இணையதள வணிகம் என்ற சூதாட்டத்தைத் தடை செய்க . மு . செந்திலதிபன்

விவகாரங்கள்: பொருளாதாரம்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள்

“இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணித்துக்கொண்டு இருக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதத்தைத் தாண்டி விட்டது. இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனை” என்றெல்லாம் நிதிஅமைச்சர் ப.சிதம்பரம், தமது நிதித்துறைக்குத் தாமே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டு வருவது வாடிக்கை ஆகி விட்டது. ஆனால், உண்மை நிலை நிலை என்ன என்று ஆராய்ந்தால், பொருளாதார வளர்ச்சியின் பலன் நாட்டு மக்களுக்குத் துளி அளவுகூடச் சென்று அடையவில்லை.

கடந்த நிதிஆண்டில் (2005 - 2006) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( Gross Domestic Product-GDP ) 9 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் (2006 - 2007) வளர்ச்சி விகிதம் 9.2 சதவீதமாக இருக்கும் என்று மத்திய புள்ளியியல் அமைப்பு ( Central Statistical Organisation -CSO ) கணித்து உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தித் துறையில் 11.3 விழுக்காடு வளர்ச்சியும், கட்டுமானத்துறையில் 9.4 விழுக்காடு வளர்ச்சியும், நிதி, காப்பீடு போன்ற துறைகளில் 11.1 விழுக்காடு வளர்ச்சியும், சுரங்கம் மற்றும் கல்குவாரியில் 4.5 விழுக்காடு வளர்ச்சியும் ஏற்பட்டு உள்ளன.

ஆனால், விவசாயத் துறையின் வளர்ச்சி 2.7 விழுக்காடு என்ற அளவில் தொடர்ந்து வீழ்ச்சியின் விளிம்பில் நின்றுகொண்டு இருக்கிறது. நாட்டின் விவசாயத்துறையின் வளர்ச்சி பின்தங்கி உள்ளதால், விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக விலைவாசி மிகமிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது. 2004, மே மாதம் மன்மோகன்சிங் அரசு பதவி ஏற்றபிறகு விலைவாசி ஏறுமுகமாகவே இருந்தது. இரண்டரை ஆண்டுகளில் விலைவாசி கிடுகிடுவென்று உயர்ந்துவிட்டது.

விலைவாசி உயர்வுக்கு அடிப்படையான நாட்டின் பணவீக்க விகிதம் 6.73 விழுக்காடாக உயர்ந்துவிட்டது.

பணவீக்க விகிதம் என்பது, நாட்டின் மொத்தவிலை குறியீட்டு எண் ( Wholesale Price Index-WPI ) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. பணவீக்க விகிதம் உயரும்போது இதன் விளைவாக நுகர்வோர் விலை குறியீட்டு எண் ( Consumer Price Index -CPI ) உயர்ந்து விடும். விலைவாசி கட்டுக்கு அடங்காமல் போய்விடுகிறது.

கடந்த ஆண்டில் 2006, ஜனவரி 28 இல் 4.04 விழுக்காடாக இருந்த பணவீக்கம், 2007 ஜனவரி 28 இல் 6.11 விழுக்காடாக உயர்ந்தது. இது மேலும் 6.58 விழுக்காடாக ஜனவரி 27 இல் உயர்ந்து, தற்போது 2007 பிப்ரவரி 3 இல் 6.73 விழுக்காடாக அதிகரித்து இருக்கிறது. பணவீக்கத்தை 4 விழுக்காட்டுக்கு உள்ளே கொண்டுவந்து கட்டுப்படுத்துவோம் என்று நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் வாய்ச்சவடால் அடித்தார்.

ஆனால், ஒரே ஆண்டில் ஆண்டு பணவீக்கம் 2.5 விழுக்காடு உயர்ந்து விட்டது. இதனால் விலைவாசி, கடுமையாக உயர்ந்து, நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். ‘பொருளாதாரப் புலி’ சிதம்பரம், புள்ளிவிபரங்களை அள்ளி வீசுவதில் கைதேர்ந்தவர். ஆனால், அவை அத்தனையும் ஏட்டுச் சுரைக்காய். கறிக்கு உதவவில்லை. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடையும்போது, அதன் எதிரொலியாக விலைவாசி உயர்வு இருக்கத்தான் செய்யும்” என்று முதலில் திருவாய் மலர்ந்தார் சிதம்பரம். தற்போது உணவுப்பொருள் உற்பத்தி பற்றாக்குறை காரணமாக விலை உயர்ந்து வருகிறது என்று காரணம் கூறுகிறார்.

