சில்லரை வணிகத்தில் அயல்நாட்டு முதலீடு உள்நாட்டு தொழில்களுக்கு ஆபத்து . மு . செந்திலதிபன் .

விவகாரங்கள்: பொருளாதாரம்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள்

உலகமயமாக்கலின் விளைவாக, கடந்த பத்து ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் ‘பகாசுர’ வளர்ச்சியைப் பெற்று இருக்கின்றன. உலகின் வளர்முக நாடுகளில், சந்தை முழுவதையுமே அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளின் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் கைப்பற்றி விட்டன.

பெட்ரோலியத்துறை, சுரங்கம், கனிமம், மின்சார உற்பத்தி, கட்டுமானம், விமானப் போக்குவரத்து, வாகன உற்பத்தி, கனரகத் தொழில்கள், மருந்து உற்பத்தி, நெசவு, விவசாயம், வேதியியல், உரம், காப்பீட்டுத்துறை என ஒரு நாட்டின் பொருளாதார முதுகு எலும்பாகத் திகழும் அனைத்துத் தொழில்களிலும் பன்னாட்டு நிறுவனங்கள் ஊடுருவி விட்டன.

‘பொருளாதாரச் சீர்திருத்தம்’ என்ற பெயரால் உலகவங்கி, பன்னாட்டு நிதி நிறுவனம் போன்றவற்றின் ஆதரவுடன் பன்னாட்டு நிறுவனங்கள் “புதிய பொருளாதார வல்லரசை” உருவாக்கி வருகின்றன. இந்தியாவும் அதுபோன்ற பொருளாதார ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டு வருகின்றது.

கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, சில்லரை வணிகத்தில் 51ரூ விழுக்காடு அயல்நாட்டு முதலீடு அனுமதிக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. பெரும் தொழில்களில் அயல்நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து கொள்ளை இலாபம் ஈட்டி வருகின்றன. இருந்தாலும் ‘சில்லரை வணிகத்தில்’ பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருவது மட்டும் அன்றி, உலக வணிக நிறுவனத்தின் (WTO) கட்டளையுடன் இந்தியாவையும் பணியச் செய்து இருக்கின்றன.

இந்தியாவில் நடைபெறும் சில்லரை வணிகத்தின் மதிப்பு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 11 இலட்சம் கோடி ரூபாய் ஆகும். இது இன்னும் 5 ஆண்டுகளில் 13.5 இலட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று பன்னாட்டு நிறுவனங்கள் கணித்து உள்ளன.

2005-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு ஆய்வு தரும் தகவல், இந்த விற்பனை மதிப்பில் 94 விழுக்காடு சிறுசிறு சில்லரை வணிகர்களின் கையில் இருக்கின்றன. நாட்டில் 4.3 கோடிப் பேர் சிறுவணிகத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஏறத்தாழ 20 கோடி மக்கள் இந்தச் சில்லரை வணிகத்தை நம்பி வாழ்க்கை நடத்துகின்றார்கள்.

சிறு பெட்டிக்கடைகள் தொடங்கி, காய்கறிக்கடைகள், மளிகைக் கடைகள், குளிர்பானக் கடைகள், பொதுப் பொருள் அங்காடிகள், தேநீர் விடுதிகள், சிறு உணவகங்கள், மருந்துக் கடைகள், துணிக்கடைகள், தள்ளுவண்டி மற்றும் சாலையோரக் கடைகள் இவ்வாறு பல்வேறு சில்லரை வணிகங்களில் 98 விழுக்காடு கடைகள் உள்ளன. இவை விற்பனை வரி, வருமான வரிச் சட்டங்களின் கீழ் வராதவை.

விவசாயத்துறைக்கு அடுத்தபடியாக, கோடிக்கணக்கான மக்கள் சிறு வணிகத்தொழிலைச் சார்ந்துதான் வாழ்க்கை நடத்துகிறார்கள். சின்னஞ்சிறிய கிராமங்கள் தொடங்கிப் பெருநகரங்கள் வரை, ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருமான வாய்ப்பு வழங்கும் தொழிலாகச் சில்லரை வணிகம் விளங்குகிறது.

சிறுவணிகத் தொழிலைச் சார்ந்து வாழ்க்கை நடத்தி வரும் கோடிக்கணக்கான மக்களை வறுமையின் கோரப்பிடியில் தள்ளி விடுவதற்கு இந்தத் தொழிலையும் விட்டு வைக்காமல் பன்னாட்டு நிறுவனங்கள் படையெடுத்து வருவதற்கு, இந்திய அரசு கதவுகளைத் திறந்து வைத்துக் காத்து இருக்கின்றது.

வளைக்கிறது வால்மார்ட்

கடந்த ஆண்டு இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங்கை, அமெரிக்காவில் உள்ள ‘வால்மார்ட்’ (Wal Mart) நிறுவனத்தின் தலைவர் ஜான் பி. மென்ஸர் டில்லிக்கு வந்து சந்தித்தார். ‘வால்மார்ட்’ நிறுவனம் தமிழகத்தில் உள்ள பல்பொருள் அங்காடியான ‘நீல்கிரீஸ்’ போன்று - அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்ட உலகின் 12 நாடுகளில் - 4806 ‘சூப்பர் மார்கெட்’ கடைகளை நடத்தி வருகின்றது.

அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனம் 85,000 சதுர அடி பரப்பளவில் ஒரு பல்பொருள் அங்காடியை நடத்தி வருகின்றது. இந்த நிறுவனத்தின் ஒரு கடையின் ஆண்டு சராசரி விற்பனை 230 கோடி ரூபாய். இந்த ‘வால்மார்ட்’ நிறுவனம் இந்தியாவின் சில்லரை வணிகத்தைக் குறி வைத்துக் கடைவிரிக்க வருகின்றது.

“10 இலட்சம் மக்கள் தொகை கொண்ட 35 இந்திய நகரங்களில் வால்மார்ட், ஒரேயொரு சூப்பர் மார்கெட்’ திறந்தாலே 4 இலட்சத்து 32 ஆயிரம் சிறிய கடைகளை மூட வேண்டிய நிலை உருவாகிவிடும். பன்னாட்டு வணிக நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் 20 விழுக்காட்டைக் கைப்பற்றினாலே, சிறிய கடைகளில் வேலை பார்க்கும் 80 இலட்சம் பணியாளர்களின் வேலை பறிபோகும்” என்று சில்லரை வணிகத்தில் பன்னாட்டு முதலீடுகளால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வு செய்திட்ட ‘ Economical and Political Weekly ’ எனும் ஆங்கில இதழ் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு இருக்கின்றது.

அமெரிக்காவின் ‘வால்மார்ட்’ போன்றே இங்கிலாந்தின் ‘டெஸ்கோ,’ ஜெர்மனியின் ‘மெட்ரோ’ போன்ற நிறுவனங்கள் இந்தியாவின் பெரும் தொழில் அதிபர்களான டாடா, அம்பானிகளுடன் கூட்டுச் சேர்ந்து இங்கே சிறுகடைகளைத் திறக்கக் காத்து இருக்கின்றன.

வேலைவாய்ப்பு பெருகுமா?

சில்லரை வணிகத்தில் அயல்நாட்டு முதலீடு நுழைந்தால், முதலீடு பெருகும் வேலை வாய்ப்பு பெருகும், பொருள்கள் தரமாகவும், விலை மலிவாகவும் கிடைக்கும். இதனால் நுகர்வோர் பயன் பெறுவார்கள் என்று இந்திய அரசு விளக்கம் தருகிறது.

ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் உலகம் முழுவதிலிருந்தும் பொருள்களைக் கொண்டு வந்து இங்கே குவித்து விலை மலிவு என்று விற்பனை செய்தால், உள்நாட்டுத் தொழில்கள் நலிவது மட்டும் அன்றி முற்றாக அழிந்துவிடும்.

அரிசி, கோதுமை, அப்பளம், காய்கறி, ஊறுகாய், எண்ணெய் வகைகள், மாவுப் பொருள்கள் என்று பன்னாட்டு நிறுவனங்கள் சிறுகடைகள் திறந்து விளம்பரம் செய்தால், இங்கு உள்ளூர் தயாரிப்புகள் சீரழிவதைத் தவிர வேறு என்ன நடக்கும்? இதற்கு ஒரேயொரு எடுத்துக்காட்டு சொல்ல வேண்டும் என்றால், நமது மண்ணில் உற்பத்தி செய்யப்பட்டு, சக்கைப் போடு போட்ட குளிர்ப்பானங்களான ‘காளிமார்க்’ “வின்சென்ட்” போன்றவை இன்று எங்கே போயின? உள்ளூர் தயாரிப்புகளான ‘கோலி சோடா’ எங்கே போனது? பன்னாட்டு நிறுவனத் தயாரிப்புகளான கோக், பெப்சி போன்றவை அவற்றை விழுங்கிவிட்டன.

நமது குளிர்பானங்களுக்கு ஏற்பட்ட கதி, நாளை நமது ஆற்றுப்படுகையில் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு வரும் காய்கறிகளுக்கும் கூட ஏற்படும். கைத்தொழிலில் சிறந்ததாக உற்பத்தி செய்யப்படும் ஊறுகாய் கூடப் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களிடம் போட்டியிட முடியாமல் போகும்.

தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை போன்று இந்தியா முழுவதும் சில்லரை வணிகத்தில் அயல்நாட்டு முதலீடுகளை எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றன. எதைப்பற்றியும் கவலைப்படுகின்ற நிலையில் மய்ய அரசு இன்று இல்லை. ஆகவே, இந்திய விடுதலைப் போராட்டத்தில் ‘அயல்நாட்டுப் பொருள்களை’ப் புறக்கணிக்க அறைகூவல் விடப்பட்டதைப் போன்ற வரலாறு மீண்டும் இந்த நாட்டில் உருவாவதைத் தடுக்க எவராலும், எதனாலும் முடியாது.

(சங்கொலி, 24.02.2006)

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)