நம்பிக்கை நாயகன் ஒபாமாவின் வெற்றிகள் தொடரட்டும்! வைகோ
விவகாரங்கள்: சர்வதேசம், இலக்கியம், அரசியல்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: என்றும் இனியவை, சொற்பொழிவுகள்
காலதேவதை கோடிப் பூக்களைத் தூவினாள்!
வரலாற்றுத் தச்சனின் கல் உளி, வாழ்த்துச் செதுக்கியது!
உறைய வைக்கும் பனிக்குளிரில், நாற்பது இலட்சம் கண்கள் நனைந்தன!
பல விழிகளில் முத்துத் துளிகள்;
பல கன்னங்களில் கண்ணீர்த் தாரைகள்!
கருப்பர் இன மக்களின் அடிமை விலங்கை முற்றாக உடைக்க முடியாவிடினும், அதனைத் தளர்த்துவதற்காக, 1863 ஜனவரி முதல் நாள், புனிதக் கடமையாகக் கருதி, தன் விரல்கள் பற்றிய தங்கப்பேனாவால், உரிமைப் பிரகடனத்தில், அமெரிக்க அதிபராகக் கையெழுத்து இட்ட ஆபிரகாம் லிங்கன், கம்பீரமாக அமர்ந்து இருக்கும் நெடிதுயர்ந்த சிலையில் இருந்து, தேசிய திறந்தவெளி எங்கும் திரும்பும் திக்கெல்லாம், காணும் இடமெல்லாம் இருபது இலட்சம் மக்கள் கண்டுகளித்த கோலாகலக் காட்சிதான், பாரக் ஒபாமாவின் பதவி ஏற்பு விழா ஆகும்.
வாசிங்டன் நகரின் பென்சில்வேனியா வீதியில் அமைந்து உள்ள வெள்ளை மாளிகையின் வாயிலில் இருந்து, 2009 ஜனவரி 20 ஆம் நாள், அந்தக் கருப்பு நிலா ஊர்வலம் புறப்பட்டது.
மகிழ்ச்சி அலைகளில் மிதந்தவாறு, அமெரிக்காவின் முதல் பெண்மணியாக, இனி புவனமெங்கும் பவனி வர இருக்கும், காதல் மனைவி மிட்செல் ஒபாமா, பிரிய மகள்கள் மலியா, சாசா ஆகியோரும் உடன் வந்தனர்.
பதவி ஏற்பு விழாவில் முதல் வரிசையில் அமர இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர்கள், ஜிம்மி கார்ட்டர், ஜார்ஜ் புக்ஷ்(சீனியர்), பில் கிளிண்டன், பொறுப்பில் இருந்து விடைபெறும் ஜார்ஜ் புக்ஷ் ஆகியோர் வரிசையாக வந்தனர்.
ஒவ்வொரு விநாடியும் பரபரப்பு ஊட்டியது. உலகின் ஏழு கண்டங்களிலும், 120 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் கண்களும், மனங்களும், இந்தக் காட்சியிலேயே லயித்து இருந்தன. இன்றைய உலகின் காந்தக் கல்லாகத் திகழும் பாரக் ஒபாமா, அவருக்கே உரித்தான எழில் சிந்தும் மிடுக்கு நடையில், துணைவியின் கையைப் பற்றியவாறு படிகளில் நடந்து வந்தபோது, பரவசக் கரவொலி விண் முட்டியது.
பதவி ஏற்பு விழா தொடங்கியது! அமெரிக்காவின் புகழ்பெற்ற நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள், இசைக்கருவிகளை மீட்டிட, வெள்ளை இனத்துப் பாடகரும், கருப்பர் இனத்துப் பாடகியும் அடுத்தடுத்து, தங்களையே மறந்து, பொருள் பொதிந்த பாடல்களை, இனிய குரலில் பாடிட, அந்தப் பாடல் வரிகள் செவிகளில் விழுந்து, இதயங்களைக் கவ்வியது.
குடியரசுத் துணைத்தலைவர் ஜோ பைடன்,பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள, தன் துணைவியுடன், ஒலி பெருக்கிக்கு முன்னால் வந்து நின்றார். நீதிபதி ஜான் பால் ஸ்டீவன்ஸ் சொல்லச்சொல்ல, பதவிப் பிரமாணத்தை பைடன் வாசித்தார்.