ரிசர்வ் வங்கி எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளான வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் (Cash Reserve Ratio-CRR) அதிகரிப்பு மற்றும் வங்கிகள் பெறும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் ( Repo Rate ) உயர்வு போன்றவற்றால் விலைவாசி உயர்வைத் தடுக்க முடியவில்லை. பிப்ரவரி 15 இல் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ. 2, டீசல் விலையில் லிட்டருக்கு ரூ. 1 என மத்திய அரசு விலை குறைப்பு அறிவித்த பிறகும் விலைவாசி குறையவில்லை.

மத்திய அரசு தற்போது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திட கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்து உள்ளது. மேலும் பருப்பு வகைகளை இறக்குமதி செய்வதற்கு சுங்கவரியை இரத்து செய்து உள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவரவோ, விலைவாசி உயர்வதைத் தடுக்கவோ முடியவில்லை. அனைத்து உணவுப் பண்டங்களும் விலை உயர்ந்து விட்டன. கோதுமை 11.74 சதவீதமும், பருப்பு வகைகள் 22 சதவீதமும், சமையல் எண்ணெய் 11.60 சதவீதமும் விலைகள் உயர்ந்துவிட்டன. உணவுப் பொருள் மட்டுமின்றி உற்பத்திப் பொருட்களான இரும்பு, சிமெண்ட், உலோகம், காகிதம் போன்றவையும் விலை உயர்ந்து இருக்கின்றன.

விவசாய வளர்ச்சி சரிவும், உணவுப் பொருட்கள் உற்பத்தி வீழ்ச்சியும், கோதுமை, பருப்பு போன்ற உணவுப் பொருட்களின் உள்நாட்டுக் கொள்முதல் நிறுத்தப்பட்டதும் விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அதே நேரத்தில் விலைவாசி உயர்ந்து வருவதற்கு இணையதள வர்த்தகச் சூதாட்டம் ( On Line Commodity Trading ) முக்கிய காரணமாகும் என்பதை மன்மோகன்சிங் அரசு ஏற்க மறுத்து வருகிறது. ஊக வணிகம் ( Futures Trading ) என்ற பெயரில் நாட்டைச் சூறையாடி வரும் இந்த “ஆன்லைன் வணிகத்தை”த் தடை செய்யாவிட்டால் நாட்டில் கொந்தளிப்பு ஏற்படுவதை அரசு தடுக்கமுடியாது.

‘இணைய தள விற்பனை’ என்பது இரு நிறுவனங்களுக்கு இடையே ஒரு பொருளை ஊக விலையின் அடிப் படையில் எதிர்காலத்தில் வாங்கவும், விற்கவும் இணையதளம் மூலம் செய்து கொள்ளப்படுகின்ற ஒப்பந்தம் ஆகும். அதாவது ஒரு விற்பனையாளர் மூன்று (அ) நான்கு மாதங்களுக்குப் பிறகு தோராயமான ஊக விலைக்கு உணவு தானியங்களை வாங்குவதாக, வாங்குபவரிடம் இணையதளம் மூலம் ஒப்புக்கொள்ளும் முறை ஆகும். அரிசி, பருப்பு, காய்கறிகள் முதல் தங்கம் வரை 150 பொருட்களுக்கு மேற்பட்டவை “ஆன் லைன் வர்த்தகம்” என்ற வலைக்குள் சிக்கிக்கொண்டு இருக்கின்றன.

ஒரு பருப்பு வியாபாரியிடம் ஒரு நிறுவனம் இணையதளம் மூலம் கிலோ ரூ.30க்கு உளுத்தம்பருப்பு வாங்க ஒப்பந்தம் செய்து கொள்கிறது. பிறகு வேறொரு நிறுவனம் அதே வியாபாரியிடம் ஒரு கிலோ பருப்பை ரூ 50 க்கு வாங்குவதாகவும் தமக்கு 10 டன் பருப்பு தேவை என்றும் கேட்கிறது. அவர் ரூ. 30க்கு பருப்பை விற்பதாக ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனத்திடம் இருந்து அதே பருப்பை ரூ. 40க்கு வாங்கிக்கொள்வதாக புதிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அந்தப் பருப்பை ரூ. 50க்கு வாங்குவதாகக்கூறிய நிறுவனத்திடம் விற்பதற்கு ஒப்புக்கொள்கிறார்.

இவ்வாறு பல நிறுவனங்கள் அதிகவிலைக்கு வாங்குவதாக ஒப்பந்தம் போட்டுக் கொள்கின்றன. நாட்டின் ஒட்டுமொத்த பருப்பு விளைச்சலும், இந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் சிக்கிவிடுகின்றன. பிறகு இந்த நிறுவனங்கள் அவற்றைப் பதுக்கி வைத் துக்கொண்டு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குகின்றன. மீண்டும் விலையை உயர்த்தி சந்தையில் அதே பருப்பை ரூ. 60 க்கு விற்று விடுகின்றன. இதன்மூலம் ரூ. 30 க்கு விற்ற பருப்பு, இணையதள வர்த்தகச் சூதாடிகளால் செயற்கையாக விலை உயர்த்தப்பட்டு, 100 மடங்கு விலை ஏறி, மக்கள் தலையில் விழுந்து விடுகின்றது.

