை வன்னிக்காடுகளுக்கு அனுப்ப ராஜீவ் காந்தி திட்டமிட்டு இருந்தாராம். அந்தத் திட்டத்தோடு இவர் தில்லியில் இருந்து வந்தாராம். இதைத் தெரிந்துகொண்டு, நான் முந்திரிக் கொட்டைபோல இலங்கைக்குச்சென்று எல்லாவற்றையும் கெடுத்து விட்டேனாம்’ இப்போது இந்தச் சட்டசபையில் சொல்கிறார்.
நான் 1989 ஆம் ஆண்டு பிப்ரவரி ஆறாம் தேதி இரவு தமிழ்நாட்டு எல்லையில் இருந்து கடலில் சென்றேன். இவர் 9 ஆம் தேதி இரவுதான் தில்லிக்குச் சென்று ராஜீவ் காந்தியைச் சந்தித்தார். நான் ராஜீவ் காந்தியைச் சந்தித்து விட்டு வந்தேன். என்னை வவுனியாவுக்குப் போகச் சொன்னார். இதைத் தெரிந்து கொண்டு இவன் போய் கெடுத்து விட்டான் என்கிறாரே அடடா... கோயபல்ஸ் எல்லாம் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும். இவரைமாதிரி பொய் சொல்கிற நபர், உலகத்தில் இதுவரைக்கும் பிறந்தது கிடையாது.
அதற்குப்பிறகு இப்பொழுது என்ன சொன்னார்? அதுதான் உச்ச கட்டம்.
நெஞ்சே கிடையாது - பிறகு எப்படி நீதி?
சென்றமாதம் நெஞ்சுக்கு நீதியில். நெஞ்சே கிடையாது. பிறகு எப்படி நீதி? இது சென்ற மாதம் நெஞ்சுக்கு நீதி.... இதில் எழுதுகிறார். என்ன எழுதுகிறார்? இதுதான் சரித்திரப் புரட்டு.
1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி மத்திய அரசில் இருந்து ஊர்ஜிதமாகாத தகவல். உள்துறையில் இருந்து வந்ததை அடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் - அப்பொழுது அண்ணா தி.மு.க. ஆட்சி - அவர்கள் அறிவுறுத்தலின்பேரில் தலைமைச் செயலாளர் வெங்கட்ராமன் இவருக்கு ஒரு கடிதம் எழுதினாராம்.
இதைச் சொல்கிறார். அந்தக் கடிதத்தில் ஊர்ஜிதமாகாத தகவலின் அடிப்படையில், உங்களை தீர்த்துக்கட்ட விடுதலைப்புலிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி வந்து இருக்கிறது. எனவே, உங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் விரும்புகிறார். இந்தக் கடிதத்தை எழுதுமாறு என்னை அறிவுறுத்தினார். உங்களுக்குத் தகுந்த பாதுகாப்பு கொடுப்பதற்கு உங்கள் சம்மதத்தைக் கோருகிறேன்’. இது அவர் எழுதியது.
இதில் என்ன பெரிய புரட்டு?
அன்றைக்கு 1993 ஆம் ஆண்டு ஒரு செய்தி வெளியிட்டாரே! இராதாகிருக்ஷ்ணன் தகவல் சொன்னாரே! ஆலம்பாளையத்தில் தென்னந்தோப்பு வீட்டுக்கு உள்ளே இருந்த அண்ணனிடத்தில் இதைச் சொல்லிக் குமுறினேனே நான். அன்றைக்கு என்ன சொன்னார் தெரியுமா? வை.கோபால்சாமியின் ஆதாயத்துக்காக விடுதலைப்புலிகள் கலைஞர் கருணாநிதி உயிரைக் குடிக்கத் திட்டமிட்டு இருப்பதாக ஊர்ஜிதமாகாத தகவல் வந்து இருக்கிறது என்று எனக்குக் கடிதம் வந்து இருக்கிறது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னார். இந்த நெஞ்சுக்கு நீதியில் அந்த வாசகத்தை அப்படியே எடுத்து விட்டார்.
நாளைக்கு திராவிட இயக்க வரலாறு எழுதுகிறபோது மறுமலர்ச்சி தி.மு.க. ஏன் தோன்றியது? எந்த அநீதியை எதிர்த்துத் தோன்றியது? எந்தக் குடும்ப அரசியல் கூடாரக் கொடுமையை எதிர்த்துத் தோன்றியது? அண்ணா உருவாக்கிய இயக்கத்தைப் பாழ்படுத்தியவர்களை வீழ்த்துவதற்கு ஒரு பட்டாளம் கிளம்பியது ஏன்? என்ற கேள்வி வரலாற்றில் எழுமானால், ஒரு கட்சிக்கு உண்மையாக உழைத்தவன்மீது கொலைப்பழி போட்டது உலகத்தில் எந்தக் கட்சியிலும் ஜனநாயக நாட்டில் கிடையாது என்பது வெட்டவெளிச்சமாகி விடும் அல்லவா? ஆகவே நீக்கி விட்டார். அன்றைக்கு எழுதியதை, இன்றைக்கு நீக்கி விட்டார். இதுதான் அவரது நெஞ்சுக்கு நீதி.
அன்றைக்குச் செய்தியாளர்கள் கேட்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை நீங்கள் பெற்றுக் கொள்வீர்களா? இவர் பதில் ‘பொதுச்செயலாளர் ஊரில்இல்லை. ஊரில் இருந்து வந்தவுடன் அவரோடு கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்றார். பொதுச்செயலாளர் அன்பழகன்தான் ஊரில் இல்லையே? கடிதத்தை ஏன் வெளியிட்டீர்கள்? அவர் வரும்வரை நீங்கள் ஏன் காத்து இருக்கக்கூடாது? என்னை அழைத்து கூண்டில் நிறுத்தி ஏன் விசாரித்து இருக்கக்கூடாது. என்னை ஏன் கேள்வி கேட்டு இருக்கக்கூடாது?
நிருபர்கள் அதைத்தான் கேட்டார்கள். ‘உங்களை ஏன் சார் கொல்ல வேண்டும்?’ என்று. ‘காரணம்தான் கடிதத்திலேயே இருக்கிறதே’ என்று இவர் சொன்னார். ஆனால்,இன்றைக்கு எழுதுகிற நெஞ்சுக்கு நீதியில் இல்லை. இப்படிப்பட்ட புரட்டுகளைச் செய்து, தமிழ்நாட்டில் எவ்வளவு கேடுகளை ஏற்படுத்தி விட்டார்?
மனிதாபிமானத்தின் மறுபெயர் அண்ணா என்று பட்டிமன்றத்தில் என் அருமைத்தம்பி நாஞ்சில் சம்பத் சொன்னார். அரசியல் இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு அடையாளம். இந்தக் கூட்டத்தின் வாயிலாக வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு சொல்கிறேன்.