இதோ, சரித்திரத்தின் மிக உன்னதமான நிகழ்ச்சி, அரங்கேறுகிறது.
தளிர்ப்பச்சை வண்ண உடை, கழுத்தில் இருந்து, கால்கள் வரையிலும் அலங்கரிக்கும் தோற்றத்துடன்,மனைவி மிச்செல் கையைப் பற்றி உடன்வர, சிவப்பு வண்ண டையும், கருப்பு நிற உடையும் அணிந்த பாரக் ஒபாமா, பதவி ஏற்க நடந்தபோது, அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும், கருப்பர்களின் அவலம் நிறைந்த காலங்களைத் தாண்டிச் செல்லுகின்ற ஒரு நாயகன், அம்மக்களுக்கும், உயர்த்திப் பிடிக்கப் போகும், சுதந்திர வெளிச்சத்தை நோக்கியே செல்வதாக இருந்தது.
பாரக் ஒபாமாவின் துணைவி மிச்செல் கைகளில், ஆபிரகாம் லிங்கன் வாசித்த பைபிள் புத்தகம் இருந்தது. அந்தப் புத்தகத்தின் மீது, தன் உள்ளங்கையை விரித்து, ஐந்து விரல்களும் பதியுமாறு வைத்துக்கொண்ட ஒபாமா,அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், பதவிப் பிரமாண வரிகளை ஒவ்வொன்றாகச் சொல்ல, ஒபாமா அதைத் திரும்பக்கூறும் மரபுப்படிச் சொல்லி பிரமாணம் எடுக்க நின்ற ஒபாமாவின் உள்ளத்தில், எண்ண அலைகள், எப்படியெல்லாம் மோதி இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க நம்மால் இயலவில்லை.
இதோ, தொடங்கிவிட்டார் ஜான் ஜி. ராபர்ட்ஸ். “I do solemnly swear(or affirm)that I will faithfully execute the office of President of the United States,and will to the best of my ability,preserve,protect and defend the Constitution of the United States" 36 சொற்கள் கொண்ட பதவிப் பிரமாணம்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடியரசுத் தலைவர் அலுவலகப் பொறுப்பில் நேர்மையுடன் பணி ஆற்றுவேன் என்றும், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியல் சட்டத்தைப் பேணவும், போற்றவும், பாதுகாக்கவும், என்னால் இயன்ற அளவில் கடமை ஆற்றுவேன் எனவும் உளமார உறுதி ஏற்கிறேன்!
அமெரிக்காவின் 44 ஆவது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்கும் பாரக் ஒபாமா, பதவிப் பிரமாணம் செய்யும்போது, இரண்டாவது வரியை உச்சநீதிமன்ற நீதிபதி சொல்லி முடித்தவுடன், அதனை அப்படியே திருப்பிச்சொல்ல இயலாமல், மூன்று சொற்களோடு முடித்துக்கொண்டு, எதிர்பாராத ஒரு அதிர்ச்சி கலந்த திகைப்பில் நிற்க நேர்ந்தது.
இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு, அந்த ஒரு நிமிடம் இதயமே தன் துடிப்பை நிறுத்துவதுபோல் அதிர்ச்சி ஏற்பட்டது.
என்ன நடந்தது என்று அக்கணத்தில் முதலில் புரியவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதி, பதவிப்பிரமாண வரிகளை வாசிக்கும்போது, ‘நேர்மையுடன்’ என்ற சொல்லை விட்டுவிட்டார். அதை கடைசியாகத்தான் சொன்னார்.
அமெரிக்க சரித்திரம் காணாத அபூர்வமான பதவிப் பிரமாணம்தானே இது?அதனால்தான், இந்தச் சறுக்கலும், ஒரு அபூர்வமான சறுக்கலாக ஆகிவிட்டது.
ஜார்ஜ் வாஷிங்டன், ஆபிரகாம் லிங்கன், ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட், ஜான் கென்னடி இவர்களெல்லாம் பதவிப் பிரமாணம் மேற்கொண்டபின்னர் ஆற்றிய தொடக்க உரைகளைப் போலவே, பாரக் ஒபாமாவின் உரையும், வரலாற்றின் மகத்தான பதிவு ஆயிற்று.
