தியாகத்தால் கட்டப்பட்டகோட்டை (எங்கள் நெஞ்சில் வாழ்கிறார் ஏழுமலை )18.04.2007
விவகாரங்கள்: அரசியல்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: சொற்பொழிவுகள்
தியாகத்தால் கட்டப்பட்டகோட்டை
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு வளர்ந்து வருகிற இயக்கம். எவ்வளவு சோதனைகள்? இந்த இயக்கத்தை அழித்து விடலாம் என்று கருதியவர்களுக்குச் சொல்வேன். ஒரு பத்திரிக்கையில் கூட எழுதி இருந்தார்கள். ‘மாவட்டச் செயலாளர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு வைகோ சினிமா பார்க்கப் போய்விட்டார்’ என்று எழுதி இருந்தார்கள். இந்தச் செய்தியையாவது போட்டு இருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டேன்.
பக்கத்திலே இருக்கிறது மினர்வா தியேட்டர். அண்ணா அவர்கள் எழுதிக்கொண்டே இருப்பார்களாம். பேசிக்கொண்டே இருப்பார்களாம். திடீரென்று, அவரோடு பழகுகிற நண்பர்கள் யாராவது இரண்டு பேர்களை அழைத்துக் கொண்டு, மினர்வாவில் ஒரு நல்ல ஆங்கிலத் திரைப்படம் வந்து இருக்கிறது. போய்ப் பார்த்துவிட்டு வருவோம் என்று சற்றுநேரம் போய்ப் பார்த்துவிட்டு வருவார். கலை உணர்வு இருந்தது.
அப்படித்தான் ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, ‘நான்கு திரைப்படங்கள் தணிக்கை செய்யப்படாமல், கத்தரிக்கோலைப் போடாமல் என்னுடைய விருப்பத்திற்குத் தயாரிக்க அனுமதித்தால், என்னுடைய இலட்சியத்திலே வெற்றி பெறுவேன். நாட்டுபிரிவினையில் வெற்றி பெறுவேன்’ என்று அண்ணா கூறியது உண்டு.
நானும் என் தோழர்களை ஒரு திரைப்படத்துக்கு அழைத்துக்கொண்டு போனேன். ‘300 வீரர்கள்’ என்ற திரைப்படம். இந்தத் திரைப்படத்துக்கு நான் என் தோழர்களை அழைத்துக் கொண்டு போகக் காரணம் என்ன தெரியுமா? எந்த வரலாற்று நிகழ்வை நான் காலமெல்லாம் மேடைகளில் சொல்லிக்கொண்டு இருந்தேனோ, எத்தனையோ மேடைகளில் நான் எதைப் பற்றி முழங்கினேனோ, சிறைச்சாலையிலே இருந்து எதைப்பற்றிக் கடிதமாக எழுதினேனோ, அந்தப் போர்க்களக் காட்சி ஒரு படமாகத் தயாரிக்கப்பட்டு இருக்கிறது என்று நான் பத்திரிகையில் படித்த காரணத்தால், மேடையில் இருக்கக்கூடிய என் தோழர்களை, மாவட்டச் செயலாளர்களை அழைத்துக் கொண்டு அந்தத் திரைப்படத்துக்குப் போனேன்.
அந்தத் திரைப்படத்திலே சித்தரிக்கப்பட்டு இருக்கின்ற காட்சிகள், இலட்சக்கணக்கானோர் கொண்ட ஒரு பெரும்படையை, ஸ்பார்ட்டா நாட்டின் முன்னூறு வீரர்கள், ஒரு கணவாயிலே ஆறு மாத காலம் எதிர்த்து நின்று போராடினார்கள் என்பதுதான்! இதை நான் நூற்றுக்கணக்கான மேடைகளிலே சொல்லி இருக்கிறேன். ஏனென்றால், உலக வரலாற்றிலே பலபேருடைய மனங்களை கவர்ந்து இருக்கின்ற போர்க்களம், நெப்போலியன் மனதைக் கவர்ந்த போர்க்களம், சேகுவேரா மனதைக் கவர்ந்த போர்க்களம், கரிபால்டி மனதைக் கவர்ந்த போர்க்களம், ஃபிடல் காஸ்ட்ரோ மனதைக் கவர்ந்த போர்க்களம், அவர்கள் எல்லாம் தங்களின் வாழ்நாளில் ஒவ்வொரு கட்டத்திலே பேசுகிறபோது, இந்தப் போர்க்களத்தைச் சுட்டிக் காட்டுவது உண்டு. ஷெல்லியின் மனம் கவர்ந்த போர்க்களம். அது உண்மையிலேயே நடைபெற்ற நிகழ்ச்சி!