அண்ணாவுக்கு புற்றுநோயின் அறிகுறி எப்பொழுது தெரிகிறது? வயிற்றில் வலிக்கிறது. சாதாரண வயிற்றுவலி என்று மருத்துவர்கள் நினைக்கிறார்கள். அது 1968 ஜூலை இறுதி வாக்கில் ஆரம்பமாகிறது. ஐரோப்பாவுக்குச்சென்று வாடிகன் நகரில் போப் ஆண்டவரைச் சந்தித்து, ரானடேவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்து, அமெரிக்காவுக்குச் சென்று, யேல் பல்கலைக்கழகம் சென்று, திருக்குறளைப் போதித்து வெற்றித் திருமகனாகத் தமிழகம் திரும்பியபிறகுதான் புற்றுநோய் அறிகுறி தெரிகிறது. வயிற்றில் வலிக்கிறது. மருத்துவர்கள் சாதாரண நோய் என்று கருதுகிறார்கள்.
பின்னர் புற்றுநோய் என அறிகின்ற அந்தக் காலகட்டத்தில்தான், 1968 இல் ஆகஸ்ட் திங்கள் அண்ணா சிலைக்கு எதிரே காங்கிரஸ்காரர்கள் கண்டன ஊர்வலம் போனார்கள். கருப்புக் கொடி ஏந்திப் போனார்கள். அண்ணா சிலை மீது கருப்புத் துண்டுகளை வீசினார்கள். அண்ணா சிலைக்கு முன்னால் முக்காடு போட்டுக் கொண்டு போனார்கள்.
அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் பேசினார்:‘காங்கிரஸ் நண்பர்கள் ஊர்வலத்தில் முக்காடு போட்டுக்கொண்டு, என் சிலை மீது கருப்புத் துணிகளை வீசி இருக்கிறார்கள். பொதுவாக தமிழ்நாட்டில் இறந்துபோனவர்கள் வீட்டில்தான், இறந்துபோன சவத்தைத் தூக்கிக் கொண்டு போகும்போது கருப்புத் துணியைப் போடுவதும், போகின்ற வழியில் பண்டங்களைப் போடுவதும் வழக்கம். அதுபோல என் சிலைமீது கருப்பு துண்டுகளை வீசி இருக்கிறார்கள். நான் வருத்தப்படவில்லை. நான் இறந்தபிறகு இவர்கள் எல்லாம் இப்படித்தான் எனக்காக அனுதாபம் தெரிவிப்பார்கள் என்பதைத் தெரிந்து கொண்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று சொன்னார்.
அதுவல்லவா மனிதநேயம்!அதுவல்லவா மனிதாபிமானம்!
முதல் அமைச்சர் கருணாநிதி அவர்களே, நீங்கள் இதற்குப்பிறகு நான் ஆட்சிக்கு வரப்போவது இல்லை என்கிறீர்கள். நீங்கள் விரும்பினாலும் வர முடியாது. ஒருக்காலும் வர முடியாது. நீங்கள் சொன்னதைப் பற்றி பழ.நெடுமாறன் எழுதினார்.தொடர்ந்து இப்படி அறிக்கைகள் விடுகிறீர்களே! உங்களுக்கு, உங்கள் குடும்பத்துக்கு, உங்கள் பிள்ளைகளுக்கு, பிதுரார்ஜித சொத்தா? குடும்பச் சொத்தா? ஆட்சி என்பது! என்ற அடிப்படையில், நயத்தக்க நாகரிக முறையில், அரசியல் கட்டுரை தினமணியில் எழுதினார். அதற்கு நாகரிகமாகப் பதில் சொல்லலாமே? என்ன சொன்னீர்கள்? விடுதலைப் புலிகளின் பெயரைச் சொல்லிக்கொண்டு பணம் பறிக்கின்ற இனத்துரோகி நெடுமாறன் என்று கவிதை எழுதினீர்கள்.
இயற்கைக்குப் பொறுக்குமா? உங்களுக்கு ஈவு, இரக்கம், மனிதாபிமானம், மனிதநேயம் எதுவுமே கிடையாதா? பழ.நெடுமாறன் இந்த மதுரையில் தமிழுக்கு உழைத்த பழனியப்ப பிள்ளையின் மகன். தென்பாண்டி வீரன் எழுதியவர். தமிழுக்காக தமிழ் மண்ணுக்காக வாழ்கின்றவர். துறவியைப்போல வாழுகிறார். அவர் அதிகார அரசியலை விட்டு விலகி நெடுநாள் ஆயிற்று. சட்டமன்றத்துக்குக்கூடப் போட்டியிடப்போவது இல்லை. ஒழுக்கசீலரை, ஒரு உத்தமனை, உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் மனதில் இடம்பிடித்து இருக்கின்ற ஒரு நல்லவரை இனத்துரோகி என்று எழுதினீர்களே, இயற்கைக்குப் பொறுக்குமா?
உங்களைவிடவா ஒரு இனத்துரோகி குலத்துரோகி இனி தமிழ் இனத்தில் பிறக்கப்போகிறான்? இந்தத் தமிழ் இனத்தின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் நீங்கள் காவு கொடுத்துவிட்டீர்கள்! ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்ப் பிரச்சனையில் எந்த முதல் அமைச்சரும் செய்யத் துணியாத துரோகத்தை நீங்கள் செய்யவில்லையா? காங்கிரஸ் கட்சிக்கு நடைபாவாடை விரிப்பதற்கு, மைசூர்காரனுக்கு கன்னடத்துக் காரனுக்கு அங்குள்ள காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தமிழகத்தின் உரிமையை காவு கொடுக்கவில்லை? இந்தியாவில் எந்த முதல்வராவது தனது மாநிலத்துக்கு இந்தத் துரோகத்தைச் செய்வாரா? செய்துவிட்டுப் பதவியில் இருக்க முடியுமா? சொந்தக் கட்சி அனுமதிக்குமா?
முல்லைப் பெரியாறில் நீங்கள் செய்த துரோகம் - பாலாற்றில் செய்த துரோகம், பட்டியல் இடலாம். அனைத்துப் பிரச்சனைகளிலும் தமிழகத்தின் உரிமைகள் அனைத்தையும் காவு கொடுத்துவிட்டு, தமிழகத்தின் இயற்கை வளங்கள் அனைத்தும் சுரண்டப்பட்டு கோடி கோடியாகக் கொள்ளை அடிக்கப்பட்டு, மணல் கொள்ளையில் குவிக்கப்பட்டு, உங்கள் குடும்ப அதிகார மையங்களின், கஜானாக்களில் செலுத்தப்படுகின்ற நிலையில் மக்களின் கோபம் வெளிப்படையாக வெடிக்கிற நேரத்தில், யாரை ஏமாற்றுகிறீர்கள்?
ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாயா? அண்ணாவின் திட்டமா? அரிசி கேட்டுவந்த அர்ஜூனனின் தொண்டைக்குழியில் துப்பாக்கிக் குண்டைச் செலுத்தியது காங்கிரஸ் அரசு. எங்கே? கோயம்புத்தூரில் !அரிசி என்பது கிடைக்காமல் மக்களுடைய கோபம் பொங்கியது. பிரெஞ்சு புரட்சியைப் போலக் குரல் எழுந்த நேரம் அது. அண்ணா ஒரு ரூபாய்க்கு படி அரிசி என்றார். அண்ணா பொருளாதார மேதை. அன்றைக்கு ஒரு ரூபாய்க்குப் படி அரிசி. இவர் சொல்வது கிலோ. படிக்கும் கிலோவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அன்றைக்கு ஒரு ரூபாயை மளிகைக்கடைக்குக் கொண்டுபோய், தாய்மார்கள் சமையலுக்குத் தேவையான பருப்பு, எண்ணெய் உள்பட எல்லாப் பொருட்களும் வாங்கினார்கள். அண்ணாவைவிடவா நீங்கள் பொருளாதார மேதை?
அவர் அன்றைக்கு ஒரு ரூபாய்க்கு படி அரிசி என்ற நிலையில் அந்தச் சூழலில். இன்றைக்கு எல்லாப் பண்டங்களின் விலையும் பலமடங்கு உயர்ந்து அனைவரும் நொறுங்கி தவித்துக் கொண்டு இருக்கின்ற நிலையில், இந்த நேரத்தில், நீங்கள் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்பது, அண்ணன் கண்ணப்பன் சொன்னதைப்போல மாட்டுத் தீவனத்துக்குக்கூட விவசாயிகள் பயன்படுத்த மறுக்கிறார்கள். தொற்றுநோய் நோய் வந்து கோழிகள் செத்து விடும் என்று, கோழித்தீவனத்துக்கும் வைப்பது இல்லை. அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி அதில் ஆளுங்கட்சியினர் கொள்ளை அடிக்கலாம் என்பதற்குத்தான் இந்த ஏற்பாடா?
தமிழகம் எங்கும் மக்களின் கவலைகளைப் போக்குவதற்காகவே இந்தத் திட்டத்தை அண்ணாவின் பிறந்த நாளில் கொண்டுவந்தேன் என்று சொல்கின்ற முதல் அமைச்சர் அவர்களே! அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்டது. மது அரக்கனுக்கு இடம் இல்லை. ‘எனக்கு என்றைக்கும் தலைவர் பெரியார்தான் என்று அண்ணா பேசியதை திருப்பூர் துரைசாமி இந்த மாநாட்டில் சொன்னாரே! இந்தப் பதவி நாற்காலி என்றைக்கும் பெரியாருக்காகவே இருக்கும் என்றாரே! நீங்கள் எவ்வளவு தந்திரமாக, அண்ணா மறைந்த பிறகு அன்றைக்கு கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சில் இடம்பெற்று இருந்த புரட்சி நடிகரையும் தந்திரமாக வயப்படுத்தி, அவருடைய ஆதரவைப் பெற்று நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். ஆட்சிக்கு வந்ததற்குப்பிறகு மது அரக்கனை நீங்கள் கொண்டு வந்தீர்களே? இந்தப் பேச்சைப் பொருளாதார மேதைகள் பலர் கேட்டுக் கொண்டு இருக்கலாம். நான் கேட்கிறேன்.
நிதி நிலைமை இப்படி இருக்கிறபோது எப்படி நான் மதுவிலக்கை அமுல்படுத்த முடியும் என்று கேட்கலாம். சுற்றிலும் நெருப்பு எரிகிறபோது எப்படி கற்பூரத்தை பாதுகாப்பாக வைத்து இருக்க முடியும்? என்று கேட்கலாம். நான் கேட்கிறேன். இன்றைய அரசியலில் மத்தியஅரசு உதவி ஏராளம் உண்டு .... அந்தக் காலத்தில் அப்படிப்பட்ட நிதிஆதாரத்தைப் பெற முடியாத அந்தக் காலத்தில் அண்ணா மதுவிலக்கை முழுமையாக அமுல்படுத்தினாரே? ஒரு தலைமுறை அழிந்துவிடக்கூடாது என்று கருதினாரே, அண்ணாவைவிடவா பொருளாதார மேதைகள் இந்த நாட்டில் இருக்கிறார்கள்?
அவர் லாஸ்கியின் மாணவரிடத்தில் பாடம் படித்தவர். மிகப்பெரிய பொருளாதாரமேதை கீன்ஸ் எழுதிய புத்தகம் புத்தகசாலைக்கு வருவதற்குமுன்பே அண்ணாவுக்குக் கிடைத்து விடும். அவர் மதுவிலக்கை அமுல்படுத்தினார். இவர் மது அரக்கனைக் கொண்டுவந்தார். அண்ணாவின் திட்டத்தை நினைவுபடுத்த ஒரு கிலோ ஒரு ரூபாய்அரிசி என்கிறீர்களே, அப்படியானால் நான் கேட்கிறேன். மருத்துவர் இராமதாஸ் கூட கேட்கிறார், மதுவிலக்கை அமுல்படுத்துவீர்களா?
மதுரையில், 1972 ஆகஸ்ட் மாதம் 4,5,6 ஆகிய தேதிகளில் மாநாடு. இந்த மண்டலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக் காத்த, உடம்பெங்கும் வெட்டுக் காயங்களைப் பெற்ற மாவீரன் மதுரை முத்து வரவேற்புக்குழுத் தலைவராக இருந்து நடத்திய மாநாடு. திராவிட முன்னேற்றக் கழக மாநாடு. அந்த மாநாட்டு ஊர்வலத்தில், பேருந்துக்கு மேலே நின்று, ஐநூறு ஆயிரம் மாணவர்களோடு அடிவயிறு வலிக்க மாநில சுயாட்சியை முழங்கிக்கொண்டு வந்த மாணவன் நான்.
இந்த மாநகரத்தின் எல்லைக்கு உள்ளே நுழைகிறபோது, இன்றைக்கும் என் நெஞ்சில் வாழும் ஆருயிர்ச் சகோதரன் காளிமுத்துவின் வாசகங்கள், இன்னும் என் கண்ணுக்குள் இருக்கிறது.
‘முத்து மதுரை இது
முத்தமிழ் மதுரை இது
முன்னேற்றக் கழகத்தின் கொடி பறக்கும் கோட்டை இது.’