பாரக் ஒபாமாவின், காந்தக்குரல் 19 மணித்துளிகள் ஒலித்தது. கையில் எந்தக் குறிப்பும் இல்லை. ‘நம்முடைய கடுமையான சிரமங்கள் நிறைந்து உள்ள இந்த உறைபனிக் குளிரில்...’ என்று, ஜார்ஜ் வாஷிங்டன் கூறியதைத் தன் உரையில் குறிப்பிட்ட ஒபாமா, நம்மை வாட்டுகின்ற இந்த உறைபனிச் சுழல்களைத் துணிச்சலோடும், நம்பிக்கையோடும், பண்பாட்டோடும் எதிர்கொள்வோம். எத்தகைய சூறைக்காற்று தாக்கினாலும் தாங்கிக் கொள்வோம்.
நம்முடைய பிள்ளைகளின் பிள்ளைகள் சொல்லட்டும். சோதனைகள் முற்றுகை இட்டதால், நம் பயணத்தை நிறுத்தவில்லை. நாம் புறமுதுகிடவில்லை, இடறவில்லை. அகன்ற வெளியில், குறிக்கோளை நோக்கியே நடந்தோம்.
இறைவனின் கருணையோடு, நாம் சுதந்திரம் எனும் மகத்தான பரிசினை, அந்த விருதை, பத்திரமாக இளந்தலைமுறையினரின் கைகளில் நாம் சேர்த்தோம் என்றே நம் வருங்காலத் தலைமுறையினர் கூறட்டும்.
நம்மைத் தாக்க நினைக்கும் பயங்கரவாத சக்திகளுக்குச் சொல்வோம்: எங்கள் உறுதியும், உணர்ச்சியும் வலிமை வாய்ந்தது. அதை நீங்கள் உடைக்க முடியாது. எங்களை முறியடிக்க இயலாது. நாங்கள் தோற்கடிப்போம்.
ஏமாற்றுக் கலையாலும், கருத்து உரிமையின் குரலை நெரிப்பதாலும், அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டு இருப்பவர்களுக்குச் சொல்வேன், வரலாற்றின் தவறான பக்கத்தில் நிற்கிறீர்கள். உங்கள் கைகள், எதேச்சதிகாரப் பிடியை உதறிவிட்டு நீளுமானால், அதை நாங்கள் பற்றுவோம்.
இந்த நாட்டில், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள், இந்துக்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லோரும் கைகோர்த்து வாழ, உறுதி அளிக்கிறோம்.
அமைதியும்-கண்ணியமும் நிறைந்த எதிர்காலத்தைத் தேடுகிற ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு நாட்டுக்கும் அமெரிக்கா நண்பனாகவே திகழும் வளமான வாழ்வுக்கு முன்னெடுத்துச் செல்ல நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம்.
அமெரிக்க மக்களாலும், அவனியோர் அனைவராலும் நேசிக்கப்படுகின்ற கென்னடி குடும்பத்தின் பிரதிநிதியாகத் திகழ்பவரும், பாரக் ஒபாமாவுக்குத் தயக்கம் இன்றித் தோள் கொடுத்தவருமான எட்வர்டு கென்னடி, மூளைப் புற்றுநோய்க்கு மருத்துவம் பெற்று, ஆபத்து இன்றித் திரும்பிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒபாமா தந்த விருந்தில் பங்கு ஏற்க வந்த வேளையில், மூச்சுத்திணறல் எற்பட்டது. எல்லோரையும்விட, பாரக் ஒபாமாவுக்குத்தான், பலத்த கவலையும், பதற்றமும் ஏற்பட்டது. சமாளித்துக் கொண்டார் எட்வர்டு கென்னடி.
நூறு ஆண்டுகளுக்கு முன்னால், எந்த வெள்ளை மாளிகைக்கு உள்ளே விருந்து உண்ணுமாறு ஒரு கருப்பர் இனத்துச் சாதனையாளனை, அமெரிக்க அதிபர் அழைத்ததற்கு, நாடு தழுவிய இழிச்சொல்லுக்கு ஆளானாரோ, அதே வெள்ளை மாளிகைக்கு உள்ளே, கருப்பர் இனத்துக் காந்த மனிதன் அதிபராக அமர்வது, விந்தையிலும் விந்தையன்றோ!