பருப்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கோ அல்லது விற்பனை செய்யும் வணிகர்களுக்கோ இதனால் எந்தப்பலனும் இல்லை. மாறாக உற்பத்தியிலோ, விற்பனையிலோ எந்தவிதப் பங்களிப்பும் இல்லாத நிழல் தரகர்கள் ஊக வணிகத்தின் மூலம் கோடி கோடியாய்க் கொள்ளை அடிக்கிறார்கள்.

கடந்த ஒரு ஆண்டில் இணையதள வணிகத்தின் விளைவாக உளுத்தம் பயறுக்கு செயற்கையாகத் தட்டுப்பாடு ஏற்பட்டு, உளுத்தம் பருப்பின் விலை தாறுமாறாக உயர்ந்து விட்டது. வாஜ்பாய் அரசு, 2003 இல் ஊக வணிகத்திற்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை அடியோடு இரத்து செய்தது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளில் விவசாய விளைபொருள்கள் 600 விழுக்காடு அளவுக்கு ஊக வணிகத்தின் மூலம் உயர்த்தப்பட்டு இருக்கின்றன.

விவசாயிகள் உற்பத்திசெய்யும் உணவுதானியங்களைக் கொள்முதல் செய்வதற்கும் உரிய கட்டுப்படியான விலைகொடுப்பதற்கும் தயாராக இல்லாத அரசு, நாட்டில் உற்பத்தி ஆகும் உணவுப்பண்டங்களை ஊக வணிகம், இணைய தள வணிகம் மூலம் ஏகாதிபத்திய நிறுவனங்கள் கைப்பற்றிக் கொள்ளையடிப்பதை அனுமதித்து இருக்கின்றது.

ஆன்லைன் வணிகப் பரிமாற்றம் மூலம் அரசாங்கத்திற்கு சேவை வரியாக கோடிக்கணக்கில் வரவு வருகிறது என்று நிதி அமைச்சகம், கண்மூடித்தனமாக இந்த மோசடிகளுக்குத் துணைபோய்க் கொண்டு இருப்பது வெட்கப்பட வேண்டிய, வேதனைப்பட வேண்டிய விஷயம்.

ஆன்லைன் வணிகச் சூதாட்டத்தால் விலைவாசிகள் தாறுமாறாக உயர்ந்து இருக்கின்றன. செயற்கையான உணவு தானியத்தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு, கடத்தலும், பதுக்கலும், கள்ளச் சந்தையும் பெருகுகின்றன. இணையதள விற்பனை காரணமாக நேரடிக் கொள்முதல் - விற்பனைக்கான வாய்ப்புகள் குறைந்து, பல்லாயிரக்கணக்கான வணிகர்களும், தொழிலாளர்களும் வாழ்வு ஆதாரங்களை இழக்கும் நிலை உருவாகி விட்டது. வேலைவாய்ப்பு, வருமான வாய்ப்பு பறிக்கப்பட்டு பலகோடி மக்களின் வாழ்க்கையை வறுமை இருள் சூழத்தொடங்கிவிட்டது.

நாட்டின் பொருளாதாரமே இந்தச் சூதாட்டத்தில் சிக்கிச் சீரழிந்து திவால் ஆவதற்கு உள்ளாக, மைய அரசு உடனடியாக இணையதள வணிகச் சூதாட்டத்தைத் தடைசெய்யவேண்டும்.

மக்கள்தொகை அதிகம்கொண்ட மக்கள் ஆட்சி நாடான இந்தியாவில் வெகுமக்களைப் பாதிக்கும் “ஆன் லைன் வர்த்தகம்” போன்றவற்றை அனுமதிப்பது நல்லது அல்ல.

இதைப்போலவே சில்லரை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்து பெரும் நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை இலட்சக்கணக்கான வணிகர்களின் வாழ்வைப்பறிக்கும் நடவடிக்கைக்கு மைய அரசு அனுமதியை ரத்து செய்திட வேண்டும். மைய அரசு இவற்றை ஏற்காமல், பொருளாதார விளக்கங்களைக் கூறி மக்களை ஏய்க்க நினைத்தால் - மக்கள் உள்ளத்தில் கிளர்ந்து எழும் புரட்சிப் பொறி பெருநெருப்பு ஆகும். ஏகாதிபத்தியம் எந்த வடிவில் வந்தாலும் மக்கள் சக்தி அதனை எரித்துச் சாம்பல் ஆக்கிவிடும் என்பதுதான் வரலாறு. எச்சரிக்கை!

(சங்கொலி, 9.03.2007)

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)