இது காளிமுத்துவின் வாசகம். அந்த வளைவு இன்னும் என் கண் முன்னால் நிற்கிறது. அந்த மாநாட்டில் இலட்சோப இலட்சம் பேர் திரண்ட மாநாட்டில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை மேடையில் உச்சரித்த போதெல்லாம் மாநாட்டில் எழுந்த ஆரவாரம் பிரளயத்தின் பேரொலியாகக் கேட்டது.
அவர் பேசும்போது, ‘மாநில சுயாட்சிக்காக இந்திய இராணுவத்தைச் சந்திப்பேன்’ என்றபோது, ஆயிரம் இடிகள் ஒரு சேர ஒலிப்பதைப்போல, பத்தாயிரம் பறவைகள் சிறகடித்துப் பறப்பதைப் போல, கடல் அலைகள் குமுறுவதைப்போலக் கரவொலி எழுந்தது.
இவரால் அதைச் சகிக்க முடியவில்லை. என்ன செய்தார்? அதற்குப்பிறகு இவர் பேச எழுந்தார். பொங்கி எழுந்த ஆரவாரத்தைக்கண்டு அதிர்ச்சியுற்று ஆத்திரம் தாங்க முடியாமல், மயக்கமாக வருகிறது என்று 15 நிமிடங்களில் அமர்ந்து கொண்டார்.
அன்று இருந்த சூழலில் நேரிடையாக உங்களைத் தனிமைப்படுத்தி குற்றம் சாட்டக் கூடாது என்று, எம்.ஜி.ஆர். எடுத்து வைத்த கேள்வியைத் திசை திருப்பினீர்கள். பொருளாளரான அவருக்குத் தெரியாமல் நிதி திரள்கிறது? நான்காயிரம் ரூபாய் ஐயாயிரம் ரூபாய் என்று, குண்டடிபட்டு மருத்துவ மனையில் படுத்துக்கொண்டே வேட்பாளர்களுக்குப் பணம் கொடுத்தாரே, வெள்ளித்திரையில் திரட்டிய பணத்தை. அதுபோல உங்களது சொந்தப் பணத்தை, ஒரு காசு செலவழித்தது உண்டா கட்சிக்கு? நிதி திரட்டி இருக்கிறீர்கள். இல்லை என்று சொல்லவில்லை. தன் பணத்தை அல்லவா எம்.ஜி.ஆர். கொடுத்தார். ஆனால், கட்சியில் இல்லாத பணம், 1971 தேர்தல். தனித்தனியாக ஒருவருக்கு 30,000 ஒருவருக்கு 40,000 ஒருவருக்கு 75,000 என கொடுக்கிறாரே இது என்ன விவகாரம்? என்று நினைத்து எம்.ஜி.ஆர். கணக்குக் கேட்டார். உடனே எல்லோர் மேலேயும் கணக்குக் கேட்டுவிட்டார் என்று சொல்லி, அவரை வெளியேற்றி விட்டார்.
சரி முடிந்தது, தூக்கி எறிந்தீர்கள். அண்ணன் சொன்னதைப்போல அவர் இருக்கின்ற வரையில் நீங்கள் ஆட்சிக்கு திரும்ப முடியவில்லை. அதற்குப்பிறகு அவர் மரணப்படுக்கையில் இருக்கிறபோது, 40 ஆண்டுக் கால நண்பனுக்காக நான் பிரார்த்திக்கிறேன் என்றீர்கள். முதலில் என்ன சொன்னார்? எம்.ஜி.ஆர். ரொம்ப உடல் நலிவுற்று இருந்தார். சப்தநாடியும் இல்லாமல் போய்விட்டது. இவர் என்ன சொன்னார். என்னை முதல்வராக ஆக்குங்கள். அந்தப் பதவியை அப்படியே பத்திரமாக வைத்து இருக்கிறேன். எம்.ஜி.ஆர். வந்தவுடன் அவர் கையில் கொடுத்து விடுகிறேன் என்றார். இப்படியெல்லாம் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.
இன்றைக்கு என்ன நிலைமை?
இங்கே வெளிச்ச மழை. நாங்கள் ஜெனரேட்டர் வைத்து மாநாடு போடுகிறோம். சென்னை மாநாட்டில் குற்றம் சாட்டினேனே, ஆதாரங்களைக் காட்டினேனே? கடலூரில் நடைபெற்ற ஆளுங்கட்சி மாநாட்டில் எல்லா இடங்களிலும் வருகிற வழியெல்லாம் மின்சாரம் திருடப்பட்டது. அந்த மாநாட்டுப் பந்தலில் இருந்த இரண்டு ஜெனரேட்டர்களும் இயங்கவே இல்லை. மக்கள் சொத்து அல்லவா? மக்கள் பணத்தை அல்லவா நீங்கள் கொள்ளை அடிக்கிறீர்கள்? மின்சாரத்தைத் திருடினீர்கள். நான் 70 புகைப்படங்களைக் காட்டினேன். நடவடிக்கை உண்டா முதலமைச்சரே?
மின்சாரத்துக்குப் பணம் கட்டுவதற்கு உங்களிடம் பணம் இல்லையா? எத்தனை ஆயிரம் கோடியை நீங்கள் குவித்து வைத்து இருக்கிறீர்கள். இன்று மாலை எனக்கு கிடைத்த தகவல், இங்கே நடைபெறப் போகும் மாநகர இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெறுவதற்கு ஒரு ஓட்டுக்கு 3000 ரூபாய் 5 ஓட்டு இருக்கின்ற வீட்டுக்கு 15,000 கொடுக்கப்பட்டு இருக்கிறது. சென்ற ஆண்டு 1000 ரூபாய். இந்த ஆண்டு 3000 ரூபாய். எவ்வளவு ரேட் கூடியிருக்கிறது? மக்கள் வெறுப்பு அவ்வளவு இருக்கிறது என்று நினைத்து, வார்டு தேர்தலில்கூட அள்ளிக்கொடுக்கிறார்கள்.
கொள்ளை அடித்த பணத்தை வைத்து ஓட்டுக்கு 3000 கொடுக்க முடிந்த உங்களால் மின்சாரத் துறைக்குப் பணத்தைக்கட்டி மாநாட்டுக்கு லைட் போட முடியாதா? அதிகாரம் இருக்கிறது அல்லவா? எவன் கேட்பது எங்களை? என்ற திமிர்! ஊரில் மக்களுக்கு மின்சாரம் இல்லை. இவர்கள் நடத்துகிற மாநாட்டுக்கு 24 மணி நேரமும் மின்சாரம். பணம் செலுத்தாமல் கம்பியில் கொக்கியைப்போட்டு மின்சாரம் திருடுகிற திருட்டுக்கூட்டம் இந்த முதல்வரின் கூட்டம்.