சிந்தையில் தேன் விதைக்கும் விந்தை அன்றோ!
பதவிப் பிரமாணம் மேற்கொண்டதில், பிரமாண வாசகங்களை இடம்மாறி உச்சரித்ததால், தவறு ஒன்றும் இல்லை என்று சட்டமேதைகள் சொன்னாலும், அடுத்த நாளே, வெள்ளை மாளிகைக்கு, அதே உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை வரவழைத்து, மீண்டும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் பாரக் ஒபாமா.
‘நான் இந்த இலக்கை எட்டுவேன்; குறிக்கோளை வெல்வேன்; வழியில் எந்த இடறும், தடையும் நேரினும் தகர்ப்பேன்; ஆயிரமாயிரமாய் இன்னல்கள் தாக்கினும், என் நம்பிக்கையை இழக்க மாட்டேன். ஆம்; நம்மால் முடியும் என்பதே அந்த நம்பிக்கை!
’ இந்த மணிவாசகங்களுக்கு, மனித குல வரலாற்றில் இலக்கணமான மாமனிதர்களின் வரிசையில், நமது இதய நாயகன் பாரக் ஒபாமா இடம் பெற்றுவிட்டார்.
2006 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவீர்களா? என்று அவரிடம் செய்தியாளர் ஒருவர் வினவியபோது, புன்முறுவல் உதட்டில் தவழ, நேரடியாகப் பதில் தருவதைத் தவிர்த்த பாரக் ஒபாமா, 2007 ஆம் ஆண்டின் பிப்ரவரியில், தாம் ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவேன் என்று, லிங்கனின் புகழ்பாடும் ஸ்பிரிங்ஃபீல்டு நகரில் அறிவித்தபோது, ஏடுகள் பல எள்ளிநகையாடின.
ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. ஹிலாரி கிளிண்டன்தான், வேட்பாளராகத் தேர்வு பெறுவார் என்று 71 விழுக்காட்டினர் கருத்துத் தெரிவித்தனர். பாரக் ஒபாமாவுக்கு,வெறும் 26 விழுக்காடுதான்.
ஆனால், ‘நம்மால் முடியும்’ என்ற அவரது நம்பிக்கையும், கோடிக்கணக்கான மனித மனங்களைச் சுண்டி இழுக்கும் அவரது உரையும், அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும், பிரளயத்தை எதிர்த்து நீச்சலிட்ட சாதனையாக நடந்தே விட்டதே!
தன் வழியில் குறுக்கே நின்ற, இமயம் நிகர்த்த மலைகளையே நகர்த்தி விட்டாரே!
2008 நவம்பர் 4 ஆம் நாள், தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தல் முடிவுகளை, சிஎன்என் தொலைக் காட்சியில் முழுமையும் கண்டுகளித்திட, மாதங்கள் பலவாகத் துடித்துக்கொண்டு இருந்தவன் நான். ஒரு கருப்பன், ஒருபோதும் அமெரிக்க அதிபராக முடியாது என்று எனது அமெரிக்க நண்பர்கள் என்னிடம் பந்தயம் கட்டியபோது, அவர்களிடம், ‘நண்பர்களே, நவம்பர் 4 என்பது இந்திய நேரப்படி எங்களுக்கு ஐந்தாம் தேதி. உங்களுக்கு 4 ஆம் தேதி இரவில், அந்த நேரம் உங்கள் கைத்தொலைபேசிகளை அணைத்துவிடாதீர்கள். பாரக் ஒபாமாவின் வெற்றிச்செய்தியை, உலகம் பறைகொட்டிப் பாராட்டும் வாழ்த்து ஒலியை, என் குரலிலேயே உங்களுக்குப் பதிவு செய்கிறேன்’ என்று, சவால் விட்டவன் அல்லவா நான்?
என்னுடைய வாழ்க்கையில், நான் எதிர்பாராத எத்தனையோ திருப்பங்கள்!