வெறும் முந்நூறு வீரர்கள்தான் கிரேக்கத்து ஸ்பார்ட்டா தேசத்து வீரர்கள். ஆனால், அவர்கள் எதிர்த்து நின்ற படையின் எண்ணிக்கை பத்து இலட்சம். பத்து இலட்சம் பேர் கொண்ட பாரசீகப் பெரும் படை அதன் சக்ரவர்த்தி ஷெர்ஸெக்ஸ் தலைமையிலே வருகிறது. அதை எதிர்த்து நின்றவர்கள் முந்நூறு பேர். ஆயுதம் தரித்தவர்களாக, கவசம் தரித்தவர்களாக, அவர்களுக்குத் தலைமை தாங்கிச் செல்கிறவன் ஸ்பார்ட்டாவின் மன்னன் லியோனிதாஸ்.
இந்தப் படத்துக்குத்தான் சத்யா, சோமு, வேளச்சேரி மணிமாறன், ஜீவன் உள்ளிட்ட என் அருமைத் தோழர்களை, ‘கொஞ்சம் வேலை இருக்கிறது வாருங்கள் என்னோடு’ என்று நான் அழைத்துக் கொண்டு போனேன். காரணம், ஸ்பார்ட்டாவின் வீரர்களைப் போன்றவர்கள் என் தோழர்கள் அல்லவா, அவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.
பத்து இலட்சம் பேர் கொண்ட படையை எதிர்த்து வெறும் முந்நூறு பேர். ஜெயிக்க முடியாது, வெற்றி பெற முடியாது என்றே எவரும் நினைப்பர். அவர்கள் கருத்துக் கேட்கிற இடத்தில், கிரேக்க தேவதை சொல்வதாக ஒரு நம்பிக்கை. ஒரு மூட நம்பிக்கைதான். இதில் வெற்றி பெறமுடியாது என்று சொல்லுகிற வேளையிலும், ‘நாங்கள் சரண் அடைய மாட்டோம், எந்தக் காரணத்தை முன்னிட்டும் பின்னோக்கி ஓட மாட்டோம். நாங்கள் மானத்தை உயிராக மதிப்பவர்கள். நாங்கள் மடிவோம். இந்த மண்ணின் மானத்தைக் காக்க மடிவோம்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
அப்படிச் செல்லுகிறபோது, தாய்மார்களெல்லாம் திரண்டு இருக்கின்ற இடத்திலே அவர்கள் சொல்கிறார்கள். ‘நாங்கள் செல்லுகிறோம். வந்தால் எங்கள் கேடயங்களோடு வருவோம். இல்லையேல் கேடயங்கள் மீது எங்கள் உடல்கள் கிடக்கும்’ என்று சொன்னார்கள். பல இலட்சம் பேர் கொண்ட படை வருகிற இடத்தில் ஒரு சிறிய கணவாய். அந்தக் கணவாயிலே இவர்கள் நின்று கொண்டார்கள். அதுதான் ‘தெர்மாபிளே கணவாய். ஒரு பக்கத்திலே கடல், மற்றொரு பக்கத்திலே மலை. மலைக்கும், கடலுக்கும் இடையே ஒரு சிறிய கணவாய். இந்த முந்நூறு பேர் அங்கே நின்றார்கள்.
இது உண்மையில் நடந்த சம்பவம். கல்வெட்டிலே எழுதி வைத்து இருக்கிறார்கள். இந்த முன்னூறு பேருக்குத் தலைமை தாங்குகிற லியோனிடாஸ் சொல்லுகிறான், ‘அலை அலையாக வருவார்கள். இந்த இடத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். அவர்களைத் தடுத்து நிறுத்துவோம்’ என்று ஆறு மாத காலம் தடுத்து நிறுத்தினார்கள். வரலாறு இதுவரை சந்தித்திராத வீரத்தோடு போர் நடத்தினார்கள்.