இந்த மின்வெட்டு தமிழக ஆலைகளை, விவசாயத்தை, மாணவர்களை, மருத்துவமனைகளை, எல்லாவற்றையும் பாதித்து இருக்கிறது. அருமைத் தாய்மார்களை பாதித்து இருக்கிறது. அனைத்துக் குடும்பங்களையும் பாதித்து இருக்கிறது. அண்மையில் பத்திரிகையாளர் ஞானி எழுதினார். அவருடைய கல்லூரி நண்பர் எழுதிய ரொம்ப அருமையான கவிதை. நன்றாக இருந்தது. அந்தக் கவிதையில் சொல்கிறார்.
பாழாய்ப்போன கேடுகெட்ட ஆட்சியில்
உயிரோடு இருப்பதைவிட சாவது மேல் என்று
செத்துப்போகலாம் என்று முடிவெடுத்து,
மின்சாரக் கம்பியில் கை வைத்தேன்
அடச்சே
அங்கும் மின்வெட்டு
ஆர்க்காடு.
இதுதான் இன்றைய நிலைமை!
என் அருமைச் சகோதரர்களே, மதுரைதான் வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தியது மதுரை மாநாடு. இந்த மதுரையின் சரித்திரத்துக்கு ஈடாக இந்தியாவில் எந்த நகரமும் கிடையாது. ஏனென்றால், மதுவைத் தொடேன், மங்கையைத் தீண்டேன் என்று தாய்க்குச் சத்தியம் செய்துகொடுத்தாரே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அவர் தலையில் டர்பன் வைத்தவராக பாரிஸ்டர் பட்டம் பெற்று, அங்கவஸ்திரம் அணிந்து, கோட் அணிந்துகொண்டு, தலைப்பாகை கட்டிக் கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு அவர் வேலை செய்து கொண்டு இருந்த காலத்தில், அசாம் மாகாணத்துக்குப் போனபோது எண்ணினார்.
கதர் கிடைக்கவில்லையா? இடுப்பிலே துண்டைக் கட்டிக் கொள்ளுங்கள் என்று நான் சொல்கிறேன். அதைச்சொல்கிறபோது என் மனதுக்கு உறுத்தல் ஏற்படுகிறது. அதை உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை. இடுப்பிலே துண்டு மட்டும் கட்டிக் கொண்டால் என்ன? அரையாடை மட்டும் கட்டிக் கொண்டால் என்ன? என்று அசாமில் நான் முடிவெடுக்க முனைந்தேன். என்னால் முடியவில்லை என்று அவர் எழுதுகிறார். ஆந்திராவுக்கு வருகிறேன். வால்டரில் இரயிலில் போய்க்கொண்டு இருக்கிறேன். மெளலானா முகமது அலி கைது செய்யப்படுகிறார். அன்றைக்கு நான் நினைத்தேன். இந்த நாட்டில் கோவணாண்டிகளாக பலர் அலைகிறபோது, எனக்கு எதற்கு எட்டு முழ வேட்டி, சட்டைஎன நினைத்தேன். ஆனால், அங்கும் என்னால் முடிவெடுக்க முடியவில்லை’ என்கிறார்.
1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி, மதுரைக்கு காந்தி வருகிறார். அங்கவஸ்திரம், கோட்அணிந்துகொண்டு, தலையில் தலைப்பாகை கட்டிக் கொண்டவராக வந்தார். வரவேற்றார்கள். இரவு எல்லாம் சிந்தித்தார். அவர் அரையாடை கட்டிக்கொள்வதை ஆதரித்த ஒரே நபர் அபுல்கலாம் ஆசாத். அவர் அங்கு வரவில்லை. ஏற்கனவே இதுகுறித்து காந்தியின் கருத்தை ராஜாஜி ஆதரிக்கவில்லை இது ஒரு பைத்தியக்காரத்தனமான யோசனை என்று அவர் மறுத்தார். அவரும் மதுரைக்கு வரவில்லை.
காந்தியார் இரவெல்லாம் யோசித்தார். செப்டம்பர் 22 ஆம் தேதி பிறந்தது. மறுநாள் செளராக்ஷ்டிரா அமைப்பினர் நடத்திய விழாவுக்கு - மகாத்மா காந்தி - உலக உத்தமர் என்று அண்ணாவால் போற்றப்பட்ட காந்தி வருகிறார். அவரைப் பார்த்துக் கூட்டத்தினர் அதிர்ச்சி அடைகிறார்கள். ஏனென்றால், மேலே சட்டை கிடையாது. தலையிலே தலைப்பாகை கிடையாது. அங்கவஸ்திரம் கிடையாது. இடுப்பிலே ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு வந்து நின்றார். இந்த மதுரையில்தான்.
இன்றைக்கு பாரக் ஒபாமா, தன் அறையில் மார்ட்டின் லூதர் கிங் படத்தையும், மகாத்மா காந்தியின் படத்தையும்தான் வைத்து இருக்கிறேன் என்று சொல்கிறார். நெல்சன் மண்டேலா, ‘நீங்கள் மோகன்தாஸ்கரம்சந்த் காந்தியாக எங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பினீர்கள். நாங்கள் அவரை மகாத்மாவாக ஆக்கி அனுப்பினோம்’ என்று சொன்னாரே! அந்த மகாத்மா, அரையாடை மட்டுமே உடுத்த முடிவெடுத்தது இந்த மதுரையில்தான்.
இந்த மதுரையில்தான் 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி இலட்சக்கணக்கானவர்கள் திரண்ட கூட்டத்தில் வங்கத்து சிங்கம் நேதாஜி, பக்கத்தில் தென்னாட்டுச் சிங்கம் முத்துராமலிங்கத் தேவர். இருவரும் இங்கே பேசுகிறார்கள். அப்போது இரண்டாம் உலகப்போர் தொடங்கிவிட்ட நேரம். பிரிட்டிக்ஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போர்தொடுக்க ஆவேசமாக குரல் கொடுக்கின்றார் நேதாஜி. அந்தக் கூட்டத்தில் தேவர் திருமகனார் சொல்கிறார்: ‘வங்கத்துச் சிங்கம் நேதாஜியின்பின்னால் அணிவகுப் போம். இது தென்னாட்டு மக்களின் வீரசபதம்’ என்றார். அந்த வீரசபதத்தின்படி 40,000 தமிழர்கள் நேதாஜியின் படையில் சேர்ந்தார்கள்.