அதுபோலத்தான், நவம்பர் 4 ஆம் நாளும் அமைந்தது. இலங்கைத்தீவில், வடக்கு-கிழக்கு மாகாணங்களில், மண்ணின் மைந்தர்களாக, பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள், ஐரோப்பியர்கள் அத்தீவுக்கு வருவதற்குமுன்பே, காலனி ஆக்குவதற்கு முன்பே, தங்களுக்கு என்று ஒரு தனி அரசை அமைத்து, புகழோடு வாழ்ந்த அம்மக்கள், 1948 பிப்ரவரி 4 இல், பிரித்தானியப் பேரரசு, இலங்கைக்கு விடுதலை தந்து வெளியேறியபோது, பெரும்பான்மைச் சிங்களவர்களின் கைகளில் ஆட்சியை ஒப்படைத்ததன் விளைவாக, தமிழ் மக்கள், தங்களின் அடிப்படை உரிமைகளையும் இழந்து, இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டனர்.
சம உரிமைகள் கேட்டு, அறவழியில் போராடிய தமிழர்கள் மீது, சிங்கள அரசு கொடூரமான அடக்குமுறையை ஏவியது. விவரிக்க இயலாத துன்பங்களுக்குத் தமிழர்கள் ஆளாகினர். போலீசும், இராணுவமும் தமிழர்களை வேட்டையாடின. தமிழ்ப்பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். குழந்தைகள் கொல்லப்பட்டனர். தேவாலயங்கள், இந்துக் கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள், சிங்கள இராணுவத்தாலும், இனவெறியர்களாலும் தகர்க்கப்பட்டன.
தமிழர்கள், இனி சுதந்திர இறையாண்மை உள்ள நாடு ஒன்றை அமைத்து, வாழத் தீர்மானித்தனர். அந்தக் கோரிக்கையை முன்வைத்து, 1977 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், 90 விழுக்காடு தமிழ் மக்கள், தனிநாடு கோரிக்கையை ஆதரித்தனர்.
ஆனால், இலங்கை அரசு, கொடூரமான இராணுவத் தாக்குதல்களை நடத்தியது. தமிழ் இனப்படுகொலை நடந்தது.
இந்த நிலையில், அமெரிக்க நாட்டின் மசாசூசெட்ஸ் மாநிலத்தின் நாடாளுமன்றத்தில் (Commonwealth of Massachusetes) அமெரிக்காவிலேயே இந்த மாநிலச் சட்டமன்றம்தான் மசாசூசெட்ஸ் காமன்வெல்த் என்று அழைக்கப்படுகிறது.
அங்கே, 1979 மே 10 ஆம் நாள், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேறியது. ‘அமெரிக்க நாடாளுமன்றமும், குடியரசுத் தலைவரும், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அத்தீர்மானம் கேட்டுக் கொண்டது.
அந்த மாநில ஆளுநர் எட்வர்டு ஜே. கிங், அதே மே மாதம் 22 ஆம் நாளை ‘ஈழம் நாள்’ (Eelam Day) என்று அறிவித்து, அரசாங்க விடுமுறை அளித்தார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொடுமையைவிட நூறு மடங்கு கொடுமைகளை, இலங்கை அரசும், இராணுவமும் இன்று நடத்துகிறது. தமிழர்கள்மீது உலக நாடுகள் தடைசெய்து உள்ள கொத்துக்குண்டுகளை (Cluster Bombs) வீசுகிறது. ஐந்தரை லட்சம் மக்கள், குற்றுயிரும், குலை உயிருமாக வதைபடுகின்றனர்.
ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்ட அரசுகளைக் கண்டித்துக் குரல் எழுப்பியதற்காகக் கைது செய்யப்பட்டதால், நான் சென்னை புழல் மத்திய சிறையில் அடைபட்டு இருந்தேன்.
2008 நவம்பர் 4 ஆம் நாள் நான் சிறைக் கொட்டடியில். ஐந்தாம் தேதியும், அங்கேதான். இரவெல்லாம், அந்தச் சின்னக் கொட்டடிக்கு உள்ளே எனக்குத் தூக்கமே வரவில்லை. அதிபர் தேர்தலில், ஒபாமாவின் வெற்றிக்காக ஏங்கிக் கிடந்தது என் இதயம். என் கொட்டடியில், தொலைக்காட்சிப் பெட்டி இல்லை. வானொலி மட்டுமே இருந்தது.