லட்சம் பேர் கொண்ட அந்தப் பெரும்படை வெற்றி பெற முடியாத நிலையில், துரோகி ஒருவன் எபியால்டஸ் என்பவன், அவன் கிரேக்கத்திலே மாலிஸ் என்ற ஒரு பகுதியைச் சேர்ந்தவன். அவன் பணத்திற்காகக் காட்டிக் கொடுத்தான். பாரசீகச் சக்ரவர்த்தியிடம் போய்க் காட்டிக் கொடுத்தான். இந்த மலைகளுக்குப் பின்னால் ஒரு பாதை இருக்கிறது. அந்தப் பாதை வழியாகப் போனால், பின்புறமாகச் சென்று தாக்கலாம் என்று பின்புறமாகத் தாக்குகின்ற வழியைத் துரோகிக் காட்டிக் கொடுத்ததனாலே, பாரசீகப் படை பின்னாலே இருந்து வந்து விட்டது. இரண்டு பக்கமும் சேர்ந்து தாக்கினார்கள்.
அழிவு நிச்சயம் என்ற நிலையில், அருமையான வாசகங்களை எழுதிச் சொன்னார்கள். ஷெர்ஸெக்சின் படையில் பத்து இலட்சம் பேர் இருக்கிறார்கள். சூரியனை மறைத்து விடுகின்ற அளவுக்கு இலட்சக்கணக்கான அம்புகள் உங்கள் மீது பாய்ந்து வரும் என்றார்கள். லியோனிடாஸ் சொன்னான். ‘அப்படியா? அந்த நிழலில் நாங்கள் போராடுவோம், மடிவோம், மானத்தோடு மடிவோம்’ என்று சொல்லி மடிந்தார்கள். அனைவரும் மடிந்தார்கள். கடைசியாக அவர்களில் ஒருவனை அழைத்து, ‘நீ போய்ச் சொல், ஸ்பார்ட்டா மக்களிடம் சொல். நாங்கள் கடைசிவரை மானம் காக்கப் போராடி மடிந்தோம். மகிழ்ச்சியோடு மரணத்தை முத்தமிட்டோம் என்று சொல்’ என்று சொல்லிவிட்டு உயிர் நீத்தார்.
“இந்த வழியாகச் செல்லுகின்றவர்களே, நீங்கள் போய் ஸ்பார்ட்டாவுக்குச் சொல்லுங்கள்.கடமையை ஆற்றிவிட்டு இங்கே மண்ணில் படுத்து இருக்கிறார்கள்” என்று சொன்னான்.
அந்த மலைக்கணவாயிலே அவர்களுக்கு இருந்த அந்த உணர்ச்சி, கிரேக்கத்திலே அதற்குப் பிறகு வந்தவர்களுக்குப் புத்துணர்ச்சி அளித்த காரணத்தினால், அவர்கள் பாரசீகத்தை வென்றார்கள். அதே கிரேக்கத்திலே பிறந்த அலெக்ஸாண்டர், பின்னாளில் பெரும்படையை வென்றான் என்பதைப் படித்து இருக்கிறோம். இந்தத் திரைப்படத்திற்குத்தான் நான் இவர்களை அழைத்துக் கொண்டு போனேன்.
நாங்கள் பதவிகளுக்காக இல்லை. பேரறிஞர் அண்ணாவின் இலட்சியங்களை உயிராக நேசிப்பவர்கள் நாங்கள். அதற்காகவே இந்த இயக்கத்திலே பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோம். எங்களை அழிக்க முடியாது. இந்த இயக்கம் உடைத்து போன கப்பல் என்றும், இந்தக் கப்பல் மூழ்கி விடும் என்றும் துரோகிகள் சொன்னார்கள். நான் கோவை மாநாட்டிலே சொன்னேன். எப்படி ஃபிடல் காஸ்ட்ரோ இருபது பேரோடு தப்பிவந்தபோதும்கூட, கிராண்மா கப்பலைக் கொண்டு செலுத்தி, சியானமஸ்ட்ரா குன்றுகளுக்கு மத்தியில் நின்று போராடினானோ, அதைப் போல என் தோழர்களோடு நின்று எங்களுடைய அரசியல் களத்தில் வெற்றி பெறுவேன் என்றுதான் சொன்னேன்.
இந்தக் கப்பல் மூழ்காது. இதை இலக்குக்குக் கொண்டு போய் எங்களால் சேர்க்க முடியும். இது தியாகத்தால் கட்டப்பட்டு இருக்கின்ற கோட்டை என்று நான் சுட்டிக் காட்டினேன். அந்த உணர்வோடுதான் இன்றைக்கு மாவீரன் ஏழுமலையின் நினைவு நாளிலே இதை நான் சுட்டிக் காட்டுகிறேன்.
(இரா.ஏழுமலை 13 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் வைகோ (18.4.2007)