1944 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 இல். எங்கே ? ரங்கூன். அங்கே திரண்டு இருந்த மக்களிடம், ‘சுதந்திர தேவதையின் பலிபீடத்தில் புரட்சிக்காரர்கள், புரட்சிக்கார வீராங்கனைகளின் இரத்தத்தைக் கேட்கிறார். உங்கள் இரத்தத்தைத் தாருங்கள். நான் விடுதலையைப் பெற்றுத் தருகிறேன்’ என்றார். ‘நாங்கள் தயார் தயார்’ என்றார்கள். ‘எழுந்து நில்லுங்கள்’ என்றார். எழுந்து நின்றார்கள். ‘ஓரடி முன்வையுங்கள்’ என்றார் ஓரடி முன் வைத்தார்கள். ‘நீங்கள் சத்தியம் செய்யுங்கள்’ என்றார். சத்தியம் செய்தார்கள். ‘பேனா மையில் அல்ல; உங்கள் இரத்தத்தில். நான் பக்கத்தில் சாட்சி’ என்றார். இரத்தத்தைத் தாருங்கள், விடுதலையைப் பெற்றுத்தருகிறேன் என்று சொல்லிவிட்டு, ‘தேசப்பிதாவே ஆசி வழங்குங்கள்’ என்று கேட்டார். அவரை நிராகரித்த அண்ணல் காந்தி அடிகளை ஆசி வழங்குங்கள் என்று சொன்னார்.
நான் கேட்கிறேன். இன்றைக்கு எங்கள் இனத்தவன் நாதியற்றுப்போய் விட்டானா? இந்த நாட்டின் விடுதலைக்கு பகத்சிங் தூக்குமேடை ஏறியதைப்போல, அழகுமுத்துக்கோனும், கட்டக் கருப்பனும், மருது பாண்டியர்களும், கட்டபொம்மனும், பூலித்தேவனும், வெள்ளையத் தேவனும், சுந்தரலிங்கமும், ஒண்டிப்பகடையும் இப்படிப்பட்ட வீரர்கள் போராடிய அதே மண்டலத்தில் இருந்துதான், வடநாட்டுக் காரனுக்கு வராத யோசனையோடு எங்கள் வீரசிதம்பரம் கப்பல் ஓட்டிய இந்தத் தமிழ்நாட்டில் இருந்து தான் நாட்டின் விடுதலைக்காக இரத்தம் சிந்தினார்கள் தமிழர்கள். நாங்கள் தேசப்பற்றில் குறைந்தவர்களா? இந்தியாவை உருவாக்கிய அந்த விடுதலைப் போராட்டத்தில் எங்கள் பங்கு குறைவானதா? எங்கள் முன்னோர்கள் எவ்வளவு தியாகம் செய்து இருக்கிறார்கள். நாங்கள் நாதியற்றுப் போனோமா?
இன்றைக்கு இலங்கைத் தீவில் கொடுமையிலும் கொடுமை. நேற்றைக்கு வந்த செய்தி, தமிழர் பகுதிகளில் இருந்து ஐரோப்பிய, அமெரிக்க தொண்டு நிறுவனங்கள், ஆஸ்திரேலியா தொண்டு நிறுவனம் எல்லாம் வெளியேற வேண்டும் என்று இரத்தவெறி பிடித்த ராஜபக்ஷே உத்தரவு போட்டு இருக்கிறான். யாரை வெளியேறச் சொல்கிறான்? பத்திரிகையாளர்களே உங்களுக்காகத்தான் சொல்கிறேன். உங்கள் மூலமாக இந்த நாட்டுமக்களுக்காகச் சொல்கிறேன்.
கண்ணகி நீதிகேட்ட மதுரையில் இருந்து நான் நீதி கேட்கிறேன். தமிழ்ப் பெருமக்களிடத்தில் இதை முன் வைக்கிறேன். ஓட்டுக்காகவோ, பதவிகளுக்காகவோ உருவாக்கப்பட்டது அல்ல இந்தக் கட்சி. அண்ணாவின் கொள்கைக்காக, சர்வபரித் தியாகத்துக்கும் தயாராக இருக்கின்ற நாங்கள், அந்த கொள்கைக்காக இருப்போம்.
தொண்டு நிறுவனங்களை வெளியேறச் சொல்கிறவன் யார்? விடுதலைப்புலிகளை வெளியேறச் சொல்கிறானா? அவன் வெளியேறச்சொல்வது மனித உரிமைக் கமிஷனை. அவன் வெளியேறச் சொல்வது செஞ்சிலுவைச் சங்கத்தை. அவன் வெளியேறச் சொல்வது பன்னாட்டுச் செய்தியாளர்களை.
அப்படியானால் அங்கே தமிழர்களைப் பூண்டோடு அழிப்பதற்கு அவன் திட்டம் போட்டு விட்டான். தமிழ் இனத்தைக் கருவறுக்கத் திட்டம் போட்டுவிட்டான். நம் கண்முன்னாலேயே நம் இனம் அழிக்கப்பட கொக்கரிக்கிறான். அவன் அழிக்க முடியாது. தமிழர்களை ஒருக்காலும் அழிக்க முடியாது. புலிகளைப் போரில் வெல்லவும் முடியாது. வென்றதாக அவன் கோயபல்ஸ் வேலைகளைச் செய்கிறான்.
விண்ணிலும், மண்ணிலும், கடலிலும் வீரச்சமர் புரிகின்றார்கள் விடுதலைப்புலிகள். அவர்களுக்கு எந்த நாட்டுக்காரன் ஆயுதம் தருகிறான்? உலகில் இதுவரை நடைபெற்ற புரட்சிகள் அனைத்திலும் பிறநாடுகள் ஆயுதம் வழங்காத புரட்சிகள் எதுவும் கிடையாது. அது யூதர்களின் இஸ்ரேல் உதயமாவதில் இருந்து, வியட்நாம் உருவானதில் இருந்து ஏன் கியூபா போராட்டத்தில் என எல்லாப் போராட்டங்களுக் குமே வெளியில் இருந்து பிறநாடுகளில் இருந்து ஆயுத உதவிகள் கிடைத்தன. ஆனால், தமிழர்களுக்கு ஆயுத உதவிகள் எதுவும் இல்லை. இன்றைக்கு அவர்கள் யுத்தகளத்தில் இருக்கிறார்கள். அவர்களை அழிக்க முடியாது. 28 பேரோடு காடுகளுக்குச் சென்றுபடை திரட்ட முடிந்த அவர்களால், எதையும் சாதிக்க முடியும்.
ஆனால், இந்த வாசகம் நான் எழுதவில்லை தோழர்களே, செய்தியாளர்களே, வாஷிங்டன் போஸ்ட்டில், எல்.டி.டி.இ. தடைசெய்யப்பட்டு இருக்கும் அமெரிக்காவில் வாட்டர்கேட் ஊழலை அம்பலப்படுத்தி அதிபர் நிக்சனை பதவியில் இருந்து தூக்கி எறிய காரணமான - வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் புரூஸ் ஃபெயின் என்பவர் எழுதி இருக்கிறார். என்ன எழுதி இருக்கிறார் தெரியுமா? என்னுடைய ஆரிய இனம்தான் ஆதிக்க இனம் என்றான் ஹிட்லர். எங்கள் இனம் தான் உயர்ந்த இனம். யூதர்கள் ஒருவர்கூட இந்த உலகத்தில் வாழக்கூடாது என யூதர்களை விஷவாயு அறைக்கு உள்ளே போட்டுக் கொன்றான். இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தான். அன்றைக்கு ஹிட்லரின் நாஜிக்கள் யூதர்களைக் கொன்றதைப்போல, ராஜபக்சே படை இலங்கைத் தீவில் தமிழ் ஈழத்தில் தமிழர்களைக் கொல்கிறது என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் போன மாதம் 20 ஆம் தேதி அன்று எழுதி இருக்கிறார்.