ஐந்தாம் தேதி விடிந்தது. கருப்பர்கள் வாழ்விலும் விடியல் பிறந்தது.வானொலியில், ‘ஒபாமா முந்துகிறார்’ என்ற செய்தி, தேனலைகளாகச் செவிகளில் பாய்ந்தது. அதிபர் தேர்தலுக்கான வாக்கு ஆணையத்தில்..270 வாக்குகள் கிடைத்தால் வெல்லலாம்.ஆனால், அனைவரின் எதிர்பார்ப்புகளையும் புரட்டிப்போட்டுவிட்டு, பாரக் ஒபாமா, 364 வாக்குகள் பெற்றார். குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கைனுக்கு, 174 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
ரோசா பார்க்ஸ் அம்மையார், கல்லறைக்கு உள்ளே உவகையில் சிரித்து இருப்பார். மார்ட்டின் லூதர் கிங், தன் கல்லறைக்கு உள்ளேயே வெற்றிச் சங்கநாதம் புரிந்து இருப்பார்.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டவுடன், அவரது கல்லறையைச் சுற்றிலும், ஏராளமான மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. கருப்பர்கள், இந்த இன்ப அதிர்ச்சியைத் தாங்க முடியாமல், வாய்விட்டு அழுதனர்.
உலகெங்கும் இருந்து வாழ்த்துகள் வந்து குவிந்தன. ஒபாமாவின் தந்தைவழித் தாயகமாம் ஆப்பிரிக்காவின் கென்ய நாட்டில், மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தெருக்களிலெல்லாம், மக்கள் ஆடிப்பாடிக் கொண்டாடினர்.
வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவித்து, பாரக் ஒபாமா, அந்தச் செவ்வாய்க்கிழமை இரவு ஆற்றிய உரையும், ஒரு புகழ்மிக்க உரையாகவே அமைந்தது.
‘இது என்னுடைய வெற்றி அல்ல; அமெரிக்க மக்களின் வெற்றி!
அமெரிக்காவை நிறுவிய நமது முன்னோர்களின் கனவுகள், நமது காலத்திலும் உயிரோடு இருக்கின்றனவா? என்று வியந்தவர்களுக்கும், அமெரிக்காவில் எல்லாம் சாத்தியம்தானா? நமது ஜனநாயகம் வலிமை வாய்ந்ததுதானா? என்ற கேள்விகளை எழுப்பியவர்களுக்கும், ஐயம் அடைந்தவர்களுக்கும், இந்த முடிவுதான் பதில் ஆகும்.
நான் போட்டியிட முனைந்தபோது, பணம் இல்லை. பெரிய நிறுவனங்களின் ஆதரவு இல்லை. வாஷிங்டன் நகரின் பெரிய அரங்கங்களில், நம் பிரச்சாரம் தொடங்கவில்லை. இது வசதி அற்ற மக்கள் வசிக்கின்ற வீதிகளின் முற்றவெளிகளில் தொடங்கப்பட்டது. வாழ்க்கையோடு போராடும் ஆண்களும், பெண்களும், அவர்கள் ஈட்டுகின்ற குறைந்த ஊதியத்தில் இருந்து, 5 டாலர்,10டாலர், 20 டாலர் என்று கொடுத்த நிதியில் வளர்ந்தது.
இளந்தலைமுறையினர்தாம், இந்தத் தேர்தல் களத்தை அமைத்தனர். இந்தத் தேர்தலில் நடைபெற்ற பல நிகழ்வுகள், உள்ளத்தை உலுக்கும் நிகழ்ச்சிகள், இனி தலைமுறைகளுக்கும் பேசப்படும்.
ஒரேயொரு நிகழ்வு, இந்த இரவிலும், என் உள்ளத்தை விட்டு நீங்கவில்லை. ஆன் நிக்சன் கூப்பர் எனும் 106 வயதான மூதாட்டி, அட்லாண்டாவில், இன்று தமது வாக்கைப் பதிவு செய்து இருப்பதுதான், என் மனதில் பதிந்து விட்டது.
அந்த மூதாட்டி கருப்பர் இனத்தவர். நரக அடிமை வாழ்வு, சிறிதுசிறிதாக விலகத் தொடங்கிய நேரத்தில், அவர் பிறந்தார். அப்போது, வானத்தில் விமானங்கள் பறக்கவில்லை; வீதிகளில் கார்களை அவர் பார்க்கவில்லை. அவரைப் போன்றவர்கள், வாக்குச் சாவடிக்குச் செல்ல முடியாது. ஏனெனில், அவர் ஒரு பெண். (அப்போது, பெண்களுக்கு வாக்கு உரிமை இல்லை.) இன்னொன்று, அவரது தோலின் நிறம் கருப்பு.
ஒரு நூறு ஆண்டுக்காலம், அவர் கண்ணால் கண்டு அனுபவித்த துயரங்கள், போராட்டங்கள் எத்தனையெத்தனை!
பெண்கள் வாக்கு அளிக்கும் உரிமையைப் பெறப் போராடினார். ஆம்; நம்மால் முடிந்தது! அமெரிக்கா, பெரும் பொருளாதார வீழ்ச்சித் துயரில் ( Great Depression ) சிக்கித் தவித்ததையும் கண்டார். அச்சத்தை வென்ற புதிய விடியலையும் ( New Deal ) கண்டார். ஆம்; நம்மால் முடிந்தது!
மாண்ட்கோமரி பேருந்துகளில், கருப்பர்கள் அமர முடியாத அவலத்தையும், அதை எதிர்த்து வென்றதையும் கண்டார். ஆம்; நம்மால் முடிந்தது!
அட்லாண்டாவில் இருந்த மதபோதகர், தம் கனவுகளால் நம்பிக்கை ஊட்டியதையும் கண்டார். ஆம்; நம்மால் முடிந்தது!
ஒரு மனிதன், சந்திரனில் கால் பதித்ததையும் கண்டார்; பெர்லின் சுவர் விழுந்து நொறுங்கியதையும் கண்டார். இருள்சூழ்ந்த நேரங்கள் கடந்தன. தாம் பிறந்த 106 ஆண்டுகளுக்குப் பின்னர், வாக்குச்சாவடியில் தன் விரலை அழுத்தினார்; வாக்கைப் பதிவு செய்தார். ஆம்; நம்மால் முடிந்தது!
நமக்கு நாமே கேட்டுக்கொள்வோம். நமது பிள்ளைகள், எனது புதல்விகள், ஆன் நிக்சன் கூப்பரைப்போல், நீண்ட நாள்கள் வாழும் வாய்ப்பைப் பெறும்போது, எந்த மாற்றத்தை அவர்கள் பார்ப்பார்கள்? எந்த முன்னேற்றத்தை நாம் உருவாக்கப் போகிறோம்? என்ற இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் நேரம்,இந்த நேரம். ஆம்; நம்மால் முடியும்’ என உரை ஆற்றினார் ஒபாமா.
பாரக் ஒபாமா, ஒரு தலைசிறந்த ஜனநாயகவாதி என்பதை, எடுத்த எடுப்பிலேயே நிரூபித்துவிட்டார்.
ஜனநாயகக் கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராவதற்கு, ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் அவர்களையே, அமெரிக்க அரசியலில் அதிபர் பதவிக்கு அடுத்த சக்தி வாய்ந்த பதவியான, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் பதவியில், தாமே முன்வந்து நியமித்து விட்டார் ஒபாமா.அவரது உள்ளத்தில் பொறாமை இல்லை; காழ்ப்பு உணர்ச்சி இல்லை; எவரும் தன்னை விஞ்சி விடுவார் என்ற அச்சமும் இல்லை.
உலகெங்கும் மனித உரிமைகளை நேசிக்கும் மனங்கள் பாராட்டும் பாரக் ஒபாமா, ஆபத்துகள் இன்றி பல்லாண்டு வாழ, அவரது உயர்ந்த கனவுகள் நனவாகிட, சூழும் சோதனைகளை வென்றிட, அம்மாமனிதர் மனதால் பூசிக்கும் மகாத்மா காந்தியைத் தந்த இந்திய நாட்டின் தென்பகுதியில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின், தென்கோடி முனையில் உள்ள ஒரு கிராமத்துக் காரனாகிய இந்த வைகோ, இயற்கை அன்னையை இறைஞ்சுகிறேன்!