இதற்கு இலங்கை அரசு என்ன சொல்கிறது தெரியுமா? அமெரிக்கப் பத்திரிக்கைகாரன் பணம் வாங்கிக் கொண்டு செய்தி போட்டு இருக்கிறான் என்கிறது. அடுத்து ஐரோப்பிய யூனியன் மீது இலங்கை கடித்து குதறுகிறது. விடுதலைப்புலிகளை தடைசெய்த ஐரோப்பிய யூனியன் சார்பில் இலங்கையில் உள்ள நிலைமை கண்டு அறிகிற குழுவின் தலைவர் ஜீலியன் வில்சன், அவர் சென்று பார்த்து விட்டுச் சொல்கிறார், ‘இலங்கைத் தீவில் தமிழ் இனம் அழிக்கப்படுகிறது. இந்த இரண்டரை ஆண்டுக் காலத்தில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் தமிழர்கள் காணாமற் போய் விட்டார்கள். உணவு இல்லை, மருந்து இல்லை, ஒரு இனமே செத்துக் கொண்டு இருக்கிறது’ என்று எழுதினார். அவரையும் தாக்கி, இலங்கை அரசு இழிச்சொல் வீசுகிறது.
ஐ.நா.சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் லூயிஸ் ஹார்பர் அம்மையார், இலங்கையில் தமிழர் பகுதிகளுக்குச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதைவிடக் கொடுமை என்ன தெரியுமா? ஐ.நா.சபையின் அலுவலகத்தை கொழும்பில் திறக்கவும் அனுமதிக்கவில்லை. செய்தியாளர்களை உள்ளே விடவில்லை. வெளியேறச் சொல்கிறார். அந்த வாஷிங்டன் போஸ்ட்டில் எழுதுகிறவர் அழகாகச் சொல்லிவிட்டார். இப்படித்தான் சூடான் நாட்டு அதிபர் உமர் அல் பசீர் தர்பூர் இன மக்களை இலட்சக்கணக்கான மக்களை அழித்துக் கொண்டு இருந்தான். இன்றைக்கு உலக நீதிமன்றத்தில் சர்வதேச குற்றஇயல் நீதிமன்றத்தில் எந்த நீதிமன்றம் நாஜிகளை தூக்கில் போட்டதோ அதே நீதிமன்றத்தில் பழங்குடியினத்தை அழிக்கிறான் சூடான் அதிபர் என்று குற்றம் சாட்டி உள்ளது. கைது வாரண்டும் பிறப்பிக்க தயாராகி விட்டது.
இன்றைக்கு அதிபர் சீர் தன் நாட்டை விட்டு வெளியே போக முடியாது. வெளியேபோனால் கைது செய்யப்படலாம். உலகம் கண்மூடிக் கொண்டு இருக்காது. இராஜபக்சேவை இந்த மதுரையில் இருந்து எச்சரிக்கிறேன். சூடான் நாட்டு அதிபரை சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் நிறுத்தியதுபோல, உன்னையும் நிறுத்துகின்ற காலம் வரும் என்று எச்சரிக்கிறேன். நாதியற்றுப் போய் விடவில்லை தமிழன். அவ்வளவு பேரையும் கொன்று விட்டு இங்கு எங்கள் சமுத்திரத்துக்கு வந்து இங்குள்ள மீனவர்களையும் கொல்கிறாயா? சோறு போட்டுச் சாப்பிடுகிற தமிழன் மானத்தோடு இருக்கின்ற தமிழன் நாங்களும் தமிழ்நாட்டில் இருக்கிறோம் என்பதை மறந்துவிடாதே.
தமிழகத்தில் பழ.நெடுமாறன் திரட்டிய உணவையும், மருந்தையும் கொடு என்று மன்றாடினேனே? செஞ்சிலுவைச் சங்கத்துக்கு உணவையும், மருந்தையும் அனுப்ப மறுத்த இந்திய அரசே, பண்டித ஜவஹர் லால் நேரு ஆட்சி நடத்திய இந்தியாவா இது? இந்திரா காந்தி அம்மையார் ஆட்சி நடத்திய இந்தியாவா இது? நடுநிலை நாடு கொள்கை ஏற்ற இந்தியாவா? கூலிப்படைக்கு ஆள் அனுப்பி இருக்கிறாய் இங்கே இருந்து. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு உணவையும், மருந்தையும் அனுப்ப மாட்டாயா? ராசபக்சேவுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்?
அவன் மனித உரிமைக் கமிஷனை வெளியே போகச் சொல்கிறான். நாங்கள் திரட்டிக் கொடுத்த உணவையும், மருந்தையும் செத்துக்கொண்டு இருக்கின்ற எங்கள் சகோதரர்களுக்கு, பிள்ளைகளுக்கு, தாய்மார்களுக்கு, சகோதரிகளுக்கு இந்த உணவும், மருந்தும் சேரட்டும் என்கிறபோது அதைக் கொடுக்கக்கூடாது என்று தடுக்கிற மன்மோகன்சிங் அவர்களைக் கேட்கிறேன், இதைத் தடுத்த துரோகி யார்? இந்த யோசனையைச் சொன்ன கேடுகெட்ட கயவன் யார்?
கடந்த 9 ஆம் தேதி இரவு 2.30 மணிக்கு வன்னியில் இருக்கக்கூடிய சிங்கள இராணுவத் தலைமையகம் மீது, வானத்தில் இருந்து வந்து புலிகளின் விமானங்கள் குண்டு வீசிற்று. 10 கரும்புலிகள் நெஞ்சில் நஞ்சுக் குப்பிகளைக் கட்டிக்கொண்டு சாவை வரவழைத்து, மரணத்துக்கு அழைப்பிதழ் விடுத்துக்கொண்டு, மந்தகாசப் புன்னகையோடு போர்புரிந்து மடிந்தார்கள். இந்தியா கொடுத்த ரேடார்கள் சுக்குநூறாகிவிட்டது. ரேடார் கொடுக்காதே என்று சொன்னேனே! இந்தச் சண்டையில் ரேடார்கள் இயக்கிய இரண்டு இந்திய இராணுவப் பொறியாளர்கள் காயம் அடைந்தனர்.
ஒருத்தன் பெயர் ஏ.கே.தாகூர். இன்னொருவன் பெயர் சிந்தாமணி ரவுட். இவர்கள் இரண்டு பேரும் இந்தியர்கள். நான் மதுரை மாநாட்டின் மூலமாக மத்திய அரசைக் கேட்கிறேன் இந்திய இராணுவத்தில் பணியாற்றக்கூடிய இந்த இரண்டு பொறியாளர்களை அனுப்பி இருக்கிறீர்களே, கூலிப்படை வேலை செய்யவா? அங்கு நடக்கிற யுத்தத்துக்கு சிங்களத்துக்காரனுக்காக ஆள்திரட்டி அனுப்புகிறீர்களே! கூலிப்படையா இது? கேள்வி கேட்க நாதி இல்லையா? இங்கு வந்து நமது கடல் பகுதியில் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்கிறான். இனிமேல் சுட மாட்டான் பரிவோடு நடப்பான் என்று புரோக்கர் நாராயணனை விட்டு அறிக்கை விட்டீர்களே,
அதற்குப்பிறகு நேற்றுமுன்தினம் வரை தாக்குதல் நடத்துகிறார்களே, கேள்வியே கிடையாதா? அப்படியானால் இந்த இருவர் மட்டும் அல்ல, இந்தியத் தூதரகச் செய்தியாளர் சொல்கிறார், 265 இந்தியர்கள் முக்கியமான இடங்களில் இருந்து இந்தச் சண்டையில் இலங்கை இராணுவத்துக்கு உதவிக் கொண்டு இருக்கிறார்கள் என்கிறான். இதைக் கேட்க வேண்டிய நேரம் இந்நேரம்தானே. மத்திய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி செய்யக்கூடாது என்று சொன்னோம். மத்திய அரசு இலங்கையில் நடக்கும் இனக்கொலைக்கு உதவுகிறது. அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். இந்தியா அனுப்பி இருக்கக்கூடிய ரேடார்களின் உதவியை வைத்துக் கொண்டுதானே விமானங்கள் குண்டுவீசி 68 பச்சிளம் குழந்தைகள் செஞ்சோலையில் கொல்லப்பட்டன. சுனாமி ஊழியர்கள் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆக, இப்படிப்பட்ட இனப்படுகொலைக்கு உதவியாக இருக்கிறது இந்திய அரசு. இதற்கெல்லாம் பாடம் கற்பிக்க வேண்டிய நேரம் வந்து உள்ளது. மத்திய அரசு மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பைத் தேடிக்கொண்டு இருக்கிறது.
கச்சா எண்ணெய்விலை நூறு டாலர் சர்வதேசச் சந்தையில் குறைத்து விட்டானே, நீஏற்றிய விலையை ஏன் குறைக்க மறுக்கிறாய்? இந்த விலை ஏற்றத்துக்குக் காரணமே தவறான பொருளாதார கொள்கைதானே? ஊக வணிகம், இணைய தள வணிகம், வர்த்தக சூதாட்டம், தவறான பொருளாதார கொள்கை. இந்திய இறையாண்மையை அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கு அடகு வைத்து விட்ட கொடுமை. மத்திய அரசு மக்கள்விரோத அரசு. அந்த மத்திய அரசில் அங்கம் வகிப்பதுதான் தி.மு.க.
மாநிலத்தில் அனைத்துத் தரப்பு மக்களிடமும் இந்த ஆட்சி மீது வெறுப்பு. உரம் இல்லை - விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வழி இல்லை - நடைபெறும் மணற்கொள்ளை - ஏற்பட்டுவிட்ட மின்வெட்டு - ஏறி இருக்கின்ற விலைவாசி - தலைவிரித்து ஆடுகின்ற ஊழல் - காவல்துறை அதிகார மையங்களுக்குக் கப்பம் கட்டி சேவகம் செய்கின்ற கொடுமை - இந்த அக்கிரமங்களில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்ற உணர்வோடுதான் அண்ணாவின் பிறந்த நாள் விழாவின்போது நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்.
அண்ணா அவர்களே, நீங்கள் யேல் பல்கலைக் கழகத்தின் அருமையான குறிக்கோள் வாசகத்தை உங்கள் மனம் கவர்ந்ததாகச் சொன்னீர்கள். அந்த வாசகங்கள் அருமையான வாசகங்கள் நம் தோழர்களுக்குத் தேவையான வாசகங்கள். அவர் சொன்னார் If not I then who? நான் இல்லாவிட்டால் வேறு யார்? If not now then when? இப்பொழுது இல்லாவிட்டால் வேறு எப்போது? இன்னொருவர் செய்வார் என்று எதிர்பார்க்காதே. நான் இல்லாவிட்டால் வேறு யார்? நானே இந்த வேலையைச் செய்கிறேன்.
இந்த அக்கிரம அரசை எதிர்த்து, மக்கள்விரோத தி.மு.க. அரசை எதிர்த்து, ஊரை அடித்து உலையில் போடுகின்ற இந்த மைனாரிட்டி அரசை எதிர்த்து, இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களின் வேதனைகளுக்குக் காரணமான மன்மோகன் சிங் அரசை எதிர்த்து மக்கள் சக்தியைத் திரட்டுகின்ற கடமையில் நாம் ஈடுபடுவோம்.
அண்ணா அவர்களே, எங்கள் தோள்களுக்கு வலிமையும் எங்கள் இதயத்துக்கு வலிவையும் தாருங்கள். உங்கள் கொள்கை காக்கும் கூட்டமாக மறுமலர்ச்சி தி.மு.க. போராடும். உங்கள் இலட்சியங்களை வென்றெடுக்கும் கூட்டமாக நாங்கள் போராடுவோம். அந்தக் கனவுகளுக்காகவே நாங்கள் வாழ்கிறோம். நாங்கள் கொண்டு இருக்கின்ற தோழமை 1972 உடன் 1993 கைகோர்த்து இருக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கைகோர்த்து இருக்கிறது.
தேர்தல் என்றைக்கு வந்தாலும் ஆளும் அரசுகளைத் தூக்கி எறிய மக்கள் சக்தியைத் திரட்டுவோம். அந்த உறுதியோடு செயலாற்றுவோம்.
வெட்டட்டும் கூர்வாள்கள் பகையை நோக்கி
வெடிக்கட்டும் அதிர்வேட்டுப் போர்முழக்கம்
எட்டட்டும் நெடுவானை ஈட்டிக் கூட்டம்
எதிரிகளின் மார்புக்குள் குடியேறட்டும்
கட்டட்டும் மூட்டையினை இனப்பகைவர் இல்லை
கட்டாரி முத்தத்தைச் சுவை பார்க்கட்டும்
பட்டத்தைப் போல் கழகக் கொடியின் கூட்டம்
பறக்கட்டும் நெடுவானில்!
வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